அத்தியாயம் 12:
“முடியாது…முடியாது…நீங்க என்ன சொன்னாலும்….பத்து நாள்… பொம்பளைப் புள்ளையை வெளியே அனுப்ப முடியாது…நெனவோட தான் பேசுறிங்களா..?” என்று அமிர்தவள்ளி பாட்டி கோவிந்தன் தாத்தாவிடம் கத்திக் கொண்டிருந்தார்.
அபி ஓரமாய் அப்பாவியாய் நின்றிருக்க….”என்ன நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல….இங்க வீட்ல உங்க அக்காவுக்கு நிச்சயம் பண்ண பேசிட்டு இருக்கோம்..! நீ என்னடான்னா….கேம்ப்க்கு போறேன் அங்க போறேன்.. இங்க போறேன்னு சொல்லிட்டு இருக்க…” என்று அபியிடம் எரிந்து விழுந்தார் வள்ளி.
“இப்ப எதுக்கு அபியைத் திட்டுற வள்ளி.ஏன் சரண்யா மட்டும் போன வருஷம் ஒரு வாரம் சுற்றுலா போயிட்டு வந்தா…அப்ப மட்டும் நீ ஒன்னும் சொல்லல…” என்று கோவிந்தன் இடம் பார்த்து சொருக…
“சரண்யாவும்,அபிராமியும் ஒண்ணா…?” என்றார் வள்ளி.
ஏன்..? ரெண்டு பெரும் அக்கா,தங்கை தானே….?” என்றார் கோவிந்தன்.
“சரண்யாவும்,அபிராமியும் ஒன்றா..? என்ற வார்த்தையில் கண் கலங்கி நின்றாள் அபிராமி.சிறு வயதில் இருந்து கேட்டுப் பழகிய ஒன்றுதான் என்றாலும்….இன்று ஏனோ மனதின் ஓரத்தில் சிறியதாய் வலி ஏற்படுவதைப் போல் உணர்ந்தாள் அபிராமி.”
“என்னமோ செய்ங்க…!எனக்கு இதெல்லாம் சரின்னு படலை அப்பறம் உங்க விருப்பம்…!” என்று கோபமாய் சொல்லிவிட்டு வள்ளி செல்ல…
“அவ கிடக்குறாம்மா…நீ போயிட்டு வா அபி.போற இடத்துல கண்ணும் கருத்துமா இருக்கனும்மா…இந்த காலத்துல எப்ப என்ன நடக்கும்ன்னு சொல்ல முடியாது…!” என்று ஓர் எச்சரிக்கையும் கொடுத்து அனுமதி கொடுத்தார் கோவிந்தன்.
இதையெல்லாம் வேடிக்கையாக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த தனது தந்தையின் மேல் சிறு வெறுப்பு கூட வந்தது அபிக்கு.எந்த வகையிலும் எனக்கு ஒரு அப்பாவாக இவர் இருந்ததில்லை.என்ன வாழ்க்கை இது…?என்று முதன் முறையாக வாழ்வின் மீது பிடிப்பற்ற தன்மை தோன்றியது.
இதுவரை அபி….பள்ளி,கல்லூரி சுற்றுலா என்றும் எங்கும் சென்றதில்லை. அதற்கு அனுமதியும் கிடைத்ததில்லை.அதனால் தான் என்னவோ கோவிந்தன் இந்த முறை சரியென்று சொல்லிவிட்டார்.
முகாமும் தங்கள் ஊருக்கு அருகிலேயே என்பதால் அவர் மறுக்க வேறு காரணங்கள் இருக்கவில்லை.
வீட்டு சூழ்நிலையை மறந்து …ஏதோ ஒரு மன இறுக்கத்துடன் கிளம்பினாள் அபி.தன் வாழ்வு மாறப் போவதை அறியாமல்.
மறுநாள் முகத்தில் சிரிப்பில்லாமல் வரும் தோழியைக் கண்ட லட்சுமி அதிர்ந்தாள்.
