அத்தியாயம் இருபத்தி ஆறு :

ஆஃபிஸ் சென்றதும் தான் கமாலி ஷா லீவில் சென்று விட்டது தெரிந்தது. வீட்டிலேயே சொல்லி அழைத்து வந்திருந்தாள் என்ன நடந்தது என்று தெரிந்தால் ஓகே. ஆனால் நீயாக தெரிந்து கொள்ள முயற்சிக்காதே என்று.

சக அலுவலர் ஒருவர் சொல்ல, “ஒஹ், அப்படியா” என்று கேட்டுக் கொண்டான் அவ்வளவே!

சைந்தவி அவளிடத்தில் அமர்ந்த பிறகு அவளின் மொபைலை பார்க்க, ப்ரியாவிடமிருந்து மெசேஜ் “கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணனும், இன்னைக்கு ஈவ்னிங் வரட்டுமா” என்பது போல்.

“இன்னும் கொஞ்சம் நேரத்துல சொல்றேன்” என்று அவளுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவளின் மெயிலை பார்க்க… அவளின் மேற்படிப்புக்கான மெயில்.

“வாவ்” என்று குதிக்கத் தோன்றியது.

வேகமாக எழுந்து சென்றால் விஜயிடம். அவனிடம் தன் மொபைலை காண்பிக்க “காலையிலயே பார்த்துட்டேன், நீ பார்த்து அதை ஃபீல் பண்ணனும்னு அன்ரீட் பண்ணிட்டேன்”

“ஏன் என் கிட்ட அப்போவே சொல்லலை” என்று சிணுங்கினாள்.

“கங்க்ராட்ஸ்” என்றான் மலர்ந்த முகத்துடன்.

“தேங்க்யூ, நான் ப்ரித்விக்கு சொல்றேன்” என்றாள் மகிழ்வாக.

“பேசு” என்றான். என்ன முடிவானாலும் அவளின் சாதனை இது, மீண்டும் பிரிவா மனது மிகவும் சஞ்சலம் கொண்டது.

இதில் அவனின் மாமாவிடம் பேச வைத்து, ஹாஸ்பிடல் பில்லிற்கான பணத்தையும் அனுப்ப வைத்திருந்தாள்.

அந்த என்குயரி டீம் சென்றிருக்க, பிரவீன் மட்டும் இருந்தார். அலுவல் வேலைகள் முடிய, கமாலி ஷாவிற்கு அடுத்து இருப்பவனுக்கு தற்காலிக பொறுப்பு கொடுத்தார்.

பின் “மதியம் லஞ்ச்க்கு போவோம்டா” என்று கேட்டார். சென்னை வந்தால் அவரோடு சுற்றுபவன் அவன் தானே, நேற்று இந்த பிரச்சனைகளில் விலகி இருந்தார்.

“ம்ம்” என்று தலையசைத்தவன், சைந்தவிக்கு ஒரு மெசேஜை தட்டி விட்டு கிளம்பிவிட்டான்.

இருவரும் காரில் ஏறவும், “என்னடா டல்லா இருக்க?” என்றார்.

“அவ்வளவு தெரியுதா பாஸ்” என்றவன் “ஒண்ணுமில்லை ஐ அம் ஓகே” என்றான்.

“நல்ல அருமையான அழகான புத்திசாலிப் பொண்ணு டா, உனக்காக எல்லாம் விட்டு வந்திருக்கு. யு ஆர் லக்கி, வாழ்க்கையை நல்லபடியா வாழு. நேத்து சைந்தவி பேசினது கேட்டு எனக்கு ரொம்ப ஆச்சர்யம்”

“பாஸ்” என்றவன் அவளுக்கு கிடைத்திருக்கும் மேற்படிப்பை சொல்ல…

“வாவ் சூப்பர்டா, நான் தான் சொன்னேனில்லையா நிறைய உயரத்துக்குப் போவா”

