தடிமனான நீண்டு உயர்ந்த இரு இரும்பு கம்பிகளுக்கிடையில் ஒய்யாரமாய் வீற்றிருந்தது ஆறுக்கு எட்டு அடி கொண்ட ‘கண்ணீர் அஞ்சலி’ பேனர்.
‘பெரம்பலூர் சமரசபாண்டியின் அன்னையார்’ “ராதையம்மாள் – வயது 87” மாரடைப்பின் காரணமாக 26.11.2024 அன்று காலை இறையடி சேர்ந்தார் என்பதை அளவில்லா மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்’
எனும் வாக்கியங்களை தொடர்ந்து, நரைமுடி, நெற்றியில் நான்கு விரக்கடை அளவில் திருநீர் பட்டை, காதில் பெரிய தண்டட்டி கருப்பும் சிகப்பும் கலந்த கட்டமிட்ட சுங்குடி சேலையோடு, வயதின் முதிர்வை அப்பட்டமாய் காட்டும் மூதாட்டியின் அழகான புகைப்படமும், அப்புகைபடத்தின் இடம், வலம் என பக்கத்திற்கு ஒவ்வொரு கண்களும், அதிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய் வழிவது போன்றும் இருக்க,
“அப்பத்தா… அப்பத்தா
போய்ட்டியே! அப்பத்தா!
எடுபட்ட பய எடுபட்டபயன்னு
திட்டி திட்டியே!
எமன் கிட்ட போய்ட்டியே!
சந்தோஷத்துல சொர்க்கத்துல நீ இருக்க
துக்கத்துல சொர்க்கத்தையே
காட்டுற ‘பார்’ குள்ள நாங்க இருக்க
பாடை மட்டும் உனக்கு
இனிமேல் உன் சொத்தெல்லாம் எங்களுக்கு
Bye Bye அப்பத்தா…
Happy journey… அப்பத்தா…”
என்ற வாசகங்கள் இடம்பிடிக்க, அதனை அடுத்து ராதையம்மாளின் பேரன்கள் நால்வரின் வாட்ட சாட்டமான புகைபடங்களும் அதன் கீழ் வீரபாண்டி, விக்ரபாண்டி, செல்லபாண்டி, சங்கரபாண்டி என நால்வரின் பெயர்களும் அச்சிடபட்டு இருந்தது.
கட்டகடைசியாய் பளிச்சென்ற கொட்டை எழுத்துகளில் “எங்களை உத்து பார்க்காதீங்க.. வெட்கமா இருக்கு” என்ற வாசகங்களில் பக்கென சிரிப்பு பற்றி கொண்டது அதைபடித்த, படித்து கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும்.
ஆம், ஆளுயர அந்த பேனரை அப்படியே மேம்போக்காய் கடந்து செல்ல யாராலும் முடியவில்லை. கடந்து சென்ற அத்தனை பேரும் நின்று நிதானமாய் வாசித்து, இறந்து போன பாட்டிக்கு கவலை படுவதை விட அதிலிருந்த வாசகங்களை கண்டு சிரிக்காமல் கடக்கவில்லை.
ஆனால் அதில் ஒரு ஜோடி விழிகள் மட்டும் பேனரை பார்த்துவிட்டு, படித்துவிட்டு, சிரித்தும் விட்டு செல்லும் ஒவ்வொருவரையும் எத்தனை கோபத்துடன் பார்த்ததோ அதை விட பலமடங்கு கோபம் எகிற பேனரையும் உறுத்து விழித்தது.
சொட்டை விழுந்து, கால்வாசி கருப்பும் முக்கால்வாசி வெள்ளையுமாய் கலந்து கட்டி நின்ற முடிகள், முறுக்கு மீசை, வேஷ்டி சட்டை என பக்கா கிராமத்தான் தோற்றத்தில் ஆத்திரத்துடன் முறைத்தபடி நின்றிருந்தார் அவ்விழிகளுக்கு சொந்தகாரரான சமரசபாண்டியன்.
