சிவாவிற்கும், பைரவிக்கும் மேலும் தங்களின் காதல் மெருகேறி இருப்பதாய் தான் இருந்தது. இருவருக்குமான புரிதல் என்பது அடுத்த நிலைக்கு சென்றிருப்பதாய் இருக்க, சிவாவிற்கு புதியதொரு சிக்கல் அவனது வீட்டினில் இருந்து வந்தது.
சிவாவோ “ம்மா எங்க கல்யாணம் இப்போ இல்லை. ஷாலினிக்கு பார்ப்போம். அதை முடிச்சிட்டு, அடுத்து எங்க கல்யாணம் பேசுவோம். நான் இன்னும் கொஞ்சம் அடுத்த நிலைக்கு போகனும்…” என,
“இன்னாத்துக்கு டா இப்படி பேசின்னு இருக்க? முதல்ல உனக்கு முடிச்சிட்டு தான் ஷாலினிக்கு. வூடு முடியவும் உங்க கல்யாணம் தான்…” என்றிட, அவரை ஒரு பார்வை பார்த்தவன், எதுவும் பேசாமல் இருக்க,
“உங்கப்பாவ நினைச்சு பாரேன் டா.. முன்ன மாதிரி இல்லை…” என்று ரஞ்சிதம் அடுத்த ஆயுதத்தை எடுத்தார்.
“ம்மா என்ன நடந்தாலும் சரி. நான் முன்னாடி சொல்லிருக்கேன் நியாபகம் இருக்கா, நம்ம உழைப்பு மட்டும் தான் நமக்கு எப்பவும் துணை நிக்கும். வீடு முடியவும், அடுத்து என்னன்னு பார்க்கணும். காலத்துக்கும் இப்படி மெக்கானிக்கா இருக்க முடியாது. பைரவியை காதலிக்கிறது நிஜம்னா, அவளுக்கு ஏத்த மாதிரி நான் என்னோட நிலையை உயர்த்தவும் செய்யணும். அதுனால கண்டதையும் இப்போவே பேசி வைக்க வேணாம்…” என்று முடித்துவிட்டான்.
சிவாவின் பிடிவாதம் தான் அவன் குடும்பம் அறிந்த ஒன்றே. சொல்லப்போனால் அவன் இந்த அளவிற்கு முன்னேறி வந்ததே அவன் பிடிவாதத்தினால் தானே. மகன் பேச்சினில் இருக்கும் நியாயம் புரிந்தாலும், பைரவியின் பழக்க வழக்கங்கள் வேறல்லவா. பெரிய இடம். ஒருவேளை மனம் மாறிவிட்டால் என்ன செய்வது என்ற பயமே.
அதற்கு தூபம் போடும் விதமாய், அன்றைய தினம் ஷாலினி தன் அலைபேசியில் பைரவியின் வீடியோ ஒன்றினை ரஞ்சிதமிடம் காட்டினாள்.
“யம்மோவ்.. பாரு. உன் வருங்கால மருமக போட்டிருக்க வீடியோ. பாண்டிச்சேரிக்கு பிக்னிக் போயிருக்கா பிரண்ட்ஸ் கூட. அவ ட்ரெஸ், பேச்சு, ஆட்டம் எல்லாம் பாரேன். இதெல்லாம் நமக்கு ஒத்து வருமா?” என்று பேச, ரஞ்சிதாமோ நெற்றி சுறுக்கினார்.
“ம்மோவ் பாரேன் கண்டவனோட எல்லாம் டான்ஸ் ஆடுறா…” என்று ஷாலினி ஏற்றி விட, ரஞ்சிதம் முகம் தானாய் சுருங்கியது.
அதன் பிரதிபலிப்பு சிவாவிடம் காட்டினார் ரஞ்சிதம்.
