இதோ ஜீவன் ஸ்னேஹாவின் திருமணம் நாளை காலை, முதல் நாள் மாலை ரிசப்ஷன், இதுவரை ஸ்னேஹா அவளின் அக்கா, அவளின் அப்பா அம்மா யாரிடமும் சைந்தவியை பற்றி சொல்லவில்லை.
அவளுக்கு ஜீவனுடன் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும். அவளுக்கு ஜீவனை அவ்வளவு பிடித்தம். வீட்டில் பார்த்து வைத்த திருமணம் தான். ஆனால் ஜீவனோடான திருமணத்தில் பிரச்சனைகள் எழுவதை விரும்பவில்லை.
நிச்சயம் காஞ்சனாவிற்கு தெரிந்தால் சினிமாவில் வரும் காஞ்சனா போல மாற வாய்ப்புகள் அதிகம் என்று தெரியும். அதனால் அவரவர் பிரச்சனைகள் அவரவர் பார்த்து கொள்ளட்டும் என்று நினைத்து இவள் வாய் திறக்கவில்லை.
ப்ரித்வி மாமாவே சொல்லாத போது எனக்கென்ன என்று இருந்துவிட்டாள்.
ரிசப்ஷன் மிக விமரிசையாக நடந்து கொண்டிருக்க, அப்போது தான் விஜயனும் சைந்தவியும் உள் நுழைந்தனர்.
ப்ரித்வி எடுத்துக் கொடுத்த புடவை மற்றும் ஒரு மெல்லிய வைர நகை செட்டில் ஜொலித்தாள் சைந்தவி.
“உடை நகை வெச்சி மனுஷங்களை எடை போடக்கூடாதுன்றது வேற, ஆனா உறவுகளுக்கு மத்தியில என்னோட தங்கை வரும் போது யாருக்கும் குறைவா தெரியக்கூடாது. நிச்சயமா நான் குடுக்கற நகை புடவையில தான் அவ வரணும், நீ தடுக்க கூடாது” என்று விஜயனிடம் சண்டையிட்டிருந்தான்.
“நான் ஒன்னுமே சொல்லலையே இவன் ஏன்டா என்கூட சண்டை போட்டுட்டு இருக்கான்” என்று விஜயன் பாவமாய் அமர்ந்திருக்க…
“டேய் அண்ணா, அவனை ஏன் தொந்தரவு பண்ற” என்றாள் சைந்தவி.
“அவனை தொந்தரவு பண்ணினா தானே. நீ நான் சொல்றதை கேட்ப அதான்” என்று ப்ரித்வி சொல்ல…
விஜயன் முகத்தில் ஒரு விரிந்த புன்னகை.
“அவனை விடு, நீ செய்யறது அப்பாவும் அம்மாவும் விரும்பமாட்டாங்க”
“அவங்க பணத்துல ஒன்னும் நான் செய்யலை, இது என் பணம் அப்புறம் வாடகை பணம் எல்லாம் என் அக்கௌன்ட்ல தூங்குது, அதெல்லாம் பரம்பரை சொத்து உனக்கும் பங்கு இருக்கு… அப்புறம் நான் கேட்டா ஏன் எதுக்குன்னு கேட்காம அப்பா பணம் கொடுப்பாங்க” என்று ப்ரித்வி டென்ஷனாக பேசினான்.
“புரிஞ்சிக்கோ ப்ரித்வி காஞ்சனா பிரச்சனை பண்ணுவா”
“இதோ பாரு இவ்வளவு நாள் நீ விஜயனோட இல்லை. அதனால அவ பேசறதுக்கு எல்லாம் அமைதியா இருந்தேன். இனியும் பேசினா, கிளம்பு என் வாழ்க்கையில இருந்து, தேவையேயில்லை நீன்னு சொல்லிடுவேன்” என்று இன்னும் கோபமாகப் பேச…
“சரி நீ என்ன சொன்னாலும் நான் கேட்கறேன். டென்ஷன் ஆகாதே” என்று ப்ரித்வியை வெகுவாக சமாதானம் செய்தாள்.
விலை அதிகம், குறைவு என்றில்லாமல் அவளுக்கு பிடித்ததை தான் தேர்வு செய்தாள். சிலது விலை அதிகம் சிலது குறைவு.
ப்ரித்வி அவளுக்குப் பார்த்துப் பார்த்து செய்ய, ப்ரித்வி விஜயனுக்கு எடுக்க இருந்ததை மறுத்து, “நான் பார்த்துக்குவேன்” என்று சொல்லி அவனுக்கு வேண்டிய உடைகள் அவள் தான் தேர்வு செய்தால், பணமும் கொடுத்தாள்.
“இவ்வளவு நகை வாங்குகிறோமே” என்று விஜயனுக்கும் சங்கிலி மோதிரம் கை காப்பு என்று ப்ரித்வி எடுக்க முற்பட…
“உன்கிட்ட வாங்கிக்க கூடாதுன்னு எண்ணமில்லை ப்ரித்வி, எனக்கு நகை போட பிடிக்காது” என்று ஸ்திரமாய் விஜயன் மறுத்துவிட்டான்.
“எஸ் அண்ணா, எனக்கும் பசங்க நகை போட்டா பிடிக்காது” என்று சைந்தவியும் ஒத்து ஊத,
“ஏதோ இதுவரை சரி என்றார்களே” என்று ப்ரித்வியும் விட்டுவிட்டான்.
வீடுமே அப்படித்தான், மாற்ற வைத்து, பொருட்கள் வாங்கி, என எல்லாம் செய்தான். “புது வீடு வாங்கலாமா?” என்று வேறு சைந்தவியிடம் கேள்வி வேறு.
“இப்போ வேண்டாம், கொஞ்சம் நாள் போகட்டும்” என்று மறுத்துவிட்டாள். ப்ரித்விக்கு புதிதாக நிறைய கோபம் வருகிறது என்று உணர்ந்திருந்தாள். தன்னுடைய மறுப்பு வானுக்கும் பூமிக்கும் அவனை குத்திக்க வைக்கும் வாய்ப்பு இருப்பதால் இந்த பதிலை சொல்லி வைத்தாள்.
“சரி, கொஞ்சம் நாள் தான்” என்று சொல்லி வைத்திருந்தான்.
“இதோ அவர்கள் உள் நுழைய… கேமரா அவர்கள் நுழைவதை ஃபோகஸ் செய்ய. அழகான ஜோடி அனைவரின் கண்ணையும் கவர்ந்தனர். அவர்கள் உள் நுழைவதை பார்த்ததுமே அவர்களையே சில நிமிடங்களுக்கு ஃபோகஸ் செய்ய ஜீவனின் அப்பா தான் சொன்னார்.
அங்கிருந்த டீ வீ யில் ப்ரித்வி அவர்களைப் பார்த்ததும், அருகில் செல்ல, அவனின் கையில் இருந்த ரித்திக்கா நொடி நேரமும் தாமதிக்காமல் விஜயனிடம் தாவியது.
இது எல்லாம் டீ வீ யில் தெரிய, ஸ்கந்தநாதனுக்கும் மேகலாவிற்கும் அதிர்ச்சி, பார்த்தது பார்த்தபடி இருந்தனர். மகளை அங்கே எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு சைந்தவியை தெரிந்தது. அழகான யுவதியாய் பரிமளித்தாளும் அவளின் முகத்தில் பெரிய மாற்றமில்லை. விஜயனை அவர்களுக்கு தெரியவேயில்லை.