அத்தியாயம் 2 :
இறுக்கமான முகத்துடன் ரிஷி முன்னால் சென்று கொண்டிருக்க.… அவனை எதிர்நோக்கும் திறன் அற்றவளாய் அவனை பின் தொடர்ந்து சென்றாள் அபிராமி.
“யாரென்று தெரியாத ஒரு இளம் பெண்….அதிலும் ஒரு அழகான பெண்.…முன்னப் பின்ன பார்த்திடாத என்னை ஏன் அணைக்க வேண்டும்.….? “
“கொஞ்சமும் பயமில்லாமல் என்னுடன் ஏன் வர வேண்டும்...?இவள் இங்கு எப்படி வந்தாள்…?” போன்ற கேள்விகள் ரிஷியின் மனதை குடைந்து கொண்டிருக்க.…போலீஸ் மூளை அவனை விடாமல் யோசிக்க செய்தது.
ஆனால் அவளோ எந்த வித உணர்வுகளையும் காட்டாமல் அமைதியாய் வந்து கொண்டிருந்தாள்.
“ஆமா உனக்கு சொந்த ஊர் எது...?” என்றான் ரிஷி திடுமென்று.
அவனின் திடீர் கேள்வியில் அபிராமி நிலை குலைய.….மீண்டும் கண்கள் குளம் கட்ட தொடங்கியது.
அவளைப் பார்த்த ரிஷி.…”ஏய்…! என்ன நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல.….? எது கேட்டாலும் பதில் வருதோ இல்லையோ …கண்ணீர் வேகமா வருது.…” என்று எரிச்சலுடன் சொன்னவன்.…காட்டை கடந்து விட்டான்.
அந்த காட்டை விட்டு வெளியே வந்த அபிராமி.…சுற்றுப் புறத்தை ஒரு முறை சுற்றிப் பார்க்க.…அது எந்த இடம் என்று தெரியவில்லை.
“என்ன பார்க்குற.….இது ஊட்டிமா ஊட்டி.அதுவாவது தெரியுமா தெரியாதா...?” என்று இடக்காய் கேட்டான் ரிஷி.
“ஊட்டியா.…?” என்று அவளது உதடு அசைந்ததே தவிர வார்த்தை சத்தமாய் வெளிவரவில்லை.
அதைப் பார்த்த ரிஷி நொந்து கொண்டான்.“சுத்தம்.….இது ஊட்டின்னே இப்பதான் தெரியுமா.…? தெரியாத ஒரு இடத்துக்கு.…அதுவும் அவ்வளவு பெரிய காட்டுக்கு எப்படி வந்த...?” என்றான் சந்தேகமாய்.
அவனின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அபிராமி.
அவளின் விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்று அவனை அதற்கு மேல் எதுவும் கேட்க விடாமல் செய்தது.
“எங்க கெஸ்ட் ஹவுஸ் இங்க பக்கத்துல தான் இருக்கு.இந்த இருட்டு வேளையில் உன்னை வேற எங்கயும் அனுப்பவும் முடியாது. இன்னைக்கு ஒரு நாள் அங்க தங்கிட்டு….நீ எந்த ஊர்ன்னு சொன்னா.…நாளைக்கு அங்க அனுப்பி வைக்கிறேன்….இப்ப என் கூட வா.…” என்றான் தன்மையாய்.
அபிராமிக்கும் இதுவே சரி என்று தோன்ற…..தலையை மட்டும் ஆட்டியவளாய் ரிஷியுடன் சென்றாள்.
இன்னைக்கு பிரச்சனை இல்லை. விடிந்து நீ எந்த ஊர் என்று கேட்டால் என்ன செய்வது.…?” என்ற கவலை அபிராமியின் மனதை அறுக்கத் தொடங்கியது.
“நடந்த எதற்கும் நான் எப்படி பொறுப்பாக முடியும்.…? இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று என் தலையில் எழுதியிருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்.…” என்று மனதிற்குள் அவள் எண்ணிக் கொண்டிருக்க.…
“என்னால் முடியும்.…!” என்ற ரிஷியின் வார்த்தைகளில் விதிர்த்து நிமிர்ந்தாள் அபிராமி.
