அத்தியாயம் 16:
நினைவுகளின் பிடியில் இருந்து மீண்டாள் அபி.நடந்த அனைத்தும் ஒரு கனவு போல் விரிய….பழைய நினைவுகளின் தாக்கத்தால் அவள் கண்கள் கலங்கிக் காணப்பட்டது.
அப்பொழுது தான் கவனித்தாள் தான் காரில் சென்று கொண்டிருப்பதை. இல்லையே நான் வீட்டில் தானே இருந்தேன்…? என்று தனக்குள் எண்ணியவள்….வேகமாய் அருகில் பார்க்க ரிஷி தான் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
“என்னாச்சு நாம எங்க போறோம்…?” என்றாள்.
அவளைத் திரும்பிப் பார்த்தவன்….”என்ன ஒரு வழியா கனவு கண்டு முடுச்சுட்டியா…? நானும் கரடியாய் கத்திப் பார்த்தேன்..ம்ம்ம் நீ அசையற மாதிரியே தெரியலை….அதான் கார்ல தூக்கி உட்கார வெச்சுட்டேன்…” என்று ரிஷி அசால்ட்டாய் சொல்ல…
“தூக்கி உட்கார வச்சிங்களா…?” என்றாள் அதிர்ச்சியாய்.
“ம்ம்ம்…ஆமா…அப்பா உடனே கிளம்பி சேலம் வர சொன்னார்….சரின்னு கிளம்பி வந்து பார்த்தா…நீ விட்டத்தைப் பார்த்து உட்கார்ந்திருந்த….நானும் கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தேன்….நீ அசையற மாதிரியே தெரியல….அதான் அலேக்கா தூக்கி கார்ல போட்டுட்டு வந்துட்டேன்…” என்றான் மந்தகாசமாய்.
அவன் அழைத்தது கூட தெரியாமல் பழைய நினைவுகளில் இருந்த தன் மடத்தனத்தை எண்ணி தானே தன்னைக் கடிந்து கொண்டாள்.
“சாரி…! ஏதோ ஒரு நியாபகம்..” என்றாள் உள்ளே போனக் குரலில்.
“இதுல சாரி சொல்ல என்ன இருக்கு….நான் நினைச்சு இருந்தா உன்னை ஈசியா கனவில் இருந்து கலைச்சிருப்பேன்…பாவமேன்னு விட்டுட்டேன்….அது சரி அப்படி என்ன யோசனை…” என்றான் எதார்த்தமாய்.
“ம்ம்ம்…அதெல்லாம் ஒண்ணுமில்லை…” என்று அபி சமாளிக்க…
“ஒன்றுமில்லை என்றால் சரிதான்…!” என்றவன் லாவகமாய் காரை செலுத்த…
அவனையே பார்த்துக் கொண்டிருந்த அபியின் மனதில் ஆயிரம் யோசனைகளை ஓடியது.
அன்று மண்டபத்தில் இருந்து கடத்தப்பட்டதால்…அதற்கு பிறகு இரு குடும்பங்களுக்கு இடையே நடந்த வாக்குவாதம்…சண்டை பற்றி அவள் அறிந்திருக்கவில்லை.
திருமணம் நின்று விட்டது என்று மட்டும் தைலாவின் மூலமாக அறிந்திருந்தாள்.அதுவும் தைலாவும்,ரிஷியும் பேசிக் கொண்டதை வைத்து கணித்தது.
நடந்த சம்பவங்களுக்கு தான் ஒரு முக்கிய காரணியாக இருந்திருக்கிறோம்…என்று அந்த பேதைப் பெண் அறியவில்லை.
“என்ன திடீர்ன்னு சேலத்துக்கு…?” என்றாள்.
“நீ என்ன மணிரத்னம் பட ஹீரோயின் மாதிரி அப்பப்ப ஒரு வார்த்தை தான் பேசுவியா..?” என்றான்.
“இல்லை…அது வந்து…” என்று இழுக்க…
“சரி…சரி..இழுக்காத..காரணம் தெரியலை…அப்பா தான் உன்னை அழைச்சுகிட்டு உடனே வர சொன்னார்….ஒருவேளை புது மருமகளைப் பார்க்காமல் இருக்க முடியலையோ என்னவோ..?” என்றான்.
அவள் சிரிப்பை பதிலாய் வெளியிட…….
