சில்லென புது மழைத்துளி!

16

சுபிக்கு, கரணின் நட்பும் அக்கறையும்.. பயத்தைத்தான் கொடுத்தது. ஆனால், ஒரு ஒரமாக சின்ன இதத்தையும் கொடுக்கிறது. என்னமோ சட் சட்டென பேசினாலும்.. கோவம் கொண்டாலும்.. அவனிடம் பேச பயம். எங்கே கரண் தன்னை நெருங்கிடுவானோ என.. பயம். கரணின் அக்கறை தன்னை நெருங்க வேண்டாம்.. அன்று பேசியது போல.. ஒரு பேச்சு வேண்டாம்.. அதுதான் நான் பார்க்கமாட்டேனா விசாவை.. என்றது.. இது நல்லதில்லை.. முன்பு போல, நெருங்கிடாமலே இருந்திடலாம்.. நான் கொஞ்சம் அமைதியாக இருந்தாலே போதும்.. என முடிவெடுத்துக் கொண்டாள்.. அதனால் கரணை அழைக்கவில்லை பெண். 

கரண், சுபியின் அழைப்பினை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் மறுநாள் மதியம் வரை. எப்போதும் போல கரணுக்கு ஏமாற்றம்தான். சுபி, கரணின் கண்களில் படவேயில்லை.. அழைத்து பேசவும் இல்லை.

விசாகன்தான் எக்ஸாம் முடிந்து வந்து ‘தேங்க்ஸ் அங்கிள்’ என்றான், பின் ‘எல்லாம் ஈசியா இருந்தது அங்கிள்’ என்றான். கரண்க்கு சந்தோஷம்தான்.. ஆனால், சின்ன நக்கல் புன்னகை அவனிடம்.. ‘அவ சொல்லமாட்டாளாம்’ என. ம்.. சுபி ஒரு நன்றி கூட சொல்லவேயில்லை.. கரண் நன்றியை எதிர்பார்க்கவில்லை.. அவளின் அழைப்பினைதான் எதிர்பார்த்தான். அப்படியாவது அவள் பேசுவாள் என எதிர்பார்த்தான். நடக்கவில்லை.

கரணும் அழைக்கவில்லை. மனது எதையும் உடனே வேண்டும் என அடம் செய்யவில்லை. நிதானித்தது.

நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தது.. சங்கீதா இந்தியா வருவதற்கு. ஆனால், வீடு இன்னமும் அமையவில்லை. இந்த வாரத்தில் நான்கு வீடுகள் புரோக்கர் மூலமாக சங்கீதா பார்த்து வைத்திருக்கிறாள். ஆனால், சுபி இன்னமும் நேரில் சென்று பார்க்க முடியவில்லை.. வேலை சரியாக இருந்தது.

சுபி, சங்கீதாவிடம் இன்று கண்டிப்பாக பார்த்து விடுகிறேன் என சத்தியமே செய்திருந்தாள். ஞாயிறு விடுமுறைதான். ஆனால், காலையில் முக்கிய வேலை என கிளம்பி சென்றாள் சுபி. விசாகன் லேட் எழுவதற்கு.  சமையல் செய்யும் அக்கா வந்ததால், மகனை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு.. கிளம்பினாள்.

விசாகனுக்கு, எக்ஸாம் முடிந்துவிட்டது. ஒருவாரம் விடுமுறை. குரு இன்று அத்தை வீட்டிற்கு சென்றிருக்கிறான்.. குரு விசாகனையும் அழைத்தான் ஆனால், சுபி அனுப்பவில்லை. குரு சுபியிடம் வந்து நின்றான்.. சுபி ‘இல்ல டா தங்கம்.. அவன் ஸ்கூலில் ஸ்விம் கிளாஸ் போக போறானே’ என சொல்லினாள். விசாகன் குரு இருவரும் சோகமாக சென்றனர்.

குரு, தன் தந்தையிடம் வந்து புலம்பினான். கருணா ‘டேய்.. ஒருவாரம்தானே.. போயிட்டு வா.. தீபு அஸ்வின் எல்லாம் இருப்பாங்க’ என சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்.

கருணாவிற்கு, சுபியின் மேல் இதனாலோ என்னமோ இன்னமும் இன்னமும் ஈர்ப்பு கூடியது. ‘எந்த வகையில் அவள் தன்னை உதவிக்காக என கூட நாடுவதேயில்லை..’ என மதிப்பும் ஈர்ப்பும் அதிகமாகியது.

