தனஞ்செயன் தன் பெற்றோருடன் பொன்னுசாமி வீட்டிற்கு சூர்யாவை பெண் கேட்பதற்காகச் சென்றிருந்தான்.

பொன்னுசாமியும் மரகதமும் அவர்களை வரவேற்று உபசரித்து கொண்டிருக்க சித்திரைசெல்வி நடந்ததை சுருக்கமாக கூறி முடித்து சூர்யாவை தயங்கி தயங்கி பெண் கேட்டார். மலரின் விழிகளோ சிவாவை தேடியது.  

அதைக் கண்டு கொண்ட வேலுத்தம்பியோ பேச்சுவாக்கில் “அண்ணனுக்கு பொண்ணு பார்க்க போறோம் நீயும் வாடா ன்னு சொன்னதுக்கு உன் சின்ன மாமன் ஏதோ வாய்க்காலை தூர் வாரப் போறேன் னு போயிருக்கான் தினகரா !!!”என்றார் மலரை பார்த்தபடியே. 

தினகரனோ புரியாது விழித்தவன் ., “என்ன தாத்தா ஒண்ணும் புரியலை “என்றிட .,”அட அதெல்லாம் புரிய வேண்டியவங்களுக்கு புரியும் டா பேராண்டி “என்றவர் மூக்குப் பொடியை நாசியில் இழுத்து கொண்டார். மலரோ புன்னகையுடன் உள்ளே சென்றாள். 

“நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டேன் மரகதம் நீ உன் மகளையும் ஒரு வார்த்தை கேளு… என் மவன் வாயைத் திறந்து நேராகவே சொல்லிட்டான் கட்டுனா சூர்யாவை தான் கட்டுவேன் னு… இதுக்கு மேற்பட்டு நீங்க தான் சொல்லணும்… இன்னும் ஒரு வாரத்தில் அவன் துபாய்க்கு கிளம்பணும் அதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடனும் கல்யாணம் முடிஞ்சதும் சூரியா படிக்கட்டும்.. தம்பியும் ரெண்டு வருஷத்துல திரும்பிடுவான்… அப்புறம் இங்கனக்குள்ளேயே ஒரு பொட்டிக்கடை வச்சு பொழைச்சாலும் சரி… இல்லையா மறுபடியும் ரெண்டு பேரும் துபாய்க்கு போனாலும் சரி…. நீங்க சொல்றது தான் முடிவு”என்றார் சித்திரை செல்வி. 

கருப்பசாமியும் , பொன்னுசாமியிடம் அதையே தான் கூறிக் கொண்டிருக்க

பொன்னுசாமி யோசனையாக,“எனக்கு புரியுது மாமோய். ஆனா என் தம்பி காரன் ஒருத்தன் இருக்கானே அவனுக்கு ஒண்ணு கட்டி வச்சிருக்கோமே அதுவும் அது மகளும் வந்து பிரச்னை பண்ணா என்ன பண்றதுனு தான் யோசனையா இருக்கு…”என்றார் பொன்னுசாமி. 

“எனக்கும் புரியுது பொன்னு… இந்த பய இத்தனை நாளும் நம்ம சூரியாவை மனசுல வச்சுக்கிட்டு தான் அந்த கல்யாணத்தை வேணாம் னு சொல்லி இருக்கான். அது தெரியாம நாங்க கெடந்து அல்லாடிகிட்டு இருந்திருக்கோம்… “என்று பேசும் போதே மலர் காபியை கொண்டு வந்து கொடுத்தாள். 

“ஆயா நல்லா இருக்கியா டா… இந்நேரம் என் வூட்ல மருமவளா இருந்திருக்க வேண்டிய பொண்ணு இப்படி தவிக்க விட்டுட்டேனேன்னு நெனைக்காத நாளில்லை… “என்றார் கவலையாக 

மலர் தலை குனிந்து நின்றிருந்தாள்.  

பொன்னுசாமி தான் அவளை உள்ளே அனுப்பி சமையலை கவனிக்கும்படி சொல்ல எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டாள். 

கருப்பசாமியோ.,” நீ சொல்லு பொன்னு…. உனக்கு உன் மகளை என் பையனுக்கு கட்டி கொடுக்க சம்மதமா… முழு மனசோட சொல்லிட்டா இந்த வாரத்துல பயலுவ துபாய்க்கு கிளம்பறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடலாம் என்ன சொல்ற உன் மக கிட்டயும் தனாவை கட்டிக்க சம்மதமான்னு கேளு “என்றார். 

தினகரன் அடுத்த நிமிடம் சூரியாவின் கைபேசிக்கு அழைக்க அவளும் உடனே எடுத்தாள். 

