அத்தியாயம் – 3
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே
ஜோவும் அவனுமாக கடையை மூடும் வரை அங்கேயே இருந்தனர். ஆதி ஜோதிஷை ஒருவழியாக்கி இருந்தான். திடிரென்று அவனுக்கு ஞானோதயம் வந்தது. “ஜோ… தப்பு பண்ணிட்டேன் ஜோ… அர்ஷ்… வீட்டில அர்ஷு இருப்பாளே…”
“அய்யோ நான் எப்படி வீட்டுக்கு போவேன்… நான் பொறுப்பில்லாம இப்படி செஞ்சிட்டேனே… ஜோ தப்பு பண்ணிட்டேன்டா…” என்று குழறினான்.
“ஆதி நான் தான் தப்பு பண்ணிட்டேன்டா… உன்னை நான் தானே கூப்பிட்டு வந்தேன்… அம்மா போனதுக்கு பிறகு எல்லாத்தையும் விட்டுட்டு இருந்தவனை நான் தான் கூட்டிட்டு வந்துட்டேன்… சாரி மச்சி…”
“நான் தான் ஜோ தப்பு பண்ணிட்டேன்… எனக்காக தானேடா நீ இங்க கூட்டிட்டு வந்தே… இப்போ என்ன செய்ய, நான் எப்படி வீட்டுக்கு போவேன்… அர்ஷு முகத்தை எப்படி பார்ப்பேன்…”
ஜோதிஷ் ஆதித்யாவை போல் அல்லாமல் சற்று நிதானத்துடனே இருந்தான். நண்பனிடம் அமைதியாக இருக்குமாறு கூறிவிட்டு அவன் அன்னைக்கு போன் செய்தான்.
“அம்மா…” என்ற அவன் அழைப்பிலேயே அவர் கண்டு கொண்டார். “என்னப்பா இன்னைக்கு பார்ட்டியா??” என்று கோபமும் கண்டிப்புமான குரலில் கேட்க “அம்மா சாரிம்மா… வேணுமின்னு செய்யலை, இனிமே செய்ய மாட்டேன்ம்மா”
“சரி இப்போ எதுக்கு போன் பண்ணே அதை சொல்லு முதல்ல…” என்றவரின் குரல் அவனை மன்னிக்கவில்லை என்றாலும் அந்த பேச்சை பேசாமல் இருந்ததால் அவன் தொடர்ந்தான்.
“அம்மா ஆதியும் என் கூட தான் இருக்கான்… வீட்டுக்கு போக சங்கடப்படுறான்… அர்ஷுவை நம்ம வீட்டுக்கு வரச்சொல்றேன்… பார்த்துக்கோங்க… ப்ளீஸ்ம்மா… இனி நாங்க இப்படி செய்ய மாட்டோம்…”
“சரி வரச்சொல்லு… இல்லை வேணாம் பொம்பிள்ளை பிள்ளை தனியா வண்டி எடுத்திட்டு இந்த ராத்திரி நேரத்துல வரவேண்டாம்… நானே கார் எடுத்துட்டு போய் கூட்டிட்டு வந்திடறேன்…”
“நீ எப்படி வீட்டுக்கு வர்றியா… இல்லை ஆதியோட இருக்கப் போறியா…”
“அம்மா நான் இன்னைக்கு ஆதி கூட இருந்திட்டு நாளைக்கு வந்திடறேன்ம்மா…”
“நாளைக்கு ரெண்டு பேரும் காலையில என் முன்னாடி இருக்கணும்…” என்றவர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை போனை வைத்துவிட்டார்.
அர்ஷிதாவுக்கு அழைத்து நடந்ததை கூறிவிட்டு போனை வைத்தான் ஜோ. ஆதியோ பெரும் குற்றவுணர்வுடன் நண்பனை பார்த்தான்… “சாரிடா ஜோ… என்னால உனக்கு சங்கடம்…”
“எல்லாம் அந்த ராட்சசியால வந்திச்சி…” என்று புலம்பிக் கொண்டு வந்தவனை காரில் இழுத்து போட்டுக் கொண்டு அவன் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான். இதற்கிடையில் அர்ஷிதாவை ஜோவின் அன்னை மங்களம் வந்து அவர் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டிருந்தார்.
