“ஏண்டி நாச்சியா, நீயெல்லாம் இவனுகளுக்கு ஆத்தாவாடி.. குடிச்சுபுட்டு அட்டகாசம் பண்ணிட்டு வந்துருக்கானுவ, அதை கேட்டு ரசிச்சு நீயும் கூத்தடிச்சிட்டு இருக்க கூறுகெட்டவளே” பேரனுக்கு என்னானதோ ஏதானதோவென பயந்து, ராதையம்மாள், ஊன்று கோல் உதவியோடு அங்கே வர, வந்தவருக்கோ இவர்களது கேலியும் கலகலப்பும் எரிச்சலை கிளப்ப, தன் திருவாயை திறந்தார் மிக சத்தமாய்.
“தாய்கிழவி வந்துருச்சுடா” என பாண்டிகளும், “ஆத்தி, இங்கேயும் வந்திருச்சா, என் மாமியா” என நாச்சியும் ஒரே கனத்தில் நினைக்க
“நீ இன்னும் சாகலையா கிழவி, ஆவி ஆகியிருப்பன்னு வந்தா, பாவி மாதிரி உலாத்திட்டு இருக்குற” விக்ரா ஆரம்பிக்க
அவன் தோளை தட்டிய செல்லபாண்டியோ “பாவம் பண்ணிட்டடா பன்னி பயலே.. நேத்து நைட் உன் வாயில் ஊத்தினதை தாய்கிழவி வாயில ஊத்தியிருந்தா, இன்னைக்கு காலையில் சங்கே ஊதி இருக்கலாம்” என நக்கலடித்தான்.
“ஏலே படுபாவிகளா.. பேரன் பேரன்னு உசுற கொடுத்து வளர்த்ததுக்கு, என் சாவுலையே குறியா இருக்கீங்களேடா”
“பின்ன இருக்காதா.. நீ மட்டும் 14 வயசுலயே கல்யாணம் பண்ணி அடுத்தடுத்த வருஷத்துல மஜாவா தாத்தா கூட ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ னு குதுரை வண்டி ஓட்டுட்டு, ரெஸ்ட் எடுக்குற ஒவ்வொரு ஸ்டாப்புலயும் ஒவ்வொரு குழந்தையா பெத்து போட்டுட்டு குஜாலா வாழ்ந்திருக்க..
இவனுகளை விடு, இதோ மூத்தவன் வீரா, வயசு 27 ஆச்சு.. எனக்கு 26 கல்யாணம் பண்ணி வைக்க தோணுச்சா..
நீ தான் பண்ணி வைக்க மாட்டுற, நாங்களே பண்ணிக்கலாம்னு பார்த்தா, ஏதாவது நல்லது கெட்டதுல, வந்து இறங்குற அத்த மகள, மாமன் மகள சைட் அடிக்க விடுறியா..?
அத வாங்கிட்டு வா.. இத வாங்கிட்டு வான்னு அவளுக பக்கத்துல இருக்க விடுறதே இல்லை.
இவ்வளவு ஏன் அவளுக முகத்தை கூட பார்க்க விடறது கிடையாது.. மீறி பார்த்தா.. வயசு பொண்ணுக இருக்குற இடத்துல உனக்கென்ன வேலை.. உங்கொப்பனுக்கு என்ன வேலைன்னு, இந்தா இந்த தடியை தூக்கிட்டு வந்திருவ” விக்ரா உக்ரமாய் முறைத்தான்.
“அப்படி கேளுடா..” கன்னம் வழித்து கொஞ்சிய செல்லம் “அதையே தான் நாங்களும் கேட்குறோம் கிழவி.. வயசு பொண்ணுக இருக்குற இடத்துல எங்களுக்கு என்ன வேலைனு விரட்டுதல்ல.. உனக்கு மட்டும் என்ன வேலையாம்? கால காலத்துல எமன்கிட்ட போகமா.. எங்ககிட்ட வம்பிழுத்துட்டு கிடக்குற நீ” எகிறினான்.
