பைரவிக்கு மனது அடித்துக்கொண்டு இருந்தது. சிறிதும் அவள் ஜானையும், சந்தோஷியையும் இங்கே எதிர்பார்க்கவில்லை. அதிலும் சிவாவின் இந்த கோப முகமும், அழுத்தமான பேச்சும் அவளுக்கு இன்னமும் நெஞ்சை அடைக்கச் செய்தது.
இதற்கு முன்னரும் அவனின் கோபத்தை கண்டிருக்கிறாள் தான். அப்போது அவன் யாரோ ஒருவன். இப்போது அப்படியில்லையே.
ஜானையும், சந்தோஷியையும் உள்ளே அழைக்க, பைரவி பதறி “சி.. சிவா…” என்று வேகமாய் அவன் அருகே சென்று, அவன் கை பற்றி நிற்க, லேசாய் அவளது கரத்தினை அழுத்திக் கொடுத்தான்.
சந்தோஷிக்கு தங்களின் தோழி தங்களின் அருகில் வராமல், சிவாவின் அருகே சென்று நிற்பதே, அவள் மனதில் அவன் மீதான நேசம் எத்தனை ஆழத்தில் இருக்கிறது என்பதனை தெள்ளத் தெளிவாய் காட்ட, ஜான் பக்கம் ஒரு பார்வையை வீசியவள்
பைரவியிடம் “பையு…” என்று சொல்லி அவளை தன்னருகே வரச் சொல்ல,
சிவாவோ “உள்ள வந்து உக்காருங்க.. என்ன இருந்தாலும் நீங்க பைரவியோட பிரண்ட்ஸ்.. நான் நல்ல விதமா வரவேற்கணும்…” என்றவன்,
பைரவியிடம் “என்ன சாப்பிடுவாங்கன்னு மணிக்கிட்ட சொல்லி அனுப்பு…” என்று சொல்லிவிட்டு,
செல்வியிடம் “நீ போக்கா…” என்றுவிட்டான்.
என்னவோ சிவாவும், பைரவியும் ஒன்றாய் ஒரே வீட்டினில் இருப்பது போலவும், அவர்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் போல் ஜானும், சந்தோஷியும் வந்திருப்பது போலவும் தான் எண்ணத் தோன்றியது மற்றவர்கள் அனைவருக்குமே.
பைரவியோ ஒருமுறை தன் நண்பர்கள் முகம் பார்த்தவள், பின் இந்த நேரத்தில் அவர்கள் என்ன உண்பார்கள் என்று மணியிடம் சொல்லி வாங்கி வரச் சொல்ல, சிவா தன் பர்சினை எடுத்து பைரவியிடமே கொடுத்துவிட்டான்.
“இல்ல நா…” என்று பைரவி சொல்ல வந்தவள், அவன் பார்த்த பார்வையில் ஒன்றும் சொல்லாமல், சிவாவின் பர்சில் இருந்து இரு ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்துக் கொடுக்க, செல்வியும் விட்டால் போதுமென்று நகர,
ஆனால் கிளம்பும் அவரை பைரவி விடாமல் “இருங்க செல்விம்மா.. தேனுக்கும் சேர்த்து தான் சொல்லிருக்கேன்…” என்று நிறுத்த,
“இல்ல பாப்பா.. இன்னும் அங்க வூட்ல கூட்ட கூட இல்ல. துணி மிசினுல போட்டிருந்தேன்.. நீ வேற எல்லாம் இஸ்திரி போடணும்னு சொன்னியா.. நான் போய் என் சோலிய பாக்குறேன்…” என்றுவிட்டு ஓடாத குறையாய் ஓடிவிட்டார்.
இப்போது அங்கே ஜானும், சந்தோஷியும் தான் அங்கே இருக்க, சிவா இலகுவாய் “அப்புறம் ஜான்.. மேல போய் பில்டிங் பாருங்க. உங்க தம்பியோட முதல் ப்ராஜக்ட்.. எப்படி செய்றான்னு பாருங்க…” என்று சொல்ல,
“அ.. அது.. அ.. பார்க்கலாம்…” என்றவன் சந்தோஷியிடம் கண் ஜாடை காட்டினான் பேசு என்பது போல.
