“பைக்கில ஒரு பக்கமா உக்காந்தது,வீட்டுல மொகம் கழுவிட்டு முன்னயெல்லாம் நனஞ்சதும் துண்டைத் துப்பட்டா மாரி போட்டுகிட்டதுன்னு மொதல்லயே ஒன்னக் கண்டுகிட்டேன்.ஒன் செர்டிஃபிகேட் பார்த்து உறுதியாவும் ஆயிருச்சு.”

“மறுநாப் பள்ளிக்கோடத்துல வச்சு ராத்திரி வர்றியான்னு கேட்டுட்டுத் திரும்பிப் போகையில ஒரே சங்கடமாப் போச்சு எனக்கு.எப்பிடி அந்தப் புள்ளையப் பார்த்து இப்படிக் கேட்டோம்னு யோசிச்ச எனக்கு ஒன்னத் தவிர யார்கிட்டயும் இப்பிடி என்னால பேச முடியாதுன்னு புரிஞ்சு போச்சு.”

“பள்ளிக்கோடம் படிக்குத சின்னப் புள்ளையைப் போய்ப் பாக்குதோமேன்னு மனசு உறுத்த, ஒன்னப் பார்க்கக் கூடாதுன்னு வெலகி இருந்தா நீயே ஃபேக்டரிக்கு வந்து நின்ன.” என்றவன் சட்டென வாய்விட்டுச் சிரிக்க,

“என்னாச்சு மாமா?” என்றாள்.

“அன்னிக்கு நீ வந்தப்பச் சின்னப் பையனாட்டம் தலையக் கோதி மீசையை முறுக்கின்னு என்னென்னவோ செய்ஞ்சேன்.இப்ப நினைச்சுப் பார்த்தாச் சிரிப்பா வருது.”

“கேடி மாமா!” என அவள் அவன் கன்னத்தைக் கிள்ள,

“அப்பமும் படிப்பை விட்டுட்டுத் தேவையில்லாத வேலை பார்க்கியேன்னு கோபம் வர, விஷயம் முழுசாத் தெரிஞ்சுகிட்டா என்னை மறந்துட்டுப் போய்ப் படிப்பைப் பார்ப்பியேன்னுதான் எம்மேல தப்பு இருக்கிற மாரியே விஷயத்தைப் போட்டு உடைச்சேன்.”

“ஆனா நீ அழுதுகிட்டே போனது மனசு கேக்கல.ராத்திரி அம்மை வீட்டுக்கு ஒன்னப் பார்க்குததுக்குத்தான் வந்தேன். அன்னிக்கு ராத்திரி ஒன்னக் கையில் தூக்கினப்போ, அப்பா! என்னா வாசம்!” என்றவன் இப்போதும் அந்த வாசனையை நுகர அவள் கழுத்தில் முகம் புதைக்க அவள் நெளிந்தாள்.

“மாமா!” என அவனைக் கஷ்டப்பட்டு விலக்கியவள் “இது எப்போ நடந்துச்சு மாமா? எனக்குத் தெரியவேயில்லையே!”

“ஆமா கும்பகர்ணி மாரி ஒறங்குனா எப்பிடித் தெரியும்?” என அன்று நடந்ததை அவளிடம் விளக்கினான்.

“அதுக்கப்புறம் எம் மனசு எனக்குப் புரிஞ்சுட்டாலும் படிக்குத புள்ள மனசைக் கலைக்கக் கூடாதுன்னு வெலகியே நின்னேன். ஆனா நீ  நெருங்கி வர ஆரம்பிச்சே!”

“கல்யாணமே பண்ணிக்க மாட்டன்னு நெனச்சுத்தான் என்னப் பத்தித் தப்பாப் பொரளியக் கெளப்பி விட்டேன். இப்ப ஒன்னக் கன்னாலம் கட்டினா அதுனால ஒன்ன எதுவும் பேசுவானுவளோன்னும் மனசுக்குள்ள இருந்துச்சு. இப்பிடிப் பல யோசனையிலதான் ஒன்ன எங்கிட்டயிருந்து தள்ளி நிறுத்ததுக்காக, கோச்சிங்க் சென்டர்ல சேர்த்து விட்டுட்டு வந்தப்ப வேணும்னே ஒம் மனசு நோகப் பேசினேன்.”

“ஆனா அப்பமும் நீ என்ன விட்டு வெலகல.சிவா வந்த அன்னிக்கு அந்த ஆலமரத்தடியில எம்மேல வந்து விழுந்த பாரு.அப்பமே என்ன ஆனாலும் சரி, எவன் என்ன பேசுனாலும் சரி, ஒன்னக் கன்னாலம் கட்டி வாழ்ந்து காட்டி அவனுக வாய அடைக்குததுன்னு முடிவு கட்டிட்டேன்.”

