“இவனை உனக்கும், உனக்கு இவளையும் தான்”  இப்போதும் இருவருக்குமாய் இவன் பதில் கூறினான்.

அதை கேட்ட அடுத்த நொடியே “ச்சைய்..” என அவளும்

“ச்சை ச்சை“ என டபுள் ‘ச்செய்’ களோடு வீராவும் முகம் சுளிக்க

வீராவையே வைத்த கண் வாங்காமல் பார்த்த விக்ரா, ‘ச்சைய்யா.. இருக்குடா உனக்கு’ இம்முறை கோரசாய் நினைத்தது விக்ராவும் அவளும் தான்.

“கண்மணி அவன் சும்மா நடிச்சிட்டு இருக்கான். ஏற்கனவே நீ நான் முதலில் இவனை வேண்டாம்னு சொல்லிட்டு போனியாம்! அதனால முதல்ல ப்ரபோஸ் நீ தான் பண்ணனுமா, அவன் பண்ண மாட்டானாம். நீ ப்ரபோஸ் பண்ணல்லன்னா  வீரா சூசைட் பண்ணிப்பானாம்”

“நானா? எப்ப? எங்க?” முதல் ஆளாய் அரண்டான் வீரா.

“அதெல்லாம் நான் நாள், இடம், நேரம் எல்லாம் குறிச்சுட்டேன்” விக்ரா அசால்ட்டாய் கூற

“யார்கிட்ட கேட்டு இதெல்லாம் செய்ற நீ” பதறினான் வீரா

“எந்த வெண்ணகிட்டேயும் கேட்க வேண்டிய அவசியமில்லை” என்றவன், கண்மணி புறமாய் திரும்பி

“நீ அவனை கல்யாணம் பண்ணிக்கலன்னா அவன் நிஜமாவே சூசைட் பண்ணிப்பான். இட்ஸ் சீரியஸ் கண்மணி” என விக்ரா சீரியஸாகவே பேச

“எது இந்த சொம்பை வச்சா?” என இவளோ முழு விளையாட்டோடு கேட்டாள்.

“ப்ச், விளையாடாதே கண்மணி, ஒருவேளை சூசைட் பண்ணி செத்துட்டான்னா நீ தான் ஜெயிலுக்கு போகனும்” கெஞ்சலை விட்டு மிரட்டினான் விக்ரா.

“அதெப்படி நான் போவேன்” இவள் விவரமாய் கேட்க

“ஒருவேளை நீதான் காரணம்னு உன் பெயரை லெட்டர் எழுதி வச்சுட்டு செத்துட்டான்னா?” விடுவேனா என இவனும்

“கண்மணின்ற பேரில இந்த ஊரில் ஏழு எட்டு பேரு, ஏன் எங்க சென்டரிலேயே மூனு பேர் இருக்கோமே” விடவே மாட்டேன் என இவளும் மாறி மாறி பேசிக்கொண்டிருக்க

இது ஆவுறதுக்கில்லை என வீராவின் புறமாய் திரும்பியவன் “டேய் அவ பேரு கூட அவ போட்டோவையும் ஒட்டிட்டு சாவு, இல்லையில்லை வீட்டு அட்ரஸையும் எழுதிட்டு சாவு, என்ன சரியா” சொல்லியதோடு,

கண்மணி பக்கமாய் திரும்பி “லெட்டர்ல ஒட்ட உன் போட்டோ என்கிட்ட இல்ல” என தன் போனை எடுத்து அவளை படம் பிடித்தவன்

“உனக்கு அரை மணி நேரம் டைம்..  நீ அவனை ஏத்துக்கலைன்னா அவன் செத்துருவான், அதோ அந்த மரத்துல தூக்கு போட்டு, மூச்சடச்சு, நாக்கு தள்ளி, கண்ணு பிதுங்கி, உடம்பு விரைச்சு செத்து போவான்” இவன் சொல்ல, தூக்கு போடாமலேயே நாக்கு தள்ளி கண் பிதுங்கியது வீராவிற்கு.

எதிரில் நின்றிருந்த கண்மணியோ உண்மையா பொய்யா என தெரியாமல் “நீங்க பொய் சொல்றீங்க.. நான் நம்ப மாட்டேன். எனக்காக எல்லாம் இவன் சாக மாட்டான்” என பேச்சு பேச்சாக இருந்தாலும் படபடத்து போனவள், அவர்களிடமிருந்து வேகமாய் விலகி சென்றாள்.

