ஒரு மாலைப் பொழுது அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் வளாகத்தினுள் காரை நிறுத்தினான் விஜயன், அவனுடன் முன் இருக்கையில் இருந்தது சைந்தவி.
அந்த காரை வைத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று ப்ரித்வி பிடிவாதம் பிடித்திருக்க, அவனையும் விட விஜயன் முடியாதென்று பிடிவாதம் பிடித்திருந்தான்.
ப்ரித்வி மறுநாள் மாலை ஆஃபிஸ் முடிந்ததும் இவர்களின் வீட்டிற்கு வந்தவன், வீட்டிற்கு செல்ல எழவேயில்லை. “நான் வீட்டுக்குப் போக மாட்டேன் நீ காரை யூஸ் பண்ண ஒத்துக்குற வரை” என்று விட்டான்.
“இங்கேயே இரு அதனால் என்ன?” என்று விஜயனும் விட்டுவிட்டான்.
எட்டு மணியான பிறகும் ப்ரித்வி இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்று அவனின் அம்மாவிடமிருந்து விடாமல் அழைப்பு, இவன் எடுத்தால் தானே. சிறிது நேரம் விட்டு ஸ்னேஹா விஜயனிற்கு அழைத்தவள் “அண்ணா, மாமா அங்கேயா இருக்கார். அவர் இன்னும் வீட்டுக்குப் போகலையாம்” என்று கேட்டாள்.
“இங்க தான்மா இருக்கான்” என்று அலைபேசியை அவனிடம் கொடுத்தான்.
“என்ன நான் இங்கே இருக்கேனா இல்லையான்னு யார் கேட்டா?” என்றான் அதட்டலாக.
“அக்கா”
“என்னவோ என் மேல ரொம்ப அக்கறை மாதிரி சீன போட வேண்டாம்னு சொல்லிடு” என்று சொல்லி வைத்துவிட்டான்.
சைந்தவி கவலையாகப் பார்த்திருந்தாள். “அண்ணா டேய், ஏன் இப்படி பேசற?”
“சும்மா தான்” என்றான் அலட்சியமாக.
பின் சைந்தவி வெகுவாக அவனை சமாதானம் செய்து “ஒழுங்கா காரை வெச்சிக்கோ” என்று விஜயனை மிரட்டி ஒரு வழியாக ப்ரித்வியை வீட்டிற்கு கிளப்பினாள்.
இவர்கள் அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலிற்கு வருவதன் நோக்கம், ஜீவன் ஸ்னேஹாவிற்கு இவர்களின் விருந்து, அதனோடு ப்ரியா திருமணதிற்கு அழைக்கக் கேட்டிருக்க, விஷ்ணு அவர்களுக்கு உதவி இருக்க, அவர்களையும் அழைத்து இருந்தாள், உடன் ப்ரித்வி, ரித்திகா, அவர்கள் இல்லாமல் ஏது.
இவர்கள் முன்னமே வந்து விட, அதன் பிறகு ஜீவனும் ஸ்னேஹாவும் வந்துவிட, ப்ரியா மட்டும் வந்தாள், “விஷ்ணு கொஞ்சம் நேரம் கழிச்சு வருவார்” என்று சொல்லியபடி.
சற்று நேரம் சென்றே ப்ரித்வியும் ரித்திகாவும் வந்தனர்.
அவன் பேசப் பேச, இந்த முறை ரித்தி அவளின் அத்தையிடம் தாவினாள். தாவியவள் அவள் நன்றாக பிடித்ததும் அவளின் மீது சாய்ந்து கொண்டாள். “என்னடா அதிசயம்?” என்று ப்ரித்வி பார்க்க, விஜயன் வாய்விட்டே கேட்டான்.
“என்ன? என்ன ஊருக்கு?” என்று புரியாமல் ஜீவன் கேட்டான்.
அப்போது தான் விஷயத்தை ஜீவனிடம் பகிர்ந்தனர். கேட்டிருந்த பிரியா “ஹே சூப்பர்” என்று கத்தி சைந்தவிக்கு வாழ்த்து சொல்ல, எல்லோரிடமும் அந்த உற்சாகம் தொற்றியது.
இன்னும் போவதா இல்லையா என்று சைந்தவி முடிவு சொல்லவில்லை. எப்படியும் இன்னும் இரண்டு அல்ல மூன்று நாட்களில் முடிவு செய்தே ஆகவேண்டும். அக்சப்டன்ஸ் குடுத்தே ஆகவேண்டும். இல்லையானால் படிப்பு இல்லை.
