அத்தியாயம் 19:
அன்று விடிந்த பிறகும் வழக்கத்திற்கு மாறாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் ரிஷி.ஆனால் அபியோ தூக்கத்தை தொலைத்தவளாய் சீக்கிரமே எழுந்து விட்டிருந்தாள்.
‘இன்னைக்கு காலேஜ் போகணும்…!இங்க இருந்து போகவே ஒரு ஒன்றரை மணி நேரத்துக்கு மேல ஆகும்…’ என்று மனதிற்குள் நினைத்தவள்…. வேகமாய் சமையலை கவனித்தாள்.
சமையலை முடித்து…அவள் குளித்து வரவும்….வீட்டின் அழைப்பு மணி அழைத்தது.அபி சென்று கதவைத் திறக்க…..
அங்கு அபியை எதிர்பார்க்காத அந்த காவலர்…”சார்…இல்லைங்களா… நேரத்துக்கே வர சொன்னார்..!” என்று அவர் சொல்ல…
“அவர் இன்னமும் தூங்கறார்…நீங்க உள்ள வாங்க…!உட்காருங்க…!நான் எழுப்புறேன்…” என்றாள்.
“இருக்கட்டும்மா….!” என்று அவர் சொல்ல…
“பரவாயில்லை…உள்ள வாங்க…!” என்று அழைத்தவள்…அவருக்கு ஒரு கப் காபியை கலந்து குடுத்தாள்.
வேகமாய் ரிஷியின் அறைக்கு சென்றவள்….அயர்ந்து தூங்கும் அவனை எப்படி எழுப்புவது என்று குழம்பினாள்.
மெல்ல அவனின் அருகில் சென்றவள்….”ஏங்க…!” என்று அழைக்க… அவனிடம் எந்த அசைவும் இல்லை….”ஏங்க…..” என்று மீண்டும் சத்தமாக அழைத்துப் பார்த்தாள்.
எங்கே அவன் அசைவதாகவே இல்லை….பொறுமை இழந்தவள்….”ஏங்க…” என்று அவனைப் பிடித்து உலுக்க….அந்த ஸ்பரிசத்தில் சட்டென்று கண்விழித்தான் ரிஷி.
காலையிலேயே குளித்து…மெரூன் வண்ண சுடிதாரில்…மலர்ச்சியுடன் நின்றிருந்தவளைப் பார்க்க….மனம் ஆகாயத்தில் பறந்தது.இதழ்கள் லேசாய் புன்னகையைப் பிரிக்க….அந்த புன்னகையில் அயர்ந்தாள் அபி.
‘என்னைப் பார்த்து சிரிக்க கூட செய்றான்…? என்னாச்சு…? நிதானத்தில் தான் இருக்கிறானா…’ என்று நினைக்க…..நேரம் செல்லுவது அவளுக்கு உறைக்க…
“எழுந்திருங்க…மணி எட்டு ஆகப் போகுது…” என்றாள்.அவளின் தலையில் இருந்து சொட்டாக வழிந்த நீர் அவன் முகத்தில் பட்டு தெறிக்க…. அப்பொழுது தான் நிஜத்திற்கு வந்தான் ரிஷி.
“ஹேய்…நீ இங்க என்ன பண்ற..?” என்று கேட்டவன் வேகமாய் எழுந்து அமர….
“மெதுவா பேசுங்க….வெளியே….ஒரு போலீஸ்கார் இருக்கார்…உங்களைத் தேடித் தான் வந்திருக்கார்…” என்றாள்.
“ஹோ…மை காட்….டைம் என்ன…?” என்று கடிகாரத்தைப் பார்த்தவன்…. வேகமாய் எழுந்து சென்று பம்பரமாய் சுழன்றான்.அடுத்த அரை மணி நேரத்தில்…அவன் தயாராகி வெளியே வர….
