அத்தியாயம் 17:
ரிஷியும்,கோவிந்தனும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காது முறைத்துக் கொண்டிருக்க…..அதைப் பார்த்த அபிராமியின் மனதிற்குள் குளிர் பிறந்தது.
ரிஷியின் உக்கிரமான பார்வைக்கு காரணம் அவர்களுக்கு பின்னால் சரண்யா நின்றிருந்ததே.ஆம் அவளும் விடாமல் பிடிவாதம் பிடித்து அவர்களுடனேயே வந்திருந்தாள்.
“எங்கே தான் இல்லை என்றால் அபிராமி உண்மையை சொல்லி விடுவாளோ என்ற பயம் அவளையும் வர வைத்திருந்தது.தான் உடன் இருந்தால் எப்படியும் உண்மையைக் கலைத்து விடலாம் என்றே எண்ணினாள் சரண்யா.”
இவர்களின் குரலைக் கேட்டு சித்ரா வெளியே வர…..சுரேஷும் வந்தார்.அவர்கள் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும்….இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை.
“இப்ப எதுக்காக கூட்டத்தோட இங்க வந்து நிற்குறிங்க…?” என்றான் ரிஷி.
“அன்னைக்கு என்னமோ குடும்பமே ஒழுக்கம் என்ற ரீதியில் பேசுனிங்க…?இப்ப என்ன சொல்றிங்க..?” என்றார் கோவிந்தன்.
அவர் சொல்ல வருவது ரிஷிக்கு சுத்தமாய் புரியவில்லை.”இப்ப என்ன சொல்ல வரிங்கன்னா…? என்ன அர்த்தம்..?” என்றான்.
“உனக்கு புரியலையா இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா…? மணடபத்தில் பெரிய ஒழுக்க சிகாமணியா பேசிட்டு….எங்க வீட்டு பெண்ணையே கடத்தி…அவளையே கல்யாணமும் பண்ணியிருக்க… தம்பி தப்பா நடந்துக்கப் பார்ப்பான்…நீ அவளையே கல்யாணம் செய்துப்ப…. என்ன குடும்பம்டா உங்க குடும்பம்…” என்றார் கோவிந்தான்.
“அவளோட தங்கையா….?” என்று அதிர்ந்த ரிஷி….தன் கைப்பிடியில் இருந்த அபியை சட்டென்று விட்டான்.
அவ்வளவு தான் அந்த நிமிடம் அபியின் உயிரே அவளிடம் இல்லை.அவள் எதிர்பார்த்தாள் தான்….ஆனால் இப்படி அவள் நினைக்கவேயில்லை…ஏதோ தன் வாழ்க்கையே முடிந்து விட்டதைப் போல் உணர்ந்தாள்.
அவளைப் பிடித்த சித்ரா…கண்களால் ஆறுதல் படுத்தி….அங்கிருந்த சோபாவில் அமர வைத்தார்.ஆனால் ரிஷியின் முகமோ கல்லாய் இறுகியிருந்தது.
சற்று முன் அவன் மனதில் தோன்றிய காதல் உணர்வுகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் பட்டிருந்தது.
அபி அவனை ஏக்கமாய்ப் பார்ப்பதும்..அவன் முகத்தைத் திருப்பிக் கொள்வதும் சரண்யாவின் கண்களில் தப்பாமல் விழுந்தது.
“பாருங்க பாட்டி…! என் வாழ்க்கையை கெடுத்துட்டு…இவ இங்க வந்து எப்படி உட்கார்ந்திருக்கான்னு…” என்றாள் வராத கண்ணீரோடு.
ஏற்கனவே அபியின் மேல் கோபமாய் இருந்த வள்ளி….தன் முன்னால்…கண்டுகொள்ளாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்து கடும் கோபத்தில் இருந்தார்.
அந்த கோபத்திற்க்கு சரண்யாவின் பேச்சு தீனி போட….அமர்ந்திருந்த அபியின் கையைப் பிடித்து இழுத்தவர்….அவளை மாறி மாறி கன்னத்தில் அறைந்தார்.
