இவனுடன் சாதாரணமாய் சிரித்து பேசியபடி வந்தவளை கண்டு “யப்பா, சரிபண்ணிட்டியா விக்ரா! இப்போ தான் சிரிச்ச மூஞ்சா இருக்கா, நாளைக்கு இவ அப்பா வராரே வந்து “புள்ள இப்படி கலை இல்லாமல் இருக்கா என்னத்த புடுங்குறன்னு” என்னைய பாடா படுத்துவாருன்னு பயந்திட்டு இருந்தேன். நல்ல வேளை அவளை நார்மல் ஆக்கிட்ட நீ” என மீனா பெருமூச்சு விட்டார்.

“மாமாவா, எப்போ வராரு?” மீனாவிடம் வாய் கேட்க விழிகளோ ‘சொல்லவே இல்லைடி’ என லாவாவை முறைத்து பார்த்தது.

“அது மறந்துட்டேன்” என இவள் உள்ளே சென்றுவிட்டாள்.

“ம்.. நாளைக்கு விடியகாலையிலேயே வந்துடுவாறு” என விக்ராவின் கேள்விக்கு பதில் கூறினார் மீனா.

“என்னத்த திடீர்னு?”

“பத்து நாளுக்கு முன்னையே வர வேண்டியவரு, அவசர வேலைனு அதை முடிச்சிட்டு இந்த வாரம் முழுக்க லீவு எடுத்துட்டு வாராரு”

“ஓ..” என்றவனிடத்தில்

“நாளைக்கு மயினி, அண்ணன் இங்க கிளம்பி வரும் போது நீயும் வந்துடுய்யா” எனவும்

“அது எப்பவும் மாமா வந்தாலே, அம்மாவும் அப்பாவும் பார்க்க வரது வழக்கம் தானே அத்த. கூட நான் எதுக்கு” இவன் சாதாரணமாய் கேட்க.

“மயினி ஒன்னும் சொல்லலியா? உனக்கும் லாவன்யாக்கும் நாளைக்கு உறுதி பண்ணி பேசலாம்னு முடிவு பண்ணிருக்கோம். நேரத்துக்கு வந்துடுய்யா, பேச்சை எப்படி முடிக்கனும்னு நான் பார்த்துகிறேன்” மீனா அவனை சந்தோஷ கடலில் தள்ளினார்.

‘ஹான்’ இமை சிமிட்டாது பார்த்தவன் விசயத்தை கிரகிக்கவே இரண்டொரு நிமிடங்கள் தேவை பட்டது. நம்பவே முடியாது அதிர்ச்சி கடலில் தத்தளித்தவன் “அத்த நிஜமாவா?” என இதழ்களில் பூத்த புன்னகையோடு இவன் கேட்க

“ஆமா, வீராக்கு கண்மணியை உறுதி பண்ணிடாகல்ல, அடுத்து உனக்கு பேசலாம்னு மயினி சொன்னாக நானும் சரின்னுட்டேன். உனக்கு சம்மதம் தானய்யா?” தயக்கமாய் இவர் கேட்க

‘அடக்க முடியவில்லை மகிழ்ச்சியை இவனால்’ மீனாவின் முன் ‘ம்’ என அமைதியாய் சம்மதத்தை சொல்லி நின்றதே பெரிய விசயம் தான்!

“லாவாவுக்கு சம்மதமா அத்த?” இப்போது தயங்குவது இவன் முறையானது.

“அவகிட்ட கேட்கலைய்யா. உன்னை விட யாரு அவளை நல்லா பார்த்துக்க போறான்! நீ கிடைக்க அவ தான் கொடுத்து வச்சிருக்கனும். இவ வேண்டாம்னு வேற சொல்லுவாளா?” பேசிக்கொண்டிருக்கையிலேயே மீனாவின் போன் அடிக்க

“உங்க மாமா தான், நீ உள்ள வாய்யா. நான் பேசிட்டு வந்துடுறேன்” என இவர் உள்ளே செல்ல,

அடித்தது ஜாக்பாட், என லாவன்யாவின் அறைக்கு பறந்தான் இவன். “ஆசைய காத்துல்ல தூதுவிட்டு” மெலிதாய் இசை அவள் அறையை நிறைத்து கொண்டிருக்க, மெல்ல உள்ளே நுழைந்தவன் ஜன்னலை ஒட்டி நின்றிருந்தவளை இடுப்பிலும் முழங்காலிலும் கைகொடுத்து தூக்கி “அதையேண்டி காத்துல தூது விடுற, மாமன்கிட்ட செல்லுடி” ஹஸ்கி குரலில் கூறி வட்டமடித்தான் பெருஞ்சிரிப்போடு.