“எம்டன் மகன் படம் பார்த்துருக்கியா..” விக்ரா கேட்க
“ஆமா..” நியாபகம் இல்லாத போதும் இவன்களிடம் வாங்கி கட்ட முடியாதென ‘தெரியும்’ என தலையசைக்க
“அதுல வர்ற மாதிரி, இங்க ஒரு சாவு விழனும், இருக்குற பூரா அத்த மகளுகளும் வரிச கட்டி வந்து நிக்கனும்” சட்டமாய் பேச
அதை புரிந்து கொண்ட ராதையோ “அட எடுபட்ட பயலுகளா.. ஏண்டா நீங்கெல்லாம் போற போக்க பார்த்தால் சாவு வீட்டுல சுயம் வரம் நடத்துவீக போல. ஆனா பாரு இங்க சாவுக்கு வர உன் அத்த மகளுக, மாமன் மகளுக எல்லாம் உங்களை பார்த்தவுடனே மயங்கி தாலி கட்டிகிட காத்து கிடக்காளுக பாரு, உங்க லட்சனமயிறுக்கு கிழவிக தான் வரப்போறாளுக பாரு” ராதை சீண்ட
“ஏய் கிழவி நாங்க இருக்குற உசறதுக்கும், கலருக்கும், கம்பீரத்துக்கும் வரிசையா மயங்கி விழுவ தான் போராளுக, நீ பார்க்க தான் போற”
“நீங்க அம்மனமா போன கூட ஒருத்தியும் சீண்ட மாட்டாளுகடா.. ஏலே பாண்டிகளா.. என்னையவா சாவ சொல்லுதீக.. இந்த ஜென்மத்துல உங்களுக்கெல்லாம் கல்யாணமே நடக்காதுடா.. நல்லா இருந்த என் புள்ளைக்கு கல்யாணம் பண்ணி இவகிட்ட மாட்டி சீரழியுறான் என் மகன். அவ பெத்தவனுக தானே நீங்களும்.. எந்த புள்ளை வாழ்க்கையையும் கெடுக்க விட்ருவேனா.. ராதையம்மா டா நானு” அவர்கள் முகத்திற்கு நேராய் ஊன்று கோலை ஒரு சுழற்று சுழற்றிபோட்டுவிட்டு, ஊன்று கோலே இல்லாமல் சிங்க நடையிட்டு சென்றார் ராதையம்மாள்.
செல்லும் ராதையம்மாளை அத்தனை பேரும் விழிவிரித்து பார்த்திருக்க
“ஆத்தாடி ஆத்தி.. இந்த சீரியல் வில்லிகளையெல்லாம் தூக்கி தின்னுடும்டா உங்கப்பத்தா.. இதுவா சாவும்.. என்னையும் உங்களையும் அனுப்பி வச்சுட்டு மெதுவா தாண்டா போய் சேரும்.. சின்ன வயசுல என்னத்த தின்னுச்சோ.. கல்லு குண்டு கணக்கா கிடக்கு.. எனக்கு இந்த முரவாசலை தொளிச்சு தூக்குறதுக்குல்ல.. கழன்டுடுது இடுப்பு” நாச்சி புலம்பி தள்ள
“விடுமா.. தாய்கிழவி இருக்குற வரை என்ஜாய் பண்ணட்டும், எவ்வளவு நாளைக்கு இருக்க போகுது” விக்ரா கூற
எப்போவும் போல எனக்கும் கிழவிக்கும் வாக்குவாதம். என்னைக்குமில்லாமல் கோவிச்சிகிட்டு வீட்டை விட்டு போயாச்சு. நான் இங்கன தான் எங்கையாவது போய் இருக்கும்னு அசால்ட்டா விட்டுட்டேன். சாயங்காலம் வரை வரலை. உங்கப்பன்கிட்ட சொன்னா, இம்புட்டு நேரம் புடுங்குனியான்னு கிழிச்சு தள்ளிட்டார்.