“என்ன ஆச்சு அபி..? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு…?” என்றாள்.
தோழியின் கரிசணையில் கண் கலங்கியவள்….”ஒண்ணுமில்லை லட்சுமி…” என்றபடி செல்ல..
அவளின் கையைப் பிடித்து தடுத்த லட்சுமி…”உண்மையை சொல்லு…!” என்றாள்.
“எனக்கென்னமோ வீட்டுக்கு பாரமா இருக்குறேனோ அப்படின்னு தோணுது.அம்மா நியாபகம் இப்பவெல்லாம் அடிக்கடி வருது லட்சுமி…” என்றாள் கண்ணீர் வழிந்தபடி.
“என்ன ஆச்சு அபி..?” என்றாள் தோழியின் அழுகை பொறுக்க முடியாமல்.
“என் பாட்டிக்கு எந்த விஷயத்திலும் என் மேல் நம்பிக்கையே வராதா….? நானும் அவங்க பேத்தி தானே…இருந்தாலும் ஏன் எனக்கும் சரண்யாவிற்கும் இடையில் இவ்வளவு பாரபட்சம் பார்க்கிறாங்க…அவ எது கேட்டாலும் உடனே கிடைச்சுடுது.ஆனா எனக்கு…?” என்று கேள்வியாய் நிறுத்த….
“அப்படியில்லை அபி…!” என்று லட்சுமி சமாதானப் படுத்த முயல….
“அப்படித்தான் லட்சுமி…!நானும் இப்படி இருந்தா சந்தோஷப் படுவாங்களா..அப்படி இருந்தா சந்தோஷப் படுவாங்களான்னு இருந்து பார்த்துட்டேன்.ஆனா நான் எது செய்தாலும் தப்பு…நின்னா தப்பு..நடந்தா தப்பு….முடியலை டி..” என்று அழுக…
“அவங்களைப் பற்றிதான் உனக்குத் தெரியுமே அபி.பிறகு இன்னைக்கு ஏன் இவ்வளவு கவலைப் படுற….விட்டுத் தள்ளு…வா போகலாம்..” என்று கல்லூரிக்குள் நடக்க…
இவர்களின் வருகையை அறியாமல் போனில் பேசிக் கொண்டிருந்தான் ஜான்.
“ஆமா சங்கர்…அந்த போலீஸ்க்காரன் மப்டிலையே தான் சுத்திட்டு இருக்கான்…எனக்கென்னமோ அவனைப் பார்த்தா சாதாரண ஆளாத் தெரியலை…” என்று பேசிக் கொண்டிருக்க…
லட்சுமியை இழுத்துக் கொண்டி பக்கத்து வகுப்பறைக்குள் நுழைந்து கொண்டாள் அபி.
“ஏண்டி..?” என்றாள் லட்சுமி.
“இந்த ஜானுக்கு அப்ப சங்கர் எங்க இருக்கான்னு தெரியும் போலவே..!” என்றாள் அபி.
“அவன் பேசுறதைப் பார்த்தா எனக்கும் அப்படித்தான் தோணுதுடி…” என்றாள் லட்சுமி.
“இதை அவர்கிட்ட சொல்லன்னும்டி…” அபி.
“யார்கிட்ட..?” லட்சுமி.
“ரிஷிகிட்ட தாண்டி….அவர்தான் அன்னைக்கே சொன்னார்ல…உங்களுக்கு எதாவது விஷயம் தெரிந்தா எனக்கு போன் பண்ணி சொல்லலாம்ன்னு…” என்றாள் அபி.
“அதுக்கு…?” என்றாள் கண்களில் கலவரத்துடன் லட்சுமி.
“நாம அவருக்கு கால் பண்ணி சொல்லலாம்..” என்று அபி சொல்ல..