அவள் வியப்பாக விழிகளை விரிக்க,

“ஆமா! இப்ப முழி.கன்னாலம் கட்டுத யோசனை இல்லாமத்தான் ஒன்னக் கட்டிப் பிடிக்க, முத்தம் குடுக்கவெல்லாம் செய்ஞ்சேனாக்கும்.நல்லபடியாப் படிச்சு முடிக்கட்டும்.அதுக்குள்ள வேதாவும் ஒரு நெலைக்கு வந்துருவா. ஓரளவுக்கு எல்லா விஷயத்தையும் வெளக்கிக் கன்னாலம் கட்டிக்கலாம்னு பார்த்தா நீ செய்ஞ்சு வச்ச வேலைக்கு எம் மனசே சோர்ந்து போச்சு.அதும் எம்மேல நம்பிக்கை இல்லைன்னு நீ சொன்னது என்னச் சுக்கு நூறா ஒடச்சுடுச்சு”

“ஐயோ மாமா! என் நல்லதுக்காக என்ன விலக்கி வைப்பீக.கன்னாலம் கட்டச் சம்மதிக்க மாட்டீகன்னுதான் அப்பிடிச் சொன்னேன்”

“ம்ம்ம…மொதல்ல எம்மேல ஒனக்கு நம்பிக்கையில்லயேன்னுதான் நெனச்சேன். பொறவு நாளாக ஆக யோசிச்சுப் பார்த்தப்பதான் ஒனக்கு நம்பிக்கை வருத மாரி நான் நடந்துக்கலைன்னு புரிஞ்சது”

அவள் விழிகள் விரியப் பார்க்க “நிசம் ராசாத்தி! ஆரம்பத்துல இருந்து ஒன்னத் தள்ளித் தள்ளி நிறுத்துனேன். வேதாவைப் பிடிக்கும்னு நேரடியாச் சொல்லாட்டியும் அப்படி அர்த்தம் வருத மாரிதான பேசினேன். கன்னாலமும் எனக்கு விருப்பமில்லாதது போலவேதான் ஒன்னக் கட்டிகிட்டேன். கன்னாலத்துப் பொறகும் என் மனசத் திறந்து ஒங்கிட்டப் பேசல நானு.”

“மொதல்ல கோபமிருந்தாலும் நீ என் கைக்கு வந்து சேர்ந்துட்டன்னு ஒரு நிம்மதிதான் எனக்கு. ஆனா அதை வெளிப்படையாப் பேசி என் காதல ஒத்துகிட்டாப் பொறவு ஒன் படிப்பு முடியவரைக் காத்துக் கெடக்குறதெல்லாம் கண்டிப்பா நடந்துருக்காதுடி. நீயும் வெலகி இருக்க மாட்ட. ஒன்ன வெலக்கி வைக்க என்னாலயும் முடிஞ்சுருக்காது. அதுதான் கோபம் போலக் காட்டித் தள்ளி நின்னேன்.”

“அப்போ ஒன்னக் கன்னாலம் கட்டிக்கிட நான் தயங்க இன்னொரு காரணம் அன்னிக்குத் தேதிக்கு வேதாவுக்கும் எனக்கும் டைவர்ஸ் ஆகியிருக்கலை”

அவள் அதிர்வுடன் பார்க்க,

“ஆமா! ஒன் கழுத்துல தாலி கட்டுதப்போ நான் சட்டப்படி அவ புருஷந்தான். எங்க கன்னாலம் திருனேலில நடந்தனால அங்க மண்டபத்துலயே அன்னிக்கே பதிவு பண்ணிட்டோம். அந்த வேதனை வேற மனசைக் கொல்லாமக் கொன்னுச்சு.நீ நம்பிக்கையில்லன்னு சொன்ன ஆத்திரத்துல வீம்புல தாலி கட்டிட்டேன். ஆனா டைவர்ஸ் ஆகலைங்கிறதை எடுத்துச் சொல்லி நான் திடமா நின்னிருக்கணுமோன்னு பொறவு அதை நெனச்சு நெனச்சு வருத்தப்பட்டேன். ஆனாலும் ஒம் படிப்பு மட்டும்தான் முக்கியம்னு அப்போ நான் வெளிய எதையும் காட்டிக்கிடல”

