செந்நிறபூமி -17
வடிவரசி கையை அறுத்து கொண்டதும் அங்கிருந்த அனைவரும் ஓடி வர அதற்குள் வடிவரசி மயங்கி இருந்தாள்.
அதே சமயம் முத்துலெட்சுமி சங்கரன் இருவரும் வந்து விட ரத்த சிந்த கிடந்த தன் மகளை கண்டு பதறியவர்கள் அவளை தூக்கினர்.
முத்துலெட்சுமியோ ஆத்திரம் தாங்காமல்.,”என் மகளை என்ன பண்ணீங்க உங்களை எல்லாம் போலீஸ் ல புடிச்சு கொடுத்து விட்டு தான் மறு வேலை …. எவ்வளவு தைரியம் இருந்திருந்தா என் மகளை இப்படி ஆக வச்சிருப்பீங்க “என்று கத்த அக்கம் பக்கத்தினரோ முத்துலெட்சுமியை சத்தமிட்டனர் .
“இங்க பாரு லெட்சுமி நாங்களும் இங்கன தான் இருந்தோம் உன் மக தான் வந்து கத்துச்சு தானாவே கையை அறுத்துக்கிச்சு… அவங்க எதுவும் பேசலை… இங்கன சத்தம் போட்டுகிட்டு இருக்காம போய் உன் மவளை ஆஸ்பத்திரியில் சேரு அம்புட்டு தான் ….”என்க
சங்கரன் தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து ரத்தம் வரும் இடத்தில் கட்டி விட்டு சித்திரை செல்வியை கோபத்துடன் பார்த்து விட்டு.,”என் மவளுக்கு ஏதாவது ஆச்சு உங்க ஒருத்தரையும் சும்மா விட மாட்டேன்”என்றவர் கார் வந்ததும் வடிவரசியை மருத்துவ மனைக்கு தூக்கி சென்றனர்.
அவர் பின்னாலேயே அக்கம் பக்கத்தில் இருந்த சில ஆண்களும் தனஞ்செயனை அழைத்து கொண்டு சென்றனர்.
பக்கத்தில் இருந்த மருத்துவரிடம் செல்ல அவரோ உடனேயே சிகிச்சையை துவங்க…. ரத்தத்தை சுத்தப்படுத்தி விட்டு அங்கே மருந்திட்டு கட்டு கட்டினார்.
அதற்குள் சங்கரனும் முத்துலெட்சுமியும் அங்கே வந்த தனஞ்செயனை பிளுபிளுவென பிடித்துக் கொண்டனர் .
“இந்தாப் பாரு டா .. நீ எதுக்கு இங்க வந்த… ??என் மக உயிரோட இருக்காளா இல்லை செத்துட்டாளா னு பார்க்க வந்தியா…??” என்று கத்தினார்.
“மாமா தேவை இல்லாம பேசாதீங்க உங்க மகளா வந்து பிரச்னை பண்ணி அவளே கையை அறுத்துக்கிட்டதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது “என்றான் அவனும் கோபம் குறையாமல்.
அதற்குள் வெளியே வந்த மருத்துவரோ .,”ஏன் சார் இதை வீட்டிலேயே கையை நல்லா கழுவி விட்டுட்டு ஆயின்மெண்ட் போட்டு விட்டு கட்டி இருந்தா ரெண்டு நாள் ல சரி ஆகியிருக்கும் இதுக்கு போய் இத்தனை பேர் வங்திருக்கீங்க… ?? என்ன முத்துலெட்சுமி மா உங்க மக தான் ஏற்கனவே இது போல பண்ணி இருக்கே…நான் அப்பவே சொன்னேன் தானே…. அந்தப் பொண்ணு எங்க காயம் பட்டா ஒண்ணும் ஆகாதோ அங்க தான் கிழிச்சுக்குதுனு… இதோட நானே நாலு தடவை கட்டு போட்டு விட்டு இருக்கேன்… இதென்ன வியாதியோ சும்மா கையை அறுத்துக்கிட்டு, தான் நினைச்சதை சாதிக்கிற வியாதி… இன்னொரு தடவை உங்க பொண்ணு இதே மாதிரி பண்ணா நானே போலீஸ் ல புகார் கொடுத்திடுவேன்…. “என்றார் கடுமையாக.
முத்துலெட்சுமிக்கு முகம் வெளிறிப் போனது. சங்கரனோ ஊரார் முன்பாக தன் மகளின் செயலால் கூனி குறுகி நின்றார்.
