அத்தியாயம் –16
மனோவிற்கு நடப்பது அனைத்தும் இன்னமும் கனவாகவே தோன்றியது… எப்போது அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள் என்பதை கூட அவள் உணரவேயில்லை.
உள்ளே சென்று சற்று ஓய்வெடுக்குமாறு யாரோ நிஜமாகவே அவளுக்கு அவளருகில் இருப்பவர்கள் எல்லாம் யாரென்றே தெரியவில்லை… தெரிந்தவர்களே அருகில் இருந்தாலும் அவள் இருக்கும் மனநிலையில் அனைவருமே யாரோவாகவே தெரிந்தனர் அவளுக்கு.
அவர்கள் வீட்டிற்கு தான் வந்திருக்கின்றனர் என்பதை கால்கள் அவளறைக்கு செல்லும் போது உணர்ந்தது. வேகமாய் உள்ளே நுழைந்து கண்ணாடி முன் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
கழுத்தில் சற்று முன் பிரணவின் கையினால் ஏறியிருந்த தாலி கண்ணில்பட அதை வெளியே எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள். எப்படி நடந்தது தான் எப்படி இதற்கு சம்மதம் சொன்னோம் என்று யோசிக்க ஆரம்பித்தாள்…
____________________
சரவணன் வந்து சென்ற பின்னே கார்த்திகேயனின் தொல்லை மேலும் மேலும் அதிகரிக்க மனோவிற்கு தாங்க முடியாமல் அழுகை மட்டுமே வந்தது.
எப்படியாவது அலுவலகம் செல்ல வேண்டும் அல்லது ஷாலினி பிரணவையாவது பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது. காரியத்திற்கு பின்னர் ஒருவருமே அவளைத் தேடி வரவேயில்லை.
அவர்கள் ஒருவேளை அவளுக்கு போன் செய்திருக்கலாம் ஆனால் அவளின் கைபேசியை தற்சமயம் கார்த்திகேயன் உபயோகித்து கொண்டிருந்தான்.
எதற்கும் வழியில்லாது கலங்கி நின்றவளுக்கு சட்டென்று ஒரு எண்ணம் உதித்தது. உடனே அவள் அத்தை நளினியை நாடிச் சென்றாள்.
“அத்தை…”
“என்ன??”
“நான் ஆபீஸ்க்கு போயிட்டு வரட்டுமா??”
“எதுக்கு?? நீ வேலைக்கு எல்லாம் போய் ஒண்ணும் கிழிக்க வேணாம்… கொஞ்ச நாள் போனதுக்கே இந்த ஆட்டம் ஆடுற… எல்லாம் எங்கண்ணனை சொல்லணும்…” என்று நொடித்தாள் அவள்.
“அத்தை முறைப்படி வேலையை விடுறதை பத்தி சொல்லணும்… இல்… இல்லைன்னா ஆறு மாச சம்பளத்தை நான் அவங்களுக்கு கொடுக்கணும்…”
“வே… வேலைக்கு சேரும் போது பான்ட்ல கையெழுத்து போட்டிருக்கேன்…” என்று பாதி உண்மை பாதி பொய்யாய் கூறினாள்.
“என்னது ஆறு மாச சம்பளமா!! அது எவ்வளவு வரும்!!”
“இரண்டு லட்சம் கொடுக்கணும்!!”
“ஆத்தி அவ்வளவா அந்த காசுக்கு எவ்வளவு நகை வாங்கலாம் புடவை வாங்கலாம் ஊருக்கு ஒதுக்கு புறமா இருக்கற அந்த தென்னந்தோப்பை குத்தகை எடுக்கலாம் இன்னும் எவ்வளவோ செய்யலாமே” என்று வாயை பிளந்தாள் நளினி.
“நான் என்ன செய்யட்டும் அத்தை… இதெல்லாம் செய்யலைன்னா என்னை பிடிச்சு ஜெயில்ல போட்டிருவாங்க… ஏன்னா நான் தான் கையெழுத்து போட்டிருக்கேனே…” என்று மீண்டும் அதை அழுத்திச் சொன்னாள்.
