ராஜசேகர் சமரசு இருவரும் ஊர்கதை உலக கதை என முழுதாய் ஒரு பத்து நிமிடங்கள் வரை பேசிய பின் தான் தனக்கு இடப்புறமாய் அமர்ந்திருந்த விக்ராவிடம் திரும்பினார்.

“நீ எப்படிடா இருக்க. ஹைதராபாத்ல வேலைனு கேள்வி பட்டேன். பேசாம நீயும் ஆர்மி வந்திருக்கலாம் விக்ரா. பாடி நல்லா மெயின்டெய்ன் பண்ற மேன்” என எதிர்பாரத நேரம் வயிற்றில் குத்த, வாய் விட்டு வர இருந்த சத்தத்தை வயிற்றுக்குள்ளேயே புதைத்துவிட்டு  ‘வலிக்கலியே’ என்பது போல் அமர்ந்திருக்க,

“இது தேவையா” சத்தமடக்கி லாவா சிரிக்க, “போடீங்க” வாய்க்குள் திட்டி அவள் மேல் ரிமோட்டை விட்டெறிந்தான் விக்ரா. ‘இந்த குத்து குத்துறாரே மனுஷன்’ யாருமறியாமல் வயிற்றை தடவிக்கொண்டான்.

இவன் எரிந்ததில் ம்யூட்டில் கிடந்த வால்யூம் அன் ம்யூட்டில் விழுந்தது.

“யே பாக்கு வெத்தலை மாத்தி முடிஞ்சு பையன் வந்தாச்சு” என ஹை டெசிபலில் கத்திய டிவியின் மேல் எல்லோரது பார்வையும் ஓட

திருமண நிகழ்வில் முழு அலங்காரத்தில் விஜயை அழைத்து வந்த விக்ராவும்..

“ஹேய் பூவ தொடுத்து சேல முடிச்சு பொண்ணு வந்தாச்சு” என மகாவை ஒரு கையில் பிடித்து கொண்டு நடனமாடிக்கொண்டு வந்த லாவன்யாவும்,

“ஹேய் கண்டத பேசி டைம் வேஸ்ட் பண்ணாத, மாப்பிளை தங்கம் மிஸ்ஸூ பண்ணாத” என விஜயை மகாவின் புறமாய் இடித்து தள்ளிய விக்ரா, லாவாவை கைபிடித்து இழுத்து நடுவில் நிறுத்தி “சாரு யாரு தாரளபிரபு டோய்” என வேகமெடுத்த பாடலுக்கு ஏற்ப பட்டையை கிளப்ப, அதற்கு ஈடுகொடுப்பது போல இவளும் ஆட, வீரா, செல்லம், சங்கர், மீனாவின் அக்கா மகள்கள் இருவர் என இளைய கூட்டம் ஒன்று சேர, டிஜே பிளே வேறு பிளந்து கட்ட திருமண மண்டபமே ஆட்டம் கண்டது.

அழகும், உயிரோட்டமும், சந்தோஷமும் வழிந்தோடியது இருவரின் முகத்திலும். “மீனா உம்மக நானில்லாமல் ரொம்ப ஆட்டம் போல” என மனைவியின் கதை கடிக்க

“அவளுக்கு பாட்டு இருந்தா போதும், வேற எதுவும் வேணாம்.. வீட்டுக்குள்ளேயே டிவில போடுற பாட்டுக்கே அந்தாட்டம் ஆடுவா.. கல்யாண மண்டபத்துல கேட்கவும் வேணுமா?” என சிரிக்க

“இவ்வளவு ப்ரியா ஏன் விடுற மீனா.. ஒழுக்கம் எனக்கு ரொம்ப முக்கியம், தெரியாதா உனக்கு” லேசாய் கோபம், அத்தனை பேரின் முன் ஆடியதாலா? இல்லை விக்ராவின் கைப்பிடிக்குள் நின்று ஆடியதாலா? அவருக்கே வெளிச்சம்.

“சுதந்திரமா இருக்குறதுல என்ன ஒழுக்கம் போச்சாம்” மீனா விடாது பேச “ம்” என கோபத்தோடு நிறுத்திகொண்டார் ராஜசேகர்.

அவரின் கோபத்திற்கும் காரணம் பாரிஜாதம் மட்டுமே.