“கண்டிப்பா சார் என்னால் முடியும்.….இதை வெற்றிகரமா முடிக்க வேண்டியது என் பொறுப்பு.…” என்று யாருடனோ செல்லில் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தான் ரிஷி.
ஆனால் அது எல்லாம் அபிராமிக்கு தெரியவில்லை.“என்னால் முடியும்..!” என்ற வாரத்தைகள் அவளுக்காக அவன் சொன்னதாகவே நினைத்துக் கொண்டாள்.
வீட்டிற்குள் ரிஷி நுழைந்ததும், அவன் பின்னால் வந்த அபிராமியைக் கண்டு திகைத்தாள் தைலா.
“யார் இது.…? நல்லா மூக்கும் முழியுமா.…அம்சமா இருக்கா.…? ரிஷி கூட வேற வந்திருக்கா.…ம்ம்ம்...” என்று தைலா மைன்ட் வாய்சில் பேசிக் கொண்டிருக்க.….
ரிஷி பொறுமையின்றி கத்திக் கொண்டிருந்தான்.…”தைலா.….ஏய் எருமை.…நினைப்பு எல்லாம் எங்க இருக்கு...?” என்ற அவனின் கத்தலில் நினைவுக்கு வந்தாள்.
“இப்ப எதுக்குடா இந்த கத்து கத்துற ….பக்கத்துல தான இருக்கேன்...சரி அதை விடு.…யார் இது...? நான் இதுவரைக்கும் பார்த்ததில்லையே.…?” என்றாள் கண்களில் நக்கலுடன்.
ரிஷி….”நான் மட்டும் ஆற அமர பேசி பழகியிருக்கேனாக்கும்.…. ” என்று நக்கலடித்தவன் நடந்ததை சொல்ல.…தைலா வாயை பிழந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
இவர்களின் உரையாடலை ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அபிராமி.
அவளின் கண்களுக்கு அந்த இடத்தில் ரிஷி மட்டுமே தெரிந்தான்.ஏனோ அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தைலாவிடம் பேசிக் கொண்டிருந்தவனுக்கு ஏதோ உறுத்த, சட்டென்று திரும்பி அபிராமியைப் பார்த்தான்.
சட்டென்று அவனின் திரும்பலில் தனது பார்வையை உடனடியாக மாற்றிக் கொண்டாள் அபிராமி.
“என்ன...?” என்று தனது ஒற்றைப் புருவத்தை உயர்த்த.… “ஒன்றுமில்லை.…” என்பதைப் போல் அவளின் தலை தானாய் ஆடியது.
அவளின் தலையாட்டலில் சமாதானம் ஆகாதவன் போல் அவளையே பார்க்க.…அவனின் பார்வையை எதிர்நோக்கும் சக்தியின்றி கண்களை தாழ்த்திக் கொண்டாள் அபிராமி.
இவையனைத்தும் தைலாவின் கண்களுக்கு தப்பாமல் விருந்தளித்தது.
“காட்டுக்குள்ள பார்த்தேன்னு சொல்றான்.…ஆனா அவ என்னடான்னா இவனை முழுங்குற பார்வை பார்க்குறா.…? இவனும் கண்டுக்காம இருக்கான்.…! சம்திங் ராங்….” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
“தைலா, இந்த பொண்ணு இன்னைக்கு நைட் இங்க தங்கிக்கட்டும்.… விடிந்ததும் என்ன செய்றதுன்னு யோசிக்கலாம்.…”
“அது வரைக்கும் வாயைத் திறந்து ஏதாவது சொல்றாளான்னு பாரு.இல்லைன்னா.… காலையில் மறுபடியும் காட்டுக்கே அனுப்பிடலாம்...” என்று அசால்ட்டாய் சொல்லி விட்டு...,தோள்களை குலுக்கியவாறு சென்று விட்டான்.
