கருணாகரன் சுபிக்ஷா திருமணம் எளிமையாக பெரியவர்கள்.. நெருங்கிய உறவுகள்.. நட்புவட்டம் முன்நிலையில் அதிகாலையில் கோவிலில் நடந்தது. இருவருக்கும் முகத்தில் நிம்மதிதான் வந்திருந்தது. கருணாவின் முகத்தில் அடர்ந்த சந்தோஷம்.. நிறைவு.. நிம்மதி என எல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தது.
சுபியின் கழுத்தில் தங்கத்தாலிசங்கிலி அணிவித்து.. பெண்ணவளின் நெற்றியில் குங்குமம் வைத்து.. பெண்ணவளின் பெயரோடு தன் பெயரை இணைத்துக் கொண்டான் கருணாகரன். எந்த ஆர்பாட்டமும் இல்லை.. மங்கள ஒலி மட்டுமே அங்கே. பெரியவர்களின் வேண்டுதல்கள் ஆசீர்வாதங்கள் என உணர்வு குவில் அந்த இடத்தில்.. அதை தவிர்த்து எந்த சப்தமும் இல்லை.. அமைதியாக இருந்தது. அமைதியாக மலையைதான் புரட்டி போட்டிருந்தனர்.
குரு விசாகன் இருவரும்தான் சந்தோஷத்தின் மொத்த வடிவில் இருந்தனர். பட்டுவேட்டி சட்டை அணிந்துக் கொண்டு.. தங்கள் பெற்றோரின் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டு.. நின்றிருந்தனர். அஸ்வின் தீபு இருவரும் அவர்களோடு சேர்ந்துக் கொண்டனர்.
சுபியின் மாமனார் முகத்தில் அதிருப்தி இன்னமும் மாறவில்லை, கடைசி வரிசையில் நின்றுக் கொண்டார். இந்த சங்கீதா, பிள்ளையை சாக்காக கொண்டு.. திருமணம் முடிந்ததும் தன் வீடு சென்றுவிட்டாள்.
ஆனால், சாரதா பிரகாஷ்.. கருணாவின் பெற்றோர் என நால்வரும் வந்தவர்களை கனிவாக கவனித்து பேசி.. திருமணம் முடிந்த உடன்.. எல்லோரையும் கருணாவின் ரெசார்ட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர் உண்பதற்கு. முகத்தில் அத்தனை சந்தோஷம் நிம்மதி.
சுபியின் பெற்றோரும்.. கார்த்திக்கும்.. தங்கள் பக்க உறவுகள் என சுபியின் தாய்மாமா.. அத்தை அவர்களை அழைத்திருந்தனர். சுபியின் இந்த திருமணத்தில்.. அவளாக ‘நான் கரணை விரும்புகிறேன்’ என சொன்னதிலிருந்து ஆனந்தமாகவே இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்.
சுபியின் முகத்தில் புன்னகையே இல்லை.. ம், முன்னாள் மாமனார் லேசாக மருமகளை முறைத்துவிட்டு உண்ணாமல் கிளம்பிவிட்டார் ஊருக்கு. வீராதன் புது மனைவியோடு வந்திருந்து.. அவரை அழைத்து சென்றிருந்தான்.
வினு ஸ்ரீ.. பிள்ளைகள் இருவர் என அவர்கள் சுபியோடு இருந்தனர். கருணாவிடம் நன்றாக பேசினார்.
சுபி, திருமணத்தின் போது புன்னகைக்க முயன்றாள்தான்.. ஆனால், அவளின் மாமனாரின் பார்வை விடவில்லை. அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை.. அத்தோடு.. அவர் இப்போது ஓய்வில் இருக்கிறார், ம்.. ஹார்ட்அட்டாக் வந்துவிட்டது.. சுபி கருணா உறவுபற்றி அறிந்த இந்த எட்டு மாதங்களில். அது கொண்டு காரியமும் சாதித்துக் கொண்டார்.
மதிய விருந்து முடிந்து மாலையில்தான் உறவுகள் கிளம்பினர். கருணா சுபி அதுவரை எல்லோரோடும் பேசிக் கொண்டிருந்தனர். சுபிக்கு காலையிலிருந்த குற்றவுணர்வு இப்போது இல்லை.. எல்லோரும் நல்லவிதமாக பேசி சென்றனர்.. அதனால் கொஞ்சம் தெளிந்திருந்தாள். மனதில் திடத்தை ஏற்றிக் கொண்டாள்.