“ஏன் சிவா, இதெல்லாம் நமக்கு ஒத்துவருமா சொல்லு. நீ சொல்லக் கூடாதா?” என்று மகனிடம் பேச,
“ம்மா ஷூட்டிங்காக போயிருக்கா. எனக்குத் தெரியும் பைரவி போனது…“ என்று சிவா பேச,
“சரிடா.. அதுக்காக இப்படியா எல்லாம் நின்னு கூத்தடிக்கனும். அதை படம் புடிச்சி ஊரு உலகத்துக்கே காட்டனும்…” என்று ரஞ்சிதம் விடாமல் பேசவும், சிவாவிற்கும் எரிச்சலாய் போனது.
அவனுக்குமே பைரவியின் வீடியோ கண்டு முதலில் ஒருமாதிரி இருந்தது தான். ஆனாலும் அவளது உடையில், உடல் மொழியில் எல்லாம் முகம் சுளிக்கும் விதமாய் எதுவுமே இல்லை.
சென்ற வேலை முடிந்ததும், ஷூட்டிங் நடந்த இடத்தினில் அவளோடு வந்த மற்ற பாடகர்களோடு சேர்ந்து லேசாய் நடனமாடி வீடியோ பதிவிட்டிருக்கிறாள் அவ்வளவே. அவளது மாடர்ன் உடை பொதுவாய் இவர்கள் யாரும் அணியும் உடையல்ல. பைரவிக்கு இயல்பான உடை அவ்வளவே.
சிவாவிற்கு ஆரம்பத்தில் ஒருமாதிரி இருந்தாலும், பின் அவனே அவனுக்கு சொல்லிக்கொண்டான். பைரவியின் இயல்பு வாழ்வு இப்படித்தான். இதனை நீ ஏற்றுக்கொண்டு தான் ஆகிட வேண்டும் என்று தனக்கு தானே உறுதியாய் சொல்லிக்கொண்டான். அவன் இதெல்லாம் நினைத்த நேரம் சரியாய் பைரவி அவனுக்கு வீடியோ காலும் அழைத்துவிட்டாள்.
“சிவா.. நீங்களும் என்னோட வந்திருக்கலாம்…” என்று அவள் குரலில் தெரிந்த ஏக்கமே, அவனை மற்றது மறக்க வைத்தது.
“வந்து நான் என்ன செய்யட்டும்?!” என்று கேட்டவனின் முகத்தில் தெரிந்த பாவனையில்,
“என்ன செய்யட்டுமா? அச்சோ சிவா இதென்ன கேள்வி?! நம்ம ரெண்டு பேரும் அவுட்டிங் போலாம். இன்னும் நம்ம சேர்ந்து ஒரு கோவிலுக்கு கூட போனதில்லை. இங்க போலாம சிவா?! ரிட்டர்ன் நான் உங்களோட வந்திடுறேன்…” என்று கேட்க, இவனுக்குமே ஆசையாய் தான் இருந்தது.
தனிமையில் இருவருக்குமான நேரம் காண நினைக்கிறாள். அதிலும் கோவிலுக்குப் போகவேண்டும் என்று சொல்கிறாள். பொதுவாய் எல்லா காதலர்களும் இதனை எதிர்பார்ப்பது தானே. அவள் சென்றிருக்கும் இடம் பாண்டிச்சேரி. அதிக தூரமில்லை தான்.
ஆனாலும் பெரிதாய் சவால் போல் ‘நான் என் நிலையை உயர்த்திய பிறகு தான் கல்யாணம்…’ என்று சொல்லிவிட்டு, இப்போது அதற்கான முயற்சிகள் எதையும் யோசிக்காமல், ஊர் சுற்றிவிட்டு வந்தால் எல்லாம் சந்தோசமாய் தான் இருக்கும்.
ஆனாலும் அவனது மனது போட்டு உறுத்திக்கொண்டே இருக்குமே.