“நான் யாரு என்னன்னு தெரியாது….எப்படிப்பட்டவன் என்றும் உனக்குத் தெரியாது….அப்பறம் எப்படி என்னைக் கல்யாணம் செய்ய சம்மதிச்சே..!” என்றான் பார்வையை சாலையில் இருந்து அகற்றாமல்.
அவனின் கேள்வியில் அதிர்ந்தாள் அபி.இப்பொழுது என்ன பதிலை சொல்வது.எப்படி சொன்னாலும் இவனிடம் மாட்டிக் கொள்வோம்…என்று அவள் அமைதி காக்க..
“அது சரி…உன்கிட்ட எங்க சம்மதம் கேட்டாங்க…எல்லாம் சீக்கிரம் சீக்கிரம் நடந்து முடிந்து விட்டது…” என்று அவனே பதில் சொல்லிக் கொண்டான்.
அதற்கு பிறகான பயண நிமிடங்கள் அமைதியில் கழிந்தது.அபி மனதில் போராட்டத்துடனும்….ரிஷி…மனதில் அமைதியுடனும் தங்களின் மீதிப் பயண நேரத்தைக் முடித்தனர்.
கார் ஒரு பெரிய வீட்டினுள் நுழைய….அவள் அந்த வீட்டையே விழியகலாது பார்த்தாள்.தான் இந்த வீட்டிற்கு ரிஷியின் மனைவியாக வந்து இறங்குவோம் என்று அவள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. ஆனால் இன்று அது நிஜமாகிப் போனது.
அவனின் கார் சத்தத்தைக் கேட்டு….அனைவரும் வெளியில் வர…தீபி ஆரத்தித் தட்டுடன் வந்தாள்.
“என்னப்பா…ஏன் உடனே கிளம்பி வர சொன்னிங்க…அதுக்கு நாங்க நேற்று உங்க கூட சேர்ந்தே வந்திருப்போம்..!” என்று கூறியவனாய்… தன் தந்தையைப் பார்க்க…அவர் முகம் கொஞ்சம் பதட்டமாய் இருப்பதைப் போல் இருந்தது.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை ரிஷி…சரி உங்களைக் கொஞ்சம் தனியா விடலாம்ன்னு பார்த்தோம்….ஆனா எதையும் முறையா பண்ணிடலாம்ன்னு தான் கிளம்பி வர சொன்னேன்..!” என்று சமாளித்தார்.
“நீங்க பட்டமா இருக்குற மாதிரி தெரியுதுப்பா…? எதுவும் பிரச்சனையா..?” என்றான்.
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை….நீங்க முதலில் உள்ள வாங்க…!” என்றார் சித்ரா.
“வாங்க அண்ணி..!!” என்று தீபி கைப் பிடித்து அழைக்க..ஒரு வித தயக்கத்துடன்…தன் புகுந்த வீட்டில் வலது காலை எடுத்து வைத்தாள் அபிராமி.
வீட்டினுள் நுழைந்தவள்….அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டே…திருவிழா கூட்டத்தில் காணாமல் போனவள் போல் முழிக்க….அவளின் முகம் பார்த்த ரிஷி….அவளின் கைகளை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டான்.
“ரிலாக்ஸ்… நம்ம வீடுதான்…!” என்றான்.
“ம்ம்ம்…” என்று அபி தலையாட்ட…
“பார்ரா….சிங்கம் ரொம்ப கூலா இருக்கு..!” என்றாள் தைலா.
“ஹேய்…தைலா நீ இன்னும் இங்க தான் இருக்கியா..?” என்றான் ரிஷி.
“ஏன் கேட்க மாட்ட…உனக்கு புதுப் பொண்டாட்டி வந்த உடனே எங்களை எல்லாம் நியாபகத்தில் வருமா…?” என்றாள் நக்கலாய்.
“அதென்னவோ உண்மைதான்….இல்லையா வருண்…” என்று ரிஷி கேட்க…
“நீங்க வேற ஏன் அண்ணா கேட்குறிங்க….ஊட்டில இருந்து இங்க வருவதற்குள் என் காதில் ரத்தம் வாராத குறைதான்…பேசியே கொன்னுட்டா…!” என்றான் வருண்.
“நாய்க்கு வாக்கப்பட்டா குரைச்சு தான் ஆகணும்…” என்றான் ரிஷி.
“டேய் உங்களுக்கு நான் நாயா….? பாருங்க ஆன்ட்டி…” என்று சித்ராவிடம் புகார் பாட…
“ஏண்டா பிள்ளையத் திட்டுறிங்க….நீ வாடா தங்கம்….” என்று சித்ரா அழைக்க…அதையெல்லாம் ஒரு வித சுவாரஸ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அபி.
“ரிஷி…அபியை உன் அறைக்கு அழைச்சுட்டு போ….பாவம் டயர்டா இருப்பா..” என்று சித்ரா சொல்ல..
“இருக்கட்டும் அத்தை…நான் இங்கேயே இருக்கேன்…எனக்கு ஒன்னும் அசதியில்லை என்றாள்..”
“காரை ஓட்டிட்டு வந்த எனக்கு தான் அசதியா இருக்கும்….நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன்…நேத்து நைட்டும் தூக்கமேயில்லை…” என்றபடி ரிஷி எழுந்து செல்ல…
வருண் தன் அண்ணனை மார்க்கமாய் பார்த்து சிரித்து வைக்க….விஷயம் புரிந்த அபிக்கோ….வெட்கம் பிடுங்கித் தின்றது.குனிந்த தலையை அவள் நிமிரவேயில்லை.
ரிஷி அவன் அறைக்கு சென்று மறைந்த வினாடி….”அத்தை….பாட்டிக்கு…” என்று சித்ராவின் கைகளைப் பிடிக்க….
“எப்படியும் இப்ப ஒரு பிரச்சனை வரும் அபி….உங்க தாத்தா..ஊரில் இருந்து பஞ்சாயத்துக்கு ஆட்களை கூட்டி வருவதாய் செய்தி…அதான் உங்க மாமா உடனே கிளம்பி வர சொன்னார்…என்ன நடக்குமோ என்று எனக்கும் பக்கு பக்குன்னு தான் இருக்கு….ரிஷியை நினைச்சாதான்….” என்று இழுத்தவர்…
“அவன் ரொம்ப நல்லவன் அபி…கொஞ்சம் கோபம் அதிகமா வரும்…பொய் சொன்னா பிடிக்காது…ஆனா நாம எல்லாரும் சேர்ந்து அதைத்தான் செய்திருக்கோம்…என்ன நடந்தாலும்…நீ அவனை விட்டு போக மாட்ட தானே..!” என்றார் ஒரு தாயாய் தவிப்புடன்.
“அத்தை….” என்று அவர அணைத்துக் கொண்டவள்…என் உயிரே போனாலும் போக மாட்டேன் அத்தை….என்றாள்.
“இது போதும்மா…! இந்த காபியைக் கொண்டு போய் ரிஷிக்கு கொடு….எது வந்தாலும் சமாளிப்போம்…!” என்றார்.
“மேல கதவு திறந்திருக்கும்…அது தான் அவனுடைய அறை…” என்றார் சித்ரா.
“சரி என்று தலையை ஆட்டியவள்…. சிங்கத்தின் குகைக்கு செல்வதைப் போல் சென்றாள்..”
அவள் அவ்வாறு செல்வதைப் பார்த்த வருண்….”அபியை அண்ணன் ஏற்றுக் கொள்வானாப்பா…?” என்றான் கவலையுடன்.
“எது எப்படியோ…வருண்…அவங்க இரண்டு பேரும் இப்போ கணவன், மனைவி.அந்த பொறுப்பு அவனுக்கு இருக்கு.எனக்கு தெரிந்து அவன் பொறுப்புகளில் இருந்து விலகுபவன் கிடையாது…அதனால் கண்டிப்பா அபியை மனைவியா ஏற்றுக் கொள்வான்…” என்றார் சுரேஷும் நம்பிக்கையாய்.
ஆனால் உண்மை தெரிந்தால் தன்னுடைய நம்பிக்கை பொய்த்துப் போகும் என்று அவர் அறிந்திருக்கவில்லை.
மேலே சென்றவள் கதவைத் தட்ட…”வா அபி..” என்றான்.
பார்க்காமலேயே நான் தான் என்று எப்படிக் கண்டு பிடித்தார்…என்று எண்ணிக் கொண்டே உள்ளே செல்ல…
“சிம்பிள்…எப்படியும் அம்மா உன்னை மேலே அனுப்புவாங்கன்னு தெரியும்…” என்றான் அவள் கைகளில் இருந்த காபிக் கப்பை வாங்கியபடி.
அவள் அறையை சுற்றிப் பார்க்க….ரிஷியோ அவளையேப் பார்த்து கொண்டிருந்தான்.