“சொல்லுண்ணே என்ன இந்த நேரத்தில் கூப்பிடுற… கேண்டினுக்கு வந்தேன் க்ளாஸ் ஆரம்பிக்க போகுது சீக்கிரம் சொல்லுண்ணே “என படபடத்தவளை .,”அட இரு பொருவே பேசி முடிக்கங்காட்டியும்… தொணதொணன்னுட்டு “என்றவன் தனஞ்செயன் வீட்டில் இருந்து பொண்ணு கேட்டு வந்த விடயத்தை கூறி முடித்தான். 

எதிர் முனையில் பேசியவளுக்கோ செவ்வானமாய் முகம் சிவந்து போனது.  

“அப்பா பார்த்து என்ன முடிவு எடுத்தாலும் சரி ண்ணே அப்பா என்ன சொன்னாரு…. ??”என்று ஆவலாக கேட்டிட ., அவளை வம்பு செய்ய நினைத்த தினகரனோ “அப்பாவுக்கு இதுல பிடித்தமில்ல அதான் யோசிக்கிறேன்”என்றான்.

“அண்ணே !!”என்று சற்று உரக்க அழைத்து விட்டாள் சூரியா. 

“ராஸ்கல் உன்னை பத்தி எனக்கு தெரியாது.வீட்டுல எல்லோருக்கும் சம்மதம், உன் கிட்ட தான் கேட்க சொன்னாங்க நீ ரெண்டு நாளில் கிளம்பி வா… கல்யாணத்தை முடிச்சிட்டு இங்க இருந்தே காலேஜுக்கு போவ… சரியா..!! இல்லாட்டி  நான் வந்து காலேஜ் ல சொல்லி கூட்டியாரவா ??”என்று கேட்டான். 

“நீயே வந்து கூட்டிட்டு போண்ணே உடனே ஹாஸ்டலை விட்டு வர ஒத்துக்க மாட்டாங்க அதனால சொல்லி தான் கூட்டிட்டு வரனும் “என்றாள் சூர்யா. 

சரி சரி நான் அப்பா கிட்ட சொல்லிக்கிறேன் நீங்க கிளாஸுக்கு போ”என்றான். உடனே இணைப்பு துண்டிக்கப்பட்டது.  

தனஞ்செயனுக்கு அடுத்த நிமிடம் குறுஞ்செய்தி அனுப்பி விட்டாள். கைபேசிக்குள் மூழ்கி இருந்தவன், ஹாஸ்யமாக புன்னகை சிந்திட,  இருவீட்டாரின் சம்மதம் தெரிவிக்கப்பட மணமகள் இல்லாமலேயே நிச்சயதாம்பூலம் மாற்றிக் கொண்டனர். 

“அப்புறம் என்னய்யா பேசி முடிச்சாச்சு… ஏ பேத்தி பொருவே எலையை போடு… பந்தியை முடிச்சிட்டு கிளம்புவோம் கல்யாண சோலி ( வேலை ) ஏகப்பட்டது கெடக்கு…. இந்தாடா மாப்ள நீ தான் போய் சமையல் ஆளு கோவில்ல பணம் கட்ட எல்லா வேலையும் பண்ணிக்கிடனும்…” என்றார் வேலுத்தம்பி. 

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் பாட்டா அப்புறம் மாமா இன்னொரு விஷயம்…. அதென்னன்னா ??”என்று தயங்கியவன்… 

“எப்படியாவது சங்கரன் மாமன் கிட்ட பேசி மலருக்கும் சிவாவுக்கும் கல்யாணத்தை முடிக்கணும்… அவனுக்கு வேலை வாங்கி தர வேண்டிய பொறுப்பு என்னுடையது… கொஞ்சம் நீங்க முயற்சி எடுத்தா நல்லபடியாக முடிக்கலாம்… யோசிங்க “என்றான் தனஞ்செயன். 

“எங்களுக்கு மட்டும் ஆசை இல்லையாய்யா, அந்த முத்துலெட்சுமி விட்டா தானே.?பார்ப்போம்… நேரங்காலம் கூடி வந்தா உடனே இதோ இப்ப சுருக்குனு முடிச்சா மாதிரி பண்ணிடலாம்”என்றார் பொன்னுசாமி. 

“மலரு அந்த பொரியலை எடுத்து வை… “என்று செண்பகவல்லி வேலை ஏவிக் கொண்டிருந்தார் . 

மலர் எல்லோரும் பொறுமையாக சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவள், சாப்பாட்டை டிபன் பாக்ஸ் ஒன்றில் எடுத்து வைத்தாள்.