நேற்று இரவு சங்கீதாவிற்கு அழைத்து பேசினான். குழந்தை எப்படி இருக்கிறாள் என பேசினான். அப்போதுதான் அவள் இங்கேயே வருவது தெரிந்தது.. சுபியிடம் வீடு பார்க்க சொல்லியிருப்பதும் தெரிந்தது, கருணா இயல்பாக ‘என்கிட்டே சுபி சொல்லவேயில்ல.. காவேரி நகரில் இப்போதான் அப்பார்ட்மென்ட் ஒன்னு முடிந்திருக்கு. நம்ம ப்ரெண்ட் ப்ராஜெக்ட்தான்.. பிளாட் நாலு இருக்கு சேல்ஸ்க்கு. வேவேணும்மா நீ வாங்கிக்க.. ஜஸ்ட் டௌன் பேமென்ட் மட்டும் கொடு. எதிர் பக்கம்தான்.. தூரமில்லை.. சுபியை கூட்டி போய் காட்டுறேன்.. அவ போட்டோஸ் அனுப்புவா.. பார்த்துட்டு சொல்லு’ என்றான்.

சங்கீதா “அப்படியா, அவளுக்கு வேலை நிறைய இருக்குன்னு.. நான் பார்த்திருந்த நாலு வீட்டினையும் இன்னும் அவ பார்க்கல. இன்னிக்கு பார்க்கிறேன்னு சொல்லியிருக்க. ஆனால், நீ சொல்றது சேல்ஸ்.. கரண். எனக்கு அந்த ஐடியா இல்லையே.. ஒத்துவருமா..” என்றாள்.

கரண் “நீ உன் ஹஸ்பன்ட் கிட்ட பேசிப்பாறேன்.. ரெண்ட்.. EMI.. எல்லாம் கணக்கு செய்து பாரேன்.. பேசு, யோசித்து சொல்லு.. இல்லைன்னாலும் ரென்ட்’க்கு பார்க்கலாம்.” என்றான். 

கருணாவிற்கு சங்கீதாவிடம் பேசியது முதல் சுபியை பார்த்தே ஆகவேண்டுமென எண்ணம். ‘என்ன பண்றா அவ.. ஒரு வார்த்தை சொன்னால் என்ன.. வீடு பார்க்கவும் தனியாதான் அலைவாளாம்..’ அக்கறை வந்து தொலைத்தது.

ஞாயிறு காலையில் எப்போதும் போல தாமதமாக எழுந்தவன்.. உண்டு முடித்து.. சுபிக்குதான் அழைத்தான் மான ரோசம் பார்க்காமல்.

சுபி வேலையில் இருந்ததால் அழைப்பினை ஏற்கவில்லை. அதன்பின் தானாக அழைத்து என்னவென கேட்க்க.. கரண் “சங்கீதா.. வீடு, பார்க்க உனக்கு டைம் இல்லைன்னு சொன்னால்.. அதான், எங்கேன்னு கேட்டு நான் போகலாம்ன்னு..” என்றான்.

சுபி “அதுக்குள்ளே அவ உங்ககிட்ட சொல்லிட்டாளா. இப்போது அங்கேதான் போயிட்டு இருக்கேன் கரண். நான் மேனேஜ் செய்துக்கிறேன்.. தேங்க்ஸ்” என்றாள்.

கருணாகரன் பல் கடிக்கும் சத்தம் இங்கே வரை கேட்டது. ம்.. அவளுக்கே கேட்டது. 

சுபி “கரண்.. அது, நான் இன்னிக்கு ப்ரீ அதுதான் சொன்னேன்” என்றாள், சமாதானம் செய்யும் குரலில்.

கரண் “நீ எல்லாவற்றையும் பார்த்துப்ப எனக்கு தெரியும். உனக்கு தைரியம்தான்.. நான் இல்லைன்னு சொல்லல.. பார்த்துக்கோ” என்றவன் போனினை வைத்துவிட்டான்.

சுபிக்கு தன்னை நொந்துக் கொள்ள மட்டுமே முடிந்தது. சற்று நேரம் சென்று அழைத்தாள்.. ஆனால், கரண் அவளின் அழைப்பினை ஏற்கவில்லை. 

சுபி ஆப் மூலமாக சென்று வீடுகள் பார்த்து.. அக்காவிற்கு புடைப்படம் எடுத்து அனுப்பினாள். சங்கீதா அப்போதுதான் கரண் பேசியது பற்றி சொல்ல.. சுபி அக்காவிடம் “நீ பேசு க்கா, லஞ்ச் முடிச்சிட்டு.. அவர் ப்ரீ ‘யா இருந்தால் கேளு.. நான் போய் பார்த்துட்டு வந்திடுறேன்” என்றாள்.

சங்கீதா “சரி” என்றாள்.