சித்ராவும்,சுரேஷும் திகைத்து நிற்க….அபியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
“எவ்வளவு தைரியம் உனக்கு…?எதுக்கு இப்படி செய்த…?”என்று அவர் அடித்துக் கொண்டிருக்க….அதுவரை கல்லாய் நின்றிருந்தவனின் மனம் அசைந்தது.சரண்யாவின் பார்வை எதையோ சாதித்து விட்டதைப்போல் தோன்ற….
சட்டென்று அபியை தன் பின்னால் இழுத்தான் ரிஷி.அவன் இழுத்ததில் அதிர்ந்த அபி….அவன் முதுகுக்கு பின்னால் ஒன்றினாள்.
அதைப் பார்த்த சுரேஷுக்கும்,சித்ராவிற்கும் ஒரு நம்பிக்கை ஒழி தோன்றியது.
“விடுடா அவளை…!” என்றார் கணபதி.
“என் வீட்டுக்கு வந்து என் கண் முன்னால் என் மனைவியை அடிக்க நீங்க யாரு….முன்னாடி தான் உங்க பொண்ணு…இப்போ என் மனைவி…அவ மேல கைய வச்சா நான் மனுஷனா இருக்க மாட்டேன்…போங்க வெளியே…!” என்றான் ரிஷி.
“எங்க பொண்ணு இல்லாம நாங்க போறதா இல்லை.அதுக்குத்தான உறவுக்காரங்களோட வந்திருக்கோம்..!” என்றார் கோவிந்தன்.
அபியை அவர்கள் மிரட்டி திருமணம் செய்து கொண்டதாகவே கோவிந்தன் எண்ணினார்.அதனால் எப்படியும் அவளை அங்கிருந்து அழைத்து செல்வதில் முனைப்பாய் இருந்தார்.பாவம் பேத்தியின் மனதை அவர் அறிந்திருக்கவில்லை.
“யாரோட வந்தாலும் சரி….! அவ என் மனைவி…யார்கூடவும் அனுப்ப முடியாது..!” என்றான் உறுதியாய்.
யாரோ ஒரு கூடைப் பூக்களை அள்ளி….அபியின் தலையில் போட்டதைப் போல் உணர்ந்தாள்.எப்படியும் தன்னை அவன் விரட்டாமல் விட மாட்டான் என்றே எண்ணினாள்.ஆனால் ரிஷி நடந்து கொண்ட விதம்…அவள் காதல் கொண்ட மனதின் காதலை மேலும் அதிகரிக்க செய்தது.
“ஓஹோ….அன்னைக்கு என்னடான்னா…உங்க பொண்ணு எங்க இருக்கான்னு எங்களுக்கு தெரியவே தெரியாதுன்னு சொன்னிங்க….இப்ப என்னடான்னா…அவ என் பொண்டாட்டி…அப்படி இப்படின்னு உரிமை பேசுற…மரியாதையா அவளை எங்க கூட அனுப்பு…” என்றார் கோவிந்தன்.
“அனுப்பலைன்னா…?” என்றான் உக்கிரமாய் ரிஷி.
“அவளைத்தான் பிடிச்சிருக்குன்னா…முதலிலேயே சொல்லியிருக்க வேண்டியது தானே…எதுக்காக என் வாழ்க்கையையும் கெடுத்த…” என்றாள் சரண்யா நல்லவள் போல்.
“ஏய்…!” என்று அவளின் கழுத்தை நெரிக்கப் போனான் ரிஷி.
“என்ன உண்மையை சொன்னா உனக்கு கோபம் வருதா…? விட்டிருந்தா உன் தம்பி அன்னைக்கே அவ ஜோலியை முடிச்சிருப்பான்….அவளைக் காப்பாற்ற போய்…இப்போ நான் வாழ்க்கையை இழந்து நிற்கிறேன்…” என்றாள் சரண்யாவும் விடாமல்.
அன்று மண்டபத்தில் நடந்த வாக்குவாதங்கள் அபிக்கு தெரிந்திருக்கவில்லை என்பதால்….இப்போது தான் பிரச்சனையின் சாளரம் புரிய ஆரம்பித்து அவளுக்கு.
“எவ்வளவு அழகாய் தன் அக்கா காயை நகர்த்தியிருக்கிறாள் என்று எண்ணிய அபியால்….வருண் மேல் குற்றம் சுமத்தியிருப்பதை தாங்க முடியவில்லை.ஒரு சகோதரனைப் போல் பழகியவனுக்கு இப்படி ஒரு பேரா..?” என்று எண்ணியவளால்…அதற்கு மேல் ரிஷியின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொள்வதில் விருப்பம் இல்லை.