“விக்ரா.. என்னதிது” என அரண்டு போனாலும், இதுவரை இவனது இத்தனை மகிழ்ச்சி பொங்கிய முகத்தை பார்த்ததே இல்லை இவள். அவன் மகிழ்ச்சி இவளையும் தொற்றிக்கொள்ள “விக்ரா? என்ன? சொன்னா நானும் சந்தோஷபடுவேன்ல” சொன்னவளை அலேக்காய் கட்டிலில் போட்டு தானும் அவளுடன் விழுந்தான்.

“சர்ப்ரைஸ்டி, நாளைக்கு உனக்கே தெரியும்” காதல் தானாகவே கை கூடப்போகும் ஆரவாரம் அவனில்.

“ஒரு பிரன்ச் கிஸ்” இவன் கேட்டு, அவள் மறுக்கும் முன் ஸ்ட்ராங்கான முத்தமொன்றை இவள் திணறதிணற கொடுத்தான்.

கைகள் சுதந்திரமாய் முன்னேறி அவளில் அழுத்தமாய் படிந்தது.

“விக்ரா” முழு சக்தியையையும் உபயோகபடுத்தி இவனை தள்ளிவிட்டு உடையை சரி செய்து இவள் நிற்கவும், “விக்ரபாண்டி” என மீனாவின் குரல் கேட்கவும் சரியாய் இருக்க, அவள் அதிர்ந்து நின்றுவிட, சத்தம் கொடுத்த மீனா இவன் போய் விட்டதாய் நினைத்து மீண்டும் அவர் அறைக்கு சென்றுவிட, “வரேன்டி வெண்ண” என கன்னத்தில் தட்டுவிட்டு நைசாக இவனும் சென்றுவிட்டான்.

அடுத்ததாய் விஜய் போன் செய்தான். இவள் எடுக்காமல் விட மேசேஜில் வந்தான். பயந்து கொண்டே இவள் ஓபன் செய்ய

“என்னடி உன்னை வர சொன்னா செல்லத்தை கூட்டி வந்திருக்க?”

“உனக்கெல்லாம் என்னோட ஸ்டைல்தான் சரி. உன்கிட்ட கொஞ்சிட்டு இருக்குறதே தப்பு” என வரிசையாக வாய்ஸ்நோட்டாக வந்து விழுந்தது. எதற்கும் பதில் சொல்லவில்லை.

ஆனால் அத்தனையையும் கேட்டவளுக்கு நிம்மதி பறிப்போனது. பயம் அவளை ஆட்கொண்டது. தலையணை முழுதும் கண்ணீரால் நனைந்தது.

விக்ராவோ இவளை நினைத்து கொண்டே அவனது வீட்டிற்கு வண்டியை விட்டான். வீட்டிற்குள் நுழைந்தது தான் தாமதம், வீரா அவனை பிடிபிடியென பிடித்து கொண்டான் ‘லாவன்யாவுக்கு என்ன பிரச்சனை, செல்லம் ஏதேதோ சொல்றான்? என்னடா நடக்குது’ என கேட்க  செல்லத்தை முறைத்து பார்த்தவன்ஒ

“எனக்கும் லாவாக்கும் பேசிருக்காங்காலாமே,நீங்க மட்டும் சொன்னீங்களாடா?” எகிற

“நீங்க இரண்டு பேரும் தான் எப்போதும் பேசிட்டு இருக்கீங்கல்ல அதான் சொல்லலை” செல்லம் நக்கலடிக்க, விக்ராவோ அவனை அடிக்க கைக்கு ஏதும் கிடைக்குமா சுற்றி முற்றி தேட, அந்நேரம் பார்த்து

“நான் ஆளான தாமரை.. ரொம்ப நாளாக தூங்கலை” என பாடல் ஒலிக்க “யார்டா இந்த பாட்டையெல்லாம் இவ்வளவு சத்தமா போடுறது” செல்லத்தை துரத்துவதை விட்டு, விக்ரா வாய் பிளக்க, எங்கிருந்தோ வந்த சங்கர் அவன் முகத்தை பிடித்து பாடல் ஒலித்த திசைக்கு திரும்பி விட்டு “அங்க பாரு, அக்கபோரூ” என!

பார்த்தவனோ “நம்ப தாய் கிழவியா” ஷாக் ஆனவன் நடந்து ராதையை நோக்கி சென்றான்.

ஆம் ராதையின் கையில் இருந்த போனில் இருந்து தான் கேட்டது பாடல்.