நளினி மனதிற்குள்ளாக ஏதோ கணக்கு போட்டவள் “ஹ்ம்ம் சரி நீ போய் சொல்லிட்டு வந்திரு… நாளைக்கு கார்த்தியோட போயிட்டு வா…”
“அத்தை நா… நான் தனியா போய்க்கறேனே…”
“ஏன் அன்னைக்கு கடைக்கு போறேன்னு அப்படியே எங்கயோ ஓடப் பார்த்தியே அது மாதிரி போகலாம்ன்னு நினைப்பிருக்கோ… அதெல்லாம் ஒண்ணும் வேணாம் கார்த்தியோட போ இல்லைன்னா போகாத…”
“அத்தை நீங்க வேணா வாங்க நான் அவரோட தனியா போக மாட்டேன்…”
நளினி சற்று யோசித்து “ஹ்ம்ம் சரி நானும் வர்றேன்… எத்தனை நாளைக்கு நீ அவனோட போகாம இருக்க முடியும். அவன் தானே இனி உனக்கு எல்லாம். அவனை அனுசரிச்சு போ அதான் நல்லது” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் நளினி.
மனோவும் அதுவே நிம்மதி என்பது போல் மறுநாள் விடியலுக்காய் காத்திருந்தாள். மூவருமாக கிளம்பி அவள் அலுவலகம் வந்தடைந்தனர்.
வரவேற்ப்பில் இருந்த பெண்ணை பார்த்து சிநேகமாய் சிரித்த மனோ அவளிடம் சொல்லிவிட்டு உள்ளே செல்ல முயல “நீ மட்டும் எங்க போற இரு நாங்களும் வர்றோம்” என்றவாறே உடன் வந்தனர் நளினியும் கார்த்திகேயனும்.
மனோ வரவேற்பு பெண்ணை பார்த்து வைக்க ஏதோ புரிந்தார் போன்று அவள் “அவங்க இங்க வேலை பார்க்கறாங்க அதனால உள்ள போறாங்க…”
“நீங்கலாம் உள்ள போக முடியாது. அவங்க வர்ற வரை இங்க இருக்கறதுன்னா இருங்க… இல்லைன்னா மனோ மேடம் நீங்களும் கிளம்புங்க…” என்று சொன்னாள்.
“அத்தை ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க… நான் எங்க போய்ட போறேன் இது தான் உள்ள போகவும் வெளிய வரவும் ஒரே வழி… நீங்க வெயிட் பண்ணுங்க நான் வந்திடுவேன்” என்றுவிட்டு அவர்கள் அறியாமல் வரவேற்பு பெண்ணுக்கு நன்றி சொல்லி உள்ளே சென்றாள்.
அவள் கால்கள் பிரணவின் அறை நோக்கித் தான் சென்றது. கணேஷ் அவன் அறையில் இருந்து அவளை பார்த்ததும் எழுந்து வர மனோ அந்த அறையை தாண்டி பிரணவின் அறை நோக்கி செல்லவும் முகம் சிறுத்து போனான்.
கதவை தட்டிவிட்டு அவள் உள்ளே நுழையவும் பிரணவ் எழுந்து நின்றே விட்டான். அவளை பார்த்து சில நாட்கள் ஆகிவிட்டது. இந்த சில நாளில் அவளின் கைபேசிக்கு அழைத்து பார்த்து எந்த பதிலும் இல்லாமல் போக அவளுக்கு பேசப் பிடிக்கவில்லை என்று எண்ணிக்கொண்டான்.
அவனுக்கு வேறு வேலைகள் வேறு நெட்டி முறித்ததால் அவனாலும் அவள் வீடு வரை சென்று பார்க்க முடியவில்லை. உள்ளே வந்தவள் அவனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தாள்.
“மறந்துட்டீங்கள்ள நீங்க என்னை… நாங்க இருக்கோம்ன்னு அன்னைக்கு சொன்னீங்க அதெல்லாம் சும்மா தானா…” என்றவளை அதிர்ச்சியாய் பார்த்தான்.