சரண்யாவின் முன்னால் சென்றவள்…”நிறுத்து…! வருண் என்னிடம் தப்பா நடக்க முயன்றாரா…? இதென்ன புதுக் கதை….” என்றாள் அபி.
அபியின் கேள்வியில் அனைவரும் விக்கித்து நிற்க…ரிஷி அவளையே இமைக்காமல் பார்க்க….அவளிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பாராத சரண்யா….திகைத்தது சில நிமிடங்கள் மட்டுமே.
“ஹோ…உண்மையை சொன்னா ஏதாவது பண்ணிடுவோம்ன்னு உன்னை மிரட்டி வச்சிருக்காங்களா அபி….நீ எப்படி விட்டுக் குடுப்ப…என்ன இருந்தாலும் அவன் இப்போ உனக்கு கொழுந்தன் முறை ஆகிட்டான். அதனால் அவனைத் தப்பிக்க வைக்கத்தான் பார்ப்ப…அதுக்காக கூடப் பிறந்த அக்காவைத் தப்பு சொல்வியா…?” என்று கதையையே மாற்றினாள் சரண்யா.
அபியே திகைத்து தான் போனாள்.என்ன ஒரு சாமர்த்தியம்….? என்று நினைத்துக் கொண்டிருக்க….
“உன் வெள்ளைத் தோலைப் பார்த்து மயங்கியிருப்பான்…!” என்றாள் சரண்யா ரிஷியைப் பார்த்து.
“போதும் நிறுத்து…!” என்று கத்திய அபி…ஓங்கி சரண்யாவின் கன்னத்தில் அறைந்தாள்.
சரண்யா பேயறைந்த மாதிரி நிற்க….அபியிடம் இருந்து இவ்வளவு பெரிய சத்தத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை.
“அவரைப் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு….ஒழுக்கத்தை பற்றி பேச…உன்கிட்ட என்ன ஒழுக்கம் இருக்கு…மனதில் இருப்பது எல்லாம் ஒரே அழுக்கு..!” என்றாள் கோபமுடன்.
“அபிராமி…” என்று அதட்டினார் அமிர்தவள்ளி.
“என்ன பாட்டி…..உங்க செல்ல பேத்தியை சொன்னதும் உங்களால பொறுக்க முடியலையா…? எப்படி முடியும்….அவதானே உங்களுக்கு எல்லாம்…அபி இதை செய்யாத…அபி அதை செய்யாத….அப்படின்னு மட்டும் தானே சொல்லுவிங்க…ஆனா அவ எது செய்தாலும் உங்களுக்கு சரிதான் இல்லையா…?” என்றாள் அபி கண்களில் கண்ணீருடன்.
“அபி…?????” என்ற வள்ளியின் முகத்தில் ஈயாடவில்லை.
“சொல்லுங்க பாட்டி…நான் எப்பவுமே உங்களுக்கு இரண்டாம் பட்சம் தானே…! அவ ஆடம்பரமா டிரஸ் பண்ணலாம்…அவளுக்கு பிடிச்ச காலேஜில் படிக்கலாம்…இஷ்ட்டப் பட்ட இடத்துக்கு போகலாம், வரலாம்…அவ மனசில் என்ன நினைக்கிறாளோ இல்லையோ…அதுக்கு முன்ன நீங்க நிறைவேத்திடுவிங்க…
ஆனா நான்…நின்னா தப்பு,நடந்தா தப்பு,அப்படி டிரஸ் பண்ணக் கூடாது..அடக்கமா இருக்கணும்,ஒடுக்கமா இருக்கணும்…அமைதியா இருக்கணும்…எதிர்த்து பேசக் கூடாது…நீங்க எடுத்து தருவதை உடுத்தணும்…நீங்க சொல்ற படிப்பைப் படிக்கணும்…இன்னும் எத்தனைப் பாட்டி….அப்படி என்ன என் மேல் உங்களுக்கு வெறுப்பு…?” என்றவளால் அழுகையை அடக்க முடியவில்லை.