இவர்களின் பேச்சு இப்படி சென்று கொண்டிருக்க, விஷ்ணு வந்திருந்தான். அவனிடம் ப்ரித்வியும் விஜயனும் மாற்றி மாற்றி நன்றி சொன்னர்.
“இவ்வளவு தேங்க்ஸ் தேவையில்லை. உண்மையா இவ சொன்னான்னு தான் போனேன், இவளுக்கு சொல்லுங்க” என்று பிரியாவைக் கைக் காண்பித்தான்.
இப்படியாகப் பேச்சுக்கள் செல்ல “அந்த இன்ஸ்பெக்டர் அன்னைக்கு உங்களை லாக் அப்ல வெச்சானே அவனைக் கூட யாரோ அடிச்சிட்டாங்க. ஹாஸ்பிடல்ல இருக்கான். ரெண்டு நாளா இது தான் பேச்சு, செமயா அடி வாங்கியிருக்கான். ஆனா யாருன்னு கண்டு பிடிக்க முடியலை” என்று விஷ்ணு சொன்னான்.
சில நொடிகளில் விஷயத்தை கிரகிக்க முற்பட்ட ஜீவனின் பார்வை விஜயனைத் தொட்டு மீள, அவனோ மெனு கார்டை பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பேச்சை காதில் வாங்கியதாக தெரியவில்லை.
விஜயன் அவனின் பார்வையை உணர்ந்தவன், சிறிது இடைவெளி விட்டு யாரும் கவனியாதவாறு அவனை ஒரு பார்வை பார்க்க, அதன் பிறகு மறந்தும் கூட ஜீவன் விஜயன் புறம் பார்வையைத் திருப்பவில்லை.
பின்பு அவர்கள் சூப்பில் இருந்து ஆரம்பிக்க, சைந்தவி ரித்திகாவிற்கு இட்லி கொண்டு வரச் செய்து, அவள் உண்ணும் பக்குவத்தில் ஊட்ட ஆரம்பித்தாள்.
ரித்தி உண்டு முடிக்கவும், இவர்கள் புஃபே முறையில் இருந்து உணவு ஐட்டங்களை எடுக்க ஆரம்பிக்க, சைந்தவி ரித்தியை யாரிடமும் விடாமல் அவளே வைத்திருந்தாள்.
“ஐ அம் யுவர் சித்திடி” என்று ஸ்னேஹாவும் பலவாறு ஆட்டம் காண்பிக்க, ரித்தி அசரவேயில்லை. சைந்தவியின் மேல் திரும்பவும் வாகாக சாய்ந்து கொண்டாள்.
“என்ன வேண்டும்?” என்று கேட்டு அவளுக்கு உணவை விஜயன் எடுக்க ஆரம்பித்தான்.
எடுத்துக் கொண்டே திரும்பியவன் கண்டது காஞ்சனாவை, அவள் தானா என்று நன்றாகப் பார்த்தவன், “ப்ரித்வி அது உன்னோட மனைவி தானே” என்றான்.
ப்ரித்வி திரும்பி பார்த்தவன் “இவள் எங்கே இங்கே” என்று பார்த்தான்.
“ம்ம்” என்று தலையசைத்தவனுக்கு எதற்காக வந்திருக்கிறாள் என்று அனுமானிக்க முடியவில்லை.
இது விஜயன் சைந்தவி கொடுக்கும் விருந்து என்பதால் விஜயன் யோசியாது சென்று “வாங்க சிஸ்டர்” என்றழைத்தான். அப்போது தான் சைந்தவியும் பார்த்தாள்.
பின் எல்லோரும் பார்க்க, ஸ்னேஹா விரைந்து சென்றாள் “என்ன அக்கா இங்கே?” என்று கேட்டே விட, காஞ்சனாவின் முகம் சுருங்கி விட, அவள் விடாது ப்ரித்வியை பார்த்திருந்தாள்.
அவனும் மனைவியைத் தான் பார்த்திருந்தான் சண்டையிட வந்திருப்பாளோ என்று.
ப்ரித்வி அவளுடன் பேசுவதில்லை. பகிரங்கமாக தன்னுடைய எதிர்ப்பை காட்டத் துவங்கியிருந்தான். அவளோடு ஒரே அறையில் தங்குவதில்லை.