‘இவள் தெரிந்து பேசுகிறாளா இல்லை தெரியாமல் பேசுகிறாளா‘ என்று “முதல்ல உட்காரு…” என்றவன் இருக்கையை காட்டிவிட்டு இன்டர்காம் எடுத்து ஷாலினியை அழைத்தான்.
ஐந்து நிமிடத்தில் வருவதாக சொல்லி அவள் போனை வைக்க பிரணவ் மனோவை ஏறிட்டான். “என்னாச்சும்மா உனக்கு போன் பண்ணா கூட ரெஸ்பான்ஸ் இல்லை“
“நானும் எங்கம்மா அப்பா கூடவே போய் இருக்கலாம்ல… எனக்கு மட்டும் ஏன் இப்படி… கூட இருக்கேன்னு சொல்லிட்டு நீங்க யாருமே எட்டிக் கூட பார்க்கலை”
“என்னை அம்போன்னு விட்டுட்டு போயட்டீங்கள்ள நீங்க எல்லாம்…” என்று அழுதவளை ஆறுதல் படுத்த கால்கள் அவளை நோக்கி எட்டி நடைப்போட்டு செல்ல கைகள் அவளை நோக்கி உயரும் தருவாயில் ஷாலினி உள்ள வரவும் ஓரமாய் இருக்கையில் சென்று அமர்ந்தான்.
“ஷாலினி என்னாச்சு கேளுங்க வந்ததுல இருந்து அழுதிட்டே இருக்காங்க!!” என்றான்.
“என்னாச்சு பாரதி!! எதுக்கு அழற அன்னைக்கு உன் வீட்டுக்கு வந்தா உங்க அத்தை பையன் நீ வீட்டில இல்லைன்னு சொல்லிட்டான்… நீயும் கூட ஒரு போன் பண்ணலை எங்களுக்கு” என்றவளை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் மனோ.
அழுகையினூடே அவளுக்கும் கார்த்திகேயனுக்கும் அவள் அத்தை திருமணம் முடிக்க ஏற்பாடுகள் செய்வதை கூற அங்கிருந்த மற்ற இருவருக்கும் அதிர்ச்சி!!
பிரணவிற்கோ ஆத்திரம் வேறு வந்தது. அவன் அந்த கார்த்திகேயன் கையில் கிடைத்தால் என்ன செய்திருப்பானோ அவ்வளவு கோபம் அவனுக்கு.
“நீ அவங்களை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லலையா!! உனக்கு வாயெல்லாம் என்கிட்ட மட்டும் தானா!!”
“நான் எதிர்த்து பேசி வாங்கினது எல்லாம் போதும்“
“என்னாச்சு அடிச்சாங்களா!!”என்றான்
“அடிச்சிருந்தா வாங்கியிருப்பேன்… எனக்குன்னு யாருமேயில்லை எனக்காக பேச ஒரு ஜீவன் கூட அங்க இல்லை… எங்க அத்தை எங்க சொந்தகாரங்ககிட்ட எல்லாம் நான் அந்த கார்த்தியை விரும்பறதாவும் அவன்கிட்ட தப்பா நடந்துக்கறதாவும் சொல்லியிருக்காங்க“
“வீட்டுக்கு வந்தவங்க ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணுறேன்னு என் மனசை கொன்னுட்டு போய்ட்டாங்க“
“எனக்கு இருக்கற ஒரே ஆறுதல் சரவணன் தான்…”
“சரவணனா!!” என்று கோரசாய் ஷாலினியும் பிரணவும் கூற “ஆமாம் எங்கப்பா எனக்காக பார்த்த மாப்பிள்ளை!!”
“என்ன உங்கப்பா பார்த்த மாப்பிள்ளையா!! எப்போ உங்கப்பா அவரை பார்த்தாரு!! எங்ககிட்ட நீ சொல்லவேயில்லையே!!” என்றாள் ஷாலினி.
“எங்கப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்து வைச்சிருந்தார்ன்னு எனக்கு தெரியும்… ஆனா அவரை நேர்ல இப்போ தான் நானே பார்த்தேன்!!”
“அவர் தான் உங்கப்பா பார்த்த மாப்பிள்ளைன்னு என்ன நிச்சயம்” என்று கேள்வி கேட்டது பிரணவ் தான்.
