“வாய்யா சோமு…” என்ற சொக்கன் “இந்தம்மா குரலு தான் எத்தனை இனிமை… பாட்டு வரி ஒரு பக்கம்னா, இந்தம்மா கிருஷ்ணாம்மா குரல் இருக்கே… யப்பா…” என்று மேலும் ரசித்துக் கூற,
“ஹ்ம்ம் உன்னமாதிரி பாட்டெல்லாம் என்னால கேட்க முடியாது.. ஆனாலும் நீ ரொம்பத்தான் இசை ரசிகனா இருக்கப்பா…” என்று சோமு கூற,
“பாட்டுன்னா அது கிருஷ்ணாம்மா பாட்டுத்தான்…” என்று சொக்கன் அடித்துச் சொன்னார்.
“அதுசரி… ஆனா அந்தம்மா அந்தம்மான்னு சொல்றியே, பார்த்தா அந்தம்மாக்கு முப்பதுக்குள்ள தான் வயசு இருக்கும்போல. யாரோடவோ சேர்ந்து வாழுதாம்…” என,
“அட அதெல்லாம் நமக்குத் தேவையில்ல சோமு.. அந்த குரலுன்னா எனக்கு உசுரு.. இப்போன்னு இல்லை.. பல வருசமா.. கிருஷ்ணாம்மா பாடின பாட்டு எல்லாம் எனக்கு அத்துபுடி. ஒரே ஒருதடவ மட்டும் அந்தம்மாவ நேர்ல பார்க்கணும். இதான் எனக்கிருக்க ஆசை…” என்று உணர்வு பூர்வமாய் சிலாகித்து சொக்கன் பேச,
“அதுசரி.. அதெல்லாம் சினிமாக்காரங்க சங்கதி.. நீ எதுலயாவது போய் மாட்டிக்காத. நாளைக்கு எனக்கு நைட் ஷிட்டு.. இப்போ கிளம்புறேன்…” என்று சொல்லிக்கொண்டு சோமு கிளம்பிவிட, சொக்கன் மேலும் அடுத்தடுத்து வந்த பாடல்களில் மூழ்கியபடி, தனது காவலாளி வேலையை தொடர்ந்தார்.
சிவாவிற்கு அப்போது எழு வயது. ஷாலினி அப்போது கை குழந்தை. ரஞ்சிதம் ஷாலினியை கவனிக்கவேண்டும் என்று வேலைக்குச் செல்லவில்லை. சிவா பள்ளியில் படித்துக்கொண்டு இருக்க, அப்போதே நிறைய சிறு சிறு வேலைகளுக்குச் செல்வான்.
சொக்கன் கடின உழைப்பாளி. இரவு நேர செக்கியூரிட்டி வேலை முடித்து விடியற்காலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்தால், எழு மணி வரைக்கும் உறங்குவார். பின் எழுந்து குளித்து உண்டு முடித்து, பகல் நேரத்தில் பெரிய பெரிய ஜவுளி கடைகளுக்கு செக்கியூரிட்டி வேலைக்கு என்று சென்று விடுவார்.
ரஞ்சிதம் சிக்கனமாய் குடும்பம் நடத்த, வந்த சம்பளத்தில் நன்றாகவே மிச்சம் பிடித்தனர் கணவனும் மனைவியும்.
“எப்புடியாவது சொந்தமா ஒரு வூடு வாங்கிடனும்…” என்பதுதான் ரஞ்சிதத்தின் அதிகப்பாடியான பேச்சாக இருக்கும்.
“ஏன்.. இந்த வூடும் நம்ம சொந்த வூடுதான…” என்று சொக்கன் சொல்ல,
“இந்த வூடு எப்படி போதும்? நல்லா பெரிய வூடா வாங்கனும். நம்ம புள்ளைங்க ரெண்டும் நல்லா வளரனும்..”