“நல்லா கேளுடா.. இங்க ஒருத்தனுக்கு நாலுபேர் கன்னி பையனாவே இருக்கோம். கன்னி பசங்க இருக்குற இடத்தில போடற பாட்டாட இது” வீரா வரிந்து கட்டிக்கொண்டு வர

“இன்னும் நீ கக்கூஸ்ல கழிக்காமலாவே இருக்க” விக்ரா அதி முக்கியமாய் கேள்வி கேட்க, “நீ.. மூட்றா” என வீரா பல்லை கடித்தான்.

அதற்குள் “பதினெட்டு வயது இளம்மொட்டு மனது” என அடுத்த பாடல் ஆரம்பிக்க பாண்டிகளின் பார்வை மொத்தமும் ராதையில் விழுந்தது.

போன் நடுவில் இருக்க அதை சுற்றி ராதை, ஸ்கூபி, மினி, ஷினி என வட்டம் போட்டு குப்புற படுத்து அழகு அழகான பெண்களின் நளினமான ரீல்ஸை பார்த்துகொண்டிருந்தனர்.

சங்கரும் செல்லமும் வாயில் எச்சில் ஒழுகாத குறையாய் பார்த்திருக்க, வீராவும் ஒன்றரை கண்ணால் பார்த்தும் பார்க்காதது போல் நிற்க, இவர்களை வட்டமடித்து “சரி தான்” என இறுதியில் விக்ராவின் பார்வை மினியை கோரமாய் முறைத்திருந்த ஸ்கூபியில்  போய் படிந்தது.

“நச்” சென தலையிலேயே அடித்து கொண்டு “இந்த ஸ்கூபி பயலே எப்போ எப்போன்னு இருப்பான். இந்த கிழவி ரீல்ஸ் போட்டு ஏத்தி வேற விடுதே” இவன் நினைக்கையிலேயே

அதற்குள் அடுத்த ரீல்ஸ் ஓடியது “சொப்பன சுந்தரி நான் தானே.. நான் சொப்பன லோகத்தின் தேன் தானே” என அடுத்த ரீல்ஸ் ஓடியது.

“எமலோகத்துக்கு போக வேண்டிய வயசுல சொப்பன லோகமா.., கிழவிக்கு பாட்டை பார்த்தியா?” என விக்ரா சத்தமாய் கூற, அதில் சுதாரித்த தமயன்களும், இதுவரை ஜொல்லு விட்டதை மறந்து வீராவேசமாய் பொங்கி ஆளுக்கொருபுறமாய் அமரந்து “கிழவி..இதெல்லாம் உனக்கு ஓவரா தெரில” தோளில் கை போட்டு அலேக்காய் தூக்கி அருகே அமர வைத்தவன்.

ஜங் என அமர்ந்த அப்பத்தாவும் அப்போதும் போனை நழுவ விடாமல் பிடித்து, “தெரியலையே” என தெளிவாய் கூறிவிட்டு ஸ்க்ரோல் செய்தது.

 “தண்ணி கருத்துருச்சு கன்னு தவளை சத்தம் கேட்டுரூச்சு, ஊரும் உறங்கிடுச்சு நாம ஒதுங்க இடம் கிடச்சிருச்சு” ஹைபிச்சில் ஒலித்த பாடலில் “இளவட்டபயலுக நாங்கள் ஒதுங்கி போய் தான் இந்த பாட்டெல்லாம் கேட்போம், நீ என்ன கிழவி நீ அந்த அட்டூழியம் செஞ்சிட்டு இருக்க” விக்ரா கேட்க

“நானு நாள் புள்ள, ஏழு பேரன் பேத்திய பார்த்தவடே.. நான் கேட்கலாம், ஏன் பார்க்க கூட செய்யலாம். ஒண்டிகட்டை நீங்க தான்டா கேட்கபெடாது, பார்க்கபெடாது” நக்கல் பேச

“யம்மா இந்த கிழவிக்கு வீரியமான விசத்தை வைம்மா. சாப்பிட்டு சாவட்டும்” இருந்த இடத்திலிருந்தே இவன் கத்த

“உங்காத்தா பொங்கி போட்டத தின்னும் சாகலை. கேவலம் இந்த விசத்தை தன்னை சாவ போறேன். போங்கடா போக்கத்த பயலுகலா” அப்போதும் ராதைக்கு குறைவேனா என்றது குசும்பு.

“நீ எப்போயா வந்த? அவகிட்ட பேசாதைய்யா, நீ போய்யா ராசு.. எம்பேரனை வேலையத்தவனு சொல்ற, நீயென்ன கலெக்டரு வேலை பார்க்கிறியாக்கும்” அங்கிருந்த பர்வதம் ராதையை பேச.