“சீக்கிரமா வேதாகிட்டப் பேசி டைவர்ஸுக்கு ஏற்பாடு பண்ணணும்னு நான் நெனச்சப்ப நல்லவேளையா அதே நேரம் வேதாவும் ஃபாரின் போறதாவும் வில்லியமைக் கன்னாலம் கட்டிக்கிடப் போறதாவும் டைவர்ஸ் ஃபைல் பண்ணணும்னு சொன்னா.அதுக்காகத் திருனேலி போய் வந்து இருந்தப்போதான் நீ என்னையும் அவளையும் பார்த்துருப்பே.பின்னால முதுகுல மூட்டையச் சுமந்துட்டு வந்த ஒருத்தன் அவளை இடிச்சுட்டான். அவ விழாமத் தாங்கிப் பிடிச்சப்போதான் நாங்க ஒன் கண்ணுல பட்டிருக்கணும்.”

“நீ அம்புட்டு வெசனப்பட்டதுக்கு பதிலா என்னட்டக் கேட்டிருக்கலாமேத்தா. வேதவல்லிய டைவர்ஸ் பண்ணாம இருந்தது தெரிஞ்சா வெசனப்படுவியேன்னுதான் அத நான் சொல்லாம இருந்தேனே தவுத்து நீ எங்களைப் பாத்தது தெரிஞ்சா எல்லா விஷயத்தையும் அன்னிக்கே ஒங்கிட்டச் சொல்லி இருப்பேனே!”

“எனக்கு பயம் மாமா! எங்க வேதாக்கா கூடத்தான் வாழப் போறேன்னு சொல்லிருவிகளோன்னு” அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவன் காதுகளுக்குள் முணுமுணுத்தாள்.

நெடுமூச்செரிந்தவன் “ஒனக்கு மட்டுமில்லத்தா. அன்னிக்கு எனக்குமே பயம்தான்”

எழுந்து நேராக அமர்ந்தவள் அவள் குழப்பமாகப் பார்க்க ஆம் என்பது போல் தலையசைத்தவன்,

“அடுத்து வந்த மூணு நாளும் மொகத்தைத் திருப்பிக்கிட்டே இருந்தியா, ஒருவேளை என்னக் கன்னாலம் கட்டுனதுக்காக வெசனப்படுதியோ? காலேஜுக்கெல்லாம் போயி அங்கன இருக்கவகளையெல்லாம் பார்த்ததும் ஒரு டாக்டரைக் கட்டியிருக்கலாம்னு நெனக்குதியோன்னு நெனச்சு நெனச்சு எம் மனசே விட்டுப் போச்சு”

அவள் இடுப்பில் கைவைத்து அவனை முறைக்க,

“நெசம் ராசாத்தி. ஆனா வேதா படிக்கணும்னு சொன்னப்ப அவளை விட்டுக் குடுக்க முடிஞ்ச எனக்கு, நீ என்னை விட்டுப் போகணும்னு சொன்னா ஒன்ன விட்டுக் குடுக்க முடியாதுன்னு தெளிவா வெளங்குனது அப்போத்தான். நீ என்னை விட்டுப் போனா அடுத்த நிமிஷமே நான் நானா இருக்க மாட்டேன்னும் புரிஞ்சுச்சு”

தான் துன்பப்பட்ட போது தனக்கு சற்றும் குறையாமல் தன் மணாளனும் துன்பப்பட்டிருப்பது கண்டு இப்போது அவனை அணைத்து முத்தமிட்டு ஆறுதல்படுத்துவது அவள் முறையாயிற்று.

அவள் வேகம் சற்று மட்டுப்படவும்,

“ஃபேக்டரியில அம்புட்டுப் ப்ரச்சனை ஓடிக்கிட்டு இருந்தப்பமும் நம்ம கன்னாலத்தைப் பதிவு பண்ணுததுக்கு வேண்டியதையும் பண்ணிகிட்டே இருந்தேன். ஒனக்கு நாந்தான் எனக்கு நீதாங்கிறது பிரிக்க முடியாதபடி முடிவாயிறணும்னுதான் அம்புட்டு வேகமா வேலை செஞ்சேன். ஒருவழியா நம்ம கன்னாலத்தைப் பதிவு பண்ணின பொறவுதான் எனக்கு நிம்மதியா இருந்துச்சு.”

“அன்னிக்குத்தான் எனக்கும் முழு நம்பிக்கை வந்துச்சு மாமா! எங்க நீங்க வேதாக்கா நெனப்புலயே இருந்துருவீகளோன்னு பயந்துகிட்டே இருந்தேன். ஆனா என்ன ஆனாலும் ஒங்களுக்கு நாந்தான், நான் மட்டும்தான் பொண்டாட்டின்னு அன்னிக்குத்தான் முழுசா நம்புனேன்.”