“எல்லா இந்த விக்ராவாண்டிப்பய வேலையா தான் இருக்கும்” என கையிலிருந்த துண்டை உதறி தோளில் போட்டபடி வீட்டிற்கு விடுவிடுவென நடை போட்டார் சமரசபாண்டியன்..
“ஏய், நாச்சியா.. நாச்சியா..” வாசலில் கால் வைக்கும் முன்னே, குரல் ஒரே ஓட்டமாய் போய்ச்சேர்ந்தது அவரது ஆருயிர் மனைவியை..
‘இந்தா வந்துட்டாரு, நேத்து என் புள்ளைய அடி அடின்னு அடிச்சுபுட்டு, இன்னைக்கு என்னைய அடிக்க வந்துட்டாரு.. அவ்வளவு கோவமா தோட்டத்து வூட்டுக்கு போனவரு.. இப்போ என்னத்துக்கு காலங்காலத்தால வந்துருக்காரோ’ மனதில் அத்தனை வசைகள் ஓட, சமையலறையை விட்டு கூடம் வந்து, ஐய்யனாராய் சிலிர்த்து நின்றிருந்தவரிடம்
“ஏய்யா.. வரும்போதே ஏலம் விடுறீரு..” நாச்சியார் ஏக போக கடுப்பிலேயே ஆரம்பிக்க
அதற்குள், அவரது மாமியார் “இந்தாடி.. நாச்சியா.. என் புள்ளையா வா போன்னு பேசுற வேலை வச்சுக்காதன்னு உங்கிட்ட எத்தனை தடவை சொல்றது”
“வாடா போடான்னு சொல்லலையேன்னு சந்தோஷபடுங்க” முகத்தை தாடையில் இடித்து கொண்டு சொல்ல
“வாடா, போடான்னு சொல்ல வாய் இருக்காதுடி, என் தண்டட்டியாலேயே தட்டி உடைச்சுபுடுவேன் பார்த்துக்க” மாமியார் எனும் பெயரை இவர் நிலைநாட்ட
எரிச்சலான சமரசுவோ “முதல்ல உங்க சண்டையை நிப்பாட்டுங்க.. இந்த வீட்டுல எப்போ பாரு மாமியா, மருமக சண்டைதான். ஒரு நாளாவது மனுசன நிம்மதியா திங்கவிடுறதில்லை, தூங்க விடுறதில்லை, இதுல புருஷன்னு நீயும், மகன்னு நீயும், இரண்டு பேருக்கும் பகுமானத்துக்கு குறைச்சல் இல்ல..” உச்சஸ்தாயில் கத்தியவர், நாச்சியாவிடம் திரும்பி
“அதான் நேத்து அந்த அடி அடிச்சுபுட்டு, இப்போ எதுக்கு அவனை தேடுறீரு.. அவனே நேத்து தான் ஐதாராபாத்துல இருந்து வந்துருக்கான் அவனை ஏய்யா எழுப்ப சொல்றீரு?”
“அடியே இப்போ நீ எழுப்புறியா.. இல்லை நான் போய் அவனை மிதிச்சு எழுப்பவா?”
“ஆத்தாளுக்கும், மகனுக்கும், என் புள்ளைய கண்டா எரியும் போல.. எம்புள்ளைய நிம்மதியா இருக்க விடுறது கிடையாது. என்ன ஆளோயா நீரு” வாய்க்குள்ளேயே முனுமுனுத்தவர்,
“புள்ளைய மிதிச்சு எழுப்புவாராம்ல.. ஒரு நாளைக்கு உமக்கு கொடுக்க போறான் பாரும்..” என சத்தமாகவே சொல்ல..
“ஏய்.. இந்தாடி, அவன் கொடுக்குறது இருக்கட்டும், நீ வாங்காமல் இருந்துக்குற வழிய பாரு.. இப்போ நீ எழுப்புறியா இல்லையா..?”
