அத்தியாயம் 7

“கடைசியா யோசிச்சு சொல்லு, இரண்டு நாள் டைம் கூட எடுத்துக்கோ” அவளின் நிராகரிப்பை தாங்காதவனாய் மீண்டும் கேட்டான் விக்ரா.

“அதுக்கு அவசியமே இல்லை” இரண்டு நொடி கூட யோசியாதவளாய் முகத்திலடித்தாற்ப்போல் கூறி முறைக்க, அவன் விழிகளோடு மோதிக்கொண்டது இவள் விழிகள் படு வேகமாய்.

“அப்போ நான் வேண்டாமா?” விழிகளோடு அவன் உதடுகளும் கேட்டது.

“சொல்லு நான் வேணாமா?” மீண்டுமாய் கேட்டவனிடம்.

ஈகோ தான் தலைதூக்கியது அவளுள், நீ சொல்றதையெல்லாம் கேட்டு கேட்டுத்தான் இந்த நிலையில் இருக்கிறேன். இனியும் இவன் பேச்சை கேட்பதா? ம்ஹூம், ஏமாந்ததெல்லாமே போதும்!  என நினைத்து அமைதியாய் நிற்க

“இந்த பிரச்சனையை இன்னைக்கு சரிபண்ணலைன்னா.. இனி என்னைக்குமே சரிபண்ண முடியாது, யோசி, யோசிச்சு சொல்லு” இதுவரை இல்லாத விக்ராவின் ஆழ்ந்த, குரல் ஒலித்தது அவள் காதினுள்.

வேண்டாம் என மறுத்தும் ‘யோசி யோசி’ என மூளைசலவை செய்பவனின் மேல் ஆத்திரமே மிஞ்ச, பொறுமையிழந்தாள் லாவன்யா.

“நீங்க யாரு.. உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். நீங்க வந்து சரி பண்ற அளவுக்கு நமக்குள்ள ஒன்னுமே நடக்கலை.  இதில் நீங்க என்னத்தை சரி பண்ணனும் பண்ணனும்னு ரீப்பீட் மோட்ல சொல்லிட்டே இருக்கீங்க”

“இன்னும் நீங்க இங்கே இருக்குறது வேஸ்ட்.. நாச்சியத்தையோட மகனா இருக்குறதால தான் வீட்டுக்குள்ள உக்கார வச்சு பேசிட்டு இருக்கேன்.. இல்லைன்னா நீங்க பார்த்த வேலைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல உக்கார வச்சுருப்பேன், இரண்டு நாளில்லை, இரண்டு வருஷம், டைம் கொடுத்தாலும் இந்த லாவன்யாவுக்கு விக்ரான்னு ஒருத்தன் வேண்டவே வேண்டாம். புரிஞ்சதா, இல்லை இன்னும் புரியவைக்கனுமா” என கேட்டவள், அவனின் அடிவாங்கிய முகம் கண்டு, வாசலின் பக்கமாய் இவள் பார்வை நகர்ந்து ‘புரிஞ்சிடுச்சுல்ல, அப்போ நீங்க கிளம்பலாம்’ என பார்வையாலேயே சொல்ல இப்போது வில்லியாய் மாறி நின்றது என்னவோ லாவன்யா தான்.

முகம் கறுத்து போய், இறுக்கமாய் வலியோடு மூடிக்கொண்டது இவன் விழிகள். இரண்டொரு நொடிகளின் பின் வலியோடு திறந்த விழிகள் ஓரிரு நொடிகள் அழுத்தமாய் அவளை பார்த்தபடியே பின்புறமாகவே எட்டெடுத்து வைத்து, பட்டென திரும்பி வேகமாய் அங்கிருந்து நகர்ந்தது இவன் கால்கள்.

இவன் சென்றதும் தான் தாமதம், உடல் நிற்கவே முடியாது என்பதை போல சரிந்து சோபாவின் முடுக்கில் அடங்க, கண்கள் தாமகவே மூடிகொள்ள, விழியோரம் வழிந்தோடியது கண்ணீர், ஏன் எதற்கு என தெரியாமல்.