“அப்பா சாகறதுக்கு முன்ன சொல்லியிருக்கார்” என்றவள் அதை நினைவு கூர்ந்தாள்.
“நீ படிச்சிருக்க தானே ஏன் இப்படி முட்டாளா இருக்க!! அவன் தான் உங்கப்பா பார்த்த மாப்பிள்ளைன்னு உறுதியா தெரியாம அவன்கிட்ட போய் என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்பியா நீ” என்று கோபமாய் பொரிந்தான் பிரணவ்.
பிரணவின் இந்த முகம் ஷாலினிக்கு புதிது. எதற்கு இப்படி கொதிக்கிறார் என்று அவனை உற்று நோக்க ஆரம்பித்தாள்.
“எனக்கு தெரியும் அவர் தான் அப்பா பார்த்த மாப்பிள்ளைன்னு… நான் அன்னைக்கு அவர்கிட்ட பார்த்த உடனே அப்படி கேட்டது தப்பு தான்…”
“ஆனா நீச்சல் தெரியாம தண்ணிக்குள்ள சிக்கிக்கிட்டவன் ஒரு துரும்பை எப்படி விடாம பற்றிக்குவானோ அப்படி தான் நான் அன்னைக்கு செஞ்சதும்”
“அவர் வர்றதுக்கு கொஞ்சம் முன்னாடி என் உயிர் போய் திரும்ப வந்தது தெரியுமா உங்களுக்கு”
____________________
சரவணனின் வந்த அன்று காலையில் நடந்த சம்பவம் ஒன்றே அவளை சரவணனிடத்தில் அப்படி கேட்கச் சொன்னது…
மனோ அப்போது தான் குளித்துவிட்டு அவள் அறைக்குள் நுழைந்து உடைமாற்ற என கதவை அடைத்துவிட்டு வந்தாள்.
நளினியின் கண்டிப்பான வார்த்தைக்கிணங்க அவள் தினமும் புடவை உடுத்தினாள். அன்றும் அது போல் புடவை உடுத்தவென அவள் அறைக்கதவை தாழிட்டுவிட்டு ஆடையை மாற்றப்போக கார்த்திகேயன் சட்டென்று அவள் கையை சுண்டி இழுத்தான்.
அவள் இழுத்த இழுப்பில் நிலைகுலைந்தவள் கீழே விழப்போக அவளை இழுத்து அணைக்க முற்பட்டான் அவன்.
“ஹேய் விடு விடுடா என்னை… இங்க எதுக்குடா வந்தே” என்ற மனோ அவனிடம் இருந்து விடுபட முயற்சி செய்ய அவன் பிடி இரும்பாய் இருந்தது.
“ஹேய் என்ன அடபுடாங்கற ஒழுங்கா மாமான்னு கூப்பிடு இல்லை அத்தான்னு கூப்பிடு… இப்போ எதுக்கு கத்தி டைம் வேஸ்ட் பண்ணுற, கட்டிக்க போறவன் தானே ஒரு முறை என்னோட இரு…”
“சீய் விடுடா அறிவில்லை உனக்கு…” என்று ஆங்காரமாய் கத்தியவள் அவனிடம் இருந்து விடுபட்டு கையில் கிடைத்ததை எடுத்து அவன் மீது எறிந்தாள்.
“அத்தை… அத்தை இங்க பாருங்க… இங்க வாங்க…” என்று அவள் கத்தி போட்ட கூப்பாட்டில் நளினி வந்து கதவை தட்ட வேகமாய் ஓடிச்சென்று மனோ கதவை திறந்தாள்.
நளினி இருவரையும் ஏற இறங்க பார்த்துவிட்டு “டேய் உனக்கு அறிவே இல்லையாடா… கிணத்து தண்ணிய ஆத்து வெள்ளமா அடிச்சிட்டு போகப் போகுது அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்“
“கல்யாணம் முடியறவரை இவ பின்னாடி நீ போனான்னு தெரிஞ்சு உன் காலை ஓடிச்சு நானே அடுப்புல வைச்சிருவேன் ஜாக்கிரதை” என்று மிரட்ட அவன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.
