“ஈசிஆர் பக்கம் சின்னதா ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு அண்ணி. கோகனட் பாரமிங் காக அண்ணா வாங்கி போட்ட லேண்ட்ல இருக்கிறது. ஆனா அங்கிருந்து சிட்டிக்கு வரதுக்கு ரொம்ப நேரம் ஆகும். அந்த ஹவுஸ்ல வசதியும் பெருசா இருக்காது. அப்பப்ப அண்ணன் மட்டும் வேலை சம்பந்தமா உபயோகிப்பாரு”
“வேலைக்காரங்க?”
“தோட்டத்தை பார்க்க ஒரு குடும்பம் மட்டும் தான் அண்ணி. ரொம்ப சின்ன கெஸ்ட் ஹவுஸ் தான், சமையலுக்கு ஆள் வேணும்ன்னா அங்கே வேலை செய்யற அம்மாவையே அங்கே போறப்ப ஆதி அண்ணன் வர சொல்லிடுவாங்க”
“அப்ப எனக்கு பயந்துட்டு அஞ்சு நாளும் அங்கே இருந்து தான் அப்பாவை வெளிய எடுக்கிற வேலையை பார்த்திருக்கீங்க” பாட்டியைத் திரும்பிப் பார்த்து கோபமாகக் கேட்க, அவர் முழித்த விதத்திலேயே அதுதான் உண்மை என்று புரிந்து விட்டது.
அவளுடைய முழுக்கோபமும் இப்படி வீணாக உடம்பை கெடுத்துக் கொள்கிறாரே என்பதில் தான்! கொசுறாக அவளின் சொந்த ஆதங்கமும் சேர்ந்து கொள்ள அவளால் அவரிடம் இயல்பாகப் பேச முடியவில்லை. ஓயாது சிடுசிடுப்பை காட்டிக் கொண்டிருந்தாள்.
அவளது கோபத்தை வெளியேற்ற இதுபோல வாய்ப்பு கிடைத்தால் தானே அது கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகும்! இல்லையேல் கனலென அடி நெஞ்சில் தேங்கி விடாதா? தேங்கிய கனல் ஏதோவொரு சூழலில் பெரிதாக வெடித்து சிதறாதா?
அவள் பாட்டியைக் கோபமாகப் பார்த்தபடி இருக்க, கடைசி பேச்சுவார்த்தையைக் கேட்டபடியே குளித்து உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்த ஏழுமலை, “தாராம்மா அவங்க வயசுக்கு ஆச்சும் கொஞ்சம் பொறுத்து போடா” என்று மகளிடம் சிபாரிசு செய்தார்.
தந்தை இப்படியே பேசிக் கொண்டிருப்பதில் அவ்வளவு தான் அவள் மொத்தமாக வெடித்து விட்டாள்.
“நியாயத்துக்கு உங்களுக்கு கோபம் வந்திருக்கணும். இங்கே வந்ததும் என்னை உங்களோடயே கூட்டிட்டு எங்கயாச்சும் போயிருக்கணும். அதை விட்டுட்டு என்னோட நியாயமான ஆதங்கத்தைத் தப்பு சொல்லுங்க…” என்று கோபமாகத் தந்தையிடம் கத்திவிட்டு முகம் மூடி அழுதாள்.
என்னதான் ஆயிரம் சமாதானங்கள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, ஓரளவு தேறி வந்தாலும், கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள் அவளது இழப்பு எத்தனை கொடுமையானது? அதிலும் ஒற்றை உறவான தாயையும் இழந்து அனாதையாகத் தவித்தபோது எவ்வளவு பாடுபட்டிருப்பாள். அலக்கியா, தான்பாபு விஷயம் வெளியே கசிந்து விடக்கூடாது என்று பாதுகாப்பாக இருக்க நினைத்தபோது அவளுக்கு அடைக்கலம் கொடுக்க ஒரு இடம் கூட இல்லாமல் அனாதையாக அலைந்தாளே, அப்பொழுது அவள் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா? எல்லாவற்றிற்கும் ஏதேனும் ஒரு தவறாவது மூல காரணமாக இருந்திருந்தால் பரவாயில்லை. இங்கு அவளின் தந்தை நிரபராதி! இருந்தும் அவரோடு சேர்ந்து அவளுக்கும் அவளின் அன்னைக்கும் மிகப்பெரிய தண்டனை!
இத்தனையையும் மறக்கும் வல்லமை அவளுக்கு எங்கிருந்து உடனே வந்துவிடும்? ஊனும் உயிருமான சாதாரண மனிதப் பிறவி தானே அவள்!
