“அவன், நேத்து நடந்ததுக்கே, அலறி பயந்து போய் கிடக்கான். கருப்பசாமி கோவிலுக்கு கூட்டிப்போய் பேய் ஓட்டனும் பேலருக்கு! நேத்து நைட் போய் ரூமூக்குள்ள அடஞ்சவன், வெளிய வர மாட்றான்டா..”

“ஓ..” என நெற்றி சுருக்கியவன் “வா.. போய் ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம்” என பர்வதத்திடம் கொடுத்த டீயை பல்துலக்காமலே குடித்துவிட்டு, தங்கள் வீட்டிற்கு நடையை கட்டினர் மூவரும்.

வாசலில் கிடந்த ஸ்கூபி பாண்டிகளை பார்த்து பாய்ந்து வந்து பாசத்தை காட்ட, அதனுடன் இரண்டொரு நிமிடம் மல்லுகட்டிவிட்டு வீட்டிற்குள் புகுந்தனர்.

பாண்டிகள் நால்வரும் ஒன்றாக இருக்கும் இடம் சமரசு வீட்டில் தான். அந்த கால முற்றத்து வீடு. வாசலை கடந்தால் பெரிய முற்றம், நாலாபுறமும் இரண்டு இரண்டு அறைகளாக எட்டு அறைகள் இதில் ஆறு படுக்கை அறை, ஒரு சமையலறை, தனித்து ஒரு அறை.

பாண்டிகளுக்கு தனிதனியாக அறை இருந்தாலும் ஏதாவது ஒரு அறையில் தான் நால்வருமே உருண்டு கிடப்பர். சில சமயம் வேலை பார்த்த களைப்பில், சில சமயம் குடித்துவிட்டு மட்டையாகி கவிழ்கையில், சில சமயம் சண்டை போட்டுவிட்டு சமாதானம் செய்கிறேன் பேர்வழி என ஒருவர் மேல் ஒருவர் என உருண்டு கொண்டு கிடப்பர்.

இப்போதும் சங்கரை தேடிக்கொண்டு மூவருமே வந்தனர், ஒவ்வொரு அறையாய் திறந்து, அவனில்லை என்றதும் இருக்கும் ஒரே ஒரு கடைசி அறைக்கு வந்தனர் அங்கு தான் இருக்க கேண்டுமென..

கதவை லேசாய் தள்ள, திறந்த கதவினூடே, இவர்களின் விழிகள் நுழைந்து நாலாப்புறமும் பாய்ந்தது. கயிற்று கட்டிலின் ஒரு மூலையில் குவிந்து கிடந்த தலையணைகளுக்குள் சுருண்டு கிடந்தான் சங்கரபாண்டி.

அதை கண்டு மூவரின் விழிகளும் மின்ன, பூனைநடையிட்டு நெருங்கியவர்கள், நொடியில் திட்டமிட்டு, காதிற்குள் கிசுகிசுத்து, பின் பெரிதாய் விரிந்த சிரிப்பை அடக்கி, அலுங்காமல் குலுங்காமல் கட்டிலோடு தூக்கி கொண்டு லொங்கு லொங்கென பின்பக்க கதவை தாண்டி தோட்டபகுதிக்குள் நுழைந்தனர்.

அடர்ந்துயர்ந்த தென்னை, சவுக்கு மரங்களுக்கு இடையில் இருந்த மண்பாதையில் சத்தமே இல்லாது கொண்டு சென்றவர்கள், தரையிலிருந்து சிறிது மட்டுமே உயரமான கிணற்றை எட்டியும் பாராமல், கட்டிலில் கிடந்தவனின் கைகளையும் கால்களையும் பிடித்து தூக்கி  தொட்டிலாய் ஆட்டிக்கொண்டிருக்கையிலேயே விழிப்பு லேசாய் தட்டியது சங்கருக்கு.

முழுதாய் விழிக்கும் முன் ‘ஒன்’ ‘டூ’ ‘த்திர்ரி’ என சங்கரை பந்தாய் வீசியெறிய, ‘யம்மே பேய்.. பேய்…’ மிகப்பெரும் அலறலோடு. கிணற்றினுள் பாய்ந்தான் சங்கர்.

அதில் மூவருமே சிரித்த சிரிப்பில் அந்த இடமே கிடுகிடுத்தது. அதே சிரிப்போடு அடுத்தடுத்து மூவருமே, குவிந்த கைகளோடு, நீட்டிய கால்களுமாய் விர் விர்ரென மீனாய் பாய்ந்தனர் கிணற்றினுள்.

