குன்னூர் கோயில் திருவிழா நடைபெற்றது. சதானந்தம் பெரியவரிலிருந்து லக்ஷன் வரை சர்வாவின் குடும்பத்தினர் கோயிலுக்கு வந்திருந்தனர். பிரதீப்பும் அவனது பெற்றோர் மட்டும்தான் வரவில்லை.  திருவிழா சிறப்பாக நடைபெற கொடை கொடுத்ததோடு அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். 

ராஜன் குலத்து பெரியவர்தான் விக்கிரஹம் எங்கு இருக்க வேண்டுமென அம்மனிடம் உத்தரவு கேட்கும் சீட்டுக்களை தயாரிக்க வேண்டும். அவரால் விக்கிரஹம் தங்களை விட்டு செல்வதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆகவே போக கூடாது என உத்தரவு வரும் படியே இரண்டு சீட்டுக்களிலும் எழுதி விட முன்னரே முடிவு செய்திருந்தார். 

அவர் மீது அனைவருக்கும் நம்பிக்கை என்பதால் எழுதப் பட்ட பிறகு சீட்டுக்களை பரிசோதித்து பார்க்கும் பழக்கமெல்லாம் அங்கு கிடையாது. ஆனால் இந்த முறை எழுதிய பின்பு பார்க்க வேண்டும் என அடமாக சொன்னான் சர்வா. 

“அவ்ளோ சந்தேகமா எங்க மேல? அப்ப நீங்களே எழுதுங்க, வாங்க” கோவமாக சொன்னார் ஒருவர். சீட்டு எழுதப் போன பெரியவருக்கு வியர்த்து விட்டது. 

சதானந்தம் தாத்தா  அதற்கெல்லாம் அவசியமில்லை, நம்மை ஆட்டுவிப்பதே இறை சக்திதான், அம்மனை முழுதாக நம்பி நடப்பதை பொறுமையாக பார்ப்போம் என சொல்லி விட்டார். நம்பியும் பெரியவரின் சொல்லை ஆமோதிக்க, சர்வா அமைதி காக்க வேண்டியதாகி விட்டது. 

“உங்க ஆளு முழியே சரியில்லை, கண் மூடித் தனமா இப்படியா அவரை நம்புறது? எடுத்திட்டு போக கூடாதுன்னு மட்டும் சீட்டு வரட்டும், இன்னொன்ன பிரிச்சு பார்க்காம அந்த முடிவை நான் ஒத்துக்க மாட்டேன்” மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் சர்வா. 

“பொது இடத்துல உங்களை நல்லா திட்ட முடியலையேன்னு இருக்கு. பாசிட்டிவா நினைச்சிட்டு ஒழுங்கா இருங்க” என மித்ரா அழுத்தமாக சொல்ல, அவனோ ‘விக்கிரஹம் இல்லாமல் போக மாட்டேன் இங்கிருந்து!’ எனும் உறுதிப் பார்வையோடு நின்றிருந்தான். 

விக்கிரஹம் சர்வா குடும்பத்திற்கே செல்ல வேண்டும் என்றே உத்தரவு வந்தது.  சதானந்தம் தாத்தாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மற்றவர்களுக்கும் சற்றே உணர்ச்சிகரமான நிலைதான். 

ராஜனின் குலத்தை சேர்ந்தவர்களுக்கு  அதிர்ச்சிதான் என்றாலும் கடவுளின் உத்தரவை ஏற்றுக் கொண்டார்கள். சீட்டு எழுதிய பெரியவரோ அதிர்ச்சியும் குழப்பமுமாக காணப் பட்டார். 

தன் மனநிலைக்கு முற்றிலும் எதிரான வகையில் எப்படி இரண்டு சீட்டுக்களிலும் சர்வாவுக்கு சாதகமானதை எழுதினார் என அவருக்கே புரியவில்லை. தான் வெறும் மனிதன், தன்னை மீறிய சக்தி இருக்கிறது என புரிந்தவராக அம்மனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு வணங்கினார். 

