ஆனால், கார்த்திக் மூலமாக இந்த செய்தி சங்கீதாவிற்கு தெரிய.. தன் பெற்றோரிடம் சண்டைக்கு சென்றாள்.. ‘ஏன் அப்பா, இதெல்லாம் சரியாக வருமா.. அவள் மாமனார்தான் வீராவை கட்டிக்கோன்னு சொல்றார்.. இத்தனை வருடம் பேசாமல் இருந்துவிட்டு.. இப்போது வந்து கரணை பிடிச்சிருக்குன்னு சொல்றா.. அந்த வீரா பையன் வாழக்கை வேற வீணாக போகிறது. அவர் பேச்சினை கேட்க்காமல்.. ஏன் ப்பா இப்படி, அவருக்கு வேற வயசாகுது. எனக்கு என்னமோ இதெல்லாம் சரியாக படவில்லை. இன்னொரு திருமணம்.. எப்படி ப்பா..’ என பொறிந்து தள்ளிவிட்டாள். தங்கையின் மீது சொல்ல முடியாத கோவம்.. ‘இதெல்லாம் தேவையா? அவள் தன் வேலையை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதானே.. இன்னொரு கல்யாணம்.. அப்படியாவது, வீராயே கட்டிக் கொள்ள வேண்டியதுதானே..’ என சலித்துக் கொண்டாள். பொறாமையோ என்னமோ தெரியவில்லை.. சங்கீதா பொங்கினாள். தங்கையிடம் பேசவில்லை.

பெற்றோர் சங்கீதாவின் பேச்சில்.. சோர்ந்து போகவில்லை. கேட்டுக் கொண்டனர். வீரா பற்றி பேச்சுக்கு பதில் சொன்னார் தந்தை. ஆனால், சங்கீதா அப்பட்டமாக ‘எதற்கு இந்த திருமணம் இப்போது’ என்றாள். கார்த்திக் ஊரில் இல்லாதது.. வசதியாகியது போல..  பேச்சுகள் அதிகமாகியது.

கார்த்திக், சுபியின் மாமனாரிடம் விஷயத்தை சொல்லிவிட்டார்.

அன்று இரவே சுபிக்கு அழைத்தார் அவளின் மாமனார்.. “ஏன்ம்மா.. இதுக்குதான் இத்தனைபாடா.. எதுவுமே வேண்டாம்ன்னு சொன்ன.. என்னவெல்லாமோ பேசின.. கடைசியில்.. உன் பக்கத்துவீட்டுகாரனை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்ட.. அஹ.. எங்கிட்ட சொன்னதெல்லாம் நடிப்பு.. எப்படிம்மா.. இப்போமட்டும் நடந்தது.. முன்பே அப்படிதான் இருந்தீங்களோ..” என்றார்.

சுபி அப்படியே கூனிகுருகி போய் அழைப்பினை துண்டித்துவிட்டாள்.

கிளினிக்கில் இருந்தாள்.. வீடு கிளம்பிக் கொண்டிருந்தாள்.. மாமனார் அழைத்து பேசியதில்.. அப்படியொரு அழுகை. பெரிய பாரமாக புதிய பாரமாக குற்றயுணர்வு வந்து அமர்ந்துக் கொண்டது. கரணிடம் சொல்லவே பயமாக இருந்தது.. அழுது அழுது.. தந்தை அழைக்கும் வரை சுபிக்கு எங்கிருக்கிறோம் என தெரியாமல் போனது. மெதுவாக காரெடுத்து கிளம்பினாள்.

யாரிடமும் இதுபற்றி பேச முடியவில்லை.. அன்னையும் தந்தையும் “என்ன ஒருமாதிரி இருக்க சுபி” என்றாலும் ஏதும் சொல்ல முடியவில்லை.. எப்படி சொல்லுவது இதையெல்லாம் என தோன்ற.. “என்னமோ கனகனன்னு இருக்கும்மா.. நான் தூங்குறேன்” என சொல்லி தன்னறையில் புகுந்துக் கொண்டாள்.

பாதி இரவிற்குமேல் காய்ச்சல்.. காலையில் எழவில்லை எனவும் பெற்றோர் வந்து பார்த்து உணவு கொடுத்து மாத்திரை கொடுத்தனர். சுபி வாடி போனாள்.