“எங்கிருந்து வந்தாள்….இத்தனை நாள் என் கண்ணில் படாமல் எங்கு இருந்தாள்….இந்த ஒரு வார காலத்தில் அவன் மனம் முழுதும் அபிராயாமியே ஆட்சி செய்து கொண்டிருந்தாள்.அவளைப் பார்த்த நிமிடம் முதல் இப்பொழுது வரை…அவள் ஒரு புதிராக தென்பட்டாலும்…ரிஷியின் மனம் அபியின் அருகாமையை விரும்பியது உண்மையே.
ஆனால் ரிஷியோ அதை முழுமையாய் அறிந்து கொள்ள முற்படவில்லை. அவள் மனைவி என்ற முறையில் மட்டுமே தன் மனதில் இருப்பதாய் நினைத்துக் கொண்டான்.அதையும் மீறிய ஒரு உணர்வு….அவனுள் தோன்றினாலும்…அது காதல் உணர்வு தான் என்று அவன் அறியவில்லை.
குற்றவாளிகளின் மனதைப் படிக்கத் தெரிந்த அந்த காவல்காரனுக்கு…ஒரு பெண்ணின் மனதைப் படிக்க முடியாமல் திணறுவது விந்தையிலும் விந்தை.
“உட்கார் அபி…!” என்றான்.
“இல்லை நான் கீழ போறேன்…!” என்றாள்.
“ஏன் இங்க இருந்தா நான் உன்னைக் கடிச்சு குதறிடுவேன்னு பயப்படுறியா…?” என்றான்.
“இல்லையில்லை…” என்றாள் அவசரமாய்.
“இப்போ நான் விடுமுறையில் இருக்கேன் அபி….அதுவும் சொல்ல முடியாது…என்னை எப்ப வேண்டுமானாலும் பணிக்கு கூப்பிடலாம்… சோ..எனக்கு உன்னோடு இருக்கும் நேரம் கொஞ்சம் கம்மி தான்…கல்யாணமும் எதிர்பார்க்காம நடந்துவிட்டது…
எது எப்படி இருந்தாலும்…இப்பொழுது நீ என் மனைவி..அதனால் என்னிடம் உனக்கு எல்லா விதமான உரிமையும் இருக்கு சரியா…? எப்பப் பார்த்தாலும் இப்படி பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டாமா…கொஞ்சம் வாயைத் திறந்து பேசவும் செய்யணும்…சரியா…?” என்றான் ரகசிய புன்னகையுடன்.
அதற்கும் அவள் வேகமாய்த் தலையாட்ட….அவளைப் பார்த்து சிரித்தவன்…”இப்ப தான சொன்னேன்…” என்று அவளை நெருங்கினான்.
இருவரின் பார்வைகளும் ஒரே நேர் கோட்டில் சந்திக்க….விழிகள் ஒன்றினுள் ஒன்றாய் மூழ்கிக் கொண்டிருந்தன.
சட்டென்று அபியைத் தன் மேல் சாய்த்தவன்…தன் இதழ்களால் அவளின் செவ்விதழ்களை சிறை செய்திருந்தான்.
ரிஷியின் இந்த அதிரடித் தாக்குதலை எதிர்பார்க்காமல்…… அவன் மீது மாலையாய் விழுந்தவள்….அந்த இதழ் பூட்டு விழாவில்..தன்னை மறந்து…மயங்கிய நிலையில் இருந்தாள்.
சில நிமிடங்கள் தான் என்றாலும்…அந்த நிமிடங்களை சில யுகங்களாய் உணர்ந்தாள் அபி.மெல்ல அவளை விடுவித்தவன்….அவளின் கண் இதழ்களின் மீதும் தன் முத்திரையைப் பதித்தான்.
அபியின் முகம் செவ்வானமாய் சிவக்க….அதை ரிஷியின் கண்கள் ரசனையுடன் தீண்டியது.
“அபி…” என்று ரிஷி காதலாய் அழைக்க….இதற்கு மேல் முடியாது என்பவளைப் போல்…. தாய்ப் பறவையைப் பிரிந்த சேய் பறவையாய் ….. அவனின் நெஞ்சில் தஞ்சம் அடைந்தாள்.
முதலில் மீண்டது ரிஷி தான்….
”சரி அபி…நீ கீழ போ…நான் பிரஷ் ஆகிட்டு வரேன்..” என்றான் அவள் முகம் பார்க்காமல்.
அபி குழப்பத்துடன் செல்ல…”என்ன ஆச்சு…திடீர்ன்னு அவர் முகம் சரியில்லை…” என்று எண்ணியபடி சென்றாள் அபி.
