சில்லென புது மழைத்துளி!

18

சுபியின் புகுந்த வீட்டிலிருந்து யாரும் போனில் கூட சுபி வந்த செய்தியை சொல்லவில்லை. மாசிலாமணியிடம். அவர்களுக்கு வருத்தம். 

சுபியின் வீட்டில் சுபிக்கு அழைக்க, அவளோ.. அவர்களின் அழைப்பினை ஏற்கவில்லை. கிளினிக்’கு அழைத்து சங்கீதா கேட்க.. “சுபி தங்களுக்கும் அழைக்கவில்லை.. தாங்கள் அழைத்தாலும் எடுக்கவில்லை..” என்றனர்.

சுபியின் அன்னை தந்தைக்கு பயமானது.. தந்தை, அவள் வேலை  பார்க்கும் மருத்துவமனைக்கு சென்று பார்த்து வந்தார்.. அங்கே அவர்களோ ‘மதியமே கிளம்பிவிட்டாள்’ என்றனர். அதன்பின் வினுவிற்கு சங்கீதா அழைத்து கேட்க்க.. சுபி வந்தது.. பிள்ளையை கூட்டி சென்றது அப்போதுதான் தெரிந்தது. 

சுபியின் அன்னை தந்தை இருவருக்கும் சந்தோஷம். ‘பேரனை கூட்டி வந்துவிட்டாளா.. சொல்லியிருக்கலாம்’ என எண்ணிக் கொண்டனர். மாசிலாமணி “நல்லவேளை.. பேரன் வந்துட்டான்..” என நிம்மதியாக சொல்ல.. கார்த்திக் முகம் வாடி போனது.

அதை கண்ட சங்கீதா “என்ன ப்பா, அவசரம், அதான் நாளை போய் பேசிக்கலாம்ன்னு சொல்லியிருந்தாரில்ல” என்றாள்.

தந்தைக்கு என்ன சொல்லுவதென புரியாமல் அமைதியானார். சுபியின் அன்னை “சுபிக்கு, விசாகனை விட்டு இருக்க முடியாதுடா.. நமக்கே தெரியுமே.. அதான் போய் கூட்டிட்டு வந்திட்டா போல.. அதனால் என்ன.. நாம போய் பேசிக்கலாம்” என்றார் தன்மையாக.

கார்த்திக்கு மனையாளின் பேச்சில் தன் ஈகோ தூண்டப்பட.. அதுவே சரியென பட.. சட்டென மாமியாரின் பேச்சில் இடை புகுந்து “அப்போ.. என் பேச்சிற்கு என்ன மரியாதை அத்தை, அப்பாவுடைய அண்ணன் அவர்.. இப்படி சுபி செய்தால் எப்படி? இது சரியில்ல அத்தை” என்றார்.

சுபியின் தந்தை.. “இல்ல மாப்பிள்ளை” என பேசவர.. அவரின் மனையாள் இடைபுகுந்து “மாப்பிள்ளை.. நீங்க அப்படி பார்க்காதீங்க, இது அவள் மாமனார் மகன் பற்றிய விஷயம்.. அதனால், நீங்க என்ன பண்ணுவீங்க” என்றார் சமதானமாக.

கார்த்திக் தந்தை “அப்போ.. அண்ணன் இவன்கிட்ட எதுக்கு வந்து சொல்லணும்.. என் பையனுக்கு இது தேவைதான்” என்றார்.

மாசிலாமணி “இல்ல சம்பந்தி, அப்படி இல்லை.. நீங்க அப்படி சொல்லாதீங்க.. இது சின்ன பிள்ளை விஷயம். சுபிக்கு பெரிய மாப்பிள்ளை மேல் மரியாதை ஜாஸ்தி. இது அவளால் பையனை பிரிய முடியாதுல்ல, அதான். நான் சுபிகிட்ட பேசுகிறேன்.. உங்க அண்ணனிடமும் பேசுகிறேன். விழாவின் வேலைகள் நிறைய இருக்கு.. அதை பார்க்கலாம். நாங்க நாளைக்கு வரோம்.. சம்பந்தி.. மாப்பிள்ளை போயிட்டு வரேன் சம்பந்தியம்மா வறோம்ங்க” என சொல்லி கிளம்பினர்.

சங்கீதாவிற்கும் அவள் கணவருக்கும் கோவம்.

சுபி பேரனை பார்த்ததும்தான் பெரியவர்கள் இருவருக்கும் சந்தோஷம்.