தன் வீடுவந்து சேர்ந்தவனோ அறைக்குள் முடங்கி, ஆங்காரமாய் கத்தி தீர்த்தான். கையில் கிடைத்த பொருளையெல்லாம் தரையில் அடித்து உடைத்தான். கோபம் கோபம் கோபம் மட்டுமே இறுதியாய் உறைந்து நின்றது.

அவளுக்கு நகமும் சதையுமாய் இருந்த தன்னை நண்பனாய் ஏற்றவள், கணவனாய் ஏற்க மறுக்கிறாள். ஏன்? ஏன்? எனும் கேள்விகள் விஸ்வரூபம் எடுக்க கோபமும் விஸ்வரூபம் எடுத்தது.

அவள் வேண்டாம் என சொல்லுமளவிற்கு அப்படி எதில் குறைந்து போனேன் நான் என மனதினுள் கேட்டவனுக்கு, எதிரில் இருந்த கண்ணாடியில் தனது முழு உருவமும் தெரிய பொங்கி வழிந்த முன்னுச்சி முடியில் இருந்து சிறிதும் அழுக்கு படியா பாதம் வரை பயணித்த பார்வை, இளக்கறமாய் மாறி

 “அழகா இருந்து என்ன பிரயோஜனம்? இவ்வளவு சம்பாத்யம் இருந்து என்ன பிரயோஜனம்? பிடிக்கலைல, உன்னை அவளுக்கு பிடிக்கலைல!” ஓங்கி குத்த நொறுங்கியது கண்ணாடி மட்டுமல்ல அவனது கையும் தான். ஆத்திரத்தில் எடுத்த முடிவில் காயம் கண்டது அவன் மனம் மட்டுமல்ல, அவன் கையும் தான்.

விரல்களில் ஆங்காங்கே கண்ணாடி துண்டுகள் இறங்கி, இரத்தத்தை வெளியேற்றி வைக்க, அதை குரூரமாய் பார்த்தபடி படர்ந்தது ஒரு விரக்தி புன்னகை அவன் இதழ்களில்.

கைகளின் வலியில் மனதின் வலி குறைந்ததோ! உடல் அப்படியே கட்டிலில் சாய விட்டத்தை வெறித்தது அவன் விழிகள், “லாவாகிட்ட எந்த இடத்தில் தோற்று போனோம்?” அவளை அவன் மறக்க நினைக்க, அவன் மனமோ விடாமல் அவளையே நினைத்து கொண்டிருந்தது.

பெரிய பெரிய கம்பெனிகளுக்கெல்லாம் நிதி ஆலோசகராய் இருந்து, திவாலாகும் நிலையில் இருந்து கூட அந்த கம்பெனிகளை மீட்டு கொண்டுவந்திருக்கிறான். அத்தனை கூர்புத்தியுடையவனுக்கு அந்த புத்தி லாவாவின் விசயத்தில் வேலைசெய்யவில்லை என தான் கூற வேண்டும். மனமும் புத்தியும் பலமாய் சண்டையிட்டு கொண்டது.

‘பொறுமை விக்ரா.. இது அவளா உனக்கு கொடுத்த அவமானம் இல்லை, அசிங்கம் இல்லை, நீயா தேடிக்கிட்டது.

அப்போ எல்லாத்துக்கும் காரணம் நானா?

ஆமா நீ தான்.. அவளை உக்கார வச்சு பேசி இருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது தானே

பேசி புரியவைக்க தான் பிளான் பண்ணேன்.. ஆனால் ஆனால்..

ஆனால் என்ன ஆனால்? பின்ன எதுக்கு தாலி கட்டின..

ஏதோ புத்தியில்லாமல் பண்ணிட்டேன்.

ஓ.. புத்தியில்லாமலேயே தங்கத்துல தாலி ரெடி பண்ற அளவுக்கு தயாரா இருந்தியோ?