ஜோதிஷ் காரை நிறுத்தியதும் புலம்பிக் கொண்டே வண்டியில் இருந்து இறங்கினான் ஆதித்யா…
“பாருடா… இப்போ கூட அந்த பிசாசு என்னை முறைக்கிறா… அதே மாதிரி பார்க்குறாடா… ராட்சசி எல்லாம் இவளால வந்திச்சு…” என்று வீட்டு காம்பவுண்ட்டில் முட்டுக் கொடுத்தவாறே மீண்டும் ஆரம்பித்தான்.
“டேய் ஆதி போதும்டா… உள்ள வா… எல்லாரும் நம்மையே பார்க்கறாங்க…”
“எல்லாரும் இல்லைடா… இந்த மந்திடா அதோ பாரு அந்த நாலாவது வீட்டு மாடியில தொங்கிட்டு இருக்கு பாரு… அதே மாதிரி முறைக்குதுடா…” என்று கையை காட்டினான்.
“சரி சரி அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்… நீ இப்போ உள்ள வா…”
“ஜோ… நான் எவ்வளவு கெட்டவன்னு மத்த எல்லாரையும் விட உனக்கு தான் நல்லா தெரியும்… சொல்லி வைடா அவகிட்ட… நான் ரொம்ப மோசமானவன்… எங்க வீட்டுக்கு மட்டும் தான் நான் நல்லவன்…”
“மத்தப்படி நான் ரொம்ப பொல்லாதவன்…” என்றவன் “நான் பொல்லதாவன்… பொய் சொல்லாதவன்…” என்று குழறிக் கொண்டே பாட ஜோதிஷ் வேறு வழியில்லாமல் அவனை தூக்கிக் கொண்டு போனான்…
“டேய் நான் என்ன உன் லவ்வரா… ஹா ஹா ஹா என்னை… என்னை போய் தூக்கிட்டு போறே… ஹா ஹா… நண்பன்டா நீ…” என்று விடாமல் தொணதொணத்துக் கொண்டிருந்தான்…
மறுநாள் பொழுது விடிய ஆதித்யாவுக்கு மண்டை கனத்தது… இரவில் வெகு நேரம் ஆதி புலம்பிக் கொண்டிருந்ததில் தூக்கம் தொலைத்திருந்த ஜோதி வெகு நேரம் கழித்து உறங்கியவன் இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தான்…
ஆதி எழுந்து குளியலறைக்கு சென்றிருக்க ஜோதியின் கைபேசி சிணுங்கிக் கொண்டிருந்தது. தூக்கக் கலக்கத்துடனே எடுத்து அதை காதில் வைத்தவன் படக்கென்று எழுந்து அமர்ந்தான் எதிர்புறம் கேட்ட குரலில்.
“வந்திடறோம்மா… ஒரு அரைமணி நேரத்தில அங்க இருப்போம்…” என்றுவிட்டு போனை வைத்தவன் குளியலறை கதவை தட்டினான்.
“டேய் ஆதி அம்மா தான் போன் பண்ணாங்க… சீக்கிரமா குளிச்சுட்டு வாடா நம்மளை வீட்டுக்கு வந்து சாப்பிட சொல்லி இருக்காங்க…”
குளித்துவிட்டு வெளியில் வந்த ஆதி “ஆமா அம்மா எதுக்குடா வீட்டுக்கு வரச் சொன்னாங்க… என்ன விஷயம்டா… ஆமா இந்த அர்ஷி எங்க போனா… ஆளையே காணோம்… ஒரு காபி கொடுக்காம என்ன பண்ணுறாளோ??”
“ஏன்டா, தண்ணி அடிச்சா உனக்கு எல்லாமே மறந்து போகுமா… அர்ஷி எங்க வீட்டில இருக்கா… அம்மா தான் வந்து கூட்டிட்டு போனாங்க… நீ சீக்கிரம் கிளம்பு, இன்னைக்கு செம டோஸ் இருக்கு அம்மாகிட்ட…” என்றான் ஜோதி.
“டேய் என்னடா சொல்ற, அம்மா அங்க வரச் சொன்னாங்களா??? போச்சு போச்சு, காதுல ரத்தம் வர்ற அளவுக்கு சாப்பாடு போட்டு அடிப்பாங்களேடா…”
“எங்கம்மா என்ன வீரம் அஜித்தா சாப்பாடு போட்டு அடிக்க??”