“அதுக்கென்ன ரஞ்சிதம். வாங்கினா போச்சு. எல்லாத்துக்கும் கடவுள் வழி கொடுப்பான்…” என்றவருக்கு வானொலியில் பின்னணி பாடகி கிருஷ்ணாவின் பாடல்கள் என்று கேட்டதுமே மனதுறுகி போனது.
“பாட்டு வந்துச்சுன்னா, உங்கப்பனுக்கு பொண்டாட்டி புள்ள எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அதுவும் அந்த கிருஷ்ணா பாட்டுன்னா போச்சு. மனுஷனுக்கு சோறு தண்ணி கூட உள்ள இறங்காது. பாட்டே போதும்னு குந்தின்னு இருப்பார்டா…” என்று சிவாவிடம் ரஞ்சிதம் குறைபேசியபடி படுக்க,
“அட போ டி. உனக்கென்ன தெரியும் பாட்டு பத்தி. நீயும் தான் கேளேன். யாரு வேணாம்னா…” என,
“பொண்டாட்டி பேச்ச விட, அந்த பாட்டுக்காரி பாட்டுன்னா அப்படி இழுக்குதாக்கும்…” என்று ரஞ்சிதம் பேச,
“அதுசரி… உனக்கு புத்தி இப்புடி போனா நான் என்ன செய்ய. அது தெய்வீக குரலு ரஞ்சிதம்…” என்று சொக்கன் சிலாகித்து பேசியது இப்போதும் அவர் நினைவில் வந்தாட, அப்படியே அமைதியாய் அமர்ந்திருந்தார் மனிதர்.
“நைனா.. என்ன அமைதியா இருக்க…” என்று சிவா கேட்க, ஆழ்ந்த மூச்சினை வெளிவிட்டவர், ஒன்றுமில்லை என்பது போல் தலையாட்டி, பின் மீண்டும் பைரவியின் முகம் பார்க்க,
சிவாவிற்கு என்ன தோன்றியதோ “ப்பா பைரவி நல்ல பொண்ணுப்பா…” என்று சொல்ல,
ரஞ்சிதமோ “நல்ல பொண்ணுதான்.. ஆனா என்ன திமிர்த்தனம் கொஞ்சம் நிறையவே இருக்கும் போலிருக்கு…” என்று இழுக்க, சிவா அப்பட்டமாய் அம்மாவை முறைக்க
“உனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்ன பிறகு நான் வேறென்ன சொல்ல முடியும். எல்லாம் ஒத்து வந்தா சரிதான்…” என்று வேண்டா வெறுப்பாய் சொல்வது போல சொல்லி, பேச்சினை முடித்துக்கொண்டார்.
‘இந்த அம்மாவை புரிஞ்சுக்கவே முடியாது…’ என்று எண்ணியவன் “என்ன நைனா சொல்ற நீ…” என்று கேட்க, சொக்கனால் இன்னும் கடந்த கால நினைவுகளில் இருந்து வெளிவர முடியவில்லை.
தன்னுடைய கணிப்பு சரிதானா என்றும் தெரியவில்லை. ஒருவேளை நிஜம் அதுவெனில் நிகழப்போகும் சம்பவங்கள் எல்லாம் சரியாய் இருக்காதே. ஆனாலும் மகன் விருப்பம் இதுவெனில் அதை அவரால் மறுக்க முடியுமா என்ன?!
ரஞ்சிதம் முகத்தினை பார்த்தார். ரஞ்சிதத்திற்கு இதில் பெரிதாய் மறுப்பு எதுவும் இருப்பது போல் தெரியவில்லை. ஆனால் தன் மனம் உணர்ந்த உண்மை நிஜம் என்று ரஞ்சிதத்திற்கு தெரிந்தால், பைரவியை உண்டு இல்லை என்று ஆக்கிடுவார் இல்லலையா.
எல்லாவற்றையும் யோசித்தவர், மகனது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்க “நீ இப்போவே ஒன்னும் சொல்ல வேணாம் நைனா. உங்களை எல்லாம் மீறி நான் ஒன்னும் செய்யப்போறது இல்லை. ஆனா பைரவி தான் எனக்குன்னு என் மனசு எப்பவோ முடிவு பண்ணிடுச்சு. அவளுக்குன்னு சொந்தம்னு யாருமே இல்ல நைனா. நல்ல பொண்ணு.. தனியா கிடந்தது தவிக்குது.. என் மேல அவ்வளோ பாசம் தெரியுமா அவளுக்கு…” என்று சிவா அவன் மனதினில் இருப்பதை எல்லாம் பேச,
“நான் முதல்ல ஷாலினிக்கு முடிச்சிட்டு தான் உனக்கு செய்யனும்னு இருந்தேன். ஆனா இப்போ யோசிச்சா, வூடு முடியவும் உனக்கு முடிச்சிட்டு ஷாலினிக்கு பாக்கலாம்னு தோணுது…” என்று ரஞ்சிதம் ஜாடையில் தன் சம்மதத்தை தெரிவிக்க, சிவாவிற்கு அம்மாவின் இந்த திடீர் மாற்றத்தை நம்பவும் முடியவில்லை.
நம்பாமல் இருக்கவும் இருக்கவில்லை.
‘என்ன நடந்து இருக்கும்…’ என்று அவன் மனம் வண்டாய் குடைய, சரியாய் மணி அதே நேரத்தில் அழைத்தான்.
“மச்சா எங்க இருக்க?” என,
“இன்னாதுக்குடா?” என்று சிவா கேட்க,
“அது உன்னாண்டா ஒன்னு சொல்லனும்டா. ஆனா சொல்லவும் பயமாகீது…” என்று மணி சொல்லவும்,
மணிக்கு மனது போட்டு உறுத்திக்கொண்டே இருந்தது. செல்வி செய்தது சரியே என்றாலும் கூட, மணிக்கு சிவாவிடம் இதனை மறைப்பது அத்தனை உசிதமாய் இல்லை. ஒருவேளை இதனை முன்னிட்டு நாளைக்கு ஏதேனும் பிரச்சனை எனில் எல்லாம் கெட்டுவிடும் என்று எண்ணியவன் தான் நண்பனுக்கு அழைத்துவிட, இதோ இப்போது அனைத்தையும் சிவாவிடம் சொல்லியும்விட்டான் மணி.
அனைத்தையும் பொறுமையாகவே கேட்ட சிவா, அமைதியாகவே இருக்க “என்ன மச்சா எதுவும் பேசாம இருக்க…” என்று மணி கேட்க,
“என்ன பேச சொல்ற?” என்றான் ஒருவித ஆழ்ந்த குரலில்.
“இல்லடா.. அது.. செலுவியக்கா ஒருவிதமா பேசி வச்சிருக்கு.. அதான்..” என,
“ம்ம்…” என்று யோசனையில் இறங்கியவன் “செல்வியக்கா இப்போ எங்க?” என்று கேட்க,
“அது பைரவி வூட்ல இருக்கும் இல்லின்னா…” என்று மணி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, சிவா செல்விக்கு அழைத்துவிட்டான்.
“சொல்லு கண்ணு…” என்று செல்வி பேச,
“இங்க வா நீ…” என்றுவிட்டு வைத்துவிட்டான்.
செல்வி வருவதற்குள் பைரவிக்கு அழைத்தவன் “செல்வியக்கா உன்னாண்ட எதுவும் கேட்டுச்சா?” என்று மொட்டையாய் கேட்க,
“என்ன சிவா என்னாச்சு? எதுவும் ப்ராப்ளமா?” என்றாள் பதறி.
“ஷ்..! அதெல்லாம் இல்ல.. நம்ம விசயமா செல்வியக்கா உன்னாண்ட எதுவும் பேசுச்சா?” என, பைரவிக்கு பக்கென்று இருந்தது.
“பைரவி.. உன்னத்தான் கேக்குறேன்…” என்று சிவா மீண்டும் கேட்க,
“அ.. அது.. அதுவந்து.. ஏன் என்னாச்சு?” என்றாள் மீண்டும்.
“நீ சொல்லு.. செல்வியக்கா எதுவும் கேட்டுச்சா…” என்று திரும்பக் கேட்க,
“ஓ..! அப்போ ஏன் என்கிட்டே நீ இதை சொல்லலை பைரவி…” என்றவன் “இங்க பாரு பைரவி நான் இப்பவும் சொல்றேன். உன்னை நான் உனக்காக மட்டும் தான் விரும்புறேன். உன்னோட அடையாளம், வசதி வாய்ப்பு, இதெல்லாம் எனக்கு கண்ணுக்கு இப்போ வரைக்கும் தெரியலை…” என்று பேச,
‘இத்தனை நேரம் இங்கே நன்றாய் பேசிவிட்டு சென்றவன், திடீரென்று ஏன் இப்படி பேசுகிறான்…’ என்று புரியாமல் விழித்த பைரவி,
“நீங்க எங்க இருக்கீங்க சிவா?” என்றாள்.
“ம்ம்ச் நான் எங்கயோ இருக்கேன்.. ஆனா இதை மட்டும் மனசுல வை…” என்றவன் அழைப்பை துண்டித்துவிட, செல்வி என்னவோ ஏதோவென ஓடிவந்தார்.
“எ.. என்ன கண்ணு.. என்னாச்சு…” என்ற செல்வி, ஜாடையாய் மணியை பார்க்க, அவனுமே சிவா இதற்கு இத்தனை கோபிப்பான் என்று எண்ணவில்லை.
“என்ன ஆச்சா? ஆமா என்னக்கா நீ பேசி வச்சிருக்க எங்கம்மாக்கிட்ட..?” என்று சிவா கேட்க,
“எ.. என்ன பேசுனேன்.. என்ன கேக்குற நீ.. எனக்கொண்ணும் புரியலையே…” என்று செல்வி சமாளிக்கப் பார்க்க,
“அதுவா.. புரியாது உனக்கு..” என்றவன் “நானும் பைரவியும் லவ் பண்றோம் தான். அதுக்காக நீ அம்மா சரின்னு சொல்லனும்னு அதுக்கிட்ட என்ன பேசி வச்சிருக்க…” என, செல்விக்கு திடுக்கென்று இருந்தது.
“ஏ.. ஏன் கண்ணு.. வூட்ல ஏதும் பிரச்சனையா?” என்று செல்வி கேட்க,
“ம்ம்ச்.. யக்காவ் முதல்ல நான் கேட்டதுக்கு பதில் பேசு.. என்னிய இல்ல எங்கம்மாவ பார்த்தா பணத்துக்கு வாய் பொளந்து நிக்கிற ஆளுங்க மாதிரி தெரியுதா உனக்கு? எங்கப்பாக்கு முடியலைன்னு ஆகவும் நானும் எங்கம்மாவும் தானே எத்தினி வேலைக்கு போனோம். அதெல்லாம் மறந்து போச்சா உனக்கு?
எங்கம்மாவ பார்த்தா பணக்கு ஆசைப்பட்டு பைரவிய மருமகளா கொண்டு வர்ற ஆளு மாதிரி இருக்கா..?” என்று வரிசையாய் அடுக்க,
‘அய்யோ! இதென்ன..?!’ என்று திகைத்து நின்றுவிட்டார் செல்வி.
இப்படி கோணத்தில் அவர் யோசிக்கவே இல்லையே. ரஞ்சிதம் ஏதேனும் கோபப்பட்டு பேசி, சிவாவையும் பைரவியையும் ஒன்று சேர விடாமல் செய்துவிட்டால் என்ன செய்வது என்றுதானே தான் வேறொரு விதமாய் ரஞ்சிதம் மனதில் பதியும்படி பேசியது.
ஆனால் அதனையே சிவா தவறு என்று சொன்னால், செல்வி என்ன செய்ய முடியும்.
“சொல்லுக்கா… இன்னாத்துக்கு இப்படி திகைச்சு போயி நின்னிருக்க? பதில் பேசு நீ முதல்ல.. பைரவிய நான் என் உசுருக்கும் மேல விரும்புறேன். அது நிஜம். அவ யாரா வேணா இருக்கட்டும். ஆனா என் கண்ணுக்கு பைரவி, நான் விரும்புற, என் வாழ்கைய அவளோட சேர்ந்து வாழணும்னு நினைக்கிற ஒரு பொண்ணு. மத்தது எல்லாம் அப்புறம் தான். அவளோட சூழ்நிலை எப்போ எப்படி மாறினாலும் கூட, இந்த சிவா அவ மேல வச்ச அன்பு எப்பவும் மாறாது.
ஆனா அதுக்காக அவளோட வசதியை எடுத்துச் சொல்லித்தான் அவளை எங்க வீட்டுக்கு மருமகளா கொண்டு போகணும்னு இல்லை. எங்கம்மா சம்மதிக்கலைன்னா நான் சண்டை போட்டு கூட கல்யாணம் செய்வேனே தவற, பைரவி பணக்காரி, அவளை கட்டிக்கிட்டா எங்களுக்கும் பணம் வந்துடும்னு எல்லாம் நினைச்சு இல்லை…” என்று பேச, அவன் பேச்சினை கேட்டு திகைத்து போனது செல்வியும் மணியும் மட்டுமல்ல,
சிவாவினைப் பார்த்து பேசிவிட்டு போகலாம் என்றுவந்திருந்த ஜானும், சந்தோஷியும் கூடத்தான்.
சிவாவைப் பார்த்து பக்குவமாய் பேசி, பைரவியுடனான உறவில் இருந்து விலகச் சொல்லவேண்டும் என்று வந்திருக்க, அவன் செல்வியிடம் பேசிய இந்த பேச்சு அவர்களை அப்படியே நிற்கச் செய்துவிட்டது.
பைரவி மீதிருக்கும் நிஜமான நேசம் அவனது வார்த்தைகளில் வெளிப்பட, இப்படி பேசிக்கொண்டு இருப்பவனிடம் என்ன சொல்லி, பைரவியை விட்டு விலகு என்று பேசுவது என்பது ஜானிற்கும் சரி, சந்தோஷிக்கும் சரி விளங்கவில்லை.
நிறைய பேசிவிட்டு, சிவாவிடம் என்ன பேச, எப்படி பேச என்றெல்லாம் ஒத்திகைப் பார்த்தே வந்திருக்க, இங்கே இப்படியொரு சூழல் இருக்கும் என்றெல்லாம் அவர்கள் யாரும் நினைக்கவில்லை.
செல்வியைப் பொருத்தவரைக்கும் தான் செய்தது சரி என்றுதான் நினைத்திருந்தார். ஆனால் சிவாவின் பார்வையில் இப்படியொரு கோணம் இருக்கும் என்று நினைக்கவில்லை.
அவனிடத்தில் இருந்து பார்த்தால் இது சரிதானே.
பைரவிக்கோ அங்கே வீட்டினில் இருப்பே கொள்ளவில்லை. சிவா செல்வியை திட்டிவிடுவானோ, இல்லை அவனது வீட்டினில் ஏதேனும் பிரச்சனையோ என்றெண்ணி அவளும் வேகமாய் இங்கே செட்டிற்கு வர, அங்கே ஜானும் சந்தோஷியும் இருப்பது கண்டு அவளுமே அதிர்ந்து பார்க்க, சிவா இங்கே பைரவி வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை.
மணி தான் முதலில் பைரவியை பார்த்தது.
“மா.. மச்சா.. பைரவி…” என்று சிவாவிடம் சொல்ல, சந்தோஷியும், ஜானும் மாட்டிக்கொண்ட உணர்வோடு தன் தோழியைப் பார்க்க,
பைரவி மற்றவர்களை விட்டுவிட்டு “நீங்க.. நீங்க ரெண்டு பேரும் என்ன பண்றீங்க இங்க?” என்று இவர்களைப் பார்த்து கேட்க,