“எனக்கு கல்யாணம் வேணாம், ப்ளீஸ் என்னை விட்டுடுங்களேன்… இல்லை எனக்கு விஷம் கொடுத்து என்னை கொன்னுடுங்க. நான் இவரை கட்டிக்க மாட்டேன்” என்று கதறினாள் மனோ.
“இங்க பாரு அதான் ஒண்ணும் ஆகலைல… அப்புறம் எதுக்கு தேவையில்லாம சீன் போடுற, அவன் இனிமே உன் பக்கம் வரமாட்டான். அதுக்கு நான் பொறுப்பு போதுமா“
“நீயும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டா தான் என்ன, கட்டிக்க போறவன் தானே அந்த உரிமையில கொஞ்சம் அப்படி இப்படி இருந்திருப்பான்… அதுல ஒண்ணும் தப்பில்லையே!!”
“சும்மா சும்மா பார்க்காத, நான் சொன்னா சொன்னது தான் அவன் இனிமே உன் பின்னாடி வரமாட்டான். போய் போய் வேலையை பாரு” என்றுவிட்டு நகர்ந்தாள் நளினி.
____________________
அவள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த பிரணவின் முகத்தில் காதலையும் கனலையும் ஒரே சேர கண்டாள் ஷாலினி.
‘பிரணவ் எப்போதிலிருந்து இவளை விரும்ப ஆரம்பித்தார். ஆனால் இவர்கள் ஒன்று சேர்ந்தால் நல்லது தானே. ஆனால் விதி வேறு மாதிரி செல்கிறதே‘ என்று எண்ணிக் கொண்டாள் ஷாலினி.
“சோ இந்த காரணத்துக்காக தான் அவன்கிட்ட அப்படி கேட்டியா… நாங்க எல்லாம் உனக்கு கண்ணுக்கே தெரியலையா… ஒரு போன் பண்ணுறதுக்கென்ன உனக்கு” என்று இன்னுமும் கோபத்தை விடாமல் பேசினான்.
“என்னோட போன் கார்த்திகேயன் வைச்சிருக்கான். நான் ஒரு நாள் கோவில்க்கு போறேன்னு சொல்லிட்டு எங்காச்சும் போய் செத்து போய்டலாம்ன்னு நினைச்சு கிளம்பினேன்“
“ஆனா இவங்க பின்னாடியே வந்து என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க” என்றாள் வேதனையாக.
“அந்த சரவணன் நிச்சயமா உங்கப்பா பார்த்த மாப்பிள்ளை தானா… அவன் மட்டும் நல்லவன்னு உனக்கு என்ன நிச்சயம்“
“என் அப்பா எனக்கு தப்பா எதுவும் செய்ய மாட்டார். நிச்சயம் அவர் தப்பானவரா இருக்க மாட்டார்” என்றவளின் முகத்தில் உறுதி தெரிந்தது.
“உன்னலாம் என்ன சொல்றதுன்னே தெரியலை. உங்கப்பாவே ஒருத்தனை பார்த்து சொன்னாலும் உன் மனசுக்கு அவனை பிடிக்க வேணாமா…” என்றான் சற்று வலியோடு.
“எங்கப்பா உயிரோட இருந்திருந்தா ஒருவேளை அதெல்லாம் பார்த்திருப்பேன்… இப்போ எனக்கு எதையும் பார்க்கவோ நினைக்கவோ தோணலை” என்று வீம்பாய் சொல்பவளை ஓங்கி அறைய வேண்டும் போல தான் தோன்றியது அவனுக்கு.
“சரி அவன்கிட்ட பேசினியா கல்யாணம் இன்னும் பத்து நாள்ல இருக்கும்ன்னு சொன்னியே!! அதுக்கு அவன் என்ன சொன்னான்“
“என்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு தான் சொன்னார். எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கு” என்றாள் இன்னும் உறுதியாய்.
“சரி நம்பர் கொடு அவனோட நம்பர்…”
“எதுக்கு??”
