Then Paandi Meenaal 19 1 9392 தென் பாண்டி மீனாள் 19 குலதெய்வ கோவில் பூஜையில் நின்றிருந்தனர் புது மணதம்பதிகள். அன்று அதிகாலையிலே கிளம்பி வந்துவிட்டார்கள். நேற்று அந்த வீட்டில் பால் காய்ச்சியதுடன், காலை உணவு மாளிகையில் தான் என்றார் கஜலக்ஷ்மி. “லக்ஷ்மி மேடம் என்ன இது?” என்று பேரன் கடுப்பாகி போக, “ராஜா. நீ தனியா இருக்க கேட்ட, நாங்க விட்டுட்டோம். அதே போல சாப்பிடுறது எல்லாம் அங்க தான்னு நாங்க சொல்றோம். நீயும் கண்டிப்பா கேட்டு தான் ஆகணும்” என்றார் பாட்டி உத்தரவாக. “இதுக்கெதுக்கு நான் தனியா வரணும்?” பேரன் பல்லை கடிக்க, “தூங்க தான். வேறெதுக்கு?” என்றார் தனபாலன். “தாத்தா“ “ராசா. அதுவே அதிகம். உன் பிடிவாதத்துக்காக தான் சரி சொன்னோம்” என்றார் தனபாலனும். “காலை காபில இருந்து நைட் குடிக்கிற வரை பால் எல்லாம் அங்க தான். இந்த கிச்சனை இதோட பூட்டியாச்சு” என்று பாட்டி சொல்ல, மீனலோக்ஷ்னிக்கு முகம் மலர்ந்து போனதுடன், “சூப்பர் பாட்டி” என்றுவிட்டவள், கணவனின் முறைப்பில் பம்மிவிட்டாள். “நீங்க இப்படி பண்ணா, என் பொண்டாட்டிக்கு எப்படி பொறுப்பு வரது?” என்று பேரன் குற்றம் சொல்ல, “அவளுக்கு இருக்கிற பொறுப்பே போதும். உன் கிச்சனை கட்டிட்டு ஆளத்தான் அவளை கட்டிக்கிட்டு வந்தோமா என்ன?” என்று கேட்டார் பானுமதி. “மாம்” “என்னோட மாம் சொல்றது தான் முடிவு. மீனா பொண்ணு வா நாம போலாம்” என்று மருமகளை கையோடு அழைத்து சென்றுவிட்டனர் பானுமதி தம்பதி. நால்வரும் கலந்து பேசித்தான் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர் என்று புரிந்து கொண்ட வில்வநாதன் பாட்டியை கண்கள் இடுங்க பார்க்க, “என்ன ராஜா. எங்களுக்கு வயசாகிடுச்சு, எங்களுக்காக யோசிக்க மாட்டியா?” என்றார் பாவமாக. “நீங்க முதல்ல அவளோட சேராதீங்க. உங்களையும் கெடுத்து வைக்கிறா. வாங்க போலாம்” என்று மனைவியை திட்டி, பாட்டியின் கை பிடித்து மாளிகைக்கு வந்தான். அங்கு மீனலோக்ஷ்னியை மாமனார், மாமியார் இருவரும் அவர்களுக்கு இடையில் அமர வைத்திருக்க, வில்வநாதன் மூவரையும் முறைத்து பாட்டி, தாத்தாவுடன் அமர்ந்தான். காலை உணவு மட்டுமில்லாமல், அன்றைய நாள் முழுவதுமே மாளிகையில் தான் இருந்தனர். திருமணத்திற்கு வராத உறவுகள், நெருங்கிய உறவுகள் வந்த வண்ணம் இருந்தனர். மதிய உணவு விருந்தாக களைகட்ட, ஓய்வுக்கும் அங்கிருக்கும் அவர்கள் அறைக்கே மீனலோக்ஷ்னி சென்றாள். பங்காளிகளுடன் பேசி கொண்டிருந்த வில்வநாதனுக்கு தான் கடுப்பு. இரவு வரை பொறுத்து அவர்கள் வீடு திரும்பலாம் என்றால், “நாளை காலையிலே பூஜைக்கு கிளம்பணும். இங்கேயே தூங்குங்க ராசா” என்று முடித்தார் தனபாலன். “தாத்தா. ஒரே காம்பவுண்ட் தான்” என்று பேரன் சொல்ல, “வீடு வேற வேற இல்லை ராசா. இங்கேயே படுப்பா. இன்னைக்கு ஒரு நாள்” என்று கை பிடித்து கேட்டார் தனபாலன். அதற்கு மேல் எங்கு போக? இவன் திரும்பி மனைவியை பார்க்க, அவள் எப்போதோ அவர்கள் அறைக்கு சென்றிருந்தாள். ‘இவ இஷ்டத்துக்கு பண்ணிட்டிருக்கா? இவளுக்கு கிளாஸ் எடுத்தா தான் சரியா வரும்‘ என்று போக, மனைவி அதற்குள் தூக்கம். வில்வநாதன் ஆயாசத்துடன் தலை அசைத்து மறுபக்கம் படுத்தான். இதோ காலை கிளம்பி குலதெய்வ கோவிலுக்கும் வந்துவிட்டனர். கஜலக்ஷ்மியின் உறவுகள் எல்லாம் அங்கு கூடியிருக்க, பூஜை வெகு சிறப்பாக ஆரம்பித்தது. திருவிழா போன்ற ஏற்பாடு. பேரன், பேத்திக்காக எனும் போது கஜலக்ஷ்மி சொல்லவும் வேண்டுமா? கோவிலை சுற்றி மட்டுமில்லாமல், வரும் வழியிலும் அலங்கார விளக்குகள் ஜொலித்தது. மணமக்களுக்கான விஷேஷ பொங்கலும், மீனலோக்ஷ்னி கையால் நன்றாகவே பொங்கி வந்தது. புது பட்டில், அளவான நகைகளுடன் மீனலோக்ஷ்னி அமைதியாக கணவனுக்கு அருகில் வந்து நின்றாள். வில்வநாதன் அவளை நிமிடமே பார்க்க, “என்னங்க” என்று கேட்டாள் மனைவி. “என் பொண்டாட்டி இவ்வளவு அமைதியான பொண்ணான்னு பார்த்தேன்” என்றான் அவன் கிண்டலாக. மீனலோக்ஷ்னி அவனை உர்ரென பார்க்க, வில்வநாதன் சிரித்து பூஜைக்கு திரும்பினான். அவனுக்கு எதிரில் தாத்தா, பாட்டி, அப்பாம்மா தம்பதி சகிதமாக நின்றார்கள். பூஜை மிகவும் நல்ல முறையில் நடந்து முடிய, எல்லோருக்கும் மகிழ்ச்சி. மரியாதை நிமித்தமாக, முதலில் பெரியவர் கையில் மாலை கொடுக்க அவர் வாங்கி கஜலக்ஷ்மியிடம் கொடுத்தார். அடுத்து தயாளன், பானுமதியை கொஞ்சம் தயக்கத்துடன் தான் பார்த்தனர். ஒன்றாக இருக்கிறார்கள் என்று தெரிந்தது. ஆனால் எல்லாம் சரியாகிவிட்டதா? மகனின் திருமணத்திற்காகவா? திரும்ப தயாளன் தனியாக சென்றுவிடுவாரா? என்று பல கேள்விகள் நிறைந்திருக்க, யாருக்கும் வாய் விட்டு கேட்கும் தைரியம் இல்லை. ஏற்பாட்டை பற்றி கோவில் நிர்வாகி ஏதோ அவசரமாக கேட்க, தள்ளி வந்துவிட்ட பெரியவர்களின் கவனம் அங்கில்லாமல் போனது. இரு மாலைகள் பூஜை செய்பவரின் கையில் இருக்க, மகனுக்கும், மருமகளுக்கும் என்று நினைத்த தயாளன் முறை மறந்து போய், அமைதியாக நின்றிருந்தார். பானுமதி இதை எதிர்பார்க்கவில்லை. எல்லார் கண்களும் அவர்கள் மேலிருக்க, மகனை நினைத்து தான் அதிகம் கலங்கினார். அந்த நொடிகளை கடப்பது அவருக்கு சவாலாகவே இருந்தது, எதையும் முகத்தில் காட்டும் வழக்கம் அவருக்கில்லை. தொழில் பழக்கம் அது. ஆனால் உணர்வுகள் என்று வரும் நேரம் மனித மனம் மண்ணால் ஆனது என்பதை நிரூபிக்கவே, கரைய ஆரம்பித்தார் பானுமதி. மகனுக்காகவே நிறைய மனதில் அழுத்தி கொள்பவர் தான் என்றாலும், ஏனோ இந்த நேரம் வெகு சிரமமாக இருந்தது. கணவரிடம் வாங்க சொல்லலாம். ஆனால் அவருக்கு அதில் விருப்பமில்லையோ என்று கலங்கிவிட, வில்வநாதனின் முகம் சிவக்க ஆரம்பித்தது. ஏன் இன்னும் பையன்கிட்ட மாலை கொடுக்கலை என்ற கேள்வியுடன், மகனை பார்த்த தந்தைக்கு ஏதோ தவறாக தோன்ற, “மாமா” என்று சட்டென குரல் கொடுத்து மாலையை வாங்கும் படி கண் காட்டினாள் மருமகள். தயாளனுக்குள் ஒர் அதிர்வு. மனைவி, மகனை மன்னிப்பாக பார்த்து, மாலையை வாங்கி கொள்ள, பானுமதி கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டது. எவ்வளவு தவித்துள்ளார் என்பது அதில் புரிய, தயாளன் அந்த நொடியே, எதையும் யோசிக்காமல் மனைவியை மட்டுமே