“அவன் எங்கம்மா வீட்டுல இருக்கான்.. நானே போய் எழுப்பிட்டு வாரேன்” அதுவரை இங்கேயே இரும்.. என பாதியை சொல்லியும், மீதியை சொல்லாமலும் வாசலை நோக்கி நடை போட
அந்நேரம் அங்கே வந்த இளவட்டம் ஒன்று,
“ஆத்தா உன் மவன் விக்ரவாண்டியை ஏதும் சொன்ன?”
“நான் என்னடா சொல்ல போறேன், அதுவும் என் புள்ளைய? நான் ஒன்னும் சொல்லலியே மருது.. என்னாச்சுடா அவனுக்கு” கேட்கும் போதே குரல் கம்மியது நாச்சியருக்கு..
“நேத்து நைட் அம்மாச்சி வீட்டுல தங்கிட்டான் போல.. விடிஞ்சும், இன்னும் எழுந்துக்கலைன்னு அம்மாச்சி கதவை தட்டி இருக்கும் போல, இந்த விக்ரவாண்டிபய கதவை திறக்கவே இல்லை.. அம்மாச்சி போட்ட கூச்சல்ல நம்ம பாண்டி பயலுக பூரா அங்கன தான் கதவை உடச்சுகிட்டு கிடக்கானுவ.. இத்தனை கலோவரத்துலையும் அவன் உசாரில்லாமல் கிடக்கான். ஏதும் செஞ்சுகிட்டானான்னு தெரில.. அம்மாச்சி கிடந்து அலறுது, உன்னைய கூட்டியார சொல்லுச்சு, நீ முன்னாடி போ ஆத்தா.. நான் பயர் சர்வீஸ் பக்கம் போய் ஏதும் உதவி கெடைக்குமான்னு பார்க்குறேன்” என மருது சொல்லி முடித்த கனம்
“அய்யோ.. என் புள்ளை!! என்னாச்சோ அவனுக்கு, எல்லாம் இந்த மனுஷனால தான்.. இந்த கிழவியால தான்” என வசைபாடியபடி இன்னும் குரலெடுத்து அலறிக்கொண்டு, வாசல் தாண்டி, வயதை மறந்து தாய் வீட்டை நோக்கி இவர் ஓட்டமெடுக்க, வேட்டியை மடித்து கட்டி கொண்டு, வாசலைவிட்டு இறங்கி விறுவிறுவென சமரசுவும் ஓட்டமெடுக்க, இரண்டு தெரு தள்ளியிருந்த வீட்டினுள் நாச்சியும், சமரசுவும் நுழையும் முன்னே..
“ஏலே.. பணமரத்து முனியசாமி, உனக்கு கண்ணில்லையா.. காலம் போன காலத்துல நான் கிடக்க, உனக்கு இளவயசு உசுரு கேட்குதா.. உனக்கு போய் பொங்க வச்சு கெடா வெட்டுனானே, வெட்டி ஒரு இருபது நாள் முடியல அதுக்குள்ள எங்கவீட்டு ராசாவ கேட்குறியே” அம்மாச்சியின் அலறும் குரல், வாசல் தாண்டியும் கேட்டது.
அந்த குரல் நாச்சியாவை இன்னும் வலுவிழக்க செய்ய, “ஐய்யோ.. என் விக்ரகமே..” என மேலும் அலறிக்கொண்டு, உள்ளே வர,
“நாச்சியா என் பேரனை கண்ணுல பார்ப்பனா இல்லையானே தெரியலையேடி” என அவரின் தாய் பர்வதம் இன்னும் கதற, ஏற்கனவே ஐந்தாறு பேர் உடைத்து கொண்டிருந்த கதவை ஆறாவது ஆளாய், கையாலேயே உடைத்துவிடுபவர் போல் தட்டி
“ஏய்யா.. என் ராசா..” “என்னாச்சுயா உனக்கு.. கதவ தொறயா” “என்னவானலும் பேசி தீர்க்கமால் இதென்னய்யா கோழ மாதிரி.. வாய்யா வெளியே வாய்யா.. என் விக்ரகமே” என அலறிய நாச்சியாவை பிடித்து ஒரே தள்ளலில் தூரமாய் விலக்கி வைத்த வீரபாண்டி,
“ஏம்ம்மா.. நீ போ அங்குட்டு” என்றபடி பெரிய கடப்பாரையை கொண்டு வந்து, கதவை உடைக்க துவங்க, அந்தோ பரிதாபம் மடார் மடார் என அத்தனை அடிகளையும் வாங்கி கொண்டு கின் என நின்றது அந்த கால தேக்கு கதவு.