“சாரி அண்ணா…!உங்களை காக்க வைத்ததற்கு…” என்று மன்னிப்பு வேண்ட…
“ஐயோ…என்ன சார் நீங்க போய் என்கிட்டே…அதெல்லாம் பரவாயில்லை சார்…” என்றார் குமார்.
இதுதான் ரிஷி…தனக்கு கீழ் வேலை செய்பவர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் ….அனைவரையும் மரியாதையுடன் நடத்துவான்.அதுவே அனைவரிடத்திலும் அவனுக்கு ஒரு நற்பெயரை ஏற்படுத்தியிருந்தது.
“வாங்கண்ணா சாப்பிடலாம்…!” என்று அவரை அழைக்க….
“இல்லை சார்…நான் வீட்டிலேயே சாப்பிட்டுதான் வந்தேன்…ஜீப் சாவி குடுத்திங்கன்னா….நான் வெளிய வெயிட் பண்றேன் சார்…” என்றவர் சாவியைப் பெற்றுக் கொண்டு சென்றார்.
அவனுக்கு இருந்த அவசரத்தில் அவன் அபியை கவனிக்கவேயில்லை. அவள் வேகமாய் சாப்பாடு எடுத்து வைக்க…ஏதோ மனமொத்த தம்பதிகள் போல்…அவனும் சாதாரணமாய் அமர்ந்து சாப்பிட்டான்.
ஆனால் அபியோ…அவசரமாய் சாப்பிடும் தன் கணவனைக் கடைக் கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தாள்.
நன்றாக தூங்கி எழுந்ததன் விளைவாக அவன் முகம் தெளிவாய் இருந்தது.அவன் யூனிபார்முடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தவளுக்கு….’எத்தனை நாள் கனவு இது’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
சாப்பிட்டு முடித்தவன்….”தேங்க்ஸ்….வரேன்..!” என்ற வார்த்தைகளை உதிர்த்து விட்டு….வேகமாய் வெளியேறிவிட்டான்.
அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் உதடுகளில் புன்னகை தவழ்ந்தது.’நேற்று இவன் சொன்னது என்ன…?இப்பொழுது நடந்து கொள்வது என்ன..?’ என்று நினைக்க…
‘நீ சந்தோஷப்படும் படியா இப்ப ஒன்னும் நடக்கலை….அவனுக்கு இருந்த அவசரத்தில்…உன்னைப் பற்றி யோசிக்க அவனுக்கு நேரமில்லை…அதான் அமைதியா போறான்….நீயா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு இருக்காத…’ என்று மற்றொரு மனம் இலவச அறிவுரை வழங்கியது.
‘உண்மைதானோ..!’என்று நினைத்தவள்….அதன் பிறகு அந்த சிந்தனையை விடுத்து…சாப்பிட்டு முடித்து…கல்லூரி செல்ல ஆயத்தமானாள்.அவனிடம் ஒரு சாவி இருப்பதால்…வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டாள்.
அங்கே ஜீப்பில் சென்று கொண்டிருந்த ரிஷியின் மனமும் அப்பொழுதுதான் நடந்ததை அசை போட்டுக் கொண்டிருந்தது.
‘ரிஷி….நீ நினைச்சது என்ன…?இப்போ நீ நடந்துக்கிறது என்ன..?’ என்று கடிந்து கொண்டவனுக்கு தன்னை நினைத்தே ஆச்சர்யமாய் இருந்தது.இருந்தாலும் அவனுள் இருந்த கோபம் அப்படியே தான் இருந்தது.
“கோர்ட்க்கு வண்டியை விடுங்க…!இன்னைக்கு அந்த சங்கர் கேஸ் ஹியரிங்…” என்றான் ரிஷி.
“சார்..அவன் ஜாமீனுக்கு அப்ளை பண்ணியிருக்கான் சார்..” என்றார் குமார்.
“அவன் எந்த மீனுக்கு அப்ளை செய்தாலும்…அவனுக்கு தண்டனை கிடைப்பது உறுதி….”என்ற ரிஷியின் கை முஷ்டி இறுகியது.