“விசாரிக்கணும். சொல்லுங்க ஷாலினி இந்த முட்டாள்க்கு யாரையும் இப்படி தான் கண்ணை மூடிட்டு நம்புவாளா… அவன் நல்லவனா கெட்டவனான்னு நான் விசாரிக்கறேன்“
“அப்புறம் நீ முடிவு பண்ணு அவனை கல்யாணம் பண்ணுறதை பத்தி” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு.
“நீங்க ஒண்ணும் விசாரிக்க வேண்டாம். இப்போ எதுக்கு இப்படி கத்துறீங்க” என்று பதில் பேசியவள் வழக்கம் போல் நம் மனோ தான்.
“என்கிட்ட நல்லா எகிறி எகிறி குதி. கேட்க வேண்டிய இடத்துல கேள்வி கேட்காத, யோசிக்க வேண்டிய நேரத்துல யோசிக்காத” என்று பொரிந்தான் மேலும்.
“பாரதி அவர் சொல்றது சரி தான் அவர் விசாரிக்கட்டும் அப்புறம் முடிவெடுக்கலாம்” என்றாள் ஷாலினியும்.
“இந்தா இந்த போனை யாருக்கும் தெரியாம வைச்சுக்கோ” என்று அவனுடைய ஐபோனை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“இல்லை வேண்டாம்…”
“உன்னை நாங்க காண்டக்ட் பண்ண வேண்டாம் வாங்கிக்கோ…” என்றான்.
“ஹ்ம்ம் வாங்கு பாரதி” என்று ஷாலினியும் சொல்ல அதை வாங்கிக்கொண்டாள்.
“சைலன்ட்ல போட்டு வைச்சுக்கோ. நான் ஒரு ஒரு வாரம் பத்து நாள் இங்க இருக்க மாட்டேன். என்னோட அக்கா கல்யாணத்துக்கு ஊருக்கு போறேன். அப்படியே எனக்கு ஒரு எக்ஸாம் இருக்கு அதை எழுத போய்டுவேன்“
“நான் எங்க இருந்தாலும் உனக்கு போன் பண்ணுவேன். நீ எதுக்கும் பயப்பட வேண்டாம். கல்யாண தேதி மட்டும் உனக்கு தெரிஞ்சதும் எனக்கு ஒரு மெசெஜ் போடு இல்லன்னா ஷாலினிக்கு சொல்லு“
“நான் அதுக்குள்ள அந்த சரவணன் பத்தி விசாரிச்சுடுவேன். உன் கல்யாண தேதிக்கு முன்னாடி நான் எப்படியும் இங்க வந்திடுறேன் ஓகே வா…” என்று அவன் கூற அவள் தலை தானாய் ஆடியது.
“சரி இப்போ வா என்னோட உன் அத்தைகிட்ட நீ வேலைய கண்டினியூ பண்ணி தான் ஆகணும்ன்னு நான் பேசிப் பார்க்கறேன்” என்று சொல்லி அவளுடன் எழுந்தான்.
“இல்லை அவங்க ஒத்துக்க மாட்டாங்க“
“நீ பேசாம இரு பாரதி. பிரணவ் அவங்ககிட்ட பேசுற விதமா பேசி சம்மதிக்க வைச்சிடுவார். நீங்க போங்க பிரணவ்” என்று சொன்னது ஷாலினியே.
அவன் சொன்னது போலவே அவள் அத்தையிடம் பேசி மிரட்டி ஒரு வழியாக அவள் வேலையை தொடர சம்மதம் வாங்கினான். அவள் அத்தை இன்னும் பத்து நாட்கள் கழித்து தான் அவள் வேலைக்கு வருவாள் என்று கூறிவிட பிரணவ் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
இன்னும் பத்து நாட்களில் அவர்கள் திருமணத்தை நடத்திவிடுவார்கள் என்பது மட்டும் அவன் ஊகமாய்.
சரவணனை பற்றிய உடனே விசாரிக்க முடியாமல் அவன் வீட்டில் திருமண வேலைகள் அவனை உள்ளிழுக்க அதை பார்க்க ஆரம்பித்தான் பிரணவ்.
