அத்தியாயம் –9
அருகில் யாரோ அழைக்கும் சத்தம் சளசளவென்று கேட்க நல்ல தூக்கத்தில் இருந்த மயில்வாகனனின் தூக்கம் கலைய ஆரம்பித்தது. கண் விழித்து யாரென்று பார்க்க விமானப் பணிப்பெண் சீட் பெல்ட் போட சொல்லிக் கொண்டிருந்தாள்.
‘ச்சே… இவ்வளவு நேரம் கண்டது எல்லாம் கனவா…என்னமோ நிஜமாவே நடந்த மாதிரியே இருந்திச்சே… என்ன நடக்குது இங்க… இதுவரைக்கும் எனக்கு கனவே வந்ததில்லையே… இப்போ மட்டும் எப்படி’ என்று யோசித்துக் கொண்டே பெல்ட்டை போட்டுக் கொண்டார்.
விமானம் மெல்ல தரையிறங்கியது, அவர் மனதில் அந்த கனவினால் வந்த பயமும் மெல்ல விடை பெற்றது போலிருந்தது. செக்கிங் எல்லாம் முடித்து அவர் உடைமைகளே எடுத்துக் கொண்டு வெளியில் வந்தார்.
அவர் முன்னமே பதிவு செய்திருந்த வண்டியும் வந்திருக்க அவர் மனமோ ஒருவேளை இது கனவில் பார்த்த டிரைவராய் இருக்குமோ… இந்த வண்டியும் அதே வண்டியா என்று கனவுடன் ஒப்பிட்டு பார்த்து அது இல்லை என்றதும் ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது அவருக்கு.
வண்டியில் ஏறி அமர்ந்தவர் டிரைவரிடம் “வண்டி எல்லாம் நல்ல கண்டிஷன்ல இருக்கா… வழியில ஒண்ணும் நின்னுடாதே…” என்று கேட்க டிரைவர் அவரை வித்தியாசமாக பார்த்தார்.
‘என்ன இந்தாளு வண்டி நல்லா இருக்கா, வழியில நின்னுடுமான்னு கேட்குறான்…’ என்று மனதிற்குள் யோசித்தாலும் வெளியில் “நல்ல கண்டிஷன்ல தான் இருக்கு சார்… ஒண்ணும் பிரச்சனை வராது”
“போன வாரம் தான் சர்வீஸ் ஆகி வந்துச்சு… நல்லா ஓடிட்டு இருக்கு சார்” என்றான். “சரிப்பா… நல்லது… நீ ஓட்டு” என்றவர் மேலே ஏதும் பேசவில்லை.
கனவின் தாக்கம் இன்னமும் லேசாக அவருக்குள் ஒட்டியிருந்தது. நிஜம் போலவே இருந்ததே என்று அவரால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
எங்கே மீண்டும் கண்ணயர்ந்தால் அந்த கனவு வந்துவிடுமோ என்று நினைத்தவர் டிரைவருடன் ஊரின் நிலவரங்களை பற்றி பேசிக் கொண்டிருந்ததில் கனவு மொத்தமாக மறந்திருந்தது அவருக்கு.
டிரைவருக்கும் அவர் பேசிக் கொண்டிருந்ததில் சற்றே உற்சாகம் வந்திருக்க அவரும் பதில் பேசிக் கொண்டும் வேறு விஷயங்கள் பேசிக் கொண்டும் வந்தார்.
திடிரென்று வண்டி ஒரு உறுமலோடு நின்று விட டிரைவர் என்னவென்று பார்க்க கதவை திறந்து வெளியேறினார். ‘என்ன இது கனவில் வந்தது போல் நடக்குது’ என்று நினைத்துக் கொண்டாலும் இப்போது அந்த கனவு அவரை பெரிதாய் பாதித்திருக்கவில்லை.
அவரும் வண்டியில் இருந்து கீழே இறங்கினார். “என்னாச்சு…” என்றவரிடம் “தெரியலை சார் அதான் பார்த்திட்டு இருக்கேன்” என்றவர் ஏதேதோ செய்து பார்த்துவிட்டு வண்டியை எடுக்க முயற்சி செய்ய அது கிளம்புவேனா என்று நின்றிருந்தது.
“சார் வண்டி கிளம்ப மாட்டேங்குது. ஏற்கனவே ரொம்ப நேரம் ஆகிடுச்சு, வண்டியை பக்கத்துல மெக்கானிக் யாரும் இருந்தா கூட்டிட்டு வந்து பார்த்தா தான் சரியாகும் போலிருக்கு. இங்க பக்கத்துல மெக்கானிக் யாரும் கிடைப்பாங்களான்னு வேற தெரியலை சார். என்ன சார் செய்யலாம்” என்று கையை பிசைந்தார்.
‘என்ன இது கனவில் பார்த்தது போலவே ஒரு வரி மாறாமல் சொல்கிறானே’ என்று நினைத்தாலும் ‘டேய் மயில்வாகனா நீ இவ்வளவு தானா… ஒரு கனவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பாயா…’ என்று அவர் அறிவு அவரை கேள்வி கேட்க சற்றே யோசித்தார்.
“நான் தான் ஏறும் போதே கேட்டேனே வண்டி நல்ல கண்டிஷன்ல இருக்கான்னு… சரி திடிர்னு இப்படி ஆனா நீங்க என்ன பண்ண முடியும்… விடுங்க தம்பி…” என்றவர் சுற்றி பார்க்க வண்டி அவர் கனவில் கண்டது போல ஒரு குறுக்கு பாதையை ஒட்டியே நின்றிருந்தது.
“சரி இருக்கட்டும் தம்பி, ஒண்ணும் பிரச்சனையில்லை. நல்லவேளையா இந்த குறுக்கு வழிகிட்ட வண்டி நின்னதும் நல்லதா போச்சு. நான் இந்த வழியா நடந்தேன்னா கொஞ்ச நேரத்துல போய்டலாம்”
“சரி வண்டிக்கு எவ்வளவு ஆச்சுன்னு சொல்லுப்பா…” என்று கேட்டு காசை கொடுத்துவிட்டு நகர்ந்தார்.
“சார்… சார்… இப்படியே இருட்டுல எப்படி சார் போவீங்க… இந்த டார்ச் வேணா எடுத்துட்டு போங்க சார்…” என்று டிரைவர் டார்ச்சுடன் அருகில் வந்தார்.
“பரவாயில்லைப்பா… எனக்கு பழக்கப்பட்ட இடம் தான் நான் போய்டுவேன்… உனக்கு தான் டார்ச் தேவைப்படும் நீயே வைச்சுக்கோ” என்றவர் டிரைவருக்கு நன்றி கூறி முன்னேறி நடந்தார்.
அந்த பாதை வழியே நடக்க ஆரம்பித்தார், கனவில் அந்த பாதை முழுதும் சப்பாத்தி கள்ளியாக இருந்தது. ஆனால் இப்போது அடர்ந்த மரங்கள் மட்டுமே வழிநெடுகிலும் இருந்தது.
கனவில் அமாவாசையாக இருந்த நிலவு, நடப்பில் பௌர்ணமியாக இருக்க அவரால் அந்த வெளிச்சத்தில் நடக்க முடிந்தது. மரங்களின் அசைவு சற்றே பயம் கொடுத்தாலும் எல்லாமே கனவில் நடந்தது போல் நடக்கவில்லை என்றே சற்றே நிம்மதி கொண்டிருந்தார் அவர்.
மேலும் முன்னேறி நடக்க சுடுகாட்டை தாண்டி செல்லும் போது இருவாட்சியின் வாசம் காற்றில் கலந்து வந்தது. எதையும் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது என்று எண்ணியவர் முன்னேறிக் கொண்டிருந்தார். கொஞ்சம் நின்று யோசித்தாலும் கனவு நடந்து விடுமோ என்று பயந்தவர் போல் வேகமாக நடந்தார்.
இரவில் கேட்ட கோட்டானின் அலறலில் அது வரை தைரியமாக காட்டிக் கொண்டிருந்தவரை விட்டு பயம் கட்டவிழுந்தது. நடையின் வேகத்தை கூட்டி எட்டி எட்டி நடை போட்டாலும் அந்த பாதை நீண்டுக் கொண்டே போனது போல் இருந்தது.
அடர்ந்த மரங்கள் இருந்த அந்த பாதையில் மதியின் ஒளி கிளைகளின் இடுக்கில் மட்டுமே விழுந்தது. அந்த இடத்தில் வெளிச்சம் சற்றே குறைந்திருக்க நடையை கூட்டி அந்த இருளை கடக்க முனைந்தார்.
மீண்டும் கேட்ட கோட்டானின் அலறலில் பின்னால் திரும்பி பார்த்தவாறே நடந்தவர் எதன் மீதோ மோதி நிற்க “மயில்வாகனன்…” என்று அவர் பெயரை முழுதாக கூப்பிட்ட பெண் குரலை கேட்டு திரும்பி பார்த்தவரின் இதயம் ரயிலை விட வேகமாக படபடத்தது.