சுபி வீடு வந்தாள்.. அப்போது குரு விசாகன் இருவரும் மேலே விளையாடிக் கொண்டிருந்தனர். வேலை செய்பவர் இருந்தார். சுபியை பார்த்ததும் கிளம்பிவிட்டார்.

சுபி உண்டு முடித்து.. கரணின் அழைப்பிற்காக காத்திருந்தாள். பொறுமை பறந்துக் கொண்டிருந்தது. அப்படியே உறங்கியும்விட்டாள் சுபி. ஐந்து மணிக்கு, குரு விசாகன் இருவரும் பசிக்குது என வர.. சுபி எழுந்தாள்.

பிரிட்ஜ்சில் கார்ன் இருக்க.. அதை கொண்டு ஸ்னாக்ஸ் செய்துக் கொண்டிருந்தாள்.. சங்கீதா அழைத்து.. “சுபி, கரணுக்கு வேலை இருக்காம்.. உனக்கு லொகேஷன் அனுப்புகிறானாம்.. நீ பார்த்துட்டு வந்திடு. ப்ளீஸ் இன்னிக்கே போ சுபிம்மா.. மாமா வீடு லோன் எடுக்கலாம்ன்னான்னு பார்த்துட்டு இருக்கார்..” என்றாள்.

சுபிக்கு மனம் தெளிவில்லாமல் போக.. உணவுகளை கொண்டு வந்து பசங்களுக்கு கொடுத்தாள்.. ‘என்னதான் பிரச்சனை இவனுக்கு.. என்னோடு வரமாட்டானாமா.. அப்போ எதுக்கு.. காலையில் போன் செய்து கேட்க்கனும்.. என்ன சொன்னேன்.. நான் ப்ரீ’ன்னு சொன்னேன்.. அவ்வளவுதானே’ என பொருமிக் கொண்டே கரணுக்கு அழைத்தாள். இரண்டு மூன்று.. நான்கு.. ஐந்தாம் முறைதான் எடுத்தான் கரண்.

சுபி “கரண்.. பத்துநிமிஷத்தில் நான் கிளம்பிடுவேன். என் காரிலேயே போய்டலாம் வருவீங்களா” என்றாள்.

கருணா “சுபி.. சங்கீதாகிட்ட நான் பேசிட்டேன்” என்றான்.

சுபி “ஏன்? என் கிட்டே பேசமாடீங்களா” என்றாள்.

கரண் அமைதியானான்.. பேசு பேசு என கேட்டுக் கொண்டிருந்தான்.

சுபி “என்ன சொல்றீங்க” என்றாள்.

கரண் பொறுமையாக தலையை கோதிக் கொண்டே இங்கும் அங்கும் நடந்தான். மீண்டும் ஒருமுறை சுபிக்ஷா கரணை ‘போலாமா’ என கேட்கவும்.. “சரி, சீக்கிரம் கிளம்பு, என் காரில் போகலாம்” என்றான்.

இருவரும்.. கிளம்பினர்.

விசாகன் குரு இருவரும் குரு வீட்டில் விளையாடினர்.

கரண் சொன்ன புதிய அப்பார்மென்ட்க்கு அழைத்து சென்றான். நான்கு ப்ளாக்’க்குகள், ஒவ்வொரு ப்ளாக்’கும் ஐந்து தளங்களை கொண்ட அப்பார்மென்ட். ஒவ்வொரு தளத்திலும் இரு வீடுகள் மட்டுமே.. நல்ல ஆடம்பரமான வீடுகள், வசதிகளை கொண்ட இடம்.

சுபிக்கு இந்த வீடு.. சூழல் எல்லாம் மிகவும் பிடித்துவிட்டது. புகைப்படங்கள் எடுத்தாள்.. அக்காவிற்கு இப்போது இரவு நேரம், அதனால் அழைக்கவில்லை.. சில இடங்களை ரசித்துக் கொண்டிருந்தாள்.. கரண் இதன் விலை.. மதிப்பு பொருட்களின் தன்மை என சொல்லிக் கொண்டிருந்தான். சுபியின் கண்களின் ரசனை பார்த்து.. அமைதியாகினான்.

சுபி “இந்த வீடு அழகா இருக்குன்றத விட அமைப்பாக இருக்கு.. கரண். ஜன்னல்.. கதவு.. பால்கனி காற்று.. ம் நல்லா இருக்குல்ல.. கரண்” என்றாள், கண்கள் விரிய.

கரண் அவளையே ரசித்துக் கொண்டு “ம்..” என்றான்.

