அத்தியாயம் ஐந்து:
ரேஷன் கடையில், பில் போடுகிறவன் பேசுவது கேட்கும் தூரத்தில் பக்கத்தில் தான் வெற்றியும் தங்கபாண்டியும் நின்றனர்.
பில் போடுபவனுக்கு வெற்றியை தெரியவில்லை….. சாமான் போடுபவனுக்கு நன்கு தெரிந்தது….. அங்கிருந்தே வெற்றிக்கு ஒரு வணக்கத்தை வைக்க முற்பட…..
“வேண்டாம்”, என்று வெற்றி செய்த சமிக்கையில் ஏதோ பிரச்சனை என்று அனுமானித்தான்.. அருகில் வர முற்பட்டவனை, “அங்கேயே இரு”, என்று வெற்றி கை காட்ட நின்று கொண்டான்.
அவர்கள் நின்ற சிறிது நேரத்திற்கு எல்லாம் சந்தியா வந்துவிட்டாள்…….
இதற்கு பொருள் வாங்கும் ஆட்களும் அதிகமில்லை…. அந்த பில் போடுபவன் அப்போதும் எல்லோரிடமும் எரிந்து விழுந்து அலட்சியமாக தான் பேசிக்கொண்டு இருந்தான்.
அவனுடைய தோற்றம்… ஐயோ இவனுக்கு நாம் வரவேண்டுமா என்று தான் வெற்றிக்கு தோன்றியது….. ஒல்லியாக இருந்தான், ஒரு தட்டு தட்டினால் எட்டு ஊருக்கு குட்டிக்கரணம் நிச்சயம் அடிப்பான்.
கடையில் இருப்பவன் பெண்களிடம் வழிபவனல்ல.. ஒரு மாதிரி சைக்கோ மாதிரி தோன்றினான்….. எல்லோரையும் தப்பாக கீழிறக்கி பேசி அதில் சுகம் காண்பவனாக இருந்தான்.
சந்தியாவின் முறை வந்ததும், “என்னா குட்டி? உன்னை அப்புறம் தான வர சொன்னேன்! அதுக்குள்ள வந்திருக்க!”, என்றான் அலட்சியமாக..
“இப்படியெல்லாம் பேசாதீங்க… மரியாதையா பேசுங்க…..”,
“மரியாதையான்னா எப்படி? குட்டிம்மான்னா…..”, என்றான் இன்னும் நக்கலாக.
“உனக்கெல்லாம் இதுவே அதிகம்! என்ன…? அழகா இருந்தா… அப்படியே நீ வந்தவுடனே பல்லை இளிச்சிகிட்டு சாமான் போட்டுடுவனா…. போ! போ! அப்புறம் வா! இப்போ போட முடியாது!”,
“நீங்க எங்க கார்ட் குடுங்க……!”,
“சாமான் வாங்கும் போது வாங்கிக்க! போ! போ!…….”,
வெற்றி அப்போது சந்தியாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்….. அவள் முகத்தில் கோபம் வருத்தம் எதாவது தெரிகிறதா என்று….. ம்கூம்! அப்படி எதுவும் இல்லை…. ஒரு எரிச்சல் இருந்தது…… அதையும் மீறி நீ பேசினால் எனக்கொன்றுமில்லை போடா என்ற பாவனை இருந்தது…..
இவளுக்கு கூட ஆள் தேவையில்லை….. வீணாக தன்னால் எதுவும் பிரச்சனையை வேண்டாம் என்று நினைக்கிறாள் என்று பார்த்த மாத்திரத்தில் புரிந்தது..
திரும்பி வெற்றியை பார்த்தாள்… என்ன செய்வது என்பது போல…
தான் பேசிக்கொண்டு இருக்கும் போது சந்தியா வேறு புறம் பார்க்கவும்…. “இன்னாம்மா ஆள் தேடறியா…… எதுக்கு என்னை அடிக்கவா? இல்லை நீ அணைச்சிக்கவா?”, என்று விகாரமாக பேசவும்….
சந்தியாவுக்கு கோபம் வந்தது……
வெற்றிக்கு கோபம் வந்து அருகில் போகப் போக… அவன் வருவது தெரிந்த சந்தியா ஒரு கை காட்டி அங்கேயே நில் என்பது போல சொன்னவள்…….
