அத்தியாயம் – 13
“வாசல்ல யாரு இப்படி வண்டியை போட்டு முறுக்கிட்டு இருக்கறது” என்று சுஜி குரல் கொடுக்க “அவர் வந்திருக்கார்டி” என்றாள் மித்ரா பதிலுக்கு.
“அண்ணாவா இங்க வந்திருக்காங்களா??”
“ஹ்ம்ம் ஆமா”
“நீ லீவ் போட்டது சொல்லிட்டியா??”
“செபாஸ்டியன் சொதப்பிட்டான்” என்றவள் நடந்ததை தோழியிடம் ஒப்பித்தாள்.
“இதெல்லாம் உனக்கு தேவையா?? பேசாம அண்ணாகிட்ட நீ உண்மையை சொல்லியிருக்கலாம். போய் அவரை கூப்பிடு” என்றாள்.
“வரமாட்டார்டி எனக்கு பயமாயிருக்கு” என்று திருதிருவென்று விழித்தாள் மித்ரா, அவள் பார்வையில் கலவரம் அப்பட்டமாக தெரிந்தது.
“நானே போய் கூப்பிடுறேன்” என்ற சுஜி சபரியை தூக்கிக்கொண்டு வெளியில் வந்தாள்.
“வாங்க அண்ணா உள்ள வாங்க. மித்ரா ரெஸ்ட் ரூம்ல இருக்கா நீங்க உள்ள வாங்க” என்றாள்.
“பரவாயில்லைம்மா இருக்கட்டும்” என்று மறுத்தான் அவன். அதற்குள் சுஜியின் கையில் இருந்த சபரி அவனை நோக்கி தாவினான்.
“என்கிட்டே வருவானா” என்றவாறே அவனை தூக்கிக் கொண்டான் சைதன்யன்.
“இவன் சரியான அப்பா பிள்ளை அண்ணா. அவங்க அப்பா கூட பைக்ல போறதுன்னா ரொம்ப இஷ்டம் அவனுக்கு. உங்க பைக் பார்த்ததும் அவங்க அப்பா ஞாபகம் வந்திருச்சு நினைக்கிறேன். இல்லன்னா இவன் யார்கிட்டயும் அவ்வளவு ஒட்டமாட்டான் உங்ககிட்ட தான் வந்திருக்கான்” என்றாள்.
“பேரு என்ன சொன்னம்மா??”
“சபரி…” என்றாள்.
“சபரி நாம பைக்ல ரைடு போகலாமா??” என்று வண்டி ஓட்டுவது போல் காண்பிக்க குழந்தைக்கு ஒரே சந்தோசம். சபரியை முன்னில் உட்கார வைத்து ஒரு ரைடு சென்று வந்தவன் வரும்போது குழந்தைக்கு இனிப்பு காரம் சாக்லெட்ஸ் எல்லாம் வாங்கி வந்தான்.
“அண்ணா இப்போவாச்சும் உள்ள வாங்களேன்” என்றாள் சுஜி.
“மேடம் வெளிய வரமாட்டாங்களாமா!!” என்று சொன்னவன் அதிகம் பிகு செய்யாமல் உள்ளே வந்தான். முதல் முறை வருகிறோம் ஒன்றும் வாங்காமல் வருகிறோமே என்று தோன்றியதாலேயே முதலில் உள்ளே வரமறுத்திருந்தான்.
இப்போது அந்த தயக்கம் அவனுக்கில்லை. அவனை உட்கார வைத்து காபி கொடுத்தாள். அதுவரையிலும் கூட மித்ரா வெளியில் வரவேயில்லை.
சுஜி தான் அவளை இழுக்காத குறையாக இழுத்து வந்தாள். மித்ராவை பார்த்ததும் “போகலாம்” என்றான் ஒற்றைச் சொல்லாய்.
“நான் கிளம்பறேன்டி” என்று தோழியிடம் உரைத்துவிட்டு அவனுக்கு முன்னே அவள் வெளியில் சென்றாள்.
“அண்ணா அவ கொஞ்சம் பிடிவாதக்காரி தான். ரொம்ப நல்லவ உரிமை இருக்கவங்ககிட்ட தான் அவளோட கோபம், பிடிவாதம் எல்லாம். அவளுக்காக நான் சப்போர்ட் பண்ணுறேன் நினைக்க வேண்டாம். என்னமோ சொல்லணும்ன்னு தோணிச்சு. சாரி அண்ணா அதிகபிரசங்கித்தனமா பேசினதுக்கு” என்றாள்.