அப்பெண்ணுருவம் அவர் அருகில் நெருங்கி வர முயல “நீயா…” என்றவாறே பயந்து பின்னாலேயே சென்றவர் பின்னால் இருந்த ஆலமரத்தில் அடித்திருந்த ஆணியில் வேகமாக மோதியிருக்க அவர் பின்மண்டையில் ரத்தம் வழிந்தோட கீழே விழுந்தார்.
கீழே விழும் முன் அவர் ஆலமரத்தை அண்ணாந்து பார்க்க அது கனவில் வந்த அதே மரம், அதன் பின் அவர் உடம்பில் உயிர் இருக்கவில்லை….
____________________
நிரஞ்சனுக்கு அலுவலகத்தில் இருப்பே கொள்ளவில்லை. சஞ்சுவை பார்த்து முழுதாக நான்கு நாட்கள் ஆகிவிட்டது. அன்று மருத்துவமனையில் அவளை திட்டி விட்டு வந்தவன் தான் பிறகு அங்கு செல்லவேயில்லை.
அவள் எப்படியிருக்கிறாள் என்று அவ்வப்போது கார்த்திக்கிடம் விசாரித்து தெரிந்து கொண்டாலும் நேரில் சென்று பார்க்கவில்லை என்று அவன் மனம் துடித்தது.
‘நான் நல்லா தானே இருந்தேன், எந்த சலனமும் இல்லாம இருந்த என் மனசுல இப்படி ஒரு நினைப்பை ஏற்படுத்திட்டாளே’ என்று கோபமாகவும் அதே சமயம் அவளுக்காக ஏங்கவும் செய்தான்.
‘நிம்மதியா ஒரு வேலை கூட பார்க்க முடியலை. அதான் ஆஸ்பத்திரில இருந்து நேத்தே வீட்டுக்கு போயிட்டாளே… இன்னும் வந்து என்னை பார்க்காம இருக்கா…’
‘ஒரு வேளை அன்னைக்கு ஏதோ பயத்துல தான் அப்படி என்கிட்ட ஒட்டியிருப்பாளோ… உண்மையிலேயே அவ மனசுல வேற எந்த நினைப்பும் இல்லையோ… நாமளாச்சும் போய் பார்த்திட்டு வந்திடுவோமா’ என்று மனதிற்குள்ளேயே அங்கலாய்த்துக் கொண்டிருந்தான்.
அவன் வீட்டில் அவளை பற்றி சொன்னது அவன் நினைவுக்கு வர அதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். வீட்டிற்கு போன் செய்து அவன் அன்னை ஸ்ரீமதியிடம் சஞ்சுவை பற்றி விபரமுரைத்தவன் நல்ல நாளாக பார்த்து பெண் பார்க்க போகச் சொல்ல அவன் அன்னை மிகுந்த சந்தோசமடைந்தார்.
அவன் தங்கை கவிதா அவனை நன்றாக கிண்டல் செய்தாள். ஏற்கனவே சஞ்சுவின் புகைப்படத்தை கார்த்திக்கிடம் வாங்கிருந்தவன் அதை வாட்ஸ் அப்பில் அவன் வீட்டிற்கும் அனுப்பியிருக்க அவளை அவர்களுக்கும் பிடித்தது.
அவன் இப்படி யோசனையாயிருக்க மாறன் அவனெதிரில் வந்து நின்றான். அவன் முன் நிழலாடவும் சட்டென்று நிமிர்ந்து மாறனை கண்டவன் “சொல்லு மாறன்… என்ன விஷயம்…” என்றான்.
“டேய் நிரஞ்சன்… இங்க ஒரே கொலைக்கு மேல கொலையா நடந்துட்டு இருக்கு… என்ன ஏதுன்னே கண்டு பிடிக்க முடியலை… இப்படி தான் ரெண்டு வருஷம் முன்னாடி உங்கண்ணன்…”
“அதுக்கு பிறகு இன்னும் சிலர்… இப்போ போன வாரத்தில் ஒரு நாள் ஒருத்தர் வெளிநாட்டுல இருந்து அவரோட உறவுல யாரோ இறந்திட்டார்னு வந்திருக்கார். வந்த இடத்துல இந்தாளு சுடுகாட்டு பக்கத்துல செத்து கிடக்குறார்”
“இதுல அங்கங்கே சின்ன சின்ன கலவரம், திருட்டு வேற… எனக்கு உன்னோட உதவி கொஞ்சம் வேணும்டா… அதான் கேட்டுட்டு போகலாம்ன்னு வந்தேன்… நீ வேற வேலையா வந்திருக்க தெரியும்… எனக்காக கொஞ்சம் ஹெல்ப் பண்ணுறியா” என்றான் அவன்.
“இதென்ன கேள்வி மாறன், உனக்காக செய்ய மாட்டேனா… கண்டிப்பா செய்யறேன்…. எனக்கும் சில விஷயங்கள் தெரியணும்… நீ எதுவும் டீடைல்ஸ் கலேக்ட் பண்ணி வைச்சிருக்கியா??? அப்படி இருந்தா முதல்ல அதை கொடு…” என்றான்.
“இந்தா இந்த பைலை பாரு… இதுல இதுவரைக்கும் இறந்தவங்களோட விபரமிருக்கு… அப்புறம் இந்த பைல்ல இந்த ஊர்ல நடந்த வினோதமான விஷயங்கள் பத்திய குறிப்பு இருக்கு…” என்றவன் இரண்டையும் அவனிடம் கொடுத்தான்.
நிரஞ்சனுக்குள் ஒரு புதுவேகம் வந்தது அவன் அண்ணன் இறப்பை பற்றி அறிய வேண்டும் என வந்திருந்தவன் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்திருக்க மாறன் அவன் வேலையை சுலபமாக்கியிருந்தான்.
“நிரஞ்சன்… சாரிடா உன்னை வேற இதுல இழுக்கறேன், எனக்கு இதுல சில விஷயம் எல்லாம் புரிய மாட்டேங்குது… சிலர் பேய், பிசாசு காரணம்ன்னு சொல்றாங்க… சிலர் இதை தெய்வக்குத்தம்ன்னு சொல்றாங்க… ஆளாளுக்கு அவங்களுக்கு தோணினதை எல்லாம் சொல்றாங்க…”
“எனக்கு இதை எப்படி ஆரம்பிக்கறதுன்னே புரியலை…”
“ஏன் மாறன் நீயும் பேய், பிசாசு, சாமிகுத்தம் இதெல்லாம் நம்புறியா???”
“என்னை சாதாரணமான ஒரு மனுஷனா நினைச்சு கேட்டா நான் பேய், பிசாசு எல்லாம் இருக்குன்னு தான் சொல்லுவேன். ஆனா நான் இப்போ ஒரு போலீஸ் ஒரு கொலை நடந்திருக்கு அதுக்கு காரணம், பேய், சாமின்னு சொல்லுறதை நான் நம்ப முடியாதே… கண்டுபிடிச்சு ஆகணுமே…”
“அப்போ உனக்கு பயமிருக்குன்னு சொல்றியா…”
“நான் அப்படி சொல்லலை நிரஞ்சன்… அதில எல்லாம் எனக்கு நம்பிக்கை இருக்குன்னு சொல்றேன். எது எப்படி இருந்தாலும் இது என்னோட கடமை அதை நான் சரிவர செஞ்சு தான் ஆகணும்…”
“நீ இதை படிச்சுட்டு உன்னோட ஒப்பினியன் சொன்னா நான் முடிவெடுக்க கொஞ்சம் ஈஸியா இருக்கும்ன்னு தான் உன்கிட்ட கேட்டேன்டா…”
“சரி விடுடா… எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு, நான் என்ன ஏதுன்னு அலசிட்டு உன்கிட்ட சொல்றேன்…” என்றவன் அந்த பைலில் முழ்க ஆரம்பிக்க மாறன் விடைபெற்று சென்றான்.
அப்போது அவன் அறைக்கதவு தட்டப்பட “எஸ்…” என்று பைலில் இருந்து விழியெடுக்காமலே கூறிவிட்டு அடுத்த பக்கத்தை திருப்பி அதில் பார்வையை ஊன்றியிருந்தான்.
“என்னை எதுக்கு வரச்சொன்னீங்க…” என்று கேட்ட குரலில் கலைந்தவன் நிமிர்ந்து பார்க்க எதிரில் சஞ்சனா நின்றிருந்தாள். சட்டென்று ஒரு பரவசம் அவனிடத்தில் வந்து ஒட்டிக் கொள்ள அவளை ஆர்வமாக பார்த்தான்.
“எதுக்கு வரச் சொன்னேன்னு தெரியாதா…”
“தெரியாது…” என்றாள்
“தெரியாம எதுக்கு வந்தே???”
“தெரிஞ்சுக்க தான் வந்தேன்…” என்றாள் மீண்டும் இடக்காக.
‘கொஞ்சமாச்சும் இந்த திமிர் குறையுதா பாரு… மறுபடியும் என்கிட்ட வம்படிக்க ஆரம்பிச்சுட்டா’ என்று மனதிற்குள் அவளை வைதான்.
“தனியாவா வந்தே?? நல்லா இருக்கியா??”
