அத்தியாயம் 23:
பத்து நாட்களுக்கு பிறகு…..
சேலத்தில் ரிஷியின் வீடே கலைகட்டியிருந்தது.அனைவரின் முகத்திலும் சந்தோஷ ரேகைகள் ஓட….
ரிஷியோ…தனது மனைவியை…வைத்த கண் எடுக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான்.
அன்று வருணுக்கும்,தைலாவிற்கும் திருமணம் பேசி முடிப்பதாய் இருந்தது.வெட்கப்பட வேண்டிய தைலா எப்பொழுதும் போல் சாதாரணமாக இருக்க…அபியோ அநியாயத்திற்கு வெட்கப்பட்டுக் கொண்டிருந்தாள்.
ஆரஞ்சும்,பிங்க்கும் கலந்த ஷேடோவில்….அவள் கட்டியிருந்த பட்டுப் புடவை…அவள் நிறத்தை எடுப்பாய் காட்ட….தளர பின்னிய கூந்தலும்… தலையில் சூடிய மல்லிகைப் பூவுமாய்..ஆளை அசரடித்துக் கொண்டிருந்தாள்.
தைலாவிற்கும் அம்மா இல்லாத காரணத்தினால்…சித்ராவே அனைத்தையும் முன்னின்று செய்து கொண்டிருந்தார்.
“அபி…அந்த தட்டுல பூ..பழம்..எல்லாம் எடுத்து வச்சிடுமா…” என்றார் சித்ரா.
“சரிங்கத்தை…” என்றபடி அவள் எடுத்து வைத்துக் கொண்டிருக்க….
“அம்மா உங்களை அப்பா கூப்பிடுறார்..” என்றபடி ரிஷி வர…
“சரி…பார்த்துக்க ரிஷி…” என்றபடி அவர் செல்ல….அபியோ அவன் வந்தது அறியாமல் வேலையில் கருத்தாய் இருக்க…
“ஹேய் பொண்டாட்டி….” என்றபடி ரிஷி பின்னிருந்து அணைத்தான்…
“ஆஆஆஆ…” என்றபடி துள்ளி விலகினாள் அபி.
“ஏய்..! இப்ப எதுக்கு இந்த கத்து கத்துற…நான் தான்..என்றபடி அவள் வாயை அடைக்க….”
“நீங்களா…ஒரு நிமிஷத்துல பயந்துட்டேன்….” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க….அவன் பார்வையோ…அவளையே வருடியது.
“என்ன அப்படிப் பார்க்குறிங்க..?” என்றபடி…மேலும் கீழும் தன்னைத் தானே பார்த்துக் கொண்டாள்.
“சும்மா கும்முன்னு இருக்கடி பொண்டாட்டி…” என்று அவன் மீண்டும் அருகில் வர….
“ஐயோ அத்தை….” என்று அவள் சொல்ல…
“சும்மா பொய் சொல்லாதா…எங்கம்மா இப்போதைக்கு வர மாட்டாங்க…” என்றபடி அவளை அணைக்க…
“ஐயோ உண்மையாளுமே அத்தை…” என்று அவள் விலக….
“எதுக்கு பொய் சொல்ற…?” என்றபடி திரும்பியவன்…சித்ரா முறைத்துக் கொண்டு நிற்கவும்…
“ஹி..ஹி…” என்றவன்…அப்படியே அந்த இடத்தை காலி செய்தான்.
அவன் சென்ற பிறகு சித்ரா வாய் விட்டு சிரிக்க……”அத்தை…” என்று வெட்கப்பட்ட படி அவரைக் கட்டிக் கொண்டாள் அபி.
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அபி….எங்க ரிஷி அப்படியே இருந்திடுவானோ என்று பயந்து விட்டேன்…” என்று சொல்ல…
“அவர் ரொம்ப நல்லவர் அத்தை…” என்ற அபி…ரிஷியைப் பற்றிய நினைவுகளில் சஞ்சரிக்க…..