அதற்குள் மனோவிடமிருந்து திருமண தேதி இன்று நாளை என்று தினம் ஒரு தேதியாய் அவள் குறுந்தகவல் அனுப்ப பிரணவ் தான் குழம்பிப் போனான்.
மனோ மட்டும் என்ன செய்வாள் கோவிலில் நெறைய பார்மாலிட்டிஸ் இருந்ததால் உறுதியான தேதியை அவளுமே சரியாக அறிய முடியவில்லை.
பிரணவ் அவன் தமக்கையின் திருமணம் முடிந்து அவன் கனவு வேலைக்கான தேர்வை எழுதுவதற்கு சென்றுவிட அவனை தொடர்பு கொள்ள முடியாமல் போனது.
அதற்குள் மனோ சரவணனிடம் உள்ள நிலைமையை எடுத்துரைக்க அவனும் திருமண தேதி அன்று வந்துவிடுவதாக உறுதி கூறினான்.
பிரணவை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் ஷாலினியிடம் திருமணதேதியை சொல்லி பிரணவிடம் தெரியப்படுத்தும்மாறு கூறி குறுந்தகவல் அனுப்பி வைத்தாள்.
பிரணவிற்கும் அனுப்பி வைத்தாள் ஆனால் அவன் கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் அந்த தகவல் அவனை சென்றடையவில்லை. அவளுக்கு மெசெஜ் பெயிலியர் என்று வந்துவிட்டது.
காலையில் கார்த்திகேயனின் அருகில் நிற்கும் போதே உடலெங்கும் கூசியது அவளுக்கு. சரவணன் வந்து விடமாட்டானா என்ற நப்பாசையுடன் அவ்வப்போது வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு மனம் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப்போனது.
இனி அவன் வரவே மாட்டான் என்பது புத்தியில் உரைக்க அவ்வளவு தான் என்று நினைத்தாள். பிரணவ் கூட இப்படி கடைசி நேரத்தில் வராமல் போனானே…
அன்று அவ்வளவு பேசினானே இன்று என்னை காப்பாற்ற அவன் கூட வரவில்லையே என்று கண்ணீர் உகுக்க ஆரம்பித்த வேளை அவனின் குரல் காதில் விழுந்து அவளுக்கு தேனை வார்த்தது.
அவன் சொன்னது போல் புடவை மாற்றிக்கொண்டு வந்தவள் அறியவில்லை அது அவள் அத்தை அவளிடம் கொடுத்த புடவை இல்லை என்று.
புடவை மாற்றிக்கொண்டிருந்த நேரம் முழுதும் தான் அவனுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்றே யோசித்துக் கொண்டிருந்தாள்.
மனம் தான் அதற்கு பதில் கொடுக்காமல் போக்கு காட்டிக் கொண்டிருந்தது. எந்த முடிவும் எடுக்காமலே வெளியில் வந்தாள். அவளருகே வந்த பிரணவ் “சொல்லும்மா என்ன முடிவெடுத்திருக்க“
“ஹான் என்… என்ன கேட்டீங்க??” என்றாள்.
“நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன்” என்றுவிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பதிலுக்காய்.
“ஹ்ம்ம் சரி…” என்று அவன் கேட்டதும் பதில் சொன்னவளுக்கு சத்தியமாய் புரியவில்லை எதற்கு சரி சொன்னோம் என்று. அதற்கு மேல் அவன் எந்த தாமதமும் செய்யாமல் அவளை உள்ள அழைத்துச் சென்றான்.
அவள் அத்தை வீட்டினரின் கண் பார்வையில் படாமல் அழைத்து சென்றவன் நேரே சன்னிதானத்திற்குள் நுழைந்து விட்டான். அங்கிருந்த அர்ச்சகர் அவனுக்கு முன்னமே தெரிந்தவர் போலும்.
அவனை பார்த்து சிநேகமாய் சிரித்தவர் “வாங்க நேரமாச்சேன்னு நினைச்சுட்டு இருந்தேன்… வந்து இப்படி சேர்ந்து நில்லுங்க… வீட்டில…” என்று ஆரம்பித்தவர் அவன் பார்வையில் அடங்கிப் போனார்.
