சற்று நேரம் அங்கே கனத்த மௌனமே ஆட்சி செய்தது. தாராவின் கேவலும் ஏழுமலையின் கண்ணீரும் ஒருபுறம் என்றால், இந்த துயரத்திற்கு நான் தானே காரணம் என்ற குற்றவுணர்வு உருக்க அழகாண்டாள் பாட்டியின் கண்களிலும் கண்ணீர் பொழிந்து கொண்டிருந்தது.
இந்த காட்சியைப் பார்த்திருந்த சத்யேந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. கனிகா மூலம் அவனுக்கு அறிமுகமாகயிருந்த தாரா கேரளாவைச் சேர்ந்த யாருமற்ற அனாதை பெண்! அண்ணியாக அவரின் உறவு நிலை மாறிய பிறகும் அவன் அந்த வீட்டில் வசிக்காததும், தாராவின் தாய்மொழி வேறாக இருந்ததிலும், அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கை காதல் தோல்வி, விபத்து என்று பல்வேறு போராட்டங்களோடு கடந்ததிலும் அவனுக்கு தாராவிடம் நல்லுறவைப் பேணும் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை.
அதனால் அவளைப்பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது என்றபோதும், அனாதையாக அறிமுகமான பெண்ணைத் தேடி தந்தை என்ற ஒருவர் வந்ததே பெரிய அதிர்ச்சி என்றால், அவரை அழைத்து வந்தது அவனுடைய பாட்டி என்றதும் நடப்பது ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.
இப்பொழுது சம்பந்தப்பட்ட மூன்று பேருமே இப்படி அழ வேறு செய்ய, காரணம் புரியாவிட்டாலும் ஒரு மாதிரி அந்த காட்சியில் மனம் கனத்து போனது. கொஞ்ச நேரம் அவர்களாகவே எதையாவது சொல்கிறார்களா என்று காத்திருந்து பார்த்தான். காட்சி மாறுவதாகவே இல்லை.
இவனாகவே பாட்டியை நெருங்கி ஆதரவுடன் அவரின் தோளைத் தொட்டவன், “இவங்க அண்ணியோட சொந்த அப்பாவா பாட்டி?” என்று விசாரித்தான்.
அவன் நிலை அறிந்தபிறகு இப்பொழுது தானே ஆண்டாள் அவனை நேரில் பார்க்கிறார். அதில் பரிவு எழ, அவனது கன்னங்களை தன் தளர்ந்த கரங்களால் வருடி, ஆமாம் என்பதாக தலையசைத்தார். அவனைப் பார்த்ததும் இன்னும் கண்கள் கலங்கியது.
இந்த காட்சி ஏழுமலையின் பார்வையிலும் பட, “சின்னவன் தானே அத்தை” என்று கேட்டவருக்கு, அவனது கதையை ஆண்டாள் மூலமாக ஏற்கனவே தெரிந்து கொண்டிருந்ததால், இளையவன் மீது வாஞ்சையுடன் தன் பார்வையைப் பதித்தார்.
“ம்ம் ஆமாப்பா” என்று குரலே எழாமல் சொன்ன ஆண்டாள் பாட்டி முகத்தில் அத்தனை சோர்வு. இந்த வயதிற்குக் கொஞ்சம் அதிகமாகவே அலைந்து திரிந்து விட்டார். ஆனால், அவரின் தேவை இப்பொழுது குடும்பத்திற்கு அவசியமாயிற்றே! அதில் இயன்றவரைத் தாக்குப்பிடிக்க முயற்சி செய்தார்.
தாராவிற்கு பாட்டியின் கம்பீர குரல் தானே பழக்கம். இப்படி ஒரு சன்னமான குரல் அவளை கொஞ்சம் சுயநினைவிற்குத் திருப்பியது. தந்தையின் தோளிலிருந்து எழுந்து பாட்டியைக் கொஞ்சம் ஆராய்ச்சியாகப் பார்த்தாள். பார்த்த மாத்திரத்திலேயே அந்த வித்தியாசம் கண்ணில் பட்டுவிட்டது போல, “பாட்டி என்ன செய்யுது உங்களுக்கு? ஏன் இப்படி சோர்ந்து போய் இருக்கீங்க?” என்றாள் வேகமாக அவரின் அருகில் நெருங்கி.
தளர்ந்த விரல்கள் இப்பொழுது நடுங்க தொடங்கியிருந்தது. சின்னவளின் கன்னத்தையும் வருடி, “என்னை மன்னிச்சிடுவ தானேம்மா” என்று கேட்கும் போதே கண்ணிலிருந்து அதிகமாக நீர் பொங்கியது.
