காவியத் தலைவன் – 30

யாரையும் எதிர்கொள்ளும் நிலையில் தாரகேஸ்வரி இல்லை. அவள் தனக்குள் நிறைய போராடி போராடி களைத்துப் போயிருந்தாள்.

நல்லவேளையாக ஆதீஸ்வரன் சொல்லி சென்றது போல அழகாண்டாள் பாட்டி அன்றே வீட்டிற்கு வந்திருக்கவில்லை. வந்திருந்தார் என்றால் அவரை எதிர்கொள்ளும் சிரமத்தையும் அவள் கடக்க வேண்டியதாக இருக்கும்.

இப்பொழுது இருக்கும் சூழலில் நிதானமாக அவரை எதிர்கொள்வாள் என்றும் சொல்வதற்கில்லை. தனக்கிருக்கும் கோபத்தை மிக எளிதாக அவரிடம் கொட்டி விட தோன்றியிருக்கும்.

‘இத்தனை நாட்களாக பேரனின் மனைவி என்று அன்பாக பேசியவருக்கு தான் ஏழுமலையின் மகள் என தெரியவந்தால் எப்படி இருக்கும்? உறவென அவர்கள் வீட்டிற்கு சென்றபோதே எப்படி எல்லாம் மோசமான வார்த்தைகளை வீசியிருக்கிறார். இப்பொழுது உரிமையானவளாக இருப்பது தெரிந்தால் என்னவெல்லாம் பேசுவார்?’ அவளது சிந்தனை பயணிக்க மனதில் அழுத்தம் அதிகமானது.

ஆனால், எட்டு வயது சிறுமியாக இருந்தபோதே பொறுத்து போனதில்லை அவள்! அத்தனை ரோசம் பார்ப்பாள். பதிலுக்கு பதில் தந்தால் தான் திருப்தியே வரும்! இப்பொழுது இருக்கும் கோபத்தை எல்லாம் அவரிடம் தயவுதாட்சண்யமின்றி கொட்டி விடமாட்டாளா என்ன?

அதுவும் ஆதியின் பெற்றோரை கொன்றது வீரராகவன் என்று நிரூபணம் ஆகியிருக்கிறது. அப்படியானால், இத்தனை ஆண்டுகளாக தன் தந்தை தவறாக தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் பாட்டியுடைய பொய்யான குற்றச்சாட்டினால், இதனை எப்படி தாராவால் சும்மா விட முடியும்?

‘அவரை மட்டும் நேரில் பார்த்தால்…’ பெண்ணவளின் பற்கள் கொஞ்ச நேரம் ஆத்திரத்தில் நெறி பட்டது.

ஏனோ, ‘தயவுசெய்து அப்படி செய்துவிடாதே!’ என்று உள்ளுக்குள் மனதின் ஏதோ ஒரு சின்ன துகள் அவளிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. முற்று முழுதாக ஆதீஸ்வரன் வேண்டாம் என்று முடிவெடுக்கும் வல்லமையையும் கொடுக்காமல் அதே துகள் தான் அவளை தடுத்துக் கொண்டிருக்கிறது.

வெறுப்பாக இருந்தாலும், அந்த துகளின் கோரிக்கையை அவளால் புறக்கணிக்க முடியவில்லை. புறக்கணிக்கும் வல்லமை அவளிடம் இல்லை என்று சொன்னால் மிகச்சரியாக இருக்கும்.

என்ன செய்ய சில உறவுகளை தள்ளிவைக்க மனமில்லை என்பதற்காகவே அவர்கள் செய்த துரோகங்களையும், அவர்கள் பரிசளித்த ஏமாற்றங்களையும் அமைதியாக கடந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது.

மொத்தத்தில் இது தாலி தந்த பந்தம் மட்டும் இல்லை. உயிரிலிருந்து உதித்த நேசம் தந்த பந்தம் என்று இந்த இக்கட்டான சூழல் அவளுக்கு உணர்த்தி விட்டது. அந்த உணர்வால் மகிழ முடியாமல், விரக்தியாக புன்னகைத்துக் கொண்டாள்.

கதைகளில் திரைப்படங்களில் எல்லாம் தர்க்கரீதியான விளக்கம் பொருந்தாமல் குடும்ப எதிரியின் மகளை, மகனை திருமணம் செய்தது போல வருமே, அப்பொழுதெல்லாம் முழுக்க முழுக்க கற்பனை விளையாட்டு போல தோன்றிய ஒன்று… இன்று அவள் வாழ்வில் நிஜத்தில் நடந்து, அவளை சோதித்துக் கொண்டிருக்கிறது.