“அபிராமி….என்ன பேச்சு இது…? பாட்டிகிட்ட இப்படியெல்லாம் பேசக் கூடாது….” என்று சொன்ன கணபதியை வினோதமாய்ப் பார்த்தாள் அபி.
“நீங்க யாரு….?” என்றாள் அபிராமி.
அவள் கேள்வியில் முதலில் அதிர்ந்தது ரிஷி தான்.பெற்ற தந்தையைப் பார்த்து யார்ன்னு கேட்கிறா… என்றவனின் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது.
“என்ன பேச்சு அபி…பெத்த அப்பனை யாருன்னு கேட்கிற….?” என்றார் கோவிந்தன்.
தன் கண்ணீரைத் துடைத்தவள்….”யாருக்கு யாரு அப்பா……” என்றவள்….
கணபதியைப் பார்த்து…” நான் உங்களுக்கு தான் பிறந்தேனா….?” என்றாள் கோபமாய்.
அவளின் அந்த கேள்வி…கணபதியின் உயிரை அப்படியே ஆட்டியது.
“அபிராமி…” என்று அவர் திகைக்க…
“இல்லை ஒரு நாள் கூட நீங்க எனக்கு அப்பாவா நடந்துகிட்டது கிடையாது.உங்களை பொறுத்தவரை அவ ஒருத்தி தான் உங்க பொண்ணு….என்னைப் பற்றி ஒரு பெற்ற தகப்பனா என்னைக்காவது கவலைப் பட்டிருப்பிங்களா…? இல்லை ஒரு அப்பாவா எனக்கு ஏதாவது செய்திருப்பிங்களா…இது வரைக்கும் நான் தான் உங்களை அப்பான்னு கூப்பிட்டு இருக்கேனா…?” என்றாள் சாட்டையடியாய்.
கணபதியால் அபியின் வார்த்தைகளைக் கேட்க முடியவில்லை.”அவ சொல்வதும் உண்மைதானே….நான் எதுவுமே செய்யவில்லையே அவளுக்கு…!” என்று நினைத்தவருக்கு தொண்டை அடைக்க…தளர்ந்து போய் திரும்பி சென்றார்.
அவளின் கேள்விகளுக்கு அங்கிருந்த யாரிடமும் பதில் இல்லை.அவள் மனதில் இத்தனை கேள்விகளும்….கோபங்களும் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.இப்படி ஒரு சீற்றத்தையும் எதிர்பார்க்கவில்லை. அமைதியாக இருந்து பழக்கப் பட்டவள்….ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் பொங்கி விட்டாள்.
“ஏன் தாத்தா…என் மேல் இருந்த நம்பிக்கை உங்களுக்கும் குறைந்து விட்டதா…? என்றாள் குரல் கம்ம
ஏனோ அவரிடம் மட்டும் குரலை உயர்த்தவில்லை.அவர் மட்டும் தானே அபிக்கு ஆதரவாய் இருந்தார்.தன்னை அன்பாய் வளர்த்தவரை எதிர்த்து பேச முடியாமல்…தலை குனிந்தாள்.
“அப்படி எல்லாம் இல்லை அபி…” என்று கோவிந்தன் தழுதழுக்க…
“அப்ப…நான் சொல்றதை நம்புங்க தாத்தா….வருண் என்னிடம் தப்பா நடக்க முயற்சிக்கவில்லை.அவர் எனக்கு ஒரு சகோதரன் போல…அதைப் போல் யாரும் இங்க என்னைக் கட்டாயப் படுத்தலை…அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும் தாத்தா….” என்றாள் அமைதியாய்.
அவளின் மனம் புரிந்தவராய்….அவளின் தலையில் கை வைத்தவர்… ”நல்லாயிரும்மா…” என்று சொன்னவர்…..
”நம்ம வீட்டுக்கு எப்ப வரணும்ன்னு தோணுதோ..அப்பா வாம்மா…இந்த தாத்தா எப்பவும் உனக்காக இருப்பேன்…” என்றவர்….
