சாதாரண நண்பர்களாய் பேசி காதலர்களாய் உருமாறி கணவன் மனைவியாய் மாறிப்போய் இருந்தனர் மேசேஜிலேயே!

படிக்க படிக்க எரிச்சல், கோபம், ஆத்திரம் ஏன் கொலையே செய்யும் அளவிற்கு கண்ணாபின்னாவென கனன்றது தீச்சுவாலையாய்.

வெகு நேரம் வரை உறக்கம் பிடிக்காமல் இருக்க, அடுத்து செய்ய வேண்டியவற்றை கடகடவென திட்டமிட்டான்.

அதன்பின் மறுநாளே ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு தேவையானவைகளை செய்து முடித்தான்.  ஆதார் கார்டில் இருந்து அவளது சர்டிபிகேட் வரை மீனா வீட்டில் இருக்க, போன் செய்து கொடுத்தனுப்ப சொல்ல கூடவே அவளது உடையையும் சேர்த்தே கொடுத்தனுப்பினார்.

கூடவே சைபர் கிரைமில் வேலை செய்யும் ராம் எனும் ஒருவரை போனில் தொடர்பு கொண்டு பேசினான். தொழிற்துறையில் முன்பிருந்தே பழக்கம். நண்பனில்லை தான் ஆனால் நல்ல பழக்கம் இருவரிடையேயும்.

விக்ரா சொல்ல சொல்ல கேட்டவன் “கேஸ் தான் பைல் பண்ணனும்” என

“சரி நான் கம்ளைண்ட் பண்ணலாமா” என

“ஹஸ்பண்ட் தானே நீ.. பண்ணலாம்.. தேவபட்டா கோர்ட் போக வேண்டி வரும். ஆனால் நீ தான் டேட்டாவை டெலிட் பண்ணா போதும்னு சொல்றல்ல.. அவசியமிருக்காது” எனவும், ஆன்லைனிலேயே ராமின் உதவியோடு கம்ளைண்ட்  செய்தான் தக்க ஆதாரங்களோடு.

நேற்று வரை நன்றாக இருந்தவன் இன்று சதா முறைத்து பார்த்து கொண்டே இருக்க “என்னாச்சு விக்ரா, வீட்டில்  வேற எதுவும் பிரச்சனையா” இவள் கேட்க அதற்கும் பதில் சொல்லாமலே இருந்தான்.

அப்போது மட்டுமில்லை அன்று முழுதுமே இறுக்கமாக தான் இருந்தான். “மற்ற நேரமாக இருந்தால், சாம்பூ ஏன் கோபமா இருக்க” என சட்டையை பிடித்திருப்பாள். இன்றோ ‘அவள் அவனிடம் விடும் ‘கேப்பு’ எல்லாம் ‘ஆப்பாக’ மாறிக்கொண்டிருக்கையில் எங்கிருந்து கேட்க. முகத்தை தொங்க போட்டு கொண்டு வலம் வந்தாள்.

“அத்த டீ கொடுக்க சொன்னாங்க..

குளிச்சிட்டு வர சொன்னாங்க,

சாப்பிட வர சொன்னாங்க” பத்து நிமிடங்களுக்கொருமுறை நாச்சியை காரணம் காட்டி தன் பின்னேயே சுற்றி கொண்டிருந்தவளை கோபத்தை காட்டாமல் சமாளிப்பதே பெரும் வேலையாய் போனது இவனுக்கு.

“காயமெல்லாம் எரியுது.. மருந்து போடனும்” ட்யூப்பும் கையுமாக வந்தவளை கூர்ந்து நோக்கினான்.

“வா என அழைத்தாலும், நான் போட்டுப்பேன்” என வீராப்பாய் கூறி அவ்வப்போது இவனிடமிருந்து தப்பி விடுவாள். இன்று அவளே வந்து நிற்க அழைத்து கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

காரியமே கண்ணாக, மருந்திட்டு கொண்டிருந்தவனிடம்

“ஏன் கோபமா இருக்க?”

“என்மேல என்ன கோபம்”

“நான் எதுவும் தப்பு பண்ணிட்டனா?”

“நீ இப்படி இருக்குறது நல்லாவே இல்லை” மருந்து போட விடாமல் இவள் அடுத்தடுத்து கேள்வி கேட்டு கொண்டே இருக்க

“என்னடி வேணும், இப்போ மருந்து போடவா? வேணாமா? மருந்தை அப்படியே போட்டுவிட்டு இவள் முகத்தை பார்த்து கேட்க

இவளோ “ஏன் இவ்வளவு கோபம்” கேட்கும் போதே கண்கள் கலங்கி போக, இழுத்து அணைத்து கொண்டான்.