“இவ்வளவு செல்வாக்கு இருப்பவன் எதுக்காக கவர்மென்ட் காலேஜில் வந்து படிக்கணும்…” என்று நினைத்தவனின் மனம் யோசனைக்குத் தாவ…
“இதுக்கு முன்னால்…ஒரு பெரிய காலேஜ்ல தான் சார் படிச்சுருக்கான்…. அங்க என்ன திகிடுதத்தம் பண்ணினானோ தெரியலை…அங்க இருந்து டிசி குடுத்து அனுப்பிட்டாங்க….அப்பறம் எப்படியோ…அந்த காலேஜில் சேர்ந்திருக்கான்…” என்று குமார் சொல்ல…காதில் வாங்கிக் கொண்டான் ரிஷி.
“நீங்க லீவ்ல தான் இருக்கிங்கன்னு நினைச்சு…இப்படி மூவ் பண்றாங்க சார்…!இன்னைக்கு உங்களை கோர்ட்டில் பார்த்தால்….அவன் பேயறைஞ்ச மாதிரி ஆகப் போறான் பாருங்க…!” என்று குமார் சொல்ல….
‘அவன் ஜாமீனுக்கு மூவ் பண்றான்னு தெரிஞ்சுதான் நான் லீவ கேன்சல் பண்ணேன்….ஒரு பொண்ணோட உயிர் துடிதுடித்து பிரிந்திருக்கு அவனால்.அவ்வளவு சீக்கிரம் அவன் தப்பிக்க கூடாது…” என்றவன் அதிலேயே தீவிரமாய் இருக்க…..
“உண்மைதான் சார்…” என்றபடி காரை செலுத்திக் கொண்டிருந்தார் குமார்.
தன்னுடைய போன் ஒலி எழுப்ப…..அதை எடுத்துப் பார்த்தாள் அபி.
“சொல்லு லட்சு..!” என்றாள்.
“அம்மாடி..! நான் தாத்தா பேசுறேன்மா..!” என்றார் கோவிந்தன்.
“தாத்….சொல்லுங்க தாத்தா…” என்றவள் குரல் கமற…
“ஏம்மா…நீ படிக்கிற புஸ்தகத்தை எடுக்கக் கூட நீ வர மாட்டியாமா…? லட்சுமிகிட்ட சொல்லி விட்டுருக்க…” என்று கலங்க…
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை தாத்தா…நான் அங்க வந்தா இவர் எப்படி எடுத்துப்பாரோன்னு…..” என்று இழுக்க…
“உனக்கு எங்களையெல்லாம் விட…நேற்று வந்த அவன் பெரிசா போய்ட்டான்…அப்படித்தானே..!” என்று அவரின் குரலில் உரிமை தலைதூக்க….
“அப்படியில்லை தாத்தா…ஆனா அப்படித்தான்.இனி என் வாழ்க்கையே அவர் கூடத்தானே தாத்தா….ஏற்கனவே பிரச்சனையா இருக்கு…இதில் இன்னமும் இழுத்து விட வேண்டாம் என்று தான் தாத்தா…மற்ற படி…எனக்கும் உங்களைப் பார்க்க வேண்டும் போல் தான் தாத்தா இருக்கு….”என்று வருந்தினாள்.
“அம்மாடி….தினமும் இவ்வளவு நேரம் நீ பஸ்ல வந்துட்டு போகனுமாமா…?” என்று அவர் விடாமல் கேட்க…
“பரவாயில்லை தாத்தா….கொஞ்ச நாள் தானே….அப்பறம் படிப்பே முடிந்து விடும் தாத்தா….எனக்கு இது சிரமமா தெரியலை…சொல்லப் போனா நான் சந்தோஷமா இருக்கேன்…” என்றவளிடம் அதற்கு மேல் அவரால ஒன்றும் பேச முடியவில்லை.
