“அண்ணா என்ன பிளான் வெச்சிருக்காருன்னு தெரியலை அண்ணி. இப்ப இந்துஜா வந்து கேட்டா என்ன சொல்லறது?”

“எதுவா இருந்தாலும் உங்க அண்ணா பார்த்துப்பாங்க. அதோட உங்களுக்கு ஒன்னும் இது விஷயமா தெரியாது தானே? அப்ப தெரியாதுன்னே சொல்லிடுங்க. அதுல என்ன?” என்று தாரகேஸ்வரி சொன்னதும், புரிந்தவன் போல, “ஆமாம், ஆமாம், எங்களுக்கு தான் எதுவும் தெரியாதில்லை. அப்பறம் ஏன் பயந்துட்டு” என்றான் சின்னதாக சிரித்து.

“விவேக் எப்படி இருக்காங்க?” என விசாரிக்க, “நல்ல முன்னேற்றம் தெரியுது அண்ணி. அம்மா தான் அவனை பார்க்கவே விட மாட்டீங்கறாங்க. என்னை பார்த்தாலும் எரிஞ்சு விழறாங்க” என சோர்வுடன் சொன்னவனை பார்க்க பாவமாக இருந்தது.

சொந்த அன்னையே நிராகரித்தால் அது எத்தனை வேதனையாக இருக்கும்?

“எல்லாம் ஒரே நாளில் மாறிடுமா? அவங்களுக்கு விவேக் முழுசா திரும்பி வரணும். அதுவரை கண்டிப்பா வேற எதைப்பத்தியும் யோசிக்க மாட்டாங்க. நீ திரும்ப திரும்ப அவங்க முன்னாடி போய் நிக்காத, இதை நம்ம வேற விதமா தான் சரி பண்ண முடியும். உன்னை திரும்ப திரும்ப பார்க்கிறது அவங்களுக்கும் இந்த நேரத்துல வீண் மனவுளைச்சல் தானே”

அண்ணி சொல்வதில் இருக்கும் உண்மை புரிய, “நீங்க சொல்லறது புரியுது அண்ணி. அப்படியே பண்ணிடறேன்” என்றான் உடனேயே!

சிறு வயதில் தான் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் சத்தியே தான் இவன்! கொஞ்சமும் மாறவில்லை. மனம் ஒருமாதிரி நெகிழ்ந்து போனது. கண்கள் லேசாக கலங்கிய அவனையே சில நொடிகள் பார்த்திருந்தாள். அவனிடம் தான் யாரென்று சொல்லி விடலாமா என்று கூட ஒரு நொடி யோசித்து விட்டாள். ஆனால், ஏனோ அதற்கான திடம் அவளிடம் இல்லை.

இவனிடம் சொல்லியும் விட்டு தன் ஆதங்கத்தை ஏதோ ஒரு வகையில் இவன் மீது கொட்டியும் விட்டால்?

வேண்டாம்! அதையும் விட அவளுக்கு மகளாய் ஒரு கடமை காத்திருக்கிறது. அதை முடித்துவிட்டு இதனை பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணினாள்.

இத்தனை நாட்கள் தந்தை விடுதலையாகட்டும் என்று காத்திருக்க முடிந்தவளால், இப்பொழுது அவரை இதற்கு மேலும் தண்டனையை அனுபவிக்க வைக்க அவளுக்கு மனம் இல்லை. ஆனால், அவரை விடுவிக்க என்ன செய்வது என்றும் புரியாததால் அதுவேறு அவளது மனதை ஒருபுறம் வாட்டிக் கொண்டிருந்தது.

கணவனிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், அவன் இதுவரை அழைக்காததிலேயே அங்கே அலைச்சல் அதிகம் என்று புரிந்தவளாய் சத்யாவிடம், “நமக்கு தெரிஞ்ச வக்கீல் யாராவது இருக்காங்களா?” என்று கேட்டாள்.

ஏன் கேட்கிறாள் என்று புரியாமல், “எதுவும் பிரச்சினை இல்லையே அண்ணி?” என்று பதற்றத்துடன் கேட்டவனிடம், ஒன்றும் பேசாமல் மௌனம் காத்தாள்.

பூஜிதாவிற்கு தாராவின் மௌனம் எதையோ உணர்த்த, “அக்கா கேட்கிறாங்க தானே சத்யா, வக்கீல் தெரிஞ்சவங்க இருந்தா வர சொல்லு. என்ன விஷயம்ன்னு சொல்லற மாதிரி இருந்தா அவங்களே சொல்ல போறாங்க…” என்று இடையிட்டு சொல்லிக் கொண்டிருந்தபோது தான், அழகாண்டாள் பாட்டி ஏழுமலையை கேஸிலிருந்து விடுவித்து வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்.

இத்தனை நாட்களும் தாராவை எதிர்கொள்ளும் திராணி இல்லாமல், சென்னையில் இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் தங்கிக் கொண்டார். ஏழுமலையோடு வந்து அவளிடம் பேசிக் கொள்வோம் என்பது அவரது எண்ணம். அந்தளவில் சின்னவளுக்கு செய்த தவறுகள் அவரை உறுத்திக் கொண்டிருந்தது.

பூஜிதா தான் முதலில் உள்ளே வருபவர்களை கவனித்தாள். “பாட்டி கூட யாரையோ கூட்டிட்டு வராங்க” என்று சொல்லிவிட்டு எழுந்து அவர்கள் அருகே செல்ல பார்க்க, மற்ற இருவரும் கூட பாட்டி என்றதும் அனிச்சை செயலாய் எழுந்து முன்னே சில அடிகள் எடுத்து வைத்திருந்தனர்.

அழகாண்டாள் வரும் வழியிலேயே ஏழுமலையிடம் பூவராசியின் இறப்பு, தாரகேஸ்வரி, ஆதீஸ்வரன் திருமணம் பற்றி எல்லாம் எடுத்து சொல்லியிருந்தார். இங்கே வீட்டிற்கு வந்து மகளை எதிர்கொண்ட பிறகு சொல்வது நன்றாக இருக்காது என்று தோன்றியதால் அதை எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, குடும்பம் சமீபமாக எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பற்றியும் சேர்த்தே சொல்லியிருந்தார்.

மனைவியின் மரண செய்தியே ஏழுமலையை நிலை தடுமாற வைக்க போதுமாக இருந்தது. மனைவியின் மரணத்திற்கு பிறகு மகள் தனியாக என்ன பாடுபட்டாளோ என்று யோசிக்கவே அத்தனை வலித்தது. அவளை இமை போல காத்து வந்த தந்தைக்கு, அவள் இப்படியொரு நிலையில் இருக்கிறாள் என்பது எத்தனை வேதனையை தரும்?

பாட்டி ஆறுதலாக அவரின் கையை தட்டிக் கொடுத்து, தாராவின் திருமணம் பற்றியும் சொன்னார். ஏழுமலைக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி தன் மகளை மருமகளாக ஏற்றுக் கொண்டார்கள்?

குழப்பமாக பார்க்க, “தாரா மலையாளம் பேசினதாலா எனக்கு அவ உன் மக தான்னு தெரியலை ஏழுமலை. அப்படி ஒரு யோசனை கூட எனக்கு போகலைப்பா. ஆனா ஆதி அது தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணியிருப்பான்னு நினைக்கிறேன்” என்று சொல்ல, இன்னமுமே அவருக்கு குழப்பம் அதிகம் தான் ஆனது.

அவரின் நிலையை புரிந்தவர் போல, வீரராகவன் பற்றி எப்படி தெரிய வந்தது, அவன் குடும்பத்திற்கு என்னென்ன பாவங்களை செய்த்திருக்கிறான் என்றெல்லாம் பாட்டி எடுத்து சொல்ல, கேட்ட ஏழுமலைக்கு, மாமா அவனை அத்தனை நம்பினாரே, அவருடைய சொந்த மகனை மாற்றி வைத்து, தொழிலில் பணத்தை ஏமாற்றி, கடைசியில் அவரையும், பெண் என்றும் பார்க்காமல் அக்காவையும் கொல்ல அவனுக்கு எப்படி மனம் வந்தது? அத்தனை கல் நெஞ்சம் படைத்தவனா அவன்? அதைக்கூட எங்களால் இனம் காண முடியாமல் அவன் சூழ்ச்சிக்கு பலியாகி விட்டோமே என எண்ணி கலங்கி போனார்.

“இந்த விஷயம் எல்லாம் வெளிய வந்தபிறகு ஆதி உனக்கு தப்பா தண்டனை வாங்கி கொடுத்ததை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டான். உடனே உன்னை வெளிய எடுக்கணும்ன்னு சொல்லி, என்னை ஈரோட்டுல இருந்து கிளம்பி வர சொல்லிட்டான்” என்று சொன்ன பாட்டி, “தப்பு செஞ்சது நான். உன்மேல நம்பிக்கை இல்லாம பொய் புகார் கொடுத்தது நான், ஆனா குற்றவுணர்வு அவனுக்கு பாரேன்” என்று சொல்லும்போதே அவரின் கண்கள் கலங்கி விட்டது.