“ஏன் எனக்கென்ன உயிரோட தான் இருக்கேன் நல்லா குத்துக்கல்லு மாதிரி… நான் எப்படி வந்தா உங்களுக்கென்ன??” என்ற அவள் பதில் அவனுக்கு கோபத்தை வரவழைத்தது.
“போ… இங்க இருந்து…” என்று கடுமையாக கூற “எதுக்கு என்னை வரச்சொல்லிட்டு இப்படி பண்ணுறீங்க…” என்று அவள் பதிலுக்கு எகிறினாள்.
“இங்கிருந்து போடி பேசாம, கேள்வி கேட்டா நக்கலா பதில் சொல்லிட்டு… திமிரு திமிரு உடம்பு பூர திமிரு… அடங்கவே மாட்டியா நீ??? உடம்பு சரியில்லாதவ இப்படி தனியா வேற வந்து நிக்குற… கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை…” என்று மெதுவான குரலில் ஆனால் கடுமையாக கூறினான்.
“யாரு நானா… என்னை ஆஸ்பத்திரில பாதியில விட்டுட்டு அப்படியே இங்க வந்து உட்கார்ந்துகிட்டது யாரு?? ஒரு வார்த்தை போன் பண்ணி விசாரிச்சா உங்க கீரிடம் இறங்கிடுமோ??”
“எல்லாம் போகட்டும், இங்க ஒருத்தி தேடி வந்திருக்காளே… அவளை வரச் சொன்னோமேன்னு இல்லாம இவரு பாட்டுக்கு எதையோ உட்கார்ந்து படிச்சுக்கிட்டு இருப்பாரு…”
“நான் இங்க வந்து ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகுது… நீங்க மீட்டிங்ல இருக்கீங்கன்னு சொன்னாங்க… எவ்வளோ நேரமா காத்திட்டு இருந்தேன் தெரியுமா… உடம்பு சரியில்லாதவளாச்சேன்னு உங்களுக்கு எதுவும் தோணாது…”
“நான் நக்கலா பேசினது மட்டும் தான் உங்களுக்கு தெரியுது… இனிமே நான் இங்க வரமாட்டேன்… இந்த இடத்துக்கும் எனக்கும் எப்பவும் செட் ஆகறதேயில்லை… உங்களுக்கு வேணுமின்னா என்னை வீட்டில வந்து பாருங்க…” என்று கோபமாக இரைந்துவிட்டு வெளியேறி சென்றுவிட்டாள்.
‘அய்யய்யோ அவசரப்பட்டு நாம தான் பேசிட்டமோ, வந்து ஒரு மணி நேரம் ஆச்சுன்னு சொல்றாளே’ என்று நினைத்தவன் வெளியில் இருந்த சங்கரனுக்கு அழைத்து விசாரிக்க அவள் சொன்னதை அவர் அப்படியே படித்தார்.
“சார்… நீங்க மீட்டிங்ல இருந்தீங்க மாறன் சாரோட… அதான் அவங்களை வெயிட் பண்ண சொன்னேன்… மாறன் சார் போனதும் உங்களை கூப்பிடலாம்ன்னு பார்த்தா நீங்க கொஞ்ச நேரத்துக்கு என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு சொல்லிட்டீங்க… அதான் நான் சொல்லலை…”
“நான் தண்ணி பிடிக்க வெளிய போன நேரத்துல அவங்க உங்களை பார்க்க உள்ள வந்திட்டாங்க போல… சாரி சார்… உங்ககிட்ட சொல்லாம விட்டதுக்கு” என்று மன்னிப்பு கோரினார் அவர்.
அவன் போனை வைக்கவும் கார்த்திக் அவனை அழைத்தான். போனை எடுத்து காதுக்கு கொடுத்தவன் “சொல்லு கார்த்திக்…”
“என்னாச்சு நிரஞ்சன், சஞ்சு ரொம்ப கோபமா தெரியறா… நான் அஞ்சுகிட்ட பேசிட்டு வர்றதுக்குள்ள என்ன பஞ்சாயத்து உங்களுக்குள்ள”
“என்னது நீயும் இங்க வந்திருக்கியா??”
“வந்திருந்தேன்னு சொல்லு… நாங்க கிளம்பிபத்து நிமிஷம் ஆகுது… ஒரு கடைக்கிட்ட நிறுத்தி ஒரு பொருள் வாங்கணும்னு சொல்லிட்டு உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்…”
“கார்த்திக் அவ தனியா என்னை பார்க்க வந்திட்டான்னு நினைச்சு நான் கோபமா பேசிட்டேன். நீ வந்தது எனக்கு தெரியாது, நான் சாயங்காலம் வீட்டுக்கு வர்றேன்… அம்மாகிட்ட சொல்லிடு… அவகிட்ட எதுவும் சொல்லாதே… ப்ளீஸ்… ப்ளீஸ்…” என்று கெஞ்சிவிட்டு மேலும் ஏதோ பேசிவிட்டு வைத்தான்.
அன்று மாலை தூங்கி எழுந்தவள் அவளை பார்த்துக் கொள்ளவென்று முன்தினம் வந்து இறங்கியிருந்த அஞ்சுவை தேடினாள். ‘எங்க போய்ட்டா இவ’ என்று யோசித்துக் கொண்டே கொட்டாவி விட்டுக் கொண்டே ஹாலுக்கு வந்தாள்.
“என்னம்மா மகராசி உனக்கு இன்னும் தூக்கம் தெளியலியா… பெரிய கொட்டாவியா வருது” என்று கிண்டலடித்தார் சுந்தரி.
“போங்கத்தை சும்மா கிண்டல் பண்ணிட்டு… அஞ்சு எங்க போனா??”
“ரெண்டு வீடு தள்ளி ஒருத்தங்க பூக்கட்டி விற்ப்பாங்க… வாங்கிட்டு வரச் சொன்னேன். அதான் போயிருக்கா???”
“ஓ… சரி சரி…”
“என்ன சரி சரி… நீ போய் முகம் கழுவிட்டு ஒரு புடவையை எடுத்து கட்டு”
“என்னது?? புடவையா?? நானா?? கட்டணுமா??என்ன அத்தை விளையாடுறீங்களா… எதுக்கு இப்போ என்னை புடவை கட்ட சொல்றீங்க??”
“உன்கூட எனக்கென்னடி விளையாட்டு… போ… போய் நான் சொன்னதை செய்… உன்னை பார்க்க மாப்பிள்ளை வர்றாங்க…” என்று குண்டை தூக்கி போட்டார்.
“என்னது மாப்பிள்ளையா??? யாரை கேட்டு முடிவு பண்ணீங்க???”
“எல்லாம் எங்க அண்ணாவை கேட்டாச்சு… நீ தான் அவங்க பார்க்கற மாப்பிள்ளை உனக்கு ஓகேன்னு சொன்னியாமே அப்புறமென்ன… போ… போய்… தயாராகற வழியை பாரு…”
‘அய்யோ இது வேறயா… என்ன செய்யலாம் அந்த மாப்பிள்ளை வரட்டும்… அப்புறம் அவனை பிடிக்கலைன்னு சொல்லிடலாம்’ என்று மனதிற்குள்ளேயே திட்டம் போட்டுக் கொண்டாள்.
“அத்தை ப்ளீஸ் அத்தை எனக்கு புடவை கட்டத் தெரியாது… என்கிட்ட புடவையும் கிடையாது. நான் வேணும்ன்னா ஒரு நல்ல புது சுடிதார் எடுத்து போட்டுக்கறேன் ஓகேவா…”
“நான் வளர்த்த பொண்ணு மாதிரியா நீ இருக்க… உங்கக்கா எப்படியிருக்கா அழகா லட்சணமா புடவை கட்டலை… நீ எப்போ பாரு ஜீன்ஸ், சட்டை இல்லை சுடிதார்ன்னு அந்த கண்றாவியே போட்டுட்டு அலையுற” என்று அவள் சொல்லவும் அஞ்சு பூவுடன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
“அத்தை அவ ஸ்கூல் டீச்சர் அவ ஸ்கூல்க்கு ஜீன்ஸ் போட்டுட்டு போக முடியுமா… புடவை தான் கட்டணும்… என் வேலை அப்படியா, ஓடியாடி திரிய வேண்டி இருக்கும் அதுக்கு என்ன வசதியோ நான் அதை தானே செய்யறேன்…”
“அஞ்சு இவளோட என்னால பேச முடியாது… உன்னோட புடவை ஒண்ணை எடுத்து இவ கைல கொடு… இவ அதை கட்டிட்டு வரட்டும்… இன்னும் பத்து நிமிஷத்துல ரெடி ஆகணும்…” என்று அஞ்சுவிடம் ஆரம்பித்து சஞ்சுவிடம் முடித்தார் அவர்.