வீட்டில்தான் மதிய விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். ஒவ்வொருவராக விடைபெற்று கிளம்பினர். கார்த்திக் அங்கேதான் இருந்தார்.. இப்போது தன் மனையாளை உண்பதற்காக அழைத்து வந்தார். இனி நெருங்கிய சொந்தம் மட்டும்தான்.
சங்கீதா வந்தாள்.. கருணா “வா சங்கி, எங்களையும் கொஞ்சம் கவனி.. உன் பெண்ணை மட்டுமே பார்க்குற” என சொல்லிக் கொண்டே அனன்யாவை வாங்கினான்.. அவளிடமிருந்து.
சுபி “வா அக்கா..” என்றாள்.. சங்கீதாவின் முகம் மாறித்தான் போனது சட்டென. ஏதும் பேசாமல் கணவனோடு நடந்துவிட்டாள்.
சுபியின் முகம் மீண்டும் வாட தொடங்கியது.. கரண் இப்போது நின்று தன்னவளோடு சேர்ந்து நடந்தான்.. “எதுக்கு இதெல்லாம்” என அனன்யாவிடம் கேட்பது போல கேட்டு.. மனையாளை பார்த்தான். சுபி ஒன்றும் சொல்லவில்லை.. லேசாக புன்னகைக்க முயன்றாள்.
டைனிங் டேபிளில் சாரதா பிரகாஷ், கார்த்திக் தம்பதி.. புதுமண தம்பதி என எல்லோரும் அமர்ந்தனர். பிள்ளைகள் மேலே விளையாடிக் கொண்டிருந்தனர்.
சந்தோஷமாகவே பேச்சும் சிரிப்புமாக உண்டனர்.
மாலையில் கரண் சுபி தங்களின் இரு பிள்ளைகளோடு தங்களின் புது வீட்டிற்கு கிளம்பினர். குரு விசாகன் இருவரும் முன் சீட்டில் அமர்ந்துக் கொண்டு.. பாட்டுக்களை மாறி கேட்டுக் கொண்டும் பாடிக் கொண்டும் வர.. அமைதியாக இருவரும் அதை பார்த்துக் கொண்டே வந்தனர். நடந்தது கனவா நனவா என ஒரு ஆராய்ச்சியே இருவருக்கும்.
புது வீடு.. வந்தனர். இது பிரகாஷ் நண்பரின் மூலமாக விலைக்கு வந்த வீடு.. கரணின் ரெசார்ட்க்கு அருகில் கடலினை பார்த்தது போலான வீடு. யாரிடமும் அப்போது இருந்த குழப்பத்தில் சொல்லவில்லை.. திருமண தேதி முடிவானதும்தான் சொன்னான். சுபி அதன்பிறகுதான் வந்து பார்த்தாள்.
சுபி, பிள்ளைகளோடு முதலில் செல்ல.. கரண் பெட்டிகளோடு பிறகு வந்தான். மேலும் கீழும் என பெரிய வீடு. குரு இருவருக்கும் உறங்க என தனியறை.. படிக்க என தனியறை.. விருந்தினர் அறை.. இதில் சாரதா தங்களுக்கு என ஒரு அறையை மேல்மாடியில் எடுத்துக் கொண்டாள்.
பத்துநாட்கள் இவர்கள் இங்கே இருப்பார்கள், ஏதாவது விடுமுறைதினம் என்றால் வருவது போலான ஏற்பாடுதான். மற்றபடி பிள்ளைகளின் படிப்பு விளையாட்டு என எல்லாம் இருப்பதால்.. அங்கேதான் ஜாகை.
சுபி, பால் வாங்கி வந்திருந்தாள்.. பால் காய்ச்சும் வேலையை தொடங்கினாள். பிள்ளைகள் எங்கோ ஓடி ஓடி.. அதை பார்த்து இதை பார்த்து என ஓடிக் கொண்டிருந்தனர்.