ரிஷியின் வார்த்தைகள் அபிராமியின் மனத்தைக் கலக்கியது.…”இப்ப நான் என்ன செய்வது.…மறுபடியும் அவங்க கையில் சிக்கிட்டா அப்பறம் என்னோட நிலை…” என்று நினைத்தவளின் உடல் பதற...
“ஏய் என்னாச்சு.…?” என்றால் தைலா.
“ஆங்.. ஒன்றுமில்லை.…” என்றாள் அபிராமி அமைதியாக.
“ஐயோ அபிராமி.….இப்ப எதுக்கு நீங்க இவ்ளோ பயப்படுறிங்க…? நான் என்ன அவ்வளவு அகோரமாவா இருக்கேன்.….” என்றாள் தைலா.
“அச்சோ அப்படி எல்லாம் இல்லைங்க.… ” என்றவள் ரிஷி போன பாதையைப் பார்க்க...தைலாவிற்கு புரிந்து போனது.
“ஹோ…நீங்க அவன் பேசிட்டு போனதை நினைச்சு பீல் பண்றிங்களா…? அவன் எப்பவுமே அப்படித்தான்.கொஞ்சம் சிடு சிடுன்னு தான் பேசுவான்.….ஆனா அநியாயத்துக்கு நல்லவன்.…” என்று கண்களை உருட்டி சொல்ல.…அபிராமியின் இதழ்களில் லேசாய் புன்னைகை எட்டிப் பார்த்தது.
தைலா...”அப்பாடா.…ஒரு வழியா சிரிச்சாச்சா….! சரி நீங்க குளிச்சுட்டு வாங்க.…ஹீட்டர் போட்டு வச்சிருக்கேன்.…இது என்னோட டிரஸ் தான்.…பட் உங்களுக்கு கொஞ்சம் பெரிசா தான் இருக்கும்.… இப்போதைக்கு சமாளிச்சுக்கங்க.…” என்றபடி அறையை சாத்தி விட்டு சென்றாள்.
தைலா கொடுத்த ஆடையை கையில் வாங்கியவள்…..சிலையென சமைந்து நின்றிருந்தாள்.ஏனோ அவளுக்கு ரிஷியின் நினைவாகவே இருந்தது.
ரிஷியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தவளின் மனதில் சில அதிரடி நிகழ்வுகள் தோன்ற.…அந்த கணம் அவனைப் பற்றிய நினைவுககளை தூக்கி எறிந்தாள்.
“வேண்டாம் என்னால் யாருக்கும் மகிழ்ச்சியைத் தர முடியாது.இனி ரிஷியைப் பற்றி நினைக்கவே கூடாது.…” என்று மனதிற்குள் நினைத்தவள் ஒரு முடிவுடன் குளியலறையை நோக்கி சென்றாள்.
அங்கு ரிஷியும் அவனது அறையில் அபிராமியைப் பற்றிய நினைவுகளுடன் நடந்து கொண்டிருந்தான்.அந்த காட்டில் அவளை யார் என்று கேட்ட போது….அவனை நிமிர்ந்து பார்த்த விழிகளை அவனால் மறக்க முடியவில்லை.
“என்ன இது.…அவள் யார் என்று தெரியாது.…? எந்த ஊர் என்று தெரியாது.…? அப்படி இருந்தும் அவளின் பார்வை.…என்னிடம் ஏதோ சொல்வது போல் உள்ளதே….? அந்த பார்வை ஏன் இப்படி அடிக்கடி நினைவுக்கு வந்து என்னை இம்சிக்க வேண்டும்.….?இருக்கிற பிரச்சனையில் இது வேறா...?” என்று மனதிற்குள் ரிஷி புலம்பிக் கொண்டிருக்க.…
“டே உண்மைய சொல்லு.…! யார் அந்த பொண்ணு.…?” என்று கேட்டபடி வந்து நின்றாள் தைலா.
“எருமை எருமை.…நான் தான் சொன்னேன்ல.…அப்பறம் என்ன கேள்வி.…? உண்மைக்குமே அந்த பொண்ணு யார்ன்னு எனக்கு தெரியாது.பார்க்க சின்ன பொண்ணு மாதிரி இருக்காளே….! அந்த காட்டுக்குள்ள அப்படியே விட்டுட்டு வர மனசில்லாம தான் கூட்டிட்டு வந்தேன். மத்த படி ஒன்னும் இல்லை...” என்றான்.