அணைத்த பின்பே இவள் கொஞ்சமாய் நார்மல் மோட்க்கு வந்தாள். தன் சிறு கோபத்தை, விலகலை கூட இவளால் பொறுத்து கொள்ள முடியவில்லை! என அப்போது தான் உணர்ந்தான்.

விஜய் பிரச்சனையை எப்படி தான் சமாளிக்கிறாளோ? என மனதினுள் கேள்வி எழ

இவள் விரல்கள் மெதுவாய் ஊர்ந்து இவனை மெதுவாய் அணைத்தது. ‘உன்னால் தான் சமாளிக்கிறேன்’ என பதில் கொடுத்தது போல் இருந்தது அவள் அணைப்பு.

மொத்தத்தில் அவனில் மயங்க தெரிந்த மனதிற்கு, அந்த மயங்கி மனதை வெளிப்படுத்த தான் தெரியவில்லை.

அப்புறம் எப்படி தான் பிளாக்ல ஒரு மாசம் போட்டாளோ? என எண்ணம் ஓடியதாலும் இவள் மேல் அத்தனை கோபம் இருந்ததாலும் மீண்டும்  மாறிய முகம் கண்டு “மறுபடியும் கோபமா” இவள் சிணுங்க

அப்படியே அவளை இழுத்து தனக்குள் புதைத்து கொள்பவனாய் இறுக அணைத்து “கோபம் தான் ஆனால் உன் மேல இல்லை..” என நெற்றியில் இதழ் பதிக்க, இவளும் அவனை இறுக கட்டிக்கொண்டாள்.

அன்று மதியம் ஒரு மூன்று மணி போல “சுடிதாரை போட்டுட்டு வா.. கொஞ்சம் வெளியே போகனும்” மற்ற நேரமாய் இருந்தால் எங்கே எதற்கு என அத்தனை கேள்வி வரும். இன்று அவனது கோப முகத்தை கண்டு அமைதியாய் கிளம்பி வந்தாள்.

இவனுக்கும் இவளுக்கும் இருந்த காயத்திற்கு பைக்கில் செல்ல மனம் வரவில்லை. ஏற்கனவே வர சொல்லி இருந்த ஆட்டோவில் தான் சென்றனர்.

ஐந்து நிமிடம் தான் இருக்கும் “அதுக்குள்ளயும் எப்படி ரெஜிஸ்டர் ஆபீஸ் வரும்” என ஆட்டோவை விட்டு இறங்குகையில் தான் பார்த்தாள் புது வீடாக இருந்தது. “இங்கே யார் இருக்கா? யாரை பார்க்க வந்திருக்கோம்” என இவள் கேட்க

“விஜயோட புது வீடு. விஜயை பார்க்க” கத்தரித்தார்ப்போன்று இவன் கூறிய கனம்

“விக்ரா” என பாய்ந்து இவன் முழங்கையை பற்றியவள் “இங்கே எதுக்கு” என நடுங்கி போனாள்.

அந்த மூன்று நாட்களாய் இவளிடம் பார்க்காத ஒரு நடுக்கத்தை இப்போது பார்த்தான்.

“சொல்றேன் வா” வரமாட்டேன் என அடம் பிடித்தவளை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

“அங்கே, விஜயின் தாயாரும், மகாவும் அமர்ந்திருக்க “வாய்யா..” என விக்ராவை அழைத்து “வா லாவான்யா போலீஸ் ஸ்டேஷன் வரை போய்ட்ட போல.. நல்ல வேளை எங்க வீட்டுக்கு மகாலட்சுமி வந்து எங்க மானத்தை காப்பாத்திட்டா” தேள்கொடுக்காய் கொட்ட, விக்ராவின்  முழங்கையை இறுக பிடித்து “போய்டலாம் விக்ரா பிளீஸ்” என கெஞ்சினாள்.

“பேஸ் பண்ணி தான் ஆகனும்? எத்தனை நாளைக்கு எத்தனை பேரை பார்த்து ஓடி ஒழிய முடியும்” கண்களை இடுக்கி கொண்டு இவன் கேட்க, அதிர்ந்து அவனை பார்த்தவள், அவன் முதுகின் பின்னே மறைந்தாள்.