“கூட வந்த பெருச்சாளி கூடைய தூக்கிட்டு ஆடுச்சாம், அதை பார்க்க வந்த பெருச்சாளி செருப்ப தூக்கிட்டு ஓடுச்சாம்” என அவருடைய பானியில் ராதை சொலவடை பேசி சண்டையை துவங்க

“பெருச்சாளி கூடைய தூக்கிட்டு ஆடுச்சா? லாஜிக்கே இல்லடே! கூடை சிறுசா இல்லை எலி பெருசா” செல்லத்திற்குள் சந்தோகம் ஓட

பதிலுக்கு பர்வதமும் “அக்கபோரு புடிச்ச நாயி வக்கபோருல உக்காந்துட்டு தானும் திங்காதாம், மத்தவங்களையும் திங்க விடாதாம்” ராதைக்கு பதில் கொடுத்தார் பர்வதம்.

“இதுக அக்கபோரு தான்டா தாங்க முடியலை” வீரா தலையில் அடித்து கொண்டான்.

“நாட்டாமை செய்யுதாம் ஆட்டுபுளுக்க, ஏட்டு கணக்கு பார்க்குதாம் எலிபுளுக்கை” நாழு முழத்திற்கு நீட்டி முழங்கினார் ராதை

“ஏய், எப்புட்றா எதுக மோனையோட இதுக பேசுதுக” சங்கருக்கு ஆச்சர்யம்.

“எதுக, இதுக“ நீயும் அப்படிதேன் பேசுதவே வெண்ண” செல்லம் வாரிவிட, ஙே என விழித்தான் சங்கர்.

“பக்கத்து வீட்டுகாரி ஆம்பளை புள்ள பெத்தான்னு அடுத்த வீட்டு காரி இடிச்சிட்டு செத்தளாம்” எட்டு முழத்திற்கு நீட்டி முழங்கினார் பர்வதம்.

“ஏய் ஏய், எப்படி இடிச்சிட்டு செத்துருபாங்க” சங்கருக்கு சஸ்பன்ஸ் தாங்க முடியவில்லை, பொடீரென பிடரியிலேயே விழுந்தது அடி. விட்டது வேறு யார் வீரா தான். சங்கர் அவனை முறைக்க “கொன்னுடுவேன் கண்டமானிக்கு பேசுதன்னா!” மிரட்டினான் வீரா. ‘ம்க்கும்’ திரும்பி கொண்டான் சங்கர்.

“சொருகி கிடந்த அகப்ப சோறள்ள புறபடுச்சாம் ரோசமில்லாம, அது மாதிரி வேலைவெட்டி இல்லாம கிடந்தா இம்புட்டு வக்கனை வர தான் செய்யும். இரண்டு கிழவிகளும் சும்மா இருங்கீங்களா!” கத்தினான் விக்ரா..

“ஏலே.. ஏவே..” ராதையும் பர்வதமும் இவனை அதிசயமாய் பார்த்து “நீயும் சொலவடை செல்லுத பார்த்தியா” கோரசாய் ராகம் போட்டனர்.

“ஐய்யய்யோ” விக்ரா பே முழி முழித்தான்.

“கிழவிகளோட சேர்ந்து நீயும் கிழவனாயிட்டல்ல” சங்கர் கைதட்டி சிரிக்க

“கிழவி புருஷா, கிழவி புருஷா” செல்லமும் சேர்ந்து கொள்ள

“லேய், வேணாம் வம்பு பண்ணாத?” விக்ரா விரல் நீட்டிக்கொண்டு எச்சரிக்க

“ம் .. நாங்க பண்ணா வம்பு.. நீ பண்ணா சொம்பா? எம்புட்டு பண்ணிருப்ப.. தூக்குல லாம் தொங்கவிட்டுடல்ல கிழவி புருஷா” பல்லை கடித்து கொண்டு வீரா வர,

“என்னைய கிணத்துக்குள்ள தள்ளிவிட்ட” மீண்டும் சங்கர் அடிப்பது போல் வந்தான்.

“சைக்கிளில் பறக்கவிட்டல்ல” கம்பை தூக்கி கொண்டு செல்லமும் சேர்ந்தான்.

“ஆத்தி, ஒன்னு கூடிட்டாய்ங்கடா” தன் அன்னையை நோக்கி “எம்மோவ்” என ஓட, விரட்டி வெளுத்துவிட்டனர் பாண்டிகள்.

********