 “எம்மகனை உம்மவளுக்கு பேச உன் வீட்டுக்கு வந்தேண்ணே! இவ, இவ அண்ணே, அண்ணே பொண்டாட்டி எல்லாரும் என் மவனுக்கு தர மாட்டேன்னு சொல்லி அசிங்கபடுத்தி விட்டுடாக, எம்மவன் எதுல குறைஞ்சு போய்ட்டான். நான் ஒத்த மவனை வச்சிருக்கேன். சொத்தெல்லாம் அவனுக்கு தான். நாழு பயலுக இருக்க இடத்துல முடிச்சா, நாளைக்கு உம் மவளுக்கு தான் பிரச்சனை. சொத்து நாழு பங்காகும்,  ஒன்னுக்கு மூனு ஓரகத்திக உம்மவளுக்கு பிரச்சனைக்குனே வருவாளுங்க. பார்த்துக்கோ. இப்போவே உன் பொண்டாட்டி திணடுகல்லுக்கு வந்து எத்தனை வருஷமாச்சு? என்னவோ நீ தேன் வீட்டோட மாப்பிள்ளை மாதிரி அங்க போய் உக்கார்ந்துருக்க” படபடவென பொரிய

அவர் பேசியது ராஜசேகருக்கு சுள்ளென கோபத்தை உண்டு செய்தது ‘நான் வீட்டோடு மாப்பிள்ளையா’ ‘ஆமாம். இங்க தானே இருக்க, திண்டுகல்லிலா இருக்க.’ என மனசாட்சியும் காறி துப்பியது.

அதில்  ரோசம் வர “நீ கவலை பாடாத பாரி, இப்போ என்ன எம்மவ உன் மவனுக்கு தான் யார் தடுக்கான்னு பாப்போம்” இவரும் உறுதி கொடுத்திட

உள்ளுக்குள் குளு குளுவென இருந்தாலும் “உனக்கு இன்னும் விசயம் தெரியாதுனே.. அந்த விக்ரா பய கூடவே தான் இவ சுத்திட்டு இருப்பா”

“எதுவும் தெரியாம பேசாத பாரி”

“ஊரே பேசுது போவியா.. உனக்கு தாண்ணே ஒன்னுமே தெரியலை.. இரண்டையும் பழக விடுறதே உன் பொண்டாட்டி தான்” என்றவர் “எனக்கென்னவே நம்பிக்கை இல்லண்ணே! யாரு கண்டா நீ இல்லாத நேரமா பார்த்து இரண்டுக்கும் கல்யாணத்தை கூட முடிப்பா! அங்க தான் மீனா ராஜ்யமாச்சே? உன் பேச்சுலாம் எடுபடுமா? என்னவோ நீ பார்த்து முடிவெடு, மீனாவை எடுக்கவுடாத” எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றி விட்டிருந்தார் பாரிஜாதம். அந்த கோபம் தான் இப்போது இருவரும் சேர்ந்து ஆட்டம் போடுகையில் கூட கொஞ்சம் எரிந்தது.

“இதுதான்க சரியான நேரம், டிவி பொட்டியிலையே இம்பூட்டு அழகா இருக்குதுங்க. அதுவும் ஒன்னு மண்ணா ஒட்டிட்டு வேற திரியுதுங்க, பேசுங்க” என நாச்சி சமரசுவின் காதை குடைய “தரமாட்டேன்னு சொல்லிட்டா என்னடி பண்ண?” விக்ராவை நினைத்து பயம் இவருக்கு.

“நீங்க பேச்ச மட்டும் ஆரம்பிங்க, மத்ததை நான் பார்த்துகிறேன்” வீரமாய் நாச்சி பேச

லாவா விக்ராவின் விழிகளோ ஒருவரோடு ஒருவராய் பின்னிக்கொண்டு கிடக்க, லேசாய் கண்அடித்தான், சிறு சிரிப்போடு.

“கொன்னுடுவேன்” ஒற்றை விரலால் இவள் மிரட்ட

“கொன்னுக்கோ, நான் முழுக்க முழுக்க உனக்கு தான்” என பேச முடியாது பார்வையை விட, சரியாய் அவன் பார்வையை கண்டு கொண்டவளுக்கோ இந்த அந்யோன்யம் மிகவும் பிடித்திருந்தது.

“லாவன்யா ரிமோட்டை எடு” ராஜசேகர் கத்தியதில் பயந்து போயினர் அத்தனை பேரும்.

“என்னப்பா, என்னனாச்சு” என திடுக்கிட்டு போய் இவள் ரிமோட்டை எடுத்து தகப்பனிடம் நீட்ட, கொஞ்சமாய் பேக்வேர்டு செய்து ஓரிடத்தில் நிறுத்திவிட்டு தன் சந்தேகம் ஊர்ஜிதம் ஆன பின், அருகிலேயே நின்றிருந்த லாவன்யாவை பார்க்க, அவளோ, தந்தையின் கோபம் கண்டு ‘எதுக்கிந்த கோபம்’ என புரியாது டிவியில் பார்வை பதிக்க, பேயறைந்தது போல உறைந்தாள்.

அதை தொடர்ந்து மற்றவர்களும் பார்க்க, தொலைக்காட்சியின் திரை முழுதும் லாவன்யாவின் பிம்பமே அதில் கழுத்தில் தொங்கிகொண்டிருந்த தாலி தான் ஹைலைட்டே!

பேரதிர்ச்சி்தான் அத்தனை பேருக்கும். அன்று மண்டபத்தில் விக்ராவுடன் சண்டையிட்டு அறையை விட்டு வெளியே வருகையில் கேமராமேன் வருவோர் போவோரை எதார்த்தமாய் படம் பிடித்திருக்க, இப்போது ராஜசேகர் வகையாய் பிடித்துவிட்டார்.

“என்ன இது” என ராஜசேகர் ஓரடி எடுத்து முன் வைக்க

“ப்பா, அது.. அது..” இவள் திணற

‘பொளீரென’ விட்டார் ஒரு அறை, லாவன்யாவின் கன்னத்தில், அறை விழுந்த வேகத்தில் இவள் சோபாவில் விழுந்தாள். “ஏங்க..” என தடுக்க வந்த மீனாவின் கன்னத்திலும் “நீ புள்ளய பார்க்குற லட்சணம் இது தானா?” அறை விட, தூரப்போய் விழுந்தார்.

“என்ன நடக்குது இங்க?” டிவியை கைகாட்டி “அன்னைக்கு உன் கழுத்தில் தாலி இருக்குது,  இன்னைக்கு தாலியை காணோம். என்ன நடக்குது இங்க” லாவன்யாவின் முடியை கொத்தாய் பிடித்து இவர் தூக்கி நிறுத்த, நொடிக்குள் இருவரின் இடையேயும் வந்த சமரசு “மாப்பிள்ளை பொம்பளை புள்ள மேல கை வைக்காத, என்னன்னு விசாரி” வீட்டுக்கு மூத்தவராய் இவர் பேச, அந்த கேப்பில் லாவன்யாவை மறைத்து வந்து நின்றான் விக்ரா.

“ஆர அமர விசாரிக்க வேண்டிய விசயமா இது மச்சான்” அவரிடம் காய்ந்தவர் “டேய் தள்ளுடா, எப்போதும் பார்த்தாலும் அவளுக்கு சப்போர்ட் பண்ணிகிட்டு, ஏய் முன்னாடி வா” என அவளை இழுத்து முன் நிறுத்து “தாலி யாரு கட்டுனா? வீடியோல ரெக்கார்ட் ஆகலைன்னா, நான் பார்க்கலைன்னா நீ் சொல்லி் இருக்க மாட்டல. யாரு அவன், கல்யாணம் மட்டும் தான் பண்ணிகிட்டியா, இல்லை…” ராஜசேகர் சொல்லி முடிக்கும் முன், அதன் அர்த்தம் உணர்ந்து

“அப்பா…” இவள் அலறியே விட, அலறிய அவளை இழுத்து தன் பின்பு நிறுத்தி கொண்டவன், பிரச்சனையை தன் கையில் எடுத்தான்.

நேரமிருந்தால் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம், ஆனால் அதற்கெல்லாம் நேரமும் இல்லை அவனிடம். விளையாட்டாக தாலி கட்டினோம் என்றா கூற முடியும்? பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டுமே?

ஆக வாய் திறந்தவனுக்கோ உண்மை தான்  வந்தது “மாமா, அடிக்க வேண்டியது என்னை, அவளை இல்லை. லாவன்யா கழுத்தில் தாலி கட்டினது நான் தான், ப்ரபோஸ் பண்ணினேன். ஒத்துக்கலை. வலுக்கட்டாயமா தாலி கட்டிட்டேன், எப்படியும் என்னை ஏத்துப்பான்ற நம்பிக்கையில். ஆனால் ஏத்துக்கலை! தாலியை கூட கழட்டி எறிஞ்சிட்டா. நானும் எவ்வளவோ பேசி பார்த்துட்டேன், என்னை வேண்டாம்னு சொல்லிட்டா” வேண்டியதை மட்டும் அப்படியே சொன்னான்.

விக்ரா பேசியதை கேட்டு சமரசு, ராஜசேகர் இருவருக்குமே ஒரே நிலை தான், கைகால் ஓடவில்லை. உடல் மரத்து போன உணர்வு,. விக்ராவா இப்படி செய்தது என? மீனா நாச்சியை பற்றி சொல்லவே வேண்டாம் மயக்கம் வராத குறையாய் நின்றிருந்தனர்.

லாலாவிற்கோ எதை மறைக்க நினைத்தாளோ அது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

விக்ராவிற்கோ எது பிரச்சனை ஆக கூடாது என நினைத்து கொண்டே இருந்தானோ அது இன்று பூதகரமாய் வளர்ந்துவிட்டது.

ஆசையாய் கட்டிய கோட்டை சடசடவென சரிந்தது போல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தனர் நாச்சியும், மீனாவும்.

நம்பி ஒன்றாய் பழகவிட்டதற்கு, நம்பிக்கையை உடைத்து கையில் கொடுத்து விட்ட மகனையும், அதை துளி கூட வெளியே சொல்லாமல் நின்ற மகளையும் நினைத்து பெற்றதற்கு பெருமை கொண்டனர் சமரசுவும், ராஜசேகரும்.

விக்ரா பேசி, காதில் விழுந்தவைகளை ஜீரணிக்கவே முடியவில்லை. யாருக்கும் என்ன பேசுவது என தெரியாமல் புரியாமல் தத்தளித்து கொண்டிருந்தனர்.

“ஆக தாலி கட்டினது இவன் தானா” என அமைதியை உடைத்து கொண்டு ராஜ சேகர் கேட்க, ஆம் என பயத்துடனேயே தலையசைத்தாள் லாவன்யா.

“வலுக்கட்டாயமா தாலி கட்டுனது நீ தானா?” கேட்ட தொனியே பயத்தை கொடுத்தாலும் விக்ராவும் ‘ஆம்’ என பலமாய் தலையசைத்தான்.

இன்னும் விசாரித்தால் இருவரின் மனமும் புரிந்திருக்கோமோ, ஆனால் ஆத்திரம் விசாரிக்க நேரம் கொடுக்கவில்லை.

“ஆனால் இப்போ இரண்டு பேருக்குமே” இஷ்டம் தான் என சொல்ல வந்த லாவன்யாவை சட்டையே செய்யாது,

“எம்புள்ளை வேண்டாம்னு சொன்ன பிறகும் தாலி கட்டியிருக்க” வெகு நிதானமாய் அவர் கேட்ட தோரணையே சமரசுவிற்கு அனைத்தையும் விளங்க செய்ய, கண்களை இறுக மூடிக்கொண்டார்.

“ப்பா நான் சொல்றதை கேளுங்க, இப்போ இரண்டு பேருக்கும்” என லாவா முடிக்கும் முன்னையே

“உனக்கு எவ்வளவு தைரியம்? அதுவும் இந்த ராஜசோகர் பொண்ணு மேலையே கை வச்சிருக்க” என ஆக்ரோஷமாய் அவனை நெருங்கி வயிற்றிலேயே எட்டி மிதிக்க, டமார் என்ற சத்ததோடு கதவு சுவரில் அடிக்க, கதவின் மேல் அடித்து தரையில் விழுந்தான் விக்ரா.

நாச்சி ‘விக்ரா’ என அலறிக்கொண்டு அவனிடம் ஓட “யாராவது அவன் கிட்ட போனீங்க” நாக்கை சுழட்டிக்கொண்டு ராஜ சேகர் மிரட்டிய மிரட்டலில் ஸ்தம்பித்து போனார் நாச்சி.

தள்ளி நின்றிருந்த லாவன்யாவை நெருங்கி “விருப்பமில்லா தான் தாலி கட்டினானா?” என நிறுத்தி உறுத்து விழித்தார்.

எங்கே அவளையும் அடித்து விடுவறோ என பயந்து போனான் விக்ரா. தனக்கு விழுந்த அடி.. அவளுக்கு விழுந்தால்.. எண்ணங்கள் ஓட “விருப்பமில்லாமல் தான் நடந்தது, நான் சொல்றேன் தானே. அவ மேல தப்பில்லை” தட்டுதடுமாறி எழுந்து நின்று அப்போதும் லாவன்யாவிற்காய் இவன் பேச, வாய் மூடிக்கொண்டு அழுதாள் லாவன்யா.

அவனிடம் ஒரு பார்வை வைத்து, இவளை பார்த்தவர், “நீயும் இதற்கு உடைந்தையா இருந்திருக்கனும்!” கொலையே செய்துவிடும் எண்ணம், என சொல்லாமல் விட்டதை விழிகளில் பிரிதிபலிக்க, அரண்டு ஒடுங்கினாள் லாவன்யா.