“சரிமா….நான் லட்சுமிகிட்ட உன்னோட புஸ்தக பையை குடுத்து விடுறேன்….” என்று சொன்னவர் போனை வைக்க…
‘சாரி தாத்தா…’ என்று மனதிற்குள் மட்டுமே அவளால் சொல்லிக் கொள்ள முடிந்தது.
கோர்ட் வாசலில் வண்டி நிற்க….அதிலிருந்து இறங்கிய ரிஷி….வேகமாய் உள்ளே சென்றான்.
“ஏற்கனவே பெண்டிங்கில் இருந்த ஒரு கொலை வழக்கு சமந்தமாக உள்ளே சென்றவன்…அதற்கான வேலைகளை முடித்துக் கொண்டு….. வராந்தாவில்…. நடந்து வந்து கொண்டிருந்தான்.”
“வணக்கம்..சார்…” என்று இழுத்தபடி ஜான் நிற்க…அவனுக்கு பின்னால் அவன் சங்கரின் தந்தை…கட்சி வேஷ்டி சட்டையில் நின்றார்.
“உனக்கு இன்னும் திமிர் மட்டும் அடங்கவேயில்லை….” என்று சங்கரின் தந்தை சொல்ல…
“அது கூடவே பிறந்தது…அவ்வளவு சீக்கிரம் போகாது….” என்று ரிஷி நக்கலாய் சொல்ல…
“உன் திமிரை அடக்கத்தானே நாங்க இருக்கோம்…” என்று அவர் சொல்ல…
“பார்ப்போம்…யார் திமிரை யார் அடக்குறாங்க என்று..” என்று ரிஷி கிண்டலுடன் சொல்லி சிரிக்க…
‘இவன் லீவில் தான இருந்தான்…எப்ப ஜாயின் பண்ணான்..’ என்று சங்கரின் தந்தை யோசிக்க…
“எடுத்த வேலையை முடிக்காமல்…நான் பின்வாங்குறதே கிடையாது… எப்படியும் உன் மகனுக்கு ஜாமீன் கிடைக்க போவதில்லை…எதற்கு இந்த வீண் அலைச்சல் உனக்கு…” என்றவன்…
“சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததா சொல்லி…உன்னையும் தூக்கி உள்ள போட்டு இருக்கணும்…” என்று ஜானைப் பார்த்து சொன்னான்.
“சங்கரை கைது செய்ததுக்கே….உனக்கு இப்படி ஒரு நிலைமை….என் மேல் கையை வெச்சு பார் தெரியும்…நான் யார்ன்னு…” என்றான் ஜான்.
‘என்ன சொல்றான் இவன்….என் நிலைமைக்கு என்ன….?’ என்று யோசித்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.அவனை ஆழ்ந்து பார்த்தவன்…”என்ன சொல்ற…?” என்றான்.
“என்ன ஒன்னும் புரியலையா…?இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா…?உன் கல்யாணம் நடக்க இருந்த அன்று…உனக்கு ஒரு சூப்பர் ஷாக்….குடுத்தோமே மறந்துட்டியா…?” என்றான் ஜான்.
‘என்ன சொல்றான் இவன்…? எனக்கு என்ன ஷாக் குடுத்தான் இவன்…’ என்று ரிஷி யோசிக்க…ஒன்றும் புரியாமல்…அவன் வாயிலிருந்தே கறக்க வேண்டும் என்று நினைத்தான்.
“சோ வாட்…?” என்றான் திமிறாய்.
“இந்த திமிர் தாண்டா…..இதுக்காக தான் அவளைக் கடத்தினோம்…!அவளை நாசம் பண்ணனும்….அதை நினைச்சு நீ அவமானத்தில் கூனிக் குறுகி நிற்கணும் என்று நாங்க பிளான் போட்டா….
எப்படியோ அவ தப்பிச்சுட்டா…..அவளைத் தேடி…அந்த பக்கமா திரிய…அங்க என்னடான்னா…ரெண்டு பேரும் தண்ணிக்குள்ள ஓடிப் பிடிச்சு விளையாடிட்டு இருக்கீங்க…” என்று ஆத்திரத்துடன் ஜான் சொல்ல அதிர்ந்தான் ரிஷி.
