அத்தியாயம் இருபத்தி ஐந்து:

இத்தனை நாள் மனப் போராட்டங்கள் முடிவிற்கு வந்தது போல அப்படி ஒரு அயர்வு உடலிலும் மனதிலும் சைந்தவிக்கு.

குளித்து வந்து கடவுளை வணங்கி அமைதியாக சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். பசித்தது. எப்படியோ குளித்து விட்டாள். காஃபி போடுவதற்குகெல்லாம் முடியாது. காலை ஐந்து மணி தான் ஆகியது. ஆனால் அப்படி ஒரு பசி.

கையில் இருந்து அலைபேசியினால் விஜயனிற்கு அழைக்க, நல்ல உறக்கத்தில் இருந்தவன் மெதுவாக விழித்து யார் என்று பார்க்க, சைந்தவி.

படுக்கையில் அவளைப் பார்க்க காணவில்லை. பயந்தே விட்டான்!

வேகமாக எடுக்க “பசிக்குது, எனக்கு காஃபி வேணும்” என்ற அவளின் குரல்.

“எங்க இருக்க?”

“வெளில ஹால்ல”

“அங்கேயிருந்து எதுக்குக கூப்பிடற”

“எனக்குப் பசிக்குது, ஆனா எனக்கு காஃபி போட முடியலை”

இன்னுமே பயந்து விட்டான்!

வேகமாக எழுந்து வெளியில் வந்து “என்ன ஆச்சு?” என்று பதட்டமாகக் கேட்டான்.

“பசிக்குது” என்றாள் மீண்டும்

“என்னவோ முடியலைன்னு சொன்ன?” என்றான் பயந்து.

“ப்ச், டயர்டா இருக்கு” என்றாள் அயர்வாய் கண்மூடி.

“இதுக்கு தான் சீக்கிரம் தூங்கலாம்னு சொன்னேன், உன்னால தான் லேட்”

அவனை முறைத்தவள் “அந்த சீக்கிரம் எத்தனை மணிங்க எஜமான்?”

“மூணு” என்று முணுமுணுத்தான்.

“என்னால லேட் ஆனது எவ்வளவு மணிங்க”

“மூணு அஞ்சு”

“அந்த அஞ்சு நிமிஷத்துல நான் என்ன கிழிச்சேன்” என்று அவனை முறைத்தாள்.

உடை அணிந்து கொண்டாய் என்றா சொல்ல முடியும்!

எந்த சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகளையும் உதிர்க்காமல் வாய் மேல் கை வைத்துக் கொண்டான்.

நேற்று மதியம் உண்டது, அதுவும் அந்த என்குயரி அது இதென்று பதட்டம். சரியாக உணவு இறங்கவில்லை. பின்பு மாலை ஒரு காஃபி அவ்வளவே. அதன் பிறகு விஜயன் எங்கே விட்டான் அவளை என்றும் சொல்லலாம், எங்கே விஜயனை விட வைத்தால் இவள் என்றும் சொல்லலாம். சரி விகிதப் பங்கு தான், ஆனாலும் அயர்ச்சி மட்டும் பெண்ணவளுக்கே அதிகம்.

அப்போதும் “வேற ஒன்னுமில்லையே” என்றான் கவலையாக.

அவனைப் பார்த்து அருகில் வருமாறு கையசைக்க…

அவன் அருகில் குனியவும், வெற்று மார்ப்பில் கை முஷ்டி செய்து வலிக்காமல் குத்தியவள் “முதல்ல காஃபி குடு, அப்போ தான் எதுவும் இருக்கா இல்லையான்னு தெரியும்”

வேகமாக சென்று அவன் பாலை பிரிட்ஜில் இருந்து எடுத்து காய்ச்ச ஆரம்பித்தான், அவளைத் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே.

அவளோ பார்வையை எல்லாம் திருப்பவேயில்லை, விஜயன் மீது மட்டுமே. ரசித்துப் பார்த்திருந்தாள். இதுவரை கருப்பு வெள்ளைப் படமாக இருந்த வாழ்க்கை இப்பொது கலர் படமாக ஹெச் டீ எஃபக்டில் மாறிவிட்டது போலத் தோன்ற, தன்னுடைய உவமையை நினைத்து அவளுக்கே புன்னகை.

சோஃபாவில் அமர்ந்து எதிரில் இருந்த டீபாயில் கால் நீட்டி வைத்திருந்தாள். ஓபன் கிச்சன், அதனால் அவன் வேலை செய்வது நன்கு பார்வையில் பட்டது. ஒரு த்ரீ போர்த்ஸ், டி ஷர்டில் இருந்தாள்.

அந்த பார்வை தீவிரமாய் அவனை பார்த்து இருந்தது.

வேகமாய் எல்லாம் செய்து சுட சுட காபியுடன் அவள் அருகில் அமர்ந்தான்.

“ரொம்ப சூடா இருக்கும், நான் குடிக்கிற சூடுக்கு குடு” என்றாள் அதிகாரமாய்.

வேகமாக சின்ன கப்பில் கொஞ்சமாக ஊற்றி வாயில் ஊதி அதை சுழற்றி, அவளுக்கு கொடுக்க, குடித்து கொடுக்கவும் மீண்டும் அதே மாதிரி கொடுக்க முழு காஃபியையும் குடித்து முடித்த பிறகு சற்று தெம்பாய் உணர்ந்தவள்…

சிறு புன்னைகையோடு அவனைப் பார்த்தாள். அதன் பிறகு அவனின் முகம் சற்று தெளிந்தது.

“நீயும் குடிச்சிடு, நீ சூடா குடிப்ப, குடி” என்றால் ஏதோ பெரிய மனது கொண்டு போனால் போகிறதென்று சொல்வது போல. அவனை குடித்த பிறகு தான் விட்டாள்.

இவளின் பாவனைகளில் சற்று கலவரமாய் உணர்ந்தவன், நான் தூங்குமுன்ன கேட்டேன் தானே. ஆர் யு ஓகே ன்னு” என்று அவன் சொல்ல…

“அப்போ ஓகே, இப்போ இல்லை. ரொம்ப டயர்ட் உடம்பெல்லாம் வலிக்குது”

“எங்கே வலிக்குது நான் பிடிச்சு விடறேன்”

“என்ன காமெடியா?”

“சே, சே, சீரியஸா” என்றவன் அவளின் கால்களைத் தூக்கி மடி மீது வைத்து கொண்டு மெதுவாக பிடித்து விட, காஃபி வயிற்றை சற்று தெம்பாக்கியிருக்க, அவன் கால் பிடித்து விடுவது உடலுக்கு ஒரு இதத்தைக் கொடுத்தது.

அவன் மேலேயே ஏறி வாகாக சாய்ந்து அமர்ந்துகொண்டவள் “எனக்கு வலிக்காத மாதிரி கட்டிப் பிடிச்சிக்கோ” என்று சொல்லி கண் மூடியவள் தான், நிமிடத்திற்குள் உறங்கி விட்டாள்.

“ராட்சசி என்னை பயமுறுத்திட்டா” என்று அவளை திட்டிக் கொண்டே, அவளை ஆழ்ந்து சுவாசித்தான். குளித்து வாசனையாய் இருந்தவளின் சுகந்தம் ஒரு உற்சாகத்தை கொடுக்க அவள் மீண்டும் விழிக்கும் வரை ஆடாது அசங்காது அவளை ஏந்தி இருந்தான்.

மனது அப்படி ஒரு பரவச நிலையில் இருந்தது.

தங்களுடைய வாழ்வு சிறக்க வேண்டும் என்று மனம் விடாது இறைவனிடம் வேண்டியது.

வேண்டும் போதே, என்னவோ அவளோடு வாழும்வரை இல்லாத பயம், வாழ்ந்த பிறகு வந்திருந்தது. தானும் அவளும் பல காலம் இணைபிரியாது வாழ வேண்டும். அவளை மீண்டும் தனியாய் எக்காரணம் கொண்டும் விடக்கூடாது. தனக்கு எதுவும் ஆகிவிட்டால் இவளின் நிலை என்ன. இப்படி சில கலவரமான எண்ணங்கள் கூட.

அவனின் நினைப்பு அவளுக்குப் புரிந்ததோ என்னவோ. உன்னை விட மாட்டேன் என்பது போல உறக்கத்திலேயே அவனின் கழுத்தை சுற்றி கை போட்டுக் கொண்டாள்.

நேற்று திளைத்த இன்பமென்ன, இன்று வரும் யோசனை என்ன? அறிவுகெட்டவனே என்று அவனுக்கு அவனே திட்டிக் கொண்டான்.

அவளின் மொபைல் அருகில் இருக்க, அதில் நோட்டிஃபிகேஷன் வந்ததன் சத்தம்.

என்ன இது காலையில என்று அவன் அதனைப் பார்க்க, அவளிற்கு மெயில் வந்திருந்தது.

அவளைத் தாங்கி அமர்ந்தே இருக்க, அதனை எடுத்து படித்தான். பார்த்தும் ஆச்சர்யம் உடன் அதிர்ச்சியும் கூட. அவளுக்கு அமெரிக்காவில் பிரபல பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்திருந்தது. அதுவும் முழு உதவித் தொகையுடன்

இது கிடைப்பது சாமாண்யமல்ல, அவளின் இந்த அங்கீகாரம் மிகப் பெரியது. ஆனால் அவன் வந்த நாளாய் இதனைப் பற்றிய பேச்சே இல்லை. சேர்ந்து வாழ ஆரம்பிக்கும் முன் இதற்காக உழைத்திருப்பாள் என்று புரிந்தது.

ஆனால் திரும்ப ஒரு பிரிவா?

அந்த மெயிலை அன்ரீட் செய்தவன், அலைபேசியை அருகில் வைத்து அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவளாய் சொல்லட்டும் பிறகு பார்க்கலாம் என்று நினைத்து அணைப்பை இன்னும் இறுக்க, உறக்கம் கலைந்தவள், “எதுக்கு இப்படி இறுக்குற வலிக்குது” என்றாள் அதட்டலாய்.

தளர்த்தியவன் “ஆஃபிஸ் டைம் ஆச்சு. இப்போ எழுந்தா தான் கிளம்ப முடியும்”

“போகணுமா?” என்று சுணங்கியவள், தலையை நிமிர்த்தி அவன் முகம் பார்த்து, சோபையாய் புன்னகைத்தவள், மீண்டும் அவனின் மார்ப்பில் முகம் புதைக்க…

“கிளம்பணும் சவீ”

“கிளம்பலாம், ஒரு அஞ்சு நிமிஷம்” என்றவள் அவனின் இதயம் இருக்கும் இடத்தில் அழுத்தமாய் முத்தம் வைத்தவள் மீண்டும் அவனுள் அழுத்தமாய் மூகம் புதைத்துக் கொண்டாள்.

இப்போது அவனின் கைபேசி அடிக்க, யாரென்று பார்த்தால் அவனின் அம்மா. அவன் எடுக்கவில்லை.

“யாரு போன்”

“அம்மா”

“எடுத்துப் பேசு”

“அப்புறமா பேசறேன்” என்றான், நிச்சயம் பணத்திற்கு தான் ஃபோன் அடிப்பார் என்று புரிந்து. இன்றைக்கு தான் பூங்கோதை டிஸ்சார்ஜ் என்று நேற்று மாலையே அழைத்து சொல்லியிருந்தார்.

“ப்ச், பேசு, காலையில கூப்பிடறாங்க. எதுவும் முக்கியமா இருக்கப் போகுது, எடு” என்றாள் அதட்டலாக.

தட்ட முடியாமல் எடுக்க… “விசி கண்ணு, இன்னைக்கு பூவ வூட்டுக்கு அனுப்பறாங்க, நாம தான் பணம் கட்டணும்”

“மா, இன்னாம்மா நீ பேஜார் பண்ணிகினு, என்ட்ட துட்டு இல்லம்மா”

“மாமாட்ட கேளு குடுப்பார்”

“மா, அது எதுக்குமா அவரே கட்டிக்குவாறு”

“இல்லை, நாம தான் கட்டணும்” என்றார் பிடிவாதமான குரலில்.

“முடியாதும்மா” என்று சொல்லி அவன் சொல்லிவிட.

“இல்லை, நாம தான் கட்டணும்” என்றார் அவனை விட பிடிவாதமான குரலில்.

எல்லாம் அவளின் காதில் விழுந்தது. அவனின் முகத்தை தான் பார்த்திருந்தாள்.

“முடியாதும்மா” என்று சொல்லி அவன் வைத்துவிட்டான்.

“என்ன?” என்றாள் கவலையான குரலில்.

அவன் மௌனமாக இருக்க, “சொல்லணும்” என்றாள் அவனின் கண்களை நேருக்கு நேர் பார்த்து.

“பூவோட ஹாஸ்பிடல் பில் கட்டணுமாம், நிறைய குடுத்துட்டேன், இப்போ கூட வளைகாப்பு அஞ்சு பவுன் ப்ரேஸ்லெட் மாதிரியும் இல்லாம வளையலும் இல்லாம ஏதோ கேட்டா, செய்யணும்னு அம்மாவும் சொன்னாங்க. என்கிட்டே இருந்த பணத்தை எல்லாம் வழிச்சு தான் வாங்கிக் கொடுத்தேன்”

“உனக்குத் தெரியாததில்லை என்னோட நிலைமை, என்னோட வசதி வாய்ப்பு. இப்போ நான் சம்பாரிக்க ஆரம்பிச்ச பிறகு தான் என்கிட்டே பணமே. என்னோட சம்பளம் மட்டும் தான் எனக்கு. என்னவோ பரம்பரை பணக்காரங்க மாதிரி செலவு வைக்கிறா இந்த பூவு. சம்பாரிக்கறான்ல செய்யட்டும்ன்னு. எங்கே போவேன் பணத்துக்கு. எந்த பேக் கிரௌண்ட் சப்போர்ட் எனக்குக் கிடையாது” என்று ஆதங்கமாய் பேசினான்.

“ஏன் நான் இல்லை, நான் இருக்கேன், வேற யார் வேணும் உங்களுக்கு என்கிட்டே பணமிருக்கு, குடுத்துடலாம்” என்றாள் இதுவரை பேசிய ஒருமை பன்மை அதட்டல் மிரட்டல் எல்லாம் கைவிட்டு பொறுப்பாய்.

“வேண்டாம், நிறைய செஞ்சிட்டேன். இன்னும் செய்யணும்னு இல்லை”

“பணம் நமக்குள்ள என்னைக்குமே வரக்கூடாது. பணம் எனக்கொரு விஷயமும் கிடையாது… செய்யணுமோ இல்லையோ அம்மா கேட்கறாங்க தானே செஞ்சிடுங்க”

“உனக்குத் தெரியாது, லிஸ்ட் நீளும், இது முடியாது, பூவு வசதியா இருக்கா, நாம செய்யணும்னு கிடையாது”

“அவங்க வசதியா இருந்தா நாம செய்யக் கூடாதா என்ன?”

“அப்படிக் கிடையாது நம்மை சிரமப்படுத்தி செய்யணும், அவசியமில்லை. எவ்ளோ பெரிய லிஸ்ட் குடுத்திருக்கா இந்த பூவு தெரியுமா? என்னால முடியாதுன்னு தெரிஞ்சும் குடுத்திருக்கா. அது ரொம்ப வருத்தமா இருக்கு எனக்கு” என்றான் இன்னுமே ஆதங்கமாக.

அவனை அணைத்துக் கொண்டவள் “லிஸ்ட் எல்லாம் அப்போ பார்க்கலாம், இது இப்போ செய்வோம். நீங்க உங்க மாமாக்கு போன் செஞ்சு எவ்வளவுன்னு கேட்டு அனுப்பிடுங்க. ஈவ்னிங் போய் உங்க அம்மாவைப் பார்த்துட்டு வந்துடுங்க”

“சவீ” என்றவன் வேண்டாம் என்பது போல அவளின் முகம் பார்க்க…

“பார்த்துக்கலாம்” என்று சொல்லி எம்பி அவனின் இதழில் இதழ் பதிக்க… மீள விரும்பாத இதழ் முத்தம். வெகு நேரம் நீடிக்க…

எழுந்து குளித்து தயாரான போது.. அப்படி ஒரு பசி இருவருக்குமே.

நேரமும் ஆகிவிட்டது. அவர்களின் கம்பனி வாகனம் சென்றிருக்கும். கேப் வேறு புக் செய்து செல்ல வேண்டும், அலுவலக கேஃபிடீரியா சென்று கொள்ளலாம் என்று நினைத்து சைந்தவி இந்த முறை அவளின் பசியை சொல்லக் கூட இல்லை.

பூட்டி வேகமாக இறங்கினர்.

வாயிலுக்கு அவர்கள் செல்லவும், ஒரு புது கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

யார் என்று பார்த்தால் ப்ரித்வி!

“ப்ரித்வி டைம் இருக்கா? எங்களை ஆஃபிஸ் விடறியா” என்றாள் சைந்தவி.

“அதுக்குத் தானே வந்தேன், ஏறு ஏறு”

சைந்தவி முன்னால் ஏற விஜயன் பின்னால் ஏறினான்.

“புது காரா சொல்லவேயில்லை” என்று சைந்தவி பேச…

“முதல்ல சாப்பிடு, விஜயன், பாக்ஸ்ல பாரு இட்லி சாம்பார் இருக்கும், ஒண்ணுல அஞ்சு இருக்கும், இன்னொண்ணுல மூணு இருக்கும், அதிகம் இருக்குறதை நீ எடுத்துட்டு குறைவா இருக்குறதை சைந்தவிக்கிட்ட குடு” என்று பேசிக்கொண்டே ட்ராஃபிக்கில் கலந்தான்.

“அப்பாடி, அண்ணா டேய் யூ ஆர் சோ ஸ்வீட்” என்று ப்ரித்வியை கொஞ்சியவள், “உனக்கு எப்படித் தெரியும், நாங்க ஆஃபிஸ்க்கு லேட் பசியோட இருக்கோம்னு”

“உனக்கு போன் பண்ணினேன், இவன் தான் எடுத்தான். லேட் ஆச்சு இப்போ தான் குளிக்கறா, இன்னும் சாப்பிடலை, டைம் ஆச்சுன்னு பறந்தான்”

“சரின்னு வழில ஒரு மெஸ் இருக்கு, நல்லா இருக்கும்னு என் ஆஃபிஸ்ல சொல்லியிருக்காங்க அங்கே போய் வாங்கிட்டு வந்தேன்”

பாக்ஸ் ஓபன் செய்த விஜயன் அவளின் பசியறிந்து, ஐந்து இருப்பதை அவளிடம் தள்ளி, மூன்றை இவன் உண்ண ஆரம்பித்தான்.

புரிந்தாலும் பேச்சுக்குக் கூட வேண்டாம் என்று சொல்லவில்லை. வேகமாக உண்ண ஆரம்பித்தாள்.

அலுவலகம் வந்ததும் இறங்கியவள் “அண்ணா டேய் நேத்து ஆஃபிஸ்ல ஒரு சம்பவம் பண்ணினேன் இவனால, உன்கிட்ட அதைப்பத்தி சொல்லவேயில்லை. ஈவ்னிங் வா சொல்றேன்” என்று வேகமாக நடக்க ஆரம்பிக்க…

கதவை திறந்து காரில் அமர்ந்திருந்த ப்ரித்வியை அப்படியே அணைத்து விடுவித்து, விஜயன் நடக்க ஆரம்பிக்க…

“ரெண்டு பேருக்கும் கிறுக்கு பிடிச்சிருச்சோ” என்று யோசித்தபடியே காரை எடுத்தான் ப்ரித்வி.

இன்னுமே சைந்தவி அவளின் மொபைலில் வந்திருந்த மெயிலை பார்க்கவேயில்லை.

  .