“அடியேய்….இந்த தேவையில்லாத வேலையெல்லாம் வேண்டாம். அவனுக்கு பெரிய இடத்து சப்போர்ட் இருக்குடி… நாளைக்கு ஏதாவது பிரச்சனைன்னா என்ன பண்றது…இந்த வம்பே வேண்டாம்டி…” என்று லட்சுமி அலற…
“நீ வரலைன்னா சொல்லு….நானே சொல்லிக்கிறேன்…” என்று அபி நகரப் போக….
“அபி …வேண்டாம்டி…அவர் போன் நம்பர் இல்லைடி..” என்று லட்சுமி சொல்ல..
“அதெல்லாம் இங்க இருக்கு..” என்று தன் இதயத்தைத் தொட்டுக் காட்ட..”சுத்தம்…” என்று முனுமுனுத்தாள் லட்சுமி.
“உன் செல்போனைக் குடுடி.” என்றாள் அபி.
“அபி வேண்டாம்..சொன்னாக் கேளு…” என்று லட்சுமி சொல்ல..சொல்ல… அவளின் செல்போனைப் பிடுங்கினாள் அபி.
வேகமாய் மனதில் பதிந்திருந்த அவனின் எண்களைத் தட்ட…..முதல் ரிங் முழுவதும் முடியும் வரை அவன் எடுக்கவில்லை.மீண்டும் முயற்சிக்க அப்பொழுதும் எடுக்கவில்லை.
“என்னடி..”
“எடுக்கலைடி…”
“ரொம்ப நல்லது…கொண்டா..” என்று போனிற்காக கையை நீட்ட…
“இன்னும் ஒரு டைம் டிரைப் பண்றேன் டி…” என்று மீண்டும் முயற்சிக்க…இந்த முறை அவளை ஏமாற்றாமல் அட்டென் செய்தான் ரிஷி.
“ஹலோ…! ரிஷி ஹியர்…”
அவன் குரலைக் கேட்டவுடன்…அந்த குரலில் தெரிந்த கம்பீரத்தில் சொக்கித் தான் போனாள் அபி.
“ஹலோ…ஹலோ..” என்று அவன் இரண்டு முறை கத்த…
“நான்…நான்..” என்று தந்தியடித்தாள் அபி.
“நீங்க..நீங்கதான்…சொல்லுங்க…!” என்றான் எரிச்சலாய்.
அவன் குரலில் எரிச்சலை உணர்ந்தவள்..தனது கல்லூரியின் பெயரை சொல்லி பேச ஆரம்பித்தாள்.
“நீங்க..எங்க கிளாஸ்க்கு வந்து…சங்கரைப் பற்றி..” என்று முடிக்கும் முன்…
“சொல்லுங்க உங்களுக்கு ஏதாவது தெரியுமா…?” என்றான் ஆராய்ச்சியாய்.
“எனக்குத் தெரியாது…ஆனா எங்க கிளாஸ் ஜான்..சங்கர் பிரண்ட் அவனுக்குத் தெரியும்…” என்று தாங்கள் கேட்ட அவனின் தொலைபேசி உரையாடலை சொல்ல…
“ஓகே…நான் பார்த்துக்கறேன்…இன்பர்மேஷன் கொடுத்ததுக்கு நன்றி…உங்க பேர் என்ன..?” என்று போலீஸ்க்காரனாய் மாறிக் கேட்க…
“என் பேர்…அ…” என்று அவள் முடிக்கும் முன்….செல்லைப் பிடுங்கி அழைப்பை துண்டித்திருந்தாள் லட்சுமி.
“இப்ப எதுக்குடி போனைப் பிடுங்குன..?”
“லூசு..லூசு…சொன்னது சரிதான்…விட்டா உன் பேர்…விலாசம் எல்லாம் சொல்லுவ போலிருக்கு.வேற வினையே வேண்டாம்.எப்படியோ விஷயத்தை சொல்லிட்ட.இனி அவங்க பார்த்துப்பாங்க வா…” என்றபடி இழுத்து செல்ல…
அவனின் குரலைக் கேட்ட மயக்கத்தில் அக்கம் பக்கம் பாராமல் சென்றாள் அபி.