கரண் உடைகளை எடுத்து வைத்தான்.. சிந்தனையில் கடந்தகால நிகழ்வுகள். இந்த கட்டமைப்பிற்கு தாங்கள் பட்ட கஷ்ட்டங்கள்.. மாமனார் என்ன பேசினார்.. சங்கீதா என்ன என்ன சொன்னால்.. எப்படி இவர்களால் எல்லாம் பேசி முடிகிறது என ஓடிக் கொண்டிருந்தது.
கரண், சுபியை விரும்பியது எதோ.. தன் நல்ல நேரம் என எண்ணிக் கொண்டிருக்க.. சுபி, சொன்னது போல.. இது எப்படியெல்லாம் சரி வராது என கடந்தகாலத்தின் நிகழ்வுகள்.. நடந்திருந்தது.
பிள்ளைகளின் அறையில் கரண் உடைகளை அவர்களின் கப்போர்டில் அடுக்கிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ஊதுபத்தியின் வாசம்.. கரணின் நாசியை தீண்ட.. மணி இரவு ஒன்பது. எழுந்து என்னவென பார்க்க வந்தான்.
கிட்செனின் அருகில் பூஜை அறை என தனியே இருக்க.. அங்கே சுபி விளக்கேற்றி.. கைகூப்பி நின்றிருந்தாள். கரண் அருகே செல்லவில்லை.. அவளின் பயம் என்பது.. இந்த மாதங்களில் தெரிந்துக் கொண்டதால் தூரமாக நின்று பார்த்திருந்தான்.
ஏன் அவளின் பயத்தினை போக்க தோன்றவில்லை என்றால்.. அவனும் அந்த பயத்தினை சிலநேரம் உணர்ந்திருக்கிறான்.. அதனால், அமைதியாக நின்றான். கடவுளை இப்போதெல்லாம் நம்ப தொடங்கியிருந்தனர் இருவரும்.
சுபி, வணங்கிவிட்டு, சாமிக்கு படைத்த பால் எடுத்துக் கொண்டு.. திரும்ப.. கரண் நேர் எதிராக நின்று தன்னை பார்ப்பதை உணர்ந்தாள்.. கரண் புன்னகைத்தான் அர்த்தமாக. சுபியும் அதை அமோதிப்பது போல புன்னகைத்தாள்.. இருவரும் அர்த்தமாக புன்னகைத்துக் கொண்டனர்.
சுபிக்கும் நினைவுகள்.. கரணின் நினைவோடு சேர்ந்துக் கொண்டது போல.. இருவரும் சாரதாவின் விழாவில் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.. சொல்ல போனால் அன்று கரண் ஆனந்தமாக இருந்தான். சுபியை வரவேற்று கொண்டு.. உரிமையாகவே பேச.. பிரகாஷ் “மச்சான்.. என்ன இது” என பார்ட்டியிலேயே கேட்டார். மறைக்கவில்லை கரண் உண்மையை சொன்னான்.. அது அப்படியே சாரதாவின் காதுகளுக்கு சென்றது.
மறுநாள், கரண் வீட்டில் தன் பெற்றோரிடம் சொல்லிவிட்டான். அருணகிரி விசாலாட்சி இருவருக்கும் சந்தோஷம் “உடனே திருமணத்தை முடிக்கிறோம்” என்றனர்.
கரண் “ம்மா.. இதில் சுபியை பற்றி உங்களுக்கு தெரியும், அவங்க மாமனார்கிட்ட அவள் பேசிட்டு சொல்லுவாள்.. வெயிட் பண்ணுங்க” என சொல்லித்தான் வைத்திருந்தான்.
ஒரு விடுமுறை தினத்தில் சுபி, தன் பெற்றோரிடம் சொல்லி விட்டாள். அவர்களும் எப்பாடுபட்டாவது.. இந்த திருமணத்தினை நடத்திட வேண்டும் எனதான் எண்ணினார். தன் பெரிய மாப்பிள்ளையிடம் சுபியின் விருப்பத்தையும் சொல்லிவிட்டனர்.
கார்த்திக், அப்போது ஆஸ்ட்ரேலியா சென்றுவிட்டார். சுபி தன் மாமாவிற்கும் அழைத்து பேசினாள். எல்லாம் சரியாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது.