சில்லென புது மழைத்துளி!

21

முதல் இரவு.. ம்..  திருமணமாகி பெற்றோரும் பிள்ளைகளுமாக இருக்கும் முதலிரவு. முதல்மாடியில் கடலினை வேடிக்கை பார்த்துக் கொண்டேதான்.. பால் பருகினர் நால்வரும். சலசலவென குரு விசாகன் இருவரும் பேசிக் கொண்டேயிருந்தனர்.

இதுவும் ஒருவகையில் இதமாக இருந்தது.. குரு “சுபிம்மா, எனக்கு ஸ்கூல்க்கு போக வேண்டாம்.. நாங்க லீவ் எடுத்துக்கிறோம்” என்றனர்.

சுபி புன்னகைத்தாள்.. அடுத்த ஒருவாரம் இவர்களை பள்ளிக்கு அனுப்புவதாக இல்லை.. விடுமுறை சொல்லிவிட்டனர். ஆனால், பிள்ளைகள் இருவருக்கும் தெரியாது.

விசாகன் “ம்மா.. ஒகே தானே.. குரு.. அம்மாக்கு ஒகேதான் டா.. நம்மகிட்ட விளையாடுறாங்க” என்றான்.

சுபி “அதெல்லாம் இல்ல, நாளைக்கு ஸ்கூல் போகனும்” என்றாள் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு.

குரு, விசாகன் முகத்தை பார்க்க.. விசாகன் அன்னையின் புன்னகையில்லா முகத்தில் அமைதியானான்.

குரு விசாகனிடம் ரகசியமாக ‘என்னடா பண்றது’ என கைகளை அசைத்துக் கொண்டிருந்தான்.

விசாகன் கரணை பார்வையால் காட்டிக் கொண்டிருந்தான்.. ‘அங்கே கேள்’ என. ம்.. விசாகன் கரணை இன்னமும் அப்பா என அழைக்கவில்லை. ஏன் கரணிடம் ஏதும் கேட்கமாட்டான்.. தன் அன்னையின் அருகில் கரண் நின்றாலே.. அன்னையிடம் பேசமாட்டான்.. தான் போய் நடுவில் நின்றுக் கொள்வான். குருவிற்கு இது புரியாது. ஆனால், பெரியவர்கள் புரிந்துக் கொண்டு.. விசாகனை சமாதானப்படுத்த எண்ணிக் கொண்டனர்.

முதலில் தங்களின் திருமணம் பற்றி.. பெற்றோரிடம் சொல்லியபிறகு.. பிள்ளைகளிடம் சுபி கரண் இருவரும் சேர்ந்தே பேசியிருந்தனர்.

மொட்டை மாடியில் அமர்ந்து இரு பிள்ளைகளிடமும் கரண் “நாங்க கல்யாணம் செய்துக்கலாம்ன்னு இருக்கோம்..” என்றான்.

விசாகனுக்கு, திருமணம் என்பது புரியும் ஆனால், புரியாது. விழித்தான்.

குரு விசாகனிடம் ரகசிய குரலில் “நமக்கு இரேண்டுபேரும் அப்பா அம்மா ஆக போறாங்க டா” என்றான்.

சுபி இந்த பேச்சினை கேட்டு தலைகுனிந்தாள். விசாகன் “எனக்குதான் அப்பா அம்மா இருக்காங்களே டா..” என்றான், சின்ன குரலில்.

கரண் தலையும் தாழ்ந்தது.. ஆனால், குழந்தைக்கு புரியவில்லை எனவும் புரிந்தது.

குரு விசாகனிடம் “எனக்கு அம்மா இல்லையே டா” என்றான்.. பெரிதான குரலில்.

விசாகன் “நீ என்கிட்டே சொன்னதேயில்லை.. எங்க அப்பா மாதிரி உன் அம்மாவும் பாரீன்னில் வேலை பார்க்குறாங்கன்னு நினைச்சேன்” என்றான்.

குரு “விசா.. உன் அப்பா..” என தொடங்க..

சுபி “விசா, அப்பாவை பத்தி உனக்கு அம்மா என்ன சொல்லியிருக்கேன்..” என்றாள்.

விசாகன் “அப்பா, சாமிகிட்ட போய்ட்டாங்க” என்றான் தலை தாழ்ந்து.

விசகானுக்கு.. தாத்தா பாட்டி மூவரும் வெவ்வேறு கதைகள் சொல்லுவர் அவனின் தந்தை பற்றி. அதனால், அவனுக்கு அவனின் தந்தையின் நினைவுகள் எப்போதும் குழப்பமானது. இறுதியின் அம்மா சொல்வதுதான் நிஜமென தெரியும் பிள்ளைக்கு. இப்போதும் அப்படியேதான்.

குரு அமைதியானான். 

சுபி விசாகனிடம் “நானும் கரண் அங்கிளும் கல்யாணம் செய்துக்கலாம்ன்னு இருக்கோம்.. அப்படின்னா.. நாம எல்லோரும் ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கலாம்.” என்றாள்.

விசாகன் “எனக்கு லக்ஷ்மிகாந்தன் தானே அப்பா” என்றான்.. சின்ன குரலில்.

கரண், இப்போது விசாகன் அருகில் வந்தான்.. மாலை மங்கிய இரவு நேரம்.. கீழே அமர்ந்திருந்த விசாகனை தூக்கினான்.. சுபியிடமிருந்து விலக்கி.. “விசா, உனக்கு லக்ஷ்மிதான் டாட். குருவிற்கு அவங்க பழைய அம்மாதான் அம்மா.. ம்.. ஆனால், அவங்க இரேண்டுபேரும்.. இப்போ இல்லையே.. குருவிற்கு அவங்க அம்மா கூடவா இருக்காங்க.. உனக்கு உன் அப்பா ஸ்கூல் கூட்டி போறாரா.. ஸ்போர்ட்ஸ் கிளாஸ் கூட்டி போறாரா.. சொல்லு” என்றான்.

விசாகன் தலையசைத்தான் ‘இல்லை’ என. கரண் “நான் உங்க கூட இருப்பேன்.. குருவினை ஸ்கூல் கூட்டி போற மாதிரி.. உன்னையும் இனி ஸ்கூல் கூட்டி போவேன்.. நீயும் என்கிட்டே எது வேண்டுமானலும் கேட்க்கலாம்.. நாம எல்லாம் பாமிலி.. கம்ப்ளிட் பாமிலி.. ம்.. குரு உன் கூடவே இருப்பான்.. நீயும் அவனும்.. சேர்ந்தே விளையாடலாம்” என்றான்.

விசா “அப்போ.. என் அம்மா குருவோடுதான் தூங்குவாங்களா.. நான் உங்க கூடாதான் இருக்கனுமா” என்றான்.

கரண் புன்னகைத்தான் “இல்ல.. நீயும் குருவும் சேர்ந்து சுபிக்கூட இருப்பீங்க.. நீ சுபியை ஷேர் பண்ணுவியா குருவிற்கு” என்றான்.

விசாகன் இப்போதெல்லாம் அழுவதில்லை.. இந்த வருடம் 1st ஸ்டாண்டட்.. நான் பெரியவன் என சொல்லிக் கொண்டான் அவனே.. ஆனால், இப்போது அழுகை வந்தது.. “அம்மா” என்றான்.

கரண் சுபியிடம் விசாகனை கொடுத்தான் “அழாத.. பயப்படாத.. ம்..” என சமாதானம் செய்துக் கொண்டே கொடுத்தான்.

குரு இப்போது தன் தந்தையிடம் கை நீட்டினான் ‘தூக்கு’ என்பதாக. கரண் குருவினை அழகாக நெஞ்சோடு அள்ளிக் கொண்டான்.. அதை பார்த்துக் கொண்டே தன் அன்னையிடம் ஒன்றினான் விசாகன்.

சுபி “ஏன் டா தங்கம்.. குருவுடைய டாட்தானே.. ஏன் பயமா இருக்கா” என்றாள்.

விசாகன் ஏதும் பேசாமல்.. குரு கரண் இருவரையும் பார்க்காமல் தலையை திருப்பி.. தன் அன்னையின் நெஞ்சில் புதைந்துக் கொண்டான். குழந்தைதான் இன்னமும்.. தங்கள் வீட்டின் மேலே இருக்கும்.. ப்ளே ஏரியாவில் இருக்கும் எல்லா பொருட்களின் மேலும்.. ஏறி குதிப்பது.. டிவி ரிமோட்டினை.. கீழே தட்டி.. அதில் இருக்கும் பாட்டரியை எடுத்து ருசித்து பார்ப்பது.. சின்ன சைக்கிள்.. அதில் யார் தன்னை முந்திவிட்டாலும்.. அவர்களை வேகமாக முந்தி நிற்பது.. யாராவது எதிரே நின்று பேசினால்.. குருவோடு சேர்ந்து.. முறைத்துக் கொண்டே செல்லுவது.. என விசாகனின் அட்டகாசங்கள் நிறைய இருந்தாலும்.. இந்த கரண் அங்கிள் ஏன் அம்மாவின் அருகில் நிற்கிறார்.. என்ற கேள்விக்கு மட்டும் பதிலே இல்லை. இப்போது.. கல்யாணம் செய்துக்க போறாங்களாம்.. என்ற செய்தி.. என்னமோ தன்னையையும் அம்மாவையும் பிரிப்பதாகவே எண்ணம் குழந்தைக்கு.

குரு தன் தந்தையிடம் “டாட்.. உண்மையாகவே எனக்கு சுபி ஆன்ட்டி அம்மா அகிடுவாங்களா” என்றான் ரகசிய குரலில். 

கரண், தன் மகனின் கண்களை நேராக பார்த்து “ம்.. உனக்குதான் சுபியை பிடிக்குமே.. ஏன் வேண்டாமா” என்றான் புன்னகையோடு.

குரு “ப்பா.. ஆன்ட்டி’க்கு என்னை பிடிக்குமா” என்றான்.

கரண் “கண்டிப்பா.. இரு, கேட்க்கலாம்” என்றான் விஷமமாக.

மகனோ “ஐயோ! டாட்.. வேணாம்” என சொல்லி.. தந்தையிடமிருந்து கீழே இறங்க முற்பட்டான்.

இப்போது விசாகன் இருவரின் பேச்சு சத்தத்தினையும் கேட்டு திரும்பி பார்த்தான்.. அழுது ஓய்ந்த மகனின் தலை கோதி அமர்ந்திருந்தாள் புன்னகையோடு, சுபி.

கரண் சுபிக்கு ஈடாக கீழே அமர்ந்தான்.. குருவிற்கு ஒருமாதிரி வெட்கமும் சங்கோஜமும்மாக இருக்க.. சுபியை பார்க்கவே மாட்டேன் என்பது போல.. தந்தையின் தோளில் முகம் புதைத்துக் கொண்டான்.. கரண் “டேய்.. கேளுடா.. சுபிக்கு உன்னை பிடிக்குமான்னு கேளு டா..” என விளையாடினான்.

விசாகன் இதையெல்லாம் பார்த்து லேசாக புன்னகைத்தான்.. இதுவரை.. கரண் குருவை தூக்கி பார்த்ததில்லை.. அதிலும் இப்படி.. குரு தந்தையோடு இருந்து பார்த்ததில்லை அதனால்.. பார்த்துக் கொண்டே இருந்தான்.. விசாகன்.. 

கரண், குருவின் இடுப்பில் கிச் கிச் மூட்டினான்.. குரு சிரிக்க.. விசாகனும் எழுந்து குருவின் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்ட.. குரு தந்தையிடமிருந்து எழ முற்பட.. கரண் “எங்க ஓடுற.. விசா.. பிடிடா அவனை” என்க. விசாகன் சிரித்துக் கொண்டே குருவினை அனைத்து பிடித்தான்.. பிஞ்சு விரல்களால்..

கரண் “கேளு டா.. இப்போ கேளு டா.. சுபி என்னமோ கேட்க்கிறான் பாரேன்.. என்னான்னு கேளு” என்றான்.

குரு “டாட்.. விடுங்க.. நான் கேட்க்கிறேன்” என சிரிப்போடு சொல்ல.. 

கரண் “விடு விசா” என்றான். விசாகனும் விட்டுவிட்டான்..

குரு சற்று நேரம் மூச்சு வாங்கிக் கொண்டான்.. “ஆன்ட்டி.. உண்மையாகவே என் அப்பாவை மேரேஜ் செய்துக்க போறீங்களா” என்றான்.

சுபி “நீங்க ரெண்டுபேரும்தான் சொல்லனும்..” என்றாள் இருவரையும் நேராக பார்த்து புன்னகையோடு.

விசாகன் குருவை பார்த்தான்.. குரு விசாகனை பார்த்தான்.. 

சுபி “சொல்லுங்க” என்றாள்.

குரு “ஆன்ட்டி.. உங்களுக்கு என்னை பிடிக்குமா” என்றான்.. தந்தையை கடைக்கண்களால் பார்த்துக் கொண்டு..

சுபியும், இப்போது கரணை பார்த்தாள்.. கரண் புருவம் உயர்த்தி.. ‘உன் முறை’ என்பதாக பார்த்தான்.

சுபி, நின்றிருந்த குருவின் இரு கைகளையும் பிடித்து.. அமர வைத்தாள் “இதென்ன கேள்வி.. நீயும் விசாகனும் எனக்கு ஒண்ணுதான். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. நீ ரொம்ப சமத்து மெட்சூட்.. அதைவிடு. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்..” என சொல்லி தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.. விசாகன் இப்போது “ம்மா, நான்” என கேட்டு.. குருவோடு அன்னை மடியில் தானும் அமர்ந்துக் கொண்டான்.

இருவரையும் சேர்ந்தது அனைத்துக் கொண்டவள்.. “உனக்கு, என்னை பிடிக்குமா குரு” என்றாள்.

குரு, சுபியை பார்த்து திரும்பினான் சட்டென “எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ஆன்ட்டி.. நீங்க எப்போதும் என்னை இப்படி இப்படி பன்னுவீங்கல்லா” என சொல்லி அதே போல தன் சிகையை தானே கலைத்துக் கொண்டவன் “அப்பறம்.. எனக்கும் விசாகனுக்கும் சேர்த்து ஊட்டி விடும்போது.. எப்போதும் பிடிக்கும் ஆன்ட்டி” என பற்கள் தெரிய புன்னகைத்தான்.

சுபி குருவினை அனைத்துக் கொண்டாள்.. விசாகன் இருவரையும் அனைத்துக் கொண்டான்.. குழந்தையாக.

சுபி விசாகனை பார்த்து “விசா.. உனக்கு ஒகே வா.. நாம் எல்லோரும் சேர்ந்து இருக்கலாமா.. ம்.. சொல்லுங்க ரெண்டுபேரும்” என்றாள்.

குரு “ஓகே ஆன்ட்டி.. விசா உனக்கு” என்றான்.

விசாகனுக்கு இதெல்லாம் பிடித்திருந்தது போல.. குஷியோடு “அம்மா.. ஒகே..” என கத்தினான்.. குருவும் “ஓகே.. எனக்கு அம்மா கிடைச்சிட்டாங்க” என கத்தினான் எதிர்பாராவிதமாக.

கரண் வாயில் கைவைத்து பார்த்திருந்தான்.

விசாகன் இப்போது கரணை திரும்பி பார்த்தான்.. ஆனால், என்ன சொல்லுவது என குழந்தைக்கு தெரியவில்லை.. சுபி “கூப்பிடு” என்றாள்.. பொதுவாக. விசாகன் ஏதும் பேசாமல் வெட்கத்தோடு புன்னகைத்தான்.. குரு “அப்பா.. ஒகே” என தந்தையின் கைபற்றி இழுத்தான்.. சுபி புன்னகையோடு “என்ன யோசனை” என்றாள்.

கரண் ஏதுமில்லை என தலையசைத்து தன் நீண்ட கரங்களால் மூவரையும் கட்டிக் கொண்டான். அங்கே அதிகாரப்பூர்வமாக  தொடங்கியது கரணின் காக்கும் தொழில்.

இப்போதும் அப்படியே விசாகன் கரணினை அதிகமாக தேடமாட்டான். அதேநேரம் கரண் தூக்கிக் கொண்டால்.. தன்னோடு விளையாடினால்.. அனுமதிப்பான். தன் அன்னையோடு நின்றால்.. கைபிடித்தால்.. கொஞ்சம் நடுவில் வந்து நிற்பான்.. இது எல்லா குழந்தைகளின் இயல்பு என அமைதியாகினர் இருவரும்.

இப்போது விசாகன், இதுவரை விளையாடியவன்.. உறக்கம் வரவும்.. சுபியிடம் வந்து சாய்ந்துக் கொண்டான். குருவின் பார்வை சுபியை தொடர்ந்தது.. இந்தமுறை, தானாக வந்து சுபியின் அருகே அமர்ந்து “நானும் சுபிம்மா கூடத்தான் தூங்குவேன்” என்றான்.

விசாகன் அன்னையின் முகத்தினை பார்த்தான்.. சுபி புன்னகையோடு விசாகனை பார்க்க.. விசாகன் ஏதும் சொல்லாமல் குருவினை பார்த்து சிரித்தான். சுபி கால் நீட்டில் சுவரில் சாய்ந்து அமர்ந்தாள். குருவும் விசாகனும் அவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டனர்.

விசாகன் “ம்மா.. கதை” என்றான்.

சுபி “எனக்கு கதையெல்லாம் தெரியாது டா.. உனக்கு என்னிக்கு நான் கதை சொல்லியிருக்கேன்” என்றாள்.

கரண் பால் கப் எல்லாம் எடுத்துக் கொண்டு.. கீழே சென்றான்.. அதனை சிங்கில் வைத்துவிட்டு.. பிள்ளைகள் உறங்க தலையணை.. விரிப்பு என எடுத்துக் கொண்டு மேலே வந்தான்.

சுபி, அதர பழைய காக்கா கதையை சொல்லிக் கொண்டிருந்தாள்.. குருவிற்கு சிரிப்பு.. விசாகன் “ம்மா.. இது போர்” என்றான்.

சுபி “எனக்கு இதுதான் தெரியும்.. எனக்கு, வேற கதை தெரியாதே” என்றாள்.

கரண் “கதை தானே.. இருங்கடா” என தமிழில் ஸ்பைடர் மேன் கதையை சொல்ல தொடங்கினான்.

குரு “டாட்.. இது ஸ்பைடர் மேன்.. ஸ்டோரி” என்றான்.

கரண் “டேய், அதனால் என்ன..” என சொல்லி ஒரு குஷன் எடுத்து தானும் அவர்களின் அருகே படுத்துக் கொண்டு.. சுவாரசியமாக கதையை சொன்னான்.

பிள்ளைகள் இருவரும் கதை கேட்டுக் கொண்டே  உறங்கிவிட்டனர்.

சுபி “உள்ள போலாம் கரண்” என்றாள். 

கரண் விசாகனை தூக்கி சென்று முதலில் அறையில் விட்டு வந்தான்.. பின் குரு.. அடுத்து சுபி எழாமல் அமர்ந்திருக்க.. கரண் “உன்னையும் தூக்கிட்டு போகவா” என்றான் புன்னகையோடு.

சுபிக்கும் அதே புன்னகை தொற்றிக் கொள்ள “ஐயோ வேண்டாம்.. வேண்டாம்” என்றாள்.

கரண் கைகளை நீட்டி சோம்பல் முறித்துக் கொண்டே “எப்படி இருந்தது மோர்னிங்” என்றான்.

சுபி மெதுவாக எழுந்து நின்றாள்.. கால்கள் மறுத்து போயிருந்தது.. அதனால்.. மீண்டும் அங்கேயிருந்த சேரில் அமர்ந்தாள்.. “ம்.. படபடன்னு இருந்தது.. பயம்ன்னு இல்ல.. ஆனால், பயம். சந்தோஷம்ன்னு காட்ட முடியலை.. ஆனால், எதோ சந்தோஷம்.. எனக்கு சொல்ல தெரியலை..” என்றாள்.

கரண் “ம்.. சந்தோஷம்தான். ஆனால், என்னமோ முன்னாடி மாதிரி என்ஜாய் பண்ண முடியலைதானே” என்றான்.

சுபியும் தலையசைத்தாள்.. “பசங்க, ஹாப்பி இல்ல.. ஜாலியா சுத்திட்டு இருந்தானுங்க.. நீங்க கவனிச்சீங்களா.. விசாகன் என்னை தேடவேயில்ல.. குருவும் அப்படிதான் ரெண்டும் தோளில் கை போட்டுக்கிட்டு போட்டோஸ் எடுத்துகிட்டு” என சொல்லி சிரித்தாள்.

கரண் “ம்.. நமக்கு மனுஷங்க பக்கத்தில் இருந்தால்.. தெம்பு வருதில்ல.. எந்த வயதோ.. ஒரு உற்சாகம் வருதுல்ல” என்றான்.

சுபி “ம்.. உண்மைதான்” என்றாள்.

கரண் “வா.. போலாம்” என சொல்லி இருவரும் பிள்ளைகளோடு சென்று உறங்க தொடங்கினர்.