ஆதியும் இதே சூழ்நிலையை கடந்து வந்தவன் தான் என்பதை யோசிக்கையில் காரணமே இல்லாமல் இன்னும் மனம் கனத்தது. அவனால் மட்டும் எப்படி இந்த மாதிரி முடிவை எடுக்க முடிந்தது? தானே இத்தனை தூரம் மனதோடு போராடுகிறோம் என்கையில் அவன் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?

ஆதீஸ்வரன், அவனின் தந்தையை கொன்றவர் என தன் தந்தையை எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் எப்படி தன்னை அவனுடைய மனைவியாக ஏற்றுக் கொண்டான் என்கிற கேள்விக்கு என்ன யோசித்தும் அவளுக்கு விடை கிடைக்கவில்லை.

இப்பொழுதானால் இவளின் நிலையும் கிட்டத்தட்ட அதேதான்! தங்கள் குடும்பத்தை உடைத்து தன் தந்தை மீது பொய்யான ஆதாரமற்ற பழியை சுமத்தி அவரை சிறைக்கு அனுப்பி வைத்த குடும்பத்தில் ஒருத்தியாக அவள்! இந்த நிலையிலும் கணவனை விட்டு பிரிய வேண்டும் என்ற முடிவை உறுதியாக எடுக்க முடியாமல் அவளுள் பூத்த காதல் சத்தமின்றி அவளை தடுத்துக் கொண்டிருக்கிறது.

இதயம் இரண்டாக பிளவு பட்டு நிற்கும் இந்த வேதனை எதிரிக்கு கூட வந்துவிடக்கூடாது என்று கண்ணீருடன் எண்ணிக் கொண்டாள்.

அவளை நினைத்து அவளுக்கே வெறுப்பாக இருந்தது. இத்தனை மோசமான பெண்ணா நான்? எனக்கென்று முதுகெலும்பு இல்லையா? சுயமரியாதையாக வாழத் தெரியாதவளா நான்? அன்னை, தந்தைக்கு எந்தவித நியாயமும் செய்யாமல் காதலை பெரிதென கொள்வது அவர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா?

கண்ட எண்ணங்கள் அவளை சூழ்ந்து அவளின் நிம்மதியை மொத்தமாக பறித்துக் கொண்டிருந்தது. வேண்டும் என்ற முடிவை உறுதியாக எடுக்கவும் முடியாமல், வேண்டாம் என்கிற முடிவெடுக்கும் வல்லமையும் இல்லாமல் அனலிலிட்ட புழுவென ஒவ்வொரு நொடியும் துடித்துக் கொண்டிருந்தாள்.

சோர்வில் அயர்வில் எப்பொழுது உறங்கினாலோ தெரியவில்லை. அடுத்து வந்த ஒருசில நாட்களும் இதே பாணியில் தான் கடந்தது.

பூஜிதாவும், சத்யேந்திரனும் விவேக் உடல்நிலை பற்றி அறிந்துகொள்ள மருத்துவமனைக்கு போய் வருவது என்றிருக்க, அவர்களால் தாராவின் நிலையைப் பற்றி தெரிந்துகொள்ள முடியவில்லை.

சீதாம்மா தான், “உடம்பு சரியில்லையாம்மா” என ஆறுதலாக விசாரித்து அறைக்கே உணவை அனுப்பி வைத்தார். பாதி நேரம் சென்ற உணவு அப்படியே திரும்பி வந்தது.

ஐந்தாறு நாட்களில் பெரும் மாறுதல் தாராவிடம். மனதோடு போராடி போராடி களைத்து போனாள். அதில் அவளின் உறக்கம் கெட்டது, உணவு இறங்கவில்லை. அவளின் தோற்றமே வாடிய மலர் போல பொலிவிழந்து காணப்பட்டது. பார்க்கவே மிகவும் பாவமாக இருந்தாள்.

இதற்கிடையில் வீரராகவன் காணாமல் போய் இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. ஆதி திரிபுராவில் தீவிரமாக வேலையில் ஈடுபட்டிருந்த போதும், இங்கு அவன் நியமித்திருந்த வேலையாட்கள் அவன் தந்த உத்தரவை மிகவும் சிறப்பாக செய்து முடித்திருந்தனர்.

காலையிலிருந்து இந்துஜா பூஜிதாவிற்கு அழைத்து ஒரு வழி செய்து கொண்டிருக்கிறாள். சத்யாவும் பூஜிதாவும் தங்களுக்கு தெரியாது என்றே திரும்ப திரும்ப சாதித்து வருகின்றனர். அவள் சென்னைக்கு கிளம்பி வருவதாக இவர்கள் இருவரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறாள்.