“தேங்க்ஸ்ம்மா… நாங்க கிளம்பறோம்” என்றவன் வெளியில் வந்து பைக்கை உதைத்தான். முதல் முறையாக கணவனுடன் பைக்கில் செல்கிறாள் மித்ரா.
எப்போதும் ஆட்டோவில் தான் பெரும்பாலும் செல்வர். இன்று சைலேஷின் வண்டியை அவன் எடுத்து வந்திருந்தான். அவனுடன் முதல் முறையாக பைக்கில் செல்கிறோம் என்ற எண்ணம் கூட அவளுக்கு இல்லை.
என்ன சொல்லுவானோ ஏது சொல்வானோ என்ற பயம் மட்டுமே மேலோங்கி இருந்தது. வீட்டிற்கு வந்ததும் மகேஸ்வரி இருவரையும் மேலிருந்து கீழாக பார்க்க “நான் தான்ம்மா லீவ் கேட்க சொன்னேன்”
“போய் சொல்லிட்டு வந்தாச்சு அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றுவிட்டு அவளை அவன் அன்னை எந்த கேள்வியும் கேட்காதவாறு அவனே பேசி அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.
அவர்கள் அறைக்கு சென்றதும் கதவை அடைத்தவன் “உட்காரு உன்கிட்ட பேசணும்” என்றான்.
பதிலேதும் சொல்லாமல் அவன் சொன்னதை செய்தாள். “உனக்கு நிஜமா என்ன பிரச்சனை??” என்றான் நிதானமாய்.
‘என்ன பிரச்சினைன்னு சொன்னா தீர்த்திடுவாரா’ என்று எண்ணிக்கொண்டு அமைதியாகவே இருந்தாள்.
“தயவு செஞ்சு உன்னோட மைன்ட் வாய்ஸ் எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டு உனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லு”
“நிஜமாவே எனக்கு புரியலை. நீ ஆபீஸ் போகலையான்னு நான் கேட்டது தான் குத்தம்ன்னா சாரி… நான் அதை சாதாரணமா தான் கேட்டேன். ஒரு வேளை நீ ஆபீஸ் கிளம்பத்தான் தூங்காம இருக்கியோன்னு நினைச்சேன்”
“அதான் அப்படி கேட்டேன், நீ ஒரு வார்த்தை லீவ் போட்டிருக்கேன்னு சொல்லியிருக்கலாமே. நான் கேட்டது தான் தப்புன்னு வீம்பா லீவை கேன்சல் பண்ணி கிளம்பியிருக்க வேணாம்”
“நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்கு தெரியுது. உன்னை லீவ் போடச்சொல்லி நானும் கேட்டிருக்கலாம் தான். நான் இங்க வரும் போதெல்லாம் கூட நீ லீவ் போட்டு வீட்டில இருந்ததில்லை. அதான் நானும் உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு விட்டுட்டேன்”
“உன்னை ஏதாவது நான் ஹர்ட் பண்ணியிருந்தா ரியலி சாரிம்மா” என்றான் உள்ளார்ந்த வருத்ததுடன்.
“பேசவே மாட்டியா??”
“இல்லை ஒண்ணுமில்லை அதான் நீங்களே எல்லாம் சொல்லிட்டேங்களே!! நான் சொல்ல என்ன இருக்கு!!” என்றவளுக்கு அவளின் வருத்தம் இன்னமும் தீர்ந்ததாய் தோன்றவில்லை.
அவன் மன்னிப்பு கேட்டதிற்கு அவள் மனம் மகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால் மனம் இன்னமும் சமாதானம் அடையாமலே இருந்தது. அதனாலேயே அவள் செய்த தப்பிற்கு காரணமும் சொல்லவில்லை மன்னிப்பும் கேட்கவில்லை.
அருகிருந்தவளை சற்று நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்தான். அவன் பார்வை உணர்ந்தவளாய் அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் அமர்ந்திருந்தாள் அவள்.
“சரிம்மா நான் சொல்ல நினைச்சதை சொல்லிட்டேன். உனக்கு தான் என் கூட பேச இஷ்டமில்லைன்னு தெரியுது. நான் இங்க வந்தது உனக்கு பிடிக்கலைன்னு தெரியுது”
“ஒரு ரெண்டு நாள் என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. அதுக்கு பிறகு நான் கடலூர் போய்டுவேன் நீ எப்பவும் போல நிம்மதியா இருக்கலாம் என்னை பார்க்கற பேசற தொல்லை இல்லாம” என்றுவிட்டு விருட்டென்று எழுந்து சென்றுவிட்டான்.
‘அப்போ இப்பவும் என்னை அவரோட கூப்பிட்டு போகணும்ன்னு இவருக்கு எண்ணமேயில்லையா’ என்று எண்ணியவளுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.
வேலையை விட்டுவிட சொல்லுவான் தன்னையும் உடன் அழைத்து செல்லுவான் என்று எண்ணிய எண்ணமெல்லாம் தவிடு பொடியானதில் கண்ணில் நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.
அவனிடம் பேசியிருக்கலாமோ தப்பு என் பேரில் தானா என்று வெகு தாமதமாய் உணர்ந்தாள். இரவு உணவுக்கு பின் அவர்கள் அறைக்கு வர மதுவும் அவனும் உறங்கியிருந்தனர்.
அவனை எழுப்பி பேச வேண்டும் என்று தோன்றியது ஆனாலும் அதை செய்யாமல் வெறுமே அமர்ந்திருந்தாள். திரும்பி படுத்தவன் அவள் அமர்ந்திருப்பது கண்டு எழுந்து அமர்ந்தான்.
“என்ன நான் இருக்கறதுனால இந்த ரூம்ல உன்னால படுக்க கூட முடியலையா” என்றான் கோபமாய்.
“என்ன பேசறீங்க நீங்க நான் உங்ககிட்ட பேசலாம்ன்னு தான் வந்தேன். நீ தூங்கிட்டீங்க அதான் இப்படி உட்கார்ந்தேன். ஏன் நான் இங்க உட்கார கூட கூடாதா” என்றாள்.
“என்ன பேசணும்??” என்றான்.
‘அய்யோ என்ன பேச வந்தேன்னு மறந்து போச்சே’ என்று விழித்தாள் அவள்.
“என்ன பேசணும்ன்னு கேட்டேன், நீ பேசாமலே இருக்க??” என்றான்.
“அதான் யோசிச்சுட்டு இருக்கேன்” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு அவள் விழிக்க அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“இங்க வா” என்று அவன் அவளை நோக்கி கையை நீட்ட வெட்கம் கெட்ட மனது கொஞ்சம் கூட யோசிக்காமல் அவன் கையை நோக்கி அவள் கரத்தை நீட்ட உத்தரவிட்டுவிட்டது.
அவன் கையின் மேல் இருந்த அவள் கையை பற்றி தன் புறமாய் இழுக்கவும் அதை எதிர்பார்க்காதவள் தொப்பென்று அவன் மேலேயே சாய்ந்தாள்.
“சாரி… சாரி… தெரியாம இடிச்சுட்டேன். வேணும்ன்னு எல்லாம் செய்யலை”
“நான் வேணும்ன்னு தான் செஞ்சேன்” என்றவனின் கரம் இப்போது அவள் இடையை சுற்றி வளைத்திருந்தது.
“இப்போ சொல்லு என்ன சொல்ல வந்த??”
‘அட ராமா நான் என்ன சொல்ல வந்தேன்னு எனக்கு இப்போ ஞாபகமே வரலையேநான் என்ன செய்வேன்’ என்றவள் அவன் கரம் அவளின் வெற்றிடையில் பதிந்ததில் நெளிந்து கொண்டிருந்தாள்.
“பிடிக்கலையா??” என்றான்.
அவள் பதிலேதும் சொல்லவில்லை அமைதியாக அவனை பார்த்தாள். அவள் இடையை பற்றியிருந்த கரத்தை அவனும் எடுத்துவிட்டான்.
“நீ படுத்துக்கோ” என்றுவிட்டு அவன் எழப்போக அவன் கைப்பற்றி தடுத்தவள் “நீங்களா உங்க இஷ்டத்துக்கு எல்லாத்தையும் கற்பனை பண்ணிக்குவீங்களா!!” (அதை நீ சொல்றியா மித்து)
“சரி கற்பனை பண்ணலை” என்றவன் கட்டிலில் மீண்டும் அமர்ந்தான்.
“என்ன வேணும் மித்ரா?? எதுக்கு இப்படி என்னை சோதிக்கற, பேசவும் மாட்டேங்குற!! பேசினாலும் பதில் சொல்ல மாட்டேங்குற!! ஒரு மனுஷன் என்ன தான் செய்ய முடியும்” என்று சலித்துக் கொண்டான்.