‘வருகிறாயா?!’ என்று பைரவி இரண்டு முறைக்கும் மேலே கேட்க, முகத்தில் லேசானதொரு புன்னகையை கொடுத்தவன் “வந்தா நல்லா தான் இருக்கும் பைரவி. ஆனா எனக்குத்தான் என்னவோபோல இருக்கு. என்னன்னு சொல்ல தெரியலை. பெருசா உன்னோட பிரண்ட்ஸ் கிட்ட நான் டெவெலப் ஆகிட்டு தான் கல்யாணம்னு பேசிட்டேன். இப்போ இப்படி நம்ம சுத்திட்டு இருந்தா என்ன நினைப்பாங்க…” என்று மனதில் இருப்பதை சொல்ல,
தொடுதிரையில் தெரியும் அவனது முகத்தினை உற்றுப் பார்த்தவள் “பிரச்சனைகள் இல்லாத லவ்வர்ஸ் யார் இருக்காங்க. அதையும்விட, நீங்க எப்போயிருந்த யார் என்ன நினைப்பாங்க, பேசுவாங்கன்னு எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சீங்க. என்னோட சிவா எப்பவும் அவரோட மனசு என்ன சொல்லுதோ அதை தானே செய்வார். அப்படியொரு ஆளைத்தான் நான் லவ் பண்ணேன்…” என்று கேட்டவளின் குரலில் அத்தனையொரு அனுசரணை.
“எல்லாம் சரிதான் பைரவி. அதெல்லாம் நான் தனியா இருக்கும்போது. இப்போ நான் தனி மனுஷன் இல்லைதானே…” என்றிட, பைரவி அவனது வார்த்தைகளில் பூரித்துப் போனாள்.
“இங்க வரவும் சொல்லு பைரவி. நான் வந்து பாக்குறேன். மேல பில்டிங் வேலை வேகமா நடக்குது. நான் இங்க இருந்தே தான் ஆகணும்…” என,
“நானே வந்து பாக்குறேன்.. ஓகே பை…” என்று வைத்துவிட்டாள்.
மனம் நிறைந்து தான் போனது சிவாவிற்கு. சொல்வதை சொல்லும் விதத்தினில் புரிந்துகொள்கிறாள். அது இது என்று அடம் பிடிப்பதில்லை. தேவையில்லாமல் எதையும் பேசுவதுமில்லை. என்ன ஒன்று அவளுக்கு பேசவேண்டும் என்று நினைத்த நேரத்தில், அது எந்த நேரமாய் இருந்தாலும் அழைத்துவிடுவாள்.
காண வேண்டும் என்றால் இப்படித்தான், எங்கிருந்தாலும் வருகிறாயா என்பாள். அவனுக்கு தோதாய் இருந்தால், செல்வான். இல்லையெனில் இப்படி எடுத்துச் சொன்னால், புரிந்துகொள்வாள்.
இதற்குமேல் என்ன வேண்டும் என்று தான் அவன் நினைக்க, இப்போது ரஞ்சிதம் வந்து இப்படி சொல்லவும் எரிச்சலாய் இருக்க, முகம் சுளித்து பதிலேதும் நின்றிருக்க,
“என்ன சிவா நான் சொல்லிட்டே இருக்கேன். நீ எதுவும் சொல்ல மாட்டியா அவளை. அவ பாடுறது எல்லாம் சரிதான். ஆனா இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை…” என்றதுமே,
“சரி நான் என்ன செய்யனும்?!” என்றான் விட்டேத்தியாக.
“அப்படில்லாம் சொன்னா, போயிட்டு வான்னு எனக்கு கை காட்டி அனுப்பிடுவா. இந்த காலத்து பொண்ணுங்களுக்கு இதெல்லாம் பேசினா சுத்தமா பிடிக்காது. அத்தனை ஏன் ஷாலினிக்கே அவளோட ட்ரெஸ் பத்தி பேசினா ஒத்துக்கிராளா?” என்று பொறுமையை இழுத்துப் பிடித்துச் சொன்னான்.