“அம்மா அஜித் இல்லைடா… அட்வைஸ் அம்புஜம்…”
“டேய் எங்கம்மா பேரு மங்களம்டா…”
“இவன் வேற பழமொழி சொன்னா அனுபவியேன்டா… எதுக்கு ஆராய்ச்சி பண்ணுற…இதுக்கு முன்னாடி ஒரு தரம் எங்க வீட்டுக்கு போக முடியாதுன்னு உங்க வீட்டுக்கு போய் யாருக்கும் தெரியாம மொட்டை மாடியில போய் படுத்துக்கிட்டோமே ஞாபகம் இருக்கா…”
“விஷயம் தெரிஞ்சு அம்மா நம்ம ரெண்டு பேரையும் வறுத்தெடுத்தது எனக்கு இப்பவும் மறக்கலைடா???”
“ஆதி போதும்டா உன் வியாக்கியானம் எல்லாம்… நேரமாச்சு வீட்டுக்கு கிளம்புவோம்… அப்பா ஆபீஸ் கிளம்பி இருப்பார், இதான் நல்ல சமயம் வீட்டுக்கு போக… ப்ளீஸ் கிளம்புடா…” என்று சொல்லி அவனை கிளப்பிக் கொண்டு சாந்திகாலனியில் இருக்கும் அவன் வீட்டுக்கு சென்றான்.
இருவரும் வீட்டிற்கு வந்ததும் அர்ஷிதா இருவரையும் முறைத்தாள்… ஆதி அவளிடம் வந்து “சாரி அர்ஷி…” என்க “என்கிட்ட பேசாதே… உனக்கு என்னை பத்திலாம் கவலையே இல்லைல…”
“இந்த பழக்கத்தை எல்லாம் காலேஜ் முடிச்சதும் விட்டுட்டேன்னு நினைச்சிருந்தேன்… மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா… அப்படி என்ன கவலை உனக்கு… அம்மா போனப்ப கூட நீ இதெல்லாம் செய்யலையே…”
அப்போது மங்களம் உள்ளிருந்து வந்தார், “அர்ஷிம்மா நீ காலேஜ்க்கு டைம் ஆச்சுன்னு சொன்னியே கிளம்பும்மா… இந்தா இதுல லஞ்ச் இருக்கு… நீ கிளம்பு நான் பேசிக்கறேன்… நீ எதுவும் கவலைப்படாம போம்மா…” என்று அவளை அனுப்பி வைத்தார்…
ஆதிக்கு பெரும் யோசனையாய் இருந்தது… தங்கை இந்தளவுக்கு வருந்துவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை… “சாப்பிடுங்க ரெண்டு பேரும்…” என்றவர் இருவருக்கும் டிபன் வைத்தார்.
எப்போது அவர் அட்வைஸ் மழையை ஆரம்பிப்பாரோ என்று இருவரும் கப்சிப்பென்று உணவருந்தினர். மாறாக அவரோ எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தார்.