பழைய விக்கிரஹம் போலவே புதியதாக ஒன்று செய்யப் பட்டது. சிறப்பு ஹோமங்கள் செய்து பதினெட்டு நாட்கள் மந்திர உச்சாடனம் செய்து அந்த விக்கிரஹத்துக்கு உருவேற்றப் பட்டது. அனைத்தையும் முன்னின்று செய்தார் சதானந்தம் தாத்தா. 

 புதியதை அந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்த பிறகுதான் தங்கள் குல தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மனின் விக்கிரஹத்தை பெற்றுக் கொண்டார் சதானந்தம் தாத்தா.

பயபக்தியோடு விக்கிரஹத்தை கையில் வாங்கிக் கொண்ட சதானந்தம் தாத்தா கண்களில் ஒற்றிக் கொண்டார். கண்ணீரால் விக்கிரஹத்தை அர்ச்சித்தார். 

சென்னை திரும்பிய பிறகு அவரது குடிலிலேயே விக்கிரஹத்தை வைத்து சிறப்பு பூஜை செய்தார். திடீரென வானிலை மாறி மேகம் கறுத்து மழை பொழிந்தது. அம்மனின் கருணை கிட்டி விட்டதாக சொன்ன தாத்தா துதிப் பாடல்கள் மூலம் அனைவரையும் பக்தியில் திளைக்க வைத்தார். 

குடும்பத்தின் மற்ற பெரியவர்கள் இனி தங்கள் வம்சத்திற்கு சாப விமோசனம் முழுமையாக கிடைத்து விட்டது என நம்பிக்கை பெற்று நிம்மதி அடைந்தனர். 

மென்மேலும் பொருளை சேர்த்துக் கொண்டே போவது தவறில்லை, அதற்கு ஏற்றார் போல தர்ம காரியங்களையும் செய்ய வேண்டும் என்பதை தானும் கடைபிடித்து தன் அடுத்த தலைமுறையையும் கடைபிடிக்க வலியுறுத்தினார் அறிவுடை நம்பி. 

இளைய தலைமுறையும் அதை ஏற்றுக் கொண்டனர். தங்கள் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம், அவர்களின் நலனில் அக்கறை என சிறப்பாக செயல்பட்டனர்.  

மாதக் கணக்கான சிகிச்சைக்கு பின் முற்றிலும் குணமாகி தாயகம் திரும்பினான் பிரதீப். பழைய சோகங்கள், இழப்புகள் அனைத்தும் கடந்து போய் அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோஷமும் மீண்டு விட்டது. 

சர்வாவோடு  பிஸினசை கவனிக்க ஆரம்பித்திருந்தாள் மித்ரா. பொறுமையாக மனைவிக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தான் சர்வா. அவள் மீது பித்தாக இருந்தான். எங்கும் அவள் மீதான தன் அன்பை அக்கறையை வெளிப்படுத்துவதில் வெட்கமோ தயக்கமோ கொண்டதே இல்லை அவன். 

கணவனுடனான தன் வாழ்க்கையை நினைத்து பூரித்தப் போனாள் மித்ரா. 

ஒரு நாள் அவர்களின் அன்பிற்கு சாட்சியாக புத்துயிர் ஒன்று உதித்திருப்பதும் தெரிய வந்தது. 

வீடு மீண்டும் மகிழ்ச்சியில் திளைத்தது. 

மித்ராவின் வளைகாப்பை இரு பக்க சொந்த பந்தங்களை கூட்டி வெகு சிறப்பாக நடத்தினான் சர்வா. 

எல்லா ம் நன்றாக சென்று கொண்டிருக்கையில் உறக்கத்திலேயே இறந்து போனார்  மெய்யப்பன். அனைவரும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். 

தன் மகனை போல பாவித்து கவனித்து வந்த ருக்மணிதான் அதிகம் நொறுங்கி விட்டார். அனைவரையும் தாங்கிய ருக்மணியை வயிற்றுப் பிள்ளையோடு தாங்கினாள் மித்ரா. 

