அத்தியாயம் – 24

நன்றாய் பேசிக்கொண்டு இருந்தவள் திடீரென இப்படி கோபமாய் பேசவும், சிவாவிற்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அதிலும் அவள் கேட்ட கேள்வியும், அவளது முக பாவனையும், அவனுக்கு விசித்திரமாய் இருக்க,

“என்ன பைரவி?!” என்றான் புரியாமல்.

“என்ன? என்ன பைரவி? சோ, ஆன்ட்டி அப்படி சொல்லவும், உங்களுக்கும் அங்க இருக்க முடியலை. நான் இங்க என்ன பண்றேன், யாரோட இருக்கேன்னு பார்க்க வந்துட்டீங்க…” என்று அடிக்குரலில் கத்த,

அப்போது தான் அவனுக்கு விளங்கியது, தான் பேச்சு வாக்கில் சொன்ன விசயத்தை, இவள் எப்படி எடுத்துக்கொண்டு இருக்கிறாள் என்று.

அவனை பொறுத்தமட்டில் இதுவொரு சிறு விஷயம் தான். ஆனால் பைரவிக்கு அப்படியல்ல.

“ஹேய் லூசு.. நான் அப்படி நினைப்பேனா முதல்ல?! அவங்க பேசினது எனக்கு டென்சனா இருந்தது. நீயும் வர்றீங்களான்னு கேட்டுட்டே இருந்த. மனசும் சரியில்ல. அதனால வந்தேன்…” என்று நிறுத்தி நிதானமாய் பொறுமையாகவே சொல்ல,

அவளோ ‘நான் நம்பிட்டேன்…’ என்பதுபோல பார்த்து வைத்தாள்.

“அட நிஜமா பைரவி…” என்றவன், விலகி நின்றிருந்த அவளை மீண்டும் தன் பக்கம் இழுத்து, அவளது விழிகளைப் பார்த்து

“நான் அப்படி நினைப்பேன்னு உனக்கு தோணுதா?!” என்று ஆழ்ந்த குரலில் கேட்க, அவன் விழிகளை மட்டுமே பார்த்துக்கொண்டு நின்றிருந்த பைரவிக்கு, அவளையும் மீறி ஒரு கேவல் பிறந்தது.

“ஹேய்..! பைரவி… என்னாச்சும்மா? நான் நிஜமா தான் சொல்றேன். நான் உன்னை தப்பா நினைச்சு எல்லாம் வரல..” என்று மேலும் அவளை சமாதானம் செய்ய விளைய,

“அதுக்காக அழுகை வரல…” என்றாள் முயன்று தன் அழுகையை கட்டுப்படுத்தி.

“பி.. பின்ன எதுக்காம்..?” என்றவன் ஆதரவாய் அவளை அணைக்க,

“என்னோட தனிமை.. என்னோட சூழ்நிலை.. என்னோட வசதி.. இதெல்லாம் யாரா இருந்தாலும் தப்பா நினைக்கத்தான் வைக்கும் போல. இதை இப்போ இல்ல, என்னிக்கு இருந்தோ, அம்மா இல்லாம ஆனப்போ இருந்து நான் பேஸ் பண்றேன் சிவா. சந்தோஷியோட அம்மாவும் எங்கம்மாவும் ரொம்ப க்ளோஸ்.

நான் பிறந்தப்போ, சந்தோஷி அம்மாதான் என்னை முதல்ல கைல வாங்கினாங்களாம். நான்னா அவங்களுக்கு அவ்வளோ பாசம். ஆனா பாருங்களேன், அம்மா இறக்கவும், இப்படித்தான் அவங்களும் என்னை ப்ரோடேக்ட் பண்றேன்னு ரொம்ப கண்ட்ரோல் பண்ணுவாங்க.

பல நேரம் எனக்கு கோபமும் அழுகையும் வரும். கத்தி பேசணும் போல இருக்கும். ஆனா இவங்களும் இல்லைன்னா எனக்கு வேற யார் இருக்காங்கன்னு நினைச்சு நினைச்சே நான் அமைதியா போயிடுவேன்.

யாரோட பேசுறேன், யாரோட போறேன் வர்றேன்னு எல்லாத்துக்குமே கேள்வி. என்னோட சர்கிள் அவங்களுக்குத் தெரியும். ஆனாலும் என்னவோ எனக்கு சொல்லத் தெரியலை. அங்க வீட்ல தனியா ஸ்டே பண்றதுக்கு கூட அவங்க சம்மதிக்கல. கடைசி வரைக்கும் பிடிவாதமா நான் நிக்கவும் தான் கொஞ்சம் விட்டாங்க.

எனக்கு அவங்க எல்லாரும் கடைசி வரைக்கும் வேணும். ஆனா அதிகப்படியான அக்கறை, எங்களோட பொறுப்பு நீ அப்படின்னு அவங்க எல்லாரும் என்னை கண்ட்ரோல் பண்றது எல்லாம் எனக்கு பல நேரம் அவ்வளோ மன அழுத்தம் கொடுக்கும்.

இது சரியா தப்பான்னு தெரியலை. எங்க நான் தப்பான வழியில போயிடுவேனோ அப்படின்னு அவங்க எல்லாருக்குமே ஒரு பயம் இருக்கு. ஈவன் என் பிரண்ட்ஸ் கூட அதையே தான் நினைக்கிறாங்க. இப்போ நீங்களும் வந்து அதையே சொல்லவும் ஒருமாதிரி ஆகிருச்சு…” என, சிவாவிற்கு அவளின் நிலை நன்றாய் புரிந்தது.

எப்போதுமே, யாரோ ஒருவரின் கண்காணிப்பில் இருந்தால், யாரால் தான் நிம்மதியாய் இருக்க முடியும்?!

பெற்றவர்கள் இல்லாமல், தனியாய் இருப்பது எத்தனை கொடுமை. அதிலும் அனைத்துமே இருந்து, குடும்பம் என்று சொல்ல ஒருவரும் இல்லை என்று ஆகும்போது அவர்களின் மன நிலை எப்படி இருக்கும். சிவா இதெல்லாம் மனதினில் ஓட்டிப் பார்த்தவன்

“ப்ரீயா விடு பைரவி. அவங்களுக்கு பயம், அவங்களோட பொறுப்பை சரியா செய்யாம போயிட்டா என்ன செய்றதுன்னு. உன் மேல உள்ள பாசம் தான் அப்படியெல்லாம் நடக்க வைக்குது. உனக்கே உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமையவும், இதெல்லாம் இருக்காது…” என்று அவள் நெற்றி முட்டி சொல்ல,

“நமக்கே நமக்குன்னு சொல்லணும்…” என்றாள், லேசாய் முகம் மலர்ந்து.

“ஓ! சொல்லிடலாம்.. நமக்கே நமக்குன்னு ஒரு வாழ்க்கை.. சரியா.. எதுக்கும் என் பைரவி கலங்கி நிக்கக் கூடாது. அப்படியொரு சூழல் நான் வரவே விடமாட்டேன்…” என்று அவனும் ஆழ் மனதினில் இருந்து பேச,

“நிஜமாவா?!” என்றாள் மனதுருகி பைரவி.

“சத்தியம் எதுவும் செய்யனுமா?” என,

“அதெல்லாம் வேணாம். எப்பவுமே நான் ப்ராமிஸ் எல்லாம் கேட்கவும் மாட்டேன். கொடுக்கவும் மாட்டேன்..” என்றாள் புன்முறுவல் செய்து.

“ஓ..! தப்பிச்சுக்க பாக்குற பார்த்தியா…” என்றவன், அவளை மேலும் அணைக்க,

“ஓய்.. என்ன இது?!” என்றாள் வாகாய் அவனது அணைப்பினில் நின்று.

“என்னவோ தெரியலை. உன்னை இப்படி இறுக்கமா கட்டி பிடிச்சுக்கணும் போல இருக்கு…”

“சொந்தமா கார் வாங்கிருக்கீங்க. ஒரு ட்ரீட் கூட குடுக்கல…” என்று பைரவி பேச்சினை மாற்றும் விதமாய் கேட்க,

“ட்ரீட் தானே குடுத்துட்டா போச்சு…” என்றவனின் பார்வை அவளது செவ்விதழில் பதிய, அவனது விரல்களோ மெதுவாய் அவள் கன்னம் வருட,

“எ.. என்ன பண்றீங்க?!” என்று கேட்டவளுக்கு உள்ளத்தில் மெல்ல ஒரு காதல் தீ பரவத்தான் செய்தது.

“என்ன பண்றேன்? நீ தானே ட்ரீட் வேணும்னு கேட்ட பைரவி…” என்றவனின் பார்வையில் அப்பட்டமாய் தாபம் வழிய,

“நா.. நான்… அது.. அது வேற…” என்று அவள் திக்கி திணறி பேச ஆரம்பித்து, அது முடியாமல் போக, அவனது பார்வையின் வேகத்தை தாங்க இயலாது, கண்களை இறுக மூடிக்கொள்ள, சிவாவின் இதழ்களும், பைரவியின் மென்னிதழை வெகுவாய் மூடிக்கொண்டது.

காமம் அதிகரிக்காத, காதல் முத்தமது..

ஒருவரது மனது ஒருவருக்கு புரிந்து, அவரவர் வேதனைக்கு மற்றவர் தரும் ஆறுதலாய் அந்த இதழ் முத்தம் இருக்க, இருவருக்குமே விலகும் எண்ணம் தான் வரவில்லை.

சிவாவின் கை விரல்கள் அவள் கேசம் அளந்து கொண்டு இருக்க, அவனது மற்றொரு கரமோ அவளது இடையோடு அணைத்திருக்க, பைரவியோ முழுதாய் அவனை அணைத்திருந்தாள்.

“பைரவி…” என்று அவனது அழைப்பு, அவளது இதயம் வரை தீண்ட, மெல்ல மெல்ல விழி திறந்து பார்க்க,

“ஐ லவ் யூ…” என்றான் ஆழ்ந்த குரலில்.

சாதாரணமாய்  அவனைப் பார்த்துக்கொண்டு இருந்தவள், அவன் முதன் முதலில் சொன்ன ‘ஐ லவ் யூ…’ வில் சிறு உடல் அதிர்வுடன் அவனைக் காண, மீண்டும் அவளை இறுக அணைத்துக்கொண்டான்.

இம்முறை உணர்வுகளின் பிடியில் அவன் இருக்க,

“என்ன சிவா?” என்றாள், அவன் முதுகினை வருடி..

“ஒண்ணுமில்ல.. ரொம்ப… ரொம்ப நாள் ஆச்சு நான் இப்படி ரிலாக்ஸா பீல் பண்ணி. தேங்க்ஸ் பைரவி என்னை இங்க வர வச்சதுக்கு…” என்று அவன் பேச,

“ம்ம்ம்…” என்று ராகம் இழுத்தவள்,

“எனக்குமே இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சிவா. நிஜமா நீங்க வருவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. மோஸ்ட்லி இப்போ எல்லாம் அவங்கவங்க லவ்வர்ஸ் கூடத்தானே எல்லாரும் வெளிய போறாங்க. நமக்கு இப்படியெல்லாம் அமையாதோன்னு நினைச்சேன்…” என்று கூறி பைரவி சிரிக்க, சரியாய் சிவாவிற்கு ரஞ்சிதம் அழைத்தார்.

நெற்றியை சுறுக்கியவன் “என்னம்மா?!” என்று மட்டும் கேட்க,

“சிவா அப்பாவோட மாத்திரை காலி. வாங்கின்னு வந்துடு…” என்றுவிட்டு பதிலுக்கு எல்லாம் காத்திராமல் வைத்துவிட்டார்.

ரஞ்சிதம் பேசியது பைரவிக்கும் கேட்டது. அவன் முகம் யோசனையாய் இருப்பது கண்டு, எதுவும் கேட்காமல் இருவருக்கும் ஜூஸ் ஆர்டர் செய்தவள்,

“அங்கிளுக்கு முன்ன இருந்தே இப்படித்தானா?!” என்று பொதுவாய் விசாரிக்க,

“ம்ம்ஹூம்…” என்று மறுப்பாய் தலையசைத்தான்.

“திடீர்னு இப்படி ஆகிருச்சா? நானும் உங்கக்கிட்ட கேட்கனும்னு நினைப்பேன். வேற ஸ்பெசலிஸ்ட் கிட்ட காட்டலாமா? அகிலாவோட மாமா சிட்டில நம்பர் ஒன் நியூராலஜிஸ்ட்..” என,

“ஹ்ம்ம்…” என்று ஆழ்ந்த ஒரு மூச்சினை விட்டவன் “நிறைய ட்ரீட்மென்ட் பண்ணியாச்சு பைரவி.  மாத்திரைனால உயிர் வாழ்றார்…” என்றவன் என்ன நினைத்தானோ

“எங்களோடது, அழகான சின்ன குடும்பம் பைரவி. அப்பா சம்பாத்தியம் கம்மின்னாலும், அம்மாவும் அவங்க பக்கமிருந்து கொஞ்சம் சம்பாரிப்பாங்க. நானும் லீவ் நாள் எல்லாம் கிடைக்கிற சின்ன சின்ன வேலைக்கு போவேன். ஆனா ராத்திரி வீட்டுக்கு வந்தா பாட்டும் சிரிப்பும் தான். அவ்வளோ சந்தோசமா இருந்தோம்…” என்று நினைவுகள் பல வருடங்கள் பின்னோக்கிச் செல்ல,

“ம்ம் ரொம்ப வொர்க் பிரசரா அங்கிளுக்கு?” என்றாள் பைரவி.

விதி அவளை இந்த பேச்சினை ஆரம்பிக்க வைத்திருக்கிறது என்று அவளுக்குத் தெரியவில்லை.

“வொர்க் பிரசர் எல்லாம் இல்லை. அவர் ஒரு இசை ரசிகர். பாட்டில்லாம சோறு தண்ணி இறங்காது அவருக்கு. தேடி தேடி பாட்டு கேட்பார். அத்தனை ரசிச்சு பட்டு கேட்பார். உனக்குத் தெரியுமா, என்னை பாட்டு கிளாஸ் சேர்த்து விடணும்னு அவருக்கு அவ்வளோ ஆசை. அப்படியொரு இசை பிரியர்…” என்று அவன் சொல்லி சிரிக்க,

“ஓ! ரியல்லி… அப்போ ஒரு நாள் உங்க வீட்டுக்கு வந்து, அங்கிள் முன்னாடி பாடி காட்ட வேண்டியது தான்…” என்று பைரவியும் சிரிக்க,

“இப்போ கூட வா கூட்டிட்டு போறேன்…” என்றான் சிவாவும்.

“யா.. யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?” என்று பைரவி கேட்க,

“என்ன சொல்லப் போறாங்க? எதுன்னாலும் பார்த்துக்கலாம். நானே கூட்டிட்டு போகணும்னு நினைச்சேன். நீயும் பிசியா இருந்த. அப்பாக்கிட்ட உன்னோட போட்டோ கூட காட்டினேன்…” என்று சிவா, காதல் கை கூடிய களிப்பில் பேச,

“இசிட்.. அப்போ கண்டிப்பா ஒருநாள் வர்றேன். ஆனா நல்ல நாள், நல்ல நேரம் எல்லாம் பார்த்து தான் வருவேன்…” என்றவள் “சரி சொல்லுங்க, திடீர்னு ஏன் அவருக்கு முடியாம போச்சு…” என்று கேட்க,

“ம்ம் அவர் ரசிக்கிற பாட்டே அவருக்கு இப்படியொரு சூழலை கொடுத்துடுச்சு…” என்றான் அன்றைய நாட்களின் வலி இன்னும் நெஞ்சில் இருப்பது உணர்ந்து.

“எ.. என்ன சொல்றீங்க?!” என்று பைரவி புரியாமல் கேட்க,

“உனக்கு பின்னணி பாடகி கிருஷ்ணா தெரியுமா? இப்போ இல்ல. முன்ன பாடிட்டு இருந்தாங்க…” என,

“கிருஷ்ணாவா?!” என்று பைரவி அதிர்ந்து, விழி விரித்து கேட்க,

“ம்ம் இப்போவும் அவங்க பாடல்கள் அங்கங்க ஓடிட்டு தானே இருக்கு. கொஞ்சம் பாடி இருந்தாலும் நிறைய ஹிட்ஸ்.. அப்பா அவங்களோட ரொம்ப தீவிர ரசிகர். அந்தம்மா பாட்டு கேட்கலைன்னா அவருக்கு அன்னிக்கு தூக்கமே வராது.

கிருஷ்ணாம்மா கிருஷ்ணாம்மான்னு அத்தனை மரியாதை அவங்க மேல. செக்யூரிட்டி வேலைக்கு போயிட்டிருந்தவருக்கு, அவர் எப்பவும் ரசிச்சு பட்டு கேட்கிறா அந்த கிருஷ்ணாம்மா வீட்லயே செக்கியூரிட்டி வேலை செய்ய வாய்ப்பு வந்தது.

மனுஷனை கைலயே பிடிக்க முடியலை. அந்தம்மாவை பார்க்கிறது தான் வாழ்க்கைல ஒரே லட்சியம்னு இருந்தார். நீ இப்போ இருக்கியே அந்த வீடு. அந்தம்மா வீடு தான் அது. அந்தம்மா மட்டும் தான் அங்க இருந்தாங்க. எங்கப்பா தினமும் சந்தோசமா வேலைக்கு போவார் வருவார்.

அந்தம்மாவும் மரியாதையா நடத்தினாங்கன்னு சொல்வார். இவரோட ரசிப்பு கண்டு, ஒருதடவ உக்கார வச்சு பாடி காட்டினாங்கன்னு எல்லாம் சொல்லி சொல்லி அத்தனை சந்தோசப்பட்டார். ஆனா அந்தம்மா வச்ச வினை, எங்க குடும்பம்னு இல்லை, எங்க ஏரியாவுல பல குடும்பங்கள் சாஞ்சிடுச்சு…” என்று சிவா கூறி நிறுத்த,

பைரவிக்கு இதயம் தாறுமாறாய் துடித்துக்கொண்டு இருந்தது. தான் அறியாத அம்மாவின் வாழ்வு ரகசியங்கள். இத்தனை நாட்களை அம்மா ஏன் தன்னை இந்த வீட்டிற்கு வந்து வாழச் சொன்னார்கள் என்று குழம்பிக்கொண்டு இருந்தாள்.

திடீரென்று ஏன் பாடுவதையே நிறுத்தினார்கள், நன்றாய் இருந்தபோது திடீரென ஏன் உடல்நிலை பாதிக்கப்பட்டது என்று சந்தோஷியின் அம்மாவை கேள்வியாய் கேட்டு நச்சரிப்பாள்.

அனைத்திற்குமே பதில் அவருக்குத் தெரிந்தும், இதுநாள் வரைக்கும் பைரவியிடம் சந்தோஷியின் அம்மா வாய் திறக்கவில்லை. ஆனால் அவளது இத்தனை ஆண்டுகால பல கேள்விகளுக்கு சிவாவிடம் இருந்து விடை கிடைக்கும் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

பேசிக்கொண்டே இருந்தவன், பைரவியிடம் எவ்வித அசைவும் இல்லை என்று கண்டு “பைரவி…” என்று அவள் தோள் தொட,

திடுக்கிட்டு பார்த்தவள் “அ.. அவங்க என்ன பண்ணாங்க?” என்று கேட்க,

“என்ன பண்ணாங்களா? ஒரு பைனான்ஸ் கம்பனிக்கு விளம்பரம் பண்ணி பாடினாங்க.. அப்போ எங்க ஏரியால வந்து அந்த கம்பனி ஒரு பிராஞ் திறந்தாங்க.. உங்கம்மா பேச்சை நம்பி பல பேர் அதுல கொஞ்ச கொஞ்சமா சேர்த்து வச்ச பணமெல்லாம் போட, ஆரம்பத்துல என்னவோ எல்லாம் நல்லாத்தான் போச்சு.

அந்த வீடு கூட, அந்த கம்பனிக்காரன் பரிசா கொடுத்ததாம் அந்தம்மாக்கு. எங்க முதலாளியம்மா சொன்னா சரியா இருக்கும்னு, எங்கப்பா அவரோட முக்கால்வாசி சம்பாத்தியத்தை அதுலதான் போட்டார். அவர் மட்டுமா, அவருக்குத் தெரிஞ்சவங்க எல்லாரையும் போட வச்சார்.  முதல்ல எல்லாருக்கும் பணம் வந்தது. நாள் போக போக, இழுத்தடிச்சு, ஒரு நாள் பைனான்ஸ் கம்பனி திவால் ஆகிருச்சு…” என,

‘ஐயோ…!’ என்றாள் பைரவி அவளையும் அறியாமல்.

“ம்ம்.. எல்லாரும் அடிச்சு பிடுச்சு… அந்த கிருஷ்ணாம்மா வூட்டு வாசல்ல போய் நின்னா, அவங்க எனக்கொண்ணும் தெரியாது. நான் அவங்களுக்கு விளம்பரம் தான் பண்ணேன்னு கை விரிக்க, எங்க ஏரியால அப்போ பல பிரச்சனைகள் உருவாச்சு. ஒருசிலர் தற்கொலை எல்லாம் பண்ணிக்கிட்டாங்க.

எங்கப்பா, என்னம்மா இப்படி ஆகிருச்சுன்னு போய் அந்தம்மாக்கிட்ட கேட்க, எனக்கு எதுவும் தெரியான்னு சொல்லிட்டு, அந்தம்மா வூட்ட காலிபண்ணிட்டு ஓடிருச்சு. அப்பாவ நம்பி பணம் கொடுத்தவங்க எல்லாம் அப்பாவோட வந்து சண்டை. அதிகப்படியான மன உளைச்சல் அப்பாவை இப்படி படுக்க வச்சிருச்சு.

அப்புறம் அந்தம்மா பாடல போல.. ஆனா கொஞ்ச நாள் கழிச்சு திரும்ப வந்து, பணம் ஏமாந்தவங்களுக்கு முடிஞ்சா உதவி பண்றேன்னு சொன்னாங்க. ஏரியா காரங்க சும்மா இருப்பாங்களா, கலவரம் பண்ண போக, போலீஸ் வந்து அடிதடி பண்ணி அதுவும் ரொம்ப பிரச்சனை…

அத்தனைக்கும் மீறி அந்தம்மா நிறைய பேருக்கு அவங்க பணம் கொடுத்தாங்க. எங்கப்பாவுக்கு கூட ஆள் விட்டு கொடுத்துவிட்டாங்க. ஆனா என்னவோ தெரியலை அதுக்கு அப்புறம் அவங்க பாடவே இல்லை…” என்று சொல்லி முடிக்க,

“அ.. அவங்க.. அவங்க யாருன்னு தெரியுமா…?” என்றாள் பைரவி.

“அதான் சொன்னேன்ல பைரவி முன்னாள் பின்னணி பாடகி கிருஷ்ணா…” என்று சிவா சொல்ல,

“அ.. அவங்க.. அவங்கதான் என்னோட அம்மா…” என்று பைரவி சொல்ல, சிவா அதிர்ந்து அசைவற்றுப் பார்த்தான்.