“என்னடா பேசின்னிருக்க? ஷாலினி நம்ம வளர்த்த பொண்ணு. ஆனா இந்த பைரவி அப்படியா? யாருமில்லாம…” என்று ரஞ்சிதம் பேசிக்கொண்டு இருக்கும் போதே, மகன் பார்த்த பார்வையில் வாய் மூடி நிற்க,
“பைரவி எப்படின்னு எனக்குத் தெரியும்…” என்று முடித்தவன்,
“என்னை நிம்மதியாவே இருக்க விடமாட்டீங்க போல…” என்று சொல்லிவிட்டு, தான் வாங்கியிருந்த புதிய காரினில் வேகமாய் பறந்துவிட்டான் பைரவி இருக்குமிடம் நோக்கி.
போகக் கூடாது என்று எண்ணியிருந்தவனை, ரஞ்சித்தின் வார்த்தைகள் போக வைத்தது.
சிறிது நாட்களுக்கு முன்னர் தான் கார் ஒன்று வாங்கி இருந்தான். புதியது அல்ல, விலைக்கு கொடுப்பதற்கென்றே அவனிடம் சர்வீஸ் வந்த காரினை சரி செய்து தனக்கென்று வாங்கிக்கொண்டான்.
அப்போது மணி கூட “இந்த மாதிரி கார் கை மாத்தி விடுறதுல நல்ல துட்டு மச்சா…” என்று போகிற போக்கினில் பேச, சிவாவிற்கு புத்தியில் பொறிதட்டியது.
இத்தனை நாள், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சர்வீஸ் மட்டுமே செய்தவன், ஏன் இதிலேயே அடுத்த கட்டத்திற்குச் செல்லக் கூடாது என்று யோசனை செய்ய, அதற்கான வேலைகளில் இறங்கி இருந்தான். ஆரம்பத்தில் பெரிதாய் ஒன்றும் இல்லை தான்.
ஆனால் இதிலும் தான் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று புரிந்துகொண்ட, தெரிந்துகொள்ள வேண்டிய சங்கதிகளை தெரிந்துகொண்டு, இங்கேயே இவர்கள் வசிக்கும் இடத்தினில் இல்லாமல், இதற்கென்று ஒரு வாடகைக்கு எடுத்து, அங்கே விற்பனைக்கு என்று வரும் கார்களை வரிசை படுத்தி நிற்க வைத்திருந்தான்.
மகன் அடுத்த அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்வது சந்தோசம் தான் என்றாலும், பைரவி விசயத்தில் அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டோமோ என்றும் இருந்தது ரஞ்சிதத்திற்கு.
“ச்சே இந்த செலுவி பேச்ச கேட்டே இருக்க கூடாது.. ஏற்கனவே ஒரு பாட்டுக்காரினால கெட்டது குடி.. இப்போ இவ…” என்று புலம்பவே ஆரம்பித்திருக்க,
“இப்போ புலம்பி எந்த யூசும் இல்லை. அண்ணன்கிட்ட கல்யாணம் வரைக்கும் பேசிட்ட…” என்று ஷாலினி வேறு எடுத்துக்கொடுக்க,
“ம்ம்ச் வாய மூடு…” என்று மகளை கடிந்துவிட்டு சென்றுவிட்டார்.
அங்கே சிவாவோ காற்று வேகத்தில் தான் பறந்துகொண்டு இருந்தான்.
எப்படியும் மாலைக்கு மேல் தான் பைரவி கிளம்புவாள் என்று தெரியும். அதற்குள் அங்கே சென்றுவிடலாம் தான். இன்ப அதிர்ச்சியாய் இருக்கும் என்று சொல்லாமல் செல்லலாம் என்று நினைக்க, அவனுக்கு இப்போதிருக்கும் மன நிலையில், அவளை நேரில் கண்டு ஆறுதல் கண்டால் போதும் என்றுதான் இருந்தது.
இதற்கு நடுவினில் பைரவி ஒருமுறை அழைக்க, சொல்லிவிடலாம் என்று எண்ணியவன் “எங்க இருக்க இப்போ?” என்றுமட்டும் கேட்க,
“இங்க ஒரு ரிசார்ட்..” என்று அதன் பெயர் சொன்னவள் “ஏன் சிவா வர்றீங்களா?” என்று ஆவல் ததும்பும் குரலில் அவள் என்று கேட்க,
“சும்மா தான் கேட்டேன்…” என்றவன் வைத்துவிட்டான்.