விலகி நின்றவரோ “ஏலே வீரவாண்டி.. ஏதாவது செய்வே. அவனை காப்பாத்துவே” என தலையில் அறைந்து கொண்டு கதறிய நாச்சியார் வெளியே கேட்ட சைரன் சத்தத்தில் சர்வாங்கமும் ஒடுங்கி நிற்க,
சமரசு நடக்குமனைத்தையும் பார்த்தபடி பேந்த பேந்த விழிக்க, சைரன் ஒலியின் சத்தம் காதை பிளந்ததோடு, சிகப்பு நிற தொப்பியும், முழு காக்கி உடையும், முழங்கால் வரை மறைத்த கரு நிற ஷூவுடன் தடதடவென நான்கைந்து பேர் வீட்டினுள் வரவும், வந்தவர்கள் தீயணைப்பு பிரிவினர் என தெரிய, அந்த அறைக்கு வெளியே சேர்ந்திருந்த கூட்டம் மொத்தமும் அவசரகதியில் வழிவிட்டு நின்றனர்.
அந்த ஊரின் தீயணைப்பு வீர்ர்கள் தான், அவரச கால உதவிக்கும் வருவார்கள் என்பதால், மருது கொடுத்த தகவலின் பெயரில் விக்ரவாண்டியை காப்பாற்ற படையெடுத்து வந்துவிட்டார்கள்.
கும்பலாய் வந்திருந்தவர்கள், கொண்டு வந்திருந்த உபகரணங்களை வேகமாய் கடைபரப்பி, நொடியில் உபயோகித்து கடப்பரையால் கூட தகர்க்க இயலா தேக்கு கதவை நிமிட நேரத்தில் சுக்கு நூறாய் உடைத்தெறிந்தனர்.
முதல் ஆளாய் கும்பலாய் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல, அதனை தொடர்ந்து “அய்யோ என் ராசா..” என நெஞ்சில் அடித்து கொண்டு வயதை மறந்து நாச்சியாரும் உள்ளே ஓட,
அவரின் பின்னே பாண்டிகள் கூட்டமும் முண்டியடித்து கொண்டு ஓடினர்.
அலறிக்கொண்டு போன வேகத்திற்கு, அப்படியே நேர் எதிராக மயான அமைதியை தத்தெடுத்தது அந்த இடம். நடமாட்டமில்லாத பர்வதத்தின் குரல் மட்டும் ஸ்வரம் தப்பிய இசையாய் அலறிக்கொண்டிருக்க, சமரசுவிற்கு இதய ஓட்டமே இல்லை.
நெஞ்சமெல்லாம் துடிதுடிக்க, கால்களை எட்டிப்போட்டு, கூட்டத்தினுள் உடலை நுழைத்து, மகன் இருந்த கட்டிலை நெருங்கினார்.
அங்கே கயிற்று கட்டிலில் இரண்டு மூன்று போர்வைகளை மெத்தையாக்கி தலைக்கு ஒன்று காலுக்கொன்று என இரு தலையணைகளோடும், டீசர்ட், ஷார்ட்ஸ் அணிந்த அந்த ஆறடி உருவம், கடவாயில் எச்சில் ஒழுக, பப்பரப்பே என வாயை திறந்து அதில் பம்புசெட்டு போல் சத்தம் வரும் அளவு குறட்டை விட்டு உறங்கி கொண்டு இருக்க, எதையோ எதிர்பார்த்து மகனை நெருங்கிய சமரசு, அவனிருந்த நிலையை பார்த்த நொடி ருத்ரமூர்த்தியாய் கொலைவெறியேடு நின்றிருக்க, சுற்றி இருந்தவர்களுக்கும் அதே நிலை தான்.
