அம்மாச்சி, அப்பத்தா போய்ட்டு வரோம் என காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.

பின்னோடு வந்த வீரா “பத்து நாளுக்கு முன்னாடி எல்லாம் வர வேணாம், எதையாவது ஏழறையை இழுத்து விட்டு இன்னும் நாழு வருஷத்துக்கு நீ தள்ளி போடுவ..  ஜீன் மாசம் 11 ம்ந்தேதி, 9 மணிக்கு தான் முகூர்த்தம், நீ பத்து மணிக்கு வா போதும்.” என சலிப்பாய் கூற

“பர்ஸ்ட்  நைட் எத்தனை மணிக்கு” என இவன் கண்ணடிக்க

“அடகிராதக” வீரா வாயில் கை வைத்து அதிர்ச்சி ஆனான்.

“உன் கல்யாணத்துக்கு அடி போட்டதே நான் தான் மறந்துடாதடா வெண்ண” விலாவிலே இடித்தான் விக்ரா.

“தடுத்து நிறுத்துனதும் நீ தான் அத நீ மறந்துடாத!” பதிலுக்கு இவனும் இடித்தான்.

“வரேண்டா இதுக்காவே பத்து நாளைக்கு முன்னாடி வந்து குட்டிகலாட்டா பண்றேன். கல்யாணமே நடக்கவிடாமல் பண்றேன்” இவன் சவால் விட

“நான் உனக்கு என்னடா பாவம் பண்ணேன்” அழ தயாரானான் விக்ரா.

“அண்ணனா பொறந்தேல்ல.. அதே பாவம் தான். உனக்கு கடைசி வரை கக்கூஸ் தான்டா” என நக்கலாய் பார்த்தவனை

“அங்க பாருவே” என கண்ஜாடை காட்ட, மரத்தின் பின் நின்றிருந்தாள் கண்மணி.

சட்டை காலரை தூக்கி விட்டவன், “உனக்கு முன்னாடியே புள்ள பெத்து போடறனா இல்லையான்னு பாரு” என சிலுப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.

“அடக்கிராதகா” சொல்வது இவன் முறையானது.

காரில் ஒரு மணி்நேரம் பயணம் செய்து திருச்சி சென்று அங்கிருந்து பிளைட் பிடிக்கும் வரை ஓடிக்கொண்டு தான் இருந்தனர்.

மிதமான வேகத்தில் பிளைட் பறந்து கொண்டிருக்க, “இதெல்லாம் நிஜமா விக்ரா” தோள் சாய்ந்தாள் மெதுவாய்.

“நிஜம்னு நிரூபிக்கவா” பட்டென இவள் புறமாய் திரும்பி இவன் அமர, அவனது நாடியிலேயே இடித்து கொண்டவள், அவனது நாடி பிடித்து கொஞ்சி “லவ் யூ சாம்பூ” என

விழி விரித்தான் விக்ரா.. “ஏண்டி வீட்டில் வச்சு சொல்ல மாட்டியா.. சொல்லறதுக்கு நல்லா இடம் பார்த்தடி நீ” அவளை நெருங்க முடியாத கடுப்பு இவனிடம்.

“ஐ டீப்லி லவ் யூ” சொல்லிவிட்டு இம்முறை கண்ணடிக்க

“அடியே, அப்புறம் நீ்தான் டீப்பா அனுபவிப்ப” விரல் நீட்டி எச்சரிக்க, எட்டி அவன் விரலை கடித்தாள்.

“ஸ்” என விரலை பிடுங்கி கொண்டு “உனக்கு ஏதோ ஆச்சுடி” என

“ம்.. ஆமாம் ஒய்ப் மோட் ஆன் ஆகிடுச்சு” என கிறக்கமாய் கூற

“எப்போடி” விழியை பார்த்தபடியே இவன் கேட்க

“ஒன்னு சாவு.. இல்லை என் கைய பிடிச்சுட்டு வா, என்ன ஆனாலும் பார்த்துகலாம்னு சொன்னல்ல அப்போ, உளரி வச்சிடுவியோன்னு பயந்து தான் பிளாக் பண்ணினியான்னு கேட்டல்ல அப்போ” இவள் காதலாய் கூற

“ஓ…” “நான் கூட காதோட இரண்டு அறை வச்சதுல வந்துடுச்சோன்னு நினைச்சேன்” என சிரிக்காமல் சொல்ல

பட்டென சிரித்து “உன்னை” தோளில் இரண்டடி வைத்து “எவ்ளோ பீலிங்கா சொல்லிட்டு இருக்கேன், ப்போ” என்றவள்.

இன்னும் ஒன்றரை மணி்நேரம் தான் ஹைதராபாத்ல, நம்ப ரூம் போன பிறகு ஒய்ப் மோட் ஆன் பண்ணுடி, இப்போ ஆப் பண்ணு. டெம்ட் ஆகுது” என இப்போதைக்கு எண்ட் கார்ட் போட்டான்.

இவனில்லாமல் நான் என்னவாகி இருப்பேனோ? பிரண்டா வந்தான், பெஸ்டியா வாழ்ந்தான், காவலனா காப்பாத்தினான், காதலனா அறைஞ்சே சாவடி அடிச்சான். அப்பப்போ ஹஸ்பண்ட் மோட் ஆன் பண்ணி என் கவலையெல்லாத்தையும் ஆப் பண்ணினான்.

இத்தனையையும் மனதிற்குள் சொல்லி கொண்டவள்.

“லவ் யூ அத்தான்” மயங்கிய மனதை இம்முறை இவள் வெளிப்படையாகவே கூறிவிட்டாள்.

“என்ன அத்தானா? நானா?” அதிர்ச்சியாகி பார்த்தவன் “இது ஆவுறதுக்கில்லை” என நொடிக்குள் அவள் இதழில் அழுத்தமாய் இதழ் பதித்து விலகினான்.

******

“ஏ எப்பா க்ரூப் போட்டா எடுக்கனும், வாங்க எல்லாரும் வாங்க” மேடையின் நடுவே நின்ற சமரசு தன் வெங்கல குரலில் அழைத்தார்.

“எப்போ பாரு ஓடிட்டே இருப்பியா வாடி”  நாச்சியின் கைபிடித்து மேடை ஏறினார் சமரசு.

“ஏங்க வாங்க.. இன்னும் என்ன கோபம், நம்ப புள்ளைக்கு இதை விட நல்ல பையன் கிடச்சுடுவானாக்கும்” மீனா கெஞ்சி கெஞ்சி ராஜசேகரை மேடை ஏற வைத்தார்.

ஆங்காங்கே மகளின் பின்னே ஜூஸ் டம்ளரை எந்தியபடி சுற்றி கொண்டிருந்த விக்ராவை பார்த்தும் பாராததுமாய் மீனாவின் பின்னே சென்றார்.

அடுத்து மீனாவின் அக்கா கௌரியும் அவரது கணவன் சந்தானமும் மேடை ஏற, பின்னோடு தாவனி, புடவை அணிந்த இரு பெண்கள் ஏற, தாவனி எனக்கு என சங்கரும், புடவை எனக்கு செல்லமும் பின்னோடு போய் அருகருகே நின்று கொண்டனர்.

சமரசு மகன்களை திரும்பி பார்த்து “ஏலே புடுங்கிடுவேன்ல” என இதழசைத்து கூற, அடித்து பிடித்து பின்னுக்கு போய்நின்று கொண்டனர்

அலங்காரம் செய்த சேரில் முகம் முழுக்க புன்னகையோடு வீராவும், அவன் கையில் தாலி வாங்கி அம்சமாய் கண்மணியும் அமர்ந்திருக்க, அவர்களின் இரு பக்கமும் நீண்டு இருந்தது சேர்கள்.

பெண் மாப்பிள்ளையின் இருபுறமும் ராதை, பர்வதம் முதல் அமர, சமரசு- நாச்சி, இவரும் ராதை பக்கமாய் அமர, பர்வதத்தின் பக்கமாய் கண்மணியின் தாய் தந்தை அமர்ந்தனர்.

அதை அடுத்து மீனா- ராஜசேகர் ஒரு பக்கமும், கௌரி-சந்தானம் ஒரு பக்கம் அமர்ந்தனர்.

இறுதியாய் வந்தான் விக்ரா.. மூன்று மாத கருவை சுமந்திருந்த லாவாவை கைபிடித்து வந்து மேடை ஏறினான்.

எல்லோரது பார்வையும் இவர்கள் மீது தான். வந்தவர்கள் கண்மணி- வீராவின் பின் நிற்க வைக்கபட, அவர்களின் இருபுறமும் செல்லமும், சங்கரும் வந்து நின்று கொண்டார்கள்.

“நீங்க இரண்டு பேர் மட்டும் என்ன தனியா நிக்குறீங்க, பின்னாடி நில்லுங்க” என போட்டோகிராபர் பின்னுக்கு போக சொல்ல, தாவனி சங்கர் பக்கமும், புடவை செல்லத்தின் பக்கமும் போய் தானாகவே நின்றிட, இருவருக்கும் அடித்தது ஜாக்பாட்.

இருவருமே “ஈ” என இளித்து கொண்டு சமரசுவை பார்க்க, அவரோ “தூ” செய்கையிலேயே துப்ப, அதை துடைத்து போட்டுவிட்டு “ப்ரியா, நீ ஃபிரியா” என சங்கரும், “(பார்வதி) பாரு என்னை கொஞ்சம் பாரு” என சங்கரும் ஜொள்ளு விடும் வேலையை தொடர்ந்தனர்.

“இன்னும் யாரும் வரணுமா” என கேட்க “ஒரு நிமிஷம்” என்ற விக்ரா இதழ் குவித்து விசில் அடிக்க, பாய்ந்து வந்தது இரு குடும்பங்கள்.

சேர் போட்டு அமர்ந்திருந்தவர்களின் முன்னே வரிசையாய் போய் அமர்ந்து கொண்டனர் இரு குடும்பமும்.

அது வேறுயாருமில்லை மினி-ஷினி அதன் மூன்று குட்டிகளும், ஸ்கூபி – ராக்ஸி அதன் இரண்டு குட்டிகளும் வரிசை கட்டி அமர, “அவ்வளவு தான்” என விக்ரா செய்கை காட்ட, “ரெடி எல்லாம் இங்க பாருங்க… 3, 2, 1” என சொல்லி முடிவு கையில் க்ளிக் என்ற சத்தத்துடன் பிளாஸ் அடிக்க அத்தனை பேரின் முகத்திலும் இருந்த அழியா புன்னகையை அழகாய் படம் பிடித்தார் கேமிராமேன்.

முற்றும்.