சின்ன வயதிலிருந்தே கம்பீரமும் ஆளுமையாகப் பார்த்துப் பழகிய தோற்றம்! ஏன் திருமணம் முடிந்து இத்தனை மாதங்களில் நேரடியாகப் பார்த்த சந்தர்ப்பங்கள் குறைவு என்றாலும் கைப்பேசியில் பாட்டியின் அனுசரணையையும் கரிசனத்தையும் கூட கம்பீரமான குரலில் கேட்டுப் பழக்கப்பட்டவள் ஆயிற்றே! இப்பொழுது அழுதே பார்த்து பழகியிராத கண்கள் கண்ணீரில் நிரம்பியிருக்கிறது. உறுதியும் கம்பீரமுமான குரல் தளர்ந்து ஒலிக்கிறது.
அதில் தாராவே கொஞ்சம் திகைத்துத் தடுமாறிப் போனாள். “மன்னிப்பு கேட்கிற நேரமா இது? செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு…” என்று கோபமாகக் கடிந்து கொண்டாலும், “சத்தி, பாட்டியைக் கீழே இருக்க ரூமுக்கு கூட்டிட்டு போலாம் வா” என்று வேகமாக அவனை உதவிக்கு அழைத்தாள்.
பெரியவளுக்கு சின்னவளின் அக்கறை தேனாய் இனித்தது.
“நீ டாக்டருக்கு படிச்சேன்னு என்னை நோயாளியா மாத்திப்புடாதடி. பேரன் கிட்ட சொல்லி உனக்கு தனியா ஆஸ்ப்பிட்டல் வேணும்ன்னாலும் கட்டி கொடுக்க சொல்லறேன். நான் நல்லா தான் இருக்கேன். தாங்கி பிடிக்காம கொஞ்சம் விடு” கண்களில் கருணையும் இதழ்களில் கண்டிப்புமான அவளின் தொனி பாட்டிக்கு எல்லாம் சீக்கிரம் சரியாகி விடும் என்று நம்பிக்கை தந்தது போல! அதனால் வெகு இலகுவாக அவளிடம் பேசிக் கொண்டிருந்தார்.
“ஆமாம் நான் தான் உங்களை நோயாளியா மாத்தறேன். நல்லா நடக்க முடியும்ன்னா பேசாம வாங்க. வந்து கொஞ்சம் உட்காருங்க. சாப்பிட ஏதாவது கொண்டு வர சொல்லறேன்” என சிடுசிடுத்தபடி அவரை அழைத்து சென்று சோபாவில் அமர வைத்தவள், சீதாம்மாவை அழைத்து பாட்டிக்கு உண்ண ஏதாவது கொண்டு வர சொன்னாள்.
அவளுக்கு உடன்பட்டபடியே சின்ன சிரிப்புடன் அவளையே பார்த்தபடி, “உங்க அப்பாவை கவனிடி முதல்ல” என்று பாட்டி சொல்ல,
‘இந்த பாட்டி இதுதான் சாக்குன்னு நொடிக்கு ஒரு டி போடுது’ என்று அவரை முறைத்து பார்த்தவள், “அப்பா நீங்க குளிச்சிட்டு வந்துடுங்க, நீங்களும் பாட்டி கூடவே சாப்பிட்டுக்கலாம்” என்று அவரை பார்த்து சொன்னாள்.
“கார்ல ஏழுமலைக்கு புதுத்துணி வெச்சிருக்கேன், கொண்டு வர மறந்துட்டேன்” என்று ஆண்டாள் பாட்டி சொன்னவர், “சத்யா கார்ல இருந்து கொண்டு வந்துடுப்பா” என சொல்லி பேரனை அனுப்பி வைத்தார்.
ஏதோ புரியாத பாஷையில் படம் பார்ப்பது போல ஆகிவிட்டது சத்யாவின் நிலை! இங்கே நடப்பது ஒன்றும் விளங்கவில்லை. பூஜிதாவோ அதைவிட மோசமான நிலையில் எல்லார் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“புதுத்துணி…” என்று ஒருமாதிரியாகத் தாரா இழுக்க, “நான் சொல்லலை ஏழுமலை, எனக்கு இவளைச் சமாளிக்கிறது தான் பெரும்பாடு. என் மருமக தானே இவளையும் வளர்த்தா அவ பண்பு கொஞ்சமாச்சும் வந்திருந்தா என் மிச்ச பொழப்பு ஏதோ ஓடிடும்” என சொல்ல, சுத்தமாக ஒன்றும் புரியாமல் பாட்டியையும் அண்ணியையும் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு வாசல் நோக்கிச் சென்றிருந்தான் சத்யா.
தாராவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. தான் யார் என்று சத்யாவிடம் சொல்லாததே எங்கே இருக்கும் கோபத்தை அவன்மீது கொட்டி விடுவோமோ என்ற அச்சத்தில் தான்! இப்பொழுது இந்த பாட்டிக்கு உடம்பு சரியில்லையே என்று கொஞ்சம் அனுசரணையை கடைப்பிடித்தால், இந்த பாட்டி அவளின் பொறுமையை ரொம்பவும் சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
“தாராம்மா… நடந்த எதையும் மாத்த முடியாது. கொஞ்சம் கோபப்படாம நிதானமா இருடா” தந்தை கோரிக்கையாகக் கேட்க, கோபமான முகத்தோடே தலையை ஆட்டினாள்.