இப்போது இன்னும் நிதானமாக அந்த கடைக்காரனைப் பார்த்து…. “உன்னை அடிக்க ஆள் கூட்டிட்டு வர்ற அளவுக்கு நீ பெரியாளா….. ஒழுங்கா மரியாதையா பேசு, இல்லை நடக்கறதே வேற……”,
“என்னா பண்ணுவ….?”,
“நீயல்லாம் எதுவும் பண்ண லாயக்கே இல்லாத ஆளு…… உன்னை என்னா பண்ணுவாங்க… இப்போ நீ எனக்கு சாமான் போடற…. என் கார்ட் குடுக்கற…… இல்லை இதெல்லாம் நீ செய்ய மாட்டேன்னு எழுதிக் குடு….”,
“ஏய்! என்னா துள்ற….. உன்னால ஆனதை பார்த்துக்கோ! என்னால எதுவும் செய்ய முடியாது…. எப்படி நீ என்கிட்டே இருந்து கார்ட் வாங்கறன்னு நான் பார்க்கறேன்…..”,
இப்போது அந்த இடத்தில் கூட்டம் கூடியிருந்தது…..
வெற்றிக்கு அவள் நடவடிக்கையை பார்ப்பதில் ஒரு சுவாரசியம் ஏற்பட்டு இருந்தது… அமைதியாக வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
வெற்றி இதை பார்த்துக் கொண்டிருப்பதால் யாரும் தலையிடவில்லை…..
“நான் சீ எம் செல்லுக்கு கம்ப்ளைன்ட் பண்ணுவேன்… மனித உரிமைகள் ஆணையத்துக்கு கம்ப்ளைன்ட் பண்ணுவேன்”, என்றாள் சந்தியா.
“இன்னா ரூல்ஸ் பேசற…. போ! போ! என்னா வேணா செய்! கார்ட் குடுக்க மாட்டேன்…”,
என்ன செய்வாள் என்று அனுமானிக்கும் முன்னரே ஒரு ஓரமாக இருந்த டேபிளில் இருந்த அவன் பில் போடும் புக்கை தூக்கி கொண்டவள்…… திரும்ப தூரமாக வந்து நின்று கொண்டாள்..
“நீ கார்ட் குடுக்கலை….. நான் இதை தூக்கிட்டு போவேன்……”,
“இரு போலிசை கூப்பிடறேன்”,
“கூப்பிடு….. நானும் என் கார்ட் பிடிங்கி வெச்சிக்கிட்டேன்னு சொல்றேன்…..”,
உடனே போனை எடுத்த அந்த கடைக்காரன்…. பில் புக்கை எடுத்து வைத்துக் கொண்டு ஒரு பெண் கலாட்டா செய்வதாக கூறினான்.
போலிஸ் என்றது சந்தியாவின் மனதில் ஒரு ஓரத்தில் பயம் தான்…. இப்போது இத்தனை பேர் முன்னிலையிலும் பின் வாங்க முடியாது….. இது தேவையில்லாத பிரச்சனை…… பேசாமல் எத்தனை தடவை என்றாலும் நடந்து இருக்காமல் உனக்கு எதற்கு ரோஷம் என்று மனம் இடித்துரைத்து…..
எவ்வவளவு மனதின் கலக்கம் இருந்தாலும் முகத்தில் காட்டவில்லை சந்தியா…. இருந்தாலும் வெற்றியை திரும்பி பார்த்தாள், அவனை அருகில் அழைக்கலாமா என்று……
“உனக்கு இது தேவையா?”, என்பது மாதிரி அவன் முகத்தில் சிரிப்பு….
அவனை சந்தியா பரிதாபமாக பார்க்கவும்….
“அங்கேயே இரு”, என்று சிக்னல் செய்தவன்….. போனை எடுத்து அந்த ஏரியா கௌன்சிலருக்கு அழைத்து பேச ஆரம்பித்தான்…..
“என்னா தலை? நீ இருக்ககுள்ள நம்ம ஏரியால இப்படி நடக்கலாமா?”, என்றான்.
அவனுக்கு நன்கு பழக்கமான கவுன்சிலரும்….