ரிஷிக்கு தலையும் புரியவில்லை…வாலும் புரியவில்லை.ஏதோ புரிவது போல் இருந்தது.இருந்தாலும் தெளிவாய் ஒன்றும் தெரியவில்லை.
“பேப்பரில் வந்த போட்டோ…” என்று இடுங்கிய கண்களுடன் கேட்டான் ரிஷி.
“இன்னுமா உனக்கு புரியலை…அதுக்கு காரணம் நாங்க தான் என்று….ஆனா உங்கப்பா உன்னை அளவுக்கு இல்லை ரொம்ப புத்திசாலி…” என்று சங்கரின் தந்தை மெச்சிக் கொள்ள…
ரிஷிக்கு மெல்ல..எதுவோ புரிவதைப் போல் இருந்தது.
“தப்புப் பண்ணிட்டான் சங்கர்.அவ மேல ஆசிட் ஊற்றியதற்கு பதில்….இவ மேல ஊற்றியிருக்கணும்…பார்க்க ஊமைக் கோட்டான் மாதிரி இருந்து கிட்டு…என்கிட்டயே அன்னைக்கு என்ன பேச்சு பேசுறா….?”என்று ஜான் பல்லைக் கடித்துக் கொண்டே போக….
அங்கே ஜீப்பில் சங்கரை அழைத்து வரவும்…அவர்களின் கவனம் அவனின் மேல் சென்றது.
ரிஷிக்கு ஜானையும்,சங்கரையும் பார்த்து ஆயாசமாய் இருந்தது.மிஞ்சிப் போனால் இருபத்தியோரு வயது தான் இருக்கும்..அதற்குள் பழுத்த ரவுடியைப் போல் அவர்கள் இருப்பது கண்டு…அவனுக்கு ஆயாசம் தான்.
ஜான் பேசியதில்….சில விஷயங்கள் புரிந்தாலும்…சில விஷயங்கள் புரியவில்லை.சரண்யா என்று நினைத்து அபிராமியை கடத்தியிருக்கிறார்கள் என்று புரிந்தது.
‘அவ எப்போ இவனிடம் திமிராக பேசினாள்…?’ என்று யோசிக்க….
”கடத்திட்டு போன பொழுது பேசியிருப்பாளோ…?” என்று யோசனையில் ஆழ்ந்தான்.
அதற்குள் சங்கரின் கேஸ் ஹியரிங் வந்துவிட…அதை விசாரித்த அதிகாரி என்ற முறையில் அவனும் உள்ளே சென்றான்.
அங்கே சங்கருக்கு ஜாமீன் மனு முன் வைக்கப் பட….அதை நிராகரிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து விவாதம் முன் வைக்கப் பட்டது.
இரண்டு விவாதங்களையும் கேட்ட நீதிபதி….ஜாமீன் மனுவை நிராகரித்தார்.
இறுதியாக ரிஷி தன்னிடம் இருந்த அந்த பெண்ணின் மரண வாக்கு மூலத்தையும் கோர்ட்டில் சமர்ப்பிக்க….அந்த ஒரு ஆதாரமே சங்கரின் தண்டனைக்கு போதுமானதாக இருந்தது.
இப்படியொரு மரண வாக்கு மூலத்தை எதிர்பார்க்காத ஜானும்…சங்கரின் தந்தையும் அதிர்ந்து நின்றனர்.
சங்கருக்கு பத்து வருட கடும் காவல் தண்டனையும் …இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டது.
அவனுக்கு கொடுத்த தண்டனையில் விருப்பம் திருப்தி இல்லாதவனாய் வெளியேறினான் ரிஷி.ஆயுள் தண்டனையாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தான்.நம் சட்ட முறைகளைப் பார்த்து சிரித்துக் கொள்ள மட்டுமே முடிந்தது.
“என் ஒரே பிள்ளை…அவன் கேட்டு நான் எதுவும் இல்லைன்னு சொன்னதில்லை… அவனையே உள்ள தள்ளிட்ட இல்லை….இனி நான் யார்ன்னு காட்றேன் உனக்கு…அவனை எப்படி வெளியே கொண்டு வருவது என்று எனக்கு தெரியும்….!” என்று சங்கரின் தந்தை ஆவேசமாய் மொழிந்து விட்டு போக…..
ஜானும் அவனை முறைத்துக் கொண்டே…அவருடன் செல்ல…. சம்பந்தப்பட்ட சங்கரோ….எந்த மாறுதலும் இன்றி…காவலர்கள் அழைத்து செல்ல…அமைதியாக ஜீப்பில் சென்றான்.
“வண்டியை…அந்த காலேஜ்க்கு விடுங்க…” என்றான் ரிஷி.குமாரும் ஜீப்பை அந்த கல்லூரி நோக்கி செலுத்தினார்.
ஏனோ பயணத்தின் போது….அனுமதியின்றி அபியின் நினைவு வந்து மனதில் ஒட்டிக் கொண்டது.
‘அபியை அன்று கடத்தினார்களா…? அதுவும் என்னைப் பழி வாங்குவதற்காகவா…. அது தெரியாமல்…அவள் ஓடிப் போய் விட்டாள் …அது இதுவென்று நானும் பேசிவிட்டேனே…’ என்று யோசித்தவனுக்கு…
தான் முதன் முதலில் காட்டில் அபியைப் பார்த்த கோலம் மனதில் வந்து போனது.ஆடை கிழிந்து அவள் நின்றிருந்த கோலம்….அன்றை விட இன்று அவன் மனதை உலுக்கியது.அன்று அவள் யாரோ…ஆனால் இன்று அவன் மனைவியல்லவோ….!!!
எனக்கு விரிக்கப்பட்ட வலையில் சிக்கியது என்னவோ அவள்…என்னால் தான் அவள் வாழ்க்கை பாலாகி விட்டதோ…என்று எண்ணியவனுக்கு……
உடனே சென்று அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றியது.’என்ன ரிஷி மறந்துட்டியா…?எது எப்படி இருந்தாலும் அவ உன்கிட்ட உண்மையை சொல்லியிருக்கணும்….ஏன் சொல்லலை…’ என்று மனம் பழைய பல்லவியைப் பாட….
‘நானா…?அவகிட்ட மன்னிப்பா நெவர்…’ என்று எண்ணியவன்…சிந்தனையை நடப்பிற்கு கொண்டு வந்தான்.
ஜீப் அந்த கல்லூரிக்குள் நுழைய….அங்கு எக்ஸாம் எழுதிக் கொண்டிருந்த அபியின் மனதில் சிறியதாய் ஒரு தாக்கம்.ஏதோ ரிஷி அருகில் இருப்பது போன்று.கண்கள் நாலாபுறமும் அலைபாய…கஷ்ட்டப்பட்டு நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தாள்.
நேராய் முதல்வரின் அறைக்கு சென்ற ரிஷி…சில பேப்பர்களை அவரிடம் கொடுத்தான்.பிறகு ஜானைப் பற்றி விசாரித்தவன்…
“உங்க கல்லூரியில்… நீங்க எல்லா மாணவர்களுக்கும்… உளவியல் நிபுணரை வைத்து ஆலோசனை சொல்லலாமே…! சில மன அழுத்தங்கள் தான்…அவங்க செய்ற தப்புக்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
இவ்வளவு சின்ன வயதில்…..அவங்க பேச்சு, செயல், நடத்தை எல்லாம் வன்முறை கலந்ததாவே இருக்கு.இதனால் மத்தவங்களும் பாதிக்கப்பட்டு…சம்பந்தப்பட்ட மாணவர்களும் பாதிக்கப்பட்டு…அவங்க எதிர்காலமே கேள்விக் குறியாகி விடுகிறது.