மரகதமோ .,”பெரிய புள்ள நீயும் வா சாப்பிடலாம்… சாப்பிட்டதும் மத்த வேலை சாயங்காலமா பார்ப்போம் “என்று சொல்ல.,” பெரியம்மா இந்தா கொஞ்ச நேரத்தில் வந்திடுறேன் நீங்க சாப்பிடுங்க”என்று கூறி விட 

“அட இன்னும் என்ன வேலை பாக்கி கெடக்கு நீ வா சாப்பிட்டு பார்க்கலாம்”என்றழைக்க அவளோ அவஸ்தையாக நின்றிருந்தாள்.

செண்பகவல்லி மலரை பார்த்து சிரித்துக் கொண்டே “மரகதம் அவ போயிட்டு வந்திடுவா… நீ நமக்கு எடுத்து வை…. நீ போயிட்டு வெரசா வாட்டி… எல்லோரும் சாப்புட்டியளே அவளுக்கு வேண்டப்பட்டவன் சாப்பிடலையே எப்படி அவளுக்கு சோறு எறங்கும், நீ வந்து உட்காரு வா “என்றதும் மலர் அந்த இடத்திலேயே இல்லை ஓடி விட்டாள். 

**********

காட்டாற்றை சுத்தம் செய்து கொண்டிருந்தவர்களோ மதிய உணவை சாப்பிட வீட்டுக்கு கிளம்ப சிவா எல்லோரிடமும் .,”ஏலேய் போயிட்டு சீக்கிரம் வந்திடனும் டா தூக்கத்தை போடலாம்னு படுக்கக் கூடாது அப்புறம் வீடு வீட்டுக்கு நான் வந்து இழுத்துட்டு வருவேன் பார்த்துக்கங்க.. .. ஏன் டா சின்னச்சாமி மவனே சாப்பாட்டை கையோட கொண்டு வந்துட்டியா !!!”என்று சிரித்தான் சிவா. 

“அட பாதி பயலுவ கையோட கொண்டு வந்துட்டானுக மாப்ள… அந்த பொருவுகளும் ( பொண்ணுகளும்) கொண்டு வந்திடுச்சு… நமக்கு குஸ்கா வாங்கிட்டு வந்திடுறேன் நீ வந்து உட்காரு… இங்கனயே சாப்பிட்ருவோம்”என்று வீரமலையும் வெற்றியும் கிளம்பினர். 

“அதுவும் சரிதான் இவனுக ஓடுனாலும் ஓடிடுவானுக… “என்று மரத்தடி நிழலில் சாய்ந்தமர்ந்தான். முருகனும் தன் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிட சிறுவர்கள் சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்தபடி அமர்ந்திருந்தான். 

அங்கிருந்த சில சிறுமிகளோ மலர் வருவதைக் கண்டு.,”ஏய் டீச்சர் வர்றாங்கடி வா வா… நாம போய் குட் ஆப்டர் நூன் சொல்லலாம்”என்று பனிமலரை நோக்கி ஓடினர். 

ஆளாளுக்கு மதிய வணக்கத்தை சொல்லிட அனைவரிடமும் பேசியபடி சிவாவைத் தேடினாள். 

பேச்சு சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்ததும் மலர் நிற்பதை கண்டு விட்டு திரும்பி கொண்டான். 

அவனைக் கண்டு கொண்டவளோ சிறுமிகளிடம் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்து சிவாவை நோக்கி சென்றாள்.

“சமூக சேவை எல்லாம் படு பயங்கரமா நடக்குது போல “என்று கேட்க 

அவளைப் பார்க்காமல் அந்தப் புறம் திரும்பியவன் ” ம்ம்ம் ம்ம்ம் ஏதோ நம்மளால முடிஞ்சது டீச்சரம்மா… ஆமா என்ன இந்த பக்கம் காத்து வீசுது,  எதுவும் முக்கியமான வேலையா ??”என்றான். 

“ம்ம்ம்…. சாப்பாடு கொண்டு வந்தேன்… “

“யாருக்கு…. ??”

“யாருக்கு கொண்டு வருவேன்… !?”

“அதை தான் நானும் கேட்கிறேன் யாருக்கு கொண்டு வந்தியாம்? “என்று கிண்டல் செய்து நமட்டு சிரிப்பு சிரித்தான்.

“அதை என் மூஞ்சியை பார்த்து கேளு சொல்றேன் “என்றாள் அவளும் விடாமல் 

“சரி சரி அங்க வை எடுத்துக்கிறேன்… நாங்க தான் ஏற்கனவே சொன்னோம் இல்ல… பொண்டாட்டி பேச்சை மீற மாட்டோம் னு… “என்று சிலுப்பி கொண்டான். 

