அத்தியாயம் 5

தோட்டத்தின் பின் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியின் சாவியை அதன் துவாரத்தில் சொருக முயன்று முயன்று தோற்ற லாவாவிடம்..

“லாவா.. ரொம்ப ராவா அடிச்சிட்டடி நீ.. உன்னால வண்டி ஓட்ட முடியாது.. கொடு நான் ஓட்றேன்” என விக்ரா கூற

“ஆமா நான் ராவா.. அடிச்சேன்.. நீ ரவை போட்டு அடிச்ச..” அவன் நெற்றியில் ஓங்கி தன் உள்ளங்கையால் ஒன்று வைத்து “நீயும் ராவா தா அடிச்சடா என் டுபுக்கு” என

சுரீரென எதுவோ நெற்றிக்குள் ஏற, இவனும் அவள் முதுகில் பதிலுக்கு வைத்தான் ஒன்று,

‘ஸ்..ஆ..’ என அலறியவளிடம் “ராவா அடிச்சேன் தான் ஆனால் கொஞ்சம் தான், நீ தான் தலைகால் புரியாம ரொம்ப அடிச்ச.. இப்படியே வண்டிய எடுத்துட்டு போய் எவன் கவுட்டுகுள்ளயாவது கொண்டு போய் விடு.. பின்னாடியே வரும் என் அத்த, அன்னியோட நீ செத்தடி என் வெண்ண மவளே” ராகம் போட்டு இழுத்தான் விக்ரவாண்டி.

அவன் அடித்ததில்  முதுகை தடவிவிட முயன்று தோற்றவளுக்கு, ஏறி இருந்த போதையில் சிறிது இறங்கியது மீனாவை நியாபகபடுத்தியதில், “ஜாலியா இருக்குற நேரத்தில் ஏண்டா ஜகன் மோகினிய நியாபகபடுத்துற” போதையோடு ஏறி இறங்கியது குரல், கூடவே சாவியை இவன் கையிலேயே கொடுத்து “நீயே ஓட்டுடா சாம்பு மவனே” என

“சாம்பு மவனா? அடிங்.. யாரடி சொல்ற” படக்கென இவன் கேட்க

“உன்ன தாண்டா சாம்புமவனே.. நீ மட்டும் வெண்ணமவளேன்னு கூப்பிடுற, அதான் பழிக்கு பழி”

“ம்.. பழி வாங்குறதெல்லாம் சரிதான்.. அதென்ன சாம்பு மவனே” என்றபடி பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

“ஹ..ஹ..” பெரிதாய் சிரித்தவள்

“சமரசுவோட மவன்.. ஷார்ட்டா சாம்புமவன்.. எப்படி.. நல்லாயிருக்குல்ல..” என்றபடி இவன் பின்னே ஏறி அமர்ந்தாள்

‘ஷப்பா.. இது வேறையா?’ என நினைத்தவன் “ம்.. இருக்கு இருக்கு நல்லா இருக்கு” என சிலாகித்தவன் “அவர் எவ்ளோ பெரிய டெரர் பீஸூன்னு தெரியாம நீ வேற.. சாம்புமவன் பாம்புமவன்னுட்டு.. இப்படி குடிச்சு கூத்தடிச்சது மட்டும் தாடிக்கு தெரிஞ்சது.. அவர் கையில சாவுறதுக்கு, நேரா நாமளே சுடுகாட்டில் போய் பொணத்தோட பொணமா படுத்துற வேண்டியது தான்” என புலம்ப

“அய்ய மத்த பொணத்தோட படுத்தா நாறும்… நீயும் நானும் மட்டும் கட்டையெல்லாம் அடுக்கிவச்சு தனியா ஒன்னுல படுத்துக்கலாம்” என இவள் கூலாக சொல்ல, லேசாய் சிரிப்பு இவனிடத்தில்.

 “அடியே.. நான் சாவுறத பத்தி பேசுனா? நீ ஏதோ வேல்ட் டூர் போற கணக்கா, தனியா போகலாம்ன்ற” என

“எங்க போனலும் சரி என்னையும் உன்கூட கூட்டிபோ.. ஹான். கூடவே ரம்மும், சிக்கனும் எடுத்துட்ட போயிடலாம்” இவள் கூற

அவளது பேச்சில் எங்காவது சென்று கல்லில் முட்டிகொள்ளலாம் போல இருந்தது இவனுக்கு.

