Then Paandi Meenaal 19 2 10381 வெயில் ஏற தொடங்கியிருக்க, பெண்ணுக்கு உதட்டின் மேல் வேர்க்க ஆரம்பித்திருந்தது. வில்வநாதன் தன் கைக்குட்டையால் நிதானமாக அவளின் வேர்வையை துடைத்துவிட்டவன், “இப்போதான் பர்ஸ்ட் டைம் என் பெயர் சொல்ல போறியா என்ன?” என்று கண்டுகொண்டான். மீனலோக்ஷ்னி ஆம் என்று தலையசைக்க, வில்வநாதனுக்கு இன்னும் ஆர்வம் உண்டானது. “நீ என் பேர் சொல்றதை நானே முதல்ல கேட்கிறதா இருக்கட்டும் சொல்லு” என்று ஊக்கினான். மீனலோக்ஷ்னிக்கு அவன் ஆர்வத்தில் தான் பதட்டம் போல் ஏதோ ஒன்றை உணர்ந்தவள், சட்டென கவ்விய தொண்டையை செருமி கொண்டபடி, “நாம வீட்டுக்கு போய் பேசலாமா?” என்று கேட்டாள். “ம்ஹூம். இங்கேயே சொல்லு” என்று நிற்க, “நீங்க மட்டும் ஏன் எப்போ பார்த்தாலும் ஒரே பிடியா நிக்கிறீங்க?” என்று மூக்கை சுருக்கி கேட்டாள். “ஒருவேளை இந்த புருஷன் பேரை சொல்ல மாட்டேன்னு சொல்ற ஆளா நீ?” என்று கேலியாக கேட்க, “ஆமா அப்படி தான் வைச்சுக்கோங்க” என்று அவள் விலகி நடக்க பார்க்க, கணவன் விடவேண்டுமே? அவன் கைப்பிடியில் இருந்த விரலை, இழுத்த வேகத்தில் கணவனை முட்டுவது போல் வந்து அவனிடமே வந்து நின்றாள். “ஸ்ஸ்” என்று விரல் லேசான வலி காண, வில்வநாதன் அவளின் விரலை வருடியபடி, “சீக்கிரம் சொல்லு. எல்லாம் நமக்காக தான் காத்திட்டிருப்பாங்க” என்றான். மீனலோக்ஷ்னி வறண்ட உதடுகளை லேசாக கடித்து கொண்டவள், எங்கோ பார்த்து சொல்ல போனாள். “ஆஹ்ன். நோ, நோ” என்று அவள் கன்னம் பிடித்து தன்னை பார்க்க செய்தவன், “ம்ம்” என்றான். மீனலோக்ஷ்னி அவன் கண்களையே பார்த்தபடி, “வில்வநாதன்” என்றாள் மென் குரலில். “எனக்கு சரியா கேட்கலை” என்று முகத்தை அவளின் உதட்டுக்கருகில் கொண்டு வந்தவன், “திரும்ப சொல்லு” என்றான். “இது அநியாயம்” என்று மனைவி குற்றம் சாட்ட, “சீக்கிரம்டி” என்று அதட்டினான் நல்லவன். “வில்லன் வில்வநாதன்!” என்றாள் மனைவி கண்களில் வெட்டிய மின்னலுடன். “ஓய்” என்று புருவம் உயர்த்த, மனைவி குறும்பாக புன்னகைத்தாள். “வில்லன் சொல்ற, அப்படியா நான்?” என்று கைகளை கட்டி கொண்டு மிரட்ட, அவன் மனைவியும், அவனை போன்றே கைகளை கட்டி கொண்டவள், “இல்லைன்னு சொல்றீங்களா நீங்க?” என்று புருவம் உயரத்தினாள். வில்வநாதன் தன் சுவாரஸ்யத்தை காட்ட மறுக்க, “நாம கோவில் வைச்ச மீட் பண்ணப்போவே மாலையை என் கையில கொடுத்தவர் தானே நீங்க?” என்று கேட்டாள். கண்டுகொண்டாளே! “நீங்க ஐடியா சொன்னது எல்லாம் சும்மா. நம்ம கல்யாணம் பத்தி முடிவெடுத்து தானே, எல்லாம் பண்ணீங்க?” என்று மேலும் கேட்க, “சும்மான்னு