மறுநாள் தந்தை சுபியிடம் “அங்கே, உன் அக்கா மாமாவை ஒருதரம் போய் பார்த்துட்டு வந்திடும்மா” என்றார், நேற்று நடந்தவைகளை சொல்லி.

சுபிக்கு என்னமோ அங்கே செல்ல மனதில்லை. ஆனால், தந்தை சொன்னதற்காக மதியமாக, சங்கீதா வீடு சென்றாள். அவளின் அன்னை தந்தை இங்கே இல்லை இப்போது, சங்கீதா தங்கையை திட்டிக் கொண்டிருந்தாள். கேள்விகளாகத்தான் இருத்தது.. “எதுக்கு சொல்லாமல் போன.. மாமாதான் சொன்னாங்கல்ல.. இன்று போய் பேசிக்கலாம்ன்னு.. அவங்களை நீ மதிக்கலையா ஏன் டி இப்படி பண்ற.. அவர் உன் நல்லதுக்குதானே பார்க்கிறார்” என்றாள்.

சுபி இப்போதுதான் வாய் திறந்தாள் “அப்போ என் அனுமதி இல்லாமல் நீயும் மாமாவும் விசாவை அனுப்பலாமா?” என்றாள் கோவம் இல்லாதா சாந்தமான குரலில்.

ஆனால், அந்த குரல்தான் சங்கீதாவை இன்னமும் பேச வைத்தது.. “அதனால், நீ போய்ட்ட சொல்லாமல்.. உன் இஷ்ட்டத்துக்கு எல்லாம் செய்யுற.. நாங்க உனக்காக பார்த்து பார்த்து செய்வதெல்லாம் வேஸ்ட், நீ மதிப்பதேயில்லை” என நிறைய பேச்சுகள்.. ஏனோ சுபிக்கு அழுகை வந்தாலும் காட்டவில்லை.. அமைதியாக கேட்டுக் கொண்டாள்.

கார்த்திக்கு கோவம் இருந்தது. ஆனால், சுபி வந்தது முதல்.. தன் மனையாள் முன் அமைதியாக இருக்கவும்.. அவருக்கே ஒருமாதிரி ஆனது. ‘வீராவை திருமணம் செய்ய முடியாது’ என சொல்லிவிட்டாள்.. ‘பெரியப்பாவும் எத்தனை நாள் இப்படி வற்புறுத்த முடியும்.. இது அவளின் முடிவு..’ என தன் மாமனார் சொன்னதை ஒத்து போனார். கார்த்தி “சங்கீதா, கொஞ்சம் அவளை விடு. அவளும் பாவம்.. இதை விட்டுட்டு.. பெரியப்பா என்னிடம் போன் செய்து ஏதும் சொல்லவில்லை. நீ எதுக்கு பெருசாக்குற” என ஒரு சத்தம் போட்டார்.

சுபி பாப்பாவை பார்த்துவிட்டு.. கிளம்பிவிட்டாள். விசாகனை அழைத்துவரவில்லை.

மறுநாள் கார்த்திக் சங்கீதா இருவரும் நேரில் சென்று.. பிள்ளையின் பெயர் சூட்டும் விழாவிற்கு.. சுபியின் புகுந்த வீட்டினை அழைத்தனர். அவர்களோடு மாசிலாமணி தம்பதியும் சென்றிருந்தனர். அப்போது மாமனார் ஏதும் பேசவில்லை.. அமைதியாகவே அழைப்பினை ஏற்றார்.

பத்துநாட்கள் சென்று சங்கீதா கார்த்திக் பிள்ளைக்கு பெயர் சூட்டும் வைபவம் இனிதாக நடந்தது.

ஹோட்டல் ஹால் ஒன்றில் விழா சிறப்பாக நடந்தது.. அனன்யா என பிள்ளைக்கு பெயர் சூட்டினர். 

உறவுகள் எல்லோரும் வந்திருந்தனர்.. அக்கம் பக்கம் தெரிந்தவர்கள் என எல்லோரும் வந்திருந்தனர். சாரதா விசாலாட்சி அருணகிரி என கருணாவை தவிர மற்ற எல்லோரும் வந்திருந்தனர். குரு விசாகன் இருவரும் சேர்ந்தே சுற்றினர். 

சுபியின் மாமனார் ஸ்ரீ வினு பிள்ளைகள் என எல்லோரும் குடும்பமாக வந்திருந்தனர். சுபி, வாங்க மாமா என கேட்டுவிட்டு அமைதியாகிவிட்டாள்.. அவரோடு அதிகம் பேசவில்லை. 