என்ன விஷயம் என்று தெரியாமலேயே, “உன்னால முடியாததா…. பார்த்துக்கோடா நீயே”, என்றார்.
“அண்ணாத்தே இது ஒரு புள்ள பூச்சி, நான் கை வெச்சா ஸ்போட் அவுட்டு, நீ வா! கவர்மென்ட்டு எம்ப்ளாயீ வேற…. நீயே பார்த்துக்கோ வா!”,
“என்னா வெற்றி? என்னடா?”, என்றார்.
“நான் இன்னான்னா நீ அடுத்தது எம் எல் ஏ எலெக்ஷன்ல நிப்பன்னு பார்த்தா! நீ கவுன்சலரா கூட ஆகமாட்ட போல இருக்க அண்ணாத்தே…..”,
“விஷயத்த சொல்றா! நான் பார்த்துக்கறேன்!”, என்று அவர் சொல்ல..
“ஊட்டாண்ட இருந்தா இப்படியே இங்க வந்துட்டு போ”, என்று சொல்ல…..
“இங்க தான் இருக்கேன் பத்து நிமிஷத்துல வர்றேன்”, என்றார்….
அதற்குள் அங்கே ஒரு கான்ஸ்டபிள் வந்திருக்க…. பில் போடுபவன் விவரம் சொல்லவும்…….
“இன்னாம்மா? இன்னாம்மா பிரச்சனை?”, என்று கடுமையாக சந்தியாவிடம் கேட்டார்.
சற்று அவளின் முகத்தில் பயம் தெரியவும்….. வெற்றி அருகில் போனவன்….. “வணக்கம் சார்!”, என்றான் அந்த கான்ஸ்டபிளை பார்த்து……
சந்தியாவிடம் இருந்து அவனிடம் கவனத்தை திருப்பியவர்….. அப்போது தான் அவனை பார்த்தவர்…… “வெற்றி”, என்றார்….
“நமக்கு வேண்டியவங்க சார்”,…… என்றான் சந்தியாவை காட்டி…
“முன்னாடியே சொல்றது இல்லையா!”, என்று அவனை பார்த்து குறைபட்டவர்…. “கொஞ்சம் வேண்டியவங்களா, ரொம்ப வேண்டியவங்களா”, என்றார்.
“ஏன் அண்ணாத்தே…..?”,
“ரொம்ப வேண்டியவங்கன்னா வீட்டுக்கு அனுப்பிடு”,
“அம்மாக்கு ரொம்ப வேண்டியவங்க”,
“அனுப்பிடு”,
“நீ போ”, என்றான் சந்தியாவை பார்த்து…..
அவள், “கார்ட்”, என்கவும்…..
“கார்ட் வாங்கி வெச்சிருக்கான்…..”,
“நீ பில் புக் குடும்மா”, என்று அவளிடம் இருந்து வாங்கியவர்….
“கார்ட் குடு”, என்றார் பில் போடுபவனை பார்த்து….
“அவன் ஒரே அட்ரெஸ்ல மூணு கார்ட் இருக்கு”, என்று ரூல்ஸ் பேசவும்…..
“வாடகை வீடுன்னா அப்படித்தான், நீ குடு……இல்லை உனக்கு அட்ரெஸ் இருக்காது யோசிச்சிக்கோ!”, என்றார்…….
அப்போதும் அந்த பில் போடுபவன், “முடியாது”, என்பது போல நிற்கவும்….
“இவன் என்னா வெற்றி இப்படி நிக்கறான்…”,
“அவன் ஒரு மாதிரி… இப்படி இருக்குறவங்களா பார்த்து நீங்க கவர்மென்ட்ல வேலைக்கு வெக்கறீங்களா……. இல்லை உங்க கிட்ட வேலைக்கு சேர்ந்ததுக்கு அப்புறம் இப்படி ஆகறாங்களா தெரியலையே….”, என்றான்…..
அதற்குள் கவுன்சலர் வந்துவிட்டார்….. வேகமாக ஒரு பத்து ஆட்கள் புடை சூழ வந்தார்…… “வெற்றி”, என்று ஆர்ப்பாட்டமாக அழைத்து அவனை அணைக்க வர….