ரிஷியைப் பார்த்து…”ஏதாவது தவறா பேசியிருந்தா மன்னிச்சுக்கோங்க…! என் பேத்தியை பார்த்துக்கோங்க..!” என்றவர் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் செல்ல…
வள்ளியும் தன் கணவர் பின்னால் சென்றார்.ஆனால் சரண்யாவால் நடந்த எதையும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.தான் இங்கு நினைத்து வந்தது என்ன…? இங்கு நடந்தது என்ன..? இருக்கட்டும்…என்னிடம் ஒரு நாள் சிக்காமலா போய் விடுவாள்…? அந்த வகையில் தன்னைக் காட்டிக் கொடுக்கவில்லை.. என்று எண்ணியவள்…கண்களில் வன்மத்துடன் சென்றாள்.
மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது அந்த இடம்.நடந்த அனைத்தையும் மேலே இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வருணுக்கு ஒன்று மட்டும் தெளிவாய் தெரிந்தது.
தன்னை சொன்னபோது வராத கோபம்……ரிஷியை ஒரு வார்த்தை சொன்னவுடன் அபிக்கு வந்தது …அதுவும் இவ்வளவு ஆக்ரோஷம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.
இதை ரிஷியைத் தவிர அனைவருமே உணர்ந்திருந்தனர்.வருணின் அருகில் நின்றிருந்த தைலாவிற்குமே அதுதான் ஆச்சர்யம்….
அபியின் இப்படி ஒரு பரிமாணத்தை அவள் எதிர்பார்க்கவில்லை.கீழே செல்ல முயன்ற வருணை அவள் தான் தடுத்து நிறுத்தினாள்.
வருணைப் பார்த்தால் அவர்கள் கோபம் கூடும் என்று நினைத்திருந்தாள் தைலா.அதற்காகத்தான் அவனைத் தடுத்ததே.அனால் அதற்கு அவசியமே இல்லை என்பதைப் போல் அபிராமியே பேசி முடித்திருந்தாள்.
“அபி…!!!!!!” என்றார் சித்ரா.
அவ்வளவு தான்…அதற்கு மேல் பொறுக்க முடியாது என்பதை போல்..கதறத் தொடங்கினாள் அபி.
“அபி அழாத….!!” என்று சித்ரா அனைத்து ஆறுதல் கூற…ரிஷியோ…. சட்டென்று அந்த இடத்தை விட்டு அகன்றான்.
“பாவம் அபி…இல்லையா வருண்…?” என்றாள் தைலா.
“அபியைப் பார்த்தப்ப இப்படி ஒரு அமைதியான பொண்ணான்னு நினைச்சேன்….ஆனா அந்த அமைதிக்கு பின்னால் இப்படி அடக்கப்பட்ட உணர்வுகள் இருக்கும் என்று தெரியாமல் போய்விட்டது…” என்றான் வருத்தமாய்.
“உண்மைதான் வருண்…ஊட்டியில் அபியை பார்த்த பொழுதே ….அவ முகத்தில் இருந்து எதையும் படிக்க முடியலை….ஆனா அவ ரிஷியைப் பார்க்கும் பார்வையில் ஏதோ ஒன்னு இருக்கு வருண்…” என்றாள் தைலா.
“இருக்கலாம்….யார் கண்டா…?” என்றான் வருண்.
“ஆனா எப்படி ரிஷியை இனி சமாளிக்கிறதுன்னு தெரியலை…பாவம் அபி…” என்றாள்.
“எங்க அண்ணன் அப்படியெல்லாம் விட்டுட மாட்டான்.அவனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்….” என்று சிரித்துக் கொண்டான் வருண்.
“ம்க்கும்…இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…எல்லாரைப் பத்தியும் தெரியும்…என்னைத் தவிர….” என்று தைலா குறைப்பட…
அவளின் தோளின் மேல் தனது இரு கைகளையும் போட்டவன்….”செல்லக் குட்டி….நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்…நீதான் அவகிட்ட பேசணும் சரியா…” என்றான்.
“என்னது லவ்வா…?” என்று அதிர்ந்தவள்…..அவனை அடிக்கத் தொடங்கினாள்.
“மவனே இந்த ஜென்மத்துல உனக்கு நான் மட்டும் தான்…அதை நல்லா மனசில் வச்சுக்கோ….அதை விட்டுட்டு…கண்ணு அங்க இங்க அலைபாஞ்சுது…மவனே நீ செத்தடா….” என்று மிரட்ட….