தெளிவாக சொல்லியிருந்தான், “என்னோட வாழ்க்கையில எப்பவுமே சைந்து இருப்பா, அதை எப்பவுமே மாத்த முடியாது. அவ என்னோட தங்கை. உன்னை அவ கூடப் பேசணும், அவ கூட உறவாடணும்னு நான் சொல்ல மாட்டேன். ஆனா அவ என்னோட உறவு. அதுக்குரிய மரியாதையை நீ குடுக்கணும்”
“இவ்வளவு நாள் நான் பேசாம் இருந்ததுக்கு காரணம், அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இல்லை ஒன்னு, இன்னொன்னு நீ கன்சீவா இருந்த, உனக்கு எந்த டென்ஷனும் குடுக்க விருப்பமில்லை. அதனால் தான்!
“ஆனா இனி அது தொடரும்னு நினைக்காத. அண்ட் இந்த நிமிஷத்துல இருந்து உங்க அப்பா அம்மா வீட்டுக்குப் நான் வர மாட்டேன். என்னோட உறவை நீ மதிக்காத போது உன்னோட உறவும் எனக்குத் தேவை கிடையாது. அதுவும் தப்பா எதுவும் பேசின, நான் மட்டுமில்லை என் அம்மாவும் அண்ணன்ன்ற உறவை முறிச்சிக்குவாங்க”
“அதே மாதிரி என் அம்மாக்கிட்ட உங்க அம்மா அப்பா எதுவும் சைந்துவைப் பத்தி தேவையில்லாம பேசினாங்கன்னு தெரிஞ்சது, அடுத்த நிமிஷம் நீ உங்க அப்பா அம்மா வீட்டுக்குப் போயிடுவ, நீ மட்டும் தனியா. ரித்தியை தொடக்கூட விட மாட்டேன்”
“அண்ட் விவாகரத்து வாங்கினா அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆகிடுவேன். ஆண்ன்ற கர்வத்துல பேசறேன்னு நினைக்காத. நடக்கப் போற நிகழ்வை சொல்றேன். அப்படி உனக்காக வருத்தப்படற அளவுக்கு உன்னோட ஒரு வாழ்க்கையை நான் வாழலை”
“அண்ட் இந்த சொத்தெல்லாம் உனக்குன்னு கனவு காணாதே. நான் சம்பாரிக்கறதுல தான் உனக்கு உரிமை. எங்க பரம்பரை சொத்து, பாக்கி சொத்து அத்தனையிலயும் சைந்தவிக்கும் உரிமை இருக்கு”
“சோ, ஏதாவது தேவையில்லாதது பண்ணினேன்னா உனக்கும் எனக்கும் எல்லாம் முடிஞ்சது” என்று விட்டான்.
எல்லாம் பேசியது பெற்றோர் கேட்க…
“உங்களை நான், சைந்துவை ஏத்துக்கோங்க உறவாடுங்கன்னு சொல்ல மாட்டேன். ஆனா என்னை தள்ளி நிக்கச் சொல்லக்கூடாது. அப்படி சொன்னீங்கன்னா உங்களை விட்டு நான் தள்ளி நிப்பேன்” என்று அவர்களையும் மிரட்டி இருந்தான்.
ப்ரித்வியை விட்டா, அவர்களால் முடியவே முடியாது.
“அவன் சொல்றபடி நட, எங்களுக்குப் ப்ரித்வி சொல்றது தான். ஒருத்தியை தொலைச்சிட்டோம், இன்னொருத்தனை தொலைக்கவே முடியாது” என்று விட்டார் மேகலா காஞ்சனாவிடம்.
இதோ அதன் எதிரொலி தங்கை இருக்குமிடம் சொல்லவும், ப்ரித்வியோடு இணக்கமான ஒரு சூழலை உருவாக்கி கொள்ள ஒரு முயற்சி!
“வாங்க அண்ணி” என்றான் ஜீவனுமே.
சைந்தவியிடம் விஜயன் “அவங்களை நம்மோட ஜாயின் பண்ணச் சொல்லு” என்று அழைப்பு விடுக்கச் சொன்னான்.
சைந்தவிக்கு அவளிடம் பேச மனதில்லை, ஆனால் அதை சொல்லவும் விருப்பமில்லை. ப்ரித்வி அவளுக்கு மிக மிக முக்கியம்.