என்னவோ அவளது ஆவல் நிரம்பிய குரலைக் கேட்டதும், மனதினில் இருந்த சுணக்கம் மறைந்து, உற்சாகம் பிறக்க “வர்றேன்.. வர்றேன்…” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன், அடுத்த சில நேரத்தில் அவள் இருக்கும் இடம் சென்றுவிட்டான்.
மதிய உணவு நேரம் கடத்திட, பொதுவாய் அங்கே ஆட்கள் இருக்கும் அடையாளமே இல்லை. வசதி படைத்தவர்கள் மட்டுமே வந்து போகும் இடம். அதிலும் வெளிநாட்டவர்களே இந்த ரிசார்ட்டில் அதிகம். கார் பார்க்கிங்கில் நிறுத்தியவன், மீண்டும் பைரவிக்கு அழைக்க,
“சொல்லுங்க சிவா…” என்றாள் வெகு இயல்பாய்.
“என்ன பண்ற?” என்று கேட்க,
“இப்போதான் லஞ்ச் ஆச்சு.. இங்க எங்களோட ஒரு ஆன்ட்டி ஷூட்டிங் வந்திருக்காங்க. அவங்க பொண்ணு வீடு இங்க இருக்காம். இன்வைட் பண்ணிருக்காங்க. சோ, போலாமான்னு பேசிட்டு இருக்கோம்…” என்று அவள் சொல்ல,
“ப.. பைரவி.. நீ பேசுறது சரியா கேட்கல.. வெளிய வந்து பேசு…” என்றான் சிவா.
“கேட்கலையா?!” என்று யோசித்தவள், பேசிக்கொண்டே வெளிவர, டக்கென்று அவள் முன்னே வந்து நின்று சிவா புன்னகை பூக்க,
அலைப்பேசியில் பேசிக்கொண்டே இருந்தவள், திடீரென அவனை நேரில் காணவும், திகைத்து வாயடைத்துப் போனாள்.
“சி.. சிவா..?!” என்று நம்ப மாட்டாமல் கேட்க,
“ம்ம் நான் தான்…” என்று சொல்லி மீண்டும் புன்னகை செய்ய, வேகமாய் அவன் கரத்தினை பற்றிக்கொண்டவள்,
“அட நிஜமா?! திடீர்னு…” என்று இதழ் துடிக்கும் புன்னகையில் கேட்க, அவளை அப்படியே தோளோடு இறுக்கிக்கொண்டவன் “வர்றீங்களா வர்றீங்களான்னு கேட்டது நீங்க தான் மேடம்…” என்றான் லேசாய் அவளை கொஞ்சுவது போல் பாவனை செய்து.
“அச்சோ.. என்ன இது…” என்று நெளிந்தவள்,
“சீரியஸ்லி.. நான் எதிர்பார்க்கவே இல்லை…” என்று சந்தோஷத்தில் குதித்தவள்,
“ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு…” என்று சொல்லி, இரு கைகள் விரித்து, அவனை அப்படியே அணைத்துக்கொள்ள, சிவாவிற்கு விண்ணில் பறக்காத குறைதான்.
தன்னுடைய வருகை ஒரு ஜீவனை இத்தனை ஆர்பரிக்க வைக்குமா என்று அவனுக்கு வியப்பாய் இருந்தது. அப்படி என்ன இவளுக்கு நான் செய்துவிட்டேன் என்றும் இருக்க,
‘நன்றாய் இவளை வைத்துக்கொள்ள வேண்டும்…’ என்று மீண்டும் எண்ணிக்கொண்டான்.