கணவரின் இழப்பை எண்ணி எண்ணியே ஒடுங்கிப் போயிருந்த காஞ்சனாவும் ஓரகத்தி என்றாலும் உடன்பிறவா சகோதரியாக தன்னை கவனித்து கொண்டவரை நன்றாக கவனித்துக் கொண்டார். 

“கூட்டிலிருந்து அவன் ஆன்மாவுக்கு விடுதலை கிடைச்சு மோட்சம் பெற போயிட்டான். யாரும் கவலை படக்கூடாது” என ஆறுதல் சொன்ன சதானந்தம் பெரியவர் இனி தானும் இங்கில்லாமல் தேசாந்திரம் போக போவதாக அறிவித்தார். 

மற்றவர்கள் அவரை தடுக்க பார்த்தனர். 

“என் பிறப்போட கடமை முடியற நேரம் வந்திடுச்சு. என்னதான் எல்லாத்தையும் துறந்தவன்னு நான் சொல்லிக்கிட்டாலும் இந்த குடும்பத்து நலனுக்காக நாளும் பொழுதும் பிரார்த்தனை பண்ணிட்டே இருந்தேன். உலக பற்றை முழுசா துறக்கணும்னா நான் இங்க இருக்க கூடாது. முழு மனசோட எல்லாரும் எனக்கு விடை கொடுக்கணும்” என தீர்க்கமாக அவர் சொல்ல, மேலும் அவரை தடுக்க யாரும் முனையவில்லை. 

குடிலில் இருந்த விக்கிரஹத்துக்கு நாள் தவறாமல் வீட்டுப் பெண்கள் விளக்கேற்றி பூஜை செய்தனர். 

மெய்யப்பனின் இழப்பும் சதானந்தம் தாத்தா  அங்கு இல்லாமல் போனதும் மித்ராவின் மனதை பாதித்து விட்டது. எல்லாம் சரியாகி விட்டதாக தான் நினைப்பது மாயையோ, இனியும் சாபம் தொடர்கிறதா, என் குழந்தையை அது பாதிக்குமா என்றெல்லாம் நிறைய குழம்பினாள். 

அவளின் குழப்பம் சர்வாவையும் பயப் படுத்தியது. ஆனாலும் அவளிடம் காட்டிக் கொள்ளாமல் அவளை தைரியப் படுத்தி கண்களுக்குள் வைத்து பார்த்துக் கொண்டான். 

அதிகாலை பொழுதில் சுகப் பிரசவத்தில் பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள் மித்ரா. 

செண்பகவள்ளியின் மறைவுக்கு பின் பெண் வாரிசுகளே இல்லாத வம்சத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை மற்றவர்கள் மனதில் சாபத்தை நினைத்து கொஞ்சமாக ஒட்டிக் கொண்டிருந்த  சந்தேகத்தையும் பயத்தையும் அடையாளம் தெரியாமல் விரட்டி அடித்து விட்டாள். 

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு…

அனிருத்துக்கும் அவனுடைய காதலி அஞ்சலிக்கும் திருமணம் முடிந்து வீட்டுக்கு வருகிறார்கள். குடிலில் இருந்த விக்கிரஹத்தை அலங்கரித்து விளக்கேற்றி வைத்து விட்டு நிமிர்ந்தாள் மித்ரா. லக்ஷன் சித்தியுடன் இருந்து அவளுக்கு உதவுகிறேன் என சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டிருந்தான். 

மித்ராவின் மூத்த மகள் தனிரிகா, “அம்மா… சித்தப்பா சித்தி வந்திட்டாங்க, அவங்கள வெல்கம் பண்ண நீயும் வரணுமாம், வாம்மா” என சொல்லிக் கொண்டே வந்தாள். 

அழகிய பட்டுப் பாவாடை சட்டையில் இருந்த மகளை அன்பாக பார்த்த மித்ரா, “எங்கடா தங்கம் பட்டுக்குட்டி?” எனக் கேட்டாள். 

“என்கிட்ட இருக்கா சித்தி, உங்களை காணோம்னு சர்வாப்பா கோவப்படறாங்க, சீக்கிரம் வாங்க” என கையில் பத்து மாதக் குழந்தை ஷிவன்யாவை வைத்திருந்த பிரதீப் சொன்னான். மருத்துவ சிகிச்சை காரணமாக படிப்பு ஒரு வருடம் தடை பட்டு விட்டது. ஆனால் அதற்கு பின் ஏந்தக் குறையும் இல்லாமல் படித்து இப்போது கல்லூரி முதல் வருடத்தில் இருக்கிறான். 

தன் இரண்டாவது மகளை கையில் வாங்கிக் கொண்ட மித்ரா, “இங்க யாருடா பார்க்கிறது, உன் சித்தப்பாக்கு கோவம் ஒன்னுதான் வஞ்சனை இல்லாம வரும்” என்றாள். 

“ஹ ஹ… யாருக்கு எங்க சர்வாப்பாக்கு உங்க மேல கோவம் வருமா?  பட்டுக்குட்டிக்கு கூட சிரிப்பு வருது பாருங்க!” கிண்டல் செய்தான் லக்ஷன். 

“வர வர உன் வாய் நீளுது டா” அவனது கன்னத்தை செல்லமாக கிள்ளி விட்டு சென்றாள் மித்ரா. 

தனிரிகா பிரதீப்பின் கையை பிடித்துக்கொண்டு நடந்தாள். 

மனைவியை கண்டதும் மகளை கையில் வாங்கிக் கொண்ட சர்வா, “உனக்காகத்தான் வெயிட்டிங், போ” என்றான். 

தன் இரண்டு வயது மகளை கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தான் நேத்ரன். இப்போது அடுத்த குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள் இலக்கியா.

 இப்போது வரை மித்ராவுக்கும் இலக்கியாவுக்கும் ஒத்து வருவதில்லைதான். பிரகல்யா மூத்த மருமகளாக இது போன்ற விஷேஷ நாட்களில் மட்டுமாவது இருவரையும் இணக்கத்தோடு இருக்க வைத்து விடுவாள். 

பிரகல்யா, மித்ரா, இலக்கியா மூவரும் புது மணமக்களை ஆலம் சுற்றி வரவேற்றனர். பின் குடிலுக்கு சென்று சாமுண்டீஸ்வரி தாயை வணங்கி விட்டே வீட்டுக்கு சென்றனர். 

வீட்டில் பூஜையறையில் வணகிய பின்  மறைந்து போன வீட்டுப் பெரியவர்களின் புகைப்படங்கள் முன் நின்று வணங்கினார்கள். சதானந்தம் தாத்தா, அறிவானந்தம் தாத்தா ஆகியோரின் புகைப்படங்களும் இருந்தன. ஆமாம் அவர்களும் இறைவனடி சேர்ந்து விட்டனர். 

சதானந்தம் தாத்தாவின் மறைவு கூட  அது நடந்து சில மாதங்களுக்கு பின்னர்தான் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. 

ருக்மணி இப்போது மருமகள்களை வேலை வாங்குவதோடு சரி, குடும்ப பொறுப்பிலிருந்து ரிடையர் ஆகி தன் மனதுக்கு பிடித்தவற்றை செய்து மகிழ்கிறார். 

சர்வா குடும்பத்திற்கு ராஜன் குடும்பத்தோடு மட்டுமின்றி ராஜனின் மற்ற உறவுகளோடும் நல்லிணக்கம் இருந்தது. அங்கிருந்து நிறைய பேர் திருமணத்திற்கு வந்திருந்தனர். அனைவரையும் சிறப்பாக கவனித்து அனுப்பி வைத்தனர். 

குல தெய்வ விக்கிரஹம் இங்கு வந்த பிறகு குன்னூர் கோயிலில் நடைபெற்ற முதல் திருவிழா நடக்கும் போது இங்கிருந்து சீர் எடுத்து சென்று விழாவில் பங்கெடுத்து ஆத்மார்த்தமாக வழிபாடு செய்தனர். அதை எல்லா வருட திருவிழாவிலும் சம்பிரதாயமாக கடைபிடிப்பது என முடிவு செய்து தவறாமல் செய்து வருகின்றனர்.  