விக்ராவோ “அரைமணி நேரம் வரல்லைன்னா இவன் பொணம் தான். போன பிறகு அய்யோ அம்மான்னு கதறினாலும் திரும்ப வர மாட்டான் யோசிச்சுக்கோ” என அவள் காதில் விழுமாறு கத்தி பேசிவிட்டு வீராவின் கை பிடித்து விருவிருவென இழுத்து சென்று, மரத்தடியில் நின்று கொண்டான். கூடவே  செல்லத்திற்கு போன் செய்து “டேய் ஆறடியில்  நீளகயிறு ஒன்னு கொண்டுவாடா, அப்படியே ஸ்டூல் ஒன்னும் வேணும்” என முடிக்கும் முன்

“ஆறடிக்கு குழி தாண்டா தோண்டனும், கயிறு வாங்கி என்னடா பண்ண போற” வீரா கேட்க

“ஆமால்ல அது குட்டியா இருக்கும்ல” வீராவையும், நிமிர்ந்து அந்த ஆலமரத்தையும் பார்த்தவன் “டேய் செல்லம், பதினாறு அடிக்கு கயிறு ஒன்னு வேணும்.. இல்லையில்லை இரண்டு வேணும்” விக்ரா முடிக்க, கேள்வியாய் பார்த்த வீராவிடம் “உன் வெயிட் தாங்காமல் ஒன்னு அந்து போச்சுன்னா.. இன்னொன்னு வேணும்லே” கேள்வியும் அவனே பதிலும் அவனே என விக்ரா பேச

“நான் உனக்கு என்ன துரோகம் பண்ணேன்? ஏன் இப்படி என்னை அல்பாய்ஸ்ல கொல்ல பிளான் போடுற” வீரா அழாத குறையாய் கேட்டான்.

“எல்லாமே நல்லதுக்கு, உன் நல்லதுக்கு மட்டும் தான்டா” என

“ஓ.. தூக்குல கட்டி தொங்கவிடறது நல்லதா? அப்படியென்ன நல்லதாம், கொஞ்சம் தெளிவா விளக்குல?”

“தோ பாரு, நான் சொல்ற மாதிரி செஞ்சனா, சீக்கிரமே கல்யாணம் நடக்கும்”

“ஆமாமாம், உன் கல்யாணம் தானே.. நல்லாவே நடக்கும்டா.. நீ சொல்ற மாதிரி தொங்கிட்டன்னா, உனக்கு நான் தடையா இருக்க மாட்டேன்.. அதானே?”

“ப்ச்.. எரும ஒழுங்கா கேளு.. நான் சொல்ற மாதிரி நடந்துகிட்டனா உனக்கு சீக்கரமே கல்யாணம் ஆகும்.. கன்னி கழியும்”

“கர்மம் அது கக்கூஸூலையே கழிஞ்சிட்டு போகட்டும், இவ வேணும்னு யார் அழுதா..” அக்கம் பக்கம் பாராமல் எகிறியவனின் வாயை பொத்திய விக்ரா “ஏட்டிக்கு போட்டியா பேசாதவே.. காதலுக்காக உயிரை கொடுக்குறதுல தப்பில்லை”

“அதுக்கு உன் உயிரை கொடுவே.. எதுக்கு என் உயிரு”

“டேய் உனக்கு தான் வாய் இருக்குனு பேசுன மவனே இந்த நிமிஷமே கழுத்துல. கயத்தை கட்டி தூக்கிடுவேன்டா, வாய மூடிட்டு சொல்றதை கவனி” என இவர்கள் பேசினர், பேசினர் பேசிக்கொண்டே இருந்தனர்.

அதற்குள் கயிறுடன் செல்லமும் வந்துவிட்டான். “எதுக்குடா கயிறு, ஸ்டூல் எல்லாம்?” என கேட்க

“மூதேவி அதை எடுத்துட்டு வர முன்னாடி இவன்கிட்ட கேட்கனும், கேட்குறான் பாரு கேள்விய” வீரமாய் சவுண்ட் விட்டாலும் கிலிபரவியது உள்ளுக்குள். ‘கயிறு ஸ்டூலு.. ஐய்யோ என்ன செய்ய காத்திருக்கானோ’ பதறி தான் போனான்.

ஆனால் சிறிதும் பதட்டமில்லாத விக்ராவோ செல்லத்தை துணைக்கு வைத்து கொண்டு கடகடவென செயலில் இறங்கி அதை வெற்றிகரமாய் முடித்து நிமிர.. “யார்டா தூக்குல தொங்க போறா?” அத்தனைக்கும் உதவி செய்து முடித்துவிட்டு செல்லம் விக்ராவிடம் கேட்க

“வேற யாரு.. நம்ப வீரா தான்” என அசால்ட்டாய் சொல்ல, செல்லத்திற்கோ ஆட்டம் கண்டது. “டேய்.. எதுல விளையாடனும்னு விவஸ்த இல்லை” கடித்து துப்பிய செல்லத்தை அப்படியே டீலில் விட்டுவிட்டு

“டேய் அரை மணி நேரம் ஆச்சு, வந்துருவாடா அந்த கண்மணி, ஏறுடா ஸ்டூல்ல” வீராவிடம் கூற, ‘கல்யாணம் பண்ணினா அவள் கொல்லுவா, பண்ணலைனா இவன் கொல்லுவான். ஆக மொத்தம் வாழ பிறக்கலை நான்’ வராத கண்ணீரை வரவழைத்து இவனும் ஸ்டூலில் ஏறி நிற்க, அவன் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த கயிறை சரியாய் மாட்டிவிட்டு

“டேய் வராடா அவ.. உன் ஓட்டை வாய மூடிட்டு நில்லு. ஏதாவது ஒளறி வச்ச சாவடுச்சிடுவேன்” சொல்லிவிட்டு வசைபாடிக்கொண்டிருந்த செல்லத்தை இழுத்து கொண்டு மரத்தின் பின் ஒளிந்தான்.