ஆனால் அவளுக்கோ இங்கே வந்து சிவாவின் வார்த்தைகளை கேட்க நேர்ந்ததில், கொஞ்சம் மனம் மாறி இருந்தது. பைரவியின் குணம் அவள் நன்கு அறிவாள். சிறு வயதில் இருந்தே எதற்கும் இதுநாள் வரை ஆசைகொண்டது கிடையாது. அவள் மனதில் நினைப்பதற்கு முன்னமே அவளின் அம்மா அதனை நடத்தி இருப்பார்.
அவள் தனிமை மட்டும் தான் அனைவருக்குமே, மனம் வருந்தும் விசயமாய் இருக்க, இப்போது சிவா என்னவோ அவளுக்கு ஏற்ற துணை தான் என்பதுபோல் பட்டது சந்தோஷிக்கு.
என்ன இருந்தாலும், மனம் விரும்பிய வாழ்வு வாழ்வது வரம் தான் இல்லையா. அதை ஏன் நாம் தடுக்க வேண்டும் என்று நினைக்க, இருந்தாலும் நண்பர்களிடம் பேசாமல் திடீரென்று தான் இங்கே வந்து குழப்பம் செய்துவிடக் கூடாது என்றெண்ணி
“அது.. அது பைரவிக்கு கல்யாணம் பேசணும்னு எங்க பேரன்ட்ஸ் நினைக்கிறாங்க…” என்று பொதுவாய் ஆரம்பிக்க, ஜான் இதென்ன புது பேச்சு என்பதுபோல் அவளை பார்த்தான்.
“அது தான் உங்களைப் பார்த்து பேச வந்தோம்…” என்றவளுக்கு, தான் பேசும் பேச்சின் போக்கு சரியா என்றுகூட தெரியவில்லை.
“சந்தோஷி…” என்று பைரவி அடிக்குரலில் சீர,
“பைரவி…” என்று ஆழ்ந்து ஒருபார்வை பார்த்தான் சிவா.
ஜானோ “சந்தோஷி என்ன பேச வந்தோமோ அதை பேசு…” என, சந்தோஷியோ பாவமாய் பார்த்து வைத்தாள்…”
“என்ன விசயமா வந்தீங்க ரெண்டு பேரும்.. கால் கூட பண்ணல எனக்கு..?” என்று பைரவி கேட்க,
“நாங்க உன்னை பார்க்க வரல பைரவி. சிவாவைத் தான் பார்க்க வந்தோம்..” என்று ஜான் நேரடியாகவே பேச,
“அவர்கிட்ட என்ன பேசணும்…” என்றாள் பைரவி.
“என்னவோ பேசணும். நீ வீட்டுக்கு கிளம்பு. நாங்க பேசிப்போம்…” என்ற ஜான்,
“சிவா நாங்க உங்களோட தான் பேச வந்தோம்…” என்றான் அவனிடமும்.
சந்தோஷியோ ”பையு வா நம்ம கிளம்புவோம். அவங்க என்னவோ பேசிக்கட்டும்…” என்று அவளை நகட்டிக்கொண்டு போக,
“நான் இல்லாம சிவா கூட பேச, அதுவும் என் கல்யாணம் பத்தி பேச, என்ன இருக்கு..” என்று திரும்பவும் பைரவி கேள்வி கேட்க
“ஷ்..!” என்று நெற்றியைத் தேய்த்துக்கொண்ட சிவா “பைரவி உன்னோட கல்யாணம் பத்தி, என் கிட்ட பேச வந்திருக்காங்க அப்படின்னா, ஒன்னு நம்ம கல்யாணம் பத்தி பேசணும். இல்லைன்னா என்னை விலகி நிக்கச் சொல்ல பேசணும்… அதுதான் விஷயம்…” என்று சொல்லிட,
பைரவி “அப்படியா..?!” என்பதுபோல் பார்த்துவைத்தாள்.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே மணி, பைரவி சொன்னதை எல்லாம் வாங்கி வந்தவன், நண்பனை தயக்கமாய் ஒரு பார்வை பார்க்க, சிவாவோ “கார் ஒன்னு ரெடியாகிருச்சு.. கஸ்டமர்கிட்ட விட்டுட்டு, ட்ரையல் பார்த்துட்டு, பணம் வாங்கிட்டு வந்திடு…” என்றவன் அவனையும் அனுப்பிவிட, அங்கே பேரமைதி நிலவியது.