அங்கு எதிர்புறம்…ரிஷியும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தான். அவள் சொன்ன விஷயம் ஏற்கனவே அவன் அறிந்தது தான்.அதற்கு அடுத்து செய்ய வேண்டிய வேலைகளில் மும்பாரமாய் இறங்கினான் ரிஷி.
ஏற்கனவே ஜானின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்திருந்தபடியால்… அந்த விவரங்களை வைத்து…அந்த கேஸில் முன்னேறிக் கொண்டிருந்தான் ரிஷி.
இதில் அபி போன் செய்ததை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கான அவசியமும் அவனுக்கு ஏற்படவில்லை.அந்த விஷயத்தை அப்பொழுதே மறந்திருந்தான் ரிஷி.
கல்லூரியில் இருந்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்….முகாமிற்கு கிளம்பிக் கொண்டிருக்க….லட்சுமி ஆசிரியரைக் காண சென்றிருந்தாள்.
“என்ன அபி….தேவையில்லாத விஷயத்தில் எல்லாம் மூக்கை நுழைக்கிற மாதிரி இருக்கே..!” என்றான் அவளின் அருகில் வந்த ஜான்…யாருக்கும் கேட்காத படி.
“நான் என்ன மூக்கை நுழைத்தேன்….?” என்றாள்.
“இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கர்ம சிரத்தையாய் அவனுக்கு பண்ணி பேசிட்டு இருந்தியே…அதைச் சொன்னேன்…” என்றான் கிண்டலாய்.
“இவனுக்கு எப்படித் தெரியும்…?” என்று ஒரு நிமிடம் யோசித்தவள்…பிறகு தெளிந்தவளாய்…”ஆமா இப்ப அதுக்கென்ன…?” என்றாள்.
அன்னைக்கு கேட்டதுக்கு….உனக்கும்,அவனுக்கும் சம்பந்தமே இல்லைன்ற மாதிரி பேசுன….இப்ப அவன் காத்தும்..அவன் வீட்டுக் காத்தும் உங்க வீட்டுப் பக்கம் வீசுது போல….என்றான் அவளை ஆராய்ந்தபடி.
ஏற்கனவே எரிச்சலில் இருந்தவள்….அவன் கூறிய வாக்கியத்தின் பொருளை உணராது….
“இப்ப என்ன சொல்ல வர….? ஆமா நாங்க ரெண்டு பெரும் லவ் பண்றோம்…சீக்கிரம் கல்யாணம் செய்து உறவாவும் மாறப் போறோம்…இதையெல்லாம் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை…” என்று என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறிக் கொட்டிவிட்டு சென்றாள்.
ஏற்கனவே விஷயம் தெரிந்தவன்…தனக்குள் சிரித்தபடி அவளை ஆராய்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் சங்கருக்கு அழைக்க…அவன் செல்போன் எடுக்கப்படவில்லை.
ஒரு முடிவு செய்தவனாய் அங்கிருந்து கிளம்பி சென்றான்.
“ஹலோ..! சொல்லுங்க சம்பந்தி..! அப்படியா…?அப்படியே செய்துக்கலாம் சம்பந்தி…சரிங்க சம்பந்தி…நான் வீட்டுல கலந்துட்டு சொல்றேன்…” என்று கணபதி போனை வைக்க…
“யாரு…மாப்பிள்ளை வீட்டுக்காரங்களா..?” என்றார் கோவிந்தன்.
“ஆமாம்ப்பா….வர வெள்ளிக் கிழமை நாள் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க…அன்னைக்கே நிச்சயம் பண்ணிடம்ன்னு சொன்னாங்கப்பா…” என்றார்.