இருவரின் கையிலும் எப்போது மாலை வந்தது அவன் எப்போது அவளுக்கு அதை அணிவித்தான் தான் எப்போது அவன் கழுத்தில் மாலையிட்டோம் என்று இன்னமும் மலைப்பாகவே இருந்தது அவளுக்கு.
அவன் அண்ணி என்று அறிமுகப்படுத்தியவர் தாலியை எடுத்து அவன் கையில் கொடுக்க “என்னை பாரு…” என்றான் அவன்.
அவன் சொன்னதுமே திரும்பி அவனை நேருக்கு நேராய் நோக்கியவளை பார்த்துக்கொண்டே தாலியை கட்டி முடித்தான்.
மனோ அவள் நினைவில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்தாள். அருகில் நிழலாட நிமிர்ந்து பார்த்தாள், பிரணவ் நின்றிருந்தான்…
சட்டென்று எழப் போனவளின் தோளைப்பற்றி அமர வைத்தான். “உட்காரு உன்கிட்ட பேச தான் வந்தேன்” என்றவன் “உனக்கு சில கேள்விகள் இருக்கும்ன்னு நினைக்கிறேன். அதுக்கு பதில் சொல்லலாம்ன்னு தான் வந்தேன்”
“முதல்ல உனக்கு தெரிய வேண்டியது சரவணன் பத்தி சரியா” என்றுவிட்டு அவள் பதிலுக்காய் பார்த்தான். வாய் திறந்து ஆம் என்று சொல்லாவிடினும் அவள் எண்ணம் அவள் முகத்தில் தெரிந்தது.
“நான் சொல்றதை நீ நம்புவியான்னு தெரியலை. இருந்தாலும் சொல்றேன் சரவணன்க்கு கல்யாணம் ஆகிடுச்சு….” என்றுவிட்டு நிறுத்தினான்.
“என்ன சொல்றீங்க??” என்று அதிர்ச்சியை அவனை பார்த்தாள்.
“உண்மை தான் சொல்றேன்”
“அப்புறம் ஏன் என்கிட்ட அப்படி சொல்லணும்“
“அது உன்னோட சொத்துக்காக இருக்கலாம்“
“நான் சொத்துன்னு நினைச்சது எங்க அம்மாவும் அப்பாவும் அவங்களே இல்லாம போய்ட்டாங்க என்கிட்ட வேற என்ன சொத்து இருக்கு…”
“உன் பேருல இருக்கற சொத்து பத்தி விசாரிச்சதா சொன்னியே. மே பி அது தான் காரணமா இருக்கும்“
மனோவிற்கு ச்சே என்றிருந்தது. இதற்காக எல்லாம் ஒருவர் நடிப்பார்களா என்றிருந்தது. என்னை திருமணம் செய்ய எண்ணியது கூட என் சொத்துக்காகவா என்று எண்ணி கண்கள் லேசாய் கலங்கியது….
மனைவியின் கலங்கிய விழிகளை பார்த்ததும் அவளருகே சென்று அவளை ஆறுதல் தன் மேல் சாய்த்துக் கொண்டான். அவன் இடையை கட்டிக்கொண்டவள் “ஏங்க எனக்கு மட்டும் இப்படிலாம் நடக்குது”
“நான் என்ன பாவம் செஞ்சேன்… போனவங்க என்னையும் கூடவே கூட்டிட்டு போய் இருக்கலாம்ல இப்படி அடுத்து என்ன நடக்கும்னு தெரியாத இந்த உலகத்துல என்னை தனியா விட்டு போனாங்களே…” என்று கதறினாள்.
“ரதிம்மா இனி நீ தனியில்ல நானிருக்கேன் உனக்கு, எப்பவும் இருப்பேன்…” என்றான். அவர்கள் பேசிக்கொண்டிருந்த வேளை பிரணவின் அண்ணி மோனா அவர்களை அழைக்கும் குரல் கேட்க தன்னை சுதாரித்தனர் இருவரும். “வா போகலாம்…” என்று அவள் கைப்பிடித்து வெளியில் அழைத்துச் சென்றான் பிரணவ்….