இந்த வேலை அவர்களின் குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியம் என்று அவனுடைய அம்மாவுக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் தன்னுடைய கனவுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அவன் வேலைக்குச் சென்றான். அம்மாவும் மகனின் கனவு இப்படி சிதைந்து விட்டதே என்று அழுதார்களே தவிர, இந்த வேலை வேண்டாம் என்று ஒருநாளும் சொன்னதில்லை. சொல்லும் சூழலும் அவர்கள் குடும்பத்தில் இல்லை!

இப்பொழுது வாழ்வாதாரமான அந்த வேலையையே உதறிவிட்டு, அவர்களை விட்டு விலகிச் செல்ல வேண்டுமா ஏன்?

“அதெப்படிம்மா அவங்களால தான் எனக்கு இந்த நிலைமைன்னு சொல்லறீங்க? இந்த வேலை ஆபத்து நிறைஞ்ச வேலை தானேம்மா? நான் வேற வேலை விஷயமா போயிருக்கும்போதும் இப்படி ஒரு தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கே?” என்று விவேக் கேட்க,

“என்னவோ எனக்கு அவங்களோட நாம சம்பந்தப்படறது சுத்தமா பிடிக்கலைப்பா. அவங்க சவகாசமே இனி வேண்டாம். நீ என் பேச்சை கேட்பியா மாட்டியா?” என்று கேட்ட அன்னையின் கோபத்தையும் அழுத்தத்தையும் வினோதமாகப் பார்த்தவன்,

அம்மாவை அப்பொழுது சமாளிக்கும் பொருட்டு, “சரிம்மா. நீங்க இதை எல்லாம் நினைச்சு கவலைப் படாதீங்க” என்று தேற்றினான்.

அம்மாவிற்கு பகலில் உறங்கும் பழக்கம் இருந்தது. இவனும் மருந்துகளின் உபயத்தால் உறங்கி தான் கழிப்பான் என்றாலும் ஏனோ இன்று உறங்காமல் காத்திருந்தான். அவன் காத்திருந்தது போலவே அவனின் அன்னை மதியம் உறங்கியிருக்க, தங்கையை வர சொன்னான்.

“ஏதாவது வேணுமா அண்ணா?” என்றபடி நந்தினி உள்ளே வர, “இங்கே வந்து உட்காரு பாப்பா” என்றான் பரிவுடன்.

அவளுக்கு என்னவோ என்று நெஞ்சம் தடதடத்தது. பயத்துடன் வந்து அமர, “ஏன் என்னவோ மாதிரி இருக்க?” என்று விசாரித்தான்.

“நான் நல்லா தான் இருக்கேன் ணா” என்று வெகு அவசரமாக மறுப்பு தெரிவித்தவளை, “இங்கே பாரு நந்தினி, நீயும் அம்மாவும் கொஞ்ச நாளா சரியில்லை. ஏன் இப்படி இருக்கீங்கன்னு எனக்கு நீ சொன்னா தானே புரியும்” என்று நிதானமாக தொடங்கினான். மீண்டுமொரு வேக மறுப்பு அவளிடம்.

அவன் விடுவதாக இல்லை. பேசிப்பேசியே அவளை சமாதானம் செய்தான். மெல்ல மெல்ல விவரங்களை வாங்க முயற்சி செய்தான். சின்னவள் வெகு சீக்கிரத்திலேயே நடந்த விஷயங்களை எல்லாம் அண்ணனிடம் சொல்லி விட்டிருந்தாள். கேட்ட விவேக் ஸ்தம்பித்துப் போனான்.

சத்யா அப்பாவின் சாயலில் இருப்பதற்கான காரணம் புரிந்தது. பார்த்த முதல் நாளிலிருந்தே ஆதியின் மீது பாசம் பெருகியதற்கான காரணம் விளங்கியது. அம்மாவின் அச்சம், தங்கைக்கும் நிறையவே இருப்பது புரிய அவன் மனம் வலித்தது.

“எங்களை விட்டு போயிட மாட்ட தானே ண்ணா” என்று அவன் நெஞ்சில் முட்டி சின்னவள் அழுதாள். “பைத்தியமாடி நீ? நீ பொறந்ததுல இருந்து உன்னை தோளில் சுமக்கறேன். நீ எனக்கு பாரமா போயிடுவியா? உன்னை வேணாம்ன்னு சொல்லிட்டு என்னால போக முடியுமா? அம்மா தான் வயசானவங்க புரியாம கவலைப்பட்டா நீயும் அழுவியா?” என்று அவளைக் கடிந்து கொண்டான்.

“அம்மா பாவம் ண்ணா. நீ இல்லாம அம்மாவால இருக்கவே முடியாது. என்னைவிட உன்னைத்தானே அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு கூட சத்யா அண்ணாவை பார்த்ததும், நம்ம அப்பா மாதிரி சாயல்ல இருக்காங்களே அப்படின்னு அவங்க கிட்ட பேச ஆசையா இருந்தது. ஆனா அம்மா அந்த அண்ணனை கிட்ட கூட சேர்க்கலை. அவங்க முகத்தைக்கூட பார்க்க விரும்பலை. அந்த அண்ணா ஏங்கி போயிட்டாங்க. பார்க்கவே பாவமா இருந்தாங்க. ஆனா, அம்மா அவங்ககிட்ட இளகவே இல்லைண்ணா” என்றபோது அம்மாவின் பாசத்தில் அவன் வெகுவாக பிரமித்துப் போனான்.

அவன் கண்ணில் கண்ணீர் நிறைந்து விட்டது. தங்கை அறியாமல் துடைத்துக் கொண்டவன், “அம்மாவுக்கு உன்னையும் தான் ரொம்ப பிடிக்கும். இந்த சின்ன குட்டியை பிடிக்காம யாரும் இருப்பாங்களா? உனக்கு சத்யா அண்ணாவை பார்க்கணுமா?” என்று பரிவுடன் கேட்டான்.

“இல்லைண்ணா அம்மாவுக்கு பிடிக்காத எதுவும் எனக்கு வேணாம். இதெல்லாம் புதுசா பழகிக்கவும் பயமா இருக்கு. எனக்கு நீ மட்டும் போதும் ண்ணா” என்று சிறுபிள்ளை போல அழுதாள்.

இந்த நிலையை எப்படி கையாள என்று அவனுக்குத் தெரியவில்லை. சத்யாவின் ஏக்கம் அவனாலும் புரிந்துகொள்ள முடிகிறது. ஒருவேளை ஆதி தன்னை வெறுத்து ஒதுக்கினால் தனக்கு எப்படி வலிக்கும், இப்போது அம்மா, தங்கையின் நிராகரிப்பின் அவன் நிலையும் அதுவாகத்தானே இருக்கும்?

ஆனால், இது உணர்வுகள் சம்பந்தப்பட்டது. அம்மா இத்தனை தூரம் அச்சப்படும்போது அவரை புறக்கணிக்கும் தைரியமும் அவனுக்கு இல்லை.

“நந்தினி, இப்போதைக்கு எதுவும் யோசிக்க வேணாம்டா பாப்பா. அண்ணனுக்கு உடம்பு குணமாகட்டும். அப்பறம் இதைப்பத்தி யோசிக்கலாம். ஆனா, எந்த நிலையிலும் உங்களை விட்டு அண்ணா எங்கேயும் போக மாட்டேன் சரியா?” என்று அவன் கேட்டதும், “எனக்கு தெரியும் ண்ணா” என்று சொல்லியவள் தலையை ஒதுக்கி விட்டவன், “அப்பறம் ஏன்டி அம்மா கூட சேர்ந்து நீயும் பயந்துட்டு இருக்க” என்று கிண்டல் செய்தான்.

“ஹான்… உங்களுக்கென்ன? எங்க பயம் எங்களுக்கு” என்று அவன் தோளில் ஒரு அடியைப் போட்டவள், “சரி தூங்கி எந்திரிங்க” என்று சொல்லிவிட்டு வெளியேறினாள்.

தங்கையின் முதுகை வெறித்தபடி பெருமூச்சு விட்டவனுக்கு, மனம் ஒருநிலையில் இல்லை. இந்த சூழலைக் கையாளும் வலு இல்லாதவன் போலத் தளர்ந்து போய் காணப்பட்டான்.

*** ஆதி சென்னை விமான நிலையம் வரும் நேரம் அங்கு சென்று நிற்க வேண்டும் என்று தாராவின் பரபரப்புக்கு, தடை வந்துவிட்டது.

அதி இந்த செய்தியை இப்பொழுது யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று தென்னரசுவிடம் சொல்லியிருக்க, அவன் வருவது ரகசியமாக வைக்கப்பட்டிருந்த காரணத்தால், குடும்பத்தினர் யாரும் விமான நிலையம் வர வேண்டாம் என்று தென்னரசு சொல்லி விட்டான்.

வரவேண்டாம் என்று சொல்லி விட்டார்களே என்று பெண்ணவளுக்கு முகம் சுருங்கிப் போனது. எப்பொழுது வருவான் என்று வாசலைப் பார்த்தே அமர்ந்திருந்தாள். அடிக்கடி வாசலுக்குச் செல்வதும் உள்ளே வருவதுமாக அவளின் செய்கையை அனைவரும் கவனித்தாலும், யாரும் கேலி செய்து அவளை சங்கடப் படுத்தியிருக்கவில்லை.

“அண்ணா வரும்போது வண்டி சத்தம் கேட்கும். அப்ப வாசலுக்கு போலாம், நீ சொன்ன மாதிரி பாராட்டு விழா நடத்தலாம். இப்ப ஒரு இடத்துல உட்காரேன்” என சத்யாவே பொறுமை இழந்து சொல்லும் அளவில் அலப்பறை செய்தாள்.

“ம்ப்ச் பேசாம இரு சத்தி, பாரு தென்னரசுக்கு போன் பண்ணி விவரம் சொல்லறாரு. நமக்கு யாருக்காவது ஒரு போன் வந்ததா? எத்தனை நாள் ஆச்சு? மனுஷனுக்கு நாட்டு மேல அக்கறை இருக்க வேண்டியது தான், அதுக்காக குடும்பத்தை மறந்துடுவாங்களா? இப்படி எங்கேயாவது அநியாயம் நடக்குமா சொல்லு?” என பொரிந்து தள்ளினாள்.

“ஆமாம் ஆமாம் ரொம்ப அநியாயம் தான்” என ஒத்துப் பாடியவனுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் என்கிற நிலை தான். இன்னும் கொஞ்ச நேரம் கழித்து தோசையைத் திருப்பி போடுவதைப் போல அண்ணனைப் பற்றிய கணிப்பைத் திருப்பி போடுவாள் என அவனுக்குத் தான் நன்கு தெரியுமே!

அவன் எண்ணியது போலவே, “ஆரத்தி எடுக்க சீதாம்மா கிட்ட சொல்லி வைச்சேன், இரு ரெடி செஞ்சாங்களா பார்க்கணும்” என்று சமையலறை நோக்கி செல்ல பார்த்தவளுக்கு சீதாம்மாவே பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தார்.

“மதியமும் பசியில்லைன்னு சொல்லிட்டம்மா. கொஞ்சம் இந்த ஜீஸ் ஆச்சும் குடி” என்று சொன்னவரை அவள் முறைத்துப் பார்க்க, “நீ கேட்ட ஆரத்தி எல்லாம் ரெடி ஆயிடுச்சு. ரொம்ப சோர்ந்து தெரியற, கொஞ்சம் குடிம்மா” என்று வற்புறுத்தினார்.

“இன்னும் அண்ணன் வரதுக்கு நேரம் இருக்கு, குடி தாரா” என்று சத்யாவும் தொடங்கியவன், பாட்டியின் முறைப்பில், “குடிங்க அண்ணி… அண்ணி…” என்று இளித்தான்.

அவள் வேண்டா வெறுப்பாகப் பழச்சாறு குடித்து முடித்தும் பதினைந்து நிமிடங்கள் ஆகிவிட்டது. அவன் தலைவன் வருவதாகக் காணோம்.

அடுத்த சில நிமிடங்களில் கார் சத்தம் கேட்க, முதல் ஆளாக வாசலுக்கு ஓடினாள். எத்தனை நாட்கள் கழித்து அவனைப் பார்க்கப் போகிறாள். உள்ளம் ரயில் எஞ்சின் போல தடதடத்தது.

தாராவின் கண்கள் அங்கு வரிசையாக வந்து நின்ற கார்களிலேயே நிலைத்து நிற்க, நடுவில் நின்றிருந்த காரிலிருந்து கம்பீரமாக இறங்கி நின்றான் ஆதீஸ்வரன், அவனைப் பார்த்த பரவசத்தில் அவனை நோக்கி சில அடிகள் எடுத்து வைத்துவிட்ட தாரா அதிவேக மின்சாரம் தாக்கியவளைப் போல அதிர்ந்து நின்றுவிட்டாள்.

அவளின் கண்கள் கலங்கி, கண்ணீர் அவளின் கட்டுப்பாட்டையும் மீறி பொழியத் தொடங்கி விட்டது. மூச்செடுக்க முடியவில்லை, கால்கள் நிற்க முடியாமல் தள்ளாடியது. மனைவியின் நிலை புரிந்தும் ஆதீஸ்வரன் அவளின் அருகில் செல்லவில்லை. அவளுடைய உணர்வு போராட்டங்களை அவன் எதிர்பார்த்தது தானே!

ஏனென்றால் ஆதீஸ்வரனை தொடர்ந்து அந்த காரிலிருந்து அலக்கியாவும் தான்பாபுவும் இறங்கியிருந்தார்கள்.

தாராவிற்கு கேவல் ஒன்று வெடிக்க, “அலக்கி…” என்றவள், தன் கணவன் நிற்பதையும் மறந்து தோழியை நோக்கி ஓடியிருந்தாள். சின்ன சிரிப்புடன் அவளைப் பார்த்தவன், தான்பாபுவைப் பார்த்து கண் ஜாடையில் அவர்கள் இருவரையும் காட்டி ஏதோ சொல்லி அழகாகச் சிரித்தான்.