அந்த அமைதியே இருவருக்கும் அறுத்தது… சாப்பிட்டு முடித்ததும் ஆதியே கேட்டுவிட்டான்… “அம்மா திட்டுறதுன்னா திட்டுங்கம்மா… இப்படி அமைதியா இருக்கறது என்னமோ மாதிரி இருக்கும்மா…”
“அட்வைஸ் எல்லாம் ஒரு முறை தான் பண்ணணும், சும்மா சும்மா பண்ணா அதுக்கு மதிப்பிருக்காது…”
“அம்மா ஏன்ம்மா இப்படி எல்லாம் பேசறீங்க…” என்றான் ஜோதிஷ்
“சொன்னா கேட்கிறவங்களுக்கு தான் அறிவுரை சொல்லலாம்… உங்களுக்கு எதுக்கு… சரி உங்களுக்கு வேலை இருக்கும் கிளம்புங்க…” என்றார் அவர் பட்டும்படாமலும்…
ஆதி அழுதே விட்டான்… “அம்மா ப்ளீஸ் இப்படி யாரோ மாதிரி பேசாதீங்கம்மா… எங்கம்மாவுக்கு அப்புறம் நான் உங்களை ரொம்ப மதிக்கிறேன்…”
“உங்களை என் அம்மாவாவே நினைக்கிறேன்… இப்படி எல்லாம் பேசாதீங்கம்மா… இனி நாங்க ரெண்டு பேரும் எப்பவும் இப்படி செய்ய மாட்டோம்… ப்ளீஸ்ம்மா…”
“விடுப்பா ஆதி… நீ இவ்வளவு சொல்லணும்ன்னு இல்லை… இனி நீங்க இப்படி செய்ய மாட்டீங்கன்னு நம்புறேன்… அர்ஷிதா உன்னை நினைச்சு எவ்வளவு கவலைப்படுறான்னு உனக்கு தெரியுமா ஆதி…”
“பாவம் சின்ன பொண்ணு உன்னை பத்தியும் உன் வேலை பத்தியும் உன்னோட எதிர்காலம் பத்தியும் அவ கவலைப்படுறா… நேத்து நைட் முழுக்க உன்னை பத்தி தான் பேசிட்டு இருந்தா…”
“ஆனா உனக்கு அவளை பத்தி என்ன நினைப்பும் இல்லை போல இருக்கே… இனி நீ இப்படி இருக்கக்கூடாதுப்பா.. தாயில்லாத பொண்ணு நீ தான் அவளுக்கு எல்லாமே… பார்த்து இருந்துக்கோ…”
“ஏன் ஜோதி இது தான் உங்க நட்பா… உங்க நட்பை பார்த்து எத்தனை நாள் நான் எவ்வளவு பெருமையா நினைச்சிருக்கேன்… இப்படி ஒரே நாள்ல எல்லாமே ஒண்ணுமில்லாம ஆக்கிட்டியே…”
“நட்புக்கு இலக்கணமா யாரையாச்சும் சொல்லணும்ன்னா கர்ணனையும் துரியோதனனையும் பத்தி சொல்லுவாங்க… எவ்வளவு தான் அவங்களை பத்தி பேசினாலும் நண்பன் தப்பு செய்யும் போது கர்ணன் அவனை நல்வழிப் படுத்தாம நண்பனுடைய தப்புக்கு உறுதுணையா இருந்தான்…”
“ஒரு நண்பன் எப்படி இருக்கணும் தெரியுமா… அதே மகாபாரதத்துல வர்ற பார்த்தனும் பார்த்திபனையும் போன்றதா இருக்கணும்… அந்த பராந்தாமன் எந்த கர்வமும் இல்லாம தன் நண்பனுக்காக தேரோட்டினான்…”
“அவன் நிதாழனமிழந்தப்போ அவனுக்கு அறிவுரை கூறினான், வாழ்க்கையை பற்றிய கீதோபதேசம் செய்தான்… நட்பு நல்வழிப் படுத்தணும்… உற்ற துணையா இருக்கணும்…”
“இனிமே நீங்க இப்படி செய்யமாட்டீங்கன்னு நம்புறேன்… ஆதி அவனுக்கு நீயும் உனக்கு அவனும் நல்ல நண்பர்களா இருக்கணும் இப்பவும் எப்பவும்…”
____________________
இரண்டு நாட்கள் கடந்த வேளைஅன்று விடுமுறை தினம் என்பதால் குந்தவை, வானதி, வானவன் மூவருமே வீட்டிலிருந்தனர்… வானதியும் வானவனும் வீட்டை அதகளப்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஊருக்கு சென்றிருந்த அவர்களின் தந்தை அன்று இரவு தான் வருவார் என்பதால் பயங்கர கொட்டமாக இருந்தது… குந்தவை துணிகளை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றாள் காய வைப்பதற்காக…
பின்னோடு வானதியும் வானவனும் ஒட்டுண்ணி போல வந்து சேர்ந்தனர்… துணிகளை காயப்போட்டு விட்டு ஒரு மூலையில் அமைதியாக சென்று அமர்ந்தாள்.
இரண்டு நாட்களுக்கு முன் அவள் இரவில் மொட்டை மாடிக்கு வந்து உலாவி கொண்டிருந்த வேளை நான்கைந்து வீடு தள்ளி யாரோ ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்ததை எட்டி பார்க்க, அங்கு மீண்டும் அவனை பார்த்தாள். அவன் அவளை பார்த்து தான் கத்திக் கொண்டிருந்தான்.
குந்தவை யோசனையில் இருப்பதை கண்டு அவளருகில் வந்து அமர்ந்தான் வானவன். “என்ன மந்தி என்ன யோசனை… எதுவும் பிரச்சனையா…”
“இல்லைடா ஒண்ணுமில்லை…”
“இல்லை நீ இப்படி சொல்றதை பார்த்தாலே தெரியுது, ஏதோ இருக்கு என்ன விஷயம்…”
ஒரு பெருமூச்சுடன் அவள் வேலைக்கு சேர்த்த அன்று நடந்தவைகளை அவனிடம் பகிர்ந்தாள்… வானதியும் இப்போது அவர்களருகில் வந்து அமர்ந்திருந்தாள்…
“என்ன குந்தி சொல்ற, அவனை நம்ம வீட்டுக்கிட்ட பார்த்தியா… எந்த வீடு எனக்கு காட்டு…” என்று எழுந்து நின்றான் வானவன்…
“அதோ அந்த வீடு தான்டா… இவன் எப்படி இங்கன்னு தெரியலைடா… நாம இந்த வீட்டுக்கு வந்து இந்த மூணு மாசத்துல ஒரு தரம் கூட அவனை நான் பார்த்ததில்லை…”
“ஒரு வேளை அவனோட நண்பன் வீடோ என்னமோ தெரியலை… ஆனா அந்த பரதேசி என் மேல கொலைவெறியா இருக்கான்…”
“அன்னைக்கு என்னமோ பெரிய யோக்கியன் மாதிரி பேசினான்… குடிகாரப்பய இவனெல்லாம் பார்த்தாலே தெரியலை அயோக்கியன்னு…” என்று பொருமினாள்.
“என்ன குந்தி பயமாயிருக்கா?? எதுக்கு கவலைப்படுற, இதுக்கும் நீ சோகமா போஸ் கொடுக்கறதுக்கும் என்ன சம்மந்தம்…” என்றான் வானவன் நேரடியாக…
“ச்சே இவனுக்கெல்லாம் நான் எதுக்கு பயப்படணும்… பயமெல்லாம் ஒண்ணுமில்லை… ஆனா என்னமோ ஏதோ நடக்கப் போகுதுன்னு ஒரு பயம் என்னன்னு சொல்லத் தெரியலை…”
“நிச்சயமா இவனை நினைச்சு எல்லாம் நான் பயப்படலை… அதுனால திரும்பவும் அதே கேள்வியை கேட்காதே…”
“இல்லை கேட்கலை… ஹ்ம்ம் அந்த ரவி எப்படி??”
“அவர் ரொம்ப நல்ல மனுஷன்டா… ஜெம் ஆப் தி பர்சன்…” என்று சிலாகித்து சொன்னாள்.
“உனக்கு அவரை பிடிச்சிருக்கா??”
“ஏன்டா இப்படி எல்லாம் கேட்குற??”
“டேய் வாமனா நீ உன் ஆராய்ச்சியை அக்காகிட்ட ஆரம்பிக்காதே… சும்மா ஏதோ கேள்வி கேட்டு ஏன்டா குழப்புற…”
“வானரம் நீ கொஞ்சம் பேசாம இருக்குறியா… எனக்கு எல்லாம் தெரியும்… நான் ஒரு காரணமா தான் கேட்டுட்டு இருக்கேன்… நீ சொல்லு குந்தி…” என்று குந்தவையை ஊக்கினான்.
“நீ பிடிச்சிருக்கான்னு எந்த அர்த்ததுல கேட்குற வானு…”
“இந்த வாலு நல்ல அர்த்ததுல கேட்கலைன்னு அர்த்தம்… அக்கா நீ வேற இவனுக்கு பதில் சொல்லிட்டு… இவனெல்லாம் டாக்டராகி போடா…” என்று எழுந்த வானதி அவனை கொட்டினாள்.
“வானதி நீ கிளம்பு நான் பேசிட்டு வர்றேன்… சொல்றதை கேளு நீ கிளம்பு நான் வந்து உன்கிட்ட பேசறேன்…” என்று சொல்லி அவளை விரட்டி அனுப்பினான்.