பைரவிக்கு இவர்கள் என்ன விசயமாய் பேசிட வந்தாலும், என்னிடம் சொல்லித்தானே வந்திருக்கவேண்டும் என்ற கோபம். அது அப்படியே அவள் முகத்தினில் தெரிய,
“இது நீங்களா பேசி வந்தீங்களா, இல்லை தினேஷ் அகிலா எல்லாம் கலந்து பேசி வந்தீங்களா?” என்று கேட்க,
“பையு நாங்க சொல்றதை கேளேன்…” என்று ஜான் ஆரம்பிக்கும் வேளையில், சிவா அவனிடம் ஜூஸ் டம்ளரை நீட்ட, வேண்டாம் என்று மறுக்கப் போனவனை, சிவாவின் பார்வையே வாங்கி பருக வைத்தது.
பைரவி அப்போதும் கூட சந்தோஷியிடம் “என் மனசு உங்க யாருக்குமே புரியலை தானே…” என்று கேட்க, கேட்ட அந்த நொடி அவளின் கண்கள் லேசாய் கலங்கவும் செய்ய,
“பைரவி.. எப்பவுமே நீ அழக் கூடாது. அழற அளவுக்கு நீ எந்த தப்பும் செய்யல…” என்ற சிவா, மற்ற இருவரையும் பார்த்து “சொல்லுங்க.. கல்யாண விஷயம் பேச வந்திருக்கீங்க.. அது என்ன மாதிரியான விஷயம்?” என்று கேட்க,
“அது.. அதுவந்து.. எங்களோட பேரன்ட்ஸ் எல்லாருக்குமே பைரவி அப்படின்னா ரொம்ப இஷ்டம்.. அவளை அவங்களோட சொந்த பொண்ணு போலத்தான் நினைக்கிறாங்க. அதுனால அவளுக்கு மேரேஜ் பண்ணனும்னு…” என்று சந்தோஷி பேச,
“அவளுக்கு பெரிய பெரிய இடத்துல இருந்து எல்லாம் அலையன்ஸ் வருது…” என்றான் ஜான்.
சிவாவிற்கு ‘பெரிய இடம்…’ என்கிற வார்த்தை தன் தன்மானத்தை சுடுவதாய் இருந்தாலும், நிதர்சனம் உணர்ந்து
“ஓ!” என்றவன் “அதுக்கு நான் என்ன செய்யணும்..?” என்றான்.
“ம்ம்ச் சிவா.. புரியாதது போல பேச வேணாம். எங்களுக்கு பைரவி வாழ்க்கை ரொம்பவே முக்கியம். அவளுக்கு நல்ல இடத்துல நல்லவிதமான லைப் முக்கியமா அவளுக்கு சூட் ஆகுறது மாதிரி அமைச்சுக் கொடுக்கணும். அவக்கிட்ட சொன்னா அவளுக்கு புரியலை. அதுதான் உங்களோட பேசணும்னு வந்தோம். நீங்க கொஞ்சம் விலகி நின்னா நல்லது…” என்று ஜான் நேரடியாகவே பேச,
“ஹ்ம்ம்…” என்று யோசனையாய் இழுத்த சிவா, பைரவியை ஒரு பார்வை பார்த்தவன், அவள் முகத்தினில் தெரியும் கோபத்தினைக் கண்டு
“இப்போ உங்க கண்ணு முன்னாடியே பைரவி கழுத்துல நான் தாலி கட்டினா என்ன செய்வீங்க?” என்று அசராமல் கேட்க, மற்ற மூவருமே அவனது கேள்வியில் அசந்து தான் போயினர்.
‘தாலியா?!’ என்று பைரவியின் இதழ்கள் முனுமுனுக்க, ஜானும் சந்தோஷியும் திகைத்துப் பார்க்க,
“என்ன பாக்குறீங்க.. தாலியை கைல ரெடியா வச்சிட்டு சுத்திட்டு இருக்கேன் அப்படின்னா…” என்று கேட்ட சிவா,
“மனசு வச்சுட்டா ஒரு செக்கன்ட் ஆகாது…” என்றுவிட்டு,
“ஆனா இப்போதைக்கு எங்களுக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்லை…” என்றான் நிறுத்தி நிதானமாக.
இது மேலும் அதிர்ச்சி கொடுத்தது அவர்களுக்கு. அதிலும் பைரவிக்கு கேட்கவே வேண்டாம்.
“சி.. சிவா…” என்று அதிர்ந்து விழிக்க,
“என்ன பைரவி..?” என்றான் அப்போது நிதானம் தவறாமல்.