“அப்படியா…?நல்லதுப்பா…! அப்படியே செஞ்சுடலாம்..!” என்று கோவிந்தன் சொல்ல…
“என்ன செஞ்சுடலாம்…? அபிராமி இல்லையே…” என்றார் வள்ளி.
அப்பொழுது தான் கோவிந்தனுக்கு நியாபகம் வர….”இதை எப்படி மறந்தேன்…” என்று நினைத்தவராய் யோசிக்க..
“இதுக்குத்தான் அன்னைக்கே சொன்னேன்…யாரு கேட்டிங்க என் பேச்சை…” என்று வள்ளி ஆரம்பிக்க….
“நான் அவங்ககிட்ட பேசுறேன்…!” என்று கோவிந்தன் சொல்ல…
“என் நிச்சயதார்த்தத்துக்கு அவ எதுக்கு…அவளுக்காக எல்லாம் தள்ளி வைக்க வேண்டாம்…அவ இருந்து என்ன செய்யப் போறா..?” என்றாள் சரண்யா எரிச்சலுடன்.
“அவ உன் தங்கை…!” என்றார் கோவிந்தன் கோபமாய்.
“அதனாலென்ன…எனக்குத் தானே நிச்சயம்…” என்றாள்.
இறுதியில் அபிராமி இல்லாமலேயே நிச்சயதார்த்தம் என்ற முடிவுக்கே வரப்பட்டது.
அபிராமியின் ஆசிரியர் நம்பருக்கு அழைத்த கோவிந்தன் அபியிடம் விஷயத்தை சொல்ல…
மனதில் தோன்றிய வேதனையை மறைத்தவளாய்…”இதில் என்ன இருக்கு தாத்தா…நிச்சயதார்த்தம் தானே…! கல்யாணத்துல நான் தான் முன்னாடி நிற்பேன்..!” என்று அவரை சமாதானப் படுத்தியவள்….கலங்கிய கண்களை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டாள்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல….நிச்சயதார்த்த நாளும் வந்தது.
அபி எதிர்பார்த்த அந்த ஆறாவது நாளும் வந்தது.இன்று ரிஷி வருவார்…அவரைப் பார்க்கப் போகிறேன்….என்ற கற்பனையில் மிதந்து கொண்டிருந்தாள்.
வீட்டில் சரண்யாவோ….தன்னை மிக அழகாய்க் காட்ட..கர்ம சிரத்தையாய் மேக்கப் செய்து கொண்டிருந்தாள்.வள்ளி ஒரு நிமிடம் எரிச்சல் அடைந்தார்.
“என்ன சரண்யா இது…எவ்வளவு நேரம் தான் அலங்காரம் பண்ணுவ…?” என்று அதட்ட…
“என்ன பாட்டி….இன்னைக்கு நான் அழகாத் தெரிய வேண்டாமா..? இதுக்கு போய் திட்டுறிங்க…?” என்று செல்லம் கொஞ்சவும்..
“சரி சரி…சீக்கிரம் கிளம்புமா…! அவங்க வந்துட்டு இருக்காங்களாம்..!” என்றபடி வள்ளி செல்ல…மீண்டும் தன் ஒப்பனையைத் தொடர்ந்தாள்.
அபிராமி என்ற ஒருத்தி அங்கு இல்லாததை..நினைத்து…கோவிந்தனைத் தவிர யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.
சிறிது நேரத்தில் குடும்பம் சகிதமாக வந்து இறங்கினான் ரிஷி.கரு நீல நிற ஜீனும்…வெள்ளைச் நிறச் சட்டையுமாய் வந்து இறங்கியவனைப் பார்த்து தன்னை மறந்தாள் சரண்யா.
ஆனால் அவனோ அவளை கண்டு கொண்டானில்லை.அவன் கவனம் முழுதும் வேறெங்கோ இருக்க….”ரிஷி…” என்று கையை அழுத்தினார் சித்ரா.