இத்தனை நேரமும் சுவாரஸ்யமாகப் பார்த்திருந்த சத்யாவிற்கு மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. அண்ணி அழுகிறார்களே என்று பரிதாபப் பட்டவனுக்கு, என்ன அண்ணி வீட்டை விட்டுப் போகிறார்களா? ஏன் அப்படி என்ன நடந்து விட்டது, இந்த பாட்டி ஏதாவது சீரியல் வில்லி மாதிரி செய்து வைத்து விட்டார்களா என்ன என்றெல்லாம் கண்டபடி யோசனை ஓடியது.
அண்ணி அருகே சென்றவன், “அண்ணி, இந்த வீட்டுல உங்களுக்குத் தான் உரிமை அதிகம். பாட்டி ஏதாவது சொல்லியிருந்தா அவங்களுக்கு பதிலா நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். இப்பவே அவங்களை ஊருக்கு கூட கூட்டிட்டு போயிடறேன். நீங்க எங்கேயும் போகாதீங்க அண்ணி” என்றான் கெஞ்சுதலாக.
என்ன பிரச்சினை என்று கூட பார்க்காமல், தன்புறம் நிற்கத் துடிக்கும் சின்னவன் மீது அத்தனை பாசம் பொங்கியது. “உங்க அண்ணா மட்டும் என்ன சத்தி? அவரும் இவங்களுக்கு மேல இருப்பாரு. எல்லாரும் என்னை ஏமாத்திடறாங்க. என் நம்பிக்கையை அழிச்சிடறாங்க” என்றவள், “உன் அளவுக்கு என் மேல யாருமே பாசம் காட்டினது இல்லை சத்தி” என்று சொல்லி அவன் கையை பிடித்தபடி உணர்ச்சி வேகத்தில் அழ, அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அண்ணியின் சத்தி என்கிற அழைப்பு தாராவின் அழைப்பு போலவே இருக்கிறதே என்று கொஞ்ச நேரம் முன்பு தான் நினைத்து நெகிழ்ந்திருந்தான். இருவருக்கும் இருக்கும் பெயர் ஒற்றுமை கூட அந்த நேரத்தில் பளிச்சிடவில்லை. இப்பொழுது அண்ணி தன்னுடைய பாசத்தைப் பெரிதாகப் பேசுகிறாரே, அப்படி நாம் என்ன செய்து விட்டோம் என்று புரியாமல் பார்த்தபடி நின்றிருக்க, பூஜிதா கூட ‘இதே நிலை தொடர்ந்தால், இன்னும் கொஞ்ச நேரத்தில் தலையைப் பிய்த்துக் கொள்வோம் போல’ என்ற நிலைக்கு வந்து விட்டாள்.
“அண்ணி அழாதீங்க பிளீஸ்” என்றான் பரிவாக. பூஜிதாவுக்கும் நிலைமை கைமீறிப் போவதைப் போல எண்ணம்! தூணாக நிற்கும் வல்லமை இருக்கும் தாராவே உடைந்து போய்விட்டால் நிலைமையை சமாளிக்க முடியாது என்றளவில் புரிந்தது. அதனால் அவளும், “அக்கா, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க. அழாதீங்க பிளீஸ்” என்று அவள் பங்குக்கு சமாதானம் சொன்னாள்.
மகள் கோபத்தில் பேசியதிலேயே ஏழுமலை ஸ்தம்பித்துப் போயிருக்க, அவள் மருமகன் மீதும் கோபமாய் இருக்கிறாள் என்பது புரிந்து கொஞ்சம் தடுமாறித்தான் போனார். அவர் அறிவுக்கு எட்டியவரைத் தெளிவாகத் தெரியுமே தங்கள் குடும்பம் எதிர்கொண்ட பிரச்சினைக்கும் மருமகனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று!
ஏழுமலைக்கும் அழகாண்டாள் அத்தை மீது தான் கோபம், மனஸ்தாபம், ஆதங்கம் எல்லாம். ஆனால், வயதான காலத்தில் அதற்காக ஏற்கனவே வருந்தி மருகுபவர் மீது எப்படி கோபத்தைக் கொட்ட முடியும்? அதோடு அவரும் நிறைய இழப்புகளைச் சந்தித்தவர் தானே!
அதுவும் இல்லாமல் தங்களின் இந்த நிலைக்கெல்லாம் மூல காரணமாய் தன் மனைவியின் பேராசை இருந்ததே! தன் தவறு இதில் ஒன்றும் இல்லை என்று புரிந்தாலும், மனைவியின் நடவடிக்கையைக் கண்காணிக்காததும் ஒரு வகையில் தன் பிழை தானே!