“ம்ம்ம்…அப்படியா…எனக்கு இது தெரியாதே..!” என்று சித்ரா அவள் முகத்தைப் பிடித்து ஆட்ட..
“போங்கத்தை…” என்றபடி வெட்கப்பட்டு ஓடினாள்.
உண்மைதான்…அந்த அளவிற்கு ரிஷியை அவள் நேசிக்கத் துவங்கியிருந்தாள்.
அதிலும் இந்த பத்து நாட்கள்….அவன் அவளை கவனித்த கவனிப்பு அவளுக்கு தானே தெரியும்.
அன்று அந்த பிரச்சனை முடிந்த பிறகு…ரிஷி அபியை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை.
சொல்லப் போனால்..அவளுக்கு உதவியாக மட்டுமே இருந்தான்.அவளது பரிட்சை முடியும் வரை…..அவளின் கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டான்.
அவளது பரீட்சை முடியும் வரை அவளுக்கு டிரைவர் வேலை பார்த்தவனும் அவன் தான்.அப்படி ஒரு இரும்பு ரிஷிக்குள்..இப்படி ஒரு இளகிய ரிஷி இருப்பான் என்று அவளே அறிந்திருக்கவில்லை.
நல்ல கணவனாக கடமையை செய்த அதே நேரத்தில்…..நல்ல காதலனாக..அவள் மனதில் தன்னை பதிய வைக்கவும் அவன் மறக்கவில்லை.
கடந்த பத்து நாட்களில் அவன் செய்த சேட்டைகள்..சின்ன சின்ன குறும்புகள் என்று….நினைவிற்கு கொண்டு வந்தவளுக்கு… கன்னங்கள் சிவக்க…அவளையும் மீறி அவள் கண்கள் அவனைத் தேடின.
“கூப்பிட்டியா அபி…” என்று சரியாக அவள் முன் ஆஜரானான் ரிஷி.
“ரிஷி…” என்று சித்ரா பல்லைக் கடிக்க….”நான் கிளம்பிட்டேன்மா…” என்றபடி செல்ல…
“அத்தை ஒரு நிமிஷம்…” என்றவள்…அவன் பின்னாடியே வேகமாய் சென்று அவனை நிறுத்தினாள்.
“என்ன…?” என்றான் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு.
“ம்ம்ம்..ஒண்ணுமில்லை…”என்றவள்…அவன் கன்னத்தில் பட்டென்று ஒரு முத்தத்தை…இட்டு விட்டு செல்ல…
“ஹேய்..” என்றபடி….அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு நின்ற ரிஷி திரும்ப…அவனைக் கடுப்புடன் முறைத்தபடி நின்றிருந்தான் வருண்.
“என்னடா நடக்குது இங்க…?” என்ற ரீதியில் கேட்க…
“டேய்..! நீ சின்ன பையன்…போ…கண்டதையும் பார்த்து..கெட்டுடுடாத…!” என்று ரிஷி சொல்ல…
“எல்லாம் என் நேரம்…! இங்க யாருக்கு நிச்சயம்ன்னே தெரியலை…” என்றபடி தலையில் அடித்துக் கொண்டு சென்றான் வருண்.
“அண்ணா…நான் எப்படி இருக்கேன்..!” என்றபடி வந்தாள் தீபி.
“உனகென்னடா…தேவதை மாதிரி இருக்க…!” என்றான் ரிஷி.
“போய் சொல்லாதிங்கண்ணா..அபி அண்ணியையும் இப்படி தான் சொன்னிங்க..!” என்று தீபி குறைப்பட..
“ஹா..ஹா..உங்க அண்ணி பெரிய தேவதை…நீ குட்டி தேவதை.. போதுமா..?” என்றான்.
“அது..அந்த பயம் இருக்கணும்…” என்று தீபி சொல்ல…..
“சரிடா..நீ தைலாகிட்ட போய் இருடா..” என்றபடி அனுப்பி வைத்தான் ரிஷி.