“ஆனா திரும்ப விட்டுட்டு இருக்கணும். அது தான் நானே நினைச்சாலும் டவுன் ஆகிடறேன்”

“போடா ஃபூல், எதுக்கு விடணும், அவ பின்னயேப் போ”

“என் அப்பா பாருங்க அமெரிக்கா காரன் விசா குடுக்க, குடுத்தாலும், அங்கே போய் நான் என்ன செய்வேன். இன்கம் வேணும் பாஸ் இன்கம் வேணும். மீ சிம்பிள் galli boy பாஸ், அம்மா அப்பா இருக்காங்க, மனைவி இருக்கா, பணம் வேணும் பாஸ், பணம் வேணும். அதுக்கு வேலை வேணும். எப்படி பின்னாடி போவேன்?”

“தேடுவோம் டா எத்தனை காண்டாக்ட்ஸ் இருக்கு” என்றார் அவனை தைரியப்படுத்தும் விதமாக.

சைந்தவியின் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இவரிடம் பேசிய பிறகு ஒரு நம்பிக்கை, கண்டிப்பா அவளை படிக்கச் சொல்லணும் என்பதாக.

யார் அவனின் நண்பர்கள் அங்கே இருக்கிறார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தவன், அங்கே எதுவும் ஆன்சைட்க்கு வாய்ப்பிருக்கா பாஸ், புதுசா விசிட் எல்லாம் வந்துட்டு போனானுங்க” என்று வினவினான்.

“அவனுங்க ஒரு மார்க்கமா இருக்கானுங்கடா எதையும் கடைசி நிமிஷத்துல தான் சொல்றானுங்க… எதுவும் வாய்ப்பிருந்தா செய்வோம். ஹேப்பி ஃபார் யூ மென். நாளைக்கு தான் ஊருக்கு கிளம்பறேன் நைட் எனக்கு பார்ட்டி கொடுத்தே ஆகணும்”

“பாஸ், அக்கா என்னை கொன்னுடுவாங்க” என்று அவரின் மனைவியை சொல்ல…

“கொஞ்சமா லிமிட்டா பார்ட்டி பண்றோம். நைட் என்னோட வந்துடு” என்றார்.

“ஓகே” என்பதாக தலையசைத்தான். பின்னே எதிர்காலத்தில் எதுவும் உதவி வேணுமென்றால் நின்றாக வேண்டுமே.

ஆனால் இருவருமே கமாலி ஷா பற்றிய பேச்சை எடுக்கவேயில்லை. அவர் மேலதிகாரி எதை பேசவேண்டும் பேசக்கூடாது என்பதில் திண்ணமாய் இருக்க…

“சொல்லிட்டேன், இவனுங்க என்ன பண்ணினா எனக்கென்ன” என்று அவனும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

ப்ரித்வியிடம் சொல்லிவிட… அவனுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் உடனே அண்ணனாய் அடுத்து என்ன என்று யோசித்தான்.

“என்ன பண்ணப் போற சைந்து”

“இப்போ வேலை பண்ணப் போறேன், எதுவானாலும் அப்புறம் பார்க்கலாம்” என்று இலகுவாகச் சொல்லி அவள் வேலையில் ஆழ்ந்து விட்டாள். எவ்வளவு பெரிய சாதனை. அதை சிறிதும் தலைக்கு மேல் கொண்டு செல்லவில்லை.

ப்ரித்விக்கு யோசனை, இவ்வளவு தெளிவானவள் இவ்வளவு புத்திசாலி எப்படி இவனிடம் வீழ்ந்தாள்.

ஆனால் ப்ரித்வி முடிவு செய்து விட்டான். என்னவானாலும் அவளை படிக்க அனுப்பவேண்டும் என்று.

அலுவலக நேரத்தில் பெரிதாய் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவரவர் வேலையை பார்த்தனர். மாலை ப்ரித்வியிடம் பேசினான் “நான் என்னோட வைஸ் ப்ரெசிடென்ட் கூட டின்னர் போறேன், சைந்தவியை வீட்ல விட்டுடு” என்று மட்டும் சொல்லி வைத்து விட்டான்.

“நான் பிரவீன் சாரோட டின்னர் போறேன், வர லேட் ஆகும். ப்ரித்வி உன்னை டிராப் பண்ணிடுவான்” என்று சைந்தவியிடம் சொல்ல…

“உங்க அக்கா வீட்டுக்கு போகலையா?” என்றாள்.

“இவர் கிளம்புறார், இன்னைக்கு இவரோட தான்”

“நீ செய்வது சரியல்ல” என்ற பார்வையைக் கொடுத்தாள்.

“நான் இங்கே வந்ததுல இருந்தே நல்ல ஃபிரண்ட், கேட்கும் போது முடியாதுன்னு சொல்லமுடியாது”

“போ” என்ற பார்வையை கொடுத்தவள், கிளம்பிவிட்டாள்.

இவர்கள் கீழே இறங்கவும் ப்ரித்வி, சைந்தவியை ஏற்றிக் கொள்ள அவனின் புது காருடன் வரவும் சரியாக இருந்தது.

“உன் மச்சான் ஆடி தானே வெச்சிருந்தான். இது என்ன புதுசு, ப்ளாக் கலர் பார்சுனர். ரதம் மாதிரி இருக்கு” என்று சிலாகித்துப் பேசினார்.

“தெரியலை எப்போ எடுத்தான்னு. காலையில தான் பார்த்தோம்”

“செமையா இருக்குடா” என்றார் கார்களின் பிரியரான அவர்.

ப்ரித்வி இவர்களை பார்த்ததும் இறங்கி வந்தான். சைந்தவி கார் அருகில் தான் நின்றிருந்தாள் அவள் வரவில்லை.

அவன் அருகில் வரவும் “என்னோட ப்ரதர் இன் லா” என்று முறையாக அறிமுகம் செய்தான்.

“ஹலோ சர்” என்று ப்ரித்வி கை நீட்ட, பற்றி குலுக்கிய பிரவீன் “நைஸ் டு மீட் யு” என்றார்.

மரியாதை நிமித்தம் சில நொடிகள் பேசியவன், விஜயனிடம் திரும்பி “உங்களுக்குத் தான். நேத்து தான் புதுசா எடுத்தேன்” என்று காரை காண்பித்தான்.

“என்ன? என்ன உளர்ற?” என்றான் விஜயன் கோபமாக.

விஜயன் முகத்தில் டென்ஷனை பார்த்தவள், உடனே அருகில் வந்தாள் சைந்தவி.

“என்ன?” என்றாள் சற்று கலவரமாக.

“இவன் என்னவோ உளறுறான்”

“இவன் என்னை கட்டிப்பிடிக்கிற அளவுக்கு உரிமை எடுப்பான். ஆனா நான் உங்களுக்கு கார் குடுக்கற உரிமையை எடுக்கக்கூடாதா” என்று ப்ரித்வி சொல்ல…

அவன் சொன்ன விதத்தில் ப்ரவீனுக்கு சிரிப்பு வர, முகத்தை வேறு புறமாக திருப்பினார்.

“அண்ணா டேய், என்னடா கலாட்டா இது”

“உங்களுக்காகத் தான் வாங்கினேன். காலையிலயே சொல்லியிருப்பேன், இப்படித் தான் டென்ஷன் ஆவான் ன்னு சொல்லலை. என் பேர்ல தான் வாங்கியிருக்கேன், நீங்க யூஸ் மட்டும் தான் பண்ணப் போறீங்க, உன்னை வீட்ல விட்டு காரையும் விட்டு கிளம்பிடுவேன் சரியா?” என்றான் தங்கையிடம் பொறுமையாக.

விஜயன் முறைத்து நின்றவன் ஏதோ பேச வர, “நாம பேசலாம், இப்போ நோ ஆர்கியுமென்ட்ஸ் ஓகே” என்று சமாதானம் செய்தவள், “இப்போ நீங்க கிளம்புங்க” என்று விஜயனிடம் சொல்லி,

மரியாதை நிமித்தம் “தேங்க் யு சர்” என்று பிரவீனிடமும் சொல்லி கிளம்பிவிட்டாள்.

“உன் புருஷன் என்ன ஓவரா பண்றான்?” என்று மெல்லிய குரலில் ப்ரித்வி முணுமுணுக்க…

“அவன் அப்படித் தான் பண்ணுவான். என்ன இப்போ? நீ அட்ஜஸ்ட் பண்ண மாட்டியா?” என்று சைந்தவி பேசுவது கேட்டது.

“அநியாயம்டா” என்றார் சிரிப்புடன் பிரவீன்.

ஆனாலும் விஜயன் காரின் விஷயத்தில் சமாதானமாகாமல் இருப்பது அவனின் முகத்தில் இருந்து புரிந்தது.

அவர்கள் காரில் ஏறியதும் “நான் சொல்றதை தப்பா எடுக்காதே, அவளோட அண்ணன் அவளுக்காகக் குடுக்கறான். இதை நீ உன்னை இன்சல்ட் பண்ற மாதிரி எடுக்கக்கூடாது”

“உன்னை விரும்பி கல்யாணம் செய்திருக்கா சைந்தவி. உன்னோட வாழ்க்கையோட வசதி வாய்ப்புகளை மட்டும் தான் அவளும் அனுபவிக்கணும்னு என்ன? சைந்தவி அண்ணன் செஞ்சா அக்சப்ட் பண்ணு. நீயே யோசி, உன்கிட்ட இந்த கார் ஒன்னுமில்லைன்ற அளவுக்கு பணமிருந்து, அப்போ உன் மச்சான் இந்த மாதிரி கிஃப்ட் குடுத்தா வேண்டாம்னு சொல்லுவியா? மாட்ட தானே! பதிலுக்கு நீ என்ன பண்ணலாம்னு தானே யோசிப்ப”

“அப்படி யோசி, யார் கிட்டயும் உனக்கு வாங்க இஷ்டமில்லைன்ற அந்த ஸெல்ப் ரெஸ்பெக்ட் எனக்குப் புரியுது. ஆனா  உன்னோட ஸெல்ப் ரெஸ்பெக்ட்காக அவளும் கஷ்டப்படணும்னு என்ன?”

“அப்கோர்ஸ் கார் இல்லைன்றது கஷ்டம் கிடையாது, நான் சொல்றது உதாரணம். நாளைக்கு அந்த பொண்ணுக்கு ப்ராபர்ட்டி வந்தா வேண்டாம்னு சொல்லுவியா?”

“உன்னை கல்யாணம் செய்ததுக்காக அவளோட உரிமைகள் அவளுக்கு மறுக்கப்படக் கூடாது. அது தப்பு”

“நீ இதை உன்னோட பார்வையில இருந்து பார்க்காதே, வேற ஒருத்தன் பிரச்சனைன்னு பாரு. உனக்கே சரி எது தப்பு எதுன்னு புரியும்” என்று அவனை பலவாறு மூளை சலவை செய்தார்.

கடைசியாக “எனக்கெல்லாம் பத்து பைசா கொடுக்க ஆள் கிடையாது நானே சம்பாரிச்சு நானே பண்றேன், நீயும் பண்ணிக்குவ. ஆனா சில விஷயங்கள் திரும்பவும் சொல்றேன் சைந்தவியோட உரிமை, அதை மறுக்காதே”

“நீ கேட்கலை, ஆனா சைந்தவிக்கு வர்றதை நீ வேண்டாம்னு சொல்லாதே”

இப்படியாக அவனின் மாலை அவரோட கனிய, முழு போதையில் இருந்த அவரை அறைக்குள் பத்திரமாய் சேர்ப்பித்து, எப்போதும் வந்தால் அவர்களின் கம்பனி ஆட்கள் தங்கும் இடமென்பதால் அங்கே இரவு பணியில் இருந்த இருந்த ஒருவரிடம் அவரின் அறையின் மேல் ஒரு கண் வைத்துக் கொள்ளச் சொல்லி, காலையில் ஏழு மணிக்கு மேல அவரை எழுப்பி விடுமாறு பணித்து, அவன் வீடு வந்த போது மணி பன்னிரண்டு.

தூக்க கலக்கத்தில் கதவை திறந்து, திரும்ப சென்று படுத்துக் கொண்டவள், அப்போதும் “எனக்கு உன்னை கட்டிப்பிடிச்சு தூங்கணும். நீ என்ன பண்ற குளிச்சிட்டு வந்து என் பக்கத்துல படுக்குற” என்று சொல்லிவிட்டு கண்மூடினாள்.

அவனின் முகத்தில் சிறு புன்னகை. இத்தனை நேர குழப்பங்கள் மறைந்து மனதில் சைந்தவி மட்டுமே நிறைந்தாள்.

அவன் குளித்து வந்து படுத்ததும் அவனின் மேல் ஏறி படுத்துக் கொண்டவள், உறங்க ஆரம்பிக்க…

அவளை புரட்டிப் போட்டு தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டு வந்தான். அவளின் உறக்கம் கலைந்து விட்டது.

“ஹேய் என்ன பண்ற நீ?” என்றாள் பதறி.

“நமக்குள்ள நேத்து தான் முதல் முறை எல்லாம் ஆரம்பிச்சு இருக்கு, நீ இன்னைக்குத் தூங்கற” என்றான் குறைப்பட்டவனாக.

“அய்யே, இன்னா பீலிங்க்ஸ்ஸு என்று நொடித்தவள், “அப்படியே நேத்து நடந்ததை நினைச்சு நீ கனவுல மிதக்கிற, நான் வெட்கப்பட்டுட்டே திரியறேன், ஆளப் பாருடா” என்று அவனுக்கு ஒரு முறைப்பை கொடுத்தாள்.

“நாளைக்கு நான் கனவுல மிதக்குறேனா இல்லை நீ வெட்கப்படுறியோ, எதோ ஒன்னு நடக்கணும். இல்லை ரெண்டும் நடக்கணும்” என்றான் மிதப்பாக.

“நடக்கலைன்னா” என்றாள் அதையும் விட மிதப்பாக.

“நாளைக்கு நைட்டும் ட்ரை பண்ணுவோம். நடக்கற வரை ட்ரை பண்ணுவோம்” என்று வீர வசனம் பேசினான்.

“நடந்த பிறகு”

“அது நடக்காம இருக்க ட்ரை பண்ணுவோம்”

சைந்தவி முகத்தில் உல்லாசம்.

“பாருடா வசனத்தை” என்று கிண்டல் செய்தாள்.

“நானெல்லாம் செயல் வீரன்டி” என்றான் கிசுகிசுப்பாய்.

அந்தக் குரலே அவளை ஏதோ செய்தது. சைந்தவியின் இதழ் கடையில் ஒரு புன்னகை, ஆனால் கண்கள் உரைத்த அரை கூவல் “சொல்லாதே, செயலில் காண்பி” என்பதாய் இருந்தது.

அந்த செய்தியே அவனை போதையேற்றியது. “சவீ” என்றவனின் அழைப்பே அத்தனை மோகத்துடன் இருக்க…

ஒற்றை அழைப்பே அவளை பித்தாக்கப் போதுமானதாய் இருந்தது.

மோகமெல்லாம் முத்தமாய் மாறி அவளை மொத்தமாய் கொள்ளையடிக்க ஆரம்பித்தான்.