சீதாம்மா புலம்பலாக இந்த விஷயங்களையெல்லாம் தாராவின் காதிற்குள் போட்டு வைத்தார். என்னவோ யாரோ எப்படியோ போகட்டும் என விடமுடியாமல் இந்த விஷயம் பெண்ணவளின் மனதை பிராண்டிக் கொண்டே இருந்தது. தான் என்ன மனநிலையில் இருக்கிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.

யோசிக்க யோசிக்க தலைவலி தான் அதிகமானது. ‘இந்த குடும்பம் உனக்கு செய்தது என்ன? நீ அவர்களுக்காக நிற்க பார்ப்பது என்ன?’ அவர்களுக்கு உதவ வேண்டும் என்று துடிக்கும் தன் எண்ணங்களுக்காக தன்னையே வெறுத்தாள்.

அவளின் நியாய மனம், ‘இதே போராட்டத்தில் ஆதி உன்னை வெறுக்கவில்லை. உன் தந்தை குற்றவாளி என்று அவன் மனதில் பதிந்திருந்தும் உன்னை மனைவியாக ஏற்றுக் கொண்டான். இன்று வரையிலும் உன் தந்தை மீதிருந்த வெறுப்பை ஒருநாள் கூட உன்னிடம் கொட்டியதில்லை’ என்று எடுத்து சொன்னது.

ஆழ யோசித்தால் அவன் குணம் எத்தனை மேன்மையானது என்பது புரியும்!

ஏனென்றால், பூஜிதாவை தன் தம்பிக்காக ஏற்கும் போதும் ஆதிக்கு கிட்டத்தட்ட இதே சூழல் தான்! ஏழுமலை விஷயத்திலாவது நூறு சதவீதம் உறுதியாக அவர் தான் குற்றவாளி என்று தெரியாது. சிறு வயதில் கேள்விப்பட்ட விஷயம். ஆனால், வீரராகவன் செய்த மொத்த பாவங்களும் வெளிச்சத்திற்கு வந்த பின்னர் கூட துளி வெறுப்பைக் கூட பூஜிதா மீது கொட்டவில்லையே!

எத்தனை பக்குவங்கள் நிறைந்திருந்தால் இப்படி அவனால் இருந்திருக்க முடியும்?

அவன் மனைவியாய் தானும் அந்த பக்குவத்தோடு இருப்பதில் பிழை ஒன்றும் இல்லையே! அழகாண்டாள் பாட்டி செய்த பிழை. அதுவும் இவனுடைய சிறிய வயதில் அதற்காக தான் இந்தளவிற்கு அவன் தன் வாழ்க்கையில் வேண்டுமா வேண்டாமா என்று யோசிக்கும் அளவுக்கு போகலாமா?

ஆயிரம் கோப தாபங்கள் இருந்தபோதும், அவன் மீதிருக்கும் காதல் இம்மி கூட குறையாமல் அப்படியே தானே இருக்கிறது. இதற்கு மேல் வேறென்ன வேண்டும்?

மனம் டொம் டொம்மென்று அடிக்க ஒரு வழியாக இந்த முடிவுக்கு வந்திருந்தவளின் முகத்தில் கொஞ்சம் தெளிவு வந்திருந்தது.

அமைதியாக கீழே சென்றாள். பூஜிதாவும் சத்யாவும் ஆளுக்கு ஒரு புறம் அமர்ந்திருந்தார்கள்.

“சத்தி எந்தொரு பிரஷ்னம்?” என்றாள் அவன் அருகே இருந்த சோபாவில் அமர்ந்தபடி. அண்ணியை ஏறிட்டு பார்த்தவன், “உங்களுக்கு இப்ப உடம்புக்கு பரவாயில்லையா அண்ணி?” என சோர்வான குரலில் விசாரித்தான்.

“நான் நல்லா இருக்கேன். இப்ப பரவாயில்லை. அதுசரி இவ்விட எந்தொரு பிரஷ்னம்?” என்றாள் மீண்டுமொருமுறை.

“என்ன அண்ணி?” என்று புரியாமல் பார்த்தவன், “தமிழ்ல பேசறீங்களா?” என்றான் குழம்பியவனாக. தன் மடத்தனத்தை நொந்தபடி, “இங்கே என்ன பிரச்சினை சத்தி” என்றாள் தமிழில்.

“இந்துஜா… பூஜிதாவோட அக்கா, அவங்க தான் காலையிலிருந்து அப்பா எங்கே? அப்பா எங்கேன்னு இவகிட்ட கேட்டுட்டே இருக்காங்க. தெரியாதுன்னு சொல்லி சமாளிச்சிட்டு இருக்கோம்”

“தெரியாதுன்னு சொல்லறதை அப்படியே தொடர்ந்து சொல்லுங்க. என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்” என்றாள் நம்பிக்கையாக.