அத்தியாயம் 10

தனக்கு முன்பாய் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார் மீனா. சமையலறையில் மீனா இருப்பதை உணர்ந்து சத்தம் செய்யாமல் நைசாய் தன் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.

ஆனால் அவளுக்கு முன்பாக ‘மியாவ்’ என சவுண்ட் கொடுத்து இவளை பாவமாய் பார்த்திருந்தது ஷினி..

வண்டாண்டா மறுபடியும் கம்ளைண்ட் பண்றதுக்கு.. “எல்லாம் உன்னால தான் ஷினி. ஒழுங்கா நீ உண்டு உன் பொண்டாட்டி புள்ளைங்க உண்டுனு இல்லாமல் அந்த நாரபய கையிலயா போய் சிக்குவ.. அந்த ஸ்கூபிய பார்த்து கத்துக்கோ, அது ஜோடிய பார்த்ததும் என்ன பாய்ச்சல்ல பாய்ஞ்சு ஓடுறான். அவனை மாதிரி ஓட தான் தெரியலை.. அப்போ விக்ரா கையில சிக்காமலாவது இருக்கனும்னு அறிவில்லையா? அறிவு கெட்ட ஷினி.. நீ மாட்டுனது இல்லாம நானும் சேர்ந்து போய் மாட்டி! என்னைய என்னலாம் பண்ணினான் தெரியுமா?” ஷினியிடம் புலம்பி தள்ளிகொண்டிருந்தாள் லாவன்யா.

கடந்த சில மணி நேரங்களுக்குள்ளாக விக்ரா செய்து வைத்த செயல்களை கைவிட்டு எண்ண கூட முடியவில்லை அத்தனை செய்திருந்தான். அவனது செயல்களை தடுக்க நொடி கூட அனுமதி கொடுக்காத பட்சத்தில் தன்னால் என்ன செய்ய முடிந்திடும்? ஒன்றும் செய்ய முடியாமல் அமைதியாய் அவன் கொடுத்த அனைத்தையும் பெற்று கொண்டு வந்த தன் மீதே அத்தனை ஆத்திரம் வந்தது.

‘ஏன் அவனை திட்டலை, அடிக்கலை, மிதிக்கலை! எங்க போச்சு உன் அறிவு, எங்கே கொண்டு போய் அடகு வச்ச?’ மனசாட்சியே இவள் திட்டிக்கொள்ள

அவள் மனமோ ‘அடிச்சனே கன்னத்துல, கடிச்சனே உதட்டுல’ என வியாக்கானம் பேச

‘ஹா…ன்.. நீ தான் மெச்சிக்கனும் அதெல்லாம் தண்டனைனு, அந்த நாரப்பய எப்படி அனுபவிச்சான்னு எனக்கு தான் தெரியும்?’ கண்ணாடி பார்த்து கத்தி கொண்டிருந்தவள், அந்த கண்ணாடியிலும் இவன் உருவம் மின்னி மறைய ‘ச்சைய்’ எரிச்சலுற்றவள் தங்கு தங்கென நடந்து சென்று கட்டிலில் குப்பறபடுத்து, காலால் அடித்து கொள்ள, ‘விக்ராவை பற்றி மீண்டும் புகாரளிக்க வந்த ஷினியோ’ ‘இவ வேலைக்காக மாட்டா’ என கட்டிலின் ஓரத்தில் படுத்து கொண்டது.

அங்கே அறையை விட்டு வெளியே வந்த விக்ராவோ, துணி ஒன்றில் இதழ் இரத்தத்தை துடைத்தபடி வெளியே வந்தான். சுற்றி சுழன்ற விழிகள் லாவாவும் இல்லை மீனாவும் இல்லை என உணர்ந்தது. ஆனால் அதே நேரம்

“உன்னை கேட்காமலேயே சம்மதம் சொல்லிபுட்டேன் ம்மா.. உனக்கு கோபமில்லையே?” என ராதையம்மாளிடம் சமரசு வினவிகொண்டிருக்க

“ஆமாமாம் உம்பொஞ்சாதி இருக்கும் போது நான் இருக்குறதெல்லாம் உன் கண்ணுக்கு தெரிவனா என்ன?” சிலுவிழுப்பதை அலம்பலாய்  ராதையம்மாள் ஆரம்பிக்க

‘ஆத்தி இந்தா ஆரம்பிச்சுடுச்சுல்ல.. இப்போ தான் பாரிஜாதத்துக்கு முன்னாடி பகுமானமா பேசிச்சு. இனி எதிரி மாதிரி பேசுற பேச்சில பிச்சுக்கும் காதும், கண்ணும்’ என நாச்சி சமையலறைக்குள் ஓட்டமெடுக்க, சமரசுவை முறைத்தபடி இவனும் தன் தாயை பின் தொடர்ந்து உள்ளே வந்தான்.