கரண் வந்து பார்த்து என்னவென அவளை உலுக்கிதான் மாமனாரின் பேச்சினை தெரிந்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. கரணுக்கும், அதிர்ச்சி.. வருத்தமிருந்தாலும்.. பெரியவர்கள்.. ‘இப்படி இருக்கும் பிள்ளைகளுக்கு.. வாழ்க்கை அமைகிறதே’ என பெருந்தனமையாக எடுத்துக் கொள்வர் என எண்ணினான். ‘இல்லை.. முதல் திருமணமோ இரண்டாம் திருமணமோ.. நேசம் என்பதல்ல அளவுகோல். சாதகபாதகங்கள்.. தாராதரம்.. சொத்து.. வாய்ப்பு வசதிகள் என எல்லாம்தான் அளவுகோல். இப்போது கரண் பெரிய இடம். வீராவை எப்படி தள்ளி வைப்பது.. என ஆயிரம் குழப்பம். அதில் சுபியின் மாமனார் அதிர்ந்து.. சுபியை சாடிவிட்டார்.

கரண் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு தான் பேசிக் கொள்கிறேன் இனி அவரின் அழைப்பு வந்தால்.. யாராவது இருக்கும் போது பேசு என்றான். ஆனால், மாமனார் அதன்பின் அழைக்கவில்லை.

கரண் அடுத்து என்ன  வீரா தானே.. அவரை அழைத்து பேசுவோம் என எண்ணி.. சுபியின் தந்தையை.. வீராவை அழைக்க சொல்லி.. சென்னை வர சொன்னான். 

வீட்டில் பெரியவர்களோடு அமர்ந்து கரண் பேசினான்.. வீராவிடம். ‘தவறாக எண்ணாதீர்கள்.. இதில் சுபியுடைய பங்கு ஏதுமில்லை.. உங்களுக்கே தெரியும்’ என சுபியின் தந்தை ஆரம்பிக்க.. கரண் ‘கண்டிப்பா நீங்க கல்யாணம் செய்துக் கொண்ட பிறகுதான் எங்களுக்கு திருமணம் நடக்கும். நாங்களே பார்க்கலாம் உங்களுக்கு. ஆனால், அது நல்லா இருக்காதில்ல.. எங்க அவசரத்துக்கு பார்த்துட்டோம்ன்னு இருக்கும். அதனால், நீங்க பொறுமையா.. நல்ல பெண்ணாக தேடி கல்யாணம் செய்துக்கோங்க. ப்ளீஸ்.. சுபியின் மாமனார் மாதிரி இன்னமும் எங்களை தண்டீக்காதீங்க’ என பேசினான். 

வீரா, சுபியை முறைத்தபடி கிளம்பினான்.

சங்கீதாவிற்கு விஷயம் தெரிய.. அவள் கணவனிடமும் தந்தையிடமும்.. கரணிடமும் கோவம் கொண்டாள்.. ‘கரணுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு… வீராவை கூப்பிட்டு பேச.. இவன் சொல்லிட்டா எல்லோரும் கேட்க்கனுமோ..’ என எல்லோரிடமும் சத்தம் போட்டாள்.

கரண், முதல்முறை தன் தோழியை வேறாக பார்த்தான்.. “என்ன சங்கி இப்படி சொல்ற” என்றான்.

சங்கீதா “உன்னகென்ன தெரியும், அவர் பேரன்.. மருமக. மகன் இறந்த போது கூட.. வேறு திருமணம் தன் மருமகளுக்கு என யோசித்தவர்.. இப்படி நடுவில் வந்து.. என்னமோ பேசுற.. என் தங்கைக்கும் அறிவு வேணும்..” என கோவம்தான்  கொண்டாள்.

கரண் “போதும் சங்கீதா.. இது எங்களோட.. ம்.. எங்களோட தனிப்பட்ட விஷயம்.. நாங்க பார்த்துக்கொள்வோம். உன்னால் முடிந்தால்.. கல்யாணத்திற்கு வா.. போதும். இப்படி பேசி தயவுசெய்து அவ மனச காயப்படுத்திடாத.. பேசாத அவகூட. விட்டுடு” என்றான்.

சங்கீதா “உனக்கும் புரியாது டா.. அவளுக்கு.. முன்னாடியே அறிவு வேண்டாமா? வீரா பாவமில்ல. எத்தனை வருஷமா காத்திருந்தான்” என்றாள்.

கரண் “சரிதான்.. தப்புதான். ஆனால், அதை சுபி செய்யலை. போதும் நீ பேசறதே சகிக்கல.. உங்கிட்டேயிருந்து இந்த ரியாக்ஷனை எதிர்பார்க்கலை சங்கீதா” என்றான்.

அவளோ “நீயும்  எதையும் யோசிக்கலை.. அவளும் எதையும் யோசிக்கலை.. காலம் போன கடைசியில்.. உங்களுக்கு இதெல்லாம் தேவையா” என்றாள்.

கரண் சிரித்துக் கொண்டே.. “உனக்கு மட்டும் என்ன ம்மா.. வயசே ஆகலையா.. எதுக்கு இப்போ பிள்ளை.. ட்ரீட்மென்ட் எடுத்து.. பிள்ளை.. ” என்றான் சிரித்துக் கொண்டே.