எல்லா விஷயமும் பேசி முடித்து விட்டதில் முழு நிலவை மறைத்திருந்த கருமேகங்கள் விலகியிருக்க ஜொலிக்கும் வெண்மதியென அவள் முகம் பளபளக்க,

“அது நீ முத்தங்குடு மாமான்னு வந்து நின்னப்பயே புரிஞ்சது எனக்கு” என்றபடி அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினானவன்.

“மொத மொதல்ல தாவணியில வந்து நின்னியே அப்போவே மனசு தடுமாற ஆரம்பிச்சுட்டு எனக்கு. பொறவு கன்னாலம் முடிஞ்சாலும் ஒன் படிப்பு முடியத்தான் எல்லாம்னு இருந்தேன். ஒன்னப் பக்கத்துலயே வச்சுக்கிட்டு வெலகி இருக்கது கஷ்டமா இருக்கும்னு நெனச்சித்தான் ஒன்ன ஹாஸ்டல்ல விடலாம்னு பார்த்தா அதுவும் சோலிக்காகலை. ஒன்னத் தேத்துததுக்காக முத்தம் குடுக்குதப்போக் கூடக் கவனமாத்தான் இருப்பேன்.”

“நமக்குக் கன்னாலம் ஆன புதுசில எல்லாம் ஒம் மேல ஆச இருந்தாலும் ஒன் வயசு, படிப்பு ரெண்டும் என்னை விலகி நிக்கச் சொல்லுச்சு.அப்ப மனசும் ஒடம்பும் புத்தி சொன்னதைக் கேட்டுச்சு. ஆனா இந்த வருஷம் பொறந்ததுல இருந்தே ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்காதுன்ற மாரி நீ பக்கத்துல வந்தாலே ஒடம்பு வசத்துல இல்ல.அதுலயும் நேத்து முத்தம் குடுத்ததும் மொத்தக் கட்டுப்பாடும் காத்துல பறந்துட்டு” என அவள் நெற்றி முட்டிச் சிரித்தவன், மனையாளை முற்றும் முழுதாக உலகத்தை மறக்க வைக்க நினைத்தவனாக,

“என்ன, ஒனக்கு இன்னும் ஏதானும் கேக்கணுமா இல்ல…” வாக்கியத்தை முடிக்காமல் அவன் கண்சிமிட்ட,

“வேற எதும் இல்ல மாமா” என்றாள் அவள் முகம் சிவக்க.

அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டே எழுந்தவன் யோசனையோடு மீண்டும் அமர “என்னாச்சு மாமா?” என்றாள்.

“இல்லத்தா. நேத்துத்தான் அவசரப்பட்டுட்டேன்.ஒனக்கு இன்னம் பரீட்சையே முடியல.இன்னும் ஹௌஸ் சர்ஜன் வேற பண்ணணும். இந்த நெலைமையில குழந்தைன்னு வந்தா…”

“அதெல்லாம் பார்த்துக்கிடலாம் மாமா.நீங்க என்னையப் பார்த்துக்கிட மாட்டியளா?”

“அதெல்லாம் தங்கமாத் தாங்கிருவேன் ராசாத்தி”

“பொறவென்ன? அத்தையும் இருக்காக.பார்த்துக்கிடலாம்.”

“நெசமாத்தான் சொல்லுதியா?”

அவன் கன்னத்தை ஒரு கையால் தாங்கியவள் “எம்புட்டுச் சீக்கிரம் முடியுதோ அம்புட்டு சீக்கிரம் ஒங்களுக்கு ஒரு புள்ளையப் பெத்துக் குடுத்து இந்த ஊருல நாக்கு மேல பல்லைப் போட்டுப் பேசினவன் அம்புட்டுப் பேர் வாயையும் அடைக்கணும் எனக்கு”

வீராவேசமாக அவள் சொல்லக் கேட்டவன் வாய் விட்டுச் சிரித்துக் கொண்டே தன் பொக்கிஷத்தைப் பூமாலையாய்க் கைகளில் அள்ளியபடிக் கட்டிலை நோக்கி நடந்தான்.

வங்கக் கடல் ஆழமென்ன வல்லவா்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே

என்னுடைய நாயகனே ஊா் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே

எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா

நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா

கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென

மடி சோ்ந்த பூரதமே மனதில் வீசும் மாருதமே
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும்
ஒன்றாய் சங்கமம்
நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச
திருக்கோயில் வீடு என்று விளக்கேத்த நீயும் வந்த
நேரில் வந்த ஆண்டவனே