“சரிங்கத்தை…” என்று அஞ்சு அவருக்கு ஆமாம் சாமி போட சஞ்சு அவளை இழுத்துக் கொண்டு அவர்கள் அறைக்கு சென்றாள். “என்னடி அத்தை சொன்னா நீ மண்டையை மண்டையை உருட்டுற…”
“நான் எந்த காலத்துல சேலை கட்டி இருக்கேன்… காலேஜ் பேர்வெல் பார்ட்டிக்கே நீ தானே கட்டிவிட்ட…”
“என் தலையெழுத்து இப்போவும் நானே உனக்கு கட்டி விடறேன். ஆனா இது தான் கடைசி நான் இப்போ கட்டிவிடும் போதே சொல்லி தருவேன் கத்துக்கோ” என்றாள் அஞ்சு.
“சரி சரி கத்துக்கறேன்… நீ கட்டாத சேலையா எடுத்து கொடு… ஆமா உன்னோட ஜாக்கெட் எனக்கு சரியா இருக்குமா…” என்று வினா எழுப்பினாள்.
“உனக்கு ரொம்ப திமிருடி சஞ்சு… அடங்கவே மாட்டியாடி நீ… ஜாக்கெட் எல்லாம் சரியா தான் இருக்கும் இல்லன்னா… தையல் பிரிச்சுக்கலாம்…”
அஞ்சு பேசியதில் நிரஞ்சனின் ஞாபகம் வர சஞ்சு அமைதியானாள். ‘அவர்க்கு என்னை பிடிக்கலியா… அன்னைக்கு என்னை சமாதானப்படுத்த தான் அப்படி எதுவும் சொல்லி இருப்பாரோ… நாம தான் தேவையில்லாத சிந்தனை எல்லாம் வைச்சுக்கறமா…’
‘நீ நினைக்கிற மாதிரி எதுவுமில்லைன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிட்டா… என்னடி செய்வ சஞ்சு… அதை விட அவமானம் வேற இல்லவே இல்லை… நீ எப்பவும் போல அவரை பார்க்கறதோட நிறுத்திக்க…’ என்று தனக்கே அறிவுரை கூறிக் கொண்டாள்.
‘ஆனா அவன் பேசினதுல கொஞ்சம் உரிமை தெரிஞ்சுதே’ என்று அறிவு அவளை குழப்பியது… ‘அப்படி இருந்தா இந்நேரம் அவன் என்னை பார்க்க வந்திருக்கணுமே, ஏன் வராம இருக்கானாம்’ என்று யோசித்தாள்.
“அடியே… சஞ்சு எவ்வளவு நேரமா கூப்பிட்டு இருக்கேன்… அப்படி என்னடி யோசனை… மாய யோசனை… இடியே விழுந்தாலும் உன் காதுல கேட்காத அளவுக்கு யோசனை”
“ஹ்ம்ம் ஒண்ணுமில்லை அஞ்சு…” என்று அமைதியானாள்.
சஞ்சுவின் முகத்தை கவனித்தாலும் அதை விடுத்து அவளுக்கு புடவை கட்ட சொல்லிக் கொண்டே அதை கட்டியும் விட்டாள் அஞ்சு. “அஞ்சு… நீ சொன்ன மாதிரி நானே கட்டி பார்க்கறேன்டி…” என்றவள் அஞ்சு அழகாக கட்டிவிட்ட புடவையை களைந்தாள்.
“அடிப்பாவி உளைச்சுட்டியேடி… உன்னை… போடி…”
“இரு அஞ்சு…” என்றவள் அஞ்சு சொன்னது போலவே கட்டி பார்க்க அவளுக்கும் புடவை கட்ட வந்தது. அவளுக்கு கொசுவத்தை தான் ஒழுங்காக மடித்து வைக்க தெரியவில்லை. அஞ்சு அவளுக்கு உதவ ஒருவழியாக அவளே புடவையை கட்டி முடித்தாள்.
“ஹேய்… சூப்பர் அஞ்சு நானே புடவை கட்டிட்டேன்…” என்றாள் ஏதோ உலகமகா காரியம் சாதித்தவள் போல்.
“ஹேய்… கொஞ்சம் அடக்கி வாசிடி… இது மாப்பிள்ளை பார்க்கறதுக்காக கட்டி இருக்க… என்னமோ அழகி போட்டிக்கு கட்டிட்டு போய் ஜெயிச்ச மாதிரி கத்துற…” என்றதும் சஞ்சுவின் முகம் வாடியது.
“மாப்பிள்ளை பார்க்கவா… மறந்து போயிட்டேனே, அப்போ எனக்கு சேலை வேணாம்…” என்று களைய போனவளை பிடித்து நிறுத்தினாள். “மரியாதையா வா… அத்தைகிட்ட சொல்லிடுவேன்…” என்று அவளை இழுத்து போனாள்.
சுந்தரி சமையலறையில் இருக்க இருவரும் நேரே அங்கேயே சென்றனர். சஞ்சுவை கண்டு நெட்டி முறித்தவர் “அழகா இருக்கு சஞ்சும்மா உனக்கு புடவை…” என்றார்.
“அஞ்சும்மா அந்த பூவை எடுத்து ரெண்டு பேருமா வைச்சுக்கோங்க”
“முடி வைச்சு இருக்கா பாரு அரை சாண்ல, இது மட்டும் எதுக்கு வைச்சு இருக்க சஞ்சு… அதையும் வெட்டிட வேண்டியது தானே…”
“அதை தான் அம்மாகிட்ட சொன்னேன்… அவங்க தான் கல்யாணம் வரைக்குமாச்சும் இந்த முடி இருக்கட்டும்… அதுக்கு பிறகு நீ என்ன வேணா பண்ணிக்கோன்னு சொல்லிட்டாங்க… அதான் விட்டு வைச்சு இருக்கேன்…” என்றாள் கூலாக.
தலையில் அடித்துக் கொண்டார் சுந்தரி, அப்போது வாசலில் யாரோ கார்த்திக் என்று அழைக்கும் குரல் கேட்டது. “அத்தை உங்க புள்ளையை பார்க்க யாரோ வந்திருக்காங்க போல, போங்க போய் என்னனு பாருங்க…”
“ஆமா நீ இங்க என்ன பண்ணப் போற நீ போய் பாரேன்…”
“அய்யோ எனக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு…” என்றவள் அவர் செய்து வைத்திருந்த வடையை வாயில் திணித்தபடி சொன்னாள்.
“அத்தை நான் போய் பார்க்கறேன்…” என்ற அஞ்சுவை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு அவரே வாசலை நோக்கி சென்றார். ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தவர் காய்ச்சி வைத்திருந்த பாலில் காபியை கலந்து வைத்தார்.
“காபி எடுத்துட்டு போ…” என்று அவர் மொட்டையாக சொல்ல வேகமாக ஒரு கோப்பையை அவளுக்கு எடுத்துக் கொண்டாள். அவரோ மீண்டும் “என்னம்மா காபி எடுத்துட்டு போக சொன்னா இங்கயே நின்னுட்டு இருக்க…” என்று கூறினார்.
சஞ்சுவோ “ஹேய் அஞ்சு அத்தை சொல்றாங்கல, காபி எடுத்துட்டு போய் வந்திருக்கவங்களுக்கு கொடு. மாமா பிரின்ட் தான் யாரோ வந்திருக்காங்க போல… சீக்கிரமா காபி எடுத்துட்டு போய் அவங்களுக்கு கொடு...” என்றவள் அடுத்த வடை ஒன்றை எடுத்து வாய்க்குள் திணித்தாள்.
சுந்தரி அவளை திரும்பி முறைக்க வாய்க்குள் வடையை வைத்துக் கொண்டே என்ன என்பது போல் பார்த்தாள். “உன்னை போகச் சொன்னா நீ அவளை போக சொல்றா. போ… போய் மாப்பிள்ளைக்கு காபியை கொடு…” என்க அவளுக்குள் அடிவயிற்றில் புளியை கரைத்தது.
“என்னது மாப்பிள்ளையா…”
“ஆமா… இந்தா எடுத்துட்டு போ…” என்று அவள் கையில் காபியை திணித்தார்.
“அத்தை மாப்பிள்ளை மட்டும் தான் வந்திருக்காரா என்ன… அவங்க வீட்டில வேற யாரும் வரலையா… ஹேய் அஞ்சு நீயும் என்கூட வாயேன்…” என்றாள்.
“ஆமா மாப்பிள்ளை மட்டும் தான் வந்திருக்காரு… அவ இங்க தான் இருப்பா… நீ கொண்டு போய் கொடு… இரு… இரு கார்த்திக் குரல் கேட்குது” என்றவர் இன்னொரு காபி கலந்து அந்த கோப்பையும் கொடுத்தனுப்பினார்.
‘அப்பா தப்பிச்சேன்… நல்ல வேளை கார்த்திக் மாமா வந்திட்டார்…’ என்று நினைத்து சற்று நிம்மதியுடன் வெளியே வந்தாள்.
சோபாவில் கார்த்திக்கும் இன்னொருவரும் அவளுக்கு முதுகுக்காட்டிக் கொண்டு அமர்ந்திருந்தனர். ‘ஐயோ இந்த மாப்பிள்ளை என்கிட்ட தனியா எதுவும் பேசுவானோ… பேசினா இவன்கிட்டயே கல்யாணம் வேணாம்ன்னு சொல்லிட வேண்டியது தான்…’
அத்தியாயம் –10
‘என்ன இது இவரோட குரல் மாதிரி இருக்கு…’ என்று வேக நடை போட்டவள் அவசரமாக நடந்து வந்தாள். ‘இவன் தான் வந்தானா… யாரை கேட்டு வந்தான் என்னை பொண்ணு பார்க்க… இவனை யாராச்சும் கட்டிக்குவாங்களா’
‘இவனே சரியான கஞ்சி சட்டை… இப்போ கூட பாரு இந்த பக்கி என்னையை முறைக்கிறதை… சிடுமூஞ்சி சித்தப்பன்…ச்சே… சித்தப்பன் சொன்னா சரியா இருக்காதே… வேற பேரு வைக்கணுமே…’ என்று அவள் மூளை வேகமாக யோசித்துக் கொண்டிருந்தது.
அவனையே பார்த்துக் கொண்டிருந்ததில் அவள் வந்த வேலையை மறந்து நின்றிருந்தாள். “சஞ்சு களைச்சு போய் வந்திருக்கேன். காபியை கொடுக்கிறதா உனக்கு உத்தேசம் இருக்கா இல்லையா…” என்றான் கார்த்திக்.
“ஹ்ம்ம்… இதோ…” என்று அவனுக்கு நீட்டிவள் திரும்பி நிரஞ்சனிடமும் நீட்டினாள். அவனோ அதை எடுத்துக் கொள்ளாமல் அவளையே முறைத்துக் கொண்டிருந்தான்.
“சரி சஞ்சு நீ அவனுக்கு காபி கொடு… அம்மா வடை சுடுற வாசனை அடிக்குது நான் போய் என்னன்னு பார்க்கறேன்…” என்று சொல்லி விட்டு அவர்களுக்கு இடைவெளி கொடுத்து அவன் எழுந்து உள்ளே சென்றுவிட்டான்.
அவன் உள்ளே சென்றதும் வாயை திறந்தாள் சஞ்சு “என்ன முறைப்பு?? எதுக்கு வந்தீங்க?? அதான் என்னை விரட்டி விட்டீங்களே… இப்போ மட்டும் என்ன??” என்று கோபமே இல்லாமல் கோபமாக பேசியவளை கண்டு சிரித்துக் கொண்டான் நிரஞ்சன்.
“ஹ்ம்ம்… பொண்ணு பார்க்க வந்திருக்கேன்…”
“பொண்ணா… இங்க எந்த பொண்ணும் இல்லையே… இந்த வீட்டில இருக்க ஒரே பொண்ணு எங்க அத்தை தான் அவங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு பிள்ளையும் இருக்கே…. இதோ போறாரே எங்க மாமா கார்த்தி அவர் தான் அவங்க பிள்ளை”
“சரி ரொம்ப நேரமா அந்த ட்ரேவை கைல வைச்சுட்டு இருக்க கை வலிக்க போகுது, கொடு” என்று கேட்க ‘அடடா சாருக்கு நம்ம மேல என்ன இப்படி ஒரு கரிசனம்’ என்று நினைத்தவள் அவளே அதை டிபாயின் மேல் வைத்தாள்.
அவள் வைத்தது தான் தாமதம் அவள் கையை பிடித்து அவன் இழுக்க அவனருகில் பொத்தென்று விழுந்தாள். நங்கென்று அவள் தலையில் ஒரு குட்டு வைத்தான்.
ஆவென்று கத்தியவள் “எதுக்கு இப்போ கொட்டினீங்க?? வலிக்குது…”
“நல்லா வலிக்கட்டும்… நான் உன்னை தான் பார்க்க வர்றேன்னு தெரியாம தான் எனக்கு காபி கொண்டு வந்தியா??”
“உங்களை யாரு கட்டிக்கறேன்னு சொன்னது…”
“சரி அப்போ ஒண்ணு செய்… கல்யாணம் பிடிக்கலைன்னு நீயே உங்க வீட்டில சொல்லிடு”
“நான் ஏன் சொல்லணும் நீங்களே சொல்லுங்க…”
“நான் தான் உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்லி எங்க வீட்டில இருக்கவங்களை இன்னைக்கு உங்க வீட்டுக்கு போய் பொண்ணு கேட்க சொன்னேன். அதுனால நான் கல்யாணம் வேணாம்ன்னு சொன்னா எங்க வீட்டில என்னை வித்தியாசமா பார்ப்பாங்க…”
“அதுனாலே நீயே சொல்லு… அது தான் ஒருவகையில எனக்கு வசதி”
“வசதியா… என்ன வசதி…”
“நாம விரும்பற பொண்ணை விட நம்மை விரும்பற பொண்ணை கட்டிகிட்டா தான் நல்லா இருப்பாங்களாம்… சூப்பர் ஸ்டார் கூட ஒரு படத்தில சொல்லி இருக்கார்…”
“ஹ்ம்ம்… அப்படின்னா என்ன சொல்ல வர்றீங்க…”
“நீ தான் நான் வேணாம்ன்னு சொல்லுற, என்னோட கூட படிச்ச நிகிதா என்னை விரும்புறா… இப்போ நான் அவளையே கட்டிக்கலாம் நினைக்கிறேன்… அதுனால நீ என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிடு…”என்று கூலாக சொல்ல இப்போது குட்டுவது அவள் முறையானது.
“சொல்லுவீங்க… சொல்லுவீங்க… ஏன் சொல்ல மாட்டீங்க… நிகிதா கேட்குதா உங்களுக்கு… யார் அந்த பொண்ணு???”
“அதை நீயேன் கேட்குற, நீ தான் என்னை கட்டிக்க முடியாதுன்னு சொல்லிட்டியே…”
“சொல்லிட்டா… அப்படியே நீங்க நம்பிடுவீங்களா…”
“ஆமா… நீங்க எப்படி என்னை பொண்ணு பார்க்க, என்… என்கிட்டயே நீங்க எதுவும் சொல்லவே இல்லையே…” என்று திக்கினாள்.
“சொன்னா தான் உனக்கு புரியுமா…”
“சொல்லலைன்னா எப்படி புரியும்…” என்று தலையை குனிந்து கொண்டாள்.
“நீ சொல்லாம நான் புரிஞ்சது நான் சொல்லாம உனக்கு புரியலையா… இல்லை என் வாயால எல்லோரும் சொல்ற அந்த வழக்கமான டயலாக் சொல்லணும்ன்னு எதிர்பார்க்கறியா…இப்படி குனிஞ்சிகிட்டா எனக்கு எப்படி தெரியும்… என்னை பாரு… என்னை பார்த்து சொல்லு… உனக்கு எதுவும் புரியலைன்னு சொல்லு… நான் புரிய வைக்கிறேன்…”
“அத… அதெல்லாம் ஒண்ணும் வேணாம்…”
“அப்போ என்னை கொஞ்சம் பாரேன்… புதுசா இருக்கு நீ இப்படி இருக்கறது…நீ புடவை எல்லாம் கட்டி நான் பார்த்ததே இல்லையே… உன்னோட ஜீன்ஸ் வாஷ்க்கு போட்டிருக்கியா…” என்றவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்.
“இன்னைக்கு நானே கஷ்டப்பட்டு புடவை கட்டியிருக்கேன்… அதுவும் நான் கட்ட கத்துக்கிட்டு கட்டி இருக்கேன்… கிண்டல் பண்றீங்களா” என்றவள் சோபாவில் இருந்து எழுந்தாள்.
அவள் முன் கொசுவத்தை அவளே மிதித்துவிட அவள் எழும்போது சேலை கலைந்து விட அவளுக்கு வெட்கமாகி போனது. ‘இருந்திருந்து இவன்கிட்ட வீராப்பு பேசி இப்படியாகி போச்சே’ என்று நினைத்துக் கொண்டே அவள் புடவையை இழுத்து பிடித்தாள்.
“உனக்கு எதுக்கு இந்த வாய்… போய் ஒழுங்கா கட்டிட்டு வா…சரி நான் திரும்பி நின்னுக்கறேன்… நீ சரி பண்ணிக்கோ” என்றுவிட்டு அவன் சொன்னது போல் எழுந்து திரும்பி நின்றுக் கொண்டான்.
சேலையை சரி செய்து கொண்டவளுக்கு அங்கு அவன் முன் நிற்கவே கூச்சமாக இருந்தது. அதே நேரம் அவளை தப்பாய் ஒரு பார்வையும் பார்க்காத அவனை அவளுக்கு பிடித்தது. அவனுக்கு அந்நேரம் அர்ஜுனிடம் இருந்து போன் வந்தது. அதை எடுத்து பேசியவன் “சொல்லு அர்ஜுன்” என்றான்.
“ஹ்ம்ம்… எல்லாம் பார்த்திட்டேன்டா… என்கிட்ட ஒரு ப்ளான் இருக்கு… அதை நாம நேர்ல பார்க்கும் போது சொல்றேன்… ஹேய் அப்புறம் சொல்ல மறந்திட்டேன், நாளைக்கு நிகிதா வர்றா…”
“ஹ்ம்ம்… ஆமாம் அதுக்கு தான்… சரி என்ன பண்ணுறது பார்த்திட்டு திரும்ப பேசறேன்” என்றுவிட்டு போனை வைக்க அங்கு சஞ்சுவின் முகமோ மாறியிருந்தது நிகிதா என்ற பெயரை கேட்டு.
அதற்குள் உள்ளிருந்து கார்த்திக், சுந்தரி, அஞ்சுவும் வந்துவிட எல்லோரிடமும் பேசிவிட்டு வாங்கி வந்திருந்த இனிப்பையும் பூவையும் கொடுத்துவிட்டு அவன் விடைபெற சுந்தரின் பேச்சு அவனை தடுத்தது.“என்னப்பா நிரஞ்சன் பொண்ணு பார்த்திட்டு பேசாம போற, பூ வைக்க வேண்டாமா??”
“பூவா… யாருக்கு வைக்கணும்”என்று விழித்தான் அவன்.
“சஞ்சுவுக்கு தான், இதை நீயே அவளுக்கு வைச்சுட்டு போப்பா…”
“அம்மா அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்மா…”
“பொண்ணு பிடிச்சு போச்சு, அப்போ பூ வைச்சுட்டு போறது தானே முறை…”
“அப்போ நீங்களே உங்க மருமகளுக்கு வைச்சு விடுங்க… எங்கம்மா வந்திருந்தா அவங்க தானே செஞ்சு இருப்பாங்க… நீங்களும் என் அம்மா மாதிரி தான் வைங்க”
“அய்யோ… நான் எப்படிப்பா நல்ல காரியத்துக்கு போய் நா… நான் எப்படி பூ வைக்கிறது…” என்று தயங்கினார் சுந்தரி.
“உங்க மருமக நல்லா இருக்கணும்னு உங்களை தவிர வேற யாரும் விரும்ப மாட்டாங்க… நீங்க தான் வைக்கணும் வைங்கம்மா…” என்று அவன் வற்புறுத்த சஞ்சுவுக்கு அவனை குறித்து பெருமிதம் வந்திருந்தது.
எல்லோரிடமும் விடைபெற்றவன் முகம் சஞ்சுவின் வாடிய முகத்தை கண்டிருந்தது. அவள் மட்டும் தனியாக வாசலுக்கு வந்து அவனை வழியனுப்ப வர “என்ன சஞ்சு… ஏன் ஒரு மாதிரியா இருக்கே??”
“அப்போ அந்த நிகிதா, உண்மை தானா…”
“எந்த நிகிதா…” என்றவன் ‘அடடா இவ போன்ல பேசினதை புடிச்சுக்கிட்டா போல’என்று நினைத்தவன் அவளிடம் “சஞ்சு… அதுக்காகவா இப்படி இருக்க… நிகிதா உண்மை தான்… அவ என்னை விரும்பினதா சொன்னதும் உண்மை தான்…”
“ஆனா அப்போ எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லாம இருந்துச்சு அதனால நான் அப்போவே அவகிட்ட மறுத்திட்டேன்… உண்மையை சொல்லணும்னா நீ அப்போவே என் மனசுக்குள்ள வந்திருக்கணும்… அதான் நான் அவகிட்ட மறுத்திருக்கேன்” என்றதும் அவள் முகம் பூவாய் மலர்ந்தது.
“அப்பாடா ஒரு பொய் சொன்னா தான் நீ சந்தோசப்படுவேன்னா தினமும் ஒரு பொய் சொல்றேன்” என்றவனை முறைத்தாள் அவள்.
“சரி சஞ்சு கிளம்பறேன்… நீ ரெஸ்ட் எடு…” என்றவனிடம் வேறு எதையோ எதிர்பார்த்து காத்திருந்தாள் அவள்.
“அப்புறம்… நான் ஒண்ணு சொல்லணும்ன்னு நீ நினைக்கிற…”
“என்ன??? அப்படி எல்லாம் எதுவும் இல்லையே??” என்று சமாளித்தாள்.
“உனக்கு புடவை ரொம்ப அழகா இருக்கு… தினமும் கட்டுவியா??” என்று கண்களில் ஒருவித எதிர்பார்ப்பு தெரிய ஆர்வமாக கேட்டுவிட்டு அவளை மீண்டும் ஒரு முறை கண்களால் விழுங்கிக் கொண்டு அவன் செல்ல அவள் முகம் வெட்கத்தை சுமந்தது.
____________________
நிரஞ்சன் இடையில் ஒரு முறை அர்ஜுனை நேரில் சந்தித்து பேச அவர்கள் இருவருமாக சேர்ந்து கலந்துரையாடி ஒரு திட்டத்தை உருவாக்கினர். மீண்டும் அதை பற்றி தங்களுக்கு பேசி பகிர்ந்து கொண்டு கிளம்பினர்.
கிளம்பும் முன் நிரஞ்சன் அர்ஜுனிடம் “டேய் இன்னும் பத்து நாள்ல எனக்கு நிச்சயதார்த்தம் சென்னையில… ஒழுங்கு மரியாதையா வந்து சேருடா… நீ பாட்டுக்கு இங்கயே இருந்திடாதே…”
“ஏன்டா இந்த விஷயத்தை வந்ததும் சொல்லாம இவ்வளவு நேரம் தேவையில்லாதது எல்லாம் பேசிட்டு முக்கியமான விஷயத்தை இவ்வளவு தாமதமா தான் சொல்லுவியா…” என்று அர்ஜுன் அவனை கலாய்த்தான்.
சஞ்சு இரண்டு நாட்களாக மீண்டும் வேலைக்கு போக தொடங்கினாள். கடைசியாக அன்று அந்த தோப்பு வீட்டிற்கு சென்றது தான் அதன் பின் நடந்தது எல்லாம் கனவு போல இருந்தது அவளுக்கு.‘ஒரு வேளை அன்று நடந்தது எல்லாம் நிரு சொன்னது போல் என்னுடைய கற்பனையாக இருக்குமோ…”
‘அன்னைக்கு நைட் போனதுனால தான் அப்படி எல்லாம் தோணிச்சு… பகல்ல போய் பார்ப்போமா…’ என்று அவள் சிந்தனை அன்று நடந்ததை கற்பனை என்று தப்பாக யோசித்து அவளை மீண்டும் அந்த தோப்பு வீட்டின் புறம் அழைத்து சென்றது.
அலுவலகத்தில் வேலை இருப்பதாக கூறிவிட்டு அவள் கேனானையும் எடுத்து மாட்டிக்கொண்டு வழியில் தென்பட்ட ஒரு ஆட்டோவை பிடித்தாள். அவள் உடல் நலம் சரியில்லாமல் போனதில் இருந்து அவளை ஸ்கூட்டியை எடுக்க அவள் வீட்டினர் விடுவதேயில்லை.அதனாலேயே அவள் ஆட்டோ பிடிக்க வேண்டியதாய் இருந்தது.
ஆட்டோக்காரர் அவளை மெயின் ரோட்டில் மட்டுமே இறக்கிவிட முடியும் என்று கூறிவிட அவளும் மண்டையை உருட்டி “தேங்க்ஸ் அண்ணா… ஆனா அண்ணா ஒரு ஹெல்ப் என்னோட வேலை முடிஞ்சதும் நான் போன் பண்ணா திரும்ப மெயின் ரோடு வந்து என்னை அழைச்சுட்டு போக முடியுமா” என்றாள்.
அவரும் வருவதாக கூறி அவருடைய கைபேசி எண்ணை அவளிடம் பகிர்ந்து கொண்டு அந்த இடத்தை காலி செய்தார். சுற்று முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவள் அவள் பார்வையை வலப்புறம் திருப்ப அதிர்ச்சியானாள் அவள்.
‘ஐயோ இவன் எங்க இங்க வந்தான்… மாட்டிட்டோமா…” என்று நினைத்து அவள் தலையில் அவளே குட்டிக் கொண்டாள். அங்கு நிரஞ்சன் கூலரை மாட்டிக் கொண்டு அவன் பைக்கின் சாய்ந்தவாறே நின்றிருந்தான்.
“என்ன இந்தப்பக்கம்???”
“இல்லை சும்மா தான்…” என்று வாயில் வந்ததை சொல்ல ‘அய்யோ லூசு மாதிரி சொல்லி வைச்சுருக்கியே சஞ்சு… இவன் போலீஸ் ஆச்சே நான் பொய் சொல்றேன் நல்லா தெரிஞ்சு இருக்கும்’
‘ஐயோ முறைக்கிறானே… முறைக்கிறானே…’ என்று அவனை பார்த்து அலங்க மலங்க விழித்து வைத்தாள்.
“உண்மையை சொல்லு… நீ என்ன இந்த பக்கம்…”
“நான் இந்த பக்கம் வந்தது இருக்கட்டும் நீங்க என்ன இந்த பக்கம்??” என்று பதில் கேள்வி கேட்டாள்.
“நான் எங்க வீட்டை பார்க்க வந்தேன்…”
“நான்… நான் உங்களை பார்க்க வந்தேன்…” என்றாள்.
அவளருகே நின்றிருந்தவளின் கையை பிடித்தான், “பொய் சொல்லாம உண்மையை சொல்லு சஞ்சு…”
“இல்லை… அது வந்து… அன்னைக்கு நீங்க சொன்னீங்களே நான் பார்த்தது எல்லாம் கற்பனையா இருக்குமோன்னு… அன்னைக்கு நைட் வந்ததுனால தான் அப்படி தோணியிருக்குமோன்னு பகல்ல வந்து பார்க்கலாமேன்னு வந்தேன்…”
“ஆனா… நீ… நீங்க எப்படி வந்தீங்க??”
“கார்த்திக்கிட்ட ஒரு விஷயம் பேச கால் பண்ணேன். நீ இன்னைல இருந்து வேலைக்கு போக போறன்னு சொன்னான். அப்புறம் உங்க ஆபீஸ்க்கு கால் பண்ணா நீ ஏதோ முக்கிய வேலையா கிளம்பிட்டன்னு சொன்னாங்க…”
“உன் முக்கிய வேலை என்னன்னு எனக்கு தெரியாதா??? அதான் இங்க வந்தேன்…”
“ஏன் இப்படி சுத்தி வளைச்சு எல்லார்கிட்டையும் பேசினீங்க… எனக்கு போன் பண்ணி கேட்டிருந்தா நானே சொல்லி இருப்பேனே??”
“எப்படி… இப்போ சும்மா தான் வந்தேன்னு என்கிட்ட சொன்னியே அது மாதிரியா… உனக்கு போன் பண்ணேன், நாட் ரீச்சபில்ன்னு வந்துச்சு… நீ உடம்பு சரியானதும் இதை தான் செய்வேன்னு எதிர்பார்த்தேன், அதான் உங்க ஆபீஸ்க்கு போன் பண்ணேன்…”
“ஓ.. ஆனா எப்படி நான் இங்க தான் வருவேன்னு நினைச்சீங்க??”
“நீ தான் ஜான்சிராணியாச்சே உன் சாகசத்தை காட்ட வருவேன்னு நினைச்சேன்… அர்த்த ராத்திரில எவ்வளோ தில்லோட தனியா இந்த இடத்துக்கு வந்த ஆளு தானே நீ…”
‘இவன் வேற பேசிட்டே இருக்கானே… இப்போ நாம அங்க போகறதா வேணாமா…’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள் அவள்.
“என்ன??? இவன் வேற இங்க இருக்கான் போலாமா வேணாமான்னு யோசிக்கிறியா??”
“ஹ்ம்ம் ஆமாம்…” என்று தலையாட்டினாள்.
“உன்னோட அந்த பயம் அர்த்தமில்லாததுன்னு உனக்கு நிருபிக்க நானே உன்னை கூட்டிட்டு போறேன்… வா…” என்றான். அவனுக்கு அவள் பயத்தை போக்கி விட வேண்டும் என்று தோன்றவே அது போல் செய்ய எண்ணினான்.
“நாம இப்படியே பேசிட்டே நடந்து போகலாம்” என்று அவன் சொல்ல அவளும் தலையசைத்து சரியென்றாள். அவர்கள் நடையை தொடர அங்கே அமைதி மட்டுமே நிலவியது.
“போன முறை நாம இப்படி இருக்கலையே…” என்று மௌனத்தை கலைக்க முயற்சித்தான் நிரஞ்சன். “எப்படி இருக்கலை…”
“நீ ஒரு பக்கம் நான் ஒரு பக்கம்ன்னு நாம இருக்கலை… அன்னைக்கு நீ பக்கம் தான் இருந்தே… ஒரு வேளை பேய் வந்தா தான் நீ பக்கம் வருவியா??” என்றவன் உடன் நடந்தவளின் வலக்கையை இழுத்து அவன் கைகளுக்குள் பிணைத்துக் கொண்டான்.
“ஒரு போலீஸ் செய்யற வேலையா இது… நான் உங்களை என்னமோன்னு நினைச்சேன்… உங்களை எவரெஸ்ட் உயரத்துல வைச்சிருந்தேன்… நீங்க என்ன இப்படி பொசுக்குன்னு இறங்கிட்டீங்க…”
“உண்மையை சொல்லு… நானா இறங்கிட்டேன், நானாவா உன்கிட்ட வந்தேன்…” என்று அவளை பார்க்க அவள் வாயடைத்து நின்றாள்.
“ஆமா எல்லாம் நான் தான் செஞ்சேன்… உங்களுக்கு எதுமே தெரியாது…” என்றவள் அவன் எதிர்பாராமல் ஒன்றை செய்துவிட இப்போது அமைதியானது நிரஞ்சனுமே.
சில நொடி அமைதிக்கு பின் அவன் அவளை நோக்க அவளுக்கே அவள் செய்தது அதிகப்படியாக தோன்ற தலைகுனிந்து நின்றாள். “சஞ்சு…” என்று அழைத்தவன் அவள் முகத்தை நிமிர்த்த விழி நிறைந்து வெளியே வந்துவிடுவேன் என்று கண்ணீரை தேக்கி நின்றது.
“ஹேய்… எதுக்கு இப்போ கலங்கி போய் நிக்குற?? நான் எதுவும் தப்பா எடுத்துக்குவேன்னு நினைச்சுட்டியா?? இங்க பாரு நீ இப்படி இருக்கறது தான் எனக்கு பிடிச்சிருக்கு… திரும்பவும் கிடைக்குமா… திடிர்னு கொடுத்திட்டியா நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்… ப்ளீஸ்… ப்ளீஸ் இன்னொரு முறை…” என்று அவன் அவள் இதழை நோக்க அவளுக்கு மானமே போனது.
அவனின் கிண்டலில் சற்றே தெம்பு வந்தவள் “போதும் வாங்க போவோம்… இப்படி டியூட்டில இருக்கும் போதே இப்படி லூட்டி அடிக்கிறீங்க…” என்று பதிலுக்கு கொடுத்தாள்.
“நான் டியூட்டில இருக்கும் போது லூட்டி அடிச்சது நீ தான்…”
“ஹேய் சும்மா சொன்னேன்… நான் இப்போ டியூட்டில வரலை, பாரு என்னோட நேம் ஐடி, ஸ்டார் எல்லாம் கூட எடுத்திட்டேன்… இது வெறும் காக்கி டிரஸ் தான் இப்போ…” என்று சொல்லி கண்ணடித்தான்.
விட்டால் அவன் பேசிக்கொண்டே இருப்பான் என்று எண்ணியவள் அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள். “ஒழுங்கா நல்ல பையனா வேலை பார்த்திட்டு இருந்தேன். இந்த பத்து நாளா உன்னால நான் இப்படி இருக்கேன்…” என்றவனை முறைத்தாள்.
“சரி… சரி முறைக்காதே வா…” என்று வீட்டு கதவை திறந்தான் அவன்.
ஏனோ அவளுக்கு அன்றைய நினைவில் இதயம் படபடவென்று அடிக்க ஆரம்பித்தது. வீட்டின் அசாத்திய அமைதி வேறு மனதிற்கு கலக்கத்தை கொடுத்தது.
நிரஞ்சனை நெருங்கி வந்தவள் இருகைகளாலும் அவன் கையை பிடித்துக் கொண்டு வந்தாள். “என்னாச்சு சஞ்சு… எதுக்கு பயம் நான் தான் கூடவே இருக்கேன்ல… உன் ஹார்ட் பீட் ஏன் இவ்வளவு வேகமா துடிக்குது… ரிலாக்ஸ்டா இரு சஞ்சு”
அவன் சொன்னதை கேட்டதும் அவனிடமிருந்து விலகி நின்றாள். ‘அய்யோ… நாம பேசாமலே இருந்திருக்கலாமோ’ என்று நினைத்தவன் “சஞ்சு எதுக்கு தள்ளிப் போறே… உன் நடுக்கம் எனக்கு தெரிஞ்சுது அதான் அப்படி சொன்னேன்… இங்க வா” என்று அவள் கையை பிடிக்க போனான்.
“ஒண்ணும் வேணாம்… எனக்கு பயம் எல்லாம் இல்லை… நான் தனியாவே போய்க்குவேன்…” என்று வீம்பாக உரைத்துவிட்டு உள்ளே சென்றாள். அவனும் அவள் பின்னே தொடர… “ நான் தான் சொன்னேன்ல, நீங்க தனியா போங்க…” என்றாள்.
“நிஜமாவே நான் தனியா போய்டுவேன் சஞ்சு, பரவாயில்லையா உனக்கு…”
“பரவாயில்லை நான் ரொம்ப தைரியசாலி நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கறேன்”
“சஞ்சு அன்னைக்கு இங்க ஏதோ பேக் இருக்குன்னு சொன்னல அது இருக்கான்னு பாரு… அன்னைக்கு நான் அதை பார்க்க மறந்திட்டேன்…”
“ஹ்ம்ம்… ஆமாங்க நான் அதை தேடி தான் வந்தேன்…” என்று அவள் வந்த காரணத்தை உடைத்தாள். அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் அடுத்த அறைக்குள் நுழைந்தான்.
அவன் அந்த அறைக்குள் நுழையவும் வெளியே திபுதிபுவென்று ஆட்கள் ஓடும் சத்தம் கேட்க அவன் வாசலுக்கு விரைந்தான்.
சஞ்சு மிகத்தைரியமாக காட்டிக் கொண்டு உள்ளுர பயத்துடனே அந்த அறையை நோட்டமிட்டாள். அந்த அறையின் சன்னல் வழியே தான் அவள் சென்ற முறை அருணை கண்டது.
‘சஞ்சு உனக்கு பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்கு’ என்று வடிவேல் பாணியில் அவளை அவளே கலாய்த்துக் கொண்டு முன்னேறினாள். அந்த சன்னல் அருகில் வந்து நின்றவளின் நினைவில் அந்நாள் ஞாபகத்திற்கு வர தலையை உலுக்கி நிகழ்காலத்திற்கு வந்தாள்.
அவ்வப்போது அவள் முன்னும் பின்னும் தன்னையறியாமலே பார்த்துக் கொண்டாள். நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. பின்னால் யாரோ நடமாடுவது போல் இருக்க சட்டென்று திரும்பி பார்த்தால் யாருமேயில்லை.
அங்கு சுவரில் பதிக்கப்பட்டிருந்த அலமாரியின் கதவை ஒவ்வொன்றாக திறந்து பார்த்தாள். பயம் கொஞ்சம் அவளை விட்டு நீங்கியது போலிருந்தது.
அடுத்த அலமாரியின் கதவை அவள் திறக்கவும் “இந்த பையை தானே தேடுற இந்தா…” என்று அருண் அரூபமாய் மொழிய சஞ்சனாவுக்கு சட்டென்று திகில் பற்றியது.
அடிவயிற்றில் இருந்து உருண்டு வந்த பயம் தொண்டை குழியில் சிக்கிக்கொண்டு வார்த்தைகள் வராமல் சத்தமில்லாமல் நிரு… நிரு… என்றழைத்தாள்.
பயத்தில் படாரென்று கதவை மூடப் போக “என்னை பார்த்து ஏன் பயப்படுற… உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்…” என்று அருண் மேலும் பேச முயற்சி செய்ய அவளருகில் தெரிந்த கரிய நிழலுருவில் பயந்து இரண்டடி பின்னே சென்றாள்.
அலமாரியும் கதவை ஓங்கி அறைந்து மூடிக் கொண்டது. அவள் மேனி முழுதும் நடுங்க ஆரம்பிக்க வேகமாக வெளியேற முனைந்தாள்.
“நிரு… நிரஞ்சன் எங்க இருக்கீங்க…” என்று சிரமத்துடன் குரல் கொடுத்துக் கொண்டே அந்த அறையை விட்டு அவள் வெளியேற போக அந்த அறைக்கதவு படிரென அறைந்து மூடிக் கொண்டது.
நிரஞ்சனுக்கு அவள் குரல் எட்டினால் தானே, அவன் தான் வெளியில் ஏதோ சத்தம் என்று சென்றுவிட்டானே, அவள் குரல் அவனை எட்டினால் தானே… பயத்தில் அவள் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள கதவை திறக்க முயன்றாள்.
ஆனால் திறக்க முடிந்தால் தானே அழுதுக்கொண்டே “நிரு… நிரு…” என்ற அவள் அரற்ற “சஞ்சனா…” என்ற குரல் அவள் காதில் விழ திரும்பி பார்த்தவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. அந்த நிழலுருவம் அவளருகே நின்றிருந்தது.
‘அப்போ அன்னைக்கு பார்த்த எதுவும் பொய்யில்லையா… எல்லாமே நிஜமா… அப்போ நிரு… நிருக்கு எதுவும் ஆகிடுமா???’ என்று சிந்தை எதையோ யோசிக்க அந்த குரல் மீண்டும் அழைத்தது.
“யார் அது??? என்ன வேணும் உனக்கு??? எதுக்கு என்னை பயமுறுத்துற???” என்றாள் தைரியம் போல் காட்டிக் கொண்டு. பயத்தில் அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது.
“அன்னைக்கே சொன்னேனே அவனோட இருக்காதே… அவன் சாகப் போறான்னு… இன்னமும் நீ ஏன் அவனோட இருக்கே… அவனை விட்டு போய்டு..அவனுக்கு ஆயுசு குறைவு… அவன் சீக்கிரமே சாகப் போறான்… அவனை விட்டு விலகிப்போ…”
“நீ யாரு அதை சொல்றதுக்கு… என்னோட நிருவை என்கிட்ட இருந்து யாராலும் பிரிக்க முடியாது… முடியாது… முடியவே முடியாது…”
“முடியும் என்னால முடியும்… தானா வந்து உன் உயிரை போக்கிக்காதே… கடைசியா சொல்றேன்…” என்று அவ்வுருவம் சொல்ல… “இல்லை முடியாது… உன்னால முடியாது… முடியாது…” என்று சொன்னதை திரும்ப திரும்ப அவள் சொல்லிக் கொண்டிருக்க நிரஞ்சன் உள்ளே நுழைந்தான்.
“சஞ்சு என்ன முடியாது… யார்க்கிட்ட பேசிட்டு இருக்க…”
“நிரு… நான் அன்னைக்கு பார்த்தது எதும் பொய்யில்லை… அவங்… அவங்களை மறுபடியும் பார்த்தேன்…” என்றவள் வேகமாக வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.
“சஞ்சு… சஞ்சு… என்னம்மா…” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்க அவள் மயக்கத்திற்கு சென்றிருந்தாள்.
‘கடவுளே இவளை இங்க கூட்டிட்டு வந்திருக்க கூடாது போலிருக்கே… நான் இப்போ என்ன செய்வேன்… கார்த்திக் கேட்டா என்ன பதில் சொல்வேன்’
அவளை அங்கிருந்த கட்டிலில் படுக்க வைத்தவன் கார்த்திக்கிற்கு போன் செய்து விஷயத்தை சொன்னான்.
‘தப்பு எல்லாம் என் பேர்ல தான்… இவ கேட்டான்னு நானும் கூட்டிட்டு வந்திட்டேனே… நான் வரலைன்னாலும் இவ தனியா வந்திருப்பா… அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை…”
‘ஆனா இவ சொல்ற மாதிரி இங்க யாருமே இல்லையே… இவளுக்கு தெரியறது எதுவும் எனக்கு ஏன் தெரியலை… இந்த வீட்டை பத்தி இவ கேள்விப்பட்டதை வைச்சு இவளுக்கு இப்படி தோணுதா’
‘நான் இவ கூட இல்லாத சமயத்துலயே இப்படி நடக்குதே… இங்க என்னமோ நடக்குது… வெளிய ஏதோ ஆளுங்க ஓடுற சத்தம் கேட்டிச்சி… ஆனா போய் பார்த்தா யாருமில்லையே…நாம மட்டும் தனியா ஒரு முறை இங்க வரணும்’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டான்.
‘சஞ்சு லேசாக கண் விழித்தவள் சுற்று முற்றும் பார்த்துவிட்டு விழிக்க கொஞ்சம் கொஞ்சமாக நடந்தது எல்லாம் நினைவுக்கு வர நிரஞ்சனின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.
“சஞ்சு… நீ இங்க வந்த விஷயம் கார்த்திக்கிட்ட சொல்லிட்டேன்…” என்றதும் அவனை பார்த்து புருவத்தை சுருக்கினாள்.“அப்போ அத்தைக்கிட்ட சொல்லலையா… அவங்களை மட்டும் ஏன் விட்டு வைச்சீங்க… போன முறை இங்க வந்தப்பவே அத்தை என்னை ரொம்ப சத்தம் போட்டாங்க…”
“எதுக்கு அவசரப்படுற சஞ்சு… அம்மாகிட்ட சொல்ல வேணாம்ன்னு தான் கார்த்திக்கும் சொன்னான்… நானும் அதே தான் நினைச்சேன்… நீ இனிமே இங்க வர்ற ஐடியாவை விட்டுடு… எனக்கு தெரியாம வரணும்னு நினைக்காதே…”
“இல்லை நிரு வரமாட்டேன்… ஆனா அவங்க சொன்னது… பயம்மா இருக்கு நிரு… உங்கண்ணா என்கிட்ட ஏதோ பேச வந்தார்… ஆனா அந்த இன்னொரு உருவம் அவரை என்கிட்ட பேசவிடலை” என்று முடிக்காமல் அழுதாள்.
“உங்களுக்கு ஒண்ணும் ஆகிடக் கூடாது நிரு… ப்ளீஸ் நிரு… என்னை விட்டு போகாதீங்க… என் கூடவே இருங்க…” என்று வேகமாய் எழுந்தவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
“யார் சொன்னது சஞ்சு அப்படி… ஓ எனக்கு எதுவும் ஆகிடும்ன்னு சொன்னதா… அவங்க அப்படி சொன்னா அது நடந்திடுமா… இங்க பாரு நான் எப்போ சாகணும்ன்னு இருக்கோ, அப்போ தான் சாவேன்… இதுக்காக எல்லாம் பயந்துட்டே இருக்க முடியாது சஞ்சு… போகலாம் வா…”