வெற்றி வேகமாக விலகினான்…….. “அண்ணாத்தே உன் சட்டை மை ஆகிடும்….”,
“ஆயிட்டு போகுது…. உடனே நீ அண்ணனுக்கு ஒரு பத்து சட்டை எடுத்து அனுப்ப மாட்ட….”,
“நீ பாக்டரியே விலைக்கு வாங்கிட்டன்னு சொன்னாங்க! நீ என்ன என்னை எடுத்து குடுக்க சொல்ற….”, என்றான் அவருக்கு மட்டும் கேட்கும் விதமாக…
“நம்ம ரகசியம் நமக்குள்ள வெற்றி”, என்று சிரித்தவர்…. “என்னா பிரச்சனை….?”,
அவன் விவரத்தை சொல்லவும்… சந்தியாவை பார்த்தவர்…… “என்னா வெற்றி பொண்ணு ஷோக்கா கீது!”, என்றார் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்…
“அண்ணாத்தே! நமக்கு ரொம்ப வேண்டியவங்க!”, என்றான் அந்த வேண்டியவங்களில் மிகவும் அழுத்தம் கொடுத்து….
“இன்னா வெற்றி நீ இப்படி! சுத்தி வளைக்காத…..! எனக்கு என்னா முறையாகணும் சொல்லு!”, என்றார் பளிச்சென்று.
“உங்களுக்கு சிஸ்டர் முறையாகணும்”, என்றான்.
“ஓகே சிஸ்டர்! நீ சொல்லுமா”, என்றார் அவளை பார்த்து……
“எல்லோரும் சொல்லுவாங்க!”, என்றவன் கூட்டத்தில் ஓரிருவரை பார்க்க, அவர்கள் வந்து அவர்களுக்கு இருந்த கம்ப்ளைன்ட் சொல்ல ஆரம்பித்தனர்….
அதற்குள், “போ”, என்று ஒரு சிறு தலையசைப்பு சந்தியாவை பார்த்து….. உடனே இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்…..
சந்தியாவை அனுப்பி விட்டு வெற்றி அந்த இடத்தில் தான் இருந்தான், ஆனால் பார்வையாளன் மட்டுமே…. அவன், “நீ, இதை செய்! அதை செய்!”, என்று யாரிடமும் கூறவில்லை.
கவுன்சலரை பார்த்ததும் அங்கே இருந்த ஜனங்களும் ஆளுக்கு ஒன்றாக பில் போடுபவன் மேல் குறை சொல்ல… விஷயத்தில் சத்தம் அதிகமாகி…… அந்த ரேஷன் கடைக்காரனை தாற்காலிக விடுமுறையில் போக வைத்து…… அவனை இடம் மாற்றி விடுகிறேன் என்று கவுன்சலர் சொல்லியதும் மக்கள் கலைந்து சென்றனர்.
“அப்போ வெற்றி சந்தோசம் தான….”,
“என்ன அண்ணாத்தே உனக்கு தான் சந்தோஷமா இருக்கணும்…. உன்னை ஜனங்க மத்தில நம்ம கவுன்லர் நமக்கு செய்வாருன்னு காட்டியிருக்கேனுல்ல…..”,
“அதான நீயாவது ஒத்துக்கறதாவது…….”,
சிரித்தவன்… “தோ பாரு…. எனக்கு நீ தான்… எனக்கு அரசியலுக்கு வர்ற ஆசையெல்லாம் கிடையாது…. எதுன்னாலும் உன்னை தான் முன்ன நிறுத்துவேன்…..”, என்றான்.
“அந்த தைரியம் தான்…..”, என்றவர்….. “வரட்டா….”, என்றார்.
“சரி அண்ணாத்தே! நானும் ஜூட்!”, என்றவன் கிளம்பிவிட்டான்.