யார் சொன்னா உனக்கு?” என்று கேட்டான் வில்வநாதன். “உங்க மாமா வீட்டுக்கு வராம நான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு இருந்தேன். சோ மருமகள் உன்னை வைச்சு வர வைச்சேன், தப்பா என்ன?” என்று தோள் குலுக்க, “இதுக்கு தான் சொன்னேன் நீங்க சரியான வில்லன்னு” என்றாள் மனைவி மூக்கு விடைத்து. “அதென்ன சரியான வில்லன்? அப்போ தப்பான வில்லன் இல்லை தானே?” “எல்லாத்திலும் உங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்குறீங்க?“ “அப்படி தான் உன்னையும் எடுத்தேன். எனக்கே, எனக்காக!” என்று கண் சிமிட்டினான். மீனலோக்ஷ்னி அவனை அயர்ந்து பார்த்தாள். பெரியவர்கள் தாமதிக்க முடியாமல், “ராஜா” என்று குரல் கொடுக்க, தம்பதிகள் அவர்களிடம் சென்றனர். அங்கேயே அன்னதானம் ஏற்பாடாகியிருக்க, அதற்கான வேலையில் இறங்கினர். பந்தி தொடர்ந்து கொண்டே இருந்தது. உறவுகள், அக்கம் பக்கத்து ஊர்காரர்கள் என்று ஆட்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. “நீங்க கிளம்புங்க. நான் பார்த்துகிறேன்” என்று வீட்டு ஆட்களை கிளம்ப சொன்னான் வில்வநாதன். “இல்லை ராஜா. சேர்ந்தே போவோம்” என்று சொல்லிவிட, அவர்கள் வந்த வேனில் ஓய்வெடுக்க அனுப்பிவிட்டான். தயாளன் முழுதும் மகனுடன் நின்று பந்தி கவனிக்க, வெயிலின் தாக்கத்தில் வேர்த்து ஊத்தியது மனிதருக்கு. வில்வநாதன் அவரை வேனுக்கு அனுப்ப போக, அவரோ மகனின் வேர்வையை தன் துண்டால் துடைத்து, “நான் பார்த்துகிறேன் வில்வா. நீ போய் ரெஸ்ட் எடு” என்றார். வில்வநாதன் இளகும் மனதையும், உடலையும் அடக்கி, “நீங்க போங்க” என்றான். “சரி அவ்வளவு தான் முடிய போகுது, விடு” என்றவர், மகனின் கழுத்தோரமும் வேர்த்து போயிருக்க, துடைத்து விட்டவர், முடியை கையால் கோதி பதியவைத்தார். வில்வநாதன் அந்த நேரம் ஏனோ அவரை தடுக்கவில்லை. விட்டுவிட்டான். இறுதியில் குடும்பத்தினர் அனைவரும் பந்தியில் அமர்ந்து உண்டு, வேண்டுதல் ஒன்றையும் வைத்து, அங்கிருந்து மனநிறைவுடன் கிளம்பினர். மாலை போல் மாளிகைக்கு திரும்ப, மறுவீடு பற்றி பேச்சு சென்றது. அறிவழகனுக்கு போனில் பேசியவர்கள், இரவு உணவையும் விரைவாக முடித்தனர். “பால் ரூமுக்கு வரும். நீங்க தூங்க போங்க” என்று கஜலக்ஷ்மி சொல்ல, வில்வநாதன் மறுக்கவே வழியில்லாமல் மனைவி அறைக்கு ஏறிவிட்டாள். “இவளை” என்று பல்லை கடித்து வந்தவன், “என்னடி பண்ணிட்டிருக்க நீ?” என்று அதட்டலிட்டான். “என்ன பண்ணேன் நான்?” என்று அவள் பாவமாக முகம் வைக்க, “கொன்னுடுவேன் உன்னை” என்றான் கணவன். மீனலோக்ஷ்னி