“மாங்கல்யம் தந்துனானேனா..
மபஜீபன கேத்துனா…
என்ற மாங்கல்ய மந்திரம் ஒரு கட்டத்தில் முடிவு பெற்று கெட்டிமேளம் கெட்டிமேளம் என ஐயரின் ஒலி அரங்கையே நிறைக்க, அழகு பூந்தோட்டமாய், சந்தனசிலையாய், அலங்கார பெட்டகமாய் தன் அருகில் அமர்ந்திருந்த பெண்ணவளின் கைகளால், தன் கழுத்தில் தாலி ஏற பெருமையாய் புன்னகை ஓடியது விக்ரவாண்டி முகத்தில். சந்தேகம் வேண்டாம், அவனின் முகத்தில் தான் அத்தனை பெருமை புன்னகை.
சுற்றி நின்ற உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என ஒரு பெரும் படையினரின் அட்சதை ஆசிர்வாதத்தோடு திருமணம் முடிய, மணமக்களுக்கான திருமண விளையாட்டு நிகழ்வுகள் தொடங்கி, ஒரே இலையில் செல்ல சண்டை பிடித்து,
கொஞ்சம் கொஞ்சல் கொஞ்சம் மிஞ்சல் என உணவுண்டு முடித்து, மறுவீடு அழைத்து சென்று பால் பழ நிகழ்வுகள் முடிந்து, பகலில் நன்றாக உறங்கி எழுந்து, மாலை சாய்ந்த வேளையில் அத்தனை பேரின் கிண்டல் கேலிகளுக்கு நயமாய் சமாளித்து,
அதை வெட்க புன்னகையில் மறைத்து இரவிற்கு காத்திருந்து, அந்த நேரமும் கடந்திட, தனக்காக தனியறையில், காத்திருக்கும் தன் மனையாளுக்காக சொம்பொன்றில் பால் நிறைத்து, அதன் மேல் டம்ளர் ஒன்றை கவிழ்த்து, ஏக போக ஆசையோடு நுழைந்தான் அந்த அறையினுள்.
காலையில் விடியமுன் எழுந்து, அருகில் களைத்து உறங்கிய மனைவியை நமட்டு சிரிப்போடு பார்த்துவிட்டு, குளியறைக்குள் புகுந்தான். சிறிது நேரத்திற்குள்ளாகவே வெளியே வந்தவன்,
சமையலறைக்குள் நுழைந்து காபி கலந்து எடுத்து வந்து மனைவியை எழுப்பி கொடுத்துவிட்டு, அவளை குளிக்கவும் அனுப்பி வைத்துவிட்டு, முதலிரவு முடிந்த திருப்தியோடு அலங்கோலமாய் கிடந்த அறையை பரபரவென சுத்தம் செய்கையில், பளபளவென இருந்த கிரானைட் தரை காலை வழுக்கி மடார் என கீழே விழ
“ஏலேய்… எடுபட்ட பயலே.. எந்திரிடா..” என்ற கொடும் கூச்சலோடு, அவன் முகத்தில் ஒரு சொம்பு தண்ணீர் அபிஷேகமும் சேர,
இருவிளைவுகளில் எது உண்மையென அறியாது, இரண்டுக்கும் சேர்த்து வைத்து ‘ஐய்யய்யோ’ என பதறி அடித்து விழித்து எழுந்தான் விக்ரவாண்டி.
தரையில் தானே விழுந்தோம், தண்ணீர் எப்படி தன் தலையில்? முகத்தில்?
முகம் முழுதும் தண்ணீர் வழிய, வழிந்த நீரை விரல்களால் வழித்தெடுத்துபடி பேந்த பேந்த விழித்திருந்தவனுக்கு,