“என்ன மாம்..!” என்றான் புரியாதவனாய்.
“இங்க உனக்கு நிச்சயம் பண்ணப் போறோம்…நீ மாப்பிள்ளை… போலீஸ்காரன் மாதிரி முகத்தை வைக்காம…கொஞ்சமாவது சிரிச்ச மாதிரி முகத்தை வைடா….” என்று வெளியில் சிரித்தபடி…யாருக்கும் கேட்காத வண்ணம் அவனிடம் கூறிக் கொண்டிருந்தார்.
“ஹா…ஹா…ஓகே மாம்..” என்றபடி அவன் இயல்புக்கு திரும்ப…
ரிஷியின் கைகளைப் பிடித்த தீபிகா…விடாமல் அவனை ஒட்டிக் கொண்டு நடக்க….வருண் தந்தையுடன் சென்றான்.
கணபதிக்கும்..கோவிந்தனுக்கும் மாப்பிள்ளையைப் பார்த்து பெருமை பிடிபடவில்லை.அவனின் புறத் தோற்றத்தில் மயங்கித் தான் போயினர்.
அனைத்தும் முறையாய் நடக்க….ஐயர் நிச்சயப் பத்திரிக்கை வாசிக்க… அங்கு தாம்பூலம் மாற்றப்பட்டது. திருமணம் ஒரு மாதத்தில் என்று பேசிமுடிக்க….சரண்யாவின் விரலில் மோதிரத்தை மாட்டினான் ரிஷி.
“எங்க உங்க சின்னப் பேத்தியைக் காணோம்…!” என்று நியாபகம் வந்தவராய் சித்ரா கேட்க…
கோவிந்தன் தயங்கியவராய் விஷயத்தை சொன்னார்.அதைக் கேட்ட தீபிக்கும்,வருணுக்கும் ஏமாற்றமாய் இருந்தது.
என்ன இவர்கள்….இதை இவ்வளவு எளிதாக சொல்கிறார்கள்….? என்று இருவரும் யோசிக்க…
அதற்கு அவசியமேயில்லை என்பதைப் போல அனைவரும் நடந்து கொள்ள…தீபியும்,வருணும் அதற்கு மேல் யோசிக்கவில்லை.அவர்கள் பெண் மேல் அவர்களுக்கு இல்லாத அக்கறையா…? என்று நினைத்தான் வருண்.
ரிஷி தன்னிடம் தனியாக பேசுவான் என்று எதிர்பார்த்திருந்த சரண்யாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.
“மாம்…எனக்கு டைம் ஆகுது மாம்…முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்கு…அப்பறம் ஒரு ப்ரோகிராம் இருக்கு…”என்று சித்ராவிடம் சொல்ல…
“இன்னும் கொஞ்ச நேரம் இரு ரிஷி…அவங்க ஏதாவது நினைச்சுக்க மாட்டாங்களா..?” என்று சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
“எல்லாரும் மன்னிக்கணும்…கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு…இப்பவே வேலைக்கு நடுவில் தான் வந்தேன்..” என்று ரிஷி கிளம்ப ஆயத்தமாக…
அதற்கு மேல் அவனை யாரும் தடுக்க முடியவில்லை.இந்த வேளையில் இது சகஜம் என்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டனர்.ஆனால் சரண்யாவிற்கு தான் மனம் ஆறவில்லை.
இங்கே ரிஷி நிச்சயதார்த்தம் முடிந்து செல்ல…அங்கே இவனுக்காய் விழி வைத்துக் காத்திருந்தாள் அபிராமி.
நான் கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால்…
இந்த காதல் துயருமில்லை….
நீ இன்னொரு கிரகத்தில் பிறந்திருந்தால்….
இந்த ஏக்கம் சிறிதுமில்லை…
என் பாலைவனத்தில்…
உந்தன் பார்வையாறு வந்து பாய்ந்திடுமா…?