அப்படியே நிற்க, “நாளையில இருந்து அங்க தான் இருக்க போறோம். மனசுல வைச்சுக்கோ” என, சரி என்று வேகமாக தலையாட்டினாள் மனைவி. வில்வநாதனுக்கு நம்பிக்கை இல்லை. கண்களை சுருக்கி பார்க்க, “எனக்கு தூக்கம் வருது. தூங்கலாமா?” என்று நல்ல பிள்ளையாக கேட்டாள். “கல்யாணம் ஆன நாளில் இருந்து அதை தானே பண்ணிட்டிருக்கோம்” என்று உதட்டை சுளித்தான். “மூணு நாள் தான் ஆச்சு” என்று அவள் கணக்கு சொல்ல, “உன்னை விட்டா முப்பது வருஷம் கூட இப்படியே தான் இருப்போம்” என்றபடி அவளை நெருங்கி நின்றான். “என், என்ன?” என்று அருகில் இருந்தவனை பார்த்து திணற, “குட் நைட் சொல்ல வந்தேன் மேடம்” என்றான் குறும்பாக. “குட் நைட்” என்று வேகமாக இவள் சொல்லி முடித்தாள். “போய் தூங்குன்னு சொல்ற. ம்ம். கவனிச்சுக்கிறேன் உன்னை” என்றவன், அவளின் நெற்றி முட்டி, நெருக்கத்திலே சில நொடிகள் நின்றான். தன் உடலை மிகவும் ஒடுக்கி கவனமாக நின்ற மனைவியை உணர்ந்த வில்வநாதனுக்கு, அவளின் கவனத்தை உடைக்கவே விருப்பம். கைகள் அவளை தீண்ட துடிக்க, தன்னை கட்டுப்படுத்த முடியாமல், “கட்டி பிடிச்சுப்போமா?” என்று கேட்டான். “ஆஹ்ன்” என்று பெண் விழித்தாள். முதல் இரவிலே அதிகமாக நெருங்கி நின்றவர்கள் தான். ஆனாலும் அணைத்து நிற்பது என்பது அவளுக்கு நடுக்கத்தை கொடுத்தது. வேர்வையில் வழுக்கிய கால்களை நன்றாக தரையில் ஊன்றி நிற்க, வில்வநாதன் கை உயர்ந்து அவளின் இடையை தொட்டது. பெண் கண்களை விரித்து அவனை பார்க்க, வில்வநாதனின் மற்ற கை உயர்ந்து அவளின் முன் நெற்றி முடிய ஒதுக்கியதுடன், கன்னத்தில் பெருவிரலை கொண்டு வருடினான். மனைவி கண்களை இறுக்கமாக மூடி கொள்ள, இடையில் பிடித்த கை அழுத்தம் கொடுத்தது. “ஸ்ஸ்” என்றவாறு கண்களை திறந்து அவனை பார்க்க, மனைவியின் இறுக்கி மூடிய கையை எடுத்து தன் இதய பகுதியில் வைத்தான். அனலடிக்கும் நெஞ்சில், சில்லென்ற அவளின் குளுமை பட்டதும் கண்களை ரசனையாக மூடினான். மீனலோக்ஷ்னி கணவனின் ரசனையில் அவனையே பார்த்திருக்க, பொறுமையாக கண்களை திறந்தவன், அவனின் அழகியின் நெற்றியில் திரும்ப முட்டி, விலகி சென்றான். மீனலோக்ஷ்னி அவனை தேட துணியாமல் அமைதியாக அவளின் இடத்தில் சரணடைந்துவிட்டாள். வில்வநாதன் நீண்ட நேரம் சென்று வந்த போது மனைவி கண்களை இறுக்கமாக மூடி இருந்தாளே தவிர தூங்கவில்லை. ‘என் பொண்டாட்டி தூங்காம இருக்கிறதே சாதனை தான்‘ என்ற சிரிப்புடன் அவன் இடத்தில் படுத்தான் வில்வநாதன். மறுநாள் இருவரும் கிளம்பி மறுவீடு வந்தனர். அறிவழகன் வீட்டில் ஏகபோக வரவேற்பு. உறவுகள் அதிகத்துக்கு அதிகமே! விருந்து அமர்க்களப்பட்டது. சில நொடி கூட தனியே இருக்க முடியவில்லை. மீனலோக்ஷ்னி உணவுண்ணும் நேரம் மட்டுமே அவன் கண்களில் பட்டாள். வினய், அரவிந்தன், அவனின் மனைவி சுகன்யா என்று இவர்கள் தனியே இருக்க, வில்வநாதனுடன் பெரியவர்கள் இருந்தனர். மாப்பிள்ளை தனியே பால் காய்ச்சிவிட்டதில் அறிவழனுக்கு வருத்தம். சுணங்கியே பேசி கொண்டிருந்தார் மனிதர். அதையும் உடைத்து கேட்க தயக்கம். அன்னைக்கு சொல்லிட்டேன். திரும்ப எப்படி பேச? என்று அவரின் குணம் அவரை தடுத்தது. வில்வநாதனுக்கு அவரை புரியத்தான் செய்தது. உறவுகள் எல்லாம் கிளம்பியிருக்க, இவர்கள் மட்டும் வெளியே அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அன்றிரவு அங்கே தான். சுகன்யா வேலைக்கு செல்வது பற்றிய பேச்சில், “நீ என்ன பண்ண போற, மேல படிக்க போறியா?” என்று மீனலோக்ஷ்னியிடம் கேட்டான் வினய். “இனி அவ படிக்கணும்ன்னா PHD தான் பண்ணனும். உங்க காலேஜ்லேயே எல்லாம் பார்த்துக்கலாம் நீ” என்று சுகன்யா சொல்ல, “இல்லை. இல்லை” என்று உடனே மறுத்தாள் மீனலோக்ஷ்னி. “படிக்க போகலையா?” “ம்ஹூம். படிச்சாலும் எங்க காலேஜ் பக்கம் போக மாட்டேன்” என்றாள் பெண். “முன்னாடி வேற. இப்போ வாய்ப்பே இல்லை. நான் தனியா தான் கைட் பார்ப்பேன்“ “என்ன பேசுற நீ?” என்று அரவிந்தன் கண்டிக்க, “நான் உண்மையா தான் சொல்றேன். கல்யாணம் நடக்கலைன்னா கூட அங்க படிச்சிருப்பேன். இல்லை அவங்க குரூப்ஸ் எதோ ஒரு கம்பெனில வேலையும் பார்த்திருப்பேன், இனி அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை. எனக்கு செட் ஆகாது” என்று உறுதியாக மறுத்தாள் பெண். அன்றொரு முறை வில்வநாதனுடன் சென்னை அலுவலகம் சென்று வந்ததே அவளுக்கு ஒத்துவரவில்லை. புதிதான மரியாதை, அதிகமான வரவேற்பு, ஓயாத ஓட்டம், தொழிலிலே தெய்வம் என்பது எல்லாம் அவளின் குணத்துக்கு நிச்சயம் ஆகாது. வில்வநாதன் இதை ஏற்று கொள்வான் என்பது அவளின் நம்பிக்கை. பெரிய வீட்டில் யாரும், யாரின் தனிப்பட்ட விஷயத்திலும் தலையிடுவதில்லையே! தயா மாமாவே காலேஜ்ல தானே வேலை பார்க்கிறார்? அப்புறமென்ன? கஜலக்ஷ்மி பேத்தியிடம் பேச வேண்டும் என்றதில் போனோடு வந்த வில்வநாதனுக்கு மனைவியின் உறுதி நெற்றி சுருக்க வைத்தது. அவராவது காலேஜ்ல வேலை பார்த்தார். இவள் அதுகூட முடியாதுங்கிறா? வில்வநாதன் இறுகி போனான். “பாஸ்” என்று அரவிந்தன் இவனை பார்த்து எழ, மற்றவர்களும் எழுந்து நின்றனர். “பாட்டி” என்று போன் கொடுத்து சென்றான் வில்வநாதன். மீனலோக்ஷ்னிக்கு அவன் பார்வை புதிது!