“ம்மா வீரா வேற ஒரு பொண்ணை விரும்புறான், லாவாவை எனக்கு முடிச்சு வை.. நான் கேட்டா உன் புருஷன் வீம்புக்குன்னே ஏடாகூடாமா ஏதாவது செஞ்சு வப்பாரு” கடகடவென இவன் பேசி முடிக்க

அவன் பேசியதை உள்ளெடுத்து அதன் அர்த்தம் உணர்ந்து இறுதியில் அதிர்ச்சியாகி, “என்னடா சொல்ற.. நம்ப வீராவுக்கு பொண்ணு கூட பழக்கமிருக்கா?” ஆச்சர்யபட்டவர் “நீயாவது ஏட்டிக்கு போட்டியா பொண்ணுக கூட பழகுறவன். வீரா அப்படி கிடையாது. நான் நம்ப மாட்டேன்” நாச்சி உறுதியாய் மறுக்க

கடுப்பான விக்ராவோ “சும்மா ஆளாளுக்கு இதையே சொல்லிட்டு திரியுறீங்க. எந்த பொண்ணு கூட நான் சுத்துறத நீ பார்த்த?” இவன் பாய்ந்தான்.

“நீ ஊருக்கு வந்தாலே உனக்கு போன் பண்ணுற எல்லாமே பொண்ணுகளா தான் இருக்காளுங்க” என

“அது ஆபீஸ் ஸ்டாப் ம்மா.. அதுக்கு நான் என்ன பண்ண?” என இவன் கோபப்பட

“சரிடா கோவபடாத” சொல்லி முடிக்கும் முன் “சாயங்காலமே உம் மருமவளை வீராவை விட்டே கூட்டிவர சொல்றேன். அப்பவாச்சு நம்புவல்ல” என்றவன், தாயிடம் பேச்சை முடித்து கொண்டு “டேய்.. வீரா” என வீடே அலரும் படி அழைத்து கொண்டு வெளியே வந்தான்.

வரும் போதே பைக் சாவியையும் எடுத்து கொண்டே வந்தான்.

வாசலுக்கு வெளியே நின்று பல் விளக்கி கொண்டிருந்த வீராவின் அருகில் வந்து “டீ, வர்க்கி எல்லாம் திங்க முன்னாடி பல்லு விளக்கனும், திண்ணுபுட்டு பல்லு வெளக்குறது தான் கேடு உனக்கு.. வாடா” என பிரஷ்ஷை பிடுங்கி எறிந்துவிட்டு வாய் நிறைய நுரை ததும்ப நின்றிருந்தவனை தர தரவைன இழுத்து சென்றான் விக்ரா.

“அய்யய்யோ வாய் கொப்பிலிக்கலையே” வாய் திறந்து திட்ட கூட முடியாமல், வாய்க்குள் இருந்ததை துப்பிவிட்டு, அரக்கபரக்க சுற்றிய விழிகளில், அண்டா நிறைத்த நீரும் அதில் கிடந்த சொம்பும் விழ, போகிற போக்கில் சொம்பில் தண்ணீரை வாரி கொண்டு சென்றது அவன் இன்னொரு கை.

‘ஐய்யோ நேரமாச்சே.. டையத்துக்கு போகனுமே?’ என்ற வேகத்தில், டூவிலர் விக்ரா கைகளில் லாவகமாய் ஓடிக்கொண்டிருக்க, பின்னால் அமர்ந்திருந்த வீராவோ

“டேய் எங்கடா போறோம்?” “சொல்லி தொலைடா, அதுவும் இவ்வளவு ஸ்பீடா?” கேட்க, பதில் வரவேயில்லை விக்ராவிடமிருந்து. அவனும் விடாது கேட்டுகொண்டே வந்தவன், ‘இந்த நாய் பதில் சொல்லிட்டாலும்’ என நொந்து, சொம்பில் இருந்த நீரை வாய்க்குள் ஊற்றி, அந்நாந்து பார்த்து சலபுல சலபுல என கொப்பளித்து புளிச் என துப்ப, அது எதிரில் சென்று கொண்டிருந்த நாயை சோப்பு நுரையின்றி குளிக்க வைத்தது.

 ஏற்கனவே இருவரிடம் கல்லடி வாங்கி வந்த கடுப்பு இவன் புறமாய் திரும்பி, கோரப்பற்களை காட்டி உறுமிக்கொண்டு இவனை நோக்கி பாய்ந்தது.

இருபக்கமும் கால் போட்டு அமர்ந்திருந்த வீரா “அய்யோ.. நாய்.. நாய் நாய்டா…” காட்டு கத்தலாய் கத்தி ‘ஜங்’ என எகிறி குதித்து சீட்டிலேயே குத்த வைத்து  உக்கார்ந்தான்.

அதில் கடுப்பான விக்ரா “திட்டாதே நாயே.. அவ்வளவு தான் வந்துட்டோம், மூடிட்டு உக்கார்டா” என வள்ளென விழ

“மூடிட்டு இல்லாம தொறந்து போட்டா திரியுறேன். வந்துட்டான் வியாக்கானம் பேச, நாயே நாய் தொரத்துது நாயே!  வேகமா போய்த்தொலை நாயே” பதிலுக்கு கத்தியதில், “என்ன நாயா?” பேயை விட நாய்க்கு பயந்து மனமும் கூடவே உடலும் பதறியதில் வண்டி விக்ராவின் கையில் தடுமாற, அதற்குள் அருகில் நெருங்கி கவ்வவந்த நாயிடமிருந்து தப்பவதற்காக, உடலை இங்குமங்கும் அசைக்க , அதில் உலட்டிக்கொண்டு சென்ற பைக்கை சடன் பிரேக் போட்டு நிறுத்தியதில் பைக் கிச்சென்று  நிற்க, பிடிமானம் இல்லாத வீராவோ சொய்ங் என இவன் தலைக்கு மேல் பறந்து எதிரில் வந்த பெண்ணின் மீது பாய்ந்தான்.

சர்கஸ்க்கு பொறந்தவன் ‘சொய்ங் சொய்ங்னு’ அப்பப்போ பறக்குறான்டா,   மனதில் நினைத்தபடி ‘ஆ’ வென பார்த்தவன், இவன் லேண்டான பெண்னை பார்த்து குதூகலம் ஆனான்.

‘ஆஹா.. மிஷன் சக்ஸஸ்’ மனதினுள் சொல்லி ‘வந்த வேலை முடிஞ்சது’ என முகமெல்லாம் பூரிக்க, விழுந்து கிடந்தவர்களை பார்த்திருந்தான். பின் வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு அருகில் வந்து

“உன் ஆளோட கட்டி உருண்டதெல்லாம் போதும் எழுந்திருடா எரும” என வசைபாடிக்கொண்டே எழுப்பி நிறுத்தினான் விக்ரா.

“டேய் எனக்கு ஆள் இருக்குனு நீ சொல்லி தான் தெரியும், எவடா அவ” நடந்த களோபரங்களை விட்டு இவனிடம் பாய்ந்தான் வீரா.

“ந்தா.. இவ தான். தெரியாத மாதிரி நடிக்கிற” அப்போது தான் எழுந்து நின்று உடையை உதறிக்கொண்டிருந்தவளை கைகாட்டினான் விக்ரா.

“ஏய் நீ எங்கடி இங்க?” என இவனும்.

“மறுபடியும் நீயாடா” என இவளும்

“இன்னைக்கு தான் பொண்ணு வாடையே பட்ருக்குன்னு சந்தோஷப்பட்டேன். உன்மேலயாடி விழுந்தேன். டெட்டால் வச்சு தான்டி கழுவனும் என் உடம்ப” வீரா முகம் சுளிக்க

“கழுவு யாரு வேணாம்னு சொன்னாங்க. இதோ கையில வச்சிருக்கியே ஒரு சொம்பு அது நிறைய டெட்டால கரைச்சு அப்படியே கடகடன்னு குடிச்சிடு. அப்போவாவது உன் வாய்க்கொழுப்பு குறையுதான்னு பார்ப்போம்.

 கொல்லைக்கு போய்ட்டு கழுவாம வந்துட்டான் சொம்போட.. இதுல உடம்பு முழுசா கழுவனுமா. எகத்தாளம் புடுச்சவன்” இவள் எகிற

“இந்தாடி, வாய்க்கொழுப்பு உனக்கா எனக்கா? என்ன பேச்சு பேசிகிட்டு திரியுற. பொம்பள புள்ள கணக்காவா பேசிட்டு கிடக்க” என இவர்கள் சண்டை பிடிக்க துவங்க

“சண்டையெல்லாம் அப்புறமா வச்சுக்கோடா.. இப்போ ஓகே தானே” என விக்ரா இடையில் புகுந்து இழுக்க

“எதுக்கு ஓகே” என இருவருமே கோரசாய் கேட்க

“கல்யாணம் பண்ணறதுக்கு தான்?” இருவருக்குமாய் இவன் பதில் சொல்ல

“யாரை யாருக்கு கல்யாணம் பண்ணிவைக்க போற” இம்முறை அதிர்ச்சியுடன் கூடி கோரசாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.