சங்கீதா அமைதியானாள்.. கரண் “பாரேன், வலிகுதுல்ல.. சங்கி நமக்குன்னா வலிக்குது. எனக்கும் வயசாகுதுதான். அதுக்காக சந்தோஷமாகவே இருக்க கூடாதுன்றதெல்லாம் அந்நியாயம் சொல்லிட்டேன். சுபிக்கிட்ட கொஞ்சம் பார்த்து பேசு.. பாவம் அவ.. வைக்கட்டுமா” என கேட்டு வைத்துவிட்டான்.

இன்னமும் விடவில்லை.. இவர்களை. வீராவை அழைத்து பேசியது தெரிந்ததும் சுபியின் மாமனாருக்கு, ஹார்ட்அட்டாக் வந்துவிட்டது, மறுநாள்.

சுபிக்கு அழைப்பு வந்தது. எல்லோரும் குடும்பத்தோடு சென்றனர்.

ஆஞ்சியோ செய்யவேண்டும் என்றனர். சுபியின் மாமனார் சுபியை பார்த்தாலே கத்தி ஆர்பாட்டம் செய்தார் மருத்துவமனையில். சுபி ஓய்ந்து போனாள்.

ஆஞ்சியோ செய்து அவர் நன்றாக இருந்தார் எனலாம். இப்போது மாமனாரை பார்க்க வந்தாள் பெண்.. அவளிடம் மீண்டும் வீராவை கட்டிக்கோ.. என்றார். சுபிக்கு இது மிரட்டலாகவே தெரிந்தது. ஏதும் பேசாமல் நகர்ந்து சென்றுவிட்டாள். 

மீண்டும் வந்து போன சொந்தங்களிடம் எல்லாம் சுபியை பற்றி பேச்சுதான் பேசினார் அவர். ‘எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, காரணம் அவதான்’ என்பது வரை பேச்சுகள் பேச தொடங்கிவிட்டார். பாவம் வினு.. ஸ்ரீ இருவரும் அதிகமாக அவஸ்த்தைபட்டனர் எனலாம்.. இவரை சமாளிக்க முடியாமல். 

மீண்டும் சுபி.. உள்ளுக்குள் முடங்கி போனாள். அழுகையெல்லாம் இப்போது இல்லை. பயம்.. இவரின் சாபம்.. தங்களை ஏதாவது செய்திடுமோ என்ற பயமும் தொற்றிக் கொண்டது பெண்ணவளை.

மாமனார் அவரை பார்த்துவிட்டு வந்து சுபி, கரணுக்கு அழைத்து.. ஒரே அழுகை.. ‘வேண்டாம் இத்தனை சாபத்தோட நாம கல்யாணம் செய்துக்க வேண்டாம்’ என அழுகை. கரணுக்கு, எதோ நிற்கும் கிரகத்தில் தான் மட்டும் சுற்றுவதாக தோன்றியது. ‘என்னாங்கடா பிரச்சனை.. நாங்கதானே வாழபோறோம்’ என்றாகிவிட்டது.

மறுநாள், சுபியிடம் சொல்லாமல் கரண்.. சுபியின் மாமனாரை பார்க்க சென்றான்.. நல்லவிதமாகவேதான் சென்றான். சுபியின், தந்தையிடம் விவரம் கேட்டுக் கொண்டு.. சுபியிடம் சொல்லிடாதீங்க என சொல்லிவிட்டுதான் சென்றான்.

சுபியின் மாமனார் கரண் யாரென தெரிந்ததும் அதிர்ந்து கத்த போக.. கரண் “என்ன உங்க பிரச்சனை.. வீராவிற்கு ஏதாவது கொடுக்கல் வாங்கல் இருக்கா.. என்ன பிரச்சனை” என்றான் ஆராய்ச்சியான குரலில்.

சுபியின் பெரியவர் அமைதியாக.. ஆராய்ச்சி பார்வை பார்க்க. கரண் விடாமல் கேட்கத் தொடங்கினான்.

அவரோ நடந்ததை சொன்னார்.

கரண் “சரிங்க.. வீராக்கு எவ்வளவு வேணுனும்ன்னு சொல்லுங்க என்னால் முடிந்ததை கொடுக்கிறேன். கல்யாண செலவுக்கும் கொடுக்கிறேன்.. முழுவதும் கொடுக்க முடியாது. தொழில் என  வைத்துக் கொடுங்கள்.. நான் எதோ ஒரு தொகை கொடுக்கிறேன். மற்றது உங்கள் பொறுப்பு. உடம்பை பார்த்துக்கோங்க” என சொல்லி கிளம்பினான்.

இப்படியாகத்தான் அவரை சமாளித்தான்.