“சாம்பு..பூ…” சற்று அதிகமாகவே குரலை ஏற்றி அவனை நினைவுலகத்திற்கு கொண்டுவந்து “மீனா வை எப்படி சமாளிக்க போற” ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டிருந்தவனின் தோளில் சரிந்தபடி இவள் கேட்க

“அத நான் பார்த்துகிறேன், வெண்ண.. நீ அமைதியா வா..” என இவளது வாயை அடைக்க, அவளோ அமைதியாய் இருப்பவளா என்ன? வாய் ஓயாது கேள்வி கேட்டே வந்தவளுக்கு, இவனும் பதில் சொல்லி கொண்டே வந்தான்.

இருவரும் பேசிக்கொண்டே வந்ததில் அர்த்தங்கள் இருந்ததோ என்னவோ.. ‘சாம்பு’ என அவளும் ‘வெண்ண’ என அவனும் அழைத்து கொண்ட உயிர் எழுத்துகளில் தான் எத்தனையாயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருந்தது.

ஒருவழியாய் எதிரில் வருபவர்களுக்கு சேதாரம் இன்றி அவளை வீட்டில் கொண்டு சேர்த்தவன்,

“நீ முதல்ல போ.. நான் பத்து நிமிஷம் கழிச்சு வரேன்.. அப்புறம், அத்த எது கேட்டாலும் வாய திறக்காத.. அமைதியா அப்படியே போய் படுத்துடு, இரண்டு மூனு மணிநேரம் தூங்கி எழுந்திரு.. சரியா போகும்.. இல்லைன்னா எனக்கு போன் பண்ணு” என அவளை உள்ளே அனுப்பி வைத்தான்.

இவளோ செல்லாமல் அவனையே பார்த்திருக்க

“லாவா.. என்னடி, வாந்தி எதுவும் வருதா” என இவளை நெருங்க…

“நோ.. வே.. எங்கம்மா சாம்பார் தான் வாந்திய வர வைக்கும். இது தேவாமிர்தம்.. தேங்க்ஸ் பார் தி சரக்கு மாமே.. சும்மா இறக்கையே இல்லாமல் பறக்குற பீல்” என

முப்பதியிரண்டு பற்களையும் காட்டிவிட்டு, “லோக்கல் ரம்மே சும்மா அள்ளுது.. அடுத்து என்ன பெத்த மவராசன் மிலிட்டரி வாங்கி வைக்குற கேன்டின் ரம்மை ஆட்டைய போட்டு டேஸ்ட் பார்க்கனும் என

“லோக்கலுக்கே இந்தாட்டம், அலும்பு தாங்கல, இதுல கேன்டின் ரம்மா.. உயிரோட இருப்பனு நினைக்கிற?”

“அதெல்லாம் இருப்பேன்டா டுபுக்கு” என இவள் வீட்டினுள் திரும்ப ‘ஏ.. எப்பா.. முடியலடா சாமி இவளோட’ விக்ரா, தலை உலுக்கி நிதானத்திற்கு வந்தவன், ஸ்கூட்டியின் மீதே சாய்ந்து நின்றுவிட்டான்.

இவளோ திறந்திருந்த கதவினூடே பூனையாய் புகுந்து, மீனாவை நோட்டம் விட, அவரோ காலையில் வாங்கிவந்த பொருட்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

‘ஹப்பா.. மீனா பிஸ்ஸியா இருக்கா, நாம புஸ்ஸிகேட் மாதிரி மெதுவா போய்டலாம்’ அவளுக்கு அவளே சொல்லி கொண்டு அவளறைக்கு சென்று கமுக்கமாய் படுத்துவிட்டாள்.

இவள் மாட்டிக்கொள்ள கூடாது என ஆயிரமாவது முறையாய் வேண்டிக்கொண்டவன், உள்ளேயிருந்து தாய் மகளின் கூக்குரல்கள் எதுவும் கேட்காததில் மனம் பெரிதாய் அமைதி கொள்ள, பத்து நிமிடங்கள் சென்று, வெளியே பைப்பில் வந்த நீரை அடித்து முகம் கழுவி, கொடியில் காய்ந்து கொண்டிருந்த ஒரு துணியில் துடைத்துவிட்டு “அத்த.. அத்த..” என அழைத்து கொண்டே வந்தான்.

மீனாவிற்கு நாச்சியார் ஆகாதவள் தான், ஆனால் அண்ணன் மகனாயிற்றே.. இவன் குரல் கேட்டதும்

“விக்ரவாண்டி.. வாயா.. எப்போ வந்த?, நம்ப விஜய் கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்பு வரவேணாமா” கேட்டபடி சோபாவில் அமர சொல்ல.. அவனோ “லீவு இப்போ தான் கொடுத்தாங்க அத்தை” சமாளித்தவன்  “விஜய்க்கு ஏதோ செய்முறை இருக்காமே, ஏதோ வாங்கனுமாம். உங்களை அப்பத்தா கூப்பிட்டுச்சு” என

“ஆமாம் விக்ரா.. ஆத்தா சொல்லுச்சு விடியமுன்னேயே போய் அம்மா சொன்னதெல்லாம் வாங்கியாந்துட்டேன்.. நீ முன்ன போ.. நான் எடுத்துட்டு வரேன்” என

“நீங்க ஏன்த்த சிரமபட்டுகிட்டு, இது தான..” டேபிளின் மேல் இருந்த பைகளை காட்டியவன், அதற்கு மீனா ‘அந்தபை தான்’ என தலையசைக்கவும், தன் கையில் எடுத்து கொண்டான்.

“இரு விக்ரா, இந்த லாவன்யா வரட்டும், அவ வந்த பிறகு அவளையும் அழைச்சிட்டு போகலாம். அப்போவே மகா கூட போனா இன்னும் வரலை” என முடிக்கும் முன்பு

“அவ, அவ ரூமில் தூங்கிட்டு இருக்காத்தை.. அவ தூங்குறதை பார்த்துட்டு தான் உங்களை பார்க்க வந்தேன்” எனவும்

“என்ன சொல்ற” என திகைத்தவர் வேகமாய் அவளறைக்கு சென்று பார்க்க, கட்டிலில் பப்பரக்காவென கண்டமேனிக்கு படுத்து உறங்கி போயிருந்தாள்.

முகம் சுருக்கி பார்த்தவர் “என்ன, இந்நேரம் தூங்குறா.. இவ வந்தது கூட எனக்கு தெரியலையே!” மீனா குழம்ப

“வழக்கம் போல இரண்டு பேரும் சண்டை போட்ருபீங்க, ஏதாவது கோபமா இருக்கும்த்தை, நீங்க வாங்க அப்பத்தா உங்களை கூப்டுச்சு, நான் வேற மண்டபத்துக்கு கிளம்பனும்” இவன் முடிந்தளவிற்கு தள்ளி நின்று பேசியபடியே சமாளிக்க

‘தூங்கும் அவளை எழுப்பினால் தன்னை உண்டில்லை என செய்துவிடுவாள்’ தவிர விக்ராவை வைத்துகொண்டு தாமதிப்பது சரியில்லை, அதே நேரம் லாவாவை தனியாய் விட்டுவிட்டு, கதவை திறந்து போட்டு வரவும் முடியாது என அவளை உள்ளே வைத்து பூட்டிவிட்டு, ஒரு சாவியை ஜன்னல் வழியே அவள் கட்டிலில் தூக்கி எறிந்துவிட்டு, இன்னொரு சாவி எடுத்து கொண்டு விக்ராவுடன் கிளம்பிவிட்டார் மீனா.

சமரசுவின் தங்கை தான் இந்த மீனா, திண்டுகல்லில் திருமணம் செய்து கொடுத்திருந்தாலும் கணவர் ஆர்மி என்பதால் பெரும்பாலும் பெரம்பலூரில் தான் வசிப்பிடம்.

முதல் காரணம் மீனாவின் மாமியார் நாத்தனார் தொல்லையில் இருந்து விடுதலை, இரண்டாவது காரணம் லாவா பிறந்த பொழுதில் மீனா உடல்நலம் மோசமாகிவிட, ராதை தான் அவர் உடல்நிலையை மீட்டு கொணர்ந்தார்.

தாய்வீடு சொர்க்கம் தான் எந்த ஒரு பொண்ணுக்கும், திருமணம் முடிந்த பின்பும் தாய் வீட்டிலேயே இருக்கும் பாக்கியம் எத்தனை பெண்களுக்கு கிட்டும்.

இறுக்கி பிடித்து கொண்டார் கிடைத்த வாய்ப்பை. ஆனால் நாச்சிக்கும், மீனாவுக்கும் ஆகவே ஆகாது.

நாச்சி ஏதாவது செய்தால் ராதை வழியே மீனாவிற்கும், மீனா மூலம் கௌரிக்கும் (சமரசுவின் மூத்த சகோதரி) சென்றுவிடும்.

ஈரை பேனாக்கி பேனை பெருச்சாளியாக்கி நாச்சியிடம் வாங்கி கட்டி கொள்வார் மீனா. அதன் பொருட்டு இரண்டு தெரு தள்ளி இருந்த வீட்டை விலைக்கு வாங்கி அங்கேயே டேரா போட்டுவிட்டார் மீனா.

மீனாவிற்கு ஒரே பெண் தான் லாவன்யா.. அதன் பொருட்டாய் பாண்டிகளுடன் தான் வளர்ந்தாள். பாண்டிகளின் அடுத்தடுத்த வயதில் இவளும் அடங்குவாள். சிறு வயதில் இருந்து நால்வரின் புடைசூழ தான் வலம் வருவாள்.