மனதில் நிறுத்தி, பானுமதி கழுத்தில் மாலை சூட்டினார். எதிர்பாரா மற்ற அனைவரும் திகைத்து போக, அவர்களின் மருமகள் மட்டும் குதூகலமாகி, கை தட்டினாள். அதை தொடர்ந்து மற்றவர்களும் கை தட்டி ஆர்ப்பரிக்க, அந்த சூழலே மாறி போனது. எல்லார் முகங்களிலும் புன்னகை பூத்திருக்க, வயது பாரபட்சமின்றி, “அடுத்து பொண்ணு முறை” என்று கூச்சலிட்டனர். தனபாலன் தம்பதிக்கு புரிந்ததில், ஆனந்த கண்ணீர். வில்வநாதன் “மாம்” என்றான். அவர் சங்கட புன்னகையுடன், மாட்டேன் என்று தலையசைக்க, யார் கேட்டார் அவர் பேச்சை? பெரியவர்கள் அவர்களுக்கு அருகில் வந்துவிட, பானுமதி கையில் மாலையை வைத்தனர். தயாளன் மனைவியை ரசிப்புடன் பார்த்தவர், தலை குனிந்து நின்றார். பானுமதி முகம் நிறைந்த புன்னகையுடன் கணவனுக்கு மாலை அணிவிக்க, “ஓஹ்” என்ற மகிழ்ச்சி குரல் அங்கு நேர்மறை எண்ணங்களை அதிகரித்து சென்றது. வில்வநாதன் அந்த நொடியை தன் இதயத்தின் ஆழத்தில் சேமித்து வைத்ததுடன், அதை புகைப்படமாகவும் எடுக்க சொல்லியிருந்தான். வயது முதிர்ந்த பெரியவர்கள் கூட சடங்கு, முறை அது இது என்று வாய் திறக்கவில்லை. நல்லதாக நடப்பது எல்லாமே முறை, சடங்கு தான் என்ற பக்குவத்தை எட்டியிருந்தனர் போல! அடுத்து புது தம்பதிகளுக்கு மாலை கொடுக்க, வில்வநாதன் மலர்ந்த முகத்துடன் மனைவியின் நெற்றியில் குங்குமம் இட்டான். கைகளை கூப்பி நின்ற மீனலோக்ஷ்னி, குலதெய்வத்தை மனதில் ஏற்று, அவள் குடும்பம் எல்லோரின் வாழ்வும் சிறக்க வேண்டி கொண்டாள். பூஜையே, ஏதோ பண்டிகை போல் அங்கு உற்சாகம் நிரம்பி வழிந்தது. அங்காளி, பங்காளி குடும்பங்களில் பெரிய குடும்பத்தின் மீது யாருக்கும், எந்த விதமான கசப்பும் இல்லை என்பதால், பானுமதி, தயாளன் நிகழ்வு எல்லோருக்கும் மகிழ்ச்சியை தான் கொடுத்தது. அதனோடே எல்லாம் கோவிலை சுற்றி வர, வில்வநாதன், மனைவியின் விரல் கோர்த்து நடந்தான். “எனக்கு உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்” என்றாள் மீனலோக்ஷ்னி கணவனின் பக்கம் சாய்ந்து. “ம்ம். கேளுங்க மேடம்” என்று அவன் துள்ளல் குரலில் சொல்ல, மீனலோக்ஷ்னி அவள் கேட்க வந்ததை விட்டு கணவனை பார்த்தாள். மகிழ்ச்சியாக இருந்தான். இவர் குணமே இது தானா? மாமா அத்தை விஷயத்துல தான் கொஞ்சம் மாறி போயிட்டாரோ? என்று யோசனை சென்றது. “ஓய் என்ன?” என்றவன், மீனலோக்ஷ்னி மேல் கோபுரத்தை பார்த்து வேண்டவும், “நீ ரொம்ப சாமி கும்பிடுவியா?” என்று கேட்டான். “ஏன் நீங்க சாமி கும்பிட மாட்டிங்களா?” அவளுக்கு கொஞ்சம் பக்கென்றானது. பூஜை அப்போ கூட, சும்மா தானே நின்னுட்டு இருந்தார்! “என் பேர் சொல்லு பார்ப்போம்?” என்று அவன் நின்றுவிட்டான். பின்னால் சுற்றி வந்த உறவுகளும் தேங்கி நிற்க, “நீங்க போங்க” என்று அவர்களுக்கு வழிவிட்டான். “சீக்கிரம் வாங்க” என்று தனபாலன் சொல்லி எல்லாம் கடந்து சென்றுவிட, “ம்ம். சொல்லு” என்று மனைவியிடம் திரும்ப கேட்டான். முதல் முறையாக அவன் பெயர் சொல்ல போவதை அப்போது தான் மீனலோக்ஷ்னியும் உணர்ந்தவள், “ஏன்? எதுக்கு கேட்கிறீங்க?” என்று கேட்டாள்.