வீட்டிற்கு வந்ததும் அவனின் அம்மாவை ஒரு பிடி பிடித்தான்….. “இதுக்கு தான் பொண்ணுங்க விஷயத்துக்கு என்னை போக சொல்லாதன்னு சொன்னேன்!”,
“ஏன் வெற்றி?”,
“வந்தவன் பிரச்சனையை என்னன்னு பார்க்க மாட்டேங்கறான்…. அந்த பொண்ணு எனக்கு யாருன்னு அவனுங்களுக்கு அவ்வளவு ஆர்வம்…. இதுல அந்த கம்மனாட்டி கவுன்சிலர், பொண்ணு ஷோக்கா கீதுன்றான்… எனக்கு ரொம்ப வேண்டியவங்கன்னு சொல்ல வேண்டியதா போச்சு…… அப்புறம் தான் பார்வையையே மாத்தினான். ஏன்மா நீ”, என்றான்.
“இதுக்கு தான் நான் போறேன்னு சொன்னேன்!”,
“நீ போய் என்ன ஆகும்…. அந்த பில் போடுறவன் மண்டையை கல்ல விட்டு ஒடைச்சிருப்ப, சரியான பையித்தியக்காரன் போல அவன்….. இந்தா கார்டு அந்த பொண்ணு வீட்ல குடுத்துடு!”, என்று சொல்லி சென்று விட்டான்.
மாலையில் வெற்றியின் வீட்டு மொட்டை மாடியில் சந்தியா டுயுஷன் எடுத்துக் கொண்டிருக்க…
அவள் டுயுஷன் முடித்து கீழிறங்கும் சமயம் சரியாக அவளை மேலே பிடித்தான் வெற்றி… கீர்த்தனாவும் அங்கே தான் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தாள்…
“அதென்ன உனக்கு அசட்டு தைரியம்….. நான் பேச வந்தா பெரிய இவ மாதிரி நீ பேசற.. முடிஞ்சவரைக்கும் ப்ரச்சனைகள்ள இருந்து விலகி தான் இருக்கணும்…… முன்ன போய் நிக்க கூடாது புரிஞ்சதா….”, என்று பொரிந்தான்.
“அதான் நீங்க இருந்தீங்களே!”, என்று சந்தியாவின் குரல் தயக்கத்தோடு ஒலிக்க….
“தோடா! நான் வராம இருந்தா!”,
“அதான் வந்திருந்தீங்ககல்ல”, என்றாள் மீண்டும்….
“ம், விளங்கும்!”, என்று நொடித்தவன்….. “எனக்கு எல்லோரையும் தெரிஞ்சிருந்தது, எனக்கு யாரையும் தெரியாம அந்த கடைக்காரனுக்கு நிறைய பேர் தெரிஞ்சிருந்தா பிரச்சனை திசை மாறியிருக்கும்…”,
“யார்? எப்படி? எதுவும் இந்த கால சூல்நிலைல சொல்ல முடியாது…. நான் கூட இல்லைன்னா அந்த போலிஸ்காரரே மரியாதையா பேசியிருப்பாரா சொல்ல முடியாது…..”,
“எதுலயும் அசட்டு துணிச்சல் இருக்க கூடாது….. ரேஷன்க்கு கொஞ்ச நாளைக்கு போகாத….. பில்லு புக்கை தூக்கிட்டு நின்ன மாதிரி திரும்ப எதுவும் செய்ய கூடாது…”,
“ம்”, என்று மண்டையை நன்றாக உருட்டினாள்…..
கீர்த்தனா இவர்கள் பேசுவதை சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னவோ உருட்டுற தலையை!”, என்று சொல்லிக்கொண்டே கீழிறங்கி போய்விட்டான் வெற்றி..
“அக்கா எப்படி இப்படி கத்தாம இருக்கார்”, என்றாள் ஆச்சர்யமாக.
“தெரியலை விடு….. ஆனா இன்னைக்கு நமக்கு நிறைய ஹெல்ப் பண்ணினாங்க….”,
“நீ தேங்க்ஸ் சொன்னியா…”,
“ஐயோ! மறந்துட்டேன்!”, என்று வேகமாக விரைந்தவள், கடைசி படியில் இருந்த வெற்றியை, “சார்”, என்று கூப்பிட்டாள்.
திரும்பிய அவன், அவள் கீழே வர முற்படுவதை பார்த்து…. “அங்கேயே இரு”, என்று சொன்னவன் மேலே போனான்.
சந்தியா கீழே வந்தால் எல்லோர் பார்வையிலும் அவர்கள் இருவரும் படுவர்…. அதை விரும்பாதவன்….. அவனே மேலே திரும்ப ஏறினான்.