சுபி அடுத்த அறைக்கு சென்று பார்க்க தொடங்கிவிட்டாள்.. கரண் பால்கனிக்கு சென்று நின்றுக் கொண்டான்.

இருவருக்கும் தங்களின் தனிமை குறித்து வருத்தம்.. வீடு என்பது எப்போதும் கட்டிடம் அல்ல.. சில வீடுகளை பார்த்தால் உணர்வுகள் மேலெழும்.. அதன் தாக்கம் இருவருக்கும்.. தனித்தனியே நின்றனர்.. ‘எங்கே வந்துவிட்டோம்.. சந்தோஷங்கள் என வாழ்க்கை வகுத்து வைத்திருக்கும் எல்லாவற்றிலிருந்தும்.. தள்ளி வந்துவிட்டோம். எங்காவது சந்தோஷம் கிடைக்குமா என தேடிக் கொண்டிருக்கிறோம்..’ என எண்ணிக் கொண்டே அவள் கிட்செனில் நிற்க.. கரண் பால்கனியில் நின்றிருந்தான்.

சுபி தன்னை மீட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்து வீடியோ எடுத்துக் கொண்டு.. வர.. கரண் “போலாமா” என வாசலில் நின்றான்.

இருவரும் காரில் அமைதியாகவே வர கரண்தான் “சாப்பிட்டு போலாமா” என்றான்.

சுபி மெல்லிய குரலில் “கரண்.. க்கும்” என்றாள்.

கரண் அமைதியானான்.

சுபி திரும்பி பார்த்தாள்.. கரண் அவளை பார்க்கவில்லை.. சுபி “கரண், நாம அடிக்கடி சந்திக்கிறோமோ.. அது.. க்கும்.. வேண்டாமே” என்றாள்.

கரணிடம் எந்த அசைவும் இல்லை.

“ஏன்னா.. ஏன்னா, நமக்கு பசங்க இருக்காங்க இல்ல.. அவங்க மனசில் ஏதாவது தப்பாக வந்திட போகுது. அத்தோட.. எனக்கு சொல்ல தெரியலை கரண்.. வேண்டாம்” என்றாள்.

அவனோ “ம்.. யார் அந்த ஆள்.. உனக்கு சொந்தமா” என்றான், சம்பந்தமே இல்லாமல்.

பெண்ணவள் “கரண்..” என்றாள்.

“அவன்.. உன் உன் புருஷனோட தம்பி போல.. பங்காளி. ம்.. பாரேன்.. பங்காளி.. உன்னைத்தான் கட்டிப்பேன்னு நிக்கறானாமே.. ம்.. சங்கீதா சொன்னால்.. சந்தோஷம்.” என்றான் உணர்வுகளற்ற குரலில்.

சுபியின் கண்ணில் நீர் திரண்டது.. அதை அவனுக்கு காட்டாமல் வெறித்து பார்த்து அமர்ந்திருந்தாள்.

கரண் “அஹ.. சுபி உனக்கு ஒன்னு சொல்லவா.. குருவிற்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. ம்.. அவனுடைய கண்களை பார்த்திருக்கியா நீ” என்றான்.

சுபியின் செல்லெல்லாம் சட்டென பூத்தது.. ‘ம்.. எங்கோ மறைந்திருக்கும் ஒரு அன்பிற்கு.. இன்னொரு சாட்சியை சேர்க்கிறான் இவன்.. இவனிற்கு ஏதுமில்லை என சொல்லவில்லை.. மகனுக்கு பிடிக்குமாம்..’ என லேசாக புன்னகை வந்தது அழுகை மாறி. வருத்தம்.. சந்தோஷம்.. என மாறி மாறி உணர்வுகளால்..  தைக்கிறது மனது.

கரண் “வா சாப்பிடலாம்..” என சொல்லி இறங்கினான்.

அப்போதுதான் கார் நின்றிருந்ததை உணர்ந்தாள் பெண். தன் கண்களை துடைத்துக் கொண்டு.. கீழே இறங்கினாள்.

சுபி “பசங்களுக்கு வாங்கிடலாம்.. நான் ஆன்ட்டி கிட்ட போன் செய்து சொல்லிடுறேன்” என்றாள்.

கரண் தலையசைத்தான் சரி என.

நல்ல பெரிய உணவகம்.. கூட்டம்.. இவர்கள் பொறுமையாக நின்று.. இடம் பார்த்து அமர்ந்தனர். இருவரும் தங்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்து வாங்கி உண்டனர்.. பிள்ளைகளுக்கும் வாங்கிக் கொண்டு கிளம்பினர். ‘ஏன் பேசவில்லை..’ என அவர்களின் மனங்கள் கேட்கவேயில்லை.. அருகாமை உணர்வு நிரம்பி வழிந்தது அவர்களுக்குள்.