தனஞ்செயனோ எரிச்சலாக “கேட்டுக்கிட்டிங்களா அவர் சொன்னதை… நல்லா சொல்லுங்க டாக்டர்… அப்பவாவது புரியுதானு பார்க்கலாம்… இங்கப் பாருங்க மாமா உங்க மகளால தான் என் கல்யாணம் தடைபடுது…. உங்கப் பொண்ணு கிட்ட நான் வெவரமா சொல்லிட்டேன்…. சூரியாவை தான் நான் விரும்புறேன்… அவளை தான் கட்டிக்குவேன் னு…. நான் சொல்றதை கொஞ்சம் கூட கேட்காம இவளா ஒரு கல்யாணப் பத்திரிக்கை அடிச்சு அதை கொண்டு போய் சூர்யா கிட்ட காட்டி பிரச்சினை பண்ணிட்டு வந்திருக்கா… அது மட்டுமில்லாமல் என் கூட சூர்யா பேச வரும் போதெல்லாம் இவ வலுக் கட்டாயமாக வந்து என் கிட்ட பேசறதும் வழியறதும் பண்ணி எங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினை கொடுத்துக்கிட்டே இருக்கா… இன்னொரு தடவை இதே மாதிரி கிறுக்குத்தனம் பண்ணா…. ஸ்டேஷன் ல கம்ப்ளைன்ட் தர்றதை தவிர வேற வழியே இல்லை பார்த்துக்கங்க”என்று எச்சரித்து விட்டு சென்றான் தனஞ்செயன்.
அவனோடு வந்திருந்தவர்களும் முணுமுணுத்து கொண்டே கிளம்பினர்.
சங்கரனோ கோபத்துடன் தன் மனைவியை முறைத்து விட்டு .,”இது எனக்குத் தேவையா முத்து? உன் மகளுக்கு அறிவே கிடையாதா…? ம்ம்ம் இவளுக்கு என்ன குறைச்சல் னு இவன் பின்னாடி திரியுறா…. இதோப் பாரு இன்னைக்கு சொல்றது தான் வடிவு இனி வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. மலரு கல்யாணத்தை இன்னும் ஒரு வாரத்தில் முடிக்கலாம் னு இருக்கேன் அடுத்து வர்ற முகூர்த்தத்தில் வடிவுக்கு கல்யாணம்” என்று விட்டு காரில் அமர்ந்து கொண்டார்.
“ச்சே இவளால என் பேரு கெட்டுப் போகுது… மடச்சி வீட்டுக்கு வரட்டும் கவனிச்சுக்கிறேன்”என்று பொருமியபடி கண்கள் மூடி படுத்திருந்த வடிவரசியின் தலையில் தட்டி “எழுந்து தொலை வீட்டுக்கு போகலாம்”என முறைத்தபடியே கூறினார்.
“அவளோ மம்மி எனக்கு “எனும் போதே, முத்துலெட்சுமி கோபமாக “மம்மி அம்மினு சொல்லிக்கிட்டு கொஞ்சு… தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுறேன் …வா உன் அப்பன் எவனாவது கிறுக்கனா பார்த்து கட்டி வைப்பாரு… கட்டிக்கிட்டு அடிமையா கெட “என்று திட்டிக்கொண்டே அவளை தூக்கி நிறுத்தி இழுத்து சென்றார்.
வடிவரசியோ சற்று பயத்துடனேயே தான் சென்றாள். அவள் வீட்டிற்கு சென்றதுமே பளாரென அறைந்து விட்டார் சங்கரன்.
“வீட்டை விட்டு வெளியே போ உன் காலை ஒடைச்சு அடுப்புல வச்சிடுறேன்… போனா போவுது னு செல்லம் குடுத்தா தலைக்கு மேல ஏறியா ஆடுற… திமிரு, எல்லாம் கேட்டவுடனேயே கெடைக்குது இல்ல, அந்த திமிரு.இங்கப் பாருடி இவ இனிமே வெளியேப் போறதை கண்டேன் இனி உனக்கு விழும் சாத்து. பார்த்துக்க “என்று முத்துலெட்சுமியை மிரட்டி விட்டு சென்றார்.
“பாரும்மா எப்படி அடிக்கிறாரு னு “என்று கன்னத்தை பிடித்து கொண்டு தன் அன்னையிடம் ஆதரவிற்கு செல்ல முத்துலெட்சுமி வேறு பட்டென்று அடித்து விட்டு.,”உன் அப்பா இதுவரை என்னை ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை இப்ப டி போட்டு பேசிட்டு போறாரு… இது எனக்கு தேவையா…. இங்கப் பாரு எந்த பைத்தியக்காரத்தனமும் செய்யாம இருந்தா உனக்கு தனஞ்செயனோட நல்ல மாப்பிள்ளையா பார்த்து வைப்பேன்…. இல்லையா உங்க அப்பன் சொன்ன எவனையாவது கட்டிக்கிட்டு கஷ்டப்படு”என்று விட்டு உள்ளே சென்றார்.
வடிவரசியோ அழுது கொண்டே உள்ளே செல்ல அங்கே அவளது கைபேசி அழைத்தது.
சிறிது நேரம் பேசி விட்டு வைத்தவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
*********