இரவில் சாந்தி முகூர்த்தத்துக்கு அஞ்சலியை தயார் செய்து அனுப்பி வைத்த பிறகுதான் அறைக்கு வந்து சேர்ந்தாள் மித்ரா. 

உறங்கியிருந்த இரண்டாவது மகளை தோளில் போட்டு தட்டிக் கொண்டே நடந்து கொண்டிருந்தான் சர்வா. மூத்தவள் இப்போதெல்லாம் காஞ்சனா பாட்டியோடுதான் உறங்குகிறாள். 

“பெட்ல போடாம இதென்ன அவளை வச்சிட்டு வாக்கிங் போயிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டாள் மித்ரா. 

“ஷ்ஷ்ஷ்… பெட்ல போட்டா முழிச்சிட்டு அழறா. நீ படு” என்ற சர்வா மகளை தோளிலேயே தாங்கியிருந்தான். 

அவனை முறைத்துக் கொண்டே மகளை வாங்கி படுக்கையில் கிடத்தினாள் மித்ரா. குழந்தை சிணுங்க ஆரம்பித்தது. 

“நான்தான் சொன்னேன்ல…” என்றான் சர்வா. 

குழந்தையை தட்டிக் கொடுக்கவும்  மீண்டும் சமத்தாக உறங்கி விட்டது. 

“சிம்பிலா முடியற விஷயத்தை காம்ப்ளிகேட் ஆக்குறது எப்படின்னு தெரிஞ்சுக்கணும்னா உங்ககிட்டதான் கேட்கணும்” என்றாள் மித்ரா. 

“ஆமாம், என்னை குறை சொல்லலைனா உனக்கு அந்த நாளே முழுமை அடையாதே, சொல்லிக்க, சொல்லிக்க…” என்றவன் களைத்து போயிருந்த மனைவியை ரசித்துப் பார்த்தான். 

“ஹையோ என் ஆளோட பார்வையே சரியில்லை. தயவுசெஞ்சு தூங்க விடுங்க” என அவள் சொல்லவும் பக் என சிரித்து விட்டான். 

“ஐய்ய! என்ன சிரிப்பு?”

“நான் பார்த்தாலே இப்படிதான்னு நீயா நினைச்சுக்கவியா? உனக்கு ஆசைன்னா ஓபனா கேட்கணும், இப்படிலாம் சொல்லி என்னை உசுப்பேத்தக் கூடாது”

“உசுப்பேத்துறேனா? கடுப்பேத்தாதீங்க. உங்களை பத்தி எனக்கு தெரியாது? உங்க பொண்ணு எப்ப முழிப்பா தெரியாது, நான் தூங்கணும்” என சொல்லி படுத்துக் கொண்டாள். 

சின்ன சிரிப்புடன் அவளருகில் படுத்துக் கொண்டான். “எப்பவும் கெட்டவனாவே இருப்பேனா என்ன? இன்னிக்கு நல்லவனாம் நான். தூங்கு, ஆனா இதுக்கு மட்டும் அலோ பண்ணு” என்றவன் அவளை அணைத்து கால்களை அவள் கால்கள் மீது போட்டுக் கொண்டான். 

முதலில் உறங்கியது மித்ராதான். அவளை சௌகர்யமாக உறங்க விட்டு குழந்தையை தன் அருகில் போட்டுக் கொண்டான் சர்வா. மகள் இடையில் எழுந்தாலும் அவனே பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம். 

வாழ்க்கை இத்தனை அழகாக செல்வதற்காக கடவுளுக்கு மனமார நன்றிகள் சொல்லி விட்டே கண்களை மூடினான் சர்வானந்த். உறக்கத்திலேயே புரண்ட சங்கமித்ரா அவனை அணைத்து அவன் மீது கால்கள் போட்டுக் கொண்டாள். 

சர்வாவின் இதழ்கள் புன்னகையில் விரிந்து கொண்டன. 

நிறைவுற்றது!