அதற்குள் சத்யா துணிப்பையுடன் வந்து அதை ஏழுமலையிடம் கொடுக்க, “கோயிலுக்கு போயிட்டு வந்துடலாம் தானே தாரா?” என்று ஆண்டாள் பாட்டி பேத்தியிடம் கேட்டார்.
துளியும் கண்டுகொள்ளாமல், “நீங்க குளிச்சிட்டு வந்துடுங்கப்பா” என்றவள் அப்பாவோடு சென்று அறையைக் காட்டிவிட்டு அவருக்கு வேண்டியதை எடுத்து வைத்துவிட்டு வெளியே வந்தாள்.
‘இவ இனி எப்ப பதில் சொல்லி…’ என்று அவளைப் பார்த்தபடியே, சீதா கொண்டு வந்து கொடுத்த கம்பங்கஞ்சியை ஆண்டாள் பாட்டி குடித்துக் கொண்டிருந்தார். குடிக்காமல் போனால், அதற்கு வேறு என்ன சொல்லுவாளோ என்று பாட்டியே பயம் கொள்ளும் வகையில் இருந்தது தாராவின் நடவடிக்கைகள்.
வந்தவளிடம், “கோயிலுக்கு தாரா…” என பாட்டி மீண்டும் தொடங்க, “முதல்ல உடம்பை சரி பண்ணுங்க. உங்க பேரன் நீங்க வருவீங்கன்னு சொல்லி அஞ்சு நாள் ஆச்சு, இத்தனை நாள் எங்கே இருந்தீங்க?” என்று சூடாகக் கேட்டாள்.
தாராவுக்கு இருந்த மன அழுத்தத்தில் ஐந்து நாட்கள் இவர் வரவில்லை என்பதைக் கூட யோசிக்க மறந்திருந்தாள்.
சத்யாவுக்கு பாட்டியின் தயக்கம், அண்ணியின் கோபம் எல்லாமே புதிதாக இருந்தது. குறுக்கே வராமல் கொஞ்சம் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். என்னவோ இந்த காட்சி இருவருக்குள்ளும் நிறைய நெருக்கம் இருப்பது போல உருவகப் படுத்தியதோ என்னவோ பார்க்கவே அத்தனை இனிமையாக இருந்தது.
அழகாண்டாள் பாட்டியோ, ‘அஞ்சு நாள் அப்பறம் இவங்க அப்பன் கூட வந்ததுக்கே இந்த வாங்கு வாங்கறா? இவகிட்ட நான் அஞ்சு நாள் முன்னாடியே வந்து சிக்கணுமாமா? நினைப்ப பாரு! நான் எல்லாம் உனக்கே பாட்டி ஆகணும்டி’ என்று மனதில் நினைத்துக் கொண்டாலும் வெளியில் ஒன்றும் சொல்லாமல் கஞ்சியை குடிப்பதே தலையாய கடமை என்பது போல செய்து கொண்டிருந்தார்.
இவளே காய்ச்சல் கண்டவள் போல வாடி வதங்கி இளைத்துச் சோர்ந்து தான் இருக்கிறாள். அது பாட்டியின் பார்வையில் பட்டாலும், எப்படியும் ஏதோ ஒரு வகையில் இவளுக்கு நாங்கள் யார் என்கிற உண்மை தெரிந்திருக்கும். அதனால் தான், தன் அப்பாவை பார்த்த பிறகு கூட, அவர் எப்படி இங்கு வந்திருப்பார் என்கிற அதிர்ச்சியோ அது குறித்த கேள்விகளோ இல்லாமல் அவரோடு தன் ஏக்கத்தைப் பகிர்வதில் மும்முரமாகி விட்டாள் என்று புரிந்ததால் அவளிடம் அவளின் மெலிவு, சோர்வு குறித்து ஒரு வார்த்தை கூட பாட்டி விசாரிக்கவில்லை.
ஆனால், இவளானால், என் நிலைமையை ஓரளவு ஊகித்திருப்பாள். இவளை எதிர்கொள்ள எனக்கு எத்தனை தடுமாற்றமாக இருக்கும் என புரிந்திருப்பாள். அப்படியிருந்தும் ஏன் வரவில்லை என்று கேட்கிறாள். எல்லாம் என் நிலைமை என்று எண்ணிக் கொள்ள மட்டும் தான் பாட்டியால் முடிந்தது.
பாட்டியிடமிருந்து பதில் வராததில் கடுப்பானவள், “ஏன் சத்தி, சென்னையில வேற எதுவும் நமக்கு வீடு மாதிரி இடம் இருக்கா?” என்று விசாரித்தாள்.