“ப்ரித்வி பார்த்துக்குவான். நான் ப்ரித்விக்கிட்ட சொன்னாலும் நான் சொல்லி அவளைக் கூப்பிட்ட மாதிரி வரும், வேண்டாம் லெட் ஹிம் ஹேண்டில்” என்றாள்.
“ம்ம், புத்திசாலித்தனம் அன் லிமிடட் எல்லா விஷயதுலையும். ஆனா என் விஷயத்துல மட்டும் நீ பெரிய முட்டாள்” என்றான் சிலாகிப்பாக விஜயன்.
“எஸ், ஆனா அந்த முட்டாள்தனம் செய்ய எனக்கு ரொம்பப் பிடிக்குது” என்றாள் கிசுகிசுப்பாகக் காதலாக.
அவளின் அந்த பார்வை… அம்மாடி, விஜயனின் முகமே சிவந்து விட்டது. அவன் ப்ரியாவிடமும் விஷ்ணுவிடமும் நகர்ந்து விட்டான்.
இன்னும் காஞ்சனா ப்ரித்வியை பார்த்தவாறே நின்றாள்.
“என்னைப் பார்க்கவா இவ்வளவு தூரம் வந்த, வீட்லயே பார்த்திருக்கலாமே” என்றான் ப்ரித்வி காஞ்சனாவிடம்.
அதற்குள் “ப்ரித்வியின் மனைவி” என்று ப்ரியாவிடம் சைந்தவி சொல்லிவிட்டாள்.
மற்றவற்றை ப்ரியா பார்த்துக் கொண்டாள் “வாங்க, வாங்க ஏன் அங்கேயே நிக்கறீங்க” என்று அவளின் கை பிடித்து அழைத்து வந்தவள்…
“எல்லோரையும் உங்களுக்குத் தெரியும். ஆனா என்னைத் தெரியாது இல்லையா. நான் சைந்தவியோட ஃபிரண்ட், ப்ரித்வி சரோட ஆஃபிஸ்ல அவருக்குக் கீழ வேலை பாக்குறேன்”
“இது என்னோட வுட் பீ விஷ்ணு, அசிஸ்டன்ட் கமிஷனர் ஆஃப் போலிஸ்” என்றவள்…
“ப்ரித்வி சார், சாப்பிட கூடக் கூப்பிட்டுக்கங்க” என்று எடுத்துக் கொடுக்க…
ப்ரித்வி மனைவியை எல்லோர் முன்னும் விட்டுக் கொடுக்காமல், “வா” என்று உடனழைத்துக் கொண்டான்.
சைந்தவி அவனைப் பார்த்து “பாருடா” என்பது போல இரு பருவங்களையும் உயர்த்தினாள்.
“உன் வேலையைப் பாரு” என்பது போல ப்ரித்வி அவளிடம் சைகை செய்தான்.
“போடா, அண்ணா போடா” என்றாள் உதடுகளை அசைத்து.
ப்ரித்வியின் முகத்தில் ஒரு விரிந்த புன்னகை.
அந்த புன்னகையை பார்த்தபடியே விஜயனை நோக்கி திரும்பியவள் “அப்புறம் எங்க அண்ணி வந்திருக்காங்க, அவங்களை சிறப்பா கவனிச்சு அனுப்பணும், நீங்க அங்க போங்க” என்றாள்.
“ரித்தியை வெச்சிக்கிட்டு நீ எப்படி சாப்பிடுவ?”
“போய் அவங்களோட பேசிட்டே சாப்பிட்டுட்டு அப்புறம் எனக்கு எடுத்துட்டு வந்து குடுங்க” என்று சொல்ல, அவர்களோடு சென்றான்.
விஜயனுக்குப் பேசவா கற்றுக் கொடுக்க வேண்டும், அவன் இலகுவாக காஞ்சனாவோடு பேச ஆரம்பிக்க, ஜீவனும் இணைந்து கொள்ள, சைந்தவி ப்ரியாவோடு விஷ்ணுவோடு இருந்து கொண்டாள்.
முதலில் அவர்கள் உணவுண்டு திருமணதிற்கு அழைத்து கிளம்பினர். அப்போது தான் மெதுவாக சைந்தவி உண்ண ஆரம்பித்தாள். விஜயன் அவளிடமிருந்து உறங்கியிருந்த ரித்திகாவை வாங்கினான்.