 சுபி உணவுகளோடு தன் வீடு செல்ல.. கரண் பிள்ளைகள் இருவரையும் அங்கே அனுப்பி வைத்தான்.

அன்னை “என்ன டா.. சாப்பிடனும் பசங்க” என்றார்.

மகனோ “அங்க அவ வாங்கிகிட்டு வந்திருக்கா ம்மா” என சொல்லிவிட்டு நிற்காமல் மேலே சென்றுவிட்டான். அன்னை தந்தை இருவரும் பார்த்துக் கொண்டனர் தங்களை. எதோ நடக்கிறது.. உண்மையை சொல்லாமல் இவர்களிடம் என்ன கேட்பது என எண்ணம்.

மறுநாள் சங்கீதா கரண் சுபி மூவரும் கான்பரன்ஸ் காலில் பேசினர். சுபிக்கு வீடு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், கார்த்திக்கு இடம் வாங்கி வீடு கட்டவதுதான் எண்ணமாம் அதனால், வாடகைக்கு வேறு வீடு பார்க்கலாம் என்றுவிட்டாராம்.

கரண் அதற்கும் ஏற்பாடு செய்கிறேன் என்றான்.

சுபியை அலையவைக்காமல்.. தானே, தனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி.. போட்டோஸ் எடுத்து.. சங்கீதாவிற்கு அனுப்பி என கரண் வேலை செய்தான்.

சுபி நான்குநாட்கள் சென்று அழைத்தாள் கரணுக்கு “நான் வேணும்ன்னா.. போய் பார்க்கிறேன் கரண். எங்கே வீட்டிருக்கு சொல்லுங்க..” என்றாள்.

கரண் “அப்போ என்னையும் பார்க்கணுமே நீ.. நீதான் பார்க்க வேண்டாம்ன்னு சொல்லியிருக்கியே. ஓகேன்னா சொல்லு போலாம்” என்றான், கிண்டலாக.

சுபி “உங்களை.. உங்களுக்கு.. என்னமோ செய்ங்க.. நீங்க கஷ்ட்டப்படுறீங்களேன் கேட்டேன்..” என்றான் எரிச்சலாக.

கரண் “ப்பா.. எவ்வளோ அக்கறை. போ.. போய் வேலைய பாரு டி.. போனால் போகுதேன்னு உனக்கு ஹெல்ப் பண்றேன். உங்க அக்கா.. சென்ட்ரலைஸ் AC வேனும்ங்கறா.. எல்லா வசதியும் கேட் உள்ளேயே வேணுமாம்.. நச்சு அவ.. அவளை என்னாலேயே சமாளிக்க முடியலை.. நீ வேற.. போய் வேலைய பார்.. நான் பார்த்துக்கிறேன்.” என்றான் விளையாட்டான குரல் என்றாலும் எப்போதும் போல அதில் அக்கறைதான்.

சுபி சிரித்தாள்.. “கரண் டி’ன்னு என் புருஷனே சொல்லமாட்டார்.. நீ சொல்லாத” என்றாள்.. இயல்பான குரலில்.

கரண் “என்ன லக்ஷ்மி பத்தி பேசினால்.. கேட்டுப்பேன்னு நினைச்சியா. போ.. இதெல்லாம்.. என்ன ஏதுன்னு ஆராயாத.. வை.. வேலையிருக்கு எனக்கு..” என கடிந்தவன், அழைப்பினை துண்டித்துவிட்டான்.

என்னதிது.. என பெண்ணவள் யோசித்தாள்.

சங்கீதா குடும்பமாக  இந்தியா வந்து சேர்ந்தாள்.

சுபிக்கு வேலை சரியாக இருந்தது. அதிகமாக இவர்களோடு நேரம் செலவிட முடியவில்லை. கார்த்திக் குடும்பம் எப்போது வந்து பேத்தியை பார்ப்பது என தயாராக இருந்தனர்.

அதனால், இரண்டு நாளில் புது வீட்டுக்கு குடியேறினர் கார்த்திக் சங்கீதா தம்பதி. கார்த்திக் உறவுகள் அங்கே வர.. சங்கீதா பிசி.

சுபியின் பெற்றோருக்கு இன்னமும் பயண அலைச்சலே தீரவில்லை. அதற்குள் பால்காய்ச்சும் வைபவம்.. பேத்தியை பார்க்க வருவோர்.. போவோர்.. என இன்னமும் பிசி.

சுபி எப்போதும் போல வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த கலாட்டாக்குள் அவள் வரவில்லை.