அங்கு தைலாவோ கண்கலங்கிய படி அமர்ந்திருந்தாள்.அதைப் பார்த்த தீபி…வருணிடம் வந்து விஷயத்தை சொல்ல…குழம்பிப் போனான் வருண்.
தைலா இருந்த அறைக்கு சென்று பட்டென்று கதவை சாத்த…அந்த சத்தத்தில் நிமிர்ந்தாள் தைலா.
“என்ன ஆச்சு தைலா…?” என்றான் பொறுமையாய்.
“ஒண்ணுமில்லை…” என்றாள்.
“உண்மைய சொல்லுடி..எதுக்கு இப்ப வாட்டர் பால்ஸ ஓப்பன் பண்ணிட்டு உட்கார்ந்திருக்க…” என்றான்.அவனுக்கு தெரிந்து தைலா அவ்வளவு எளிதில் அழ மாட்டாள்.
“சொல்லுடி..” என்று அதட்டினான்.
“இல்ல வருண்..எனக்கு அம்மா நியாபகம் வந்துவிட்டது….” என்று சொல்ல…
அவளை ஆதராவாக அணைத்துக் கொண்டவன்….”இதுக்கு போயா நீ சின்ன பிள்ளை மாதிரி அழுதிட்டு இருக்க…நான் கூட என்னமோ என்று நினைத்து பயந்து விட்டேன்…” என்றான்.
“எதை நினைச்சு பயந்த..?” என்றாள் தைலா.
“இல்லை…உனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லையோ என்று..” அவன் சொல்லி முடிக்கும் முன்….அவனைத் துரத்த ஆரம்பித்தாள்.
“மவனே…உனக்கு அப்படி ஒரு நினைப்பு இருக்கா…என் கைல கிடைச்சா நீ கைமா தாண்டா…இருடா…நில்லுடா…” என்று துரத்த..
அவன் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடினான்.அவளும் விடாமல் துரத்த…
“என்ன தைலா இது..இன்னைக்குமா..?” என்று அலுத்துக் கொண்டார் தைலாவின் தந்தை முரளி.
“டாட்…அவனைப் பிடிங்க டாட்…” என்று அவள் சட்டை செய்யாமல் சொல்லிக் கொண்டிருக்க…
அதைப் பார்த்த சித்ராவோ….தலையில் அடித்துக் கொண்டார்.இதுக இன்னைக்கும் சண்டை போடுதுக….”ரிஷி…” என்று சித்ரா அழைக்க…
“அம்மா…” என்றபடி கீழே வந்தவன்…
“பங்க்ஷனை இன்னொரு நாள் வச்சிக்கலாம்…” என்று சொல்லி முடிக்க…
“ஐயோ அம்மா…ஐயோ அத்தை…” என்று தைலாவும்,வருணும் ஒன்றான குரலில் சொல்ல…
“அப்ப பேசாம இருங்க…தைலா இன்னைக்காவது புடவை கட்டி..கொஞ்சம் பொண்ணு மாதிரி வெட்கப்படுமா…” என்று சொல்ல..
“போங்கத்தை…வராததை எல்லாம் சொல்லிக்கிட்டு…” என்று தைலா சொல்ல…அனைவரின் முகத்திலும் சிரிப்பலை.
அபிராமியின் குடும்பத்தினரும் வந்து விட்டிருந்தனர். சரண்யாவைத் தவிர.அவளுக்கும் ராகேஷ் உடன் பேசி முடிக்கப்பட்டிருந்தது.ஆனால் அவள் சம்பந்த பட்ட எந்த விஷயத்திலும்…ரிஷி தன் மனைவியை பங்கு கொள்ள விடவில்லை.வீட்டில் யாரும் அவளுடன் சரிவர பேசுவதுமில்லை. இந்த விலகலை எதிர்பாராத அவள்…தனக்குள் ஒடுங்கினாள்.ஒருவரின் மௌனத்தை விட சிறந்த ஆயுதம் எதுவுமில்லை…என்பதை உணர்ந்தாள் சரண்யா.உணர்ந்தாள் என்பதை விட…ரிஷி உணர்த்தினான் என்றால் மிகையாகாது.