“அக்கா நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலை…”
“என்னடா புதுசா அக்கான்னு கூப்பிடுறே…”
“நீ எதுக்கு நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம வேற ஏதோ பேசறே…”
“நீ கேட்கிற கேள்வி அர்த்தமில்லாததுன்னு அர்த்தம்… வேறென்ன”
“இங்க பாரு நான் சாதாரணமா தான் அந்த கேள்வியை கேட்டேன்… நீ எதுக்கு அதை சீரியஸா எடுத்துக்கற…”
“நான் என்ன அந்த இன்னொரு ஆளை பத்தியா கேட்டேன்… நீ இப்படி யோசிக்கற பதில் சொல்றதுக்கு…”
“சீய் அவனை பத்தி நீ பேசாதேடா…”
“சரி பேசலை… என் கேள்விக்கு பதில் சொல்லு அந்த ரவியை உனக்கு பிடிச்சிருக்கா…”
“ஹ்ம்ம் பிடிக்கும்… நல்ல மனுஷன் அவ்வளோ தான்… அதுக்கு மேல நீயா எதுவும் கற்பனை பண்ணிக்காதே…சரிடா அம்மா தேடுவாங்க நான் கீழ போறேன்…” என்று இறங்கி சென்று விட்டாள்.
அவள் சென்ற சிறிது நேரத்தில் வானதி மாடிக்கு வந்தாள்… “வானு எதுக்கு அக்காவை அப்படி வளைச்சு வளைச்சு கேள்வி கேட்குற… உன் ஆராய்ச்சியை அக்காகிட்ட இருந்த ஆரம்பிக்க போறியாடா…”
“கொஞ்சம் உட்காரு வானதி உன்கிட்ட பேசணும்…”
“என்ன சொல்லு… எதுக்கு இப்படி பண்ணுற…”
“உன்கிட்ட நான் என்னைக்காச்சும் இப்படி ஆராய்ச்சி பண்ணி இருக்கேனா…”
“இல்லை, ஆனா அக்காவை மட்டும் ஏன்டா இப்படி குடைஞ்சு எடுக்கற…”
“இங்க பாரு நீ படபடன்னு பேசினாலும் தெளிவா இருப்ப… ஆனா அவ அப்படி இல்லை தெளிவான மாதிரியே இருப்பா… ஆனா ரொம்பவும் யோசிக்க கூடிய ஆளு அவ…”
“அவ சரியின்னு நினைக்கிற விஷயம் உண்மையாவே தப்பா இருக்கும்… அவ தப்புன்னு நினைக்கிற விஷயம் நல்லதாவே இருக்கும்… எனக்கு அக்காவை பத்தி உண்மையாவே ரொம்ப பயமா இருக்கு வானதி…”
“எதுவும் பிரச்சனையில மாட்டிக்குவாளோன்னு தான் அவளை கேள்வி கேட்குறேன்… வேற ஒண்ணுமில்லை… அவ தெளிவா யோசிக்கணும், எது சரி எது தப்புன்னு ஆராய்ஞ்சு ஒரு முடிவெடுக்கற நிலைமை அவளுக்கு வரணும்…அதுக்கு தான் நான் இப்படி எல்லாம் கேட்கிறேன்…”
“என்னமோ நீ சொல்ற எனக்கு ஒண்ணும் புரியலை… அக்கா நல்லதுக்குன்னு சொல்ற அதான் பேசாம இருக்கேன்…”
“வானதி நீ எனக்கு ஒரு உதவி பண்ணு…” என்றான்
“என்ன உதவி??”
