அந்நேரம் சரியாய் “அண்ணே” என குரல் கொடுத்தபடி மீனா சமரசு வீட்டிற்குள் நுழைய
”அய்யோ அத்தை” என வேகமாய் லாவாவை ஒரு பார்வை பார்த்து இவன் சோபாவை விட்டு விலகி, “வாங்கத்தை” என வரவேற்க, “வா மீனா ஏன் அங்கனயே நின்னுட்ட?” சமரசுவும் வரவேற்பில் கலந்து கொள்ள, பின்னோடு வந்தார் பாரிஜாதம்.
“இதென்ன பாரிஜாதமும் வந்திருக்கா!” பாரிஜாதம் லாவாவின் அத்தை, மீனாவிற்கு நாத்தனார். “இவ நம்ப வீட்டுக்கு சும்மாலாம் வரமாட்டாளே” என நாச்சி காபி கலக்க சமையலறைக்குள் நுழைந்து கொள்ள, லாவாவோ அப்படியே பின்னால் நகர்ந்து அறைக்குள் மறைந்தாள்.
‘வழக்கம் போல் மீனாவிடம் எதையோ பொய் உரைத்துவிட்டு இங்கே வந்திருக்கிறாள்’ என புரிந்து போனது விக்ராவிற்கு.
“என்னடி பாரிஜாதம். வா வான்னு வெத்தலபாக்கு வச்சாலும் வரமாட்ட” என அமைதியை உடைத்து ராதை இழுக்க
“இவ என்னை ஏமாத்துறாளா இல்லையான்னு நெரிஞ்சுக்க வேணாமா?” தோள்பட்டையில் நாடி இடித்து பேசியவர் “எனக்கு மீனா மேல நம்பிக்கையில்லை நீ சொல்லிட்டன்னா நான் வேற பொண்ண பார்ப்பேன்” இப்போதும் லாவாவை விடும் எண்ணம் பாரிஜாதத்திற்கில்லை என்பது தெள்ளதெளிவாய் புரிந்தது.
‘இதென்னடி புது பெரளி’ என நாச்சி என்ன பதில் சொல்வது என தெரியாமல் மீனாவை பார்க்க
“ஆமாம் பாரிஜாதம், என் தங்கச்சி மவ தான் இந்த வீட்டு மருமவ.. நீ உம்மவனுக்கு வேற புள்ளய பாரு” என சமரசு சொன்ன நொடி..
“நாச்சி பதிலே சொல்ல மாட்றா? என்னடி மீனா என்னைய ஏமாத்துறியா. அதான் ஏமாத்துதன்னு நல்லா தெரியுதே? புள்ளைக்கு அப்பன்னு ஒருத்தன் இருக்கான்ல.. எங்கண்ணன்.. வரட்டும் அந்த மிலிட்டரி. உம்புள்ளைய எம்மவனுக்கு எப்படி கட்டனும்னு எனக்கு தெரியும்” சிலுப்பி கொண்டு எழுந்தவர் “லாவன்யா என் புள்ளைக்கு தான் முதல் உரிமை.. அதுக்கு பிறகு தான் மத்தவகளுக்கு உரிமை, அப்பப்போ அதை மறந்து போயிர்றடி மீனா. நீ மறந்திடுவ.. ஆனால் எங்கண்ணன் மறக்காது. வரட்டும் அவரு” கலங்கடித்தார் அங்கிருந்தவர்களை.
“ஏண்டி உங்குடும்பத்துல கொடுக்க விருப்பிமல்லைன்னா விட்டு, ஏண்டி சலம்பல் பண்ணிட்டு திரியுறவ, என் புள்ளை சொன்னாலும் நாச்சி சொன்னாலும் ஒன்னுதேன். நீ உன் மவனுக்கு வேறெடம் பாரு, வித்தார கள்ளி விறகொடிக்க போனாளாம் அங்க கத்தாள முள்ளு கொத்தோட குத்துச்சாம்னு இருக்குற உங்குடும்பத்துல எங்க வீட்டு பொண்ணு வாழவா.. போடி” மகள் வயிற்று பேத்தியை காக்க, ராதை அவரை விரட்டி அடித்தார்.
“என்னைக்கா இருந்தாலும் உம்மவதேன் எவ்வீட்டு மருமவ! எங்கண்ணன் வரட்டும் பேசிகிடுதேன்” என மினி சுனாமியை கிளப்பி சென்றுவிட்டார் பாரிஜாதம்.
அவர் சென்றுவிட்டதை உறுதி செய்து “என்ன மீனா இதெல்லாம்” என நாச்சி முகம் சுருக்க
பெண்ணின் தாயாய் கவலை புரிந்ததோ? “ஆமாம் மீனா, பாரிஜாதம் சரியில்லை தான். பத்தாததுக்கு அவ மவன் சரியான முரடன் வேற. நம்ப புள்ளைக்கு அவன் சரிபடமாட்டான். அவனோட ஈடுபாடுக்கு தகுந்த மாதிரி வெளிய பார்க்க சொல்லு. நம்ப புள்ளைக்கு நம்மூர்லையே வேற பார்க்கலாம்” எனவும்
“ஆமாம் மதினி நம்மூர்ல தான் பார்க்கனும், லாவன்யாக்கும் வயசு ஏறுது நமக்கு தான் லாவன்யா சின்ன புள்ளயா தெரியுறா, சேலை நகை, நட்டுன்னு வந்து நிக்கவும் கேட்காத ஆளில்லை மயினி, புள்ளை வளர்ந்துட்டா, வயசாகுது சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடினு சொல்லாத ஆளில்லை” மீனாவும் வெளிப்படையாய் பேசிட
“அதுக்கென்ன நல்ல பையனா பார்த்து முடிடி யாரு வேணாம்னு சொன்னா? உன்னால முடியலையா உங்கண்ணன் கிட்ட சொல்லுடி, சுயவரமே நடத்திபுடமாட்டாக” என நாச்சி சொல்ல, அவர் மீது கொஞ்ச நஞ்சமிருந்த கலக்கமும் பறந்தோடியது மீனாவிற்கு.
“ஏண்டி மீனா ஒன்னுமட்டும் எனக்கு புரியலை, மகா கல்யாணத்துக்கு வந்த உன் நாத்தனாவ, ஊருக்கு பத்திவிடாம, இப்படி என் வீட்டுக்கு கூட்டியாந்து, எம்மவனுக்கு குடுக்க போறன்னு வேற பொய் சொல்லிட்டு திரியிற? எனக்கே நம்புற மாதிரியில்லை. உன் நாத்தனா நம்பிட்டு தான் மறுவேலை பார்ப்பாளாக்கும்” எனவும்
“பொய்யெல்லாம் இல்லை மயினி. உண்மை தான் சொன்னேன்” உறுதியாய் இவர் பேச
“ஆ..” என வாய் பிளந்தவர் “நம்மூர் பயலா பார்க்க போறேன்னு தானடி சொன்ன?”
“உன் மவனுக நம்மூர் தானே? இல்லை வெளியூரா?” என மீனா பூடகமாய் பேச
“என்னைய கண்டாலே உனக்கு ஆவாது, அதியசமா என்கிட்ட இம்புட்டு அமைதியா சம்பந்தம் பேசுத? என்ன விசயம்” என பார்வை விட, சமரசு கூட சுவாரஸ்யமானார் இவர்களது பேச்சில்
“எல்லாம் பயம் தான் மயினி, புள்ளைய வெளியிடத்துல கட்டி கொடுத்து, கண்ணொறங்காம கிடக்குறதுக்கு உன் வீட்டுல கொடுக்கலாம்ல. கையில வச்சு தாங்குற எங்கண்ணன் வீடு இருக்கும் போது நான் ஏன் வெளியில மாப்பிள்ளைய பார்க்க போறேன்.
இவ்வளவு ஏன்.. உனக்கும் எனக்கும் வராத சண்டையா, சச்சரவா? அதெல்லாம் எம்புள்ளை மேல என்னைக்காச்சும் காட்டிருப்பியா? எங்கிட்ட சண்டை போட்டு லாவண்யா எத்தனையோ முறை கோவிச்சுகிட்டு இங்கே வந்திருக்கா. ஒரு நாளாவது உன் வீட்டுக்கு போன்னு சொல்லி இருப்பியா? கல்யாணம் முடிஞ்சபிறகும் கூட எந்த சச்சரவும் வந்தாலும் ஏசிகிட்டேனாலும் நீ என் புள்ளைய பார்த்துக்க மாட்டியா என்ன?” மனதில் உதித்ததை பட்டென போட்டு உடைக்க
அதிர்ந்தார் நாச்சி “ஏய், என்ன மீனா சொல்லுற, நெசமாத்தான் சொல்லுதியா? இந்த பூசிமொழுகுறதெல்லாம் வேணாம், பளிச்சின்னு வெளிப்படையாய் சொல்லுடி” என பதற
“இன்னும் வெளிப்படையா பேச என்ன இருக்கு மயினி, ரொம்ப நாளா மனுசுக்குள்ளார ஓடுன கதை தான். நம்ப லாவண்யாவை வேத்தாளுக்கு கட்டி கொடுத்து வெளியே போறதுக்கு, நீ தான் ஒன்னுக்கு நாலா பெத்து வச்சிருக்கேயே, யாருக்கு பேசலாம்னு நீயே சொல்லு மயினி.. என் புருஷன் அடுத்த மாசம் லீவுக்கு வாராரு, ஒன்னா வச்சு உன் வீட்டுலையே பேசிடலாம்” என நாச்சியிடமும் “நீ என்னண்ணே சொல்ற” என சமரசுவையும் மீனா கேட்டுவைக்க
நாச்சிக்கு என்ன பதில் சொல்ல என தெரியவில்லை, சட்டென அதை கையில் எடுத்துக்கொண்ட சமரசு “மீனா, அப்போ சொன்னதை தான் இப்போவும் சொல்லுதேன். உனக்கு தான் மொத உரிமை.. நீ கேட்டு இல்லைன்னு சொல்வனா?” என முடிக்கும் முன்னே
“மீனா அவளுக்கு மாப்பிள்ளை கேட்கலை.. அவ மகளுக்கு கேட்குறா.. நைட் அடிச்சது இன்னும் இறங்கலையா யா.. உமக்கு” நாச்சி, சமரசுவின் காதை கடிக்க
“அடச்சீ..” அஷ்டகேணலாய் முகத்தை வைத்து “எம்புட்டு வெவஸ்த கெட்டவடி நீ? கர்மம்” என தலையில் அடித்து கொள்ளா குறையாய் முறைத்தவர், மீண்டும் மீனாவின் பக்கம் திரும்பி
“எங்களோட சம்மதம் வாங்க முன்னாடி நீ உம்மவ கிட்ட பேசி சம்மதம் வாங்கு” சமரசு முடித்து வைக்க
“ஆனால் மயினி ஒன்னும் சொல்லலையே?” என மீனா நாச்சியை பார்க்க
அவரோ மீனாவையே வைத்த கண் மாறாது பார்த்திருந்தார். “மயினி” என மீனா இழுக்க
“ம்.. எனக்கு பொம்பளபுள்ள இருந்தாலும் நானும் உன்ன மாதிரி தான் யோசிச்சிருப்பேன் மீனா. எனக்கும் உனக்கும் தான்டி ஆவாது. ஆனா உம்மவ ஒரு மகளா தான் இந்த வீட்டுக்குள்ளாற வளைய வர்றா. மவளா இருந்தவ மருமவளா ஆகிட்டு போறா. எம்மவனுக்கு சம்மதம்னா எனக்கு சம்மதந்தேன்” இறுகிய குரலில் வந்தாலும் அதில் தொக்கி நின்றது பாசம்.
அங்கிருந்த அத்தனை பேருக்கும் நாச்சியின் இந்த பதிலை கேட்டு தலை சுற்றாத குறை தான். எப்படி இத்தனை எளிதில் சம்மதம் கூறினார் என? அடித்தாலும் பிடித்தாலும் சொந்தம் என வரும் போது ஒன்று கூட தானே செய்வார்கள். அது தான் நடந்ததும் அங்கும்.
“மயினி..” தழுதழுத்த குரலில் வேகமாய் நெருங்கி நாச்சியின் கைகளை பிடித்து கொண்டு “நெசமாத்தானே மயினி சொல்லுதீக” என கண்கலங்க
“இந்த விக்ரவாண்டி வெளங்காத பய, சரியான போக்கிரி பய.. வீராவையே முடிப்போம் மீனா. வீராவுக்கு படிப்பில்லைன்னு நினைக்காத, பொறுப்புள்ள பையன் அவன். சின்ன வயசுலையே ஜவுளிகடையை நடத்தி சொந்த கால்ல நிக்குறவன். கண்ணுகுள்ள வச்சு பார்த்துப்பான். நீ உன் புருஷனை வர சொல்லு நல்ல நாள் பார்த்து பரிசம் போட்ரலாம்” என விக்ராவிற்கே எண்ட் கார்ட் போட்டார் சமரசு.
ஒரு ஓரமாய் நின்றபடி, போனில் கவனமாய் இருப்பவன் போல் இத்தனை நேரம் நடித்த விக்ரா, சடாரென விழிகளை மட்டும் உயர்த்தி சமரசுவை கடுப்புடன் பார்க்க, அதே நேரம் இவரும் அவனை தான் பார்த்திருந்தார். இருவரின் பார்வையும் பரம எதிரிகளாய் முட்டி கொண்டது.
வீரபாண்டியோ இது என்ன புது கலவரம் என பார்த்திருக்க. சங்கரும், செல்வமும் ‘ஆஹா.. நாம கிரேட் எஸ்கேப்புடா அந்த குடிகாரபஜாரிகிட்ட இருந்து’ என ஹைபை கொடுத்து நிம்மதியடைந்தனர்.