ப்ரித்வியும் அமைதி சைந்தவியும் அமைதி, ஸ்னேஹா காஞ்சனாவோடு பேச்சுக் கொடுக்க, விஷ்ணு கிளம்பவும் “போலிஸ்காரன் இருக்கான், நீ என்னைப் பார்க்கற, எவ்வளவு கொழுப்பு உனக்கு?” என்று ஜீவனுக்கு மட்டும் கேட்குமாறு அடிக்குரலில் சீறினான் விஜயன்.
“சாரி” என்றான் ஜீவன்.
சைந்தவி அமைதியாய் உண்டு கொண்டிருந்தாலும் விஜயனின் முக பாவனையில் “என்ன?” என்று வினவினாள்.
“ஒன்னுமில்லையே” என்று முகத்தை சாதரணமாக வைத்துக் கொண்டான்.
சைந்தவி உண்டு முடிக்க எல்லோரும் காத்திருக்க, உண்டவுடன் எழுந்தனர்.
எதற்காக வந்தாலோ காஞ்சனா, ஆனால் வந்தது ப்ரித்விக்கு ஆறுதலை கொடுத்தது. அண்ணனின் வாழ்க்கை குறிந்த கவலை இருந்த சைந்தவிக்கும் ஒரு ஆசுவாசத்தைக் கொடுத்தது.
ஸ்னேஹா “அண்ணா” என்று விஜயனை அழைக்க, அதே போலவே “வர்றேன்ண்ணா” என்று சொல்லி மற்றவர்களிடமும் சொல்லி காஞ்சனா கிளம்பினாள்.
சைந்தவியைத் தயங்கிப் பார்க்க, சைந்தவி உண்டு முடித்ததும் ரித்தியை அவளின் கையினில் வாங்கியிருந்தாள். அவள் கையில் இருந்த ரித்தியை காஞ்சனாவிடம் கொடுத்து நகர்ந்து விட்டாள். அவ்வளவே, வேறு பேச்சுக்களோ தலையசைப்போ இல்லை.
இப்படியாக விருந்து முடிந்து விஜயனும் சைந்தவியும் வீடு வந்தனர்.
உள்ளே வந்து அவன் கதவை பூட்டி சில அடிகள் நடந்து விட்டவன், இவள் எங்கே என்று பார்க்க, இவள் கதவின் பக்கத்தில் இருந்த சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள்.
கண்களில் பெரும் அழைப்பு. அதுவே மயக்கத்தை கொடுத்தது அவனுக்கு.
அவளைப் பார்த்தவாறே “என்னங்க தங்கம் லுக்கு இது?” என்று விஜயன் பேசிய போதும் பார்வையை மாற்றவில்லை.
“இப்படியெல்லாம் பார்த்தா, உனக்கு நடக்கற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை”
“தங்கம்னா செய்கூலி சேதாரம் எல்லாம் தானே இருக்கும்” என்றாள் சரசமாக.
“பாருடா வசனத்தை” என்றவன் இரு கைகளையும் விரிக்க, அவன் அருகில் வந்து “நீ தூக்கு” என்பது போல கைகளை நீட்ட, அவன் தூக்கியதும் அவனின் கழுத்தில் கைகளை கோர்த்து அவனின் இடையில் கால்களை கோர்த்துக் கொள்ள, அவளை வசதியாக பிடித்துக் கொண்டான்.
“என்ன இப்படி ஒரு எக்சைட்மென்ட்”
“தெரியலையே” என்றவள் அவளாக அவனின் உதடுகளை உரச… பின் அதனை கொஞ்ச… வெம்மை தாக்க ஆரம்பித்தது.
“பத்தலை” என்றான் கிசுகிசுப்பாக.
“பத்தலைன்னா பத்த வெச்சிக்கோ” என்ற அவளின் வார்த்தைகளில் இருத்த தீயில் இவன் அவளின் உதடுகளை உரசி, தீண்டி, தண்டித்து… “ம்ம், அப்புறம்” என்றான் அப்போதும் எனக்குப் பத்தலை என்ற பாவனையில்.
“அப்புறம் உங்களுக்குத் தான் தெரியணும், சேதாரம் இருக்குமா இல்லையான்னு” என்றவளின் கண்களில் இருந்த பாவனையில் எப்போதும் போல மொத்தமாய் வீழ்ந்தான்.
பற்ற வைப்பது ஒருவராகின் அணைப்பது அடுத்தவராகி… “பத்தலை” என்பதும் நீடிக்க…