தைலா...”புரியுது ரிஷி.ஆனா ஒன்னு.உனக்கு வேணா அவளைத் தெரியாம இருக்கலாம்.ஆனா அவளுக்கு உன்னைத் தெரியும்ன்னு அவ கண்ணு சொல்லுதே கண்ணா.…” என்றாள் இடக்காய்.
“அது தான் தைலா எனக்கும் புரியலை.நான் பார்த்ததில் இருந்து எனக்கும் இந்த விஷயம் உறுத்திகிட்டே தான் இருக்கு.ஆனா நான் இதுக்கு முன்னாடி இந்த பெண்ணைப் பார்த்ததில்லை.ஆனா அவளைப் பார்க்கும் போது எல்லாம் மனதில் ஏதோ ஒரு நெருடல்.…அது என்னன்னு தான் தெரியலை.…” என்றான் ஒரு தேடலுடன்.
அவனின் கவலையை பார்க்க முடியாத தைலா.…”சரி விடுடா.…சீக்கிரமே கண்டு பிடிக்கலாம்.ஆனா அவ வாய திறந்து பேசவே மாட்டேங்கிறா.…பார்ப்போம்...சரி வா சாப்பிடலாம்...” என்று தைலா சொல்லி முடிக்கவும் அவளுக்கு போன் வரவும் சரியாக இருந்தது.
செல்லை எடுத்துப் பேசியவள்.…”சாரி ரிஷி.…டாட் பிஸ்நெஸ் பார்ட்னர்ஸ் யு.எஸ்ல இருந்து வந்திருக்காங்க.…நான் அவங்களை ரிசீவ் பண்ணி…அவங்க தங்க மத்த ஏற்பாடு எல்லாம் பண்ணனும்.…ஜஸ்ட் ஒன் ஹவர் ….வந்துடுறேன் ….” என்று சொல்ல..
“ஏய் இரு நானும் வரேன்...நீ மட்டும் எப்படி…? இப்பவே டைம் செவன்…..” என்று ரிஷி சொல்ல...
“டேய் லூசு.…நீயும் வந்துட்டா அவ மட்டும் இங்க தனியா எப்படி.…? நான் பார்த்துக்கறேன்.யு டோன்ட் வொரி….” என்றபடி அவசர அவசரமாக சென்றாள் தைலா.
குளித்து முடித்து வெளியே வந்த அபிராமிக்கு உடல் நடுங்கத் தொடங்கியது.ஊட்டி குளிர் அவளுக்கு புதிது என்பதால் பற்கள் தந்தியடிக்க ஆரம்பித்தது.
என்ன செய்வதென்று யோசித்தவள்.….காட்டில் ரிஷி குடுத்த ஜெர்கினை எடுத்து மறுபடியும் போட்டுக் கொண்டாள்.ஏனோ அதை போடும் போது ரிஷியே அருகில் இருப்பது போன்ற ஒரு உணர்வு அவளுள்.
“எங்க இந்த அக்கா...?” என்று மனதில் நினைத்தபடி தயங்கி தயங்கி வெளியே வந்தாள்.
ஆனால் அங்கு யாரையும் காணாமல் திகைத்தாள்.மேலே பார்க்க...அங்கேயும் யாரையும் காணாமல் திகைத்தாள்.ஒவ்வொரு அறையாக தேடிக் கொண்டு சென்றவள்.…மனதில் சிறு பயத்துடன் மாடி ஏறினாள்.
மாடியும் அமைதியாக இருக்க.….,என்ன செய்வதென்று தெரியாமல்.…ஒரு அறையின் கதவைத் திறந்தாள்.திறந்தவள் அதிர்ச்சியில் உறைந்தபடி …”அம்ம்ம்மாஆஆஆஆஆஆஆ” என்ற அலறலுடன் மயங்கி விழுந்தாள்.
விழி மொழி பேசும்.………..