‘இதென்ன இங்க வந்து சீன் போட்டுகிட்டு’ மகா நினைக்க  “என்னய்யா விசயம், இந்நேரம் வந்திருக்க” என கேட்க

“விசயம் இருக்கு பெரியம்மா. ஆனால் அதுக்கு முன்ன விஜய் இங்கே வந்தாகனும்” என முதுகின் பின் இருந்தவளை இழுத்து சோபாவில் அமர்த்தி தானும் அருகில் அமர்ந்தபடி மகாவை ஒரு பார்வை பார்த்தான்.

அந்த பார்வையில் இவளும்  ஏதோ புரிந்துவிட விஜய்க்கு அழைத்து அவசரம் என சொல்லி வீட்டிற்கு வர சொல்ல, அங்கே விஜயும் என்னவோ ஏதோவென கிளம்பிவிட்டான்.

“என்ன இங்க வந்து நாட்டாமை பண்ணிட்டு கிடக்க” விஜயின் அம்மா ஒரு மார்க்கமாய் கேட்டார்.

“பெரியம்மா நான் நேரா விசயத்துக்கு வரேன். லாவன்யாவும், விஜயும் காதலிச்சாங்க” சொல்கையிலேயே முழங்கை பிடி இன்னமும் இறுகியது. அவள் கையின் மேல் தன் கையை வைத்து தட்டி கொடுத்தவன்

“வீட்டில் சொல்லி சம்மதம் வாங்க, நீங்க சம்மதிக்கலை,  அதற்கு பிறகு தான் விஜய்க்கு மகாவை பேச, அவனும் உங்க பேச்சுக்கு எதிர்பேச்சு பேசாமல் இவளை கழட்டி விட்டுட்டு மகா கழுத்தில் தாலி கட்டிட்டான். இதற்கு மகாவும் உடந்தை” என பேச பெரியம்மாவின் முகமும், மகாவின் முகமும் ஒரு சேர சுருங்கியது.

“கல்யாணத்துக்கு முந்தைய நாள் வரை எனக்கு மகாவை பிடிக்கலை, எப்படியாவது விக்ராபாண்டி உதவியோடு நாம ஊரை விட்டு ஓடிடுவோம்னு லாவான்யாவையும் தூண்டி விட்ருக்கான்.

 ஆனால் நானும் விஜயும் லவ் பண்றோம், லாவான்யா தான் இடைஞ்சல் குடுக்குறா, எப்படியாவது கல்யாணத்தை நடத்தி வச்சிடுங்கனு மகா என்கிட்ட கெஞ்சினா. இரண்டு பேரும் தனித்தனியா பிளான்போட்டு எங்களை ஏமாத்திருக்காங்க, அவங்களோட சந்தோஷத்துக்காக” என பட்டென போட்டு உடைக்க, மகாவின் முகமும் சேர்ந்தே உடைந்தது.

“சரி அதுக்கென்ன இப்போ, இரண்டாந்தாரமா இவளை எம்மவன் கட்டிகிடனுமா” பெரியம்மா கேட்க, இன்னும் பாடிய இறுக்கியவளை ஒர் முறை முறைத்தவன் “இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு அசிங்க பட போறீங்க, வார்த்தையை யோசிச்சு விடுங்க. முதல்ல என்னை பேச விடுங்க” கொஞ்சமாய் கடுமை ஏறியது அவன் குரலில்

“நானும் லாவன்யாவை தடுத்து கல்யாணத்தை நடக்க விட்டுட்டேன். ஆனால் அதுக்கு பிறகு, லாவான்யா பின்னாடி மறுபடியும் சுத்த ஆரம்பிச்சுட்டான் விஜய்” இவன் சொல்லி முடிக்கும் முன் “என் புள்ள, என் விஜய் அப்படி கிடையாது” கோரசாய் மாமியாரும் மருமகளும் டப்பிங் கொடுக்க

“நம்பலைன்னாலும் நிஜம் அது  தான். அவங்க காதலிச்ச காலத்தில் இரண்டு பேரும் பேசிக்கிட்டது, மேசேஜ் பண்ணினது எல்லாத்தையும் ஆதாரமா எடுத்து வச்சுட்டு, எங்கூட ஒரு நாள் பொண்டாட்டியா இரு, இல்லைனா இதையெல்லாம் உன் வீட்டு ஆளுக கிட்ட காட்டுவேன், சோசியல் மீடியால போட்டு அசிங்க படுத்துவேன். உன் போட்டோவை போட்டு, கார்ல் கேள்னு சொல்லி, உன் போன் நம்பர் அட்ரஸ் எல்லாத்தையும் வெளியே விட்ருவேன்னு மிரட்டுறான்” சொல்லிய கனம் லாவாவின் உயிர் உறைந்தது போல் இவனை பார்க்க, அதிர்ந்து போயினர் மாமியாரும் மருமகளும்.