தூக்க கலக்கத்தில் இருந்த சங்கரபாண்டி, கனவுலகத்தில் இருந்து நினைவுலகம் திரும்ப சிறிது நேரம் பிடித்து, பின் தண்ணீரில் கிடப்பதை உணர்ந்து, நீச்சல் தெரியும் என்பதையும் மறந்து கை,கால்களை திக்குக்கொன்றாய் தபதபவென அடித்து எப்படியோ கிணற்று படிகளில் ஏறியமர்ந்து தஸ்புஸ்ஸென இளைப்பாற துவங்கினான்.

நேற்று இரவே உயிரை கையில் பிடித்து ஓடியவனுக்கு மினி ஹார்ட் அட்டாக்கே வந்தது என்றால், அந்த பேய் தான் தூக்கி வந்து கிணற்றில் போட்டுவிட்டது நினைத்தவனுக்கோ தற்போது பெரிய சைஸ் ஹார்ட் அட்டாக்கே வந்தது.

ஆனால் தான் கிணற்றில் விழுந்ததற்கான காரணம் பேயல்ல, தன்னுடன் பிறந்த பிசாசுகள் என தெரிய, கொலைவெறியோடு வெறித்தான் அவர்களை.

கோபித்து கொண்டு விரைத்தமர்ந்திருந்த சங்கரை மூவரும் சூழ்ந்து, கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்ய, அதற்கு மடியாது வீம்பு பிடித்தவனை மீண்டும் நீரினில் இழுத்து ஒரே அமுக்காய் அமுக்கி மீண்டும் எமலோக வாசலை தட்ட செய்து பீதியை கிளப்பி, ‘விட்டுடுங்கடா’ என்னைய என கையெடுத்து கும்பிட்டு பேசிய பிறகே விட்டனர்.

பாண்டிகள் நால்வரும், வீட்டாட்கள் எல்லோருக்குமே செல்லகுட்டிகள் தான், சேட்டை செய்கையில் இன்னுமே வெல்லகட்டிகள் தான்.

விக்ரா இளங்கலைபடிப்போடு, ACS முடித்த கையோடு, பெரம்பலூரிலேயே தனியார் நிறுவனமொன்றில், கம்பெனி செகரட்டரியாக, கைநிறைய சம்பளத்தோடு வேலை பார்த்து கொண்டிருக்கிறான்.

உள் மற்றும் வெளிமாநிலங்களில் இருக்கும் பல்வேறு கம்பெனிகளுக்கு தேவைபடும் நேரத்தில் தகுந்த நிதி மற்றும் சட்ட ஆலோசகராக சென்று வருவான். அப்படி சென்ற இடம் தான் ஹைதராபாத்.. அங்கே புது யூனிட் ஒன்று தொடங்கவே, இவனது தயவு தேவையாகிவிட இதோ ஆறு மாதங்களுக்கும் மேல் ஹைதராபாத்தில் தான். இனியும் எத்தனை நாளோ, மாதமோ என தெரியவில்லை.

சமரசபாண்டி- நாச்சியாரின் மூத்த புதல்வன் விக்ரவாண்டி, இரண்டாமவன் செல்லபாண்டி அவனும் விவசாயத்தில் இளங்கலையை தற்போது தான் முடித்து, உரம் மற்றும் நாட்டுவிதைகளை தயாரித்து விற்கும் சிறிய தொழிலை கைவசம் வைத்திருந்தான்.

அடுத்ததாய் வீரபாண்டி, சங்கரபாண்டி இருவரும் சமரசுவின் அண்ணன் புதல்வர்கள்

சமரசுவின் அண்ணனும், அண்ணியும் ஒரு விபத்தில் இறந்துபோய்விட, அவர்களின் புதல்வர்கள், வீரபாண்டி, சங்கரபாண்டி நிரந்தரமாகவே சமரசு-நாச்சியாவின் பிள்ளைகளாயினர்.

அன்று முதல் இன்று வரை நால்வரையும் பிரித்து பார்த்ததில்லை , அப்படி ஒரு பந்தம் அவர்களுள்.

தாய் தந்தை இறக்கும் பொழுதில் பத்தாம் வகுப்பில் இருந்தான் வீரபாண்டி, இருவரின் இறப்பும் அவனை அதிகமாய் பாதித்திட விளைவு வீரபாண்டிக்கு படிப்பில் கோட்டை விட்டான். அதன் காரணத்தால், சமரசு ஜவுளி கடை ஒன்றை சிறிய அளவில் வைத்து கொடுக்க, அடுத்து ஏழு வருடங்களில் பெரிதாக்கி நற்பெயரை ஈட்ட, அதன் பொருட்டு அவர்களது தொழில் வட்டாரத்தில் பெரிதும் பெயர் பெற்றிருந்தான்.

சங்கரபாண்டி போன வருடம் தான் வணிகவியல் இளங்கலை படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறான்.

நால்வருக்குமே, ஒருவயது இருவயது மட்டுமே வித்யாசம். தவிர சமரசுவிற்கு இரண்டு தங்கை ஒன்று அக்கா ஒன்று அவர்களுக்கு திருமணம் முடிந்து ஆளுக்கு இரண்டு இரண்டு பெண் குழந்தைகளோடு, ஒருவர் உசிலம்பட்டியிலும், மற்றொருவர் திண்டுகலில் திருமணம் செய்து கொடுத்திருந்தாலும் கணவர் ஆர்மி என்பதால் தாயாரது ஊரிலேயே வாசம் செய்துவிட்டார்.

அது போக சமரசுவின் தாய் ராதையம்மாள், கணவர் இறந்த பிறகு மகனுடனும், பேரன்களுடனும் மீதி காலத்தை கழித்துவருகிறார்.

தவிர நாச்சியாரின் தாயை மகன்கள் பார்க்கமறுக்க “நான் இருக்கேன்மா” என தைரியாமாய் தன்னுடன் அழைத்து வந்துவிட்டார்.

ஆனால் பர்வதத்திற்கும், ராதைக்கும் ஆகாது என்பதால், இரண்டு வீடு தள்ளி இருந்த அவர்களது பூர்வீக வீட்டிலேயே தனியாய் வைக்கப்பட்டார். தனி என்பது பெயருக்காக மட்டும் தான்.

பகலில் வேலைகளை முடித்துகொண்டு, பர்வதம் வீட்டிற்கு சாப்பாட்டு கூடையோடு வந்தார் எனில், விஜய் டிவி, ஜீ தமிழ் இரண்டிலும் ஓடும் அத்தனை சீரியல்களையும் பார்த்து ரசிப்பது ஒரு வகை என்றால்

“நாசமா போறவ.. குடும்பத்தை கெடுக்கன்னே சீரியலுக்கு ஒருத்தி இருக்கா”

“ம்.. என்ன ஆட்டம் போட்ட.. வேணுடி உனக்கு”

“ஆத்தி இந்த மகராசிக்கு ஒரு விடிவுகாலமே வராதா அவ மாமியாகிட்ட இருந்து..”

என சீரியல் வில்லிகளை மனதார சபித்தும், கதாநாயகிகளுக்கு பரிந்து பேசியும் ரசிப்பர் பர்வதமும் நாச்சியும்.

இப்படி பகல் கழிந்தால், மாலையில் பாண்டிகள் அடிக்கும் கொட்டம் அங்கே தான். உணவு , உறக்கத்திற்கு மட்டுமே சமரசு வீடு. அவ்வளவு தான் இந்த பாண்டி குடும்பம்.

—————-

அவள் லாவன்யா.. படித்தது என்ஜினிரியங் , ஒரு பிரைவேட் கம்பெனியில் சாப்ட்வேர் அனலிஸ்டாக பணிபுரிகிறாள். அதை செய்யாத, இதை செய்யாதே கிடுக்குபிடி போடும் ஹவுஸ் ஒய்ப் மீனாவிடமிருந்தும், ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் என்ற குரளுக்கு ஏற்ப எப்போதும் வலம் வரும் ராஜசேகரிடமிருந்தும் செய்யும் எல்லா மொள்ளமாரிதனங்களில் இருந்தும் இப்போது வரை தப்பி வருபவள்.

சிகப்பு நிற ஸ்லீவ்ஸ்ஸ் பிளவுஸ், பளபளவென கருப்பில் பளபளத்து, லோ கிப்பில் நழுவ வா வேண்டாமா? என கிறங்கி போய் கிடக்கும் புடவை.

கேட்டாலே இரத்தம், நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி நிற்கும் வகையில் இசை எனும் அரசன் சவுண்ட் சிஸ்டமின் உதவியால் அந்த அறையையே அலற வைத்து அரசாண்டு கொண்டிருக்க

அள்ளி முடிந்திருந்த கூந்தலுக்கு விடுதலை கொடுத்து அலையென காற்றில் பறக்கவிட்டு,

காற்றில் பறந்து கொண்டிருந்த புடவை முந்தானையை அள்ளி சொருகினாள் இடைக்குள்.

ஏற்கனவே லோ கிப்.. இதில் அள்ளி சொருக, வர்ணிக்கவும் வேண்டுமோ..அவளின் அழகை.

“வேலி கட்டி

வெச்சாலும் வெள்ளை

தோளை பாத்துபுட்டா

கடக்க துடிக்குதடா காலு

மங்கியில இருந்து

ஒரு மனுச பையன்

வந்தாலும் இன்னும்

போகலையே வாலு

ஓடும் தண்ணியில

பாசியில்லையே உணர்ச்சி

கொட்டி புட்டா நோயும்

இல்லையே வாழ்க்கை

வாழ்வதற்கே ஜெமினி

எடுத்த படம் அத நான்

உனக்கு மட்டும் காட்ட

போறேன்டா

டொடா டொன்டன்டன்ய்…

டொடா டொன்டன்டன்ய்…

டொடா டொன்டன்டன்ய்… டொட்டொன்ய்….”

பின்னனியில் ஹச்டியில் ஒலித்த பாடலுக்கும், அதற்கேற்ற அவளது நளினம் சேர்ந்த நடனத்திற்கும், ஒடிந்தாடிய இடைக்கும் யாராவது பார்த்திருந்தால் நிச்சயம் விசிறியாகி இருப்பார்கள்.

யாரும் பார்க்காவிட்டால் என்ன? உலகமே தனக்குள் தான் என மார்தட்டிய ஆன்ட்ராய்ட் மொபைலில் அத்தனையும் ரெக்கார்ட் ஆகி இருந்தது.

போனில் ரெக்கார்ட் செய்த வீடியோவை மீண்டும் கண்ணாற கண்டுகளித்து “அழகிடீ நீ.. நீ ஒரு லேடி பிரபு தேவாடி” என நெட்டி முறித்து பத்தோடு பதினொன்றாக போனில் சேமித்து வைத்தாள் அந்த  அழகி.

சிறு வயதில் இருந்தே, இசைக்கு தாளமிடும் கால்கள், நாளாக நாளாக டிவியை பார்த்து முறையாய் ஆட கற்றாள், அதன்பின் கல்லூரியில் தோழிகள் சேர, துணைக்கு ஆள் சேர்ந்த குதூகலத்தில் இன்னும் மெருகேறி நளினமும் சேர்ந்தது அவளது நடனத்தில்.

முன்பு ஏதோ ஆசையில் செய்தது. இப்போதெல்லாம் சோசியல் மீடியாவில் உலாவரும் டான்ஸ் ரீல்ஸ்கள் இவளுக்கும் ஆசையை தூண்டியது.

அதன் பொருட்டு தனியாக, தோழிகளுடன் ஆட்டம் போட்டு அதை மொபைலில் சேகரித்தும் கொள்வாள்.

ஆனால் இதுவரை சோஷியல் மீடியாவில் பதிவேற்றும் எண்ணம் வரவில்லை அதற்கெல்லாம் காரணம் ஒரே ஒரு ஆள் தான். அது அவளது அன்னை மீனா. சமரசுவின் ஒரே தங்கை.

 “நீயே செம பிகரு, இதுல உன் டான்ஸூம் சேருறப்ப சும்மா அள்ளிக்கும்.. அத்தனையும் போனில் போட்டு வச்சிருக்கியே.. இன்ஸ்டாகிராம்ல, யூடிப்புல போட்டன்னு வச்சுக்க, சும்மா காசு பணம் துட்டு மணி மணி தான்” தோழி மகா கூறினாள்.

“போடலாம்டி, ஆனால் அந்த காசு பணத்தையெல்லாம் கைநீட்டி வாங்க நான் உயிரோட இருக்கனும்ல” புருவம் உயர கேட்டவளை, வியப்புடன் பார்த்து

“அப்படி யாருக்குடி நீ பயந்து சாகுற?” மகா கேட்க

“மீனாக்கு தான்” என லாவன்யா சிரிக்க

“அது யாரு மீனா?” முகம் சுளித்தவள் “ஏய் உங்கம்மாடி,எனக்கு பெரிம்மாடி” இவள் ஷாக் ஆனாள்.

“உனக்கு உன் பெரியம்மாவை பத்தி தெரியும், எங்கம்மாவா எனக்கு மட்டும் தான் தெரியும். சொல்றேன் கேளு.. காலையில ஆறு மணிக்கு எழுனும்.. குளிச்சிட்டு தான் அடுப்படிக்கு போகனும், தண்ணியை ‘ஆ’ னு வாயை பொளந்து லபக்னு ஊத்தி தான் குடிக்கனும். சாப்பாட வேஸ்ட் பண்ணகூடாது, மீறி வச்சா அடுத்த வேளை சாப்பாடு கட், இது பிடிக்கலை அது பிடிக்கலன்னு சொல்ல கூடாது. தட்டுல வச்சதை சாப்பிடனும்.. கேட்டா பசிக்கு தான் சாப்பாடு ருசிக்கு இல்லைன்னு உருட்டும். செவ்வாய் வெள்ளி தலை குளிக்கனும், கோவில் போகனும், விளக்கு ஏத்தனும், நோ நான் வெஜ், மீறி திண்ணா.. எனக்கு கும்பிபாகம் தான். வீட்டுல இருந்து ‘அம்மா ஆபிஸ் போறேன்னு சொல்லிட்டு தான் போகனும்’ ஆபிஸ் போனதும் ‘ஆபிஸ் வந்துட்டேன்மான்னு’ நான் சொன்னா கேட்காது, என் ஆபிஸ் ஸ்டாப் விட்டு பேச விடனும். பஸ்ல தான் போகனும், அதுவும் பாஸ்ல தான் போகனும். ஆட்டோ நோ வே.. ஷேர் ஆட்டோ டபுள் நோ வே.. கேட்டால் அழகா இருக்கனாம் கடத்திட்டு போய் கெடுத்துருவான்களாம். அவசரம்னா தான் போனு.. மத்த நேரம் கையில் பார்த்துச்சோ, அடுத்து கரி கட்டைக்கு பதிலா என் போன் தான் விறகு அடுப்புல கிடக்கும். இதுவரை மூனு போனுக்கு போஸ்மாட்டர்ம் பண்ணிருக்கு மீனா..

சரி டீவி பார்க்கலாம்னு போனா,

சீரியல் பார்த்தா – போற வீட்டுல வில்லியாகிடாதன்னு சாபம் வரும்

படம் பார்த்தா – இதெல்லாம் ஒரு படமா, அந்தகாலத்துல வந்தது படம்.. இப்ப வறது எல்லாம் படமா? ன்னு டைரக்டர் மாதிரி பேசும்

சாங் பார்த்தா – வாய கடிக்கிற நேரத்தில நீ வைப்பியா, இல்லை நீ இந்த சேனலை வைக்கிறப்போ அவன் அவளோட வாயை கடிக்கிறானா?ன்னு எகிரும்.. அப்புறம்..” என மூச்சு விடாது பேசிக்கொண்டிருந்தவளின் வாயை இறுகபொத்தி, அவள் முன் வாட்டர் பாட்டிலின் மூடியை திறந்து வைத்து

“மூச்சு விடாமல் பேசுற.. செத்துகித்து போய்டாத.. முதல்ல இந்த தண்ணிய குடி” என மகா, அவளுக்கு பதிலாக புசுபுசுவென மூச்சுவிட

“இப்போ சொல்லு.. இன்ஸ்டால ரீல்ஸ் போட்டா..?”

“கன்பார்ம் உனக்கு சுடுகாடு தான், அதுவும் எலக்க்டிரிக் சுடுகாடு’

“அது..” என சிரித்தவள்,

“கடவுள் தப்பு பண்ணிட்டான் மகா.. எங்க வீட்டில நீயும், உன் வீட்டில் நானும் பிறந்திருக்கனும். எங்கம்மா எதிர்பார்க்குற அத்தனை குணமும் உனக்கிருக்கு, நான் எதிர்பார்க்குற சுதந்திரம் உங்கவீட்டில் இருக்கு. இவ்வளவு ப்ரீடம் இருந்தும் நீ அச்சம், மடம், நாணம், பயிர்ப்புனு இருக்க நீ எங்கே..

மொள்ளமாரி, முடிச்சவிக்கி, பொறம்போக்குன்னு இருக்குற நான் எங்க.. ம்ஹ்ம்…” பெருமூச்சை விட்டாள் லாவான்யா..

லாவன்யாவிற்கு அப்படியே எதிர்பதம் மகா. லாவன்யா மனதில் தோன்றுவதை பேசிடும் ரகம். மகா உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவள்.