“அடியேய்…வர வர நீ ரவுடி மாதிரி ஆகிட்டு வர…”என்று வருண் உல்லாசமாய் சொல்ல….
“ம்ம்ம்…ஆமா…ஆமா…அப்படி இல்லைன்னா நீ என்னைக்கோ டேக்கா குடுத்து இருப்ப…” என்று அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்க….ரிஷி காக்கி உடையுடன்….. தனது அறையில் இருந்து வெளியே வந்தான்.
“அண்ணா எங்க கிளம்பிட்ட….?” என்றான் வருண்.
ஆனால் ரிஷியோ அவனின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. அமைதியாக கீழே இறங்க…அவன் முகத்தில் அடக்கப்பட்ட கோபம் தெரிந்தது.
“ரிஷி…என்ன திடீர்ன்னு யூனிபார்ம் போட்டு கிளம்பிட்ட…உனக்கு இன்னும் லீவ் இருக்கேப்பா…” என்றார் சித்ரா.
“கேன்சல் பண்ணிட்டேன்…!நான் கோயம்புத்தூர் கிளம்புறேன்…!” என்றான் பட்டும் படாமல்.
“கிளம்புறேன்னா என்ன அர்த்தம்…? அப்ப அபி…?” என்றார் சுரேஷ்.
அவரை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவன்….”இவ யாருன்னு உங்க எல்லாருக்கும் முன்னமே தெரியும் தானே…!” என்றான் ரிஷி.
அவனின் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அனைவரும் தலை குனிய…..
“சொல்லுங்க…எல்லாருக்கும் தெரியும் தானே….! அப்பறம் ஏன் என்கிட்டே இருந்து மறைச்சிங்க….?எல்லாரும் என்கிட்டயே நாடகம் ஆடியிருக்கிங்க….!!” என்றான் அந்த வீடே அதிர…
“சொல்றதைக் கேள் ரிஷி……பேப்பர்ல வந்த போட்டோவைப் பார்த்த உடனே எங்களுக்கும் அதிர்ச்சி தான்…அதுக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையை அப்படியே விட்டுட முடியுமா…?இல்லை அபி யாருன்னு சொல்லியிருந்தா நீ தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியிருப்பியா….?” என்றார் சித்ரா.
“ஹோ…அப்ப என்னோட விருப்பு,வெறுப்பு உங்களுக்கு முக்கியமில்லை… எல்லாரும் சேர்ந்து என்கிட்டே போய் சொல்லியிருக்கிங்க…. நான் ஒரு மடையன்…நீங்க எது சொன்னாலும் நம்பிக்கிட்டு லூசு மாதிரி இருந்திருக்கேன்…!” என்றபடி அபியைப் பார்க்க….
அபியோ அதிர்ச்சி விலகாமல் தன் முட்டைக் கண்ணை விழித்து அவனைப் பார்த்துக் கொண்டிருக்க….சட்டென்று தலையைத் திருப்பிக் கொண்டான்.
“வரேன்…!யாரும் என்னை எதிர்பார்க்காதிங்க…!” என்றபடி நகர….
“அண்ணா….” என்று தயங்கியபடி வந்தாள் தீபி.
“நீ கூட நல்லா பொய் சொல்ற சின்னக் குட்டி…”என்றான் ரிஷி.
“சாரிண்ணா….”என்று அவள் தவறு செய்தவளாய்…முகத்தை வைக்க…”எக்சாமை நல்லா எழுதுடா….” என்றபடி சென்றான்.
அவன் காக்கி உடையில் மிடுப்பாய் செல்ல…அவன் செல்வதை கண்ணீர் மறைக்க…பிரம்மை பிடித்தவளாய்…சிலையாய் அதே இடத்தில் நின்றிருந்தாள்.
தென்றலின் முகவரி தேடுகிறேன்….
தேடித் திரிந்து வாடுகிறேன்…!
இதயத்தைத் தந்தேன் உன்னிடம்…
அதை நொறுக்கித் தந்தாய் என்னிடம்…!
விழியோரம் நிற்கும் நியாபகம்…
கண்ணீரால் அழியா ஓவியம்…!
நரகத்தின் சுரங்கம்….காதலின் பிரிவு…!
சொன்னாலும் நம்ப மறுக்கிறது மனது…!