“விஜய் அப்படியெல்லாம் கிடையாது” “எம்புள்ளைய நான் அப்படி வளக்கலை” என இருவருமே சொன்னதையே திரும்ப சொல்லி சப்போர்ட் செய்து கொண்டே இருந்தனர்.

வெடுக்கென்று எழுந்து நின்று தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து லாவன்யாவின் போனை எடுத்து அதில் வாட்ஸப்பை ஓபன் செய்து விஜயுடனான மேசேஜ்களை காட்டி அவள் கையில் கொடுத்தான்.

அவசர அவசரமாய் அதை படித்தாள். “என்ன மகா என்ன மகா இருக்கு இதில” பறந்த மாமியாருக்கு “சும்மா தான் இருங்களேன்” என வள்ளென விழுந்தாள்.

எல்லாவற்றையும் படித்தவள் அறிந்து கொண்டது ஒன்று தான் விக்ரா சொன்னது அத்தனையும் உண்மை என.

ஆனாலும் விட்டுகொடுப்பாளா இவள்..  “காதலிச்சீங்க, பேசிகிட்டீங்க, நியூட் போட்டா  கட்டி உடனே அனுப்பிடுவியா நீ அறிவில்லையா” மகாவின் பார்வை லாவன்யாவை குறி வைக்க, ஞானி போல் இவள் பேச, விக்ரா பார்த்த ஒரு பார்வையில் பேசாமல் இவள் நின்றிட, சரியாய் அந்நேரம் விஜயும் வீட்டினுள் வந்தான், ‘இவ என்ன இங்க நிக்கிறா?’ என முறைத்து கொண்டு தான் வந்தான்.

“போட்டோவை வச்சு மிரட்டுறது தப்பில்லை. அந்த போட்டோவை  கொடுத்த இவமேல தான் தப்பு? ம்.. ஆமாம் தப்பு தான், காதலிச்சவன் மேல இவ்வளவு நம்பிக்கை வச்சால அது தப்பு தான்!” இம்முறை விஜயை குறி வைத்தது விக்ராவின் விழிகள்.

விஜய்க்கோ, தாய் மனைவி என இருவரிடமும் வெளிப்படையாய் இவன் பேசுவதை எதிர்பார்க்கவில்லை. சிறிதாய் படபடத்தான்.

“எல்லாத்தையும் எவிடன்ஸா எடுத்துகிட்டு மிரட்டி படுக்கைக்கு கூப்பிடுற உன் புருஷன் நல்லவன், கட்டிக்க போறவன் தானேன்னு லிபரலா இருந்த இவ கெட்டவ” பலமாய் கை தட்டியவன், இரண்டே எட்டில் விஜயை நெருங்கி பெளீரென விட்டான் ஒரு அறை வீடே அதிரும் படி.

இரண்டடி தள்ளி விழுந்த விஜயை நோக்கி மாமியாரும் மருமகளும் “விஜய் விஜய்” என பதறிக்கொண்டு ஓட

“ஏய்…” விழி உருட்டி முகம் இறுக கண்கள் சிவக்க இவன் கத்திய கத்தில் இருவருமே தள்ளி நின்றிட

போனை குடுறா, பாஸ்வேர்டு சொல்லு என ஒவ்வொன்றிருக்கும் அடி வைத்து தான் அவனிடம் இருந்து கறந்தான். இவளது போட்டோவை எங்கேயும் பகிர்ந்திருக்கிறானா என சோதித்தான்.

“விக்ரவாண்டி வேணாம்.. தேவயில்லாத வேலை பார்க்குற” என மிரட்டி வந்தவனுக்கு, இன்னும் இரண்டு அறையை விட்டான்.

பதிலுக்கு இவனும் கை ஓங்கிக்கொண்டு வர, கையை எதிர்புறமாய் பிடித்து திருப்பி சுவர்பக்கமாய் திருப்பி அடிக்க, உடைந்தது விஜயின் மண்டை.