அது அவளை மிரட்டடுறதுக்காக.. ரெடி பண்ணின தாலி

மிரட்டறதுக்கு மஞ்சள் கட்டின கயிறே போதுமே தங்கத்துல தாலி எதுக்கு?

‘சரி.. காதலிச்சுட்டேன். அன்னைக்கு விஜய் நாளைக்கு இன்னொருத்தன். எத்தனை பேரை நானும் சமாளிக்குறது அதான் கிடைத்த கேப்பில் கல்யாணமே  பண்ணிட்டேன், ஏதோ புத்தியில்லாமல் பண்ணிட்டேன் விடு, விட்டு தொலை’ உனக்கு அவளே தேவலை.. இந்த கேள்வி கேட்குற!

ம், அப்படிவா வழிக்கு, புத்தியில்லாமல் பண்ணிட்டேன் தானே! இப்போவும் அந்த புத்தியில்லைன்னே நினைச்சுக்கோ! அவளுக்கு உன்னோட அக்கரை புரியலை, அன்பு புரியலை, பிறகும் ஏன் அவளை பிடிச்சு வைக்கிற! போறேன் போறேன்னு நிக்கிறவளை பிடிச்சு வச்சு என்னாக போகுது? விட்டுடு.

அதுக்கு பிறகு அவளோட ப்யூட்சர்னு ஒன்னு இருக்கே..

அதை அவளே பார்த்துப்பா.. ஒரு வேளை அவளால் பார்க்க முடியாத பட்சத்துல உன்கிட்ட தான் வருவா.. ஏன்னா.. அவளோட அம்மாவை விட உன்னை தான் அதிகம் தோடுவா! நாடுவா? வேற எங்க போக போறா? வருவா அதுவரை காத்திருக்க தான் வேணும்.

‘காத்திருக்கனுமா? நானா? நோ.. நெவர்.. நானே வரவைப்பேன், என்கிட்ட வரவைப்பேன்’ சீறிக்கொண்டு வெளிவந்தான் பழைய விக்ரபாண்டி.

ஓஹோ.. ஒருவேளை அப்படி ஒரு வாய்ப்பே வரலைன்னா?

நானே உருவாக்குவேன்.. ஆமாம் உருவாக்குவேன்!

‘ம்ஹூம், நீ அவகிட்ட செருப்படி வாங்காமல் திருந்த மாட்ட, அவளை விடு, நீ பண்ணின வேலை, சமரசுக்கு தெரிஞ்சா என்னாவன்னு நினைச்சு பார்த்தியா? மவனே சூஸ் புழிஞ்சிடுவாறு!’

‘சூஸா.. சுடுகாட்டுல உயிரோட எரிச்சுடுவார்டா வெண்ண’

‘ம்.. தெரிதுல்ல… அப்போ மூடிட்டு அமைதியா இரு’

‘அமைதியா இருந்தா லாவா எப்படி எனக்கு கிடைப்பா’

‘ஏலேய், திரும்பவும் முதல்ல இருந்தா..?’ அதிர்ச்சியுடன் சோர்வடைந்தது அவன் மனம், ‘அவகிட்ட செருப்படியும், உங்கப்பன்கிட்ட இருந்து சுடுகாடும் கன்பார்ம்டா! அப்புறம்,  உன்கிட்ட பேசி பேசி நான் ரொம்ப டயர்ட் ஆகிட்டேன். உனக்கு பத்து நாள் லீவு, எனக்கு இருபது நாள் லீவு.. லீவு முடிஞ்ச பிறகும் நீ உயிரோட இருந்தா மீட்பண்ணலாம், வரேண்டா விக்ரவாண்டி’

‘இவனுக்கு மனசாட்சியா இருக்குறதுக்கு மானமுள்ளவனுக்கு மயிரா இருந்துட்டு போயிடலாம். லாவா லாவான்னு மனசாட்சிய சாவடிக்காண்டா.. வெக்கங்கெட்ட பய.. த்தூ’ விக்ராவிடமிருந்து பிய்த்துபிடுங்கிகொண்டு ஓடிவிட்டது அவன் மனசாட்சி.

———–

மாலையில் தான் கண் விழித்தான். விழிக்க வைத்தது தமையன்கள். “என்னடா கையெல்லாம் ரத்தம்? ரூமே அலங்கோலமா கிடக்கு” கேட்ட மூவருக்குமே பதில் சொல்லாமல் குப்புற படுத்து கொண்டான் விக்ரா. வீட்டை ஒழுங்கு படுத்தி, தெரிந்த வகையில் கையில் கட்டு போட்டு, காலையில் இருந்து உண்ணாமல் இருந்தவனை சாப்பிட வைத்து வலி மாத்திரை ஒன்றையும் கொடுத்து விட்டு தான் அங்கிருந்து சென்றனர்.

ஆரவாரத்துடன் ஜே ஜே வென குழுமிருந்தது அந்த பண்ணை வீட்டின் மொட்டை மாடி. மற்றவர்களின் கண்ணை உறுத்ததாதிருக்க மிதமான வெளிச்சத்தில் கொண்டாட்டத்திற்கு தயாராய் இருந்தது அந்த சூழல்.

விஜய் தான் “பசங்க பார்ட்டி கேக்கானுங்கணோவ் நேத்தே கொடுக்க வேண்டியது. அப்பா முடியாதுன்னுட்டார். இன்னைக்குமே அவருக்கு தெரியாம தான் பார்ட்டி கொடுக்குறேன்னு பசங்க கிட்ட சொல்லிட்டேன் எப்படியாவது ஊருக்கு வெளில்ல இருக்குற பண்ணை வீட்டை அரேன்ஜ் பண்ணிடு.. ஒரு நாளைக்கு, ஒரே ஒரு நாளைக்கு. ஊருக்குள்ளன்னா பிரச்சனை ஆகிடும். ப்ளீஸ்ண்ணாவ்.. கொஞ்சம் உன் தம்பிக்காக பார்த்து பண்ணு” வீராவிடம் கெஞ்சி கேட்டு பண்ணை வீட்டை வாங்கி இருந்தான் பார்ட்டிக்காக.

கூடியிருந்த அத்தனை இளவட்டங்களும் ஆரவாரமாய் இருக்க, அதில் தன் சகோதரர்களை தேடிக்கொண்டிருந்தது விக்ராவின் விழிகள்.

வீட்டில் லாவாவின் நினைப்பில் உருகிகரைந்து கொண்டிருந்தவனுக்கு போன் அடித்து, பண்ணை வீட்டிற்கு வா என வீரா அழைக்க, மறுத்தவனை போனிலேயே சமாதானபடுத்தி. வரவழைத்து விட்டனர் சங்கரும் செல்வமும். நம்பளை வர சொல்லிட்டு இவனுக எங்க போய் தொலைஞ்சானுங்க என பாண்டிகளை தேடிக்கொண்டிருந்தான் விக்ரா.

அந்நேரம் படபடவென பாட்டில் பெட்டிகள் பிரிக்கபட, அதை பறிக்க மற்றவர்கள் வரும் முன், “லேய்.. பொறுங்கவே.. என்ன அவசரம்” என வரிசை கட்டி வந்து நின்றனர் லகுட பாண்டிகள், அவர்களை பார்த்து அத்தனை பேரும் புருவம் சுருக்கிட

லகுடபாண்டிகள் மூவரும் நான் நான்.. என போட்டி போட்டுக்கொண்டு பெட்டிகளை பிரித்து கைக்கொன்றாய் இரண்டிரண்டு பாட்டிகளோடு, முகம் முழுதும் மகிழ்ச்சி கரைபுரண்டோட, விக்ராவிற்கும் சேர்த்து எடுத்து கொண்டு அவனை நோக்கி பாய்ந்தோடி வந்தனர்.