உள்ளூர சிரித்தவள்… “சூரியாவுக்கும், உங்க அண்ணனுக்கும் பேசி முடிச்சாச்சு… “என்றவள் அடுத்த வார்த்தை சொல்லாமல் நின்றிருக்க…. “சீக்கிரம் நானும் பொண்ணு கேட்க வருவேன்… “என்றான் டிபன் பாக்ஸை ஒவ்வொன்றாக திறந்தபடி…  

“சரி நான் கிளம்புறேன்”என்க 

“நீ சாப்டியா… ??” 

“சாப்பிடுவோம் “என்று விட்டு அங்கிருந்து சென்றாள். 

கொலுசொலி மெல்ல மெல்ல குறைந்து கேட்டதும் அவள் சென்றதை உறுதி படுத்தி கொண்டவன் ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு சாம்பாரின் வாசனையை முகர்ந்து விட்டு,  சாப்பிட ஆரம்பித்து விட்டான். 

இடையே வெற்றிக்கு அழைத்து உணவகத்திலேயே உணவருந்தி விட்டு வரும்படி கூறி விட்டான்.  

கொலுசொலி கேட்காத வண்ணம் மீண்டும் வந்து நின்றவள் சிவா சாப்பிடுவதை கை கட்டி பார்த்து கொண்டிருந்தாள்.

“இவ கையில ஏதோ இருக்கு ப்பா…. எங்க கத்துக்கிட்டா இந்த சமையலை…. அது சரி கெழவி எல்லாம் சொல்லி குடுத்து தான் வளர்த்திருக்கும் போல… இது நிரந்தரமாக எப்ப கிடைக்குமோ ???”என்று சிலாகித்தபடியே சாப்பிட்டு முடித்தான். 

“நெறய போட்டு கொண்டு வந்தாளோ… இதுக்கு மேல சாப்பிட முடியலையே பேசாம வீட்டுக்கு பார்சல் பண்ணிடலாம் ராத்திரிக்கும் என் பொண்டாட்டி சமைச்சது தான்” என பேசிக் கொண்டே டிபன் பாக்ஸை மூடி வைக்க….” ராத்திரிக்கு நானே கொடுத்து விடுறேன்… இப்போ டிபன் பாக்ஸை குடு “என்ற மலரின் குரல் கேட்டதும்….” நீ இன்னும் போகலையா பனி…. “என்றான் திரும்பாமலேயே 

“போகணும் நீ டிபன் பாக்ஸ் கொடுத்தா போவேன் பசிக்குது சாப்பிடனும்” என்று சொல்ல, அதன் அர்த்தம் புரிந்தவன் அழகாய் புன்னகைத்தான். 

“இத்தனை நாளும் டீல் ல விட்டுட்டு இப்ப முகத்தை பார்க்காதன்னு சொல்லிட்டு மூஞ்சிக்கு முன்னாடியே வந்து நில்லுடி…. ராட்சசி… “என்று பொய் கோபம் கொண்டான். 

“சரி போ இனிமே வரலை… நாளைக்கு தில்லைநகர் ல ஒரு கம்பெனி சொல்றேன் அங்க போயிட்டு வா… இன்டர்வியூ எடுக்கிறாங்க அட்டன்ட் பண்ணிட்டு சொல்லு”என ஒரு துண்டு சீட்டை அவன் அருகில் வைத்து விட்டு டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு சென்றாள். 

மலர் அங்கிருந்து செல்லவும் சங்கரன் கோபத்துடன் அங்கே வரவும் சரியாக இருந்தது. 

 

முருகனும் வீரமலை வெற்றி உடன் வந்து விட சங்கரனோ தாம் தூம் என குதிக்க ஆரம்பித்து விட்டார். 

“யார கேட்டு இதெல்லாம் செய்றீங்க…??? ம்ம்ம் உங்களுக்கு யார் அதிகாரம் குடுத்தா ?? இந்த வேலை எல்லாம் செய்யச் சொல்லி பின்ன நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்… ஹான்…. இந்த ஆத்துவாரியில எத்தனை பேர் நெலம் அடிபடுதுனு தெரியுமா ….??”என்று கத்த, சிவாவோ அவரிடம் எகிறிக் கொண்டு நின்றான்.

“நீங்க வந்து உருப்படியா இந்த வேலையை பார்த்து இருந்தா நாங்க ஏன் வரப் போறோம்…. எத்தனை மனு கொடுத்திருப்போம் ஏதாவது ஒண்ணுக்காவது ஆக்ஷன் எடுத்திருக்கணும்… என்னவோ கெணத்துல போட்ட கல்லாட்டம் கெடந்தீங்க அதான் நாங்களே வேலையில எறங்கிட்டோம்…. “என்றான். 