“அதோ தெரியுதுல ஒரு வீடு அந்த வீட்டில யார் யார் எல்லாம் இருக்கான்னு எனக்கு தெரியணும்… உன் தோழி ஒருத்தி அந்த வீட்டுக்கு எதிர் வீட்டில தானே இருக்கா… விசாரிச்சு சொல்லு… அப்புறம் அக்காவையும் கொஞ்சம் வாட்ச் பண்ணு…”
“கடைசில என்னை போலீஸ் மோப்ப நாய் ரேஞ்சுக்கு ஆக்கிட்டியேடா… இதுல வாட்ச் வுமன் வேலை வேற பார்க்க சொல்ற… டேய் இன்னைக்கு இளங்கோ வர்றார்டா…”
“அம்மா இப்போ தான் சொன்னாங்க அவர் மத்தியானமே வர்றாராம்… வா வா நாம போய் நம்ம ஆக்டிங் எல்லாம் ஸ்டார்ட் பண்ணுவோம்…”
கீழே அவள் அறைக்கு சென்றிருந்த குந்தவைக்கு வானவன் கேட்டதே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது… ‘ஆமா அவன் ஏன் ரவியை பிடிச்சிருக்கான்னு கேட்டான்… எந்த அர்த்ததுல கேட்டிருப்பான்…’
‘ரவி பார்க்க நல்லா தான் இருக்கார்… கருப்பு தான் ஆனா நல்ல களையான முகம்… ரொம்பவும் நல்ல மனுஷன்… அவர் அடிக்கடி என்கிட்டயே வேலை வாங்குறார்…’
‘ஆபீஸ்ல இருக்கற எல்லாருமே என்னையே வித்தியாசமா பார்க்குறாங்க… ஒருவேளை அவருக்கு என்னை பிடிச்சிருக்கோ…’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த எண்ணத்தின் நாயகன் அவளுக்கு அழைத்தான்.
“ஹலோ ரவி பேசறேன்…” என்ற ஆர்ப்பாட்டமில்லாத அந்த குரல் அவளை ஏதோ செய்தது.
“சார் சொல்லுங்க சார்… என்ன விஷயம் சார்… இன்னைக்கு போன் பண்ணியிருக்கீங்க… எதுவும் முக்கியமான விஷயமா??”
“கூல் கூல் பேபி… எதுக்கு இப்படி அடுக்கடுக்காய் கேள்வி கேட்குற… ஏன் நான் உன்கிட்ட சாதாரணமா எதுவும் பேசக் கூடாதா…” என்றதும் அவளுக்கு உள்ளே ஜில்லென்றிருந்தது.
“இல்லை சார் நான் அப்படி சொல்லலை…” இன்று இழுத்தாள்.
“சும்மா தான் கூப்பிட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன்… நாளைக்கு காலையில கொஞ்சம் சீக்கிரம் வந்திடு தேவி… கொஞ்சம் முக்கிய வேலை இருக்கு… அதை சொல்ல தான் கூப்பிட்டேன்…”
“கண்டிப்பா வந்திடுறேன் சார்…”
“அப்புறம் தேவி நான் ஒண்ணு சொல்லுவேன் கேட்பியா…”
“சொல்லுங்க சார்…”
“இந்த சாரை கொஞ்சம் விடேன்… ரவின்னு கூப்பிடேன்…”
“சார் அது மரியாதையா இருக்காது சார்…”
“சரி ஆபீஸ்ல எல்லார் முன்னாடியும் வேணும்ன்னா சார்ன்னு கூப்பிட்டுக்கோ… மத்தப்படி ரவின்னு கூப்பிடலாமே…”
“ரவின்னு கூப்பிட மாட்டேன், எல்லாரும் அப்படி தானே உங்களை கூப்பிடுறாங்க… சந்துருன்னு கூப்பிடுறேன்…”
“சந்துருவா…”
“உங்க பேரு ரவிச்சந்திரன் தானே… அதான் சந்துரு ஓகே தானே சார்…”
“டபுள் ஓகே ஸ்வீட் ஹார்ட்….” என்று சொல்லிவிட்டு அவன் போனை வைக்க குந்தவைக்கு வானத்தில் பறப்பது போன்ற உணர்வு…
அவளை அவன் ஸ்வீட் ஹார்ட் என்றதில் அவளுக்கு உள்ளே குளிர்ந்தது. அந்நேரம் வானவன் அவள் அறைக்கு வர அவள் அகத்தின் அழகு முகத்தில் தெரிந்ததை தம்பி கண்டு விடுவானோ என்று எண்ணியவள் அவனுக்கு முதுகு காட்டி நின்றாள்…
வந்தவன் மேஜையில் இருந்த புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டு சென்றுவிட ஆயாசமாக அவள் கட்டிலில் அமர்ந்தாள்….
அங்கு ரவியோ அவன் அறையில் குந்தவையை பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான்…