சுபியும் என்னமோ அதிக நேரம் தங்கவில்லை.. எல்லோரும் சுபியின் பேச்சினை தொடங்கவும்.. பெண்ணவள் கிளம்பிவிட்டாள்.. விசாகனோடு கிளினிக்’கு. 

ஆனால், அவளின் மாமனார் வீரா பற்றி உறவுகளிடம்.. வேண்டுமென்றே சொல்லிக் கொண்டிருந்தார் போல. அதான் மாமனாரே சொல்லுகிறாரே.. ஏன் இந்த பெண் வீராவை கட்டிக் கொண்டால் என்ன.. யார் கிடைப்பார் இதுபோல.. என பேச்சுகள் வந்தது. சுபி அதை கேட்க அங்கே இல்லை.

கார்த்திக்குதான் பயம்.. எங்கே பெரியப்பா வராமல் போய்விடுவாரோ என. ஆனால், வந்தபின்.. அவரின் பேச்சினை பார்த்தும் பயம்.. சுபியை எப்படி சமாளிப்பது என. நல்லவேளை.. சுபி கிளம்பிவிட்டாள்.. எனத்தான் தோன்றியது. எப்படியோ விழா நல்லபடியாக முடிந்தது.

கருணா வெளிநாடு சென்றிருந்தான் நண்பர்களோடு. எதோ அவர்களின் தொழில்முறையில் வருடம் ஒருமுறை இப்படி வெளிநாட்டு சுற்றுலா அமையும். கருணா செல்வதுண்டு.. அங்கே உள்ள ஹோட்டல் நடைமுறைகள் பற்றி தெரிந்துக் கொள்ள என.. பெயர் செய்துக் கொண்டு.. ஊர் சுற்றி பார்த்துவிட்டு வருவர். 

கடந்த ஐந்து வருடங்களாக எங்கும் செல்லவில்லை.. அவனின் உடல்நலம், பின் நடந்த நிகழ்வுகள்.. என எங்கும் கருணா வெளியே செல்லவேயில்லை. இந்தமுறை கிளம்பிவிட்டான்.

முதலில் சுபியிடம்தான் அழைத்து சொன்னான்.. அதற்குதான் அன்று அழைத்தான் அப்போதுதான் விசாகன் பிரச்சனை. பின்னொருநாள் அழைத்தான்.. ‘சுற்றுலா செல்கிறேன்.. வருவதற்குள் ஒரு நல்ல செய்தியை எதிர்பார்க்கிறேன்’ என சொல்லித்தான் சென்றான். 

அஹ, என்ன நல்ல செய்தி.. என இவளும் கேட்கவில்லை.. அவனும் சொல்லிக் கொள்ளவில்லை. சுபிக்கு என்னமோ எரிச்சல் வரவில்லை.. ‘இவன் இப்படிதான் ஏதும் சொல்லமாட்டான்.. இப்படி என் எதிரிலேயே நின்றுக் கொண்டிருப்பான்.. நானாக என்ன சொல்வது.. இதெல்லாம் ஒத்துவராத நிகழ்வுகள்..’ என எண்ணிக் கொண்டு சிரித்துக் கொண்டாள்.

ஆனால், குரு.. இந்த பத்துநாட்களில் சுபிக்கு நெருக்கமானான். தன் அத்தை வீட்டிற்கு செல்லவில்லை. விசாகனோடு இருக்கிறேன் என வரும் குரு.. சுபியைதான் அதிகநேரம் கவனித்தான். சுபி “என்ன குரு” என்பாள்.

குரு ஒன்றுமில்லை என தலையசைப்பான். சுபி அவனின் சிகை கலைத்திடுவாள். ஆனால், அந்த பிள்ளையின் கண்களில் தெரியும் ஏக்கம்.. கரணை.. நினைவில் கொண்டு வந்து சேர்க்கும் சுபிக்கு. ‘ஆண்டவா.. இதென்ன.. குருவிற்கு ஏதேனும் புரிந்திருக்குமோ’ எனவும் தோன்றும் சிலநேரம். சுபிக்கு, அடிக்கடி கரணின் நினைவு.

குரு, பொறுப்பாக இருந்தான். விசாகனை உரிமையாகவே பார்த்துக் கொண்டான். சுபி குருவை நம்பி.. விசாகனை வீட்டில் விட்டு செல்லும் அளவு குரு, விசாகனை பார்த்துக் கொண்டான்.