“அதுக்காக அதிகாரத்தை உங்க கையில எடுப்பீங்களா. ??? நீ எதை மனசுல வச்சுக்கிட்டு இந்த காரியத்தை செய்றனு எனக்கு தெரியும்டா…. நீ நினைக்கிறது சென்மத்துக்கும் நடக்காது நெனப்புல இருக்கட்டும்…. இப்ப இந்த நிமிஷம் உன்னை பிடிச்சு உள்ள தூக்கி போடுறேன் பார்க்குறியா ??”என்று சங்கரனும் பதிலுக்கு எகிறினார்..

முருகன் வந்தவரோ…”இதோப் பாருங்க சித்தப்பு.. நீங்க இப்படி பேசுறது நல்லா இல்ல அவ்வளவு தான் சொல்வேன்…. எத்தனை நாளைக்கு தான் நாங்க மனுவை கொடுத்துப்புட்டு காத்து கெடக்கிறது… யாராவது ஒருத்தர் வந்து என்ன ஏதுனு பார்த்திருந்தா இந்த நெலம வருமா… ?? அட இது ஆத்துவாரி (ஆறு செல்லும் வழித்தடம்) னு இளந்தாரி பயலுகளுக்கு தெரியக் கூட இல்ல இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா நம்ம ஊரு குளமும் அப்படி தான் ஆகிடும் அப்புறம் வானம் பார்த்த பூமியா இது கெடக்க வேண்டியது தான்… தண்ணியும் இல்லாம ஒண்ணும் இல்லாம ஊரை விட்டு ஒவ்வொருத்தரா கிளம்ப வேண்டியது தான்… ஏற்கனவே இருக்கிற நல்ல பயனுள்ள மரங்களை பூராம் வெட்டியாச்சு பாதியை கஜா புயல் வந்து சாய்ச்சுட்டு போயிடுச்சு… அப்புறம் இந்த சீமைக்கருவேல மரங்கள் தான் மிச்சம் அதை நீ பாரு நான் பாருன்னு பார்க்க வேண்டியது தான்… ஊருக்கு பெரிய மனுசனா இருந்தா மட்டும் பத்தாது… அரசியல் ல இருந்தா மட்டும் பத்தாது…. ஊருக்கு நாலு நல்ல விஷயத்தை செய்ய தெரிஞ்சிருக்கணும்… உன் பவுசு எல்லாம் இன்னும் ஆறு மாசம் தான்… அதுக்கப்புறம் அடுத்த எலெக்ஷன் வரும் வேற யாராவது வருவாங்க…. நீங்க போய் அதிகாரிகளை வரச் சொல்லுங்க அவங்க கேள்வி கேட்டா நாங்க பதில் சொல்லிக்கிறோம்… “என்றார். 

சிவாவோ வேட்டியை மடித்து கட்டியவன்.,”நீ விடுண்ணே இவர் கிட்ட போய் பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டு…. நீங்க வம்பு வளர்க்கணும் னு வந்திருக்கீங்க, மாமோய் நீங்க அலப்பறையை கூட்டுங்க …டேய் வெற்றி மாப்ள, மெதுவாக அந்த ஃபோனை எடுத்து இவர் பண்ற லந்தை பூராம் வீடியோவா எடு…. எடுத்து பேஸ்புக்கில் போட்டு விடுவோம்.அப்புறம் பதவி தானா பறி போகப் போகுது. அப்புறம் எங்கிருந்து வார்ட் மெம்பரு சங்கரன் ஆகறது….? வார்ட் பாய் சங்கரா கூட ஆக முடியாது…” என்று நக்கலடிக்க சங்கரனுக்கு கோபம் எல்லை மீறியது. 

“டேய் முனியப்பா இவனுக விட்டா பேசிக்கிட்டே போவானுக நீ வீஏஓ வுக்கு ஃபோனை போட்டு விஷயத்தை சொல்லு. இன்னைக்கு ரெண்டு ல ஒண்ணு பார்த்திடுவோம்” என்றார். 

“பாருங்க பாருங்க ரெண்டுல பத்து கூட பாருங்க…. டேய் பயலுவளா என்னடா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கீங்க… வா வா.. வந்து வேலையை ஆரம்பி…. “என சிறுவர்களை விரட்டியபடி துண்டை உதறித் தலைப்பாகை கட்டியவன் , அரிவாளை எடுத்து ஒரே போடாக போட்டு சீமைக் கருவேல மரக்கிளை ஒன்றை வெட்டினான் .

“மாப்ள ஒரே போடுல கிளையை ஒடிச்சுட்ட… அருவா பதமா இருக்கு போல “என்று கேட்ட வீரமலையிடம்

“அருவாவும் பதமா தான் இருக்கு நானும் கொஞ்சம் சூடா தான் பங்கு இருக்கேன். அதான் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா வந்து விழுகுது…சரி சரி நீ வேலையைப் பாரு பங்கு… வீஓ வந்தா சொல்லு அவர் கிட்ட நெறய பேச வேண்டியது இருக்கு…. “என்றபடியே வேலையை கவனித்தான். 