என்னதான் அவனுக்கு தண்டனை ஒரு பக்கம் நிறைவு என்றாலும்….அவன் வயதும்…அவனது எதிர்காலமும் கண் முன் வரும் போது….. மனதின் ஏதோ ஒரு பக்கம்…அவனுக்காக வருத்தப்படத் தான் செய்கிறது.அவன் தந்தை முகத்தில் இருக்கும் ஆக்ரோஷம் கூட அவன் முகத்தில் இல்லை.அந்த அமைதி தான் ஏதோ ஆபத்தில் போய் முடியப் போகுதுன்னு என் மனம் சொல்லுது.
முடிந்த வரைக்கும்…. சைக்காலஜி ஆசிரியர்களை வைத்து….இங்க இருக்கிற எல்லா ஸ்டூடண்ட்ஸ்க்கும்….கவுன்சிலிங் கொடுங்க….இது என்னோட வேண்டுகோள்…” என்றான் ரிஷி.
“உண்மைதான் சார்…இந்த எண்ணம் எங்களுக்குமே இருந்தது.கூடிய சீக்கிரம் ஒரு நல்ல முடிவை எடுக்கிறோம் சார்….மாணவர்களை நெறிப்படுத்துவதில்… எங்களுக்கும் பங்கு இருக்கு சார்…” என்று அந்த முதல்வர் கூற….அவரிடம் விடை பெற்று வெளியே வந்தான் ரிஷி.
ஏனோ கல்லூரியே அன்று அமைதியாய் இருப்பதைப் போன்று தோன்றியது.பிறகு தான் கவனித்தான்….அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருப்பதை.
சில மாணவர்கள்…தேர்வு எழுதும் அறையில் இருந்து இவனை வேடிக்க பார்க்க….அதெல்லாம் கண்டு கொள்ளாது….தனது கல்லூரி நாட்களை நினைத்து முகத்தில் தோன்றிய புன்னகையுடன்…அந்த அறையைக் கடந்தான்.
அறையைக் கடந்தவனுக்கு…..மனதில் ஏதோ ஒன்று உறுத்த….உள்ளுணர்வு அவனை அந்த இடத்திலேயே தடுத்து நிறுத்தியது.
நான்கு எட்டு பின்னால் வந்தவன்…அங்கிருந்த ஜன்னல் வழியாக நோக்க….எதிர்புறம் இருந்த ஜன்னல் அருகில் அமர்ந்து கர்ம சிரத்தையாய் தேர்வு எழுதிக் கொண்டிருந்தாள் அபி.
அபியை அந்த இடத்தில் சுத்தமாய் அவன் எதிர்பார்க்கவில்லை.அவள் அபிதானா என்று உறுதி செய்து கொள்ள…மீண்டும் பார்க்க…”நான் அபியேதான்..” என்று உறுதிப் படுத்தினாள்.
முடிக் கற்றைகள் காற்றில் பறக்க….சுற்றுப் புறம் கவனமின்றி…அவள் கை எழுதுவதில் குறியாய் இருக்க….அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்…. குழப்பம் அடைந்தவனாய்….நகர்ந்து சென்றான்.
“இவ எப்படி இங்க…?” என்று அவன் மனம் யோசிக்க…
“முட்டாள்…அவ சொந்த ஊரே…பொள்ளாச்சி தான..”என்று ஒரு மனம் எடுத்துக் கொடுத்தது.
தன் யோசனைகளை புறந்தள்ளியவன்…தேர்வு முடியும் நேரத்திற்காக காத்திருந்தான்….
உன்ன மவுனத்தில் மயங்கிய என் மனம்…..
உன்னிடம் பேச….துடிக்கும் தினம் தினம்…
வாடி நின்ற பூங்கொடிக்கு….நீராய் வந்தாய்…!
நீ எனதாவாயா இன்று…!