அழுகை ஒரு பக்கம், கிழவிக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பதட்டம் வேறல..
ராத்திரி ஒன்பது மணிவரைக்கும் ஊரூரா சுத்தி அலைஞ்சோம், இதோ இந்த பயலுகளும் அலையாத இடமில்லை”
“பெறவு” விக்ரா அதிர்ந்து பார்க்க.
“காலையில் போலீஸ்டேஷன் போலாம்னு முடிவு பண்ணி வீட்டுக்கு வந்தா, நடுவீட்டுக்குள்ள உக்கார்ந்திருக்கு”
“அடங்கொப்பத்தா.. டேய்…” விக்ரா கத்த..
“உங்கொப்பாத்தா தேன்” சொச்சத்தையும் கேளுடா என அதட்டியவர்..
“ஏத்தை, கோபம்னா வீட்டுக்குள்ள இருந்து காட்டு இதென்ன புது பழக்கம், உங்களை காணோம்னு தேடாத இடம் கிடையாது இம்புட்டு நேரம் எங்க போனீக..” னு நான் கேட்க, சொல்லுச்சே ஒரு பதிலு..’ நாச்சியா நிறுத்த
‘கந்தர்வ கோட்டை சமஸ்தானமே ஆடிப்போச்சுல்ல’ செல்லம் விழுந்து விழுந்து சிரிக்க, வீராவும் சேர்ந்து சிரித்தான்.
விக்ராவிற்கு சுவாரஸ்யம் மேலோங்கியது..
“போக்கிடம் இல்லாம தானே என்ன ஏசிட்டேகிடக்க, நான் எங்கன போக போறேன்.. உன்னை நிம்மதியா இருக்கவிட்டு நான் போய்டுவேன்னு கனவுல கூட நினைக்காதடி..”
“பின்ன எங்க போனீக?”
“பொம்பளைகளுக்கு இலவசமா பஸ் வுட்ருகாகல.. அதான் காத்தாட போய்ட்டு வந்தேன், ஒரு தடவை போய்ட்டு வந்துடலாம்னு தான் பார்த்தேன்.. என் புருஷன்கூட கடைசியா பஸ்ல போனது, அந்த நியாபகத்துல ஐஞ்சாறு தடவை போய்ட்டு வந்துட்டேன். என்ன இந்த கன்டக்கடர் கடன்காரப்பய முறைக்குதான், அவன் பொண்டாட்டி வீட்டு சொத்து மாதிரி, ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையேன்னானாம்’ னு கன்டக்கடருக்கு நாழு வசவு, கட்டையில போற வயசுல காத்தாட போச்சாம்.. அதுவும் அஞ்சாறு தடவையாம், இதுல சொலவடை வேற.. கேட்டியா..” என்ற நொடி விக்ராவிற்கு வெடித்து கிளம்பியது சிரிப்பு சத்தம்.
“இவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணுதாமா இந்த கிழவி” சிரிப்பினூடே இவன் கேட்க
ஏதோ சொல்ல வாயெடுத்த நாச்சியை தடுத்து “ஏண்டி நாச்சியா.. புள்ள அடிபட்டு கிடக்கு நீ பேசிட்டே இருக்குத, இந்தா பச்சலை.. போட்டு விடு புள்ளைக்கு” வெங்கல கிண்ணத்தில் இலையரைத்து எடுத்து வந்திருந்தார் பர்வதம், நாச்சியின் அன்னை.
“அய்யோ ஆமாம்மா மறந்தே போய்ட்டேன் குடு குடு” என வேகமாய் வாங்கி, “ஏலே விக்ரா.. வாவே இங்க” விக்ரா மறுக்க மறுக்க, இழுத்து வந்து ஸ்டூல் அமர வைத்து, அவன் கத்த கத்த இலையை வீங்கி, இரத்தம் கன்றிய இடங்கள் முழுதும் போட்டுவிட்டு தான் நிமிர்ந்தார்.
மருந்திடும் போது தான் அத்தனை பேரும் கவனித்தனர் காயம் சற்று அதிகம் தான் என படர்ந்திருந்த சிரிப்பு உறைந்து போனது.
“ம்மா பசிக்குது.. சோத்த போடுவியா மாட்டியா?” வீரபாண்டி அவரை திசை திருப்ப..
“இதே பத்தே நிமிசம்யா.. ம்மா குடிக்க புள்ளைகளுக்கு குடிக்க காபிதண்ணி குடும்மா.. அதுக்குள்ள சமையலை முடுச்சடுவேன்” பர்வதத்திடம் சொல்லி கொண்டே இவர் வீட்டுக்கு நடையை கட்டினார் நாச்சியார். .
விக்ராவின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்த வீரா.. “இப்போ கவலை பட்டு என்ன பிரயோஜனம்? பாயுறதுக்கு முன்னாடி அதையெல்லாம் யோசிச்சு இருக்கனும்” நய்யாண்டி பேச
“பின்ன கவலை இருக்காதா? ஏதாவது கசமுசா ஆகி, அதுக்கு பிறகு அடி வாங்கி இருந்தா கூட கவலை பட மாட்டேன்டா.. ஆனால் எதுவுமே நடக்காமல் அடி வாங்கினது தான் கஷ்டமா இருக்கு” விக்ரா முகம் சுருக்க, கடுப்பானான் வீரா.
“ம்க்கும் அதான பார்த்தேன்.. நீயாவது கவலைபடுறதாவது? நீ பாய்ஞ்ச பாய்ச்சலுக்கு இந்த அடிலாம் கம்மிவே, இன்னும் நாலு சேர்த்து வச்சிருக்கனும்” வீரா எகிற
“அதெல்லாம் விடு, நேத்து பேய்னு நினைச்சு பதறியடிச்சு நாங்க ஓட, நீ மட்டும் அது பொண்ணுன்னு எப்படிவே கண்டுபுடிச்ச?” செல்லம் ராகம் போட்டு இழுக்க
‘ஹ்ம்ம்.. ஹாஆஆ’ மூச்சிழுத்து வாய் திறந்து “ஸ்மெல் பண்ணேன்” விக்ரா கண்ணடிக்க
“எப்புட்றா? பொண்ணுகளை மட்டும் மோப்பம் பிடிக்குற” வீரா அதிசயிக்க
“பிகாஸ் ஐ லவ் கேர்ள்ல்ஸ்” மீண்டும் இவன் கண்ணடிக்க
“ஆரம்பிச்சுட்டாண்டா.. இவன் இங்கிலீஷை” செல்லம் தலையடித்துகொள்ள
“ஐ லவ் எ கேர்ள்னு சொல்லு.. அதென்ன கேர்ள்ல்ஸ், பன்மைல வருது” வீரா பொங்க
“பல பொண்ணுகளை பார்த்தா பன்மைல தான் வரும்” இன்னுமே கண்ணடிக்க
“டேய் என்னலே சொல்ற.. அப்படி எத்தனை பேரவே லவ் பண்ற?” செல்லத்திற்கு புகைச்சலே கிளம்பியது.
“அது சஸ்பன்ஸ்..” ஒற்றைவிரலை வாயில் வைத்து ‘’ஸ்ஸ்ஸூ” என சொல்ல..
“நீ சொல்றதையெல்லாம் பார்த்தாக்க..” என பேசிக்கொண்டிருந்த வீராவை தடுத்து “எங்கடா சங்கரை காணோம்?” விக்ரா கேட்கும் போதே
“ஓ.. திசை திருப்புறீகளோ.. இதுக்கு மேல ஏதாவது கேட்டா செருப்பால அடி” நேரடியாகவே கேட்டு குட்டு வைத்தவன்