“என்ன?”, என்றான் அதட்டலாக……
இவன் இவ்வளவு பேசியதே அதிகம் என்று நினைத்த சந்தியா…..
“தேங்யூ”, என்றாள்.
“அதுக்கா கீழ இறங்கி வந்த”,
“ம்”, என்று அவள் தலையாட்டவும்..
“ஊஃப்…”, என்றவன் திரும்ப சென்று விட…..
இதுக்கு இவன் ஏன் பெருமூச்சு விடறான்.. என்று நொந்த படியே கீர்த்தனாவை பார்த்தாள்….
வாய் பொத்தி சிரித்த கீர்த்தனா… “நம்ம தானே அந்த அண்ணாவை பார்த்து பயப்படறோம், அவர் ஏன் இப்படி பண்றார்”, என்றாள்…
“தெரியலை!”, என்று தோளை குலுக்கியபடி சந்தியா.. “வா போகலாம்!”, என்று கீர்த்தனாவை அழைத்தாள்…..
“இரு அக்கா! கொஞ்ச நேரம் கழிச்சு போவோம்! அனேகமா அவர் நம்ம கிட்ட பேசறது யார்க்கும் தெரிய வேண்டாம்னு தான் மேல வந்திருப்பார்…….”,
அப்போது தான் அது சந்தியாவிற்கும் உரைக்க….. “ஆமாம்….. அப்படி தான் இருக்கும்! அதான் நான் திரும்ப கூப்பிட்டதும் மறுபடியும் ஏதாவது ஹெல்ப் கேட்க போறேன்னு பயந்திருப்பார்!”, என்று வெற்றியை இப்போது சரியாக கணித்தாள் சந்தியா.
சொல்லும் போது சந்தியாவின் குரலில் வருத்தம் தெரிந்தது…. “அப்படியா யாராவது ஹெல்ப் பண்ணினா நம்ம திரும்ப திரும்ப கேட்போம்”,
“விடுக்கா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி….. உன்னை பத்தி அவருக்கு தெரியாதில்லை …… ஆனா அவர் சொன்ன மாதிரி நீ எந்த பிரச்சனைக்கும் போகாத!”, என்றாள்……
“சரிங்க அக்கா! நீங்க சொன்னா சரி!”, என்றாள் கீர்த்தனாவை பார்த்து கிண்டலாக….
“போக்கா!”, என்று சொல்லியபடியே கீர்த்தனா அவளை பார்க்க….
சிரித்துக் கொண்டே சகோதரிகள் இருவரும் படியிறங்கினர்.
“நான் இப்போ தான் திட்டிட்டு வர்றேன், மறுபடியும் இவ சிரிக்கறா! இவளை என்ன செய்ய?”, என்பது போல சந்தியாவை பார்த்தான்… ஆனால் இப்போது சந்தியா மேல் கோபம் இல்லை… ஒரு சிநேகிதம் மனதில் தோன்றியது.
அவன் அம்மா மட்டும் தான் எனக்கு சிநேகிதம் என்று சொல்ல வேண்டுமா, அவன் சொல்லக் கூடாதா?
இறங்கிக் கொண்டிருந்த சந்தியா எதேச்சையாக எதிரில் பார்க்க, பட்டறையில் இருந்து வெற்றி அவளை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது…. அவசரமாக முகத்தில் இருந்து சிரிப்பை விலக்கி, படு பவ்யமாக முகத்தை வைத்துக் கொண்டு….. கீர்த்தனாவை கையில் கிள்ள…..
“அக்கா ஏன் கிள்ளற” என்று கேட்டவளிடம் கண்களால் வெற்றியை காட்ட…. கீர்த்தனா அவளின் அக்காவைவிட முகத்தை இன்னும் படு பவ்யமாக வைத்து ஒரு ஹெட் மாஸ்டரை பார்த்தால்….. ஒரு மாணவனுக்கு தோன்றும் முகபாவனையோடு இறங்கினாள்.
இருவரையும் பார்த்து வெற்றிக்கு தான் முகத்தில் புன்னகை வந்தது…. அதை மறைத்து வேறு புறம் திரும்பிக் கொண்டான்.