சஞ்சனா.  கதைத் திரி 3

அத்தியாயம் 6

மறுநாள் வழக்கம் போல் விடிய , வேலைகள் அவளை வழக்கம் போல் இழுத்துக் கொண்டன . 

பள்ளியில் , “ஏன் கீத்து , நான் ரொம்ப கருப்பாகவா இருக்கிறேன் ?” என்று கவலையுடன்  சஞ்சனா கேட்க , 

“இன்னும் நீ அதையே தான் நினைத்துக் கொண்டிருக்கிறாயா?”

“முதலில் நீ சொல்” என்று அதிலேயே சஞ்சு நிற்க ,

“போடி லூசு , நீ ரொம்ப அழகு  , இன்னும் கொஞ்சம் எடை கூடினால் சூப்பராக இருப்பாய் , உன் முடி , அப்புறம் உன் கண்கள்…. சான்ஸே இல்லை..” என்று  நிறத்தைப் பற்றிய பேச்சைத்  தவிர்த்து விட்டு , அவளுடைய மத்த பிளஸ்களை  சொல்லி, அவளை தைரியமூட்டினாள் .

பின் வீட்டில் நடந்த விசயத்தைச் சொல்லி , அப்பாவிடமும் பயங்கரமாகத் திட்டு வாங்கினேன்  என்று சஞ்சு வருத்தப்பட , 

“லூசு , தேவையில்லாததைப் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறாய் . உங்க அண்ணன் சொன்ன போதே கேட்டிருக்க வேண்டியது தானே..”

“என்ன கீத்து? நீயும் அதே மாதிரி பேசுகிறாய்..” என்று வருந்த, 

 “விளம்பரங்கள் அனைத்தும் உண்மை இல்லை சஞ்சு…” என்று கீத்தும் விளக்க , பின் சஞ்சு  ஒருமாதிரி சமாதானமானாள்.

அன்று மாலை ராதா முன்னரே வந்து காத்திருக்க , மஞ்சுவும் , ராஜியும் இணைந்து கொண்டார் .

 ராதா படபடவென  பொரிய ஆரம்பிக்க , “ஏன் மஞ்சு? , உன் வீட்டுக்காரரிடம் பணம் வாங்கி வைக்க வில்லை என்றால் அடுத்த வாரம் வாங்கிக் கொள் என்று சொல்ல வேண்டியது தானே…. அதை விட்டு விட்டு , அந்தப் பூக்கார அம்மா முன்னாடி போய் கேட்டிருக்கிறாய் , அவர் வந்து என்னிடம் புலம்புகிறார் , எங்க பொழைப்பே பரவாயில்லை போல , மஞ்சம்மா  நிலை மோசம் என்று பரிதாபப்படுகிறார்”என்று கொதித்தார் .

ஒரு வெற்று சிரிப்பை மஞ்சு உதிர்த்தபடி , வானத்தை வெறிக்க ,

“மஞ்சு” என்று ராஜி உலுக்க , 

“இரண்டு மாதங்களுக்கு முன் இப்படித்தான் முன்னமே பணம் வாங்கி வைக்கவில்லை. பூக்காரம்மாவை காக்க வைக்க வேண்டாம் என்று நினைத்து , அப்புறம் தருவதாகச் சொல்லி அனுப்பிவிட்டேன்…”

“சரி..”

 “ஆனால் அவள் போன பிறகு , இவர் பிடிபிடியென பிடித்துக் கொண்டார். நான் இங்கு தானே இருந்தேன். கேட்டு வாங்கிக் கொடுத்திருக்க வேண்டியது தானே? நான் என்னமோ நூற்றி ஐம்பது ருபாய்க்கு வக்கத்து இருப்பது போல் நடந்து கொண்டாய் , அந்த அம்மா என்னைப் பற்றி என்ன நினைத்திருக்கும் ? என்னை அவமானப்படுத்தி விட்டாய்… என்று தானே ஏதோ கற்பனை செய்து கொண்டு, சண்டையை உருவாக்கிக் குதித்தார்…” என்று பெருமூச்சு விட்டவர்அதான் இந்த முறை அவரிடம் பணம் வாங்கிக் கொடுத்து விடுவோம் என்று நினைத்தேன் , ஆனால் நேற்று  வேண்டும் என்றே என்னை அசிங்கப்படுத்திப் பழி தீர்த்துக் கொண்டார்”  என்று கண் கலங்கினார் .

இதைக் கேட்டவுடன், “அவர் மனிதனே இல்லை , உன்னை அவமானப்படுத்தவதில் , மட்டம் தட்டுவதில் என்ன ஒரு ஆனந்தமோ ?” என்று ராதா பொறுமினார். 

“சரியான சாடிஸ்ட்…”  என்று ராஜி கொந்தளித்தார் 

“விடு , எல்லாம் நான் வாங்கி வந்த வரம்…” என்று பெருமூச்சு விட ,

“இப்படி அவமானப்படுத்துகிறாரே  மஞ்சு? தகுதிக்கு மீறி சம்மதம் செய்தீர்களா?” என்று ராதா கேட்க , 

“அப்படி யெல்லாம் இல்லை , இவர் வீடும் சாதாரண குடும்பம் தான். என் மாமனார் ஜவுளிக்கடையில் தான் வேலை பார்த்தார் . இவர்  படித்து நல்ல வேலைக்கு வந்ததால் தான் இந்த முன்னேற்றம்.இவர் தம்பிகள் இருவரும் இன்னும் சாதாரண வேலையில் கஷ்டம் தான் படுகிறார்கள் .

என் அப்பாவும் , அண்ணனும் படித்த மாப்பிள்ளை , நல்ல வேலை ,  பெண் நன்றாக இருக்கட்டும் என்று கட்டிக் கொடுத்தார்கள் . இவர் வேலையில் மேலும் உயரங்களை அடைய ,  எங்கள் வீடு அதே சாதாரண நிலையிலே இருக்க , எங்கள் குடும்பம் இளப்பமாகி விட்டது..” என்றார் இயலாமையோடு,

ஒரு முறை ஊருக்கு கோவில் கொடைக்குச் சென்ற போது , இதே போல் தான், ஒன்றும் இல்லாத விசயத்தைப் பெரிதாக்கி , என் குடும்பத்தை அசிங்கப்படுத்தி ,  சண்டை போட்டு , இனிமேல் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று இழுத்து வந்து விட்டார்…”

“ம்ம்…”

” எனக்காக…” என்று விசும்பியவள் . “எங்க அண்ணனும், அப்பாவும், தப்பே செய்யாவிட்டாலும்  இவ் உறவை மேம்படுத்த , தங்களாலான முயற்சிகளைச் செய்தார்கள் , பலமுறை மன்னிப்பு கூட கேட்டார்கள் . ஆனால் எதற்கும் இவர் அசைந்து கொடுக்காது , பிடித்த பிடியிலே நின்று விட்டார். அவர்கள் வந்து அசிங்கப்படுவதைத் தாங்க முடியாமல் , என் தலை எழுத்து இதுதான் , அவர் மாற மாட்டார் , ஒதுங்கி இருங்கள் என்று நானே சொல்லி விட்டேன் . என் அப்பா இறப்பிற்க கூட வெளி ஆள் போல் கடைசி நேரம் தான் போனேன்.  அப்புறம் இரண்டு குடும்பத்திற்கான போக்குவரத்து அப்படியே நின்று விட்டது…” என்று கண் கலங்கினார் .

“அவர் தம்பிகளுடன் உறவு எப்படி?” என்று ராஜி கேட்க,

“அங்கேயும் இதே நிலைமை தான். இவர் சொல்வதை அப்படியே கேட்டு நடந்தால் , தம்பி  தங்கக் கம்பி என்பார். மாறி நடந்தால் வானத்திற்கும் , பூமிக்கும்  குதிப்பார். பெரியவர்கள் காலம் வரை ஏதோ ஒட்டிக் கொண்டிருந்தது . அதன் பின் இவர் தன் அகம்பாவத்தால், அவர்களையும் காயப்படுத்தி , விலக வைத்து விட்டார். எல்லா உறவுகள் இருந்தும் ,  எங்களுக்கு எதுவும் இல்லாத நிலை தான் . என் பிள்ளைகளுக்குத் தாய் மாமா பாசம் , சித்தப்பாக்களின் அன்பு , விளையாட்டு என்று எதையுமே அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை…”  என்று மனம் வெதும்பினார் .

“அலுவலகத்தில் எப்படி? இவரை வைத்து எப்படி சமாளிக்கிறார்கள் ?” என்று ராதா கேட்க ,

“இவர் குணத்தால் , உயர் அதிகாரிகளிடமும் உரசல்கள் உண்டு.  வேலையில் கெட்டி என்பதால் மட்டுமே கண்டும் காணாமல் இருக்கிறார்கள் . சில சமயம் அளவு மிஞ்சும் போது டிபார்ட்மென்ட் மாற்றப்படுவார். இவர் கீழ் வேலை செய்பவர்கள் , வேறு வழியாமல் , புலம்பிக் கொண்டே சகித்துக் கொள்கிறார்கள். அப்படியும் இவருக்கு யாரையாவது பிடிக்காமல் போனால்  அவ்வளவு தான் , அவனைக் கட்டம் கட்டிவிடுவார் . பின் அவன் கதி அதோகதி தான். ஒன்று அவன் வேலையை விட்டுப் போவான் இல்லையென்றால் பணி மாற்றம் வாங்கி விடுவான்...”

“நண்பர்கள்… ?” 

“வாய்ப்பே இல்லை . இவர் குணத்திற்கு யார் உறவாடுவார்கள்? அலுவலகத்தில் தேவைக்குத் தவிர யாரும் இவருடன் பேச்சு வைத்துக் கொள்ளமாட்டார்கள். அதனால் அலுவலகத்தில் நண்பர்கள் என்று யாரும் இல்லை. இந்தக் குடியிருப்பில் ,  அசோசியேஸன் மீட்டீங்கில் இவர் செய்த தகறாறு தான் உங்களுக்கு அனைவருக்கும் தெரியுமே…”என்று சடைத்தார் .  

“இவருடைய கோபத்தால் , குதர்க்கமாக யோசிக்கும் புத்தியினால் , எந்த ஒரு செயலிலும் உள்ர்த்தம் தேடு மனப்போக்கால் யாரும் நெருங்கிப் பழகமாட்டார்கள். இது போதாதென்று காசு விசயத்திலும் பயங்கர கஞ்சம் . சிறு வயதில் காசுக்குக் கஷ்டப்பட்டதால் , எண்ணி எண்ணித்தான் செலவளிப்பார் . அதேமாதிரி படிப்பு விசயத்தில் மிகவும் கறார் பேர்வழி . படிப்பு தான் அவரை முன்னேற்றிருப்பதால் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்…” என்று  வெற்றுப் புன்னகையைச் சிந்தினார் மஞ்சு. 

 தோழிகளுடன் விட்டு  ஆற்றிய பின் , சற்று  தெம்பாக உணர்ந்தார் . (இன்றும் பல பெண்களின் வாழ்க்கை புலம்பித் தீர்ப்பதால் மட்டுமே கரை சேர்கிறது)

அத்தியாயம்  7

முன்பெல்லாம் மஞ்சுவிற்கு மாத விலக்கு வருவதும் தெரியாது , போவதும் தெரியாது. ஆனால் இப்போது , வயது ஏற ஏற , தொந்தரவுகள்  உண்டாகின. இந்த மாதம் கொஞ்சம் சிரமம் ஜாஸ்தியாக இருந்தது . வலி அதிகமாகவே இருக்க , இரவு உணவை வெளியே வாங்குவோம் என்று சொல்ல , அவ்வளவு தான் மனிதர் ஆடித் தீர்த்தார். 

“உன் அப்பன் வீட்டுக் காசா ? இன்று மாதவிடாய் வரும் என்று தெரியும் தானே? முன்னமே ஏதாவது ஏற்பாடு செய்திருக்க வேண்டியது தானே ?அதான் பெண் வைத்திருக்காயே , அவளை ஏதாவது செய்ய சொல்…” என்று கட்டளையிட்டார் .

“இல்லைங்க ,  எப்போதும் மாவு அரைத்து வைத்திருப்பேன்  , எதிர்பார்க்காமல் இந்தத் தடவை மூன்று நாள் முந்தி விட்டது . மாவு இருந்தால் பிள்ளைகள் சமாளித்திருப்பார்கள்…” என்று வலியோடு பதில் சொல்லிக் கொண்டிருந்தார் .

“உப்புமா செய்ய சொல்…” என்று கத்த , சத்தம் கேட்டு பிள்ளைகள் வெளியே வந்தனர் .

“சஞ்சுவிற்குத் தேர்வு நடக்கிறது…” என்று மேலும் தயங்க , 

“ஆமாம், அவள் படித்து கிழித்து விட்டாள். இந்த ஒரு மணி நேரத்தில் படித்துத்தான் மெடல் வாங்கப் போகிறாள்…”  என்றார் கடுப்புடன் , பின், சஞ்சனாவைப் பார்த்து, “போய் உப்புமா செய்…” என்று கட்டளை இட்டுவிட்டு,  தரை அதிர உள்ளே சென்றார் .

சஞ்சு கண்கலங்க , “நாளைக்கு கெமிஸ்ட்ரி ம்மா , ரொம்ப கஷ்டம்…” என்று அழத் தொடங்க , 

கடைசி நேரம் படிக்கும் மகளின் குணத்தை அறிந்தவர்,  என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றார.

பின், “நீ போய் படி , நான் பார்த்துக் கொள்கிறேன்…” என்று சிரமப்பட்டு எழுந்திருக்க ,

இடைபுகுந்த விவேக் , “நீங்கள் சொல்லிக் கொடுங்கள் , நான் செய்கிறேன் அம்மா , சஞ்சு நீ படிக்கப் போ…” என்றவன் , “பத்து நிமிடம்…” என்று உள்ளே சென்றான் .

பின் வந்தவன் , அம்மாவிடம் அளவு கேட்டு , அற்புதமாகச் செய்தான் .

“எப்படிடா ராஜா?” என்று வியக்க , “எல்லாம் யூடியூப் உபயம் தான் அம்மா…” என்று சிரித்தான் .

“பரவாயில்லை யூடப்பில் சில நன்மைகளும் இருக்கு…” என்று வலியோடு சிரித்தார் .

“மாத்திரை வாங்கி வரவா அம்மா?” என்று அக்கறையுடன் கைப்பிடித்தான் . 

“இருக்கு ராஜா…” என்று  கையை இறுக்கிக் கொண்டார்.

சஞ்சு பரிமாற , தன் சௌகரியங்கள் , எதுவும் குறையாமல் நன்றாக வக்கனையாக சாப்பிட்டபடி , “இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றியிருக்கலாம் , ஒரு உப்பு கம்மி..  மொத்தத்தில் பரவாயில்லை…” என்று குறைகளைக் குத்திக் காட்டியபடி , உண்டார் . 

பின்  மஞ்சுவிடம், “பணம் மரத்தில் காய்க்கவில்லை , உன் அப்பா வீட்டில் இருந்து வரவில்லை ,  ஞாபகம் வைத்துக் கொள்..” என்றார் காட்டமாக .

பின் அனைவரும் சாப்பிட உட்கார , “முதலில் கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தை மாற்று சஞ்சு…” என்று விவேக் ஆரம்பிக்க ,

“பாருங்க அம்மா , ஒரு உதவி செய்து விட்டு அறிவுரை பொழிய ஆரம்பித்து விட்டான்…” என்று குறைபட , 

“விடு ராஜா…” என்று மஞ்சு பரிந்து வர , 

“என்னைச் சமாதானப்படுத்த முயலாதீர்கள் , அவளுக்கு எதார்த்ததைப் புரிய வைங்கள் அம்மா . இன்று உங்களுக்கு முடியவில்லை , நான் இருந்தேன் சரியா போச்சு , இதுவே தேர்வு நேரத்தில் அவள் உடம்பிற்கு ஏதாவது வந்தால், எப்படிச் சமாளிப்பாள்?”

“ஆமாடா சஞ்சு , அண்ணா சொல்வது சரிதானே?” என்று மஞ்சு சொல்ல , 

முகம் வாட , “சரி, முயற்சிக்கிறேன்…” 

“இதெற்கெல்லாம் வருத்தப்படலாமா? உன் நல்லதிற்குத் தானே சொல்கிறான்…” என்று சமாதானப் படுத்தினார் மஞ்சு

மறுநாள் வழக்கம் போல் , மாலையில் கூடிய போது , நடந்த பிரச்சினைகளைத் தவிர்த்து , தனக்கு மாதாந்திர வலி அதிகமாக இருப்பதை மஞ்சு சொல்ல , 

“எப்போது கடைசியாக டாக்டரைப் பார்த்தாய்?” என்று ராஜி விவரம் கேட்டார் .

“சஞ்சு பிறந்த பொழுது தான்  என்று நினைக்கிறேன்…” 

“உடனடியாக போய் டாக்டரைப் பார் , வயதாகிவிட்டது,  ஒரு வேளை மெனோபஸ் பிரச்சனையாக இருக்கலாம், உரிய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டால் இவ்வளவு கஷ்டப்படத் தேவையிருக்காது..” என்று ராதா வலியுறுத்த , 

“என்னுடைய  டாக்டர் ஜானகி , நன்றாக பார்ப்பார்கள் , என்றைக்கு ஃப்ரீயென்று சொல் , நான கூட்டிப் போகிறேன்” என்று முன் வந்தார் ராஜி .

“ம்ம்…  பார்க்கலாம்…” என்றார் மஞ்சு யோசனையாக .

அத்தியாயம் 8

 

அன்று அம்மாவிடம் காலையில் பள்ளிக்குச்  செல்லும் முன் பிடிவாதம் செய்து கொண்டிருந்தாள் சஞ்சு . தேர்வுக்கு  கொஸ்டீன் பாங்க் வாங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்க ,

அப்போது எழுந்து வந்த விஜயன் , “என்ன பஞ்சாயத்து?” 

வேகமாக மஞ்சு , “ஒன்றும் இல்லை , ஏதோ புத்தகம் வாங்க வேண்டும் என்கிறாள் . அதுதான் தேவையா ? என்று நண்பர்களிடம் விசாரி என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்…” என்று மழுப்பியபடி  , காப்பியை எடுத்து வந்தார் .

“இருக்கிற புத்தகத்தையே படிக்கக் காணோம் , இதில் புதுசா ஒன்று  , காசுக்குப் பிடித்த கேடு…” என்று கத்தினார்.

 என்ன புத்தகம்? என்ன தேவை? என்று எந்த கேள்வியும் இருக்காது , முன் முடிவுகளுடன் தீர்ப்புகள் வழங்கப்படும்

“சஞ்சு  போய் கிளம்பு , பள்ளிக்கு நேரமாச்சு…” என்று அப்பாவின் திட்டுக்களில் இருந்து தப்புவிக்கும் பொருட்டு உள்ளே அனுப்பினார் .

மஞ்சுவை முறைத்தபடி, காபியை அருந்தினார் விஜயன்.

காலி டம்ளரை வாங்கிக் கொண்டு சமையலறையில் நுழைந்த மஞ்சு , காலைப் பொழுது பெரிய சச்சரவின்றி முடிந்ததே..! என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் .

மாலையில்  அவர்கள் அரட்டைக் கச்சேரியின் போது கீத்து வர ,  புத்தகத்தைப் பற்றிய விவரம் கேட்க , 

“ஆன்ட்டி, என் கிட்ட இருக்கு. நான் சஞ்சுவோடு  பகிர்ந்து கொள்கிறேன்…”

மஞ்சுவிற்கு நிம்மதியானது. இல்லையென்றால் அந்த புத்தகம் வாங்குவதற்குள் பெரிய போராட்டமே நடந்து இருக்கும் .“ரொம்ப நன்றி கீத்து” என்று ஆசுவாசமானார் மஞ்சு.

ஒரு வாரம் சென்றிருக்க , தேர்வுகள் முடிவடைவதால்,  நண்பர்கள் அனைவரும் பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கும் உணவு விடுதியில் வெள்ளியன்று மதிய உணவு உண்டு விட்டு வர முடிவு செய்தனர் . தனக்கும் அனுமதி வேண்டும் என்று மஞ்சுவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் சஞ்சு .

“அப்பா நிச்சயம் ஒத்துக்க மாட்டார் சஞ்சு ம்மா , விட்டு விடு…” என்று தன்மையாக சொன்னார் .

விஜயன் எழுந்து வந்துவிடுவாரோ என்று மஞ்சு அறை வாசலில் பார்வையை வைத்துக்கொண்டே  பேசிக் கொண்டிருந்தார் . 

“இந்த ஒரு தடவை அம்மா…”  என்று  கெஞ்சினாள் .

 “சஞ்சு பிடிவாதம் பிடிக்காதே , அப்பா வந்து விடுவார் , பள்ளியில் யாரெல்லாம் வருகிறார்கள் என்று முதலில் கேட்டு வா , அப்புறம் பார்க்கலாம்…” என்று சமாளித்து , பள்ளிக்குக் கிளப்பினார் . 

அன்று பக்கத்தில் இருக்கும் கல்லூரிக்கு பேப்பர் பிரஷன்டேஷனுக்குச் செல்வதால் , தாமதமாகக் கிளம்பிக் கொண்டிருந்த விவேக் ,  “அப்பா இருக்கும் போது , பேசாதே என எத்தனை தடவை சொல்வது? போய் கிளம்பு”என்று கடிந்தான்.

அவனையும் முறைத்து விட்டு கண்கலங்க , உள்ளே சென்றாள் .

பின் விஜயனும் , சஞ்சுவும் கிளம்பி விட , மெதுவாக அம்மாவிடம் விபரத்தைக் கேட்க , 

விசயத்தைச் சொன்னவர் , “அப்பா எப்படி டா அனுமதிப்பார் ?  புரியாது சண்டை பிடிக்கிறாள்…” என்று புலம்பினார்.

அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த விவேக் , “சரிம்மா சாயங்காலம் அவள் வந்தவுடன் பேசிப் புரிய வையுங்கள்” 

மாலை மீண்டும் சஞ்சு ஆரம்பிக்க , மஞ்சு பல சமாதனங்களைச் சொல்லிப் பார்த்தார் . கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வடிய , “அம்மா இது பள்ளியில் நடக்கும் கடைசி சந்திப்பு . அதற்குப் பிறகு தேர்வு வந்து விடும் . அதில் எல்லோரும் பரபரப்பாகி விடுவோம் . அந்த ஹோட்டல் பள்ளிக்குப் பக்கம் தான் ,  பணம் கூட தர வேண்டாம் அம்மா , கீத்து பார்த்துக் கொள்வாள் , பளீஸ் அம்மா….என்று கெஞ்சினாள் 

மஞ்சு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினார் . இரவெல்லாம்  சஞ்சு கெஞ்ச ,

விவேக்கிடம்  மஞ்சு இதைப்பற்றி பேச , “போய்விட்டு வரட்டும் அம்மா. இந்தக் காலத்தில் , இதையெல்லாம் தவிர்க்க முடியாது. நானும் இம்மாதிரி நிகழ்வுகளை கடந்திருக்கிறேன்…”.

“நீ ஒன்றிரண்டைத் தவிர பெரிதாகக் கேட்டதில்லையே? அதுவும் நீ ஆண் பிள்ளை என்பதால் பெரிய போராட்டங்களுக்குப் பின் சரியென்றார் . சஞ்சுவிற்கு , ஒத்துக்கொள்ள மாட்டாரே…?”என்று தயங்க ,

“அப்பாவிடம் சொல்லாதீர்கள்…” என முடித்தான் விவேக் ..

“ராஜா…” என்று பதற , 

“நம் வீட்டுச் சூழ்நிலை புரியும் அம்மா , அதனால் நான் பெரிதாகக் கேட்க மாட்டேன்” என்றான் தன்மையாக .

“ராஜா…” என்று தலையைத் தடவினார் .

பேச்சைத் தொடர்ந்தவன் , “இதை அனுமதித்தால் தான் , வேறு எதுவும் பெரிதாகக் கேட்டால் மறுத்து விடலாம் . கீர்த்தனாவிடம்  பார்த்துக் கொள்ள சொல்லுங்கள்”

மஞ்சு படபடப்போடு , “அப்பாவிற்குத் தெரிந்தால்…” என்று தயங்க , 

“நாம் சொன்னால் தான் தெரியும் , பள்ளி நேரத்திற்குள் வந்து விடுவாள் . அப்புறம் முக்கியமாக , அப்பாவிற்குத் தெரியாமல் நடக்கிறது என்று சஞ்சுவிற்குத் தெரிய வேண்டாம் . சின்ன பெண் உளறிவிடுவாள் இல்லையென்றால் இதைச் சாதகமாகிக் கொண்டு,  வேறு விசயத்திற்குப் பயன்படுத்த நினைப்பாள். இன்னும் பக்குவம் வரவில்லை , இடம் பொருள் பார்த்து நடக்கத் தெரியவில்லை…” என்று முடித்தான் .

“இருந்தாலும் அப்பாவிற்குத் தெரியாமல் செய்வது உறுத்துகிறதுடா…”

“சரி அம்மா , இந்தப் பேச்சையாவது ஆரம்பிக்க முடியுமா? அப்படியே பேசினாலும்  அனுமதி கிடைக்குமா ? கிடைக்காவிட்டால் கூடப் பராவாயில்லை, அதற்கடுத்து அடுத்து அவர் போடும் ஆட்டத்தை , சஞ்சு தாங்குவாளா?” என்று நிறுத்தினான்.

பின்,”கால மாற்றத்திற்கேற்ப அப்பா தன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால் , ஒன்றும் செய்ய முடியாது அம்மா , இப்படித்தான் நடக்கமுடியும்…” என்று வருத்தத்துடன் உரைத்தான் .( இன்றும்  சமுதாயத்தில் பல குடும்பங்களில் கருத்துக்களைப் பகிர , சுதந்திரமும் இடமும் இல்லாததால், பல விசயங்கள் மறைக்கப் படுகின்றன , அது பின்னாளில் பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன .)

தொடரும்……