சற்று நேரத்தில் வீஓ ,தலையாரி எல்லாம் வந்து விட முருகன் தான் முன்னின்று பேசினார். 

“சார் நேத்து பேஞ்ச மழைத் தண்ணி முழுசும் வடிஞ்சு ஒண்ணுத்துக்கும் பிரயோசனம் இல்லாம போயிடுச்சு சார்…. இனியும் இது போல விட்டா தண்ணிப் பஞ்சத்தில் நாம ஊரை காலி பண்ணிட்டு தான் போகணும்… இது நிரந்தர தீர்வு னு நான் சொல்ல வரலை ஆனா இப்படி செஞ்சா ஆத்துவாரியில தண்ணி போகும்… அது நேரா கொளத்துக்கு போகிற மாதிரி செஞ்சுட்டா போதும் சார்… கொளத்துல தேங்கிடும் அது இருக்கும் போது நெலத்துல இருக்க தண்ணியோட நீர் மட்டம் உயர்ந்துக்கும்…அது உசந்தா போதுமே… நம்ம ஊர் செழிப்பாயிடுமே”என்று ஆர்வம் மேலிட சொன்ன முருகனை வியப்பாக பார்த்த கிராம நிர்வாக அதிகாரியோ சற்று யோசிக்க சங்கரன் குறுக்கிட்டார். 

“சார் நம்ம அரசாங்கம் ஒண்ணுக்கும் லாயக்கில்லாத அரசாங்கம் னு சொல்லாம சொல்லி இந்த காரியத்தை செய்றாங்க சார்…. அது புரியாம நீங்க யோசிச்சுட்டு இருக்கீங்க…. நாளைய பின்ன இந்த ஆத்துவாரி பக்கமா இருக்க நெலத்துக்காரங்க…. அவங்க அவங்க நிலம் எல்லாம் அடிபடுது னு சொல்லி போராட்டம் பண்ணா என்ன பண்ணுவீங்க…” என்று ஏற்றி விட்டார். 

சிவாவோ கோபமாக “என்னை விடு மாப்ள இன்னைக்கு இந்த ஆளு குறுக்குல மிதிச்சு தள்ளி விட்டு வரேன்…. தானும் படுக்க மாட்டேன் தள்ளியும் படுக்க மாட்டேங்கிற கேஸ் இவரெல்லாம்…. அவரே சரி என்ன பண்ணலாம் னு யோசிக்கிறாரு… இந்த மனுசனைப் பார்த்தியா ஏத்தி விட்டுக்கிட்டு…. நீ என்னை விடு இன்னைக்கு ஒரு வழி ஆக்கிடுறேன்…. ஏதோ என் பொண்டாட்டியை பெத்தவர் னு பொறுமையா போனா ரொம்ப தான் ஆட்டம் காட்டுறாரு….” என்று எகிறிக் கொண்டு நின்றான்.

“அடேய் செத்த சும்மா இரு டா… என்ன தான் முடிவு எடுக்கிறாங்கனு பார்க்கலாம்…. ” என்று வெற்றி தான் சிவாவை அமைதிப்படுத்தினான். 

அதற்குள் கிராம நிர்வாக அதிகாரியோ சங்கரனை அடக்கினார்.

“இதோப் பாருங்க சங்கரன் நீங்க சொல்றது வாஸ்தவம் தான் ஆனா பசங்க இவ்வளவு சிரத்தை எடுத்து இந்த காரியத்தை செஞ்சிருக்காங்க…. கவர்மென்ட்டே சீமைக்கருவேல மரங்கள் எல்லாம் அழிக்கணும் னு தான் சொல்லி இருக்காங்க… சீமைக்கருவேல மரங்களும் நம்ம ஊர் தண்ணிப் பஞ்சத்துக்கு ஒரு வகையில் காரணம்…. அது மத்த மரங்கள் மாதிரி கிடையாது…. எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி, தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இவை ஆழ வேர் மட்டுமில்லாமல் உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் செல்வதை தடைசெய்கிறது. எந்த நோயினாலும் பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு தான் மட்டும் செழித்துப் படருகின்ற தன்மை வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு. இவை வாழும் இடத்தில் உற்பத்தி செய்யும் நச்சுப்பொருளால் நிலத்தில் பிற செடிகள் வளர்வதை அறவே தடுக்கிறது. காத்துல வர்ற ஈரப்பதத்தை கூட உறிஞ்சுக்குமாம்… அந்த அளவுக்கு மோசமான மரம்…. இதை அழிக்கிறது சரி தான் அவங்களை வேலை செய்ய விடுங்க “என்று நீண்ட விளக்கம் ஒன்றை கொடுத்தார் கிராம நிர்வாக அதிகாரி. சங்கரனுக்கு முகத்தில் அடித்தாற் போல ஆகி விட்டது. 