குறித்த நேரத்தில்….தட்டு மாற்றப்பட்டு…இருவரும் மோதிரத்தை மாற்றிக் கொண்டனர்.
என்ன முயன்றும்…ரிஷிக்கும்,சரண்யாவிற்கும் நடந்த நிச்சயத்தை அபியால் மறக்க முடியாமல் போக…அவள் கண்கள் அந்த நேரத்தில் கலங்கத்தான் செய்தது.
“என்ன..?” என்று ரிஷி கண்களால் கேட்க..
“ஒன்றுமில்லை…” என்று தலையை ஆட்டினாள் அபி.
இருந்தாலும் ரிஷிக்கு யோசனையாக இருந்தது.எப்போதடா விழா முடியும் என்று காத்திருக்க…மூன்று மாதங்களுக்கு பிறகே திருமணம் என்று பேசப்பட்டது.
“அடப்பாவிங்களா…?” என்று வருண் திகைக்க…அவன் முகத்தைப் பார்த்த தைலாவோ..தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
“விடு…மூணு மாசம்..இன்னும் நல்லா லவ் பண்ணுவோம்…சரியா…” என்று வருணின் காதைக் கடிக்க…
“இதுகூட நல்லாயிருக்கே…” என்றபடி அவளுடன் சிரிப்பில் இணைந்து கொண்டான் வருண்.
அபியின் முகத்தில் இருந்த செழிப்பும்…அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரிஷியையும் பார்த்த….கோவிந்தனுக்கும்,அமிர்தவள்ளிக்கும் மனம் நிறைந்தது.கணபதியும்…தன் மகள் புகுந்த வீட்டில் பாந்தமாய் பொருந்தியிருப்பதைக் கண்டு அகம் மகிழ்ந்து போனார்.
“அப்பா…சாப்பிட வாங்க…!” என்றாள் அபி.
அவளின் “அப்பா” என்ற அழைப்பில் திகைத்தவர்…
“என்ன சொன்னம்மா…” என்றார் தழுதழுக்க…
“சாப்பிட வாங்கப்பான்னு சொன்னேன்..” என்றாள் அழுத்தமாய்.
“அபி…” இந்த அப்பாவை மன்னிச்சுட்டியாமா…? என்று குரல் தழுக்க கேட்க…
“தெரியலைப்பா…ஆனா முன்னாடி இருந்த கோபம் இப்ப இல்லை…” என்று சொல்லி செல்லும் மகளைப் பார்த்து…தனக்குள் பூரித்துப் போனார்.
ரிஷியும் அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் பார்த்துக் கொண்டே தான் இருந்தான்.அவள் அப்பாவை அவள் ஏற்றுக் கொள்வாள் என்று அவனுக்குத் தெரியும்.
அனைத்தும் முடிந்து….அபிராமி குடும்பம் கிளம்ப….வந்திருந்த ஒன்று இரண்டு சொந்த பந்தங்களும் கிளம்பத் தொடங்கினர்.
அனைத்தையும் முடித்து…சித்ராவிற்கு உதவி செய்து விட்டு வர…அதற்குள் சோர்ந்திருந்தாள் அபி.
அறைக்குள் வந்தவளை…கைகளில் அள்ளிக் கொண்டான் ரிஷி.
“விடுங்க ரிஷி…” என்று அவள் விலகப் போக…
“அதெல்லாம் முடியாது…இங்க வந்ததில் இருந்து போக்குக் காட்டிட்டே இருக்க….மேடம்க்கு திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லையோ…!” என்றான்.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை..!” என்று முனுமுனுக்க…
“எதுக்கு கண் கலங்கின..?” என்றான் மொட்டையாய்.
“எப்ப..?” என்றாள்.
“அதான்..வருணும் தைலாவும்…மோதிரம் மாற்றும் போது..!” என்றான்.
“இல்லையே…!”
“பொய் சொன்னா எனக்கு பிடிக்காது அபி..” என்றான்.
“இல்லை….நீங்க சரண்யாவிற்கு மோதிரம்….” என்று இழுக்க…
“அதுக்கென்ன…” என்றான்.
“அந்த நியாபகம் வந்துவிட்டது…அதான்..” என்றாள்.
“இதோ பார் அபி..நடந்த எதையும் என்னால் மாற்ற முடியாது…ஆனா இனி நடக்கப் போறதை என்னால் மாற்ற முடியும்…” என்றான் சீரியசாய்.
“புரியலை..” என்றாள்.
“புரியலையா…” என்றவன்…
“அடேய் ரிஷி…உன் பொண்டாட்டி சும்மாவே இருக்குறதுனால தான்…அவ கண்டதையும் யோசிக்கிறா…அதனால அவளை சும்மா விடாம…எப்பவும் பிசியாவே இருக்குற மாதிரி பார்த்துக்கடா…” அப்படின்னு சாமியார் சொன்னார்.
“எந்த சாமியார்…என்ன பிசி…” என்றாள் புரியாமல்.
“அடியே மக்கு பொண்டாட்டி…சம்சார சாமியார்…உனக்கு ஒரு குழந்தையை அருளிட்டா…நீ எப்பவும் பிசியாவே இருப்ப…எதையும் யோசிக்க மாட்டாய் தானே..!” என்று சொல்லி உல்லாசமாய் சிரிக்க…
“ஹான்…” என்று முழித்தாள் அபி.
“இது போங்கு…” என்றாள்.
“எது போங்கு….! வாடி என் சக்கரக் கட்டி…” என்றவன்…அவளை இழுத்து தன் மேல் போட…. அவள் சுதாரிக்கும் முன்…தங்கள் வாழ்க்கை பயணத்தை துவக்கியிருந்தான் ரிஷி.நாணம் பெண்ணவளும் அவனுள் அடங்கிப் போனாள்.
காத்திருந்த காதல்…கானல் நீராகுமோ…என்று கன்னியவள்…வெம்மிய போது….
கலங்காதே கண்ணே….!கண்ணனும் புரிந்து கொண்டேன் உன் காதலை என்று சொல்லிய மன்னவனும்..அவள் மடி சேர்ந்தான்.
கண்ணாடி நீ… கண்ஜாடை நான்..!
என் வீடு நீ… உன் ஜன்னல் நான்..!
என் தேடல் நீ… உன் தேவை நான்.!
என் பாடல் நீ.. உன் வார்த்தை நான்..!
என் பாதி நீ.. உன் பாதி நான்..!
என் ஜீவன் நீ.. உன் தேகம் நான்!
என் கண்கள் நீ… உன் வண்ணம் நான்..!
என் உள்ளம் நீ… உன் எண்ணம் நான்..!
ஐந்து வருடங்களுக்கு பிறகு…
சென்னை சிட்டியின் கமிஷனராக பதவி உயர்வு பெற்றான் ரிஷி. இந்த ஐந்து வருடங்களில்..அவனுக்கு மூன்று முறை இடம் மாறுதல்.
அதற்கெல்லாம் சலிக்காமல்…அவனுடன் ஊர் விட்டு ஊர் மாறிக் கொண்டிருந்தாள் அபிராமி.
தான் கமிஷ்னராக பதவி உயர்வு பெற்றதை….மனைவிடம் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு சந்தோஷமாய் வீடு வந்து சேர்ந்தான் ரிஷி.
“அம்பரீஷ்..” என்று கத்திக் கொண்டே வந்த அபி…அவனைக் காணாமல் திகைத்தாள்.