“முடிஞ்சா என்னை மன்னிச்சிடுப்பா” என்று ஏழுமலையைப் பார்த்து கையெடுத்து கும்பிட,

“எத்தனை முறை கேட்பீங்க அத்தை, என்னை தர்ம சங்கட படுத்தாதீங்க. சூழ்நிலை இப்படி அமையறதுக்கு யார் என்ன செய்ய முடியும்? இந்த பேச்சை இத்தோட விடுங்க அத்தை” என்று ஏழுமலை பெருந்தன்மையுடன் சொல்ல, குற்றவுணர்வில் அழகாண்டாள் பாட்டி தான் ரொம்பவும் குறுகி போனார்.

வீடு வந்ததும், ஏழுமலையின் விழிகள் பரபரப்பானது. எட்டு வயதாக இருந்தபோது பிரிந்த மகள், இப்பொழுது வளர்ந்து, படித்து, மணமாகி இருக்கிறாள். அவளை நேரில் பார்க்கப் போகிறோம் என்று எண்ணும்போதே உடல் சிலிர்த்து அடங்கியது.

“உள்ளே வா ஏழுமலை. உன் மகளை பார்ப்பியாம். உன்னை பார்த்து என்ன சொல்ல போறாளோ? உன்னை கூட ஒருவழியா சமாதானம் பண்ணிட்டேன். இப்ப உண்மை தெரிஞ்ச அப்பறம் இவளை எப்படி சமாதானம் செய்ய போறேன்னு நினைக்கவே எனக்கு முழி பிதுங்குது” கேலியாக தன் மனதின் கவலைகளை பகிர்ந்தபடி அழகாண்டாள் அவரை உள்ளே அழைத்து செல்ல,

அவர்களை பார்த்ததும், இளையவர்கள் மூவரும் ஆர்வமாக அருகில் வந்தார்கள்.

ஒன்றிரண்டு எட்டுக்கள் தான் தாரகேஸ்வரி எடுத்து வைத்திருப்பாள். தன்னையே வாஞ்சையாக பார்த்தபடி கண்கள் கலங்க நின்றிருந்த பெரியவரை பார்த்ததும், அவள் அதிகம் யோசிக்க தேவையில்லை, உடல் எடை குறைந்திருந்தாலும், நரை கூடியிருந்தாலும், முகம் சுருக்கம் கண்டபோதும் அவளுடைய தந்தையை அவளுக்கு தெரியாதா என்ன?

அப்படியே அசைய மறுத்து நின்ற இடத்திலேயே வேரூன்றி நின்று விட்டாள்.

கண்ணிலிருந்து பொங்கி பெருகிய நீரை துடைக்கும் வலிமை கூட அவளிடம் இல்லை. அப்படியே தந்தையையே சிலை போல பார்த்தபடி நின்றிருந்தாள்.

இத்தனை ஆண்டுகள் கழித்து அவள் தன் தந்தையை பார்க்க காலம் அமைந்து விட்டதா? ஒரு வழியாக அவளின் ஏக்கம், தவிப்புக்கெல்லாம் விடை கிடைத்து விட்டதா?

கண்ணீர் வழிய வழிய, பெரும் கேவல் ஒன்று வெடிக்க, “அப்பா…” என்றவளால் அதை சத்தமாக சொல்ல முடியவில்லை. வாய் மட்டும் அசைந்து, இதழ்கள் தாள முடியாத வேதனையில் துடித்தது.

“தாராம்மா…” என்று ஏழுமலையும் வேகமாக அவளை நெருங்க, இவளும் முன்னோக்கி சென்று வேகமாக தந்தையின் நெஞ்சில் சாய்ந்தவள், “அப்பா…” என்று பெருங்குரலெடுத்து கத்தி கதறி அழ தொடங்கிவிட்டாள்.

எத்தனை நாட்கள் ஏக்கம்? மனதில் எத்தனை துக்கங்கள்?

மகளின் தலையினை ஆதுரமாக வருடிக் கொடுத்துக் கொண்டிருந்த தந்தையின் கண்ணிலும் கண்ணீர் நிற்காமல் பொழிந்தது. அவர்கள் இழந்தது கொஞ்ச நஞ்சம் இல்லையே? மீட்டெடுக்கவே முடியாத பொற்காலங்களை அல்லவா இழந்து நிற்கிறார்கள்!

((இந்த கதை ரொம்பவும் கனமான கதைக்களமா இருக்கு. யாரை பத்தி பேசினாலும் சோகமான உணர்வுகளை சுமந்து தான் போகுது. சரியா கையாண்டுட்டு வரேன்னா தெரியலை. உங்களுக்கு தோணும் விமர்சனங்களை மறக்காம சொல்லிட்டு போங்க.))