பூத்தது ஆனந்த முல்லை -4

அத்தியாயம் -4

தருணின் முதல் பிறந்தநாள் விழாவை நடத்த தங்கள் குடியிருப்பின் கம்யூனிட்டி ஹாலை ஏற்பாடு செய்திருந்தான் ஆனந்த். அவனது அலுவலக நண்பர்கள் மற்றும் குடியிருப்பு வளாகத்தில் தேனுக்கு ஓரளவு பழக்கமானவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். 

இரு குடும்பத்து ஆட்களும் முதல் நாளே சென்னைக்கு வந்து விட்டனர். கலைவாணியும் சுந்தரியும் மறைமுகமாக ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொள்ள, வினயாவும் சுபர்ணாவும் வெளியில் சிரித்துக் கொண்டே அடுத்தவருக்கு ஊசி குத்தி விட்டனர். 

ராஜ்குமார் அகிலனை ஏளனமாகவும் அவ்வப்போது கோவமாகவும்  பார்க்க, அவனோ நீ யாரடா எனக்கு? என்பது போல அலட்சியப் பார்வை பார்த்து வைத்தான். 

திவ்யாவின் உதவியால் வீட்டு வேலைகளில் சிரமப் படவில்லை தேன். இரவில் உறங்க அனைவருக்கும் பாய் தலையணை  கொடுத்து செட்டில் செய்வதற்குள் ஆனந்த்துக்கு நாக்கு உலர்ந்து போய் விட்டது. 

ஒற்றைத் தலையணையில் கணவன் மனைவி இருவரும் தலை வைத்து படுத்திருந்தனர். 

“ரொம்ப வேலையா தேனு?” அக்கறையாக கேட்டான் ஆனந்த். 

“ஆமாம், உங்களுக்கும்தான் அதிக வேலை ஆகுது. விஷேஷம் வைக்கிறது விட இவங்கள சமாளிக்கிறது பெரிய டாஸ்க்கா இருக்கு” என்றாள். 

“அந்த காலத்துல கூட்டு குடும்பமா வாழ்ந்தவங்க  எப்படி ஸ்மூத்தா குடும்ப வண்டியை ஓட்டியிருப்பாங்க தேனு?” 

“தெரியலையே, எனக்கு ஒரு நாளைக்கே கண்ண கட்டுதுங்க” 

“நாளைக்கு நைட் கிளம்பிடுவாங்க எல்லாரும். பத்து நாள்ல நான் அப்ராட் கிளம்புறேன்” மனைவியை விட்டு பிரியப் போகும் ஏக்கத்தோடு அவளின் கையை வருடி விட்டுக் கொண்டே சொன்னான். 

அவளுக்கும் கண்கள் கலங்கிப் போயின. பின் இருவருமே தங்களை சமாளித்து, தங்களது கோவதாபங்கள் ஆற்றாமைகள் ஏமாற்றங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு இனிமையாக ஏதேதோ பேசிக் கொண்டே உறங்கிப் போனார்கள்.

அடுத்த நாள் காலையிலிருந்தே ஆனந்தின்  முகம் சரியில்லை, உற்சாகம் இழந்து எதையோ பறி கொடுத்து விட்டவன் போலிருந்தான். 

ஆனாலும் மனைவி, மகனுடன் கோயிலுக்கு சென்று வந்தான். அர்ச்சனைக்கு கொடுத்த போதும் அவனது சிந்தனை வேறு எங்கேயோதான் இருந்தது

பிரகாரத்தில் வைத்தே என்னவென விசாரித்தாள் தேன். ஒன்றுமில்லை என அவன் சொல்ல, பிரிய போவதை நினைத்து கவலை அடைக்கிறான் போல என நினைத்துக் கொண்டவள், எல்லாம் நம் முன்னேற்றதுக்காகத்தானே என ஆறுதலாக பேசினாள். 

அவன் தெளியாததை கண்டவள், “வேணும்னா ஆஃபீஸ்ல இந்த ஆன் சைட் ஆப்பர்சுனிட்டி வேணாம்னு சொல்லிடுங்க, உங்க முகத்தை இப்படி பார்த்திட்டு எனக்கும் கஷ்டமாகுது” என கண்கள் கலங்க சொன்னாள். 

“இன்னிக்கு இவன் பர்த்டே, சிரிச்ச முகமா இரு, நான் நல்லாதான் இருக்கேன்” என அவன் சொல்ல, அவளும் முகத்தை நன்றாக வைத்துக்கொண்டாள். 

ஆனால் வீடு வந்து வெகு நேரமாகியும் கூட ஆனந்திடம் தெளிவில்லை. வேறு ஏதோ என தேனுக்கு புரிந்தாலும் அவனிடம் எதையும் விசாரிக்கும் தனிமை அவர்களுக்கு கிட்டவில்லை. அவனுடைய அம்மாவுக்கும் மகனது மாற்றம் புரிய என்னவென கேட்டார். காய்ச்சல் வருவது போலிருப்பதாக சொன்னான். 

“இருக்காதா பின்ன, நீ தலையெடுத்துதான் வீடு கட்டின, அக்கா தம்பிக்கு வேணுங்கிறது செய்ற, கண்ணுக்கு நிறைவா பொண்டாட்டி குழந்தை, போன மாசம் உம்மகன் காது குத்த ஜாம் ஜாம்னு செஞ்ச, இப்போ பொறந்த நாள் கொண்டாடுற. பத்து நாள்ல வெளிநாடு போவ போற,  எல்லாம் கண்ணுதான் டா” என்றார் சுந்தரி.

மத்த புள்ளைங்க விட இவர்தான் நல்லா இருக்காருன்னு உன் மாமியார் கண்ணுதான் முதல்ல படும் உன் புருஷன் மேலமகளிடம் முணு முணுத்தார் கலைவாணி

சும்மா இரும்மாஎன அம்மாவை அதட்டினாள் தேன்.  

தன் நிலை புரியாமல் பேசும் அம்மாவிடம் என்ன சொல்வதென தெரியாமல் ஆனந்த் பார்க்க, “கேக் வெட்டி எல்லாம் முடிஞ்சதும் உனக்கு சுத்தி போடுறேன், நாளைக்கு நல்லா போயிடுவ” என சொல்லி அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டார் சுந்தரி

விழா நடக்க போகும் அரங்கத்தை அலங்கரிக்க ஆட்கள் வந்திருந்தனர். அங்கு செல்வதாக கூறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய ஆனந்த் அந்த குடியிருப்பு வளாகத்தின் உள்ளே இருந்த பூங்காவுக்கு சென்று விட்டான். 

இங்குமங்கும் நடந்தான், பதற்றமும் பரிதவிப்புமாக இருந்தான். அலைபேசியில் யார் யாரிடமோ பேசினான். ஆனால் அவன் எதிர்பார்த்த படி ஏதும் நடக்கவில்லை. கண்களில் பயமும் கலக்கமும் அப்பிக் கிடந்தன. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அலுவலகம் புறப்பட்டு சென்றான். 

மதியம் போல வீட்டுக்கு வந்தவன் முகம் வெளிறிக் கிடந்தது. நிஜமாகவே அவனுக்கு காய்ச்சல் வரும் போலிருக்க படுக்கையில் சுருண்டு விட்டான். இப்படி அவனை ஒரு நாளும் கண்டராத தேன் என்னவோ என பயப்பட்டாள்

 சுந்தரிதான் அவனுக்கு உடம்புக்கு சுகமில்லை, உறங்கி எழட்டும் என்றார். ஆகவே அவளும் கணவனை தொந்தரவு செய்யாமல் விட்டாள். 

மாலையில் எழுந்து வந்த ஆனந்த் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டான். மகனுக்கு ஆடை போட்டு விட கணவனை உதவிக்கு அழைத்தாள் தேன். கவனமே இல்லாமல் அவன் உதவியதில், “விடுங்க உங்களை கூப்பிட்டேன் பாருங்க, நானே பார்த்துக்கிறேன்என்றாள் தேன்.

எதுவுமே சொல்லாமல் விலகிப் போனவனை குழப்பமும் பயமுமாக பார்த்த தேனின் கன்னத்தில் அவள் கேட்காமலே முத்தமிட்டு சிரித்தான் தருண். 

“என் செல்லக்குட்டி!” என மகனை கொஞ்சி அவளும் முத்தமிட்டாள். பதிலுக்கு இன்னுமின்னும் முத்தங்கள் தந்தான் தருண். தற்காலிகமாக அம்மாவை அமைதி படுத்தியிருந்தான் அந்த மழலை. 

விழா ஆரம்பமானது. கூட்டத்தை கண்டதும் அழ ஆரம்பித்து விட்டான் தருண். மகனை சமாதானம் செய்ய முற்பட்ட ஆனந்த் சிறிது நேரத்திலேயே எரிச்சல் அடைந்து விட்டான். 

என்ன சேட்டை செய்தாலும் மகனிடம் கோபித்து கொண்டதே இல்லை அவன். தேனுக்கு என்னவோ ஏதோ என மீண்டும் மனம் அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டது. 

வந்திருந்தவர்கள் முன்னிலையில் எதையும் காட்டிக் கொள்ளாமல் மகனை தானே வாங்கி சமாதான படுத்தினாள்.  ஆனத்துக்கும் என்னவோ போலாக, மனைவியின் கையிலிருந்த மகனிடம் வந்து ஏதேதோ விளையாட்டு காட்டினான்.

கணவனை ஆராய்ச்சியாக பார்த்தாள் தேன். “அழுகை நிறுத்திட்டான் பாரு, டைம் ஆச்சு, கேக் கட் பண்ணலாம்” என அவன் சொல்ல, அவளும் மேடைக்கு வந்தாள். 

குறை சொல்ல முடியாத படி அனைத்தும் சிறப்பாகவே நடந்தது. உணவு நடந்து கொண்டிருந்தது. 

ஆனந்தின் அலுவலக ஊழியர்கள் இருவர் ரகசியமாக பேசிக் கொண்டதை காதில் வாங்கி விட்டார் கலைவாணி. அதிர்ச்சி அடைந்தவர் நேராக தன் மகனிடம் சென்று அவனது காதில் ஏதோ பேசினார். ராஜ்குமாரின் முகத்திலும் அதிர்ச்சியின் சாயல். 

மகனையும் மனைவியையும் பார்த்து விட்டு அவர்களின் அருகில் வந்தார் தங்கப்பன், அவருக்கும் விவரம் சொல்லப் பட்டது. திகைத்தாலும், “முதல்ல எல்லாரும் கிளம்பட்டும், அப்புறம் என்ன ஏதுன்னு மாப்ளகிட்ட கேட்கலாம்” என்றார். 

“கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறாப்ல இருக்கு எனக்கு, பொறுமையா விசாரிக்கிறாராம் உன் அப்பா. உன் தங்கச்சியா முடிச்சிகிட்ட கல்யாணமாடா இது? நாம பார்த்து பேசி பண்ணி வச்சது. இப்படி  நம்ம பொண்ணு வாழ்க்கைய நாமளே நாசம் பண்ணிட்டோமே” அழுது அங்கலாய்த்தார் கலைவாணி. 

சுற்றிலும் இருந்தோர் அவரை வேடிக்கை பார்க்க, ஆனந்த்துக்கு சங்கடமாகிப் போனது. 

அம்மாவிடம் சென்ற தேன், “என்னம்மா பண்ற?” என கடிந்து கொண்டாள்.

“போச்சுடி எல்லாம் போச்சு, உன் வீட்டுக்காரருக்கு வேலை போச்சுதாம்” சற்று சத்தமாகவே சொல்லி அழுதார் கலைவாணி. 

“உளறாதம்மா, அதெல்லாம் இல்லை” என சொன்னாலும் தேனால் தரையில் நிலையாக கால் ஊன்றி நிற்க முடியவில்லை. 

வெளிநாட்டுக்கு செல்லும் அலுவலக ஊழியர்களுக்கு அங்கு பயன்படுத்திக் கொள்ளவென அலுவலகத்தின் சார்பில் முன்னரே கிரெடிட் கார்டு கொடுக்க படும். அதில் எக்கச்சக்கமாக கடன் வாங்கி விட்டான் ஆனந்த். அலுவலக விதிகளுக்கு முரணானது. அதை சரியாக திருப்பி செலுத்தவும் இல்லை. 

ஏற்கனவே அலுவலகத்தில் கடன் வாங்கியிருக்கிறான், இந்த கிரெடிட் கார்டு லோன் வேறு. இரண்டும் சேர்ந்து அவனுடைய சம்பளத்துக்கு மீறிய கடன். 

ஒரு வாரமாகவே இது பற்றிய விசாரணை அலுவலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் என்ன செய்வதென்று தெரியாத இக்கட்டான சூழலில் இப்படி செய்து விட்டதாகவும் விரைவிலேயே கடனை அடைத்து விடுகிறேன் எனவும்  விளக்கம் சொல்லியிருந்தான் ஆனந்த். 

விசாரணை செய்யும் மேலதிகாரி ஆனத்துக்கு நல்ல பழக்கம், அவராக இருப்பதால் இது பெரிய பிரச்சனை ஆகாது, வெளிநாடு சென்றால் விரைவில் இந்த கடனை எல்லாம் அடைத்து விடலாம் என எண்ணியிருந்தான் ஆனந்த். 

ஆனால் இது அந்த அதிகாரி அளவில் மட்டுமே இல்லை, அவரும் அவருக்கு மேல் உள்ளவர்களுக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டுமே. ஆனந்த்தின் செயல் மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணம் ஆகி விடக்கூடாது என கருதி அவனை வேலை நீக்கம் செய்து விட்டனர். அது மட்டுமில்லாமல் ஒரு மாத காலக் கெடுவில் அனைத்து கடனையும் கட்டி சரிசெய்யா விட்டால் சட்டப் படி நடவடிக்கை எடுக்க படும் எனவும் சொல்லி விட்டனர். 

இன்று காலையில்தான் அவனை வேலையை விட்டு நீக்கியிருப்பதாக மெயில் வந்து சேர்ந்திருந்தது.