“என் செல்லமில்லை…எங்க இருக்கீங்க கண்ணா…” என்று அவள் கொஞ்ச…
“தன் மழலை சிரிப்பு பொங்க…அவளை நோக்கி ஓடி வந்தான்..அவர்களின் இரண்டு வயது மகன் அம்ப்ரீஷ்வர்…”
“ஏண்டா…என்னை இப்படி ஓட வைக்கிற..என் சமத்துல சாப்பிடுங்க தங்கம்..” என்று கெஞ்ச…
“ம்ம்..என்க்கு பிதிக்காது….புவ்வா…” என்றான் ஈஸ்வர்.
“இது பப்பு புவ்வா தான் கண்ணா..” என்றாள்.
“ம்ம்ம்…அபி..பொய் சொன்னா எனக்கு பிதிக்காது….” என்று அவன் ரிஷியைப் போல் சொல்ல…அந்த அழகில் சொக்கிப் போனாள் அபி.
அவனை அள்ளி அணைத்து முத்த மழை பொழிய….
“எனக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க பொண்டாட்டி…” என்று ரிஷி பின்னிருந்து குரல் கொடுக்க…
“அப்ப்பா….” என்றபடி அவனிடம் ஓடினான் அம்ப்ரீஷ்வர்.
“பாருங்க…சாப்பிடவே மாட்டேங்கிறான்….இவன் கூடவே நேரம் சரியா இருக்கு…” என்று அபி சிணுங்க…
“ஹா..ஹா…சாமியார் வாக்கு பலித்ததா…” என்றான் மகனைத் தோளில் தாங்கியபடி.
“உங்களை…!” என்று அபி பல்லைக் கடிக்க…
“அம்ப்ரீஷ்வர்” அப்படியே அபியை உரித்து வைத்திருந்தான்.ஆனால் குணத்தில் அவன் தந்தையின் ஜெராக்சில் இருந்தான்.
மகனையும்,கணவனையும் வைத்த கண் வாங்காமல் பார்க்க….
“ஓவரா சைட் அடிக்காதடி பொண்டாட்டி…” என்றவன்…”ஐயா இப்போ கமிஷனர்…தெரியும்ல..” என்று சட்டை காலரை தூக்கி விட…
அவன் சொன்ன விஷயத்தில் மகிழ்ந்தவள்…
“அடுத்து எந்த ஊர் போறோம்..!” என்றாள் பட்டென்று.
அவளின் கேள்வியில் அவனுக்கு சிரிப்பு வர…”அடுத்து கோயிங் டு சிங்கார சென்னை…!” என்றான்.
“தேங்க்ஸ்டி..” என்றான் அவளையும் கையணைப்பில் கொண்டு வந்தபடி.
“எதுக்கு..?” என்றாள்.
போலீஸ்காரனுக்கு பொண்டாட்டி அமையறது எல்லாம் ஒரு வரம்…! உன்னால தானே என் வாழ்க்கை அழகானது..அர்த்தம் கொண்டதாவும் மாறியது..” என்றான்.
“தேங்க்ஸ்…” என்றாள் அவள்…
“இது எதுக்கு…” என்றான் அவன்.
“உங்களால் தான் என் வாழ்க்கையும் அழகானதாகவும்… அர்த்தமுள்ளதாகவும் மாறியிருக்கு…” என்று அவன் சொன்னதையே சொல்ல...
அவளின் வார்த்தையில் நெகிழ்ந்தவன்….மனைவியையும் மகனையும் ஒரு சேர அணைத்துக் கொண்டான்.
காரணம் புரியாவிட்டாலும்…அப்பா,அம்மா முகத்தில் சந்தோஷத்தை பார்த்த அம்ப்ரீஷ்வரும் மலர்ந்து சிரித்தான்.
இந்த மகிழ்ச்சி…என்றும் அவர்கள் வாழ்வில் நிலைத்திட….வாழ்த்தி…நாமும் விடைபெறுவோம்…!!!!!