“இன்னிக்கு புயல் மழை தான் வரப் போகுது போங்க…” என்று சிலாகித்தவள் “வாங்க உங்கள அங்க எல்லாருக்கும் இன்ட்ரோ பண்றேன்…” என்று அவன் கை பிடித்து இழுக்க,
“ஷ்..! அதெல்லாம் வேணாம்.. நீ சொல்லிட்டு வா. நம்ம கிளம்பலாம்…” என,
“எது கிளம்புறதா? நோ வே.. நீங்க வாங்க, நான் இன்ட்ரோ பண்றேன்.. அப்புறம் சொல்லிட்டு வெளிய ரவுண்ட்ஸ் போகலாம்…” என்று பிடிவாதமாய் நின்றாள் பைரவி.
இத்தனை தூரம் வந்ததே அவளைக் காணத் தானே. பின்னே அவள் சொல் கேளாமல் இருந்தால் எப்படி. வேண்டாம் வேண்டாம் என்று சொல்லி சொல்லியே, பைரவியின் இழுப்பிற்குச் சென்றவன் மனது நிறைந்து தான் போனது.
அங்கே பைரவியோடு ஆல்பம் பாடல் ஷூட்டிங் வந்தவர்களிடம் சிவாவை “தன் வருங்கால கணவன்…” என்று சொல்லியே பைரவி அறிமுகம் செய்து வைக்க, அங்கிருந்தவர்கள் அனைவருமே, சிவாவிடம் இன்முகத்துடன் பழக, சிவாவிற்கு தான் அவளது வெளிப்படையான அன்பு கண்டு ஆச்சர்யமாய் இருந்தது.
இப்படி ஒருத்தி தனக்கு கிடைத்தது பெரிய விஷயம் தான் என்று எண்ணிக்கொண்டான்.
நல்லவேளை அந்த குழுவில் ஜான் வரவில்லை. இல்லையெனில் இந்நேரம் இங்கே அனல் அடித்திருக்கும்.
“நல்ல ஜோடி பொறுத்தம்…” என்று அவள் சொன்ன அந்த ஆன்ட்டி சிவாவிடம் பேசியவர் “அருமையான பொண்ணு தம்பி.. நல்லா பார்த்துக்கோங்க…” என்று சொல்ல,
“கண்டிப்பா…” என்று சிவா மனதார சொல்ல,
“ஓகே பைரவி யூ என்ஜாய் யுவர் டைம்… நாங்க எல்லாம் ஆன்ட்டியோட வெளிய கிளம்புறோம்…” என்று அங்கிருந்தவர்கள் இங்கிதமாய் நகர,
“நாங்களும் இப்போ கிளம்பிடுவோம்…” என்றான் சிவா.
அவனை ஒருமார்கமாய் பார்த்தவர்கள் “என்ஜாய் பையூ…” என்றுவிட்டு சென்றுவிட்டனர்.
அவர்கள் செல்லவும் “ஏன் இப்படி பார்த்துட்டு போறாங்க…?” என்று சிவா கேட்க,
“பின்ன… ஆசையா என்னை பார்க்க வந்திருக்கீங்க.. இப்படி அழகான பிளேஸ் நமக்கே நமக்குன்னு தனிமை.. இதெல்லாம் இருக்கப்போ, கிளம்புறோம்னு சொன்னா யார்தான் சிரிக்க மாட்டாங்க…” என்றவள், சந்தோஷ மிகுதியில், அவன் கன்னத்தில் மெதுவாய் இதழ் பதிக்க, கண்கள் மூடி அதனை ரசித்து நின்றவன்,
“அட போ டி.. நீ வேற.. நானே எங்கம்மா பண்ண டென்சன்ல கிளம்பி வந்துட்டேன்…” என்று நடந்ததை அப்படியே சொல்லிவிட, நொடியில் பைரவி முகத்தினில் இருந்த பாவனை மாறிவிட்டது.
“சோ.. நான் என்ன செய்றேன்னு பார்க்க வந்தீங்களா?!” என்று அடிக்குரலில் கேட்டவள் முகத்தில், அப்படியொரு கோபம்.
அன்று ஒருமுறை சிவாவின் கன்னத்தில் அறைந்தாளே அதே கோபம் இப்போதும் அவள் முகத்தினில் தெரிந்தது.