இங்கு ரிஷியோ..தன்னைத் தானே கடிந்து கொண்டான்.”என்ன பண்ற ரிஷி….இன்னும் அவ யார்ன்னு தெரியலை…அவ மனசு என்னன்னு தெரியலை…தாலியைக் கட்டிவிட்டோம் என்பதற்காக…நீ உரிமை எடுத்துக் கொள்ளலாமா…?” என்று அவன் மனசாட்சி அவனைக் கேள்வி கேட்க…
கண நேரத்தில்….உணர்வுகளின் பிடிக்குள் சிக்கி….தான் செய்த செயலை எண்ணி வெட்கினான்.
ஆனால் அதில் ஒன்றை உணர மறந்து விட்டான்….அதில் அபியை அவன் கவனிக்கத் தவறி இருந்தான்.கொஞ்சம் கூர்ந்து கவனித்து இருந்தால்..அவள் கண்களில் பொங்கிய காதல்… இவனுக்கு உள்ளத்து செய்தியை உடனே சொல்லியிருக்குமோ என்னவோ….?
கீழே சென்ற அபியின் நிலையோ சொல்லவே வேண்டாம்….மனதிற்கு பிடித்தவன்….தன்னுயிர் காதலன்..இன்று தன்னுடைய கணவன்… என்று நெகிழ்ந்திருந்தவள்….
திடீரென்ற அவன் விலகலில் அடிபட்டுத் தான் போனாள்…ஒரு வேலை அவருக்கு என்னைப் பிடிக்கவில்லையோ…? என்று எண்ணிய கண நேரத்தில் அவள் கண்கள் கண்ணீரை சுரக்க…
“கடைசி வரை இந்த கண்ணீர் மட்டும் தான் எனக்குத் துணை வருமா…?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.
“ஏன் அபி…முகம் ஒரு மாதிரியா இருக்கு…ரிஷி எதுவும் சொன்னானா…?” என்று சித்ரா கேட்க…
“அதெல்லாம் ஒன்றும் இல்லை அத்தை…..” என்று சிரித்து சமாளித்தவளால்… அவளின் முகச்சிவப்பை எப்பாடு பட்டும் மறைக்க முடியவில்லை.
அவளைப் பார்த்து புன்னகை செய்தவராய்…”சரிம்மா….சாப்பாடு எல்லாம் ரெடியா இருக்கு….ரிஷியும் வந்துட்டான்னா…சேர்ந்து சாப்பிடலாம்…” என்றார்.
“ப்ரஷ் ஆகிட்டு வரேன்னு சொன்னார் அத்தை..!” என்றாள்.
“சரிம்மா…” என்று அவர் செல்ல…அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவள்…நகத்தைக் கடித்துத் துப்ப ஆரம்பித்தாள்.
அவன் முத்தமிட்டதால் மனதினுள் ஏற்பட்ட குறுகுறுப்பு அடங்க மறுத்தது.”இருந்தாலும் ரிஷி ரொம்ப மோசம்…” என்று தனக்குத் தானே வெட்கப்பட்டவளாய் அமர்ந்திருந்தாள்.
“வீட்ல யாரு…!” என்ற கோவிந்தனின் அதட்டல் குரலில்….பயந்து நடுங்கியவளாய்…..பதட்டத்துடன் எழுந்து நின்றாள்.
கதவு திறந்தே இருக்க….முக்கிய உறவுக்காரர்கள்,பாட்டி,தந்தை என் அனைவரும் உடன் நிற்க…..
அதைப் பார்த்தவளுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.படியில் இறங்கி வந்து கொண்டிருந்த ரிஷியின் காதுகளிலும் அந்த குரல் விழ….வேகமாய் வாயிலைப் பார்த்தவன்…
அபி மயங்கி விழுவதை போல் இருக்க அவளை சென்று தாங்கினான்.
கோவிந்தன் உக்கிரமாய் முறைக்க….ரிஷியும் சளைக்காது அவரை முறைத்துக் கொண்டு நின்றான்.
உயிரே என்னை மீண்டும் இணைவாயா…
நான் கேட்கின்றேன்…!
தவறே…உணர்ந்தேனே…
நீயின்றி நான் உதிர்கின்றேன்…!
இரு கண்ணைக் கட்டி..ஒரு காட்டுக்குள்ளே….
விட்டாயே எங்கே செல்ல….!