மீண்டும் முருகனிடம் திரும்பிய கிராம நிர்வாக அதிகாரியோ.,”நீங்க செய்றது நல்ல காரியம் தான் இருந்தாலும் எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி விட்டு இதை செய்து இருக்கணும்… இருந்தாலும் பரவாயில்லை… இந்த ஜேசிபி ஓட்டுற செலவு எல்லாம் பில் போட்டு கொண்டு வாங்க… யூனியன் ல சொல்லி பணம் வாங்கி செட்டில் பண்ணிடுங்க அது மாதிரி ஆத்துவாரி ஓரத்தில் இருக்கிற நிலத்துக்காரங்க கிட்ட இங்க தூர் வாருவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை னு ஒரு கையெழுத்து வாங்கிக்கங்க …. “என்றார். 

“அதெல்லாம் பண்ணிடலாம் சார்… இந்த முயற்சி மட்டும் வெற்றி ஆகிடுச்சுனா முதல்ல பயன் பெறும் ஆளுக அந்த நெலத்துக்காரங்க தான் அதனால ஒத்துப்பாங்க “என்றார் முருகன். 

சங்கரனோ தனது பேச்சு எடுபடாது போனதில் கோபம் கொண்டு சிவாவை அனலாக பார்த்து விட்டு சென்றார். 

“என் மாமனுக்கு கோவத்தை பார்த்தியா… நெனச்சது நடக்கலையாம் அதுக்கு கண்ணகி மாதிரி கண்ணால எரிக்க ப்ளான் பண்ணி பார்த்துட்டு போறாரு.. “என்று கிண்டல் செய்தான் சிவா. 

“அட விடு டா நீ வேலையைப் பாரு” என்று வேலையை கவனித்தனர். 

கிராம நிர்வாக அதிகாரியோ, சற்று நேரம் இருந்து வேலை நடப்பதை கவனித்து விட்டு கிளம்பினார்.  

பாதிக்கும் மேல் வாய்க்காலை தூர் வாரி இருந்தது ஜேசிபி. ஆங்காங்கே வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்களை தங்களால் இயன்ற அளவு வேருடன் பிடுங்கி சாய்த்திருந்தனர் இளைஞர்கள். 

“இப்போ மரத்தை புடுங்கி போட்டாச்சு ண்ணே ஆனா திருப்பி வளருமே என்ன செய்ய??”என்று சிவா பேசியபடி இருக்க,  அங்கே வந்த பதிமூன்று வயது சிறுவனோ … “எண்ணே அந்த இடத்தை சும்மா விட்டா தானே அதுல வளரும் அதை சுத்தம் பண்ணிட்டு வேற மரக்கன்று வச்சுட்டா ஏன் இது வளருது …. நமக்கு தகுந்த மாதிரி நவா மரம் மாமரம் ஏதாவது வச்சுக்கலாம்”என்றான் அவன். 

“ஏலேய் சீனிச்சாமி மவனே பரவாயில்லை டா உனக்கும் மூளை இருக்குது… பாருண்ணே இத்துனூன்டு இருந்துகிட்டு எவ்வளவு பெரிய விஷயத்தை பொசுக்குனு சொல்லிபுட்டான்னு “என்று ஆச்சரியத்துடன் பேசினான் சிவா. 

“சிவா இவனுகளை லேசா நெனைக்காத… பம்பரம் சுத்திக்கிட்டு கரட்டான் அடிச்சுகிட்டு திரியிறானுக னு பார்த்தா அவுக அப்பனுக்கே பாடம் சொல்லி தர்ற அளவுக்கு, பெரிய ஆளுக மாதிரி யோசிக்கிறாய்ங்க…. இந்த தூர் வார்ற ஐடியா எல்லாம் யார் குடுத்தது னு நினைக்கிற…. நம்ம மாரிமுத்து மகன் கவினேஷ் பய இருக்கான் இல்ல அவன் தான் எழுதி இருக்கான் மலர் கொண்டு வந்து இவனுக பேப்பர் எல்லாம் தந்தது…. அதுல தான் படிச்சேன்… யப்பா பயலுக மலைக்க வைக்கிறானுக….” என்றார் முருகன். 