அவன் தேவை புரிந்தவளாய் “நிஜமாவே நான் என்ன சொல்ல வந்தேன்னு எனக்கு ஞாபகம் வரலை. உங்களை பார்த்ததும் மறந்திருச்சு. உங்களை கஷ்டப்படுத்தணும்ன்னு எல்லாம் நான் நினைக்கலைங்க”
“என்னை பார்த்தா அவ்வளவு பயங்கரமாவா இருக்கு!! போன்ல எல்லாம் டக்கு டக்குன்னு பதில் கொடுக்கற, அன்னைக்கு ஊர்ல உங்க வீட்டுல வைச்சுக்கூட நல்லா தானே பேசின”
“இப்போ மட்டும் என்ன” என்றான் கேள்வியாய்.
‘அது எங்க வீடு என்னமோ அது கொடுத்த தைரியத்தில பேசிட்டேன் போல. இப்போ போய் அதுக்கு விளக்கம் சொல்லவா’ என்று யோசித்தவள் “இப்போ என்ன பண்ணலாம் சொல்லுங்க அதான் சொல்லிட்டேன்ல ஞாபகம் இல்லைன்னு”
“என்னை ஞாபகம் இருக்கா??”
“உங்களுக்கு தான் என்னை ஞாபகம் இல்லை”
“எனக்கு நெறைய ஞாபகத்துல இருக்கு. உனக்கு மறந்திருச்சுன்னு நினைக்கிறேன், சோ எல்லாம் ஒரு தரம் ரீவைண்ட் பண்ணி பார்ப்போமா” என்றவன் விளக்கணைத்து அவளையும் அணைத்திருந்தான்.
அவனுடன் இருந்த அந்த பொழுதில் வேறு ஒன்றும் நினைவிற்கு வராதவளாக இருந்தவளுக்கு அவன் உறங்கிய பின்னே அவனிடம் மீண்டும் தோற்றுவிட்டோமோ என்றிருந்தது.
புலர்ந்த அழகிய பொழுதினில் அவள் குளித்து வேலைக்கு தயாராகிக் கொண்டிருக்க அவள் பின்னே வந்து நின்றிருந்தான் அவள் கணவன். “மித்ரா இன்னைக்கு நீ ஆபீஸ் போயே ஆகணுமா”
“நான் ஒரு ரெண்டு நாள் தானே இங்க இருக்க போறேன். அதுவரை நீ லீவ் போட கூடாதா” என்றவன் அவள் இடையை வளைத்து அவள் தோள் வளைவில் கழுத்தை பதித்திருந்தான்.
“ஏன் ரெண்டு நாளைக்கு அப்புறம் என்ன பண்ண போறீங்க??” என்றவளின் முகம் மாறியிருந்ததை அவன் கவனிக்கவில்லை.
“நான் கடலூர்ல போய் டியூட்டில ஜாயின் பண்ணணும்ன்னு சொன்னேன்ல மறந்திட்டியா??”
“அப்போ நீங்க இங்க இருக்கற ரெண்டு நாளும் நான் உங்க தேவையை கவனிக்கணும் அதுக்காக நான் லீவ் போடணும் அப்படித்தானே” என்றாள் கொஞ்சம் கூட யோசிக்காமல்.
அவளுக்கு முதல் நாள் அவனிடம் தோற்றுவிட்டோமோ என்றிருந்த எண்ணம் அவனிடம் அப்படி பேச வைத்தது. பேச வந்ததை மறந்து அவன் வசம் மனமும் உடலும் சென்றதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எப்போதும் அவன் விருப்பம் என்றே இருந்தால் தனக்கென்றிருக்கும் சுய விருப்பு வெறுப்புகளை அவள் இழக்க வேண்டுமா!! எனக்கென்று ஒரு மனமில்லை என் மனமறிந்து நடக்க மாட்டாயா!! என்னை புரிந்து கொள்ளவே மாட்டாயா!! என்று முதல் நாள் இரவு அவள் மனசாட்சி கேட்க கேள்விக்கு பதிலடியாய் அவனை கேள்வி கேட்டுவிட்டாள்.
அவள் பேச்சை கேட்டதும் தீச்சுட்டது போல் அவளிடமிருந்து விலகி நின்றான். “என்ன மித்ரா பேசற?? வார்த்தையை யோசிச்சு பேசு, நான் எப்பவும் யாரையும் கஷ்டப்படுத்தணும்ன்னு நினைச்சதில்லை”
“ஒத்துக்கறேன் என்னோட சுயநலத்துக்காக உன்னை நான் கல்யாணம் பண்ணது வேணா தப்பா இருக்கலாம்”
“அதுக்காக உன் மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு தான் நான் ஒவ்வொரு முறையும் நினைக்கிறேன். ஆனா ஒரு ஒரு முறையும் நீ என்னை புரிஞ்சுக்காம தான் பேசிட்டு இருக்க”
“நரம்பில்லா நாக்கு எதையும் பேசும் கேள்விப்பட்டிருக்கேன்.இப்படி வாள் போல மனசை அறுக்கும்ன்னு உன் வார்த்தையில இருந்து தெரியுது”
“என் தேவைக்காக இனி நான் எப்பவும் உன்னை தேட மாட்டேன். நீயா என்னை புரிஞ்சுக்கற நாள் வரும் அன்னைக்கு நீ ரொம்ப வருத்தப்படுவ மித்ரா” என்றுவிட்டு அவன் வெளியேற போனான்.
“அதான் உங்க தேவை எல்லாம் முடிஞ்சு போச்சே” என்று அவன் வெளியில் சென்று விட்டான் என்று எண்ணி அவள் சத்தமாகவே முணுமுணுத்துக் கொண்டே அவள் திரும்ப அவன் வாயிலில் நின்றிருந்தான்.
அவள் வார்த்தை இன்னும் அவனை கொல்லவில்லை என்பது போல் கண்களில் வலியோடு நின்றிருந்தான். மித்ராவுக்கு ஒரு கணம் தான் அவனை அதிகமாய் பேசிவிட்டோமோ என்று ஒரு புறம் தோன்றினாலும் மறுமனமோ பேசியது எதுவும் தவறில்லை என்று தவறாய் வழி காட்டிக் கொண்டிருந்தது.
அதன்பின் அவள் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை கிளம்பி அலுவலகம் சென்றுவிட்டாள். மதிய உணவு இடைவேளையின் போது செபாஸ்டியன் வந்தான்.
“மித்ரா எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.
“சொல்லுங்க செபா”
“பேன்ட்ரி போய்டலாம் நீங்க என்னோட வந்து சாப்பிடுங்க” என்றவனை வித்தியாசமாய் பார்த்தாள்.
“ஹ்ம்ம் போகலாம்” என்றவாறே அவன் பின்னே நடந்தாள்.
இருவரும் எதிரெதிரே அமர “நேத்து போன் பண்ணதுனால வீட்டில ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே”
‘அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே’ என்று எண்ணிக்கொண்டவள் “நத்திங்” என்றாள்.
“அப்புறம் மித்து உங்க ஹஸ்பன்ட் பேரு என்ன??”
“திடீர்ன்னு இந்த கேள்விக்கு என்ன அவசியம் வந்துச்சு செபாஸ்டியன்”
“சொல்லு மித்ரா எனக்கு தெரிஞ்சாகணும். நாம சில விஷயங்களை ப்ரீயா பேசுறதுக்கு தான் கேட்கறேன்”
“சைதன்யன்”
“யூ மீன் இங்க நம்ம கேப் டிரைவரா இருந்தாரே அவரா” என்று அவன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள கேட்டான்.
“அவர் ஒண்ணும் இப்போ கேப் டிரைவர் இல்லை கலெக்டர்” என்றாள் கோபமாய்.
“ஓ!! சாரி சாரி!! எனக்கு தெரியாதுல அவர் இப்போ கலெக்டர்ன்னு. சோ ரெண்டு பேரும் ஒரே ஆளு தான் இல்லையா”
“இப்போ அதுக்கென்ன செபாஸ்டியன் இதை கேட்க தான் என்னை கூப்பிட்டீங்களா!!”
“நீங்க லவ் மேரேஜ்ஆ??”
“செபாஸ்டியன் இதெல்லாம் நான் எதுக்கு உங்களுக்கு சொல்லணும்” என்றாள் கடுப்பாய்.
“பிகாஸ் வினி விரும்புனவரை நீ கல்யாணம் பண்ணி இருக்க மித்ரா. அதை கிளியர் பண்ணிக்க தான் கேட்குறேன்”
“ஹி இஸ் மை ஹஸ்பன்ட்” என்று காரமாய் அவனுக்கு பதில் கொடுத்ததில் அவன் என் உரிமை என்ற உணர்வு அதிகமிருந்ததை கண்டுகொண்டான் அவன்.
“ஓகே!! நான் என்னை பத்தி முழுசா சொல்லாம நீ இதை எனக்கு கிளியர் பண்ண மாட்டேன்னு புரியுது மித்ரா” என்றுவிட்டு அவன் அவளை பார்க்க அவளோ நீ சொல்ல வந்ததை சொல்லு என்ற பாவனையில் இருந்தாள்.
“ஐ லவ் அஸ்வினி” என்றவனை இப்போது விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா….