அத்தியாயம் 19

பெரும் அலறலோடு விஜய் அப்படியே சாய்ந்தமர்ந்துவிட, விக்ராவின் புது அவதாரம் கிடுகிடுங்க செய்தது மூன்று பெண்களையுமே.

தொல்லை ஓய்ந்தது என இவன் போனை  எடுத்து கொண்டு மீண்டும் சோபாவில் அமர்ந்தான். வெகு நேரமாய் தேடியதில் தான் கவனித்தான் பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்தும் சுத்தமாய் இருந்தது. அடுத்து கேலரி, ஜிமெயில் என பாய்ந்தது அவன் தேடுதல் வேட்டை. அங்கே சிக்கி கொண்டான் விஜய்.  ஏதோ ஒரு வீடியோ மெயிலில் யாருக்கோ சென்ட் ஆகி இருப்பதை கண்டு கொண்டான்.

படபடவென இவனுக்கு இதயம் அடிக்க, பார்வை லாவாவை நோக்கி பாய, என்னவோ என இவளும் இவனின் பின் நின்றபடி பார்வையிட்டாள்.

அதை பார்த்து “நான் வீடியோ எதுவும் அனுப்பலை” வேகமாய் இவள் சொல்ல, பயந்தே அந்த வீடியோவை ஓபன் செய்தான் விக்ரா. அதில் இருந்ததோ மகாவும் விஜயும் அதுவும் முதலிரவின் காட்சிகள் சரியான கோணத்தில் படம் பிடிக்கபட்டு இருந்தது. விக்ரா லாவாவின் விழிகள் ஒன்றொடு ஒன்று மோதி நின்றது.

உடனே வீடியோவை நிறுத்தி கீழே இருந்த மேசேஜ்களை படிக்க அவர்களது தாம்பத்திய வாழ்க்கை பத்து லட்சத்திற்கு விலை பேசபட்டிருந்தது தெரிய, இருவருமே அதிர்ந்து ஒரு சேர நிமிர்ந்து மகாவை பார்த்தனர்.

“இன்ஸ்டண்ட் கர்மா” நக்கலாய் சிரித்தவன் போனை மகா பக்கமாய் நீட்டினான்.

முகம் சுருக்கியவள் அதை வேகமாய் வாங்கி ஏனோதானோ வென பார்த்தவள், அதில் தங்களது முதலிரவு காட்சிகள் படமாக்கப்பட்டதை பார்த்து உயிர் பாதி போய்விட. அதன் கீழே இருந்த மேசேஜையும், பணபரிவர்த்தனைக்கான ஸ்கீரின் ஷாட்டையும் பார்த்து முழு உயிரும் போனது மகாவிற்கு.

மகாவின் பின் நின்று பார்த்தவருக்கு, எழுத்துக்கள் பண பரிவர்த்தனைகள் தெரியாத போதும், வீடியோ புரியுமே! உடலின் ஒவ்வொரு அனுவிலும் விழுந்தது இடி தன் மகனா இப்படி என.

கிச்சன் சென்று கத்தியை எடுத்து விஜயை நோக்கி நடந்து வந்த விக்ரா,  அவன் முன்னே ஒரு கால் மடக்கி அமர்ந்து

“போனில் அவளோட போட்டோவை எங்க வச்சிருக்க” என கேட்டான்.

“டிரெவ் ல இருக்கு” என இவன் சொல்ல

 “லாவன்யா போட்டோவை யாருக்கெல்லாம் ஷேர் பண்ணிருக்க?”  கத்தியை பிடித்திருந்த விதத்திலேயே, பயந்து போன விஜய்,

“போட்டோலாம் இப்போ மார்க்கெட்ல பெரிய விலை போகலை. AI னு சொல்லி யாரும் வாங்க மாட்டாங்க. யாருக்கும் அனுப்பலை” விஜய் நிதர்சனத்தை பேச

“ஓ வீடியோவா மாத்த தான் அவள் பின்னாயே சுத்தி ஒரு நாள் பொண்டாட்டியா இருன்னு மிரட்டிட்டே இருந்தியா?” என விக்ரா நேரடியாய் கேட்டுவிட, இடி விழுந்தது லாவாவின் தலையில்.

சிலீரென்ற சத்தம் திடீரென கேட்க, அங்கே தேங்காய் உடைக்கும் இரும்பு கம்பியை வைத்து விஜயின் போனை பெரும் ஆங்காரத்தோடு சுக்குநூறாய் அடித்து உடைத்து கொண்டிருந்தாள் மகா. இன்ஸ்டண்ட் கர்மா இரு மடங்காய் இவள் புறம் திரும்பி இருந்தது.

நெற்றியில் இருந்து இரத்தம் வழிந்து கிடந்த விஜய், பைத்தியம் பிடித்தார்ப்போல் நின்றிருந்த அவனது தாய், ருத்ரகாளியாய் நின்றிருந்த மகா மூவரையும் வட்டமடித்தது இவன் விழிகள்.

அந்நேரம் விஜயின் அப்பாவும் அங்கே வந்தார் வீடும் வீட்டினரின் நிலையையும் கண்டு அவரும் தாம்தூம் என விக்ராவிடம் குதிக்க

“‘எப்போ வர சொன்னா எப்போ வர்றீங்க. என்கிட்ட குதிச்சது போதும், போய் உங்க மகன்கிட்ட குதிங்க’ என எகிறிவிட்டு, லாவாவின் கைபிடித்தபடி வீட்டை விட்டு வெளியேறினான் விக்ரா.

அடுத்த நிமிடமே இவன் கையை உதறிவிட்டு வேக வேகமாய் நடக்க துவங்கினாள் லாவன்யா.

“லாவன்யா..” நிறுத்தி நிதானமாய் அழைத்தது கூட காதில் விழாதவளாய் வேகமாய் சென்றாள்.

சரியில்லையே என பின்னோடு ஓடி வந்து இவளை பிடிக்கும் முன் தெருவை தாண்டி வந்திருந்தாள்.

ஓரிருவர் வீட்டை விட்டு எட்டி பார்க்கவும், அவர்களில் பதிந்த இவன் பார்வை, தெருவை நோட்டமிட்டது.

ஒரே ஒரு சந்து தான், அதை தாண்டினால் இவர்களது கிணற்று பகுதியின் பின் புறம் வந்துவிடும் என அவளை இழுத்து சென்றான் இரண்டே நிமிடங்களில்.

அவளை கிணற்றடியில் அமர வைத்து “ஏய்.. என்னாச்சுடி உனக்கு” இருந்த கோபத்திற்கு கத்தினான் இவன்.

“விடு விக்ரா..” அவனிடம் அகப்பட்ட கையை திருகி விடுபட போராடினாள் இவள்

“ஏன்..?”

“எல்லாத்தையும் படிச்சிட்ட, பார்த்துட்ட தானே உன் முகத்தை பார்க்கவே எனக்கு அசிங்கமா இருக்கு, ரொம்ப அவமானமா இருக்கு” கோவல்களுக்கிடையே இவள் பேசியது தெளிவாய் கேட்டது.

தன்னுடைய அந்தரங்கங்கள் வெட்ட வெளிச்சமானதில் கூனி குறுகி நின்றாள்.

“முடிஞ்சது முடிஞ்சது தான் எதையும் மாத்த முடியாது. அடுத்து என்ன செய்யலாம்னு பார்க்கலாம்”

“எனக்கு பயமா இருக்கு. ஊருக்குள்ள தெரிஞ்சா.. ஊரை விடு என் அம்மா அப்பாக்கு தெரிஞ்சா” சொல்ல முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

தோளில் இவன் சாய்த்து கொள்ள, அப்படி ஒரு அழுகை அழுதாள். இரண்டாம் முறையாய் இவள் இப்படி அழுகிறாள்.

தோளில் தட்டி தலையை கோதி இவன் செய்த சமாதானங்கள் யாவும் வீணாய் போனதே தவிர, அழுகை நின்ற பாடில்லை.

இன்னமும் அழுது கொண்டே இருந்தவளின், முகத்தை நிமிர்த்தி ஓரிரு நொடிகள் பார்த்தவன் பொளீரென இவளுக்கும் வைத்தான் ஒன்று.

சப்த நாடியும் அடங்கி போக, கன்னத்தில் கை வைத்தபடி மலங்க மலங்க விழித்தவளிடம்

“லாவா இப்போ அழுது ஒன்னும் சாதிக்க முடியாது.  தப்பு செஞ்சவனே தெனாவட்டா இருக்கான்டி. நீயேன் இப்படி அழுதுட்டே இருக்க” இரவில் இருந்து இவள் மீது அடக்கி வைக்கப்பட்ட கோபம் வெளிப்பட்டது.

“முதல்லையே எங்கிட்ட சொல்றதுக்கு என்னடி வந்தது உனக்கு. அந்த நாயை நம்பிருக்க, என்னை நம்ப மாட்ற! பிரச்சனையாகவே விட்ருக்க மாட்டேன். இப்போ அழுதா எல்லாம் சரியா போகுமா? பிரச்சனையை நீ பேஸ் பண்ணி தான் ஆகனும் வேற வழியே இல்லை”

“சரி நான் பேஸ் பண்றேன். எல்லாம் என்னோடவே போகட்டும். என்னால நீ அசிங்கபட வேண்டாம், எனக்கு வாழ்க்கை கொடுத்த உன்னையும் அசிங்கமா ஏதாவது பேசுவாங்க” கன்னத்திலிருந்து கையை எடுக்காமல் பேச

“அந்த கையை எடு”  பல்லைகடித்து கொண்டு பேசிவனை புரியாது இவள் பார்க்க “இன்னொரு அறை வைக்கிறேன்” அடிக்க கை ஓங்கி கொண்டு வந்தான். இவள் இறுக்கமாய் கண் மூடி கொள்ள

“வாழ்க்கை கொடுக்குறனா? நானா? உனக்கா? இன்னொரு தடவை இதை சொல்லு சாவடி அடிப்பேன்” விரல் நீட்டி இவன் எச்சரிக்கை செய்தான்.

“உன் கழுத்தில் தாலி கட்டிட்டு போனதில் இருந்து உனக்கு அத்தனை மேசேஜ் போட்டு  மிரட்டி இருக்கான். எங்கே எங்கிட்ட உளரி வச்சிடுவியோன்னு தானே என்னை நீ பிளாக்கில் போட்ட” உன்னை அறிவேன் நான் என இவன் ஒரு பார்வை ஒரே ஒரு பார்வை பார்க்க, ‘கண்டுபிடித்து விட்டான்’ என இரண்டடி இவள் நகர்ந்து அமர,

“எங்க போற” இடையில் கைவிட்டு இழுத்து தன் அருகில் அமர வைத்தவன் “அதுக்கு பிறகும் அவனோட தொந்தரவு தாங்க முடியாமல் தான் எனக்கு போன் அடிச்சு வரவழைச்சிருக்க, அப்போவும் பிரச்சனையை முழுசா சொல்ல மனசு வரலை, ம்ஹூம் நம்பிக்கை வரலை” கன்னமிரண்டையும் வலிக்க பற்றினான்.