“இவனுக்கு நம்பளை சாவடிக்கிறதுல என்ன சந்தோஷமோ? நடக்குறது நடக்கட்டும், இருந்தா பூமிக்கு, இல்லாட்டி சாமிக்கு” என நின்றிருந்தான்.

முதலில் விக்ராவின் பேச்சில் நம்பிக்கை இல்லாது போனாலும், அவனது விளையாட்டு தனம் முகத்தில் தெரியாது போனதில் ‘ஒரு வேளை நிஜமாவே சூசைட் பண்ணிகிட்டானா?’ என்ற கேள்வி அவளை வெகுவாய் குழப்பி விட்டிருந்தது.

நேரமாக நேரமாக படபடவென துடித்து இதயம் எகிறி குதித்தது. சிறிது நாட்களாய் வீராவின் மேல் படர துவங்கிய காதல் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தவளை அப்படியே ரிவர்ஸ் எடுத்து மீண்டும் ஆலமரம் நோக்கி வர செய்தது.

அவனை நெருங்க நெருங்க  மனதினுள் கிலிபிடித்தது. கிட்டதட்ட மனம் நொறுங்கி போய், குடுகுடுவென அவனை நோக்கி ஓடி வந்தாள். நிமிர்ந்து தன் முன்னே இருந்தவனின் கோலம் கண்டு “த்தான் வேணாத்தான்.. அத்தான் சொன்னா கேளு” கத்தியபடி இன்னும் வேகமாய் அவனை நெருங்கினாள்.

இவன் நிலை கண்டு உண்மையென நம்பி அப்படியே தரையில் முழங்காலிட்டு அமர்ந்து, ஸ்டூலில் தலை சாய்த்து ஓ வென ஒப்பாரியே வைத்தாள்.

“ஏண்டி உனக்கு அழுகுறதுக்கு வேற எந்த இடமும் கிடைக்கலையா? என் உசுருக்கு முட்டு குடுத்துட்டு இருக்குற ஸ்டூலை முட்டி முட்டி அழுதே தட்டி விட்டுறுவா போலவே..” வீராவின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது.

“ஏன்த்தான் இப்படி பண்ற. இம்புட்டு ஆசையா என் மேல.. அப்புறம் ஏன் பிடிக்காத மாதிரியே வெளிய நடந்துகிட்ட? அப்போ விக்ரா சொன்னதெல்லாம் உண்மையா? நீ நிஜமாவே என்னை விரும்புறியா”

ஆறாய் வழிந்தோடிய கண்ணீரை தட்டி விட்டு, “உன் குடும்பத்தோட என் வீட்டுக்கு வந்து பொண்ணு கேளுத்தான்.. என் அம்மா அப்பாவை நான் சமாளிச்சுக்கிறேன். இந்த கண்மணி வீராவுக்கு தான், இந்த பையித்தியகாரத் தனமெல்லாம் இனி பண்ணாத” அத்தனை நேரம் ஸ்டுலில் முட்டியே பேசிக்கொண்டிருந்தவள், இவன் பதில் வேண்டி நிமிர்ந்து பார்க்க “ஆத்தி ஜட்டி போடலையே” பிடித்திருந்த கயிறை விட்டு, கைலியை கால் இடுக்கில் திணிக்கும் முன் இவள் பார்த்துவிட, “ஐய்யோ.. ச்சீ” அவனை நிமிர்ந்து பார்க்க முடியா வெட்கம் தடுக்க விருட்டென எழுந்து ஓடினாள் கண்மணி

எழுந்து ஓடிய வேகத்தில் இவள் கால்பட்டு ஸ்டூல் சாய்ந்திட, மறு நொடியே, “ஐய்ய..யய்யோ…” பெரும் அலறலோடு வீரா தூக்கில் தொங்க, விக்ரா ஓடி வந்து வீராவை தன் தோளில் தாங்க, அதே ஸ்டூலை நேராக்கி அதன் மேலேறி கயிறை அவிழ்த்தான் செல்லம். மூவரின் பார்வையும் பாவை ஒருத்தியின் மேலே இருக்க

அவளோ இது எதுவும் அறியாமல் ‘ஐய்யோ.. எனக்கு வெட்கமா வருதே’ என துள்ளி குதித்து  ஓடிக்கொண்டிருந்தாள்.