ஏதேதோ நடந்து விட்டது. போதும் போதும் என்றளவில் இரண்டு குடும்பமும் அனுபவித்தாகியும் விட்டது! வயதானவரை வருத்த வேண்டாம் என்று ஆண்டாள் அத்தையின் மன்னிப்பை ஏற்கத் தயாராய் இருந்தவருக்கு, மகளின் திருமணம் குறித்து தெரிந்ததும், தன் கோபத்தை முற்று முழுதாக மறந்து இனி வரும் காலத்தை நல்லபடியாக வாழ வேண்டியது தான் என்னும் நிலைக்கு ஏழுமலை வந்திருந்தார்.
இப்பொழுது அவரின் முடிவை மகளின் கோபம் அசைத்துப் பார்த்தது. தன் வரையிலும் தான் எடுத்த முடிவு சரிதான், ஆனால், மகளின் விருப்பம் என்ற ஒன்று இருக்கிறதே! ஆரம்பத்தில் கோபத்தை மன்னிக்கும் பக்குவம் இருப்பவள் போல இருந்தவள், திடீரென்று உடைந்து அழுதது அவருக்கு மனதில் பலத்த அடி!
அழகாண்டாள் அத்தை என்ன சொல்ல என்று கூட புரியாமல் கலக்கமாக தாராவை பார்த்திருக்க, ஏழுமலைக்கு அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தபோதிலும் மகள் தான் மிகவும் முக்கியமாகப் பட்டாள்.
அவளருகே சென்று, “உனக்கு விருப்பம் இல்லாத எதையும் எந்த கட்டாயத்துக்காகவும் நீ செய்ய வேண்டாம் தாராம்மா. எப்பவும் அப்பா உன்கூட உனக்கு உறுதுணையா இருப்பேன். இப்ப உனக்கு இந்த இருக்க விருப்ப இல்லைன்னு மனசுக்கு பட்டா, நாம இங்கிருந்து இன்னைக்கே கூட கிளம்பிடலாம்” என்று கலங்கிய குரலில் சொன்னார்.
அந்த குரலே எடுத்துரைத்தது இந்த முடிவை எடுக்க அவர் தனக்குள் எத்தனை போராடியிருக்கிறார் என்று!
அழகாண்டாள் பாட்டி அதிர்ந்து போய் பார்த்திருக்க, ஏழுமலை அதைப் புரிந்தவர் போல அவரை திரும்பிப் பார்த்தவர், கையெடுத்துக் கும்பிட்டு, “என்னை மன்னிச்சிடுங்க அத்தை. இப்ப எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்லை. ஆனா அதுக்காக என் மகளுக்கு விருப்பம் இல்லாத எதையும் என்னால திணிக்கவும் முடியாது. என்னை தப்பா எடுத்துக்காதீங்க” என்று உடைந்த குரலில் வலியுடன் சொல்ல,
தான் செய்த பாவம் நெருப்பு பந்தென தன்னை சூழ்ந்து எரிப்பதைப் போல பாட்டி உணர்ந்தார் என்றால், சத்யா, ‘எதற்காக இவ்வளவு பெரிய முடிவு?’ என்று புரியாமல் திகைத்து ஸ்தம்பித்துப் போனான்.
((தாராவால் முழுதாக மன்னிக்கவும் முடியவில்லை. கோபத்தை இழுத்து பிடிக்கவும் முடியவில்லை. அதனால் தான் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் இருக்கிறாள். கதை இன்னும் 2,3 எபியில் முடிஞ்சிடும்ன்னு நினைக்கிறேன்.
quick recall – தாரா அழகாண்டாள் பாட்டி மேல இருக்க கோபத்தை எப்படி ஹேண்டில் செய்யறா? தாரா யாருங்கிற உண்மை சத்யாவுக்கு தெரிய வந்தா அவன் உணர்வுகள் எப்படி இருக்கும்? இத்தனை கொடுமைகள் செய்த வீரராகவனுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? அவனை எதுவும் செய்வதால், இந்துஜா எதுவும் பிரச்சினை செய்வாளா? விவேக், சுந்தரி அம்மா, சத்யா இவங்க உறவு என்னமாதிரி முடிவுக்கு வரும்? last but not least… தாரா, ஆதி காதல்???
வேற எதுவும் மிஸ் பண்ணி இருந்தா பிளீஸ் உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு கமெண்ட்டில் சொல்லிடுங்க, கதையை நிறைவா முடிக்கணும். Thank u so much for your support))