அந்த சிறுவனுக்கு வெட்கம் தாளவில்லை. நெளிந்து வளைந்து கொண்டே.,”எங்க பனிமலர் டீச்சர் தான் சொல்லி தந்தாங்க தெரியுமா ??”என்றான். 

சிவா சிரித்தபடியே “உங்க டீச்சர் சொல்லி தரலைனா தான் ஆச்சரியம் போ… “என்றான். 

*********

இங்கே வீட்டிற்கு வந்த மலரோ சிவா கொடுத்த டிபன் பாக்ஸை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்து விட்டாள். அவள் உணவருந்தி முடிக்கவும் சங்கரன் அங்கே வரவும் சரியாக இருந்தது. 

சட்டென எழுந்து நின்றவளை பார்த்து விட்டு .,”அடுத்த வாரம் சங்கரபாண்டிக்கும் உனக்கும் கல்யாணம்…. தயாரா இரு… “என்றார். 

“நான் யாரையும் கட்டிக்க மாட்டேன்…. நீங்க எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறதை விட்டுட்டு… உங்க மகளுக்கு பாருங்க”என்றாள் வெடுக்கென்று. 

“இந்தா பாரு மா, சும்மா எகனை மொகனை( எதுகை மோனை) பேசிட்டு இருக்காத….. உனக்கு கல்யாணம் அவ்வளவு தான் சொல்வேன் தயாரா இரு”என்று விட்டு வெளியேறினார்.

அவர் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டாள் மலர். 

தனஞ்செயனுக்கும் ,சூரியாவிற்கும் திருமணம் பேசி முடித்து விட்ட விடயம் அரசல் புரசலாக முத்துலெட்சுமிக்கும் வந்து சேர்ந்தது. வடிவரசிக்குமே அவளது தோழிகள் மூலம் விஷயம் தெரிந்திட தனது திட்டம் தவிடுபொடியான கோபத்தில் தனஞ்செயனை அவனது வீட்டிலேயே சந்திக்க வந்திருந்தாள்.

“மாமா இப்ப வெளியே வரப் போறிங்களா இல்லையா “என்று வடிவரசி சத்தமிட… சித்திரை செல்வி சத்தம் கேட்டு வந்தவர் வடிவரசி வந்து நின்ற கோலம் கண்டு அதிர்ந்து போனார். 

“எதுக்குமா என் மகனை கூப்பிடுற… என்ன விஷயம் னு சொல்லு??”என்றார் நிதானமாக. 

“ஏன் உங்களுக்கு தெரியாதா…. ம்ம்ம்… பூ வச்சு பேசி முடிச்சது என்னை… ஆனா இப்ப கல்யாணம் கட்டுறது அவளையா?,என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க எல்லாரும்?? இந்த வடிவரசி சும்மா போயிடுவான்னா….!! விட மாட்டேன்… “என்று கத்த அக்கம் பக்கத்தினர் கூடி விட்டனர். 

“இங்க பாரு வடிவு நீ சின்னப்புள்ள உனக்கு வெவரம் தெரியாது எதுவா இருந்தாலும் உங்க அப்பா அம்மா கிட்ட பேசிக்க இங்க வந்து கத்தி ஊரை கூட்டாத…” என்று பதமாகவே சொன்னார் சித்திரை செல்வி. 

ஆனால் வடிவரசி தான் புரிந்து கொண்ட பாடில்லை… மீண்டும் சாமியாடினாள். 

செல்வியோ அதற்கு மேல் பொறுக்க இயலாது பதிலுக்கு கத்த ஆரம்பிக்க , வடிவரசியோ .,’இப்போது ஏதாவது செய்து இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்… என்ன செய்வது…?’ என்று யோசித்தவள் சுற்றும் முற்றும் பார்க்க , அங்கே வேலியில் சொருகியிருந்த கதிர் அரிவாள் தென்பட்டது… ஓடிப் போய் அதை எடுத்து வந்தவள்.,”இந்தாப் பாரு அத்த எனக்கு தனா மாமாவை கட்டி வைக்கலை நரம்பை அறுத்துக்கிட்டு செத்திடுவேன்”என்று மிரட்டினாள்.

அதில் சற்று பயந்த சித்திரை செல்வியோ .,”வேணாம் வடிவு சொன்னா கேளு புத்திக் கெட்ட தனமா ஏதாவது பண்ணாத அப்புறம் ஏதாவது விபரீதமாக ஆகிடும்”என்று பொறுமையாக சொல்ல தனஞ்செயனுக்கு பொறுமை எல்லாம் காற்றில் பறந்தது.  

வடிவரசியோ வேகமாக தன் கையை கதிர் அரிவாள் கொண்டு அறுத்து கொண்டாள். ரத்தம் பீறிட்டு வர வடிவரசி மயங்கி சரிந்தாள்.