செல்வியோடு கோபமாய் பேசியவன், இவர்களிடம் துளியும் தன் நிதானத்தை தவறவிடவில்லை.
“எ.. என்ன சொல்றீங்க?” என்று பைரவி கேட்க
“ஏன் என்னை லவ் பண்ணி உனக்கு போர் ஆகிருச்சா பைரவி? இப்போ என்ன அவசரம் கல்யாணம் பண்ண? இன்னும் நீயும் சரி நானும் சரி சாதிக்க வேண்டியது எத்தனையோ இருக்கு. ஜஸ்ட் வீடு கட்டிட்டா மட்டும் நான் முன்னேரினதா அர்த்தம் இல்லை. நானும் வாழ்கையில முன்னேறி போக வேண்டியது எத்தனையோ இருக்கு…“ என்றவன்,
“இப்போதைக்கு எங்க கல்யாணம் இல்லை. ஆனா கல்யாணம்னா அது எங்களுக்கு மட்டும் தான். அதாவது எனக்கும் பைரவிக்கும் தான்.. சோ வேற பேச்சு எதுவும் இருக்கா?” என்றிட, பைரவிக்கு என்ன சொல்வது என்பது தெரியவில்லை.
சற்று நேரத்திற்கு முன்னர் கூட யோசித்தாள் தான். சிவாவிடம் பேசி உடனே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று. அதுவும் அவன் தாலி கட்டுவேன் என்று சொன்னதுமே, அது நடந்துவிட்டால் கூட போதும் என்றிருந்தது. அவளை பொறுத்தவரையில் இந்த சூழல் தரும் கனத்தினை எல்லாம் அவளால் தாங்க முடியவில்லை.
சிவாவோடு திருமணம் என்ற ஒன்று நடந்துவிட்டால், எல்லாவிதமான பிரச்னையும் முடிந்துவிடும் என்று எண்ணினாள்.
திருமணம் கொடுக்கும், மாற்று சூழல்கள் எல்லாம் அவளது கவனத்தில் இல்லை. சிவா வீட்டினில் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு இல்லையெனில் வேறென்ன பெரிய பிரச்னை வந்துவிட போகிறது என்பது தான் அவளது கருத்து.
தன் நட்புக்கள் இப்போது ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், நிச்சயமாய் சிவாவோடு தான் நிறைவாய் வாழ்ந்தால் சிறிது நாட்கள் சென்றேனும் ஏற்றுக்கொள்வர் என்று எண்ணினாள்.
ஆனால் சிவாவோ இப்போதைக்கு திருமணம் இல்லை என்றதுமே, அவளுக்கு பக்கென்று இருந்தது. கால அவகாசம் நீண்டு கொண்டே போனால், நிச்சயம் தங்களை பிரிக்க தன் தோழர்கள் நிறைய வேலைகளை செய்வார்கள் என்று அவளுக்குத் தெரியாதா என்ன?!
ஆனால் சிவாவோ அதனை எல்லாம் நினைக்கவில்லை. என்ன நடந்தாலும் சரி யாராலும் தங்களுக்கு இடையில் வர முடியாது என்பதில் உறுதியாய் இருந்தான். அதற்காக தானும் இப்படியே இருந்திட முடியாது இல்லையா. சிறிதாவது தனது பொருளாதார தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணினான்.
வீடு கட்டிவிட்டால் மட்டும் போதுமா?!
“என்ன எல்லாம் அமைதியா இருக்கீங்க? நான் சொன்னதுல என்ன தப்பு? உங்களைப் பொருத்தவரைக்கும் நான் பைரவிக்கு ஈக்குவல் இல்லை. ம்ம் யாரா இருந்தாலும் இதைத்தான் சொல்வாங்க. ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் கூட இருக்கலாம். பணத்துக்காக இந்த காதலோ அப்படின்னு. எது எப்படி இருந்தாலும், நீங்க எல்லாருமே பைரவி முக்கியம். எனக்கு பைரவி தான் எல்லாமே. அதுனால நான் கண்டிப்பா ஒரு லெவலுக்கு வந்துட்டு தான் கல்யாணம் எல்லாம்…” என்றிட,
‘பைரவி தான் எல்லாமே…’ என்ற வார்த்தைகள், ஜான் மனதை கொஞ்சம் அசைத்துப் பார்க்க,
ஏற்கனவே அவன்பால் வெகுவால் ஈர்க்கப்பட்டவளோ “சிவா…” என்று சொல்லி, அவனை அணைத்துக்கொண்டாள்.
‘இப்படி யோசித்து.. இப்படி வார்த்தைகளில் அவள் மீதிருக்கும் காதலை வெளிப்படுத்துபவனுக்காக எத்தனை காலம் என்றாலும் காத்திருக்கலாம்…’ என்று தோன்ற, அவளையும் மீறித்தான் அந்த அணைப்பு அவனிடம் நிகழ, சிவாவும் அவளை தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
சந்தோஷிக்கும், ஜானுக்கும் இதற்குமேல் பேச என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. சிவாவிற்கும், பைரவிக்கும் இடையில் இருக்கும் வாழ்வு முறை வித்தியாசத்தை சொல்லித்தான் சிவாவிடம் பேசவேண்டும் என்று வந்தனர். ஆனால் இவர்களின் நெருக்கம் கண்டு அந்த பேச்சு இவர்களிடம் செல்லுபடியாகாது என்று எண்ணித்தான், பொருளாதார நிலையை சொல்ல வேண்டும் என்று ஜான் நினைத்தான்.
ஆனால் அதற்கும் சிவா ஒரு பதில் சொல்லிவிட, இதற்குமேல் அவனிடம் சட்டையை பிடித்தா சண்டை போட முடியும். என்ன சொல்வது என்பது தெரியாமல் ஜானும் சந்தோஷியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,
சிவாவும், பைரவியும் தனித்து இருக்க, இருவருமே தங்களின் அணைப்பை விலக்கவில்லை. அதிலும் பைரவியோ நிறைந்த மனதோடு, அவன் கண்களை, கண்ணீர் விழிகளோடு ஏறிட்டுப் பார்க்க, அவளது இதயத் துடிப்பை சிவாவால் நன்கு உணரமுடிந்தது.
“என்ன பைரவி?” என்று கேட்டவனின் குரலில் அத்தனை காதல்.
“வருத்தம் இருந்தது.. ஆனா நீங்க சொல்ற காரணம் சரிதானே.. உங்க இடத்துல இருந்தும் நான் யோசிக்கணும் இல்லையா..?” என்றவள், ஆதுரமாய் தன் விரல்கொண்டு அவன் கன்னம் வருட,
“நீ இப்படியெல்லாம் பண்ணா, நான் என்ன செய்றது பைரவி…” என்றவனின் கரம் மேலும் இறுக்க,
“என்ன செய்றதுன்னா? என்ன செய்வீங்க?” என்று கேட்டவள் மீண்டும் அவனது கண்களைக் காண, சிவாவின் கண்களோ இப்போது வேறு பாஷை பேச, பைரவி அவன் முகம் தவிர வேறெதுவும் காணவில்லை.
யாருமில்லாத தனிமையும், இந்த நெருக்கமும் அவளிடமும் சிறிது மாற்றத்தை கொடுக்க, இதயம் படபடவென அடித்துக்கொள்ள “எ.. என்ன செய்வீங்க?” என்றாள் கொஞ்சம் திக்கி.
“என்ன செய்யணும்..?” என்று கேட்டவனின் முகம் வெகு அருகினில் தெரிவது போலிருக்க, பைரவி வேகமாய் கண்களை மூடிக்கொண்டாள்.
இருவருக்குமே என்ன நிகழப் போகிறது என்பது நன்கு தெரிந்தது. முத்தமில்லாத காதல் என்பது எங்கே உள்ளது?!
முத்தமில்லாக் காதல் பெரும் பாவமில்லையா?!
சிவாவின் கரம் கொடுத்த இறுக்கமும், அவன் நெருக்கம் கொடுத்த கிறக்கமும் அவளது படபடப்பை மேலும் அதிகரிக்கச் செய்ய, சிவாவிற்கோ பைரவியின் இந்த நிலையே அவனை மேலும் பித்தமடையச் செய்தது.
வெகுவாய் அவள் முகம் நோக்கி நெருங்கியவன், ஒருமுறை மீண்டும் அவள் முகம் காண, கண்கள் மூடி, நடுங்கும் இதழ்களோடு தனது ஸ்பரிசத்திற்காக